Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இலக்கணம் பெண்மையே

இலக்கணம் பெண்மையே!… அத்தியாயம் 28

இலக்கணம் பெண்மையே!…

  அத்தியாயம் 28

         நெற்றி பொட்டு விண் என்று வலிக்க, அழுத்தி பிடித்தாள் விசாலாட்சி. அழுகை வரும் போல இருந்தது, முயன்று அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்தாள். தேவிக்கு ஏதேனும் நியாயம் செய்து விட வேண்டும் என்று மனம் துடித்தது. தன் நிழலில் நிற்க வேண்டாம், திறமை மிக்க பெண் தனித்து தெரியட்டும்.

         சாலா வைத்திருக்கும் கடைக்கு சற்று தள்ளி ஒரு கடை காலியாக இருந்தது. சாலா கடை அளவுக்கு பெரியது எல்லாம் இல்லை. ஒரு பெரிய அறை மட்டும் தான் வாடகைக்கு இருந்தது. அது போதும், தேவிக்கு மேற்படி துணி வகை எல்லாம் தெரியாது. சேலை வகைகள் மட்டும் தான் அலசுவார். அதனால் சேலை வகைகளை மட்டுமே விற்பனை படுத்த முடிவு செய்தாள். ஆரம்பித்து விடுவோம், மேற்கொண்டு தேவி சாமர்த்தியம்.



Advertisement

          அந்த வேலையை பார்க்கவே சாலாக்கு நேரம் போத வில்லை. புது கடையில் ஓரளவு துணி வகை வேணும். அது எல்லாம் தேவி கை வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதால் தேவிக்கும் வேலை நிமிர்ந்தது. முதலில் தனியே கடை வைக்க தேவிக்கு தயக்கம் தான். ஆனால், சாரு பாலாவிடம் பேசிய பின், இனி தனக்கு என்று தனி பாதையில் நிற்க விரும்பினாள். நம்மால் முடியுமா என்பது போய் தேவியும் நிறைய கற்க ஆரம்பித்தாள்.

           பெண்கள் பலரும் சுய தொழிலில் சாதிப்பதை பார்த்து ஒரு உத்வேகம். தனக்கும் திறமை இருக்கு, தன்னால் முடியும் என்ற நம்பிக்கை வளர்ந்தது. பிள்ளை இல்லை, புருசன் இல்லை தனக்கு எதுக்கு வருமானம் என்றெல்லாம் யோசிக்காமல் சாலாவின் யோசனைக்கு ஈடு கொடுத்தாள்.

       விசாலாட்சி வீட்டில் சமையலுக்கு என்று ஒரு பெண்ணை நியமித்து கொண்டாள். தேவி இருந்த வரை வேலை அதிகம் இல்லை. இப்போது ஃபார் கிவ் மீ என்ற பலகையை தூக்கி கொண்டு பாவமாக ஒருத்தன் உட்கார்ந்து இருக்கான். அவனை சுற்றி பாவம் பார்க்க ஒரு கூட்டம் இருக்கு, தலைக்கு மேல் கிடக்கும் வேலையில் இதையெல்லாம் கவனிக்க பொறுமை இல்லை. அதனால் வீட்டு வேலைக்கு ஆள் வைத்து கொண்டாள்.

Advertisement

          அன்று இரவு வீட்டினுள் நுழையும் போதே கண்டது. இரு பக்கமும் பிள்ளைகளை அமர்த்தி கொண்டு பேசி கொண்டு இருந்த கணவனை தான். முன்பென்றால் இந்த காட்சியை பார்த்து உப்பு, மிளகாய் வைத்து சுத்தி போடுவாள். இன்று பார்க்கும் போது எரிச்சல் தான் வந்தது.

Advertisement

    பிள்ளைகளை கண்டிக்க முடியவில்லை. அப்பா மீது கோபம், அப்பா தப்பு, அப்பா கூட சண்டை என்று இருந்த பிள்ளைகள், அப்பாவே இல்லாமல் போய் விட்டால் என்ற எண்ணம் பயத்தை கொடுத்தது போல… காணாமல் போக வேண்டியவன் கண் முன் வந்ததால், ஒரே தாவாக பிள்ளைகள் அப்பா பக்கம் தாவி கொண்டார்கள்.

         இதில் மாமியார் வேறு தினமும் அரை மணி நேரம் பேரன், பேத்தியிடம் “ உங்க அப்பா எம்புட்டு கஷ்ட பட்டான் தெரியுமா? ஒத்த பொண்ணுன்னு நீ கேட்டது எல்லாம் வாங்கி தருவான். அவன் கவர்மெண்ட் ஸ்கூல்ல தான் படிச்சான். உங்களுக்கு லட்சமா கற்றான். நீங்க பார்த்து கேட்டது எல்லாம் வாங்கி கொடுத்தான்…” என்று தந்தையாக பிள்ளைகளுக்கு செய்ததை மிகை படுத்தி ஊதி கொண்டு இருந்தார்.

     நமக்கு அப்பா நல்ல அப்பாவாக தானே இருந்தார் என்று அஞ்சு நினைக்க தொடங்கி விட்டாள். அஜைக்கு தாய் வலி ஓரளவு புரிந்தாலும், அப்பா இல்லாமல் போனால், அப்பா என்று கோபமாக கூட யாரை கூப்பிட. முழுதாக அல்லாமல் ஓரளவு ஏற்க தொடங்கினான்.

Advertisement

         பாத்ரூம் போய் முகம் கழுவ போனாவள், சுவற்றில் சாய்ந்து மெளன கண்ணீர் விட்டாள். இவளும் தானே பிள்ளைகள் வளர்க்க பாடு பட்டாள். இந்த நொண்டி காலை இழுத்து கொண்டு வீடு வீடாக சென்று துணி விற்று தான் பிள்ளைகளை காப்பாற்றினாள். அவள் நகையை வைத்து தான் பிள்ளைகளுக்கு ஃபீஸ் கட்டினாள். முடிந்தளவு நல்ல சாப்பாடு கொடுக்க, தன் தேவைகளை கூட குறைத்தாள். இன்றும் அந்த நொண்டி காலை இழுத்து கொண்டு ஓடுகிறாள். இனிமேலும் ஓடுவாள். அது யாருக்காக?… பெற்ற பிள்ளைகளுக்காக தான்.

       ஆனால் சொல்ல மாட்டாள். தான் பெற்ற பிள்ளைகளுக்கு செய்ததை ஒரு நாளும் சொல்லி காட்ட மாட்டாள். பிள்ளைகளுக்காக என்று ஓடும் தாய், அவர்களுக்கு வாங்கி கொடுத்ததை சொல்லி காட்டி தன் பக்கம் வளைக்க முடியுமா!

          அஜய், அஞ்சனா இருவரும் அவள் பெற்ற பிள்ளைகள். கணவனின் துரோகத்தை கடக்க தெரியாமல் சாவு தான் வழி என்று இருக்கும் போது, பிள்ளைகள் முகம் பார்த்து தான் மீண்டு வந்தாள். விசாலாட்சி தொடங்கிய ஓட்டமும் அவர்களால் தான். தன் அக்கா பிள்ளைகள் மாதிரி தன் பிள்ளைகளும் நாதியத்து போய் விடுமோ என்ற பயம் தான் சாலாவை வைராக்கியமாக ஓட வைத்தது.

              கட்டிய கணவனிடம் நியாயம் கேட்ட மாதிரி பெற்ற பிள்ளைகளிடம் என்ன நியாயம் கேட்க. தந்தை தவறு செய்து விட்டார், தாய் கஷ்ட படுகிறார். அவ்வளவு தான் அவர்கள் அறிவார்கள். அதை மீறி பெற்றவள் வலியை அவள் நிலையில் நின்று உணர முடியாது. அதற்கு தக்க வயதும், பக்குவமும் கிடையாது. எனக்கு நியாயம் செய்யுங்கள், உங்கள் தந்தையை ஒதுக்கி வையுங்கள் என்று ஒரு நாளும் சாலா பிள்ளைகளை பாடு படுத்த போவதில்லை. நான் கஷ்ட பட்டாலும் என் பிள்ளைகள் நன்றாக வாழட்டும்.

    நாப்பது வயதில் தான் அனுபவிக்கும் வலியை, பதினைந்து வயது மகளிடம் சொல்லி நீதி கேட்க முடியுமா?… இளமையின் முதல் பருவத்தில் நிற்கும் மகனுக்கு, வாழ்க்கை துணையின் துரோகத்தை அறிய தான் இயலுமா?… முகத்தில் நன்றாக நீரை அடித்து, அடித்து கழுவினாள். அழுத தடம் தெரிய கூடாது. அஞ்சுக்கு தெரியாது, அஜய் கண்டு கொள்வான். கஷ்டபடுவான், பாவம் பிள்ளை.

        சாலா வெளியே வர, “உங்களுக்காக தான்ம்மா நாங்க எல்லாம் சாப்பிடாம காத்து இருக்கோம்…” அஜய் முன் வந்து சொல்ல, சாலா முகத்தில் சிரிப்பு.

     சமாதான முயற்சி அல்லது ஈடு செய்யும் முயற்சி. நான் பெத்த பிள்ளையாட நீ, உன்னிடம் நிச்சயம் நான் ஏமாறுவேன்…

       அம்மாவின் சிரித்த முகம், அஜெய்க்கு பெருத்த சந்தோசம். நால்வரும் ஒன்றாக அமர்ந்து உண்டார்கள். அஜய் சாலா பக்கம் அமர, அஞ்சு தந்தை பக்கம் அமர்ந்தாள். கடந்த மூன்று வருடத்தை கடக்க நினைத்தார்கள். சாலா இரவு சாப்பாடு என்ன என்று பார்க்க, சாதம் இருந்தது. ராத்திரி சாப்பாடு யாருக்கும் ஆகாதே. அடுத்து என்ன கோழி குழம்பு, மத்தி மீன், கருவாட்டு தொக்கு என்று எல்லாம் சாலாக்கு பிடித்த ஐட்டம் தான்.

          மகனை, மகளை பார்த்தாள். தனக்கு தெரிந்த வகையில் பிள்ளைகள் தாய்க்கு ஐஸ் வைக்கிறார்கள். ஒன்றும் சொல்லாமல் சாப்பாடு போட்டாள். அஞ்சு ரொம்ப உற்சாகமாக இருந்தாள். பாட்டு கூட பாடினாள்.

     சாலா ஒரு பெருமூச்சு விட்டு கொண்டாள். காலத்திற்கும் துணை நிற்கும் என்ற உறவின் துரோகத்தை, சிறு பிள்ளைகளால் உணர முடியாது. அவள், பிரகாஷ் முகத்தை கூட பார்க்கவில்லை. அவனை பார்த்தால் பிபி ஏறும், குடிக்கும் நீர் கூட தொண்டையில் இறங்காது. பிள்ளைகள் மீது மட்டுமே தன் கவனத்தை வைத்தாள்.

    சாலா உறங்க போகும் முன் தேவியிடம் இருந்து அழைப்பு வந்தது.

   “என்ன மதினி…”

  “சாலா, கொஞ்சம் வீடு வரைக்கும் வர முடியுமா?..” தொண்டையடைக்க கேட்டாள்.

   “என்ன மதினி, என்னாச்சு…” என்றவளுக்கு தேவி அழுகை மட்டும் புரிய,

   அடுத்த தெரு என்பதால் வேகமாக ஓடி வந்தாள். வீட்டின் ஹாலில் குமரன் அமர்ந்து இருந்தான். உடன் பிறந்த அண்ணன் தான். ஆனாலும், கொல்லும் வெறியே வந்தது.

   “நீ எதுக்கு இங்க வந்த, அதுவும் ராத்திரி…”

  “ம்ச்… என்ன பேச்சு சாலா. மாப்பிள்ளை என்ன பண்றாங்க…”

  “ஆமா பெரிய மாப்பிள்ளை. உனக்கு, உம் மாப்பிள்ளைக்கு எல்லாம் சிலை தான் வைக்கணும்…”

“தேவிய பார்க்க வந்தேன்…”

  “அப்போ சித்ரா?…”

 “அவளும் எம் பொண்டாட்டி தான்.”

 “வெட்கமா இல்லை…”

  “அதை உன்னை பெத்தவங்களை பார்த்து கேளு…” என்றான் தெனாவெட்டாக.

  குடித்து விட்டு வந்து இருக்கிறான் பரதேசி. முதலில் குடிப்பவர்களுடன் வாக்கு வாதமே செய்ய கூடாது. இன்று வேற வழி இல்லை. குடித்து விட்டு தெருவில் நின்று, காச்மூச் என்று கத்தினால். மான, அவமானத்திற்கு பயந்து பெண் வாயை மூடