Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மைவிழி ஜாடைகள்.

மைவிழி ஜாடைகள் – 13(a)

மைவிழி – 13(a)

“ஏன் இப்படிச் சொல்ற வாணி? நீங்க நாலு பேரும் எனக்கு ஒரே மாதிரித் தான்!விஜி, கௌசு, சௌந்தர்யா, நீனு என்னைக்காவது உங்களுக்குள்ள நான் வித்தியாசம் பார்த்திருக்கேனா?” என வருத்தம் மேலோடும் குரலில் கேட்டார் மேகலை.



Advertisement

“இதுவரைக்கும் பார்த்ததில்லை த்தை!ஆனா வேதவி விசயத்துல பார்க்கற மாதிரி இருக்கு. அதான் மனசுல பட்டதை சொல்லிட்டேன். என்ன இருந்தாலும் எங்களை விட வசதியான இடத்துப் பொண்ணு தானே?” என்றாள் வாணி.

“வாணி?!”

Advertisement

Advertisement

“என்னத்தை உண்மைய பேசுனா அதட்டறீங்க” வாணி கவலை போல் சொல்லிக் கலங்க,

“என்னம்மா!” என பதறி விட்டார் அந்தப் பூஞ்சை மனம் கொண்ட மனிதி.

Advertisement

“அவளை சொல்லவும் இந்தா அதட்டவே செய்றீங்கல்ல த்தை! நான் என்ன பொறாமைலயா பேசுறேன். நீங்க கண்டிச்சு வைக்காட்டி அந்தப் பொண்ணு இப்படியே இருந்து உங்க தலைல மிளகாய் அரைச்சிடாது!”என்றாள்.

“என்ன பேச்சு வாணி இது! அவங்க தான் சொல்லிட்டு போறாங்கன்னா.. நீயும் இப்படி பேசறது சரியில்லமா. வேதவிக்கு இங்குள்ளது பழக நேரம் எடுக்கும்!நாம சொன்னா கத்துப்பா. இப்படிலாம் பேசாத வாணி” என சற்றே கடிந்து கொண்டார்.

வாணி அதற்கும் நீலிக் கண்ணீர் வடிக்க,

“வாணி நீங்க எல்லாம் ஒத்துமையா இருக்கனும்மா! எங்க கண்ணுக்குப் பொறவு என் மருமகங்க தானே பார்த்துக்கனும். நீயும், சௌந்தர்யாவுமே சொல்லிக் கொடுங்க அவ கேட்டுப்பா. அதுக்காக இன்னொரு தரம் இப்படி பேச வேணாம். அதுவும் வந்திருந்த அத்தனை பேர் முன்னாடி நம்ம பொண்ணை நீ விட்டுக் கொடுத்து பேசியிருக்கக் கூடாது வாணி!” என்று பொறுமையாக சொல்லிக் கொண்டு வந்தவர், இறுதியில் கறாராகக் கூறி விட, வாணிக்கு முகமெல்லாம் சுண்டி விட்டது.

இரண்டாவது மருமகளின் பேச்சு சற்றும் பிடிக்கவில்லை மேகலைக்கு. ஆனால் இப்படிப் பேசும் வாணியை இதற்கு மேல் கடிந்து கொள்ளவும் முடியவில்லை அவரால். ஆயாசமாக வந்தது.

மேகலைக்கு மாமியார் அதிகாரமெல்லாம் வராத ஒன்று! அவர் மகள்கள் போல் தான் மருமகள்களையும் பார்ப்பவர். தாயின் நிலையில் தான் மருமகள்மாரையும் கடிந்து கொள்வது.

மூத்த இரு மருமகள்களும் உத்தியோகத்திற்கு செல்கையில், அவர்களுக்கு சிரமம் எதற்கென அவரே சமையல் வேலைகள் எல்லாம் பார்த்து விடுவார்.

