Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

03. சிவயாழினி - மௌனமாய் ஒரு மோகனம்

மெளனம் 19

வசீகரன் யுஸ் சென்று மாதங்கள் கடந்திருந்தது, அன்று இந்தியாவில் ப்ளஸ்டூ ரிசல்ட் என்ற செய்தியை பார்த்ததும் அவனுக்கு முத்துமாணிக்கத்திடம் பேசியது நினைவு வந்தது. அவருடைய சின்ன பெண்ணும் பன்னிரண்டாவது தேர்வு எழுதுவதாக சொன்னாரே என்று யோசித்தவன் நேரத்தை பற்றி கணக்கில் கொள்ளாமல் தன் கைப்பேசியில் சேமித்து வைத்திருந்த முத்துமாணிக்கத்தின் எண்ணிற்கு அழைத்தான்.
வெகுநேரம் அழைப்பு ஏற்கப்படவே இல்லை. இங்கே பகல் என்றால் அங்கே இரவு நேரம் ஆயிற்றே என்று நெற்றியை தேய்த்துக் கொண்டு கைப்பேசியை அணைக்க முயன்ற சமயம் அழைப்பு ஏற்கப்பட்டது.


Advertisement

“ஹலோ யாரு?” குரல் கம்மியிருந்தது

Advertisement

“மாமா, நான் வசீகரன் பேசறேன், உங்க தங்கச்சி அலமேலு மகன்”

Advertisement

“ம், சொல்லுப்பா” கணீரென்று தன்னிடம் பேசிய குரல் இப்போது மெலிந்து ஒலிக்கவும்

Advertisement

“மாமா உடம்பு சரியில்லையா?” என்று விசாரித்தான்.
“அப்படியெல்லாம் இல்லப்பா, என்ன விஷயம்?”
“உங்க பொண்ணுக்கு ப்ளஸ் டூ ரிசல்ட் வந்திடுச்சா”
“நாளைக்கு தான் ரிசல்ட் தம்பி”
“என்ன மாமா, மாப்பிள்ளைனு கூப்பிடாம தம்பினு சொல்றீங்க? உங்க மக கிட்ட என் போட்டோவ காட்டினீங்களா? அவங்க என்ன சொன்னாங்க?” என்றான் ஆர்வமாக
“தம்பி, கொஞ்ச முன்னாடி தான் உங்கம்மா அலமேலு கிட்ட பேசினேன், அவங்க இந்த சம்மந்தம் சரிவராதுனு சொல்லிட்டாங்க. நான் உங்க கிட்ட சொன்ன விஷயத்தை மறந்துடுங்க”
“ஏன், என்னாச்சு மாமா?” பலத்த அதிர்ச்சி அவன் குரலில் தெரிந்தது
“தெரியலப்பா, மூணு நாலு வருஷத்துக்கு பொறவு நடக்கப்போற கல்யாணத்தை பத்தி இப்பவே பேசினா சரிவருமானு நான் முன்னாடியே யோசிச்சேன். அது சரியா போச்சு. நான் கொஞ்சம் சூதனமா இருந்திருக்கணும். பேச்சை என்வரைக்கும் வச்சிருந்துருக்கணும், என் மவ மனசுல ஆசைய விதைச்சுட்டேன், படிக்கற பொண்ணு மனசுல குழப்பத்தை வரவழைச்சுட்டேன். கொஞ்ச முன்னாடி தான் நீங்க கொடுத்த போட்டோவையும் உங்க குடும்ப போட்டோவையும் பாக்க சொல்லி அவ பெட்டியில வச்சேன். பாத்துட்டாளா என்னவோ தெரியல. 
அவளுக்கு கல்யாணம் பண்ண இன்னும் வயசிருக்கு தான். ஆனா அதுவரைக்கும் நான் இருப்பனானு தெரியல. எனக்குனு இருக்கற கால்கட்டு அவ தான். என் மத்த பொண்ணுங்கள நம்ப முடியாது, நான் நடமாடிட்டு இருக்கறப்பவே ஒருத்தன் கையில புடிச்சு கொடுத்துட்டு நிம்மதியா போயிடலாம்னு நினைச்சேன். அது முடியாது போலருக்கு. 
என் பொண்டாட்டியும் அம்மாவும் போன பின்னாடி அவதான் என்னை கண்ணும் கருத்துமா பாத்துக்கிட்டா. கால சுத்தற பாம்பா ஊரை சுத்தியும் இருக்கற சொந்தக்கார குடிகார பயலுங்க பரிசம் போட்டு சொத்தை வாங்கிபுடணும்னு கங்கணும் கட்டினு திரியறானுங்க. அவனுங்க கிட்ட இருந்து எம்மவள காப்பாத்தி அவ மனச புரிஞ்சு நடந்துக்கற மாதிரி ஒருத்தன நான் எங்க போய் தேடறதுனு தெரியல.  அவளுக்கு விடிவு காலமே வராது போலருக்கு” என்றார் பெருமூச்சுடன்
“மாமா, ஏன் இவ்வளவு விரக்தியா பேசறீங்க? நான் ஊருக்கு வந்ததும் அம்மாகிட்ட பேசறேன், அதுவரைக்கும் உங்க பொண்ணு மேற்காெண்டு படிக்கட்டும்”
“வேணாம் தம்பி, உங்கம்மா இதுவரைக்கும் என்கிட்ட சம்மந்தம் பேசின விஷயத்தை உங்க கிட்ட சொல்லல தானே? அது என் மூலமா தெரிஞ்சதா இருக்க வேணாம். நான் அவசரப்பட்டு உங்க கிட்டயும் விஷயத்தை சொன்னது தப்புனு தோணுது. என்னை மன்னிடுங்க தம்பி. அம்மா மகனுக்குள்ள என்னால எந்த பிரச்சனையும் வரவேணாம். நீங்க தெரியாத மாதிரியே இருந்துக்கோங்க. உங்கம்மா பாக்கற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோங்க” என்றார்
“மாமா, நான் சொல்றத” வசீகரன் முடிப்பதற்குள் போனை வைத்திருந்தார்.
வசீகரனுக்கு அவர் விரக்தியாக பேசியது மனதிற்குள் சங்கடத்தை வரவழைத்திருந்தது. ‘அன்னைக்கு கல்யாண மண்டபத்துல மனுஷன் எவ்வளவு ஆசையா பேசினாரு? இப்போ என்னவோ ரொம்ப விரக்தியா பேசறாரே? இந்த அம்மா ஏன் சம்மந்தம் பேசிட்டு, வேணாம்னு சொல்லணும்? என்ன காரணமா இருக்கும்? தினமும் போன்ல பேசும் போது ஒருமுறை கூட முத்துமாணிக்கத்தோட செய்துக்கிட்ட சம்மந்தத்தை பத்தியோ அவர் பொண்ணை பத்தியோ அம்மா பேசலயே ஏன்?’ என்று அவனுக்குள் பல கேள்விகள் இருந்தது.
அலமேலு சரவணனுக்கு குழந்தை பிறந்ததை சொல்ல போன் செய்தார்.
“அம்மா, என்கிட்ட எதாவது விஷயம் சொல்லணும்னு நினைச்சு மறந்துட்டியா?” என்று கேட்டான்
சற்று நேரம் யோசித்து “இல்லையேடா, ஏன் கேக்கற?”
“சும்மா தான் கேட்டேன்” என்று போனை வைத்துவிட்டான்.
அவன் விவரம் சொல்லி அன்னையிடம் விசாரித்தால், முத்துமாணிக்கம் அவனிடம் பேசியதை கூற வேண்டும். அவன் இப்போது முத்துமாணிக்கத்தின் பெயரை சொன்னால் அலமேலு அவரை தவறாக நினைக்க கூடும். எதுவாக இருந்தாலும் நேரில் சென்று என்ன பிரச்சனை என்று பேசிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தான்.
கல்யாண மண்டபத்தில் வசீகரன் முத்துமாணிக்கத்தை வற்புறுத்தியதால் மட்டுமே அவரிடம் அலமேலு சம்மந்தம் பேசியதை கூறினார். இப்போதும் அவனாக போன் செய்ததால் அவன் மனதில் ஆசையை வளர்த்துக் கொள்ளக் கூடாது என்று  சம்மந்தம் தடைப்பட்டதையும் கூறினார். அவர் நினைத்திருந்தால், அவனை தூண்டி தன் மகளை திருமணம் செய்ய சொல்லி கேட்டிருக்கலாம். ஆனால் ‘உன் அம்மா சொல்ற பொண்ணை கட்டிக்கோ’ என்றல்லவா கூறுகிறார். அவர் பேசும் போது குரல் உடைப்பட்டு இருந்ததை அவனால் உணர முடிந்தது. 
மகளுக்கு நல்ல வரன் அமைந்து விட்டதாக பூரித்து போயிருந்தவருக்கு, அன்னையின் பேச்சு பெருத்த ஏமாற்றத்தை தந்திருக்கிறது என்று புரிந்து கொண்டான். அதனால் இந்தியாவுக்கு சென்று முதலில் அவரை சந்தித்து சமாதானம் செய்ய வேண்டும், அதற்கு பின்பு அலமேலுவிடம் இதைப்பற்றி பேசிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தான்.
சமீபத்தில் படிப்பு முடிந்ததிருந்தாலும் இன்னும் ஒரு வருடமாவது வேலை செய்துவிட்டு போக வேண்டும், அதை வைத்து இந்தியாவில் யாருடைய உதவியும் இல்லாமல் தொழில் தொடங்கலாம் என்று தான் முதலில் நினைத்திருந்தான். ஆனால் அந்த முடிவை மாற்றி இந்தியா செல்வதற்கு விசா ஏற்பாடு செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கி விட்டான்.
கல்லூரி சான்றிதழ்கள், விசா என அனைத்து விஷயங்களையும் முடித்துவிட்டு அவன் கிளம்ப இரு மாதங்கள் கடந்திருந்தது.
இந்தியா வருவதை கூறினால் வீட்டினர் ஏர்போர்ட்டுக்கு வந்து காத்திருப்பார்கள் என்பதால் வீட்டில் யாருக்குமே தகவல் சொல்லாமல் சொந்த மண்ணுக்கு வந்தவன் முத்துமாணிக்கத்தை சந்திக்க ஆதியூருக்கு சென்றான். அன்று அவர்கள் இருவரும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்த போது முத்துமாணிக்கம் தன் பூர்வீகத்தை பற்றியும் இப்போது தான் இருக்கும் நிலையை பற்றியும் விளக்கமாக கூறியிருந்ததால், அவர் சொன்ன விஷயங்களை வைத்து தன்னுடைய புதிய காரில் ஆதியூரை அடைந்திருந்தான்.
