Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மைவிழி ஜாடைகள்.

மைவிழி ஜாடைகள் – 1(b)

மைவிழி -1(b)

சரஸ்வதி – சத்யநாதனுக்கு மொத்தம் 5 செல்வங்கள். மூத்தவன் தமிழ் கனியன் அடுத்து வேதவி,சைந்தவி, சங்கவி என வரிசையாக பெண் பிள்ளைகளும் கடைக்குட்டியாய் தமிழ் செல்வன் என இன்னொரு ஆண் பிள்ளையும் இருக்கின்றனர்.



Advertisement

கனியன் சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்க்கிறான். வேதவி பி.ஏ டிகிரி முடித்த கையோடு டீச்சிங் வேலை பார்த்துக் கொண்டே எம்.ஏயையும் முடித்திருந்தவள் இப்போது பிஹெச்டி படித்து வருகிறாள்.

அது என்னவோ தெரியவில்லை, மூத்த மகளுக்கும் சரவஸ்வதிக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான்.முட்டிக் கொள்வதும்,பின் கட்டிக் கொள்வதும் என ஒரு நாளில் ஒரு சண்டை போடாமலாவது இருந்ததில்லை இருவரும். அவர்களை பற்றி அறிந்த சத்யநாதனும் பெரிதாக கண்டு கொள்வதில்லை.மகள்,மனைவி சண்டையில் தேவையில்லாது நம் தலை உருளுவானேன் என அலட்டிக் கொள்ளாமல் இருந்து விடுவார்.

Advertisement

Advertisement

இடையில் யாரும் குறிக்கிட்டால் இன்று சங்கவிக்கு நடந்த கதி தான் மற்றவருக்கும்!

ஆனால் தந்தையிடத்தில் ஐவருக்கும் பயமுண்டு. தோற்றத்தில் கருப்பாக பெரிதாகவும், கட்டை குரலில் பேசுபவராக இருப்பினும் அன்பை வெளிப்படையாகக் காட்டத் தெரியாத வெள்ளை மனிதர் அவர்!உலகில் வாழும் பல தந்தையர்களின் காப்பி!மனைவி என வருகையில் பெட்டிப் பாம்பாய் அடங்கி விடும் 1% வீத கணவர்மார்களில் இவரும் ஒருவர்.

Advertisement

அப்படியானவரே, இன்றைய மனைவியின் பேச்சில் எரிச்சலானார்.

இன்று நல்ல மன நிலையில் இருந்த சரஸ்வதியை ‘வள்’ள மனநிலைக்கு மாற்றிய பெருமை பக்கத்து வீட்டு பங்கஜத்தையே சாரும்.

வேதவியை விட சிறு வயதுள்ள அவரது சொந்தக்காரப் பெண்ணுக்கு திருமணம் முடிந்து விட்டதாம்.அதைக் கொண்டு சும்மா இருந்தாலாவது பரவாயில்லை.

“வேதவிக்கு வயசு போகுதே!நீயேன் இன்னும் மாப்பிள்ளை தேடாம இருக்க சரஸு!ஒரு வேலை நாதன் கிரிமினல் லாயர்னு பயந்துக்கிட்டு பொண்ணு கேட்டு வராம இருக்காங்களோ?”

“உன் பொண்ணு கொஞ்சம் கருப்பா குண்டா, உயரமா இருந்தாலும் முகம் கொஞ்சமா வாக்கா தான் இருக்கு! (வாகு-கலையான முகம் ) ஆனாலும் இந்த காலத்துல யார் தர்றா மாப்பிள்ளை. எல்லாரும் வெள்ளையா இருக்கற பொண்ணுங்களையே கேக்கறாங்க” என கவலை கொள்வது போல் நெடு மூச்செரிந்தார்.

சரஸ்வதிக்கு அவர் பேச்சு எரிச்சலைக் கொடுத்தாலும் மனது நெருடவும் செய்தது மகளை நினைத்து. இதற்கு அத்தனையொன்றும் வயதாகிடவில்லை வேதவிக்கு. என்ன ஒரு இருபத்தி மூன்று,இருபத்தி நான்கு வயதிருக்குமா? ஹ்ம்ம்!