பேரன்,பேத்திகள் கூட அவர் கவனிப்பில் தான். வெளியில் இருப்பவர்கள் மேகலையை ஏத்தி விட்டாலும்,

“வேலைக்கு போயிட்டு வர்ற பொண்ணுங்க. வீட்டுப் பொறுப்பையும் பாத்துக்கறது கஷ்டம் இல்லையா? நான் வெட்டியா வீட்ல கெடக்கற கெழவி தானே.. இதைப் பாக்கறதுல என்ன வந்துடப் போகுது” என்று பேசுவர்களை அடக்கி விடுவார் மேகலை.

அவரின் இந்த குணம் தெரிந்து தான் எப்படியாவது வேதவிக்கு எதிரே திருப்பி விட முயன்றாள் வாணி. ஆனால் அது தனக்கே திரும்பி விட்டதில்,

“என்னவோ அத்தை. என்னை நீங்க பேசினதுல எனக்கு வருத்தம் தான்” என அப்போதும் கூறினாள் அவள்.

இவர்கள் பேசுவது அனைத்தும் தன் அறையிலிருந்த வேதவிக்கு கேட்கத் தான் செய்தது.

அதுவும் வந்தவர்கள் இவளுக்கு சமையல் தெரியாது என தெரிய வந்ததும் அறிவுரை கொடுக்கிறேன் என கடுப்பை கிளப்பி விட்டதும், மேகலையிடம் இவளை குறைத்து பேசி,பெண் தேர்ந்துதெடுக்க தெரியவில்லை என அவரை மட்டம் தட்டியதும், அதற்கு வாணி ஒத்து ஊதியதும் என உள்ளுக்குள் கோபம் பொங்கினாலும் அனைத்தையும் பொறுமையாகத் தான் கேட்டுக் கொண்டிருந்தாள்.

ஒரு நிமிடம் ஆகாது அவர்களைப் பேசி விட! ஆனால் மாமியாருக்காகப் பொறுத்துக் கொண்டிருந்தாள்.

வந்தவர்கள் தன்னைப் பேசவும், இவள் கையை அழுத்திப் பிடித்து கண்களால் ஆறுதல் சொன்ன மனிதிக்காகவே அமைதியாக இருந்து கொண்டாள் வேதவி.

அவர்கள் கிளம்பியதும் இன்னும் பேச எத்தணித்த வாணியைக் கண்டு கொண்டவராய்த் தான்.. அங்கிருந்து வேதவியை அவள் அறைக்கு அனுப்பி வைத்தார் மேகலை.

தான் பேசினால் வந்த முதல் நாளே அதிருப்தியாய் எண்ணக் கூடும் என்பதனாலே மேகலை சொன்னதைக் கேட்டு அங்கிருந்து அகன்று கொண்டாள்.

இப்போதும் வாணி மாமியாரைக் குற்றவாளி போல் பேசுவது பொறுக்க மாட்டாமல், தன் அறையிலிருந்து வெளிவந்த வேதவி,மருகுவது போல் நின்றிருந்த மாமியாரைப் பார்த்தவள் வாணியிடம் அவர் மன்னிப்பு கேட்கப் போவது புரிந்து,

“அத்தை!” என அதட்டலிட்டவள்,

“உங்களுக்கு என்ன பிரச்சனை அக்கா?” என நேரடியாகவே கேட்டு விட்டாள், வாணியிடம்.

அவள் திணறி நிற்க, சூழ்நிலையை இலகுவாக்க முயன்ற மேகலையை தடுத்து விட்டு,வாணிக்கு முன்னால் வந்து நின்றவள்,

“உங்கட்ட தான் கேக்கறேன். உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்றாள் தீவிரத்துடன், அடக்கப்பட்ட கோபமுமாக.

“பார்த்தீங்களா அத்தை. கல்யாணம் பண்ணிட்டு வந்த அடுத்த நாளே எப்டி சண்டைக்கு வர்றான்னு! இவளுக்காக நீங்க என்னைப் பேசுட்டீங்கல்ல?” என மாமியாரிடம் சொல்லிக் கண்ணைக் கசக்க,

“எங்கிட்ட உங்களுக்கு பிரச்சனைன்னா அதை என்ட்ட தான் நீங்க சொல்லனும்.இங்க, இங்க என்னைப் பார்த்து பேசுங்க!” என்றாள் வேதவி.

மேகலை, “வேதா” என நிறுத்தப் பார்க்க,

“எ.. என்ன சொல்லனும்! ஒரு டீ கூட போடத் தெரியுதா உனக்கு. எங்கத்தைக்கு தான் வந்தவங்க முன்னாடி அவமானம். இப்போ எப்படியெல்லாம் பேசற. உங்க வீட்டாளுங்க இதைத் தான் சொல்லிக் கொடுத்தாங்களா உனக்கு!”

வேதவிக்கு வந்ததே கோபம். 

“சமையல் தானே செய்யணும்! பழகிட்டுப் போறேன். இனி நீங்க எங்க வீட்டுப் பத்தி எதுவும் பேசுனீங்க. அப்பறம் வேற மாதிரி வேதவியப் பார்ப்பீங்க” என்றவள்,

“டீ போடணும் தானே. நான் போடற முதல் டீ உங்களுக்கு தான்.வித் எக்ஸ்ட்ரா பேதி மாத்திரை”என்று அடிக்குரலில் வாணிக்கு கேட்கும் படி மட்டுமே கூற, ஒரு நொடி பயந்து தான் போனாள் வாணியும்.

அவள் முக பாவனையில் சிரிப்பு வரப் பார்த்தது வேதவிக்கு.

“அத்தை. இவ மிரட்ட வேற செய்றாத்த” வாணி மாமியாரிடம் சொல்ல, அலட்சியமாகப் பார்த்திருந்தாள் வேதவி.

வாணியிடம் இறுதியாக வேதவி என்ன பேசினாள் என மேகலைக்கு தெரியாவிடினும் அதற்கு முன்பே அவள் பேசியது பிடிக்கவில்லை அவருக்கு.

என்ன தான் இருந்தாலும் நேற்று வந்தவள். இப்படி பொறுமையின்றி இருப்பதில் அதிருப்தி.

“வேதவி”அழைத்தார் மேகலை.

அமைதியாய் ஏறிட்டவளிடம்,

“வாணி உனக்கு மூத்தவ. ஏதோ ஆதங்கத்துல பேசிட்டா. அதுக்காக நீ இப்படி பேசறது சரியில்ல.!”என்றார்.

“அவங்க பேசுனது தப்பு த்தை! அதுவும் உங்க இன்னொசென்ட்ஸ அவங்க யூஸ் பண்ணிக்கிறாங்க.” என்றாள் வேதவி.

இவருக்கு யாரைப் பார்ப்பதெனத் தெரியவில்லை. இரு மருமகள்மாரையும் விட்டுக் கொடுக்க எண்ணவில்லை. ஆனாலும் வாணி மூத்தவளாக இருக்கும் பட்சத்தில்,

“வாணி பேசுனது தப்பாவே இருக்கட்டும் மா! ஆனா நீ இப்படிப் பேசினா உங்க வீட்டவங்களைத் தான் குறை சொல்வாங்க. எனக்கு கூட உன் பேச்சு பிடிக்கல!வாணிட்ட மன்னிப்பு கேளு வேதா” என சொல்லி விட்டார் மேகலை.

வேதவிக்கு சுறுக்கென்றது. உள்ளங்கைகள் இரண்டையும் அழுந்த பொத்திக் கொண்டு உள்ளே பொங்கும் ஆத்திரத்தை அடக்க முயற்சித்தாள்.

அதில் வெற்றியும் கண்டவள்,

“உங்க கிட்ட வேணா மன்னிப்பு கேட்டுக்கறேன் த்தை. இவங்கட்டெல்லாம் கேட்க முடியாது”என்று வாணியைப் தீர்க்கமாய் பார்த்தாள்.

“பார்த்தீங்களாத்தை என்ன பேச்சு பேசறா!” என்ற வாணி கோணல் சிரிப்புடன் வேதவியைப் பார்த்து நிற்க,

“என் பேச்சுக்கு அப்போ என்ன மரியாதை வேதவி?” என்று கேட்டார் மாமியார். வாணியில் பேச்சில் மாமியார் மேகலை எட்டிப் பார்த்தாரோ?!

“உங்ககிட்ட எனக்கு மரியாதை இருக்குத்தை!ஆனா உங்களுக்கு குற்றவுணர்ச்சிய தூண்டி விட்டு அதுல குளிர் காயற மாதிரி ஆட்களுக்கு என் பதில் இது தான். நீங்க மருகி நின்னதும், மன்னிப்பு கேட்கப் போனதும் எனக்கு சரியாப் படல. நான் பேசினேன். எங்கிட்ட எப்படி ஒருத்தர் இருக்காங்களோ.. அதே மாதிரி தான் என்னாலையும் நடந்துக்க முடியும்!” என தயங்காது பட்டென சொல்லி விட்டாள் வேதவி.

மேகலைக்கு அவள் பேச்சு பிரமிப்பைக் கொடுத்தாலும், ‘பட்டென’ பேசுபவளின் இந்தக் குணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

வாசன் அப்படியே வேதவியின் குணத்திற்கு நேர்மாறு. மகனுக்கு வேதவி சரியான பொருத்தமில்லையோ எனும் எண்ணம் வந்து விட, தன் எண்ணமே தவறு என தன்னைக் கடிந்து கொண்டார் மேகலை.

ஆனால் வாணியோ அடங்குவேனா என்றிருந்தாள்.

“உங்க முன்னாடியே என்னை என்னவெல்லாம் பேசிட்டா அத்தை. வீட்ல ரெண்டா மருமகன்னு அப்போ எனக்கென்ன மரியாதை.?தோலு தான் கருப்புன்னு பார்த்தா மனசும் அதே நிறமால்ல இருக்கு!”என்றாள்.

“வாணி” மேகலை அதட்டினாலும், வேதவிக்கு முற்றாக பொறுமை பறந்தது.

“நீ உள்ள போ வேதா!” என்ற மேகலையிடம்,

“நீங்க சொல்றத கேட்க முடியாதத்தை!”என்றவள் வாணியின் பக்கம் திரும்பி,

“என் கேரக்ட்டர அஸ்ஸாசினேட் பண்ற அதிகாரம் உங்களுக்கில்ல.! மோர் ஓவர் இதுக்கு மேல ஏதாவது பேசனீங்கன்னா அத்தைக்காகவோ, அக்கான்னோ பார்க்க மாட்டேன்” என்று அதட்டல் தொணியில் பேசிக் கொண்டிருந்தவளை,

“வேதவி!” என்று உயர்ந்த குரலுடன் அரட்டியிருந்தான் கீர்த்தி வாசன்.

வேதவிக்கு கணவன் வருகை திகைப்பைக் கொடுத்தாலும் அதிரவோ, அசரவோ இல்லை.

திடீரென்ற அவன் குரலில் லேசாக உடல் நடுங்கிய போதிலும் இவள் நிதானமாய் திரும்பிப் பார்க்க, அந்தச் செய்கை அவள் கணவனுக்கு திமிராகவே தெரிந்தது.

வாணியை,மேகலை அதட்டி சமயம் தான் உள்ளே நுழைந்திருந்தான் வாசன்.

என்ன நடந்ததென்று முழுதாக தெரியாவிடினும் வேதவி தன் வீட்டு மூத்த பெண்களை எதிர்த்துப் பேசியதை ஏற்றுக் கொள்ள முடியா நிலை.

அவனோடு தான் கிருஷ்ணணும், சௌந்தர்யாவும் உள்ளே வந்திருந்தனர்.

வேதவியின் பேச்சு அவர்களுக்கும் பிடிக்கவில்லை. தம்பியைத் தான் அதிருப்தியாய் பார்த்தார் கிருஷ்ணன்.

