Post Views: 983
மெளனம் என்பது பலவீனமல்ல
அது உலகையே வெல்லும் சக்தி!
ஆதியூர் கிராமம், அதிகாலை நேரம். மார்கழி மாத குளிரில் மாக்கோலமிட்டுக் கொண்டிருந்த பெண்கள் “அப்பா” என்ற அலறல் சத்தத்தில் திரும்பி சத்தம் வந்த திசையை பார்த்தனர்
Advertisement
“கத்தனது சின்ன பொண்ணா?” என்று ஒருத்தி கேக்க, இன்னொருத்தி யோசிப்பதற்குள் மீண்டும் அப்பா என்ற அலறல் சத்தம் அந்த அதிகாலையின் நிசப்தத்தில் பேரோலியாய் கேட்க, கோலம் போட்டு கொண்டிருந்த பெண்கள், கையிலிருந்த மாவினை அப்படியே போட்டு விட்டு எதிரில் இருந்த முத்துமாணிக்கத்தின் வீட்டை நோக்கி ஓடினார்கள்.
பழைய காலத்து மாடி வீடு, எந்த நேரமும் இடிந்து விழ தயாராக இருந்ததால் வீட்டை அடைந்ததும் சற்று நிதானமாகவே உள்ளே சென்றார்கள். “அப்பா பயமாயிருக்கு, எந்திரிங்கப்பா” என்று முத்தமாணிக்கத்தை உலுக்கி கொண்டிருந்தாள் அவள்.
Advertisement
Advertisement
“சின்ன பொண்ணு, ஏன் கத்தின?” என்றபடி அவளிருந்த அறையை எட்டி பார்த்தார்கள்
“அக்கா, என்னாச்சுனு தெரியல. அப்பா எந்திரிக்க மாட்டேங்கிறாரு”
Advertisement
வந்திருந்தவர்களில் ஒருத்தி மட்டும் முன்னால் சென்று முத்துமாணிக்கத்தின் மூக்கருகே விரலை நீட்டி பார்த்தாள். வெளியே சென்று தன் கணவனை அழைத்தாள்.
“அக்கா, ராசு அண்ணாவ ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ண சொல்லுங்க, எனக்கு பயமா இருக்கு” என்ற சின்னபொண்ணை மற்ற பெண்கள் பாவமாக பார்த்தனர். சாயம் போன பாவாடை சட்டையில் இருந்தவள் தந்தையை மட்டுமே உலகமாக கொண்டிருந்தவள் என்பது அவர்கள் அறியாததா என்ன?
ராசு உள்ளே வந்து முத்து மாணிக்கத்தை பார்த்துவிட்டு, “கைகால் சில்லுனு கிடக்கு. தூக்கத்துல போயிடுச்சு போல” என்றான்
சின்னபொண்ணுவிற்கு விஷயம் என்ன என்று புரிவதற்குள் பெண்கள் அவளை கட்டிக் கொண்டு ஒப்பாரி வைக்க தொடங்கி விட்டனர்.
“அம்மா இல்லாத பொண்ணை தவிக்க விட்டுட்டு போயிட்டாரே” என்ற அவர்களின் வார்த்தைகளில் தான் தந்தை இறந்து போனதை உணர்ந்தவளுக்கு நாக்கு வறண்டு கால்கள் தொய்வடைந்தது. அவளை ஓரமாக உட்கார வைத்து அவளின் தந்தையை நடுவீட்டில் கிடத்தினார்கள்.
“நம்ம ஊரு பழைய தர்மகத்தா முத்து மாணிக்கம் ஐயா போயிட்டாரு” என்று ஆளாளுக்கு போன் செய்து அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு கூறினார்கள்.
விஷயம் காட்டுத்தீப் போல பரவியது. உள்ளூர் பெண்கள் எல்லாம் வீட்டிற்குள்ளும் ஆண்கள் எல்லாம் வெளிதிண்ணையிலும் அமர்ந்தனர்.
“ஊருக்கே தர்மகத்தாவா வாழ்ந்த மனுஷன் எம்புட்டு நல்லவர் தெரியுமா? தூக்கத்துலயே உயிர் போயிருக்கு, அதுவும் மார்கழி மாசத்துல. நல்ல சாவு. நேரா சொர்க்கம் தான்.
அஞ்சு பொண்ணை பெத்து அதுல நாலை கர சேர்த்துட்டாரு. சின்ன பொண்ணுக்கும் கண்ணாலத்த முடிச்சிட்டு போயிருக்கலாம். அதுக்குள்ளார என்ன அவசரமோ? பாவம் அந்த பொண்ணு ஆத்தாளுமில்லாம, அப்பனுமில்லாம என்ன பாடுபடப்போவுதோ?” என்று ஒரு மூதாட்டி அங்கலாய்த்தார்.
“தர்மகத்தானு சொல்றீங்க சொத்து சொகமிருக்குமில்ல?” புதிதாய் வந்த அவரின் மருமகள் கேட்டாள்
“ஒரு காலத்துல இருந்துச்சு. இப்போ இந்த வீட்ட தவர எதுவுமில்ல”
“ஏன் என்னாச்சு?”
“அஞ்சு பொண்ணை பெத்தா அரசனும் ஆண்டியாவன்றது முத்துமாணிக்கத்துக்கு சரியா பொருந்தும். வரிசையா அஞ்சு பொம்பளை புள்ளைங்க, ஆறாவதா பையன் பொறக்கும்னு பார்த்தா பொண்டாட்டி வவுத்து புள்ளைய வெளிய எடுக்க முடியாம ரெட்டை உசுரா போயிட்டா. அஞ்சு பொண்ணையும் வளர்த்து நல்லா படிக்க வச்சாரு, இருக்கற சொத்துக்கள அப்பவே அஞ்சு பொண்ணுக்கு பிரிச்சு எழுதிட்டாரு. கண்ணாலம்னு வரும்போது அத வித்து கல்யாணம் பண்ணிப்புட்டாரு.
ரெண்டு பொண்ணுங்க கனடாவுல நல்லாவே இருக்குங்க, அதுங்க தான் வெளிநாட்டுக்கு போயிருச்சுங்களேனு மத்த ரெண்டு பொண்ணையும் பக்கத்து ஊர்ல கட்டி கொடுத்தாரு. அவளுங்க வூட்டுக்காரனுங்க குடிகார பயலுக. எப்போ பாத்தாலும் சண்டை போட்டுக்கிட்டு அப்பன் வூட்டுக்கு வந்து இங்கே இருக்கறத சுருட்டிக்கிட்டு போவாளுங்களே தவிர அப்பனும் தங்கச்சியும் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவாங்கனு கூட கவலப்படமாட்டாளுங்க.
இருக்கறது ரெண்டு கறவை மாடு, அதையும் கேட்டு போனா வாரம் தான் சண்டை போட்டுகினு போனாளுங்க” இவ்வாறாக வீட்டின் முன் குழுமியிருந்த பெண்கள் கூட்டம் இறந்தவரின் நல்ல குணத்தையும் அவர் செய்த தர்மத்தையும் பேசிக் கொண்டிருக்க, ஆண்கள் வீட்டின் முன்னே நெருப்பையிட்டு விட்டு தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தகவல் கூறினார்கள்
“சின்ன பொண்ணு” வெளியே இருந்து ராசு சத்தமாக அழைக்க, முழங்காலில் முகத்தை புதைத்து அழுது கொண்டிருந்தவள் நிமிர்ந்து பார்த்தாள்.
ராசு கையை நீட்டி அழைக்க, கலைந்த தலையும், அழுது வீங்கிய முகமுமாக வந்து நின்றாள்.
“உங்க அக்காங்களுக்கு, சொந்தகாரங்களுக்கு எல்லாம் போன் போட்டு தகவல் சொன்னியா?”
தந்தை இறந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்தவள் மலங்க விழிக்கவும், “உன் போனை கொண்டா” என்றான். அவள் கொண்டு வந்து தந்ததும் அதிலிருந்த எண்களுக்கு அவனே போன் செய்து தகவல் சொல்லி விட்டு, “சின்ன பொண்ணு உங்க அக்காங்க கிளம்பி வர நேரமாகும் போல இருக்கு. அவங்க வர வரைக்கும் காத்திருக்கணுமா? இல்ல பந்தல் போட்டுடலாமா? மோளக்காரணுக்கு சொல்லணும். மத்த விஷயங்க நிறைய இருக்கு. இப்பவே சொன்னா தான் சரியான நேரத்துக்கு வரும். சொல்லிடலாமா?”
‘இதற்கு நான் என்ன பதில் சொல்லணும்?’ என்று புரியாமல் ராசுவை குழப்பத்துடன் பார்த்தாள்.
“எனக்கு உன் நிலைமை புரியுது. நீயே சின்ன பொண்ணு. உனக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்காது. வீட்ல இப்போதைக்கு வேற யாருமில்லாததால தான் உன்கிட்ட கேக்கறேன். முத்துமாணிக்கம் ஐயா ஊருக்குள்ள பெரிய தலைக்கட்டு, தர்மகத்தாவா இருந்தவரு. அவரோட இறுதி சடங்க சிறப்பா செஞ்சு அவரை அமோகமா வழி அனுப்பி வைக்கணுமில்ல. எப்படி வாழ்ந்த மனுஷன் இப்படி சாதாரணமா எடுத்துட்டு போறாங்களேனு ஊருக்குள்ள நாலு பேரு நாலுவிதமா பேசுவாங்க, அதான் கேக்கறேன். அப்பாவோட இறுதி சடங்க சிறப்பா செஞ்சிடலாமில்ல?”
“எனக்கு இதெல்லாம் தெரியாது நீங்களே பாத்து செய்யுங்கண்ணே” என்று உள்ளே சென்று விட்டாள்.
அதற்கு பின் ராசு தன் நண்பர்களை அழைத்து சென்று பந்தல் போட்டான். ஐஸ் பெட்டியை கொண்டு வந்து நடுவீட்டில் வைத்த அதில் முத்துமாணிக்கத்தை கிடத்தினான். புதுவேட்டி சட்டையை அவருக்கு போட்டு விட்டான். “அப்பா நீங்க வெள்ள வேட்டி கட்டும்போது மீசையை முறுக்கி விட்டா தான் கம்பீரமா இருப்பீங்கப்பா” என்று அவள் எப்போதும் தந்தையின் மீசையை முறுக்கி விடுவது நினைவு வர, முத்து மாணிக்கத்தின் அருகே சென்று மீசையை முறுக்கி விட்டு, வீபூதியை எடுத்து நெற்றியில் பூசினாள். வழக்கமாக அவள் வீபூதி பூசி விடும் போது முத்து மாணிக்கத்திற்கு தும்மல் வந்து விடும். ஒருவேளை அப்பா தும்முவாரா என்று அவரையே உத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவர் அசைவற்று இருக்கவே “அப்பா இன்னைக்கு பிளஸ்டூ ரிசல்ட் பாக்க போகலாம்னு ராத்திரி சொன்னியே, நேரமாச்சு வாப்பா போகலாம்”
“அப்பா எந்திரிப்பா” என்று அவர் மேல் விழுந்து கதறி அழ தொடங்கினாள். அவள் அழுகையை கேட்டு பின்கட்டிலிருந்த லஷ்மி கத்தியது. அழுது கொண்டே பின்கட்டிற்கு ஓடியவள் அங்கிருந்த மாட்டை கட்டிக் கொண்டு “லஷ்மி நீயில்லாம என்னால இருக்க முடியாதுனு சொன்னேன். இப்போ அப்பாவே இல்ல, நான் எப்படி இருக்க போறேன்?” என்று கதறினாள்.
அவளால் முத்துமாணிக்கம் இறந்ததை நம்பவே முடியவில்லை. முன்தினம் நள்ளிரவு வரை அவளுடன் நன்றாக தானே பேசிக் கொண்டிருந்தார்? வலி என்று கூட எதுவும் சொல்லவில்லையே.
“சின்ன பொண்ணே, பாசாயிடுவே தானே?”
“பாசாயிடுவேம்பா”
“காலைல வெள்ளனே எழுந்து கோயிலுக்கு போவோம். பொறவு ரிசல்ட் பாத்துட்டு அப்படியே மெட்ராசுக்கு போவோம். அலமேலு அத்தைக்கிட்ட சொன்னா, நல்ல காலேஜ்ல சேர்த்து விடுவா. நல்லா படிக்கணும் சரியா?”
“சரிப்பா”
“அலமேலுவோட ரெண்டாவது மவன் வசீகரனுக்கு தான் உன்னை பேசியிருக்கு தெரியுமில்ல? அவன் வெளிநாட்டுக்கு போயி பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கறதா உன் அத்தை சொன்னா. நீ அந்தளவுக்கு இல்லனாலும் ஓரளவுக்கு படிச்சா தானே எனக்கும் கட்டிக் கொடுக்க கவுரதையா இருக்கும்?”
சின்ன பொண்ணுவிடம் பதில் இல்லை.
“நாளையில இருந்து இந்த பழைய பாவாடை சட்டையெல்லாம் தூக்கி போட்டுடு. எம்புட்டு எடுத்துக் கொடுத்தாலும் உன் அக்காளுங்க உனக்கு எடுத்தது தான் நல்லாயிருக்குனு எடுத்துக்கினு போயிடுறாளுங்க. அவளுங்களுக்கு வேணாங்கிறத மட்டும் தான் இங்க விட்டு வைக்கறாளுங்க. பட்டணத்துக்கு போனதும் உனக்கு புது துணி எடுத்து தாரேன். காலேசுக்கு நல்லதா போட்டுகினு போ”
“அப்பா காலேசுக்கு பீஸ், புது துணி எடுக்கறதுக்கெல்லாம் பணம் எங்கிருக்கு?”
“இந்தா இருக்கே” என்று கத்தை பணத்தை எடுத்து காட்டினார்
“ஏதுப்பா இம்புட்டு பணம்?” என்று கண்களை அகல விரித்தாள்
“அது, நம்மகிட்ட இருக்கற ரெண்டு மாட்டையும் கன்னுகுட்டியையும் வித்துட்டேன்”
சாவதானமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவள் அதிர்ச்சியில் எழுந்தேவிட்டாள். “என்னப்பா சொல்றீங்க? நம்ம லஷ்மிய விக்க போறீங்களா? அது கொடுக்கற பாலுல தானேப்பா நாம கால்வயிறு கஞ்சியாச்சும் குடிச்சிட்டு இருக்கோம். அத வித்துட்டு என்ன பண்ண போறீங்க? வேணாம்பா லஷ்மிய விக்காதீங்கப்பா” என்றாள் இறைஞ்சலாக
“லஷ்மிய வித்தா தாம்மா உனக்கு சரஸ்வதி அருள் கிடைக்கும், அவ கிடைச்சுட்டா, அந்த லஷ்மி தேவியே உன்னான்ட வந்துடுவா”
“போங்கப்பா, நான் லஷ்மிய கொடுக்க மாட்டேன்” என்று முறுக்கி கொண்டாள்.
“நீ காலேஜ்க்கு போயிட்டா என்னால ரெண்டு மாடு, கன்னுகுட்டிய பாத்துக்க முடியாதுடா”
“காலேஜ்க்கு போவாம நானே அதுங்கள பாத்துக்கறேன், இல்லனா உள்ளூர்லயே படிக்கறேன். லஷ்மிய விக்க வேணாம்பா, பணத்தை திருப்பி கொடுத்துடுங்க”
“விக்கிறதா சொல்லி பணத்தை வாங்கிட்டேன். இனி திருப்பி கொடுத்தா வார்த்தை மாறிட்டான் முத்துமாணிக்கம்னு சொல்லுவாங்க. இன்னைக்கு விக்கலனாலும் நீ கண்ணாலமாகி போனா வித்து தானே ஆகணும்?
“உன் பெரிய அக்காங்க நல்லா படிச்சதால நல்லபடியா இருக்காளுங்க. சின்ன அக்கா ரெண்டு பேரும் சரியா படிக்காம உள்ளூர்ல சுத்திட்டு இருந்த காலி பசங்கள காதலிச்சு அவங்களுக்கு வாக்கப்பட்டு குடிகாரன்கிட்ட மாட்டிக்கினு சீரழியுறாளுங்க. நீயாச்சும் நான் சொல்றமாதிரி நல்லா படிச்சு அலமேலு மகன் வசீகரனை கட்டிக்கிட்டா உன் வாழ்க்கை நல்லாயிருக்கும் கண்ணு.
போன வருஷம் அலமேலு பெரிய மகன் சரவணன் கல்யாணத்துக்கு போனப்போ சின்னவனையும் பாத்தேன். அண்ணன் கல்யாணத்துக்கு லீவுல வந்திருக்கறதா அலமேலு சொல்லுச்சு. சினிமா ஹீரோ கணக்கா இருக்கான், இங்கிலீஷ்லயே பேசறான். அவனை கட்டிக்க போற நீயும் நாலு வாரத்தை இங்கிலீஷ்ல பேச வேணாமா? நீயும் அந்த ஊரு நாகரீகத்துக்கு ஏத்த மாதிரி இருந்தா தானே ரெண்டு பேருக்கும் பொருத்தம் சரியா இருக்கும்?” என்று வழக்கமாக கூறுவதையே ஒப்பித்தவர் “இந்த முற ஊருக்கு போனப்போ கல்யாண ஆல்பம் காட்டினாங்க. அதுல ஒன்னை எடுத்துக்கிட்டு வந்துட்டேன். உன் பொட்டியில தான் துணிக்கு அடியில போட்டோ இருக்கு வேணும்னா எடுத்து பாரு, மாப்பிள்ள எம்புட்டு ஜோரா இருக்காருனு தெரியும்” என்றார் ரகசிய குரலில்
“போங்கப்பா, இதெல்லாம் ஏன் என்கிட்ட சொல்றீங்க?” என்று சிணுங்கினாள்
“கண்ணாலம்னு சொன்னதும் சின்ன பொண்ணுக்கு வெக்கம் வந்துருச்சா?” என்று சிரித்தவர் “அதுக்கு இன்னும் நாளிருக்கு, முதல்ல நல்லா படிக்கணும்”
“நேரமாச்சு தூங்குங்க, நாளைக்கு ரிசல்ட் பாக்க போகணுமில்ல?” என்று தந்தையை அதட்டினாள்.
அன்றிரவு தூக்கம் வராமல் புரண்டவள் பின்பக்கம் மாட்டு கொட்டகைக்கு சென்றாள். சிறுவயதிலேயே தாயை இழந்தவளுக்கு, அவள் அன்னை வளர்த்த லஷ்மி தான் இன்னொரு தாயாக இருந்து அவளுக்கு பாலை கொடுத்தது. இனி லஷ்மி இல்லாமல் எப்படியிருக்க போகிறோம் என்ற கவலையில் “லஷ்மி நாளைலருந்து நீ இங்கே இருக்கே மாட்டே. நான் இல்லாம இருந்துக்குவியா? ஆனா நீயில்லாம நான் எப்படி இருக்க போறேன்னு தெரியல” என்று இரவு முழுவதும் அதனோடு பேசிக் கொண்டிருந்தாள்.
பொழுது விடிய ஆரம்பிக்கவே, “இன்னைக்கு தான் உன்கிட்ட நான் கடைசியா பால் கறக்க போறேன்” என்றவள் பாத்திரத்தை எடுத்து வந்து பால் கறந்தாள்.
