Skip to content
Post Views: 1,432
அத்தியாயம் 18
தாய், தந்தையின் மாலையிட்ட புகைப்படத்தின் முன்னால் அமர்ந்திருந்தாள் அமிர்தா. டாக்டர் கீர்த்தனாவை சந்தித்து ஒரு மாதம் கடந்திருந்தது. பதினைந்து இலட்சம் பணம் வேண்டும் என்று கேட்ட பொழுது அது மிகப்பெரிய தொகையாகத் தான் இருந்தது. ஆனால் தாங்கள் வசிக்கும் வீடு கண் முன் வர, நெஞ்சில் ஒரு நம்பிக்கை பிறந்தது அமிர்தாவுக்கு. அக்காவை விட வீடா முக்கியம் என நினைத்தவள் அடுத்த நாளே வீடு விற்பதைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தாள்.
வீடு வாங்கி பதினைந்து வருடங்களுக்கும் மேலாகி விட்டதோடு, வீட்டின் வாஸ்து சரியில்லை அதனால் வீடு வாங்கிய சில வாரங்களில் உரிமையாளர் அந்த வீட்டோடு முடங்கிப்போனார் என்கிற வதந்தியும் சேர்ந்து பரப்பப்பட, வாங்க நினைப்பவர்கள் எல்லாம் வெகுவாகத் தயங்கினார்கள். அமிர்தாவுக்கான உடனடி பணத்தேவையை பயன்படுத்தி அடிமட்ட விலைக்கு தான் வீட்டை பேரம் பேசினான் புரோக்கர் மனோகர்.
என்ன தான் பெரிதாக வெளியுலக அனுபவம் இல்லாமல் போனாலும், அவன் சொல்லும் தொகை மிகவும் குறைவு என்று புரிந்தது அமிர்தாவுக்கு. அதனால் அவனை விடுத்து வேறு சிலரிடம் முறையிட்டாள். அவர்கள் கொஞ்சம் தொகையை ஏற்றி சொல்லி இருந்தார்களே தவிர்த்து அவள் எதிர்பார்க்கும் பணத்தை சொல்லவில்லை.
Advertisement
பதினைந்து இலட்சம் என்பது அறுவைச்சிகிச்கைக்கு மட்டும் தான். அதன் பிறகு மேல்சிகிச்சைகள், அறைவாடகை, மருந்து மாத்திரைகள் என பலதும் இருக்கிறது என்பதால் வீடு விற்கும் தொகையோடு மேற்படி பணத்திற்கு என்ன செய்வது என்கிற யோசனையோடு ஒரு மாதத்தை கடந்திருந்தாள்.
“நாட்களை கடத்த கடத்த நீலாவோட உயிருக்கு ஆபத்து நெருங்கிக்கிட்டே இருக்கு அமிர்தா. அவங்களுக்கு ஏற்பட்டு இருக்கிற காயத்தோட வீரியம் அதிகம். ஆனா அவங்க பண்ண புண்ணியமோ என்னவோ மூளையில் வலியை உணர்த்தும் பகுதி பாதிக்கப்பட்டு இருப்பதால் அவங்களால் முழு வலியையும் உணர முடியல. இல்லன்னா இவ்வளவு நேரத்திற்குள் என்னென்ன நடந்திருக்குமோ.” என்ற கீர்த்தனாவின் வார்த்தைகள் நினைவு வர யோசிப்பதை தீவிரப்படுத்தினாள் அமிர்தா.
வேலை செய்யும் இடத்தில் பெர்சனல் லோன் மூலம் நான்கு இலட்சம் கேட்டிருந்தாள். அது கிடைக்கும் என்றாலும் எப்படியும் இருபது நாட்கள் ஆகிவிடும் என்கிற சூழ்நிலை. வட்டிக்கு பணம் என்று போய் நின்று நிம்மதியைப் பறிகொடுக்க அவளுக்கு விருப்பம் இல்லை.
Advertisement
சில நேரங்கள் மோகனனிடம் கேட்கலாமா என்று தோன்றும். ஆனால் அவர்களோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று முடிவான பிறகு எதற்காக அங்கே போக வேண்டும் என்று தீர்மானமாக அந்த முடிவைக் கைவிட்டாள்.
Advertisement
நண்பர்களிடம் உதவி கேட்கலாம். அத்தனை பேரும் உதவி செய்தாலும் அதிகபட்சம் ஒரு இலட்சம் வரை வரும். ஆனால் அவர்கள் மூலம் செய்தி கேசிக்கோ, மோகனனுக்கோ கட்டாயம் சென்றுவிடும். என அந்த முடிவையும் ஒதுக்கி வைத்தாள். இப்படி ஒவ்வொன்றையும் நிராகரித்து முடிக்கையில் அவளிடம் கடைசியாக வந்து நின்றது வீடு புரோக்கர் மனோகர், பாலியல் மனோகராக மாறி சொன்ன யோசனை தான்.
“பாப்பா உன்னைப் பார்க்க பாவமா இருக்கு. நீ கோச்சுக்கலன்னா உன்னோட பணத்தேவைக்கு நான் ஒரு யோசனை சொல்லவா?” பத்து நாட்களுக்கு முன்னர் வந்து மெதுவாக தூபம் போட்டிருந்தான்.
அவனிடம் இருக்கும் அதிகப்படியான குழைவும், சிரிப்புமே சொன்னது அவன் சொல்லப்போகும் யோசனை கட்டாயம் நன்றாக இருக்காது என்று. இருந்தாலும் அவன் சொல்லும் முன்பு தானாக எதையும் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். ஒருவேளை சட்டத்திற்கு புறம்பான உடல் உறுப்பு விற்பனையைப் பற்றி எதுவும் சொல்ல வருகிறானோ என யோசித்து சொல்லச் சொன்னாள் அமிர்தா. அவள் இருக்கும் நிலைக்கு எதுவாக இருந்தாலும் சம்மதம் என்று நினைத்தாள்.
Advertisement
ஆனால், ஜனத்தோடு ஜனமாக வெகு சாதாரணமாக சுற்றிக்கொண்டிருக்கும் மனிதர்களின் உண்மை முகம் எத்தனை கொடூரமானது என்பதை அன்றைய நாளில் மனோகர் மூலம் தான் கண்டுகொண்டாள் பெண்.
“வீடு புரோக்கர் எல்லாம் வெளியே சொல்லிக்கிறது தான் மா. உண்மையில் நான் பார்க்கும் தொழிலே வேற. எல்லாமே சகஜம் ஆகிட்டு வரும் காலகட்டத்திலும் நம்ம தமிழ்நாடு மட்டும் தான் பண்பு, கலாச்சாரம் னு பழங்கதையெல்லாம் பேகிக்கிட்டு இருக்காங்க. சம்பந்தப்பட்ட இரண்டு பேருக்கு பிடிச்சிருந்தாலும் நாலு பேர் நாலு விதமா பேசுவாங்கன்னு பயத்தில் அமைதியா போயிடுறாங்க.
ஆனா யாருக்கும் தெரியாம எதையும் சாதிக்க பல வழிகள் இருக்கு. அதில் ஒன்னு தான் என்னை மாதிரி ஆட்கள். எனக்கு சில பணக்காரங்களோட கான்டேக்ட் இருக்கு. அவங்ககிட்ட போனா எவ்வளவு பணம் வேண்ணா கிடைக்கும். உன்னை மாதிரி கஷ்டப்படுற பல பொண்ணுங்களுக்கு இப்படி பணம் வாங்கிக் கொடுத்திருக்கேன். அவ்வளவு ஏன் சில இளைஞர்களுக்கு கூட.” என்று நிறுத்தியவனை கண்டபடி பேசி திட்டி அனுப்பி இருந்தாள்.
இப்போது அந்த நினைவு வந்தது. ஆனால், தெரிந்தே தவறு செய்ய வேண்டுமா எனக் கேள்வி கேட்ட மனசாட்சி, முடிந்த வரை வேறு வகையில் உதவி நாடு என்று தான் அவளை உந்தித் தள்ளியது. ஆனால், நீலாவின் உடல்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை. அவளுக்கு உணவூட்டச் சென்ற கேர்டேக்கர் காது மற்றும் மூக்கில் இருந்து இரத்தம் வடிந்த நிலையில் மயங்கிக் கிடந்த நீலாவைப் பார்த்து பதறி குரல் கொடுக்க அடுத்த ஒரு மணி நேரத்தில் துணிந்து நீலாவை அந்த மிகப்பெரிய தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருந்தாள் அமிர்தா.
நீலா அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில் துவங்கி அவளுக்கான மெடிக்கல் பில் எகிற ஆரம்பித்திருக்க கையில் ஒன்றுமே இல்லாமல் துணிந்து வந்துவிட்ட தன் மடத்தனத்தை எண்ணி நகத்தைக் கடித்த அமிர்தாவுக்கு, “உன் அக்கா வாழ்க்கையைப் பறிச்சுக்கிட்ட பாவத்துக்கு நான் பண்ற பிரயாச்சித்தமா நினைச்சு நான் கொடுத்த பணத்தை வாங்கிக்கலாமே.” என்று சொன்ன கீரவாணியின் நினைவு வந்தது.