முத்துமாணிக்கத்திற்கு போன் செய்தால் அவனை வரவேண்டாம் என்று சொல்லி விடுவார். நேராக வீட்டிற்கு சென்று விட்டால் அவரால் அவனை துரத்த முடியாது என்று நினைத்து அவன் அவருடைய எண்ணிற்கும் அழைக்கவே இல்லை.
தார்சாலையில் காரில் அமர்ந்தபடி கண்ணாடியை இறக்கி “பழைய தர்மகத்தா முத்துமாணிக்கம் வீடு எங்கேயிருக்கு தாத்தா?” என்று விசாரிக்க, வயலில் ஏர் உழுது கொண்டிருந்த முதியவர் நிமிர்ந்து வழி கூறினார். “ஆனா வீடு பூட்டிக்கிடக்கே, அங்கே யார பாக்க போறீங்க?” என்று அவர் கேட்டது அவன் காதில் விழுந்திருக்கவில்லை.
பழைய பாழடைந்த மாடி வீடு, எப்போது இடிந்து விழலாம் என்று காத்திருந்தது, அத்தோடு வீடும் பூட்டியிருக்கவே யோசனையோடு சுற்றும் முற்றும் பார்த்தான். அந்தபக்கம் சென்று கொண்டிருந்த செல்வி வசீகரனை பார்த்து விட்டு அவனருகே வந்தாள்.
“யார் சார் நீங்க? என்ன பாத்துட்டு இருக்கீங்க?”
“என் பேரு வசீகரன், பழைய தர்மகத்தா முத்துமாணிக்கம் என்னோட மாமா தான், அவரை பாக்கலாம்னு வந்தேன். அவர் வீடு இது தானே”
“உங்க மாமானு சொல்றீங்க? அவர் செத்தது கூட உங்களுக்கு தெரியலயா?”
“வாட்? செத்துட்டாரா? எப்போ?” பலமாகவே அதிர்ந்து போனான் வசீகரன்
“ஆமா சார், செத்து ரெண்டு மாசமாச்சு. ப்ளஸ் டூ ரிசல்ட் வந்துச்சே, அதுக்கு முந்தின நாள் தான் செத்துட்டாரு, பாவம் என் பிரெண்ட். ஏற்கனவே அம்மா இல்லாதவ, இப்போ அப்பாவும் இல்ல” என்றாள் பெருமூச்சுடன்
வசீகரன் அவசரமாக நாட்களை கணக்கிட்டு பார்த்தான், அலமேலுவும் அவனும் ஒரே நாளில் தான் முத்துமாணிக்கத்திடம் பேசியிருக்கிறார்கள். அன்றே அவர் உயிர் பிரிந்திருக்கிறது என்றால், இந்த சம்மந்தம் நடக்காது என்று அவன் தாய் அலமேலு சொன்ன செய்தி அவரை மிகவும் பாதித்திருக்கிறது என்று தானே அர்த்தம்? அன்று அவர் மிகவும் விரக்தியோடு பேசியதும், குரல் நலிந்திருந்ததும் நினைவிற்கு வந்தது.
தந்தை இறந்ததற்கான காரணம் தெரிந்த அதிர்ச்சியில் சின்னபொண்ணு வசீகரன் மடியிலிருந்து படக்கென எழுந்து நின்றாள். அதே வேகத்தில் அவனும் எழுந்து அவளை தன்னோடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டான். 
“சின்னு என் அம்மா பண்ணது மன்னிக்க முடியாத துரோகம் தான். அதுக்கு அவங்களுக்கு நீ என்ன தண்டனை வேணும்னாலும் கொடு. நான் ஏன்னு கேக்க மாட்டேன். ஆனா அவங்க மகன்ங்கிற ஒரே காரணத்துக்காக என்னை வெறுத்துடாத சின்னு. ப்ளீஸ்”
“இவ்வளவு நேரம் நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு காரணம் என் மேல வச்ச காதல்னு நினைச்சேன். ஆனா உங்கம்மா பண்ண துரோகத்துக்கு நீங்க செய்யற பரிகாரம்னு இப்போ தான் புரியுது” என்றாள் இறுகிய குரலில்
“உனக்கு என்னோட காதல் பரிகாரமாவா தெரியுது சின்னு? நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு காரணம் உன் மேல வச்ச அளவில்லா காதல் மட்டும் தான். அதுல மட்டும் சந்தேகப்படாதே சின்னு” என்றவன் அவளை மேலும் தனக்குள் நெருக்கி கொண்டான். 
“என் அம்மா மாமாகிட்ட கொடுத்த வாக்கை ஏன் மீறிட்டாங்கனு முதல்ல குழம்பிட்டு இருந்தேன். சென்டரல் மினிஸ்டர் பொண்ணு நவ்யாவ சரவணன் கல்யாணத்துல பாத்ததும் அவங்க மனசு மாறியிருப்பாங்கனு கெஸ் பண்ணேன். எதாவது ஒரு கட்டத்துல என் அம்மாவே தான் செஞ்சத என்கிட்ட சொல்லுவாங்கனு நான் கடைசி வரைக்கும் எதிர்பார்த்தேன். ஆனா அவங்க என்கிட்ட எதுவும் சொல்லல. 
இடையில நெஞ்சுவலினு வேற நாடகமாடி அந்த நவ்யாவ என் தலையில கட்ட பாத்தாங்க. அவங்க நாடகத்தை வச்சே அவங்களுக்கு பாடம் புகட்ட அவங்க போக்குலேயே போனேன். பெத்த அம்மாவையே திட்டம் போட்டு சிக்க வச்சு உங்கப்பா சந்திச்ச அதே துரோகத்தை அவங்களையும் சந்திக்க வச்சேன். அப்போ தான் அவரோட வலி அவங்களுக்கும் புரியும்னு தான் இதெல்லாம் செஞ்சேன். 
ஆனா நேத்து நைட் நவ்யா குடும்பம் வராததால அப்பா டென்சனாகி என் அம்மாவ அடிச்சிட்டாரு. அப்போ தான் அவங்க உன் அப்பாகிட்ட முப்பது லட்சம் பணம் கைமாத்தா வாங்கியிருக்காங்க, அவர் பணத்தை கொடுக்கறதுக்காக உன்னை எனக்கு பொண்ணு கேட்டிருக்காங்கனு தெரிஞ்சுக்கிட்டேன்.
அது தெரிஞ்சதும் என் அம்மாவ மொத்தமாவே வெறுத்துட்டேன் சின்னு. உன் அப்பாகிட்ட நேர்ல நிறைய பேசியிருக்கேன். அவர் என் அம்மா பணம் வாங்கின விஷயத்தை ஒரு முறை கூட சொல்லல.  போன்ல பேசும் போது கூட சம்மந்தம் தடைபட்டு போச்சுனு சொன்னாரே தவிர, உன் அம்மா பணத்தை வாங்கிட்டு இப்போ மாத்தி பேசறானு ஒரு வார்த்தை சொல்லல.
அவரோட பெருந்தன்மைக்கு முன்னாடி என் அம்மா தரங்கெட்டு நிக்கறாங்க. எப்படி அவங்களாவே வந்து உன்னை கூப்பிட்டு என்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டாங்களோ, அதே மாதிரி அவங்களாவே வந்து தான் செஞ்ச தப்பை ஒத்துக்கிட்டு உன்கிட்ட மன்னிப்பு கேக்கற வரைக்கும் நான் அவங்கள விடப்போறதில்ல சின்னு”
சின்னபொண்ணு அமைதியாகவே நின்றிருக்கவும், “நான் சொல்றதுல உனக்கு நம்பிக்கையில்லையா சின்னு?” அவன் குரலில் வருத்தம் தெரிந்தது.
அவன் அணைப்பில் இருந்தவள் அண்ணாந்து அவனை பார்த்தாள். கண்களை கண்ணீர் நிறைத்திருந்தது.
“பொறந்த வீட்ல நான் வேண்டாத பொண்ணு, உங்க வீட்ல நான் வேண்டாத மருமக. உங்களுக்கு மட்டும் நான் வேணுமா மாமு?” அவள் குரல் குழைந்து நலிந்து ஒலித்தது
“வேணுமாவா? வேண்டாவ தவிர எனக்கு வேறெதுவும் வேணாம்டி. நீ மட்டும் தான்டி வேணும்” என்று ஒரு வித தவிப்போடு அவள் முகமெங்கும் தீவிரமாக முத்தமிட்டான். 
நெற்றி கன்னம், நாசி என அவசரகதியில் இதழ் பதித்தவன், அவளின் இதழருகே சற்று நிதானிக்க, சின்னபொண்ணு கால் பெருவிரலால் அவன் உயரத்திற்கு எம்பி நின்றாள். அதன் பிறகு அவன் யோசிக்காமல் தன் சின்னுவின் இதழ்களை தனதாக்கியிருந்தான்.
(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!