தந்தைக்கு தேநீர் போட்டுக் கொண்டு எழுப்பினாள். ஒரே அழைப்பில் எழுந்து அமரும் முத்துமாணிக்கம் எழாமல் போகவே பயந்து போய் அலறியிருந்தாள். தந்தையின் உடம்புக்கு என்னவோ பிரச்சனை என்று நினைத்தாளே தவிர அவரின் உயிருக்கு பிரச்சனை என்று எள்ளளவும் எண்ணியிருக்கவில்லை. இரவு நன்றாக பேசிவிட்டு படுத்தவர் காலையில் இல்லை என்பதை அவள் மனம் இன்னுமே ஏற்க மறுக்கிறது.
“அப்பா எந்திரிங்கப்பா” என்று அவரை எழுப்பி கொண்டிருந்தாள்.
அதே சமயம் அவளின் அக்காக்கள் ஜமுனாவும் காவேரியும் அழுது கொண்டே வர அவர்கள் பின்னால் சொந்தபந்தங்கள் ஒவ்வொருவராக வந்தனர். கனடாவில் இருக்கும் தேவிகாவும் சந்திராவும் வீடியோ காலில் வந்து தந்தையை பார்த்து அழுதார்கள். “இப்ப இருக்கற சூழ்நிலையில நாங்க இந்தியா வந்தா திரும்பி கனடா வர்றதுக்கு விசா கிடைக்கறது கஷ்டம். நீங்களே எல்லாத்தையும் பாத்து செஞ்சுடுங்க. நாங்க லீவு கிடைச்சதும் வர்றோம்” என்றார்கள்.
“அப்பா இருக்கும் போதே வரல, இனி எங்கேயிருந்து வரப்போறீங்க” என்று அந்த நேரத்திலும் ஜமுனாவும் காவேரியும் குத்தி காட்ட மறக்கவில்லை.
யார்யார் வந்தார்கள் என்னென்ன பேசினார்கள் என்று சின்னபொண்ணு எதுவும் கவனிக்கவில்லை, தந்தையை நினைத்து அழுது கரைந்து கொண்டிருந்தாள். அதற்கு பின்பு நடக்க வேண்டிய சம்பவங்கள் அனைத்தும் இயந்திரகதியில் நடந்தேறியது. ஆண்பிள்ளை இல்லாததால் ஜமுனாவின் கணவன் சின்னதுரை கொள்ளி வைத்து விட்டு வந்தபின் ராசு வந்து இறுதிசடங்குக்கு ஆன செலவு கணக்கை சின்னதுரையிடம் கொடுத்தான்.
“என்ன இது? இதை ஏன் என்கிட்ட கொடுக்கறே?”
“நீங்க தானேங்க இந்த வீட்டோட மருமவன், உங்க கிட்ட தானே செலவு கணக்க காட்ட முடியும்?”
“உன்னை யாரு செலவு செய்ய சொன்னா? நாங்க வந்து பண்றதுக்குள்ள உனக்கென்ன அவசரம்? ரதம் மாதிரி தேரு, ஊரு முழுக்க பட்டாசு, மோளம், பந்தல்னு திருவிழா கணக்கா ஏற்பாடு பண்ணியிருக்கேனு அப்பவே யோசிச்சேன். சரி பெரிய மச்சினிச்சிங்க வெளிநாட்டுல இருக்காளுங்க. அவிங்க ஏற்பாடா இருக்கும்னு நினைச்சேன். கடைசியில எங்க தலையில கட்ட பாக்கறீயே. ஏய் ஜமுனா வாடி இங்கே? லட்சகணக்குல செலவு பண்ண சொல்லி யாரு இவன் கிட்ட சொன்னது? சிம்பிளா பண்ணா ஆகாதா?”