ஆனாலும் இத்தனை பேசிய பங்கஜத்தை சும்மா விடுவதாக இல்லை சரஸ்வதி.

“வேதாக்கு அப்படியொன்னும் வயசு போயிடலயே, அவ படிக்கிறா வேற.. அதனால இப்போதைக்கு அவ கல்யாணத்த பத்தியெல்லாம் நான் பெருசா யோசிக்கல பங்கஜம் அக்கா. என்னனாலும் பொம்புள புள்ளைக்கு ஒரு படிப்பு இருக்கனும் இல்லையா..? எந்த நேரத்துலயும் சுயமா இருக்க பழகனும் அவ! அதுவுமில்லாம நீங்க சொல்ற மாதிரி வெள்ளைத் தோலை பார்க்கற ஆட்கள் யாரும் இப்போ அவ்வளவா இல்ல பங்கஜம் அக்கா!நீங்களே அப்படி பார்ப்பிங்களா சொல்லுங்க?” பாயிண்டாக பேசியவர் சத்யநாதனின்,மனைவி என நிரூபித்தார்.

“நான் அப்படி பார்ப்பேனா சரஸு மத்தவங்களை சொன்னேன்!”எனும் சமாளித்தலுடன்,

“ப்ச்,ஆனாலும் நீ என்னவோ சொல்ற போ!நான் சொன்னது நீ வேதாக்கு மாப்பிள்ளை தேடும் போது தான் புரியும்”என உசுப்பேற்றி விட்டுப் போய் விட கொஞ்சம் பயந்து தான் போனார் சரஸ்வதி.

அவர் சொல்வது போல் வேதவியின் தோற்றம் இருந்தாலும் சரஸ்வதிக்கு மகள் எப்போதும் அழகு தான். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சல்லவா!

வேதவி அப்படியே சத்யநாதனின் மறுபதிப்பு. அதே போல் தான் சங்கவியும் இளையவன் தமிழ் செல்வனும்.

மூத்தவன் கனியன் நாதனின் நிறம் என்றாலும் சரஸ்வதியின் முக ஜாடை.சைந்தவியோ அப்படியே இவரின் மறுபதிப்பு.

இத்தனைக்கும் இவர்களில் எவரும் நிறத்தில் தான் அழகிருக்கிறது என இதுவரையிலும் யோசித்திராதவர்கள். அப்படிபட்டவரையே யோசிக்க வைத்து விட்டது பங்கஜத்தின் பேச்சு,மகளின் நிறத்தை வைத்து வரன் அமையாதோ என.

“கருப்பா இருந்தா குறையா?கருப்பு தான் அழகு”என என்ன தான் சொல்வதற்கு நன்றாக இருந்தாலும் இன்னும் உடல் நிறத்தில் தான் அழகிருக்கிறது என நினைப்பவர்களின் எண்ணிக்கை அவ்வளவாக ஒன்றும் குறைந்திடவில்லை.

பங்கஜம் பேசியது ஒரு பக்கம் உறுத்தியதென்றாலும் அதை கணவனின் காதுக்கு கொண்டு சேர்க்கவில்லை இவர். திருமணத்திற்கான நேரம் இப்போதில்லை என நினைத்துக் கொண்டார். ஆனாலும் இன்றைய சரஸ்வதியின் புலம்பலுக்கு பங்கஜத்தின் பேச்சோடு,அவர் பேசி விட்டு போனது தான் கடன் என்பது போல் எதிர்த்த வீட்டில் குடிவந்த சந்திராவின் கேள்வி தான் மூலக் காரணமாக அமைந்து விட்டது.

அதே கேள்வி இப்போதும் மண்டையைக் குடைய கவலையாய் அமர்ந்த மனைவியை பார்த்திருந்த நாதன்,

“சரஸு!இப்போ எதுக்கு அதையே நினைச்சிட்டு இருக்க? எனக்கென்னவோ சந்திரா கேட்டதை நீ தப்பா புரிஞ்சிகிட்ட போலருக்கு” என்றார்.

அவர்கள் மக்களெல்லாம் (பிள்ளைகள்) தூக்கத்தில் இருக்க, இரவும் நடு ஜாமத்தை எட்ட இருக்கும் நேரத்தில் பேசிக் கொண்டிருந்தனர் இருவரும். பல வீடுகளில் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய உரையாடல்கள் பெற்றவர்களிடம் இடம் பெரும் நேரமிது தானோ?

“அதெப்படிங்க,நான் பாட்டுக்கு சிவனேனு தானே இருந்தேன் அவங்களே வந்து ‘உங்க பொண்ணுக்கு எதுவும் வரன் பார்க்கறீங்களா? எனக்கும் கர்ணன்னு ஒரு பையன் இருக்கான்.சென்னைல தான் இன்ஜினியரா வேலை பார்க்கறான்.அவனுக்கும் நாங்க வரன் பார்க்கலாம்னு இருக்கோம். உங்க பொண்ணு யாரையும் விரும்பறாவா?’ன்னு கேப்பாங்க.”

“சும்மா கேட்டிருப்பாங்க சரஸ்! இத்தனைக்கும் அந்தம்மா இங்க குடி வந்து மூனு மாசம் தான் ஆகுது!நீயா எதையும் கற்பனை பண்ணிக்காதே.” என்றார்.

“ப்ச், இல்லைங்க!நம்ம பொண்ணு மேல விருப்பம் இருக்க போய் தான் கேக்கறாங்களோ என்னவோ!இல்ல அப்படி தான் இருக்கும்” என்றார் உறுதியாய்.

“அடியே, அந்தம்மாவோட மகனை நீ நேர்ல பாத்திருக்கியா..?அந்தப் பையன் தான் இத்தனை நாளைக்கும் இந்தப் பக்கம் வந்திருக்கானா?”

“நான் அந்தப் பையனை பார்த்திருக்கேங்க!”என குண்டைத் தூக்கிப் போட்டார் சரஸ்வதி.

“எதே!!இது எப்போடி நடந்தது??”

“ம்ம், போட்டோல பார்த்தேங்க”என மண்டையை ஆட்டியவரிடம்,

“எது!? அவன் போட்டோ நீ எங்கடி போய் பார்த்த?”என்றார் திகைப்பாய்.

“அந்தம்மா தான் போட்டோ காட்டினாங்க. நம்ம பொண்ணு மேல அவங்களுக்கு விருப்பம் இல்லன்னா.. நான் கேக்காத அவங்க மகன் போட்டவ எதுக்குங்க எனக்கு காட்டணும்?”என்றார் விடாமல்.

மறுப்பாக தலையசைத்த நாதன், “தேவை இல்லாத எதிர்பார்ப்புக்களை வளர்த்துட்டிருக்க சரஸு நீ!அப்பறம் ஏமாற்றம் தான் மிஞ்சும்”என்றார் நிதர்சனத்தை சொல்லும் விதமாக.

“நீங்க எப்போ தான் நல்லதா சொல்லிருக்கீங்க!இப்ப சொல்ல.? ப்ச்,நாம அடுத்த வாரம் சந்திரா வீட்டுக்குப் போய் பேசுவோங்க! நாமளா போய் பேசுவோம்னு எதிர் பார்க்கறாங்க போல” என்றவரிடம்,

“என்னவோ பண்ணு!ஆனா என்னைய இதுல இழுக்காதே” என்றார் அதிருப்தியாய்.

தூக்கத்தை தொடர்ந்த கணவனை பார்த்திருந்த சரஸ்வதியின் மனதில் பாரமேறிக் கொண்டது.

****************

“சிவா நீயாவது அவன் கிட்ட சொல்லி புரிய வையேண்டா..! கல்யாணமே வேண்டான்னு நிக்கிறான்”வருத்தமாய் கூறினார் அமரேசன்.

நண்பனின் தந்தையை அப்போதைக்கு சமாதானம் செய்யும் நோக்கத்துடன்,

“அவன் கல்யாணமே வேணான்னு சொல்லலப்பா!இப்போதைக்கு வேணான்னு தான் சொல்றான்” என்றான் சிவகுமரன்.

“என்னவோ போங்கடா!அவன் அவனாவே இல்ல. ரொம்ப உடைஞ்சி தெரியராண்டா. கஷ்டமா இருக்கு”என்றவர் நெஞ்சை நீவிக் கொண்டார்.

“ப்பா!சரியாகிடுவான் ப்பா. அவன் வலியை நம்மளால வாங்கிக்க தான் முடியாது. பொறுத்து போகலாம் ப்பா!நான் பேசிக்கிறேன். நீங்க உங்களையே வருத்திக்காதீங்க” என்றவன் கலக்கமாய் பார்த்தவரை அணைத்து விடுவித்தான்.

வருத்தமாய் புன்னகைத்தவர், “தோளுக்கு மேல வளந்தவனை திட்டக் கூட முடியல.இன்னும் எத்தனை நாளைக்கு அதையே நினைச்சிட்டு இருக்கப் போறான்”என்றார்.

“எல்லாம் சரியாகிடும் பா!எப்படியும் இந்த வருசத்துக்குள்ள அவனை கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சிடலாம்” என நம்பிக்கை கொடுத்தவன்,

முகம் முழுக்க தாடியுடன்,மென் சோகத்தை வெளிக்காட்டும் கண்களை கூலர்ஸ் மறைத்திருக்க ட்ராக் பேண்டும், ஜெர்சியும் அணிந்த படி கையில் பேட்டுடன் அவ்விடம் வந்த நண்பனை ஏறிட்டான் சிவா.

“சிவா”என அழைத்தவனிடம் பேட்டை வாங்கிக் கொண்டவன் வெளியில் சென்று விட,தன்னையே பார்த்திருந்த தந்தையிடம்,

“ப்பா!என்னப்பா அப்படி பார்க்கறீங்க? ம்ம்.. புரியது,எதுக்கு பார்க்கறீங்கன்னு!டைமுக்கு வந்துடுவேன் பா..ராத்திரி இருட்டிறதுக்குள்ள வீட்டுக்கு வந்துடுன்னு சொல்லியே இன்னும் என்னை சின்னப் பையன் மாதிரி ட்ரீட் பண்றீங்க..”என்று போலியாய் அலுத்துக் கொண்டான் கீர்த்தி வாசன்.

கண்களை எட்டாத புன்னகையை உதிர்த்தார் அமரேசன்.

“அப்பா சொல்ற எல்லாத்தையும் கேட்டுக்குவ.. ஆனா ஒன்னைத் தவிர!”என்றார் மனதில் உள்ளதை மறைக்காமல்.

“ப்ச்,ப்பாஆஆ!”என நெடு மூச்செரிந்தவன்,

“போயிட்டு வரேன் ப்பா!”என்று தலையசைத்து விட்டு வெளியேறி விட, செல்பவனையே கவலையாய் பார்த்திருந்தார் அமரேசன்.

கீர்த்தி வாசன்! பெயருக்கு ஏற்றது போலவே உருவத்தில் மட்டுமன்றி குணத்திலும் உயர்ந்தவன். மகனுக்கு இந்தப் பெயர் சூட்டியதை நினைத்து அமரேசன் பெருமைப் பட்டுக் கொள்ளாத நாளே இல்லை.

வயது முப்பதை எட்டி விடும் ஆண்மகனானவன் இதுவரை தந்தை சொல் தட்டாதவன்! அப்படிப்பட்டவன் திருமணத்திற்கு மாத்திரம் ஒத்துக் கொள்ளாதது பெரும் வருத்தத்தை அளித்தது அமரேசனுக்கு.

அனைத்தையும் கேட்பவன்! திருமணத்தை மறுக்க காரணம் காதல் தோல்வியன்றி வேறு என்னவாக இருக்கும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!