Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

03. சிவயாழினி - மௌனமாய் ஒரு மோகனம்

மெளனம் 23

“சின்னு” வசீகரனின் சத்தமான அதட்டலில் கட்டிலில் கண்ணுறங்கி கொண்டிருந்த சின்னபொண்ணு திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள்.  வசீகரன் அவளெதிரே கைகளை கட்டிக் கொண்டு அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
“புக் எடுத்துட்டு வாடினு சொன்னா, ஸ்டூல் மேல நின்னுட்டு சர்க்கஸ் காட்டிட்டு இருக்கே, விழுந்து வைக்க போறேனு தூக்கிட்டு வந்து கட்டில்ல உட்கார வச்சுட்டு, புக்கை எடுத்துட்டு வர்றதுக்குள்ள உனக்கென்னடி அப்படி ஒரு தூக்கம்?” என்று புருவம் உயர்த்தினான்.


Advertisement

“மாமு தூங்கிட்டா இருந்தேன்? நான் கீழே விழப்போனேனே நீங்க என்னை தாங்கி பிடிச்சு. கட்டிலுக்கு தூக்கிட்டு வந்தீங்களே, நான் கூட பாடம் எடுக்கலையானு கேட்டேனே, நீங்க இப்போ பாடம் தான் எடுக்க போறேன்னு சொன்னீங்களே, அப்புறம்” என்று நெற்றியை தேய்த்தாள்.

Advertisement

“ஆமா. புக்கை எடுத்துட்டு வரச்சொன்னா ஸ்டூல்ல சர்க்கஸ்ல ஒருகையையும் காலையும் நீட்டி உடம்பை வில்லா வளைச்சிட்டு நிக்கிற மாதிரி நின்னுட்டு இருக்கே. சரி எவ்வளவு நேரம் தான் நிக்கறான்னு பாக்கலாம்னு நானும் அப்படியே இருந்தா, சின்னு மேடத்துக்கு தூக்கம் கண்ணை சொக்குது. கீழே விழுந்து வைக்க போறேனேனு தூக்கிட்டு வந்து படுக்க வச்சேன்.

Advertisement

பாடம் எடுக்கறேன்னு சொன்னியே மாமுனு கேக்கவும், சரி முழிச்சுக்கிட்டா போலருக்குனு, இப்போ பாடம் தான் எடுக்க போறேன்னு சொல்லி நானே போய் புக்கை எடுத்துட்டு வர்றதுக்குள்ள தூங்கிட்டு இருக்கே. என்ன கனவா?”

Advertisement

“கனவு மாதிரி தெரியலயே, நீங்க சொல்றது தான் நடந்துச்சு, ஆனா எனக்கு வேற மாதிரி இருந்துச்சே மாமு” என்றவள் குழப்பத்துடன் தன்னை குனிந்து பார்த்தாள். அவள் ஆடை நலுங்காமல் அப்படியே இருந்தது. 
வசீகரன் கைகளை கட்டியபடி அவளையே அழுத்தமாக பார்த்துக் கொண்டிருக்கவும் தொண்டையை செருமி “மாமு ஒரே ரூம்ல இருந்தா உங்களால கன்ட்ரோல இருக்க முடியாதுனு சொன்னீங்கல்ல, அதுல நான் ஓவர் இமேஜினேஜன் பண்ணிட்டேன் போல. அரைதூக்கத்துல நீங்க பேசினதும் நடந்துக்கிட்டதும் எனக்கு வேற மாதிரி தோணுச்சு. மாமு, நீங்க இவ்ளோ நேரம் என்கூட ஒண்ணா இருந்ததெல்லாம் கனவா?” என்று அவனிடமே சந்தேகம் கேட்டாள்.
“சின்னபொண்ணு படிக்கிற பொண்ணுனு பார்த்தா, புத்தி போவுது பாரு” என்று அவள் காதை செல்லமாக திருகினான்.
“வலிக்குது மாமு” என்று அவள் பொய்யாக சொன்னதும் அவளை விட்டான். 