“வேதா”என கோப மூச்சுடன் வாசன் தன் மனைவியை நெருங்கயிலே,

“வேதவிய இங்க யாரும் எதுவும் பேசக்கூடாது சொல்லிட்டேன்” என்று விட்டார் மேகலை.

தாய்ப் பேச்சை மீற முடியாது ஆழ்ந்த மூச்சொன்றை வெளியிட்டவன் கையிலிருந்த பொருட்களை அங்கிருந்த மேசையில் வைத்து விட்டு வாணியிடம் போய் நின்றவன்,

“வேதவிய உங்களை ஹர்ட் பண்ற மாதிரி பேசிருந்தா அவ சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்.ஸாரி அண்ணி!” என்றான். கணவனைக் கோபம் பொங்க பார்த்திருந்தாள் வேதவி.

“நீங்க எதுக்கு தம்பி கேக்கறீங்க? உங்க பொண்டாட்டி கேக்கட்டும்” வாணி சொல்ல,

“வாணி நீ வீட்டுக்குப் போ” என்றார் மேகலை.

வாணி அங்கிருந்து அகல, சலனமில்லாப் பார்வையுடன் நிமிர்வாய் நின்றிருந்த மனைவியை தீ பார்வை பார்த்த வாசன் விருட்டென தன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

கணவன் பின்னாலயே சென்ற வேதவி,

“அத்தை சொல்லலைன்னா நீங்க வேற திட்டுவீங்களா?எங்க பேசுங்க பார்ப்போம்” என்று எகிறியவள்,

“நீங்க எதுக்கு மன்னிப்பு கேட்டீங்க?” என்றாள் எரிச்சலாய்.

பதில் சொல்லாமல் அவளை அமைதியாய்ப் பார்த்தான் கணவன். அவ்வளவு தான்!

அடுத்த வந்த நாட்களில் தன் கோபத்தை மௌனத்திலே காட்டினான் கீர்த்தி வாசன்.

அவன் மனைவியும் கண்டுகொள்ளவில்லை. வேதவியைப் பொறுத்தவரை அவள் சரியே.

‘நீ கோபமாய் இருக்கிறாயா இருந்து கொள்’ என அலட்சியமாக அவள் நடந்து கொள்ள, அது இன்னும் வாசனுக்கு கோபத்தை அதிகரித்தது.

*************

வாசன் வீட்டில் அன்றைய இரவுணவு அமைதியாகக் கழிய எவரும் மாலையில் நடந்ததைப் பேசிக் கொள்ளவில்லை.

பிறகு சாப்பிட்டுக் கொள்வதாக கூறிய புது மணத் தம்பதிகளை, கண்டிப்புடன் அழைத்து உணவுண்ண அங்கு அமர்ந்த்தியிருந்தார் மேகலை.

தங்கள் மனஸ்த்தாபங்களை வீட்டுள்ளவர்களுக்கு காட்டிக் கொள்ளவில்லை இருவரும்.

அமரேசனுக்கு விடயம் தெரிந்திருக்கா பட்சத்தில், அவர் மட்டுமே பேசிக் கொண்டிருந்தார் மகன்களுடன்.

புது மருமகளை வாஞ்சையுடன் கவனித்தும் கொண்டார். அவர் கடைக்குட்டியான கீர்த்தியின் மனைவி. அதுவே வேதவி மேல் இயல்பான பாசத்திற்கு ஆணி வேராக அமைந்தது.

வேதவியிடமும் அவள் படிப்பு பற்றிக் கேட்டுக் கொண்டார். சிறு புன்னகையுடன் மாமனாருக்கு பதில் கொடுத்த படி சாப்பிட்டாள் வேதவி.

தன் தந்தையான சத்யனிடம் கூட இத்தனை ஒட்டுதல் இல்லை அவளுக்கு. பிள்ளைகளிடம் எப்போதும் அளவாய்த் தான் இருக்கும் அவர் பேச்சு! படிப்பு விடயம் கூட நேரில் கேட்டுக் கொள்ள மாட்டார். எல்லாம் சரஸ்வதி வழியாகத் தான்.

