Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

88. வித்யா வெங்கடேஷ் - நிழலாடும் நின் நினைவில்

நிழலாடும் நின் நினைவில் 01 – (ப்ரோலாக்)

ஓம் ஸ்ரீ சாய்ராம்

எழும்பூர், சென்னை

ஏப்ரல் 2000

செலவு மற்றும் மேலாண்மைக் கணக்கியல் (CWA/CMA) தேர்வுகளுக்கான கட்டணம் செலுத்துவதற்குக் கடைசி நாள் என்பதால், சிங்கார சென்னையின் சுட்டெரிக்கும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல், கல்வி நிறுவனத்தின் வாசலில் கால்கடுக்க நின்றுகொண்டிருந்தனர் மாணவர்கள்.



Advertisement

நொடிக்கு ஒருமுறை கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டும், முகத்தில் பூத்துக்கொட்டும் வியர்வைத் துளிகளைக் கைக்குட்டைக் கொண்டு சலிக்காமல் ஒத்தியெடுத்துக் கொண்டும், விண்ணப்பத் தாளினைச் சரிபார்த்துக்கொண்டும் என இருப்புக்கொள்ளாமல் தவித்தனர். மதிய உணவு இடைவேளை முடிந்து பணிக்குத் திரும்பும் அதிகாரிகளைக் கண்டதும், பரபரவென அவர்களைப் பின்தொடர்ந்தனர்.

“ரெண்டு வரிசையா நில்லுங்க!” அறிவித்த அதிகாரிகள், மின்விசிறிகளை இயக்கிவிட்டு தத்தமது இருப்பிடத்தில் அமர்ந்தபடி கவுன்டரின் கண்ணாடி ஜன்னல்களைத் திறக்க, முன்வரிசையில் இடம்பிடிக்க, தேனிக்கூட்டமெனத் சூழ்ந்துகொண்டனர் மாணவர்கள்.

முட்டிமோதி ஓடிவந்தும் வரிசையில் தனக்கு முன் பத்துப்பேர் நின்றிருப்பதைக் கண்ட ரம்யாவின் முகம் சலிப்பில் சுருங்கியது.

Advertisement

பெற்றிருக்கும் இரண்டு மணிநேர விடுப்பு முழுவதும் இங்கேயே தீர்ந்துபோய்விடும் போலவே என நொந்தவளுக்கு, தலைமை ஆசிரியரின் கண்டிப்பான முகம் கண்முன் நிழலாடியது.

Advertisement

தனியார் கல்லூரி ஒன்றில் பெருநிறுவன கணக்கியல் மற்றும் வருமான வரி கணக்கியல் பாடங்களை நடத்தும் பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாள் ரம்யா. வணிகவியலில் இளங்கலை பட்டம் பயின்றுகொண்டிருக்கும் போதே, செலவு மற்றும் மேலாண்மைக் கணக்கியல் அடிப்படை பாடங்களில் தேர்ச்சிப் பெற்று இடைநிலை பாடங்களையும் முடித்திருந்ததனால், தற்போது ஆசிரியர் பணியுடன் இறுதி நிலைக்கான பாடங்களையும் படித்து வருகிறாள். இந்தக் கடைசி நான்கு பரிட்சைகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சிப் பெறுவது மட்டும்தான் பாக்கி. அதற்குப் பின் நல்ல ஊதியத்துடன் பணிசார் பயிற்சிகளில் சேரும் வாய்ப்புகள் தானாக அமையும் என்று அறிந்திருந்தாள்.

ஜூன் மற்றும் டிசம்பரில் என வருடத்தில் இரண்டு முறை நிகழும் தேர்வுகளில் உடனுக்குடன் எழுதலாமா, சிறு இடைவெளிக்குப் பிறகு டிசம்பரில் எழுதலாமா எனத் தத்தளித்துக் கொண்டிருந்தவள், சூட்டோடு சூட்டாக முடித்துவிட தீர்மானிப்பதற்குள், விண்ணப்பிக்கும் கடைசி நாளும் நெருங்கிவிட்டது.

தலைமை ஆசிரியரிடம் காரணம் சொல்லி விடுப்பு கேட்டபோதே, ‘டீச்சர் நீங்களே இப்படிப் பொறுப்பில்லாம கடைசி நிமிஷத்தில் ஓடலாமா,’ என இடித்துக்காட்டியப் பிறகே அனுமதி அளித்திருந்தார்.