“போய் முகத்தை கழுவிட்டு வந்து உட்காரு” என்ற அவன் அதட்டலில், அவள் குழப்பத்துடன் குளியலறைக்கு சென்றாள்
தூக்க கலக்கத்தில் இருந்தவளை மோகத்துடன் கட்டில் வரை கொண்டு சென்றவன் பாடம் எடுக்கறேன்னு சொன்னீங்களே மாமு என்று அவள் நினைவூட்டியதும் சுதாரித்துக் கொண்டான். ‘கொஞ்சம் சுதாரிக்கலனா என் சின்னுவ படிச்சு முடியறதுக்குள்ள கர்பமாக்கி இருப்பேனே’ என்று தலையில் கைவைத்துக் கொண்டான்.
பிறகு அவள் கர்பிணியாக வயிற்றை தள்ளிக் கொண்டு கடைசி வருட பரிட்சை எழுதுவது போலவும், பிறந்த குழந்தையை இவன் கையில் வைத்திருக்க, அவள் சென்று ஐஏஎஸ் எக்ஸாம் எழுதுவது போலவும் அது தொலைக்காட்சி செய்திகளில் ஒளிப்பரப்புவது போலவும் காட்சிகள் மனக்கண்ணில் ஓட தலையை பிடித்துக் கொண்டு சட்டென எழுந்து விட்டான். அவன் விலகியது அறியாமல் சின்னு தூக்க கலக்கத்தில் மாமு என்று முனகி கொண்டிருக்க, அவளுடைய ஆடையை சரிசெய்து விட்டு குளியலறை சென்று முகம் கழுவி வந்தான். பின்பு எதுவுமே நடக்காதது போல மேஜையின் மேல் வைத்திருந்த புத்தகத்தை கையில் எடுத்து வந்து அவளை அதட்டி எழுப்பியிருந்தான்.
குளியலறை வரை சென்றவள் திரும்பி அவனை விழியெடுக்காமல் ஆச்சர்யத்துடன் பார்க்கவும், “என்னடி பாக்கறே?”
“மாமு, நீங்க எனக்கு கிஸ் பண்ணீங்க தானே? கனவா இருந்தா இங்கே எரியாதே” என்று தன் இதழ்களை காட்டினாள்
தொண்டையை செருமிக் கொண்டு “அது காலைல நடந்தது. இப்போ நான் எதுவுமே பண்ணல”
சின்னு அவனை சந்தேகமாக பார்க்க, “கண்ட கனவெல்லாம் கண்டுட்டு என்னை சந்தேகமா பாக்கறீயா? ஒரு வருஷம் முடியறவரைக்கும் இது பெட்ரூம் இல்ல. உன்னோட கிளாஸ் ரூம் புரியுதா?” என்றான் அதட்டலாக
“ம்” என்று தலையை ஆட்டினாள்.
“போய் மொகம் கழுவிட்டு வா”
அவளும் மறுப்பேதும் சொல்லாமல் சென்று முகத்தை கழுவிக்கொண்டு வந்தாள். புத்தகத்தை அவளிடம் கொடுத்து பாடம் எடுக்க ஆரம்பித்தான். முந்தைய நாளும் உறக்கமில்லாததால் இருவருக்கும் கண்கள் எரிந்தது. அதை பொருட்படுத்தாமல் வசி மனைவியை படிக்க சொல்லி குறிப்புகளை எழுதி கொடுத்து கொண்டே இருந்தான்.
“மாமு, நீங்க தூங்குங்க நானே படிக்கறேன்” என்றாள்
“நீ மட்டும் தனியா படிச்சா, உனக்கு தூக்கம் வந்துடும் சின்னு. அதுமட்டுமில்ல என்கூட டிஸ்கஸ் பண்ணி படிச்சா உனக்கு படிச்சது மறக்காது” என்றவன் தன் வேலையை தொடர, அவளும் கணவன் சொல்லி தரும் பாடத்தை உன்னிப்பாக கவனித்தாள். நள்ளிரவை தாண்டியதும் தன்னை மீறி சின்னு வசியின் மடியில் சாய்ந்து தூங்க, அவனும் அப்படியே கட்டிலில் சாய்ந்து உறங்கினான்.
மறுநாள் காலை அவன் குளித்து முடித்தும் உறங்கி கொண்டிருந்தவளை எழுப்பி, “சின்னு நான் ஜிம்முக்கு போயிட்டு வரேன். நீ அதுக்குள்ள தலைக்கு குளிச்சிட்டு கீழே வா”
“ஏன் மாமு?” என்றாள் தூக்க கலக்கத்தில்
“சொன்னத செய்டி” என்று அவள் நெற்றியில் முத்தமிட்டு விட்டு கீழே இறங்கி சென்றான்.
சின்னபொண்ணுவும் எழுந்து தலைக்கு குளித்து, அலமாரியில் வசி வாங்கி கொடுத்திருந்த சுடிதாரில் ஒன்றை அணிந்து கொண்டு கீழே இறங்கினாள்.
பூஜையறைக்கு சென்று விளக்கேற்றி விட்டு ஹாலில் டிவி பார்த்துக் கொண்டிருந்த நடராஜனுக்கு காபியை கலந்து எடுத்து வந்தபோது அலமேலு அவளெதிரே வந்தார். அவரை கண்டதும் அவள் தந்தையின் நினைவு வந்தது. 
‘நீங்க மட்டும் சம்மந்தம் பேசாம என் அப்பாகிட்ட பணத்தை மட்டும் வாங்கிட்டு போயிருந்தா, இன்னைக்கு என் அப்பா உயிரோடு இருந்திருப்பாரே. உங்களுக்கும் இந்த வேண்டாத மருமகள சகிச்சுக்க வேண்டிய நிர்பந்தம் வந்திருக்காதே, ஏன் இப்படி செஞ்சீங்க?’ என்று அவரை கேட்க வேண்டும் போலிருந்தது. எதுவும் பேசாமல் அவரை கடந்து சென்று விட்டாள். கையிலிருந்த காபியை சம்பிரதாயத்திற்காக கூட குடிக்கிறீங்களா என்று அவள் கேட்காதது அலமேலுவுக்கு உள்ளுக்குள் ஆத்திரத்தை கிளப்பியது.
அவரை கண்டாலே அவள் கண்களில் தென்படும் பயபக்தி இன்று இல்லை. அதற்கு பதிலாக குற்றம் சாட்டும் பார்வை அவள் பார்க்கவும் ‘எல்லாம் இந்த வசி கொடுக்கற இடம்’ என்று மனதிற்குள் புகைந்தார்.
காலையிலேயே சரவணன் அவர்கள் அறையில் இருந்த தங்கள் பொருட்களை மாடிக்கு மாற்றி கொண்டிருந்தான். லதா குழந்தையோடு மாடியேறும் போது குழந்தை சின்னபொண்ணுவை கண்டதும் அவளிடம் தாவியது.
“அக்கா, குழந்தைய கொடுங்க” என்று கைநீட்டினாள்
“அக்காவா?” லதாவின் கேள்வியிலும் கண்களிலும் ஆத்திரம் தெரிய, “சாரி மேடம். குழந்தைய கொடுங்க. ஆதித்துக்கு இன்னும் என்னை நல்லா தெரியுது. நான் அவனுக்கு சாப்பாடு ஊட்றேன்” என்றதும் கடைசியாக சொன்னது லதாவிற்கு திருப்தியை தர, “சரி இட்லி ஊட்டிட்டு, குழந்தைய மேலே கூட்டிட்டு வா”
“சரிங்கக்கா, சாரி மேடம்” என்று சின்னு திருத்தி கொள்ளவும் லதா குழந்தையை அவளிடம் கொடுத்தாள்.
சின்னு குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு இட்லியை ஊட்டும் போது வசி உள்ளே வந்தான். குழந்தையை கொஞ்சுவது போல அருகில் வந்து குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டவன் யாருமறியாத வண்ணம் சின்னுவின் கன்னத்திலும் இதழ் பதித்து விலகினான்.
அவள் அதிர்ச்சியுடன் அவனை பார்க்க, “ஆதித்துக்கு தான் முத்தம் கொடுக்க வந்தேன். அவன் திரும்பிட்டான்” என்றான் சீரியசான குரலில்
அப்படித்தானோ என்பது போல அவள் குழம்பி கொண்டிருக்கும் போதே அவன் விசிலடித்தபடி மாடியேறினான். 
சின்னபொண்ணு குழந்தைக்கு ஊட்டி முடித்து மாடிக்கு சென்று லதாவிடம் குழந்தையை கொடுத்தாள்.