அவர்கள் வீட்டில் அப்படியே பழகி விட்டார்கள். ஆனால் புகுந்த வீட்டில் கணவனின் தந்தை அனைவரிடமும் நேரடியாகக் கேட்டு, பார்ப்பது எல்லாம் அவரின் மேல் இன்னும் மதிப்பைக் கொடுக்க, அவளுக்கு இன்னொரு தந்தையாகிப் போனார். அதுவுமில்லாது கீர்த்தி வாசனுக்கு அனைவரையும் அரவணைத்து செல்லும் இந்த குணம் எங்கிருந்து வந்திருக்கும் எனவும் புரிந்தது. அக்குணம் தனக்கு கணவனளவில் குறைவு தான் என்றாலும் அவனை நினைக்கையில் பெருமிதமும் தான்!

வேதவிக்கு தன்னை நினைத்தே அத்தனை ஆச்சர்யம். சொந்தங்களிடம் அவ்வளவு ஒட்டாத தான் எப்படி இந்த ஒரு நாளிலே மாமியார், மாமனார் மீது இத்தனை பாசத்துடனான பிடித்தமும், ஒட்டுதலும் என?

உணர்வுகளும், சரியான புரிதல்களுமே உறவுகளை இணைக்கின்ற பாலமாய் இருப்பது என்று இன்னும் புரிய வந்திருக்கவில்லை வேதவிக்கு.

கீர்த்தி வாசன் மனைவியைப் பார்க்காது உணவில் கவனம் வைத்திருந்தாலும் அவளின் பேச்சுக்களை உள்வாங்கிய படி தான் அமர்ந்திருந்தான். 

தன் பெற்றோரிடம் அவளின் இயல்பான பேச்சில் பிடித்தது மனைவியவளை.ஒரு பக்கம் மாலையில் நடந்த நிகழ்வு மனதை உறுத்திக் கொண்டிருந்தது.தாயை எதிர்த்து பேசியதும் இப்போது அதை மறந்து பெண்கள் இருவரும் சாதாரணமாய் பேசிக் கொள்வதும் வேறு வேதவியைப் புரிந்து கொள்ள தான் தவறுகிறோமோ என நினைக்க செய்தது. ஆனால் மனைவி அப்படி நடந்து கொண்டதில் சிறு சுணக்கமும்,கோபமும் இருக்கவே செய்தது வாசனிடம்.

“டீச்சிங் விட்டு வேற வேலைக்கு ட்ரை பண்ண இருக்கியாமா வேதா?”எனக் கேட்டார் அமரேசன் மருமகளிடம்.

“இன்னும் யோசிக்கல மாமா! பி.ஹெச்.டி கம்ப்ளீட் பண்ண அப்பறம் பார்க்கலாம்னு இருக்கேன்” என்றாள் வேதவி.

“நல்லது மா! உனக்கு வேலைக்கு போக புடிச்சிருக்குன்னா இங்க எந்த தடையும் இல்லம்மா. கல்யாணமாயிடிச்சுன்னு இத்தனை படிச்சிட்டு வேலைய விட்டுட மட்டும் முடிவு எடுத்துறக் கூடாதுப்பா! கண்டிப்பா பெண்களுக்கு வேலை முக்கியம்” என்றார் தந்தை ஸ்தானத்திலிருந்து.

கணவர் பேச்சை மேகலையும் ஆமோதித்தார்.

இந்தக் காலத்திலும் மருமகள் வேலைக்குச் செல்வதை அனுமதிக்காதவர்களின் மத்தியில் தங்கள் வீட்டுப் பெண்களாக யோசித்த மாமனார்,மாமியாரின் புரிதலான பேச்சில் வேதவி மனதில் நிறைவுடனான நெகிழ்வு. 