Advertisement

வரிசையில் நிற்பவர்கள் சீக்கிரம் நகர வேண்டுமே என அவள் கண்களை மூடி பிரார்த்திக்க,

“சிஸ்டர்! சிஸ்டர்! என் அப்லிகேஷனும் சேர்த்துக் கொடுத்திடுங்க,” பதற்றத்துடன் அவளருகே ஆஜரானான் தருண்.

மேலே விழாத குறையாக விண்ணப்பத் தாளினையும் கேட்புக் காசோலையையும் தன் கையில் திணிக்க முயலுபவன் போக்கில் கடுப்பானவள்,
“லாஸ்ட் மினிட்ல வந்துட்டு லைன்ல முன்னாடி நிக்குறவங்க கிட்ட கொடுக்கிற; அப்போ மணிக்கணக்கா க்யூல நிக்குறவங்க எல்லாம் முட்டாளா” பெருங்குரலில் ஏசினாள்.

“வேலை செய்யற இடத்துல அண்ணனுக்கு ஆக்சிடன்ட் ஆகி ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்கன்னு இப்போதான் ஃபோன் வந்துது…அதான்…” தருண் முழுவதையும் விளக்கும் முன், ரம்யாவின் கோபம் கரிசனமாக மாறியது.

“டென்ஷனாகாம கிளம்பு. நான் பாத்துக்குறேன்,” என விண்ணப்பத் தாளினை பத்திரப்படுத்தினாள்.

******************************************************************************************
அன்றைய பொழுதைப்பற்றி அம்மாவிடம் ஒப்பித்துக் கொண்டிருந்தவள் பேச்சோடு பேச்சாக தருண் பற்றி சொல்ல,

“ஃபீஸ் கட்டிட்டேன்னு தகவல் சொல்லிட்டு, அப்படியே அவங்க அண்ணனுக்கு எப்படி இருக்குன்னு விசாரிம்மா,” குறுக்கிட்டார் சாருலதா.

அன்னையின் யோசனைக்குத் தலையசைத்த ரம்யா, அதிகாரி கையொப்பமிட்டுத் திருப்பித் தந்த ஏற்புச் சீட்டைத் தோள்பையிலிருந்து எடுத்தாள். தருண் நிரப்பியிருந்த சுய விவரங்களிலிருந்த அலைபேசி எண்ணுக்கு அழைத்தாள்.

மறுமுனையில் குரல் கேட்டதும், “ஹாய் தருண்! நான் ரம்யா பேசுறேன். மதியம் இன்ஸ்டிடியூட்ல சந்திச்சோமே,” ரம்யா அறிமுகம் செய்துகொள்ள,

“ஸாரி! ராங்க் நம்பர்!”  துண்டித்தார் அந்த நபர்.

அலைபேசி எண்ணை சரிபார்த்த ரம்யா, “நம்பர தப்பா எழுதிருக்கான் ‘ம்மா,” எனச் சலித்துக்கொண்டாள்.

******************************************************************************************

நாட்கள் உருண்டோட தேர்வு நாளும் வந்தது. காலை வேளையில் அடிப்படை, மற்றும் இடைநிலை பாடங்களும், மதிய வேளையில் இறுதி நிலை பாடங்களும் எனத் தேர்வுகள் பிரிக்கப்பட்டிருந்தன.

நற்பகல் பன்னிரண்டரை மணியளவில் தேர்வு மையத்திற்குள் வந்த ரம்யாவின் கவனம், காலை நேர தேர்வுகளை முடித்துச் செல்லும் மாணவர்கள் பக்கம் திரும்பியது.

தருண், அடிப்படை நிலை தேர்வுகளுக்காக விண்ணப்பித்திருந்தை நினைவுகூர்ந்தவள், அவனை அந்தக் கூட்டத்தில் தேடினாள். சுற்றம் மறந்தவர்களாக, வினாத்தாளினை முன்னும் பின்னும் திருப்பியபடி மும்முரமாகப் பேசிக்கொண்டே தன்னைக் கடந்து சென்றுகொண்டிருந்த ஒவ்வொருவரையும் கூர்ந்து கவனித்தாள்.

கால்மணி நேரம் காத்திருந்தும் தருண் வந்தபாடில்லை. காலை நேர தேர்வுகளை எழுத வந்த மாணவர்கள் பெரும்பாலானவர்களும் வெளியேறிய நிலையில், இனியும் அவனைத் தேடி அலைவது வீண் என்ற முடிவுக்கு வந்தவள், அன்றைய தேர்வுக்கான பாடப் புத்தகத்தைப் புரட்டினாள்.