“சாப்பாடு ரெடியாயிடுச்சா?” லதா கேட்க
“ஆயிடுச்சு மேடம். நீங்க போய் சாப்பிடுங்க. நான் குழந்தைய வச்சுக்கறேன்” என்றாள்
தயாராகி கிளம்பி கொண்டிருந்த சரவணன், “வேண்டா இன்னும் எதுக்கு மேடம்னு சொல்லிட்டு இருக்கே. அக்கானு கூப்பிடு”
“சரிங்க மாமா” என்றாள் உடனே ஒப்புதலாக
சரவணன் திரும்பி லதாவை முறைத்து, “குழந்தைய கையிலேயே வச்சிட்டு இருந்தா எப்படி நடப்பான்? ஒரு வருஷம் முடிஞ்சு போச்சில்ல? ஹால்ல கொண்டு வந்து விடு, அவன் விளையாடட்டும். நாம அவனை கவனிச்சுக்கிட்டே சாப்பிடலாம்” என்றவன் 
“வேண்டா நீயும் வா. ஒண்ணா சாப்பிடுவோம்” என்று தம்பி மனைவியையும் அழைத்தான்.
“நான் அவர் கூட வரேன் மாமா” என்றதும் சரவணனனும் லதாவும் கீழே சென்றார்கள்.
“சின்னு, என்கூடவே கிளம்பு. இன்னைக்கே உன்னை கோச்சிங் கிளாஸ்ல சேர்த்து விடறேன்” என்றான் வசீகரன்
அவளும் அவனுடனே தயாராகி கீழே இறங்கி வந்தாள். ஹாலில் அனைவரும் அருகருகே அமர்ந்தபடி செய்தியை பார்த்துக் கொண்டிருந்தனர்.
வசீகரனை கண்டதும் சரவணன் மடியில் அமர்ந்திருந்த குழந்தை ஆதித் குதிக்கவும், வசீகரன் அவனை தூக்க முயன்றான். அலமேலு அவன் கண்கள் சிவந்திருப்பதை கண்டு, “வசி கண்ணு ஏன்டா சிவந்து போயிருக்கு?” என்று கேட்க
“ராத்திரி சரியா தூங்கியிருக்க மாட்டான்” என்றான் சரவணன் நமுட்டு சிரிப்புடன்.
வசீகரன் பின்னந்தலையை வருடியபடி “சாப்பிடலாமா?” என்று கேட்க, அனைவரும் சாப்பிட எழுந்தனர். 
வசீகரனுடன் சின்னபொண்ணுவும் சாப்பிட அமரவும் வழக்கம் போல அலமேலுவும் லதாவும் சாப்பிட செல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தனர்.
“லதா, சாப்பிடலயா?”
“எனக்கு இப்போ வேணாம், அப்புறம் சாப்பிட்டுக்கறேன்”
“சாப்பிடறதுக்கு தானே மாடியிலிருந்து கீழே வந்தே?” சரவணன் புருவம் நெறிக்கவும்
“சரவணா நான் அண்ணியையும் அம்மாவையும் கூட்டிட்டு வரேன். நீ சாப்பிடு” என்ற வசி அவர்களை நோக்கி சென்றான்.
வசீகரன் தன்னிடம் என்ன கெஞ்சினாலும் சாப்பிட செல்லக்கூடாது என்று லதாவும் அலமேலுவும் உறுதியுடன் இருந்தனர். 
“நீங்க ரெண்டு பேரும் ஏன் சாப்பிட வரமாட்டேங்கறீங்கனு எனக்கு தெரியும். என் பொண்டாட்டி கூட சரிசமமா உட்கார்ந்து சாப்பிட உங்களுக்கு மனசு இல்ல கரெக்ட்டா?” அவன் நேரடியாக அவர்களின் மனதை படித்தவன் போல பேசவும் இருவருக்கும் உள்ளுக்குள் அதிர்ச்சி. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருந்தனர்
“பரவால்ல, அவ சாப்பிட்ட மிச்சத்தை சாப்பிடணும்ங்கிறது தான் உங்களோட ஆசைனா அதை நான் தினம் நிறைவேத்தறேன்” என்று சொல்லிவிட்டு மீண்டும் சாப்பாடு மேஜைக்கு சென்று விட்டான்.
“ஏன் அத்தை? இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கா?”