சாருகேசி வேண்டாம், மோகனனும் வேண்டாம். கீரவாணி சொல்வது போல் அவள் செய்த பாவத்துக்கு பிராயச்சித்தம். அவளுக்கு மனநிம்மதி தன் அக்காவிற்கு உயிர் என வேகமாக கணக்கு போட்டு அவளுக்கு அழைத்தாள்.
அமிர்தாவின் பெயரைப் பார்த்ததும் எந்த வித பின்யோசனையும் இல்லாமல் அழைப்பை ஏற்றிருந்தாள் கீரவாணி. ஆனால் அமிர்தா பேசுவதற்கு முன்பு மோகனன் கத்துவது கேட்டது.
“கல்யாண விஷயத்தில் தான் என்னை ஏமாத்திட்டன்னு பார்த்தா, இதில் கூட ஏமாத்தி இருக்க இல்ல. ஆறு மாசமா என்னோட சேர்த்து உன்னைச் சுத்தி இருந்த எல்லோரையும் ஏமாத்தி இருக்க. என்ன நினைப்பில் இதையெல்லாம் பண்ண. இன்னும் எத்தனை நாள் இதை மறைக்க திட்டம் போட்டு இருந்த. உன்னையே ஏத்துக்க முடியாம திண்டாடிக்கிட்டு இருக்கேன். இப்ப குழந்தைன்னு சொல்ற.
ஏற்கனவே இரண்டு குழந்தைங்களை பெத்துக்கிட்டு அதுங்களை தூக்கி கொஞ்ச முடியலையேன்னு வேதனையில் ஏங்கிக்கிட்டு இருக்கேன். கூடக் கொஞ்சம் சேர்த்து வேதனைப்படுன்னு இந்தக் குழந்தையை என்கிட்ட இருந்து மறைச்சியாக்கும்.” என கண்டபடி கத்தினான்.
“நம்ம சண்டையை அப்புறம் பார்க்கலாம். அமிர்தா போன் பண்ணி இருக்கா. நான் என்னன்னு கேட்கிறேன்.” என கீரவாணி சொல்வது கேட்க, மனதின் உந்துதலில் அழைப்பைத் துண்டித்துவிட்டாள் அமிர்தா. கீரவாணி திரும்ப அழைத்த போதும் பதில் சொல்லவில்லை.
தன் அக்காவிற்கு இனி திரும்ப கிடைக்காத வாழ்க்கை என்று எப்போதோ முடிவான விஷயம் தான் என்றாலும், அவள் மீண்டெழுந்து வரும் நேரம் அவள் கணவன் அவளை விடுத்து வேறு ஒரு பெண்ணோடு திருமணம், குழந்தை என்று வாழ்வது தெரிந்தால் அவள் மனம் என்ன பாடு படும் என்று அழுதாள். எல்லாம் சில நிமிடங்கள் தான். அவர்கள் முன்னால் தன் அக்காவை நன்றாக வாழ வைத்தே தீர வேண்டும் என்கிற வைராக்கியம் பிறக்க, தீர்க்கமான முடிவுக்கு வந்தாள்.
எல்லாப் பக்கமும் அடைக்கப்பட்டிருக்க, மீதம் இருக்கும் வழியைத் தேர்ந்தெடுத்தாள். அலைபேசியை எடுத்து மனோகரின் எண்ணைப் பார்த்தாள். மனம் என்றோ மரித்துப் போயிற்று. உடலையும் கொன்றால் தான் சூழ்ந்திருக்கும் பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கும் என்றால் அதுவும் சம்மதமே என்று நினைத்தவள் துணிந்து அழைத்துவிட்டாள்.
விபரீதம் புரிந்தும், புரியாமலும் இந்த தவறான தொழிலுக்குள் தலையைக் கொடுக்கும் அழகான இளம்பெண்களிடம் மனோகர் பயன்படுத்துவது இரண்டே வழி. முதல் ஒன்று பணத்திற்காக அலைந்து திரிந்து, கேட்டது கிடைக்காமல் அவர்களாக இவனைத் தேடி வரும் வரை காத்திருப்பான். சில நேரங்களில் பணம் கிடைக்காத சூழ்நிலையை அவனே உருவாக்கவும் செய்வான். அப்படி அனைத்தையும் இழந்து அவனிடம் வந்து சிக்கிக்கொள்பவர்களை தன்னுடைய அடிமையாகவே மாற்றிவிடுவான். அவன் யாரிடம் போகச் சொல்கிறானோ போக வேண்டும். அவன் சொல்லும் வரை போய்க் கொண்டே இருக்க வேண்டும். ஒருவேளை ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு புது பெண்கள் தேவைப்பட்டால், அவனே இறங்கிச் சென்றுவிடுவான். அப்படியானவனுடன் தான் சிக்கக் காத்திருந்தாள் அமிர்தா.