மூச்சுவிடக்கூட நேரமில்லாத அளவிற்கு அடுத்தடுத்த நாள் நடைபெற்ற தேர்வுகளுக்குப் படித்த அயர்ச்சி முகத்தில் வழிய, மொட்டைமாடியில் அமர்ந்தபடி கடைசி நாள் பரிட்சைக்குப் படித்துக்கொண்டிருந்தாள். வானம் கருமேகங்களால் சூழ்ந்திருக்க, மழைக்கு முன் கிளம்ப தீர்மானித்தாள்.

தேர்வு மையத்தின் தரிப்பிடத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திக்கொண்டிருந்தவள் எதிரே திடுதிப்பென்று வந்து நின்றான் தருண்.

“தாங்க் யூ சிஸ்டர்! உங்க புண்ணியத்தால் நல்லபடியா எக்ஸாம்ஸ் எழுதி முடிச்சிட்டேன்,” பற்கள் மின்ன அறிவித்தவனை,

“தருண்….” கண்கள் அகல ஏறிட்டாள்.

“பரவாயில்லையே! என் பேரு கூட ஞாபகம் வச்சிட்டு இருக்கீங்களே,” பெருமிதம் பொங்க இளித்தான்.

கூக்குரலிட்ட மணிக்கூண்டு, பதினொன்று என நினைவூட்ட, “உன் எக்ஸாம் முடிய சுளையா இன்னும் ஒருமணி நேரமிருக்கே. அதுக்குள்ள வெளிய வந்துட்ட,” அக்கறையாக வினவினாள்.

“வேணும்ன்ற அளவுக்கு எழுதிட்டேன்; கிளம்பி வந்துட்டேன்,” கோர்வையாகப் பேசி கண்சிமிட்டினான்.

“அப்போ நூற்றுக்கு நூறு வாங்கிடுவீயா,” ஆசிரியருக்கே உள்ள தோரணையில் ரம்யா மடக்க,

அப்போதும் அசரவில்லை அவன். “வேணும்ன்ற அளவுக்குன்னா பாஸ் ஆகுற அளவுக்கு எழுதிருக்கேன்னு அர்த்தம்,” என்றான்.

அலட்சிய குணம் கொண்ட இவனுடன் என்ன பேச்சு என யோசித்தவள், பதில்சொல்லாமல் நகர்ந்தாள்.

“நாற்பது மதிப்பெண் வாங்கினாலும் ஆடிட்டர் தான்; நூறு மதிப்பெண் வாங்கினாலும் ஆடிட்டர் தான் சிஸ்டர். அதனால எக்ஸாம் ஆரம்பிக்கும் வரைக்கும் விழுந்து விழுந்து படிச்சு உடம்பை வருத்திக்காதீங்க,” உரக்கப் பேசி அவள் கவனத்தை ஈர்த்தான்.

தன் பழக்கம் அவனுக்கு எப்படித் தெரிந்தது என உறைந்து நின்றாள்.

“ரொம்ப யோசிக்காதீங்க சிஸ்டர்! நான்தான் தினமும் பார்த்துட்டு இருக்கேனே. வந்ததும் வராததுமா புக்கும் கையுமா உட்காருறீங்க. முகத்துல ஃபுல் டென்ஷனோட பக்கம் பக்கமா புரட்டுறீங்க; லாஸ்ட் கால்ன்னு இன்விஜிலேடர் சொன்ன அப்புறமும் புக்கை மூட மனசில்லாம பேக்ல வச்சிட்டுப் போறீங்க,” அவன் வர்ணிக்க,

மறைந்திருந்து நோட்டம்விட்டது மட்டுமில்லாமல் நக்கல் செய்கிறானே என்று கோபம் தலைக்கேறியது அவளுக்கு. விறுவிறுவென அங்கிருந்து நகர்ந்தாள்.

மீண்டும் அவள் வழியை மறித்தவன், “சரி! சரி! இன்னைக்கு லாஸ்ட் எக்ஸாம்; டென்ஷன் ஆகாம சூப்பரா எழுதுங்க. ஆல் தி பெஸ்ட்,” வாழ்த்தி, அவள் பதிலுக்குக் காத்திராமல் சிட்டெனப் பறந்தான்.

வகுப்பறை வாசலில் வந்தமர்ந்தவள், தேர்வு தொடங்க அரைமணி நேரமே இருப்பதை உணர்ந்து படபடவெனப் புத்தகத்தின் பக்கங்களைத் திருப்பினாள். எதைப் படிப்பது எதை விடுவது எனத் திணறினாள். புத்தி பாடப்பகுதிகளை நினைவுபடுத்திக் கொள்ள மெனக்கெட, மனமோ சற்றுமுன் தருண் வர்ணித்த விதத்தை அசைபோட்டது. எதற்கெடுத்தாலும் பதற்றம் கொள்ளும் தன் சுபாவத்தை எண்ணி தனக்குத்தானே சிரித்துக்கொண்டாள்.