“ஆமா லதா. எல்லாரும் சாப்பிட்ட மிச்சத்தை நாம ஏன் சாப்பிடணும். வா நாமளும் போய் சாப்பிடலாம்” என்று அலமேலு எழுந்து கொள்ள லதாவும் அவருடன் எழுந்து சாப்பிட சென்றாள். 
சின்னபொண்ணு சமையலறைக்குள் சென்று சமைத்து வைத்தவைகளை எடுத்துக் கொண்டு சாப்பாட்டு மேஜையில் அடுக்கினாள்.
அனைவருக்கும் சின்னபொண்ணு சாப்பாடு பறிமாறுவதை கண்டு, லதா திருப்தியுடன் சரவணன் அருகில் சாப்பிட அமர்ந்தாள். லதாவிற்கு மறுபக்கம் வசீகரன் அமர்ந்தான். சரவணனுக்கு அருகே நடராஜன் ரஞ்சனி, அலமேலு அமர்ந்திருக்க “எனக்கு சாம்பார் இன்னும் ஊத்து, உப்பு பத்தல பாரு, எடுத்துட்டு வா” என்று சின்னுவை ஏவினாள். அவளும் எடுத்து வந்து கொடுத்தாள்.
“சட்னி இல்லையா?”
“இல்லையே”
“சீக்கீரம் அரைச்சுட்டு வந்துடு. நான் சட்னி இருந்தா தான் இட்லி சாப்பிடுவேன். இல்லனா தோசையாவது ஊத்தி எடுத்துட்டு வா”
சரவணன் மனைவியை முறைத்து கொண்டிருக்க, அதை கவனிக்காமல் அவள் வேலைகளை அடுக்கடுக்காக சொல்லி கொண்டே போக சின்னுவும் பழக்கத்தை கைவிடாமல் சமையலறைக்கும் சாப்பாட்டு மேஜைக்கும் ஓடிக் கொண்டிருந்தாள்
வசீகரன் தன்னை முறைத்துக் கொண்டிருப்பதை அவள் உணரவில்லை. “சின்னு நான் உனக்கு என்ன சொன்னேன்?” என்றான் அதட்டலாக
‘என்ன சொன்னான்?’ என்று அவள் யோசனையாக பார்க்க, மற்றவர்கள் அவனை கேள்வியாக பார்த்தனர்.
“என்கூடவே சாப்பிட்டு கிளம்பு, நாம வெளியே போகணும்னு சொன்னேன் இல்ல? வந்து உட்கார்ந்து சாப்பிடு. பறிமாற வேலைய காளியப்பா பாத்துப்பாரு”
“அவர் இல்லண்ணா, அப்பா அவரை வெளியே ஏதோ வேலையா அனுப்பியிருக்காரு” என்றாள் ரஞ்சனி
“அப்போ எல்லாம் மேஜையில இருக்குல்ல. அவங்கவங்களுக்கு தேவையானத எல்லாரும் எடுத்த போட்டு சாப்பிடுவாங்க. நீ வந்து உட்காரு, நேரமாகுது. அப்புறம் நீ சாப்பிட்டு முடிக்கறவரைக்கும் நான் வெயிட் பண்ண முடியாது” என்றான்
வசீகரன் முறைத்து கொண்டே இருந்ததால் சின்னபொண்ணு அவனருகே அமர்ந்தாள். லதா சின்னபொண்ணுவை பார்த்து, “ரெண்டு தோசை மட்டும் சுட்டு எடுத்துட்டு வந்துடுறீயா?” என்று கேட்க, சரி என்று தலையாட்டியபடி சின்னு எழ முயற்சித்தாள்.
ஆனால் வசீகரன் அவளின் ஒரு காலை தன் இரு கால்களால் சுற்றி வளைத்திருந்தான். அவள் தன் காலை விடுவிக்க முயற்சிக்க, அருகிலிருந்தவளின் தொடையை உள்ளைங்கையால் பற்றி அழுத்தினான்.
அவனின் இருபக்க தாக்குதலில் அதிர்ந்து நிமிர்ந்து கணவனை பார்த்தாள். ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி சாப்பிடுமாறு கண்களால் தட்டை காட்டினான்.