“நான் எதுவும் சொல்லலங்க, காவேரி நீ சொன்னியா?” என்று ஜமுனா காவேரியை கேட்க அவளும் இல்லையென்று தலையாட்டினாள்.
“யார் சொன்னா என்னங்க? அஞ்சு பொண்ணுங்க இருக்கீங்க, ஆளுக்கு கொஞ்சம் பணத்தை கொடுத்து எல்லாருக்கும் செட்டில் பண்ணி அனுப்பி விடுங்க” என்றான் ராசு
இருவரும் வெளிநாட்டில் இருக்கும் தேவிகாவிடம் போன் செய்து செலவு விவரத்தை சொல்ல, “உள்ளூர்ல இருந்துட்டு அப்பாகிட்ட இருந்ததெல்லாம் சுருட்டினது நீங்க தானே? இத கூட உங்களால செய்யமுடியாதா? உங்க கிட்ட இருக்கற பணத்தை கொடுங்க, நான் ஊருக்கு வரும் போது என் பங்கு பணத்தை கொடுக்கறேன்” என்று சொல்ல மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.
“வீட்டு மாப்பிள்ளைங்க வந்து முடிவெடுக்கறவரைக்கும் பொத்திட்டு இருக்க வேண்டியது தானே. உன் இஷ்டத்துக்கு செலவு பண்ணி வச்சிருக்கே. எவன் குடுப்பான் இதுக்கெல்லாம் காசு?”
“போனவரு ஊருக்குள்ள பெரிய மனுஷனாச்சே, கவுரதையா செய்வீங்கனு நினைச்சேன், இந்த செலவுக்கு கூட கணக்கு பாக்கற சில்லறையா இருப்பீங்கனு தெரியாம போச்சு” ராசு முணுமுணுக்க அங்கே ஆண்களுக்குள் கைகலப்பு ஆகிவிட்டது. அங்கே இருந்த பெரியவர்கள், “ராசு என்ன இருந்தாலும் நீயே இதெல்லாம் முடிவெடுத்திருக்க கூடாதுய்யா. அவங்க வரவரைக்கும் காத்திருந்திருக்கணும்”
“ஊருக்குள்ள இன்னொரு துக்கமும் நடந்திருக்கு. முன்னாடி சொல்லாட்டி இதெல்லாம் ஏற்பாடு பண்ண முடியாதுனு தான் செஞ்சேன். அதுவும் சின்ன பொண்ணுகிட்ட கேட்டுனு தான் செஞ்சேன்”
“அப்போ அவகிட்டயே பணத்த வாங்கிக்க” என்றான் சின்னதுரை சூடாக
இது அத்தனையும் உள்ளே முழங்காலில் முகம்புதைத்து அழுதபடி இருந்த சின்னபொண்ணின் காதில் விழுந்தது. தந்தையின் இறுதிசடங்கிற்கு செலவு செய்ததை கூட கணக்கு பார்க்கிறார்களே என்று நினைத்தவள் விறுவிறுவென்று எழுந்து சென்று தன் பெட்டியில் கடைசியாக அவள் தந்தை கொடுத்த பணத்தை எடுத்து வந்து ராசுவிடம் நீட்டினாள்.
“அண்ணா, இதுல இருக்கற பணம் போதுமானு பாருங்க”
சின்னதுரையும் மயில்சாமியும் தத்தம் மனைவிகளை பார்க்க, அவர்களோ, “ஏதுடி இம்புட்டு பணம்?” என்று வாயை பிளந்தார்கள்.
“அப்பா, கறவை மாடு கன்னுகுட்டி எல்லாத்தையும் வித்துட்டதா சொல்லி பணம் கொண்டு வந்து கொடுத்தாரு”
“யார கேட்டு மாடுங்கள வித்தாரு? நாங்க தான் எங்களுக்கு வேணும்னு கேட்டுனு இருந்தோமே” என்று காவேரியும் ஜமுனாவும் எகிற, சின்னபொண்ணிற்கு இருவரையும் நினைத்து மனம் கசந்தது.
(தொடரும்)