******************************************************************************************

எட்டு வாரங்களுக்குப் பிறகு தேர்வு முடிவுகளை அறிவித்திருந்தனர். அடிப்படை நிலையில் தேர்ச்சி பெற்றிருக்கும் மகனைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடினார் தருணின் அப்பா தாமோதரன்.

உள்ளூரிலேயே பிரபலமான கட்டுமானத் தொழில் நிறுவனமான எஸ் & டி. லிமிடடின் உரிமையாளர் அவர். தன் இரு மகன்களும் நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்புகள் ஏற்க வேண்டுமென்ற தொலைநோக்கு பார்வையுடன் அவர்களைத் துறை சார்ந்த பாடங்களைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி ஊக்குவித்தார். மூத்தவன், தந்தை சொல் தட்டாத பிள்ளையாக, குடிமுறைப் பொறியியலில் முதுகலை பட்டம் பெற்று நிர்வாகப் பொறுப்பையும் ஏற்றாகிவிட்டது.

இளையவனோ அறிவியலுக்கும் தனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என இளங்கலை வணிகவியலில் சேர்கிறேன் என்றிருந்தான். நிறுவனத்தின் கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கொள்ள உதவும் என அவன் விருப்பத்திற்குச் செவிசாய்த்திருந்தார் தாமோதரன். அவனோ அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறும் அளவிற்கே மதிப்பெண்கள் எடுத்து வருகிறான். அவன் எதிர்காலத்தைப்பற்றி கவலைக்கொண்டவர், அவனை செலவு மற்றும் மேலாண்மைக் கணக்கியல் பயிலச் சொல்லி வற்புறுத்தினார். இதோ அதோ என இரண்டு வருடங்கள் தட்டிக்கழித்தவன் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றதும் அளவில்லா சந்தோஷத்தில் மிதந்தார்.

டிசம்பர் மாதத்திலேயே இடைநிலை பரிட்சைகளை எழுதி தேர்ச்சிப் பெறவேண்டும் எனக் கூறியவர், அதற்கான பயிற்சி வகுப்புகளிலும் சேர்த்துவிட்டார்.

தினமும் காலையில் ஆறு மணிமுதல் எட்டு மணிவரை வகுப்பு; அங்கிருந்து நேராக கல்லூரிக்குச் செல்லவேண்டும்; நினைத்தாலே தலைசுற்றியது அவனுக்கு.

அதிகாலையில் விழித்துக்கொண்டதனால் விட்டத் தூக்கத்தைத் தொடரும் விதமாக கடைசி வரிசையில் ஐக்கியமானான்.

‘குட் மார்னிங் மேம்’ என்ற சக மாணவர்களின் கூக்குரலில் இயந்திர கதியாக எழுந்து நின்றவன், ஆசிரியரின் உருவத்தைக் கண்டதும்,

“நீங்களா!” என அழுந்த கண்களைக் கசக்கிக்கொண்டான்.

வணக்கம் சொல்லிமுடித்த மாணவர்கள் அனைவரும் அமர, திருதிருவென முழித்த வண்ணம் நின்றுகொண்டிருக்கும் தருண் தெள்ளத்தெளிவாகத் தெரிய,

“நீயா!” என உதடசைத்த ரம்யாவின் முகத்திலும் அதே ஆச்சரியம்.

மற்ற மாணவர்களின் சலசலப்பில், இருக்குமிடம் உணர்ந்து சுதாரித்துக்கொண்டவள், சுயஅறிமுகம் செய்துகொண்டு பாடம் எடுப்பதில் கவனம் செலுத்தினாள்.

வகுப்பு முடிந்த கையோடு ரம்யா கதவை நோக்கி நகர, இரண்டே தாவில் துள்ளிவந்து அவளை எட்டிப்பிடித்த தருண்,

“ரொம்ப சூப்பரா பாடம் எடுக்குறீங்க. புதுமுகம்னு சொன்னால்தான் தெரியும்,” துள்ளலாய் பாராட்டினான்.

“இன்ஸ்டிட்யூட்டுக்குத் தான் புதுசு. ஐ ஆம் ய காலேஜ் லெக்ச்சரர் வித் 2 இயர்ஸ் எக்ஸ்பீரியன்ஸ்,” அவள் மிடுக்காகப் பதிலளிக்க,

“பார்க்க காலேஜ் ஸ்டுடென்ட் மாதிரி இருக்கீங்க. நீங்க லெக்ச்சரரா! அன்பிலீவபுல்!” வாயைப்பிளந்த தருணுக்கு நிஜமாகவே ஆச்சரியமாக இருந்தது.