ஆனால் அவன் கால் விரல்கள் அவளின் முழங்காலை ஒரு பக்கம் வருடிக் கொண்டிருக்க, கையை அவளின் தொடையை அழுந்த பற்றியிருந்தது. எதுவுமே நடக்காதது போல மற்றொரு கையால் சாப்பிட்டு கொண்டிருந்தான்.
“தோசை கேட்டேன்” லதா கடுப்புடன் கேட்க
“தோசை கேட்டா தானா வராது அண்ணி. கிச்சனுக்கு போய் சுடணும்”
“பொண்டாட்டி வேலையே செய்ய கூடாதுனு நினைக்கிறான் போலருக்கு” என்று அலமேலு மெல்லிய குரலில் முனக, “இங்கே எல்லாரோட பொண்டாட்டியும் வேலை செய்யாதப்போ, என் பொண்டாட்டி மட்டும் எதுக்கு வேலை செய்யணும்?” என்றான் 
“வசி ஜாடைமாடையா என்னைய தானே சொல்றீங்க? நேராவே சொல்லுங்க” லதா கோபத்துடன் இடையிட்டாள்
“நான் ஏன் அண்ணி உங்கள சொல்றேன்? என் அம்மாவை தான் சொல்றேன். என் அப்பா இதுவரைக்கும் என் அம்மாவை வேலை செய்யவே விடல. நான் மட்டும் என் பொண்டாட்டி வேலை செய்ய விடணுமா?”
“டேய் வசி, காலைலயே என்னை ஏன்டா வம்பிழுக்கற? பேசாம சாப்பிடுடா. அம்மா வேண்டா நீ எந்த வேலையும் செய்யாதம்மா. உன் புருஷன் பக்கத்துலயே உட்கார்ந்து சாப்பிடு” என்று நடராஜன் எழுந்து கொண்டார்.
“மாமா, நீங்க சாப்பிடுங்க” சின்னபொண்ணு பதற
“சாப்பிட்டேன்மா” என்றுவிட்டு நடராஜன் ரஞ்சனியை அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டார்.
அடுத்த கணம் லதா வெடுக்கென்று கோபத்துடன் எழுந்து கைகழுவ செல்லவும், “லதா, தோசை வேணும்னா சுட வேண்டியது தானே? எதுக்கு இப்போ எழுந்து போறே நீ?” என்றான் சரவணன் கோபத்துடன்.
“அது ஒண்ணுமில்ல சரவணா. அண்ணி சாப்பிடறவரைக்கும் சின்னு சாப்பாடு பறிமாறினா. இப்போ அவ சாப்பிட உட்கார்ந்ததும் அண்ணி பரிமாற நினைக்கறாங்க போலருக்கு. அதான் கைகழுவ போறாங்க. என்ன அண்ணி நான் சொல்றது கரெக்டா?”
லதாவால் பதில் பேசமுடியில்லை. “ஆதித் தரையில இருக்கறத வாயில வைக்கறாங்க அதான் எழுந்துட்டேன்” என்று குழந்தையை காரணம் காட்டி, மகனிடம் சென்றாள்.
சரவணன் சாப்பிட்டு முடித்து கல்லூரிக்கு கிளம்புவதற்காக மாடிக்கு செல்லவும் லதா குழந்தையை தூக்கிக் கொண்டு அவன் பின்னாலேயே மாடியேறினாள்.
“சரவணன், நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியில்ல”
“நான் என்ன பண்ணேன்?” என்றபடி தன் மடிக்கணிணியை எடுத்து பையில் வைத்தான்.
“உங்க தம்பி அவர் பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்ணி என்னை ஜாடையா பேசறத பாத்துட்டு  நீங்க அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?”
“நேத்து அவங்களுக்கு சாப்பாடு பறிமாறுனு நான் சொன்னதுக்கு நீ என்ன சொன்னே? நான் ஒண்ணும் வேலைக்காரி இல்லனு சொன்னே. அதே தான் வேண்டாவுக்கும். அவ ஏன் உனக்கு சாப்பாடு பறிமாறணும்? தோசை சுட்டு தரணும்? அவ ஒண்ணும் உனக்கு வேலைக்காரி இல்லல்ல. வசி கேட்டதுல எந்த தப்பும் இல்லனு தான் நான் சும்மா இருந்தேன்”
“அவ எனக்கு வேலைக்காரியா இருந்தவ தானே”
“முதல்ல இந்த மாதிரி பேசறத நிறுத்து லதா” விரல் நீட்டி எச்சரித்தான். 