பெண்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதற்காகவே சொல்கிறார்கள் எனப் புரிந்தது. தலையசைத்து சிறு புன்னகையைக் கொடுத்தாள், அவர்களுக்கு.

ஆனால் வேதவியை கவனித்து பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணனுக்கு தான், மாலையில் தம்பி மனைவியின் பேச்சு மனதில் நின்று மறையாத நமைச்சலைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

புகுந்த வீடு வந்த ஒரு நாளே ஆன நிலையில் மேகலையையும் , வாணியையும் எதிர்த்து பேசியது, அதோடு வாணி கொஞ்சம் குழப்படி எனத் தெரிந்திருந்தாலும் வேதவி புதியவள்,பொறுமையாக இருந்திருக்கலாமே எனும் எண்ணம் எழாமல் இல்லை!அந்தளவில் வேதவியின் மேல் அதிருப்தியும், பிடித்தமின்மையும் அவருக்கு.

ஆனால் கிருஷ்ணன் ஒன்றை யோசிக்க மறந்தார். புது இடத்திற்கு வந்தவளின் பொறுமையை இழக்க வைக்கும் வகையில் தான் தங்கள் வீட்டுப் பெண்களின் பேச்சு இருந்திருக்கிறது என்பதை.

வேதவிக்கு இப்படியெல்லாம் பேசி, சண்டை பிடிக்க என்ன அவசியம் இருக்கிறது?அதிலும் வந்து ஒரு நாளே ஆன நிலையில்?

கிருஷ்ணன் யோசிக்க மறந்தாலும் வாசனுக்கு இதே யோசனை தான்.

வாசன் சாப்பிட்டு எழுந்து கொள்ள, கிருஷ்ணணும் எழுந்தவர் தம்பியை அழைத்தார், தனியே பேச வேண்டும் என்று.

வேதவி சாப்பிட்ட பின் மாமியாருக்கு மாத்திரை எடுத்துக் கொடுத்தவள் அவர்கள் தூங்கச் செல்லவும்,சற்று நேரம் சௌந்தர்யாவுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

கிருஷ்ணனின் பிள்ளைகள் நேரமே சாப்பிட்டு தூங்கச் சென்றிருக்க, இவர்களுக்கு சாப்பிட்டது செரிக்க வேண்டுமென முற்றத்தில் அமந்திருந்தனர்,பெண்கள் இருவரும்.

சௌந்தர்யா நல்ல விதமாகவே பேசினாள். மாலையில் நடந்ததை கேட்கவில்லை. வேதவியின் பேச்சில் சுணக்கம் என்றாலும் அவள் அவ்வாறு நடந்து கொள்ள வாணி தான் தொடக்கப் புள்ளியாக இருக்கக் கூடும் என சரியாக எண்ணினாள்.

முதலில் வேதவியை, மணப்பெண்ணாக பார்க்கும் போது சௌந்தர்யாவிற்கு பிடிக்காது தான் இருந்தது. என்னவோ கீர்த்தி வாசனுக்கு அழகில் இவள் குறைச்சல் எனும் எண்ணம்.

ஆனால் தங்கள் கீர்த்திக்கு பிடித்த பெண் என்பதை தாண்டி போகப் போக வேதவியை அவளாகவே பிடித்திருந்தது சௌந்தர்யாவிற்கு.

தன்னைப் பார்த்திருந்த சௌந்தரியாவிடம்,

“சாயந்தரம் நடந்தத நீங்க கேட்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும் அக்கா!அதுல என் மேல உங்களுக்கு சுணக்கம் இருக்கலாம். எனக்கும் சில விஷயங்களுக்கு விளக்கம் கொடுக்கறது பிடிக்காதுக்கா..! ஆனா வாணிக்கா இன்னைக்கு பேசுனது சரியில்ல. எனக்குப் பிடிக்கல. ஸோ,நான் அவங்களைப் பேசிட்டேன். என்னைப் பொறுத்தவரை அதுல தப்பும் இல்ல” என்றாள் வேதவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!