இளவயதில் கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றி வரும் ரம்யாவைக் கண்டு பிரமிக்காத மாணவர்களே இல்லை. அவளும் வெட்கம் கலந்த சிரிப்புடன் பெருமிதம் பொங்க பதில் அளிப்பாள். இன்றும் அதே உணர்வு. ஆனால் தருண் முன் வெளிப்படுத்த தயங்கியவள்,

“போதும் உன் நடிப்பு! நான் உன் டீச்சர்ன்னு தெரிஞ்சதும், நல்ல பையன் மாதிரி ஐஸ் வெக்குறீயா,” கண்டித்தாள்.

“யாரையும் இம்ப்ரெஸ் பண்ண பேசமாட்டேன். மனசுல பட்டத மட்டும்தான் பேசுவேன்!” என்றான் திடமாக.

வெட்டொன்று துண்டு இரண்டு எனப் பேசும் அவன் சுபாவத்தை முதல் சந்திப்பிலிருந்தே கவனித்து வந்தவளின் மனம் இளகியது.

“தெரியும் தருண். உன்னுடைய இந்தக் குணத்தால்தான் உன்னையும் அறியாமல் மத்தவங்க மனசுல இடம் பிடிக்கிற,” பொத்தாம் பொதுவாகப் பாராட்டினாள்.

பொடிவைத்துப் பேசும் அவள் குறிப்பை மறுநொடியே உணர்ந்தவன்,
“மேடம் மனசுல இடம் பிடிக்கிற அளவுக்கு அப்படியென்ன பேசினேன்,” அவள் கண்பார்த்து புருவங்களை ஏற்றி இறக்கி மடக்கினான்.

“அடப்போடா!” எனச் சலித்துக்கொண்டவள், “காலேஜுக்கு நேரத்துக்குப் போகணும்; எக்ஸாம் பேப்பர் செட் பண்ணணும்; 100% ரிஸல்ட் தரணும்; இப்படி எல்லாத்துக்கும் டென்ஷன் ஆகும் ரகம் நான். ஆனால் இப்பலாம், டென்ஷனாகுற அறிகுறி தெரிஞ்சாலே உன் குரல்தான் காதுல கேட்குது,” அசடுவழிந்தாள்.

“நிஜமாவா!” கண்கள் அகல வினவினான்.

“ம்ம்… எனக்கும் உன்னை மாதிரி எல்லாத்தையும் பதற்றமில்லாம ஹாண்டல் பண்ணனும்னு ஆசை. ஆனால் இந்த டென்ஷன் இருக்கே….” அவள் பெருமூச்சுவிட,

“கவலையை விடுங்க. அடுத்த நாலு மாசம் நீங்க எனக்கு டாக்ஸ் லாஸ் சொல்லித்தாங்க ; நான் உங்களுக்கு டென்ஷ்ன் ஃப்ரி லைஃப் ஸ்டைல் சொல்லித்தரேன்,” கோர்வையாகப் பேசி கண்சிமிட்டினான்.

உதடு பிரிக்காத புன்னகையோடு தலையசைத்தவள், “நேரமாகுது! கிளம்பலாம்!” எனத் தரிப்பிடத்தை நோக்கி நடந்தாள்.

இருவரும் அவரவர் இருசக்கர வாகனங்களை உயிர்ப்பிக்க, “ஹான்! கேட்க மறந்துட்டேன். இனி நான் உங்கள மேம்ன்னு கூப்பிடவா, இல்ல அன்னைக்கு மாதிரி சிஸ்டர்ன்னு கூப்பிடவா,” யோசனையாக வினவினான்.

“ரெண்டும் வேண்டாம்; ஃப்ரெண்ட்லியா ரம்யான்னு பேர் சொல்லிக் கூப்பிடு,” மென்னகையுடன் பதிலளித்தாள்.

“சரி ரம்யா! நாளைக்குப் பார்க்கலாம்!” மறுகணமே உரிமையுடன் சொல்லி, புகை கிளம்ப தன் புல்லெட்டில் பறந்தான்.

நடப்பது நடக்கட்டும் என நிமிர்வுடனும்,
வருவது வரட்டும் எனப் பயமின்றியும்,
வானம்பாடியாய் சிறகுகள் விரித்துப் பறக்க – விடை தேடுகிறேன்
நெஞ்சோரம் நிழலாடும் நின் நினைவில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!