“வேண்டா வசியோட பொண்டாட்டி. அவளும் உன்னை மாதிரி இந்த வீட்டுக்கு வாழ வந்தவ. அவளுக்கான மரியாதைய நீ கொடுத்து தான் ஆகணும். இல்லனா வசி அப்பப்போ ஊசியேத்தறமாதிரி குத்தி குத்தி பேசுவான். வாங்கிக்க. உங்க தம்பி என்னை இப்படி சொன்னாருனு என்கிட்ட வந்து புலம்பாத” என்று சொல்லிவிட்டு சரவணன் கிளம்பி விட்டான்.
கீழே வசீகரன் மனைவியை திட்டிக் கொண்டிருந்தான். “நேத்து நைட் உன் அக்காங்க கிட்ட பேசினத பாத்து என் பொண்டாட்டி பரவால்லயே இவ்வளவு தைரியமா பேசறாளேனு நினைச்சேன். ஆனா இப்போ அண்ணி சொல்ற வேலையெல்லாம் செஞ்சிட்டு இருக்கே” 
“சாப்பிடறதுக்கு தானே மாமு கேக்கறாங்க. இல்லனு சொல்ல முடியுமா? நீங்க இப்படியே பேசிட்டு இருந்தா அவங்களுக்கு என்மேல இன்னும் வெறுப்பு தான் வரப்போவுது” 
“இல்லனா மட்டும் உன்னை தூக்கி மடியில வச்சு கொஞ்ச போறாங்க பாரு” 
“அவங்க ஏன் கொஞ்சணும்? நீங்க கொஞ்சினாலே போதும்” அவள் மெல்லிய குரலில் முனகவும்
“என்ன சொன்னே?”
“ஒண்ணுமில்ல” என்று எழுந்து கொண்டாள்.
அவளின் கரம் பற்றி இழுத்து அவன் மடியில் அவளை அமர வைத்தான். அவள் பதட்டத்துடன் சுற்றிலும் பார்க்க ஹாலில் யாருமில்லை. ஆனாலும் யாராவது வந்துவிட்டால் என்று பதட்டத்துடன் எழ முயற்சித்தவளின் இடையை அழுந்த பற்றியவன், “கொஞ்ச சொல்லிட்டு எழுந்து போனா எப்படி சின்னு?”
“அதுக்குனு ஹால்லயா?” அவள் திமிற
“ஹால் தான்டி எனக்கு சேப்” என்றபடி தன் தட்டிலிருந்த உணவை அவளுக்கு ஊட்டிவிட்டான். அலமேலுவின் அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்கவும் பதறி எழுந்துக் கொண்டாள்.
“அம்மா நானும் சின்னுவும் வெளியே கிளம்பறோம்” என்று மனைவியை அழைத்துக் கொண்டு வெளியேறியனான். 
அலமேலு பதில் சொல்லாமல் அறைக்கு சென்று விடவும் வசீகரன் சின்னபொண்ணுவை அழைத்துக் கொண்டு கல்லூரிக்கு கிளம்பினான்.
வசீகரன் மேலிருந்த கோபம் அடங்காமல் அனைவரும் கிளம்பியதும் லதா அலமேலுவிடம் வந்தாள்.
“அத்தே, வசி என்னென்ன வேலையெல்லாம் பாத்திருக்காரு தெரியுமா?” என்று ஆரம்பித்து முந்தைய நாள் இரவு அவன் ஜமுனா காவேரியிடம் பேசிய விஷயங்கள் அத்தனையையும் கூறினாள்.
“அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்ததே வசியோட பிளான் தான் அத்தை. நவ்யாவ அவர் பிரெண்ட் கூட சேர்த்து வச்சு கல்யாணத்துக்கு வர விடாம செஞ்சிருக்காரு. அதுமட்டுமில்லாம உங்க வாயாலேயே அந்த வேலைக்காரிகிட்ட வசிய கட்டிக்க சொல்லி கேக்க வச்சிருக்காரு” என்று அவள் பேச அலமேலுவின் முகத்தில் ஆத்திரம் பொங்கியது
(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!