எதிர்ப்புறம் அழைப்பு ஏற்கப்பட்டதும், “எனக்கு இருபது இலட்சம் பணம் வேணும். அதுக்கு ஏத்த மாதிரி யாராவது தெரியுமா உங்களுக்கு?” தொண்டையில் மீன் முள் சிக்கி இருப்பது போல் திணறலுடன் வந்தது அமிர்தாவின் வார்த்தைகள்.
“இருபது இலட்சமா? முதல்முறை அதிகபட்சம் ஐந்து இலட்சம் ரூபாய் வரை கிடைக்கும். ஆனா அடுத்தடுத்து கம்மியா தான் கொடுப்பாங்க.” என்றவன், மொத்தமாக தன்னை அவன் பிடிக்குள் கொண்டுவரப்பார்க்கிறான். சாக்கடைக்குள் இறங்கத் தயாராக இருக்கும் தன்னை மீண்டெழ முடியாத புதைகுழிக்குள் தள்ளப் பார்க்கிறான் என்பதைப் புரிந்துகொண்டாள். வயதுக்கு மீறிய வலிகளைக் கண்டு விட்டிருந்ததால் தானோ என்னவோ அவளால் பலரின் மறைக்கப்பட்ட முகங்களை எளிதாக இனம் காண முடிந்தது.
“என்னால் அடிக்கடி எல்லாம் வர முடியாது. அதிகபட்சம் பத்து இலட்சமாவது கிடைக்ககணும் அப்படிக் கிடைச்சா சொல்லுங்க.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் அமிர்தா. அவனைப் பற்றிய யூகம் சரியாக இருந்தால் தேவை என்று வரும் போது அவனே அழைப்பான் என்று நினைத்திருக்க, அது சரிதான் என்பது போல் மனோகரே இறங்கி வந்திருந்தான்.
“வெளிநாட்டு விளையாட்டுக்காரன் ஒருத்தன் விழா ஒன்றில் கலந்துக்கிறதுக்காக சென்னை வந்திருக்கான். பகலும், இரவும் அவனோட மட்டுமே இருக்கிற மாதிரி ஒரு பொண்ணு கேட்டு இருக்கான். பத்து இலட்சம் வரை அந்தப் பொண்ணுக்கும், இரண்டு இலட்சம் வரை எனக்கும் கிடைக்கும்.” என்று வாயெல்லாம் பல்லாக விஷயத்தை சொல்ல, கனத்த மனதோடு ஒப்புக்கொண்டாள் அமிர்தா.
அவசரமாக தான் இந்த முடிவுக்கு வந்தாள் என்றாலும் அறியாமலோ, தெரியாமலோ முடிவெடுக்கவில்லை. தவறு என்று தெரியும், தனக்கு இதனால் எத்தனை அவமானம் கிடைக்கும் என்பதும் புரியும். எல்லாம் தெரிந்து தான் இந்த முடிவுக்கு வந்திருந்தாள்.
அடுத்த நாள் காலையில், இது உனக்கு வேண்டாம் அமிர்தா என்று புத்தி சொன்ன மூளை, கேசியின் மீது மிச்சமிருந்த கொஞ்சம் காதலை நினைத்து அழுத மனம், இப்படியெல்லாம் செய்து நீ உயிர்வாழத்தான் வேண்டுமா என்று கேட்ட மனசாட்சி என அனைத்தையும் இழுத்து ஒரே கயிற்றில் கட்டிப்போட்டுவிட்டு மனோகர் சொன்ன ஹோட்டல் புளூமூனிற்கு துணிந்து கிளம்பி இருந்தாள்.
நகரின் கடைக்கோடியில் இருந்த ஏழு நட்சத்திர விடுதி. வெளிநாட்டு பயணிகளுக்கும், தனிமை விரும்பிகளுக்கும் ஏற்ற வகையில் பல ஏக்கர் நிலத்தை சுற்றிவளைத்து கட்டப்பட்டிருக்கும் அந்த கேளிக்கை விடுதியின் வரவேற்பறையில் தோளில் கிடக்கும் ஹேண்ட் பேக் கயிற்றை இறுக்கிப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தாள் அமிர்தா. அவள் முகத்தில் பயம், பதற்றம் தாண்டி அசௌகர்யம் தான் அதிகளவு நிலைத்திருந்தது.
“மேடம், சார் வர நேரம் ஆகுமாம். அதுவரை உங்களை வெயிட்டிங் ஹாலில் இருக்கச் சொன்னாங்க.” என்று வழி காட்டிய வரவேற்பறை பெண்ணின் கண்களில் இருந்த ஏளனம் கொல்லாமல் கொன்றது அமிர்தாவை.
பணத்திற்காக பழக்கம் இல்லாத ஆடவனுடன் ஒருவாரம் தங்கிக்கொள்ள வந்திருக்கும் தனக்கு இந்த மரியாதை தான் கிடைக்கும் என்பது புரிய, பொங்கி வழியும் கசப்பை அப்படியே விழுங்கிக்கொண்டு காத்திருக்கும் அறைக்குச் சென்றாள். சுற்றி முற்றி பார்த்துக்கொண்டே அமரும் போது செல்போன் வைபரேட் ஆக ஒரு நொடி பதறித்தான் போனாள். நெஞ்சம் முழுக்க பயம் ஆட்சி செய்வதால் சின்ன சத்தம் கூட போர் முரசு சத்தத்தைப் போல் பயமுறுத்தியது அவளை.
இது அனைத்தையும் சற்று தொலைவில் இருந்து உற்றுக் கவனித்த கேசியின் நண்பன் ஒருவன் வரவேற்பறைப் பெண்ணிடம் அமிர்தாவின் வருகைக்கான காரணம் கேட்க, “ரிச்சர்ட் னு ஒரு கோல்ப் ப்ளேயர். அவரோட ஒருவாரம் தங்கி இருக்க வந்திருக்காங்க.” நக்கலாகப் பதில் சொன்னாள் அவள். கேட்டுக்கொண்டிருந்தவனுக்கு இரத்தம் மொத்தம் சூடேற சற்று தள்ளி வந்து கேசிக்கு அழைத்தான்.
“சொல்லுடா, ரொம்ப நாள் கழிச்சு போன் பண்ணி இருக்க.” எதிர்ப்பக்கம் இருந்து கணீர் குரலில் பேசினான் கேசி.
“நான் ஒரு க்ளையண்ட்டை பார்க்க ஹோட்டல் புளூமூன் வந்திருந்தேன். அங்க அமிர்தாவைப் பார்த்தேன்.” என்று நிறுத்த, “அவ அங்க என்ன பண்றா?’’ பரபரப்பாக கேட்டான் கேசி. கடந்த சில நாட்களாக பணம் திரட்ட படாத பாடுபடுகிறாள் என்பதைக் கேள்விப்பட்டிருந்தவன் அதற்கான வேலையில் தான் இறங்கி இருந்தான். அது நடக்கும் போது இப்படி ஒரு விஷயம் என்பதில் யோசனையாகப் பார்த்தான்.
“நீயும், உன் குடும்பமும் சேர்ந்து அவளை நடுத்தெருவில் அநாதரவா விடும் போது அவ எதை நோக்கி போகக்கூடாதுன்னு நான் பயந்தேனோ அது தான் நடந்திருக்கு. காசுக்காக ஒருத்தன் கூட…” என்றவன் தன் வார்த்தைகளை முடிப்பதற்கு முன்னர், “ஏய்” என்று கத்தி இருந்தான் கேசி. நன்றாகக் காய்ந்த அதிக காரம் கொண்ட மிளகாயை அரைத்து முகத்தில் பூசிக்கொண்டது போல் நொடியில் சிவந்திருந்தது அவன் முகம்.
“சும்மா கத்தாத. கேட்டதுக்கே உனக்கு இப்படி இருக்கு. நான் கண்ணால் பார்த்துக்கிட்டு இருக்கேன். எனக்கு உடம்பெல்லாம் எரியுதுடா. எப்படி இருந்த பொண்ணு அவ. இன்னைக்கு.” என்றவன், ரிச்சர்ட் என்னும் வெளிநாட்டுக்காரன் அமிர்தாவை நோக்கி வருவதைக் கவனித்ததும், அழைப்பைத் துண்டித்து காணொளி அழைப்பை ஏற்படுத்தினான்.
ரிச்சர்ட், அமிர்தாவின் கன்னங்கள், கைகள் என மாற்றி மாற்றி வருடுவதும் அவன் தொடுகையைத் தடுக்கவும் முடியாமல், உடல் மற்றும் மனதின் தவிப்பை அடக்கவும் முடியாமல் அமிர்தா தவித்துக்கொண்டிருப்பதையும் காணொனி அழைப்பின் மூலம் பார்த்த கேசி, கோபத்தால் தன் முன்னால் இருந்த மேஜையில் பலமாக குத்தினான்.
அமிர்தா மேல் இருந்த கோபம் நண்பன் பக்கம் திரும்ப, “இந்தக் கருமத்தை எல்லாம் எதுக்காக டா என்னைப் பார்க்க வைக்கிற.” கத்தியவனுக்கு அமிர்தாவை இழுத்துப் பிடித்து ஓங்கி அறைய வேண்டும் போல இருந்தது. எரிமலையைப் போல் உடம்பில் ஓடும் இரத்தம் மொத்தமும் கொதித்துக் கொண்டிருக்க, வேகமாக தன் வாகனத்தின் திறப்பை எடுத்துக்கொண்டு விரைந்தான்.
“உன்னைக் காதலிச்ச பாவத்துக்கு அவளுக்கு நீ கொடுத்த பரிசு என்னன்னு தெரிய வேண்டாமா?” கோபமாய் நண்பன் சொல்லிக்கொண்டிருக்கும் போது, தமயந்தியின் கன்னத்தில் தட்டிவிட்டு ரிச்சர்ட் தன்னோடு வந்தவர்களுடன் செல்வது தெரிந்தது.
“என்ன பண்ணுவியோ எனக்குத் தெரியாது. அந்த நாயோட நிழல் கூட அமிர்தா மேல படக்கூடாது. நான் இதோ கிளம்பிட்டேன். இருபது நிமிஷத்தில் அங்க இருப்பேன்.” என்ற கேசி அழைப்பைத் துண்டிக்காமலே பயணத்தை தொடர்ந்தான்.
ரிச்சர்ட் சென்றதும் மலையைப் பிரட்டி போட்ட உணர்வோடு திரும்பிய அமிர்தா கேசியின் நண்பனைக் கண்டதும் அதிர்ந்து தான்போனாள். அவனைப் பார்த்துவிட்டு சுற்றிலும் தேட, “ரொம்பத் தேடாத. கேசி இங்க இல்ல. நான் மட்டும் தான் ஒரு வேலையா வந்தேன்.” முறைப்போடு சொன்னான்.
“கேசியா எந்த கேசி. அந்தப் பெயரில் எனக்கு யாரையும் தெரியாது. நான் ஹோட்டலோட இன்டீரியர் வொர்க் பார்த்தேன்.” தடுமாற்றத்தோடு சொன்னாள் அமிர்தா. சமாளிக்கிறாள் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.
“உனக்கு ஏன் இந்த தலையெழுத்து.” பாவமாகக் கேட்க, தான் இங்கு வந்ததன் நோக்கத்தைக் கண்டுகொண்டான் என்பதில் சற்றே வெட்கித்தாலும், “எனக்கு இருபது இலட்சம் பணம் வேணும். நீங்க இலவசமா கொடுப்பீங்கன்னா இந்த நிமிஷமே நான் இங்க இருந்து போறேன்.” என்றாள் கசப்பாகச் சிரித்தபடி.
“பணம் சம்பாதிக்க எத்தனையோ வழி இருக்கு. கொஞ்சம் பொறுமையா இருந்தா கண்டிப்பா நானே ஏற்பாடு பண்ணித் தரேன்.” நல்ல நண்பனாய் தவறான பாதையில் இருப்பவளை நேர்வழிக்கு இழுக்கப் பார்த்தான்.
“நான் காத்திருக்கலாம். ஆனா என் அக்காவோட நோய் காத்திருக்காதே. எனக்கு பணம் உடனடியா வேணும். அதுக்கு சுலபமான வழி இதுதான்.” எங்கோ பார்த்தபடி சொன்னாள்.
“இதை செஞ்சுட்டு உன்னால் நிம்மதியா இருந்திட முடியுமா?” என்க, “நிம்மதி. அது என்னை விட்டுப் போய் பல வருஷம் ஆச்சு. மனசு செத்துப் போன பிறகு உடம்பை பாதுகாத்து என்ன செய்யப் போறேன். அதுவும் இல்லாம யாருக்காக நான் பத்தினியா இருக்கணும் சொல்லுங்க.” என்க, முகத்தில் அடிவாங்கினான் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த கேசி.
“எல்லோருக்கும் சரி தப்பை எடுத்துச் சொல்றவ நீ. நீயே இப்படி பண்ணலாமா?” கேட்டவனின் வார்த்தைகளில் அத்தனை தவிப்பு.
“சரி, தப்பு எல்லாம் மனசுக்குத் தான் தெரியும். வயித்துக்கு தெரியாதுன்னு சொல்றது சரியா தான் இருக்கு. என் மனசைப் பார்த்தா என் அக்காவோட உயிரையும், என் குழந்தைங்களோட வாழ்க்கையை சரிபண்ண முடியாது.” என்றாள்.
“ஒரு வாரம் டைம் கொடு. என் வீட்டை வித்தாச்சும் நீ கேட்ட பணத்தை நான் ஏற்பாடு பண்ணித் தரேன். தப்பான வேலை பண்ணாத அமிர்தா. நீ செத்தே போயிடுவ.” அக்கறையாய் சொன்னான் நண்பன்.
நண்பனின் வார்த்தைகள் கேசியை சுருக்கென்று குத்தியது. நியாயமாய் இது அவன் அவளுக்குச் சொல்ல வேண்டிய வார்த்தைகளும், கொடுக்க வேண்டிய மரியாதையும் அல்லவா. இனி அவர்கள் இருவரும் சேர்வது நடக்காத காரியம் என்று அவன் தனி பாதை போட்டுக்கொண்டு விலகி வந்தான் தான். ஆனால் தனியான பாதையில் ஒரு அடி கூட அவனால் எடுத்துவைக்க முடியவில்லை. இன்னும் எத்தனை வருடங்கள் போனாலும் அவனால் அந்தப் பாதையில் முன்னேற முடியும் என்கிற நம்பிக்கையும் இல்லை.
அந்த எண்ணத்தோடு அவன் அரக்கப் பறக்க வந்து நின்ற அதே நேரம் சரியாக ரிச்சர்டும் அமிர்தா அருகில் வந்திருந்தான். அவளோடு நின்றிருந்தவர்களை அவன் ஒரு பார்வை பார்க்க, “ஸ்சாரி ஷீ இஸ் நாட் யுவர் டைப்.” என்றுவிட்டு அவள் கரத்தைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தான் கேசி.
“என்னை விடுங்க. இந்தப் பணத்தை வைச்சு தான் அக்காவோட ஆபரேஷனுக்கு நடத்தணும். எனக்குன்னு இருக்கும் ஒரே ஆதரவு அக்கா தான். அவளை சாக விட்டு நான் மானத்தோட வாழ்வதற்குப் பதில் யாருக்கும் பிரயோஜனம் இல்லாத அந்த கற்பை தொலைச்சு ஆபத்தில் இருக்கிறவளைக் காப்பாத்தலாம்.” வேகமாகச் சொல்ல கேசியின் கோபம் அதன் கரையைக் கடந்திருந்தது.
“பணம் உனக்கு அவ்வளவு முக்கியமா இருந்தா, நீ ஏன் என்கிட்ட வரக்கூடாது. என்கிட்ட கூட நிறைய பணம் இருக்கு. நீ கேட்கிற பணத்தை என்னாலும் உனக்கு கொடுக்க முடியும்.” மனதில் இருந்த கோபத்தில் பேசியிருந்தான் கேசி.
அப்படிப் பேசியதற்காக தன்னைத் தானே நொந்து கொண்டவன் மன்னிப்புக் கேட்பதற்காக நிமிர்ந்த போது, அவனை மேலும் கோபம் ஏற்றும் விதமாக, “எனக்கு ஓகே, ஆனா எனக்கு இருபது இலட்சம் பணம் வேணும்.” என்றாள் அமிர்தா. அவள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு கையோங்கியே விட்டான் கேசி.
அவள் அசராமல் அவனைப் பார்க்க, “இவ்வளவு தூரம் வந்தவ, கொஞ்சம் நேரம் எடுத்து என் ஸ்டேஷன் வந்து என்னை குத்தி கொன்னுட்டு வந்திருக்கலாம். இதைக் கேள்விப்பட்டு குரூரமா சாவதற்குப் பதில் உன்னோட கையால சந்தோஷமா செத்துப் போய் இருப்பேன்.” என்றான்.
அவன் வார்த்தைகள் தன் மனதை இளக்குவது போல் தெரிய, “நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். அந்த ரிச்சர்ட்டோட பத்து நாள் பேசி இருந்தேன். உங்களோட எத்தனை நாள் எவ்ளோ பணம் னு சொல்லிட்டா நான் அதுக்கு ஏத்த மாதிரி தயாராகிடுவேன்.” என்றாள்.
அவளை இழுத்து அணைத்தான் கேசி. அணைப்பில் இருந்து விடுபட நினைக்காமல் அசையாமல் நின்றிருந்தாள் அமிர்தா. அவன் உயிர் வரை ஆடிப்போய் இருக்கிறது என்று புரிந்தது தான். ஆனால் ஆறுதல் சொல்லத் தோன்றவில்லை. அன்று நானும் இப்படித்தானே இதயம் துடிக்க நின்றேன் என்று பழிவாங்கத் தான் தோன்றியது.
அவன் கைகள் தன் முதுகின் பின்னே அலைபாய்வதை உணர்ந்து, “எஸ் ஆர் நோ.” சின்ன பிசிறு கூட இல்லாத குரலில் கேட்டாள்.
அவன் அமைதியாகவே இருக்க, “என்கிட்ட நோ சொல்றது தான் உங்களுக்கு கை வந்த கலையாச்சே. எதுக்காக இந்த தயக்கம்.” நக்கலாகக் கேட்டாள்.
அந்த நேரம் என்ன தோன்றியதோ, “நீ கேட்கிற பணம் மொத்தத்தையும் நான் கொடுக்கிறேன். பதிலுக்கு நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்.” அதிரடியாகச் சொல்ல, இம்முறை அதிர்வது அமிர்தாவின் முறையாகிப் போனது.
“உனக்கு ஒரு முறை நோ சொன்னதே என் ஆயுளை பாதி குறைச்சிடுச்சு. போதும், எல்லாம் போதும். அநாகரிகத்துக்கும் நாகரிகத்துக்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம். தப்பை சரிபண்ணிடலாம். என்ன சொல்ற?” என்றான்.
“எத்தனை நாளுக்கு உங்க பொண்டாட்டியா நான் இருக்கணும்.” மீண்டும் ஒரு கேள்வியைக் கேட்டு அவனை சாகடித்தாள்.
மனதைக் கல்லாக்கிக்கொண்டு, “இரண்டு வருஷத்துக்கு.” என்றான்.
“என்ன?” அவள் அதிர, “இருபது இலட்சம் கொடுக்கப் போறேன்.” என்று புருவம் உயர்த்த, சரியென்று தலையாட்டினாள் அமிர்தா. பிடித்தவர்களுக்காக செய்யும் தவறு கூட சற்றே மனநிம்மதியை தரும் என்பது இவர்கள் ரூபத்தில் நிரூபணம் ஆனது.
“உங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறதில் எனக்கு சில நிபந்தனைகள் இருக்கு. எக்காரணம் கொண்டும் நான் உங்க வீட்டுக்கு வரமாட்டேன். நீங்க என் வீட்டில் இருந்தாலும் சரி, இல்ல உங்க வீட்டில் தனியா இருந்துக்கிட்டாலும் ஓகே தான்.” என்க, “தனித்தனியாக இருக்க நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கல. எனக்கு உன் வீட்டில் வந்து தங்கிக்கிறதில் எந்த தயக்கமும் இல்ல.” என்றான் அவளை விட அழுத்தமாக.
“உங்களைப் பார்க்கிறதுக்காக என் வீட்டுக்கு யாரும் வரக்கூடாது.” என்க, “வர மாட்டாங்க.” உடனே பதில் கொடுத்தான்.
“கல்யாணத்தை ரெஜிஸ்டர் ஆபிஸில் தான் பண்ணனும். முறைப்படி பதிவும் பண்ணனும்.” ஒருவித ஆக்ரோஷம் மற்றும் அழுத்தத்துடன் சொன்னவளை, இது எதற்கு என்பது போல் பார்த்தான் கேசி.
“நாளைக்கே உங்க மனசு மாறி, அதுக்குள்ள எனக்குள்ள ஏதாவது உண்டாகி இருந்து, நான் யாரோ இவ யாரோ. இவ வயித்தில் இருக்கிற குழந்தைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்ல. சாத்தானோட சேர்ந்து சாத்தான் குழந்தையை சுமக்கிறான்னு நீங்க என்னைப் பார்த்து சொல்லிடக் கூடாது இல்ல.” என்க, அமைதியாக சற்றே கீழே குனிந்த கேசி அவள் காலைத் தொட்டு தூக்கி செருப்பைக் கழட்டினான்.
என்ன செய்கிறான் இவன் என்று பார்திருந்தவள் கையில் அதைக் கொடுத்தவன், “இதால நாலு அடி கூட அடிச்சிடு. ஆனா இப்படிக் குத்தி காட்டி என்னைக் கொல்லாத. உன்னால் நான் செத்தா நீயும் தான் மனசால செத்திடுவ.” என்றான். அவனுடைய உணர்வில்லாத குரலில் அமிர்தாவின் கண்ணில் இருந்து கண்ணீர் கோடாக இறங்கியது.
அதை வேகமாக துடைத்துக்கொண்டு, “கடைசி விஷயம், இந்தக் கல்யாணத்துக்கு உங்க பக்கம் இருந்து யாரும் வரக்கூடாது.” என்றவளின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்த கேசி, “நாங்க பண்ண தப்புக்கு இது தான் தண்டனைன்னா, அதை ஏத்தக்க தயார்.” என்றான் முழு மனதாக.
error: Content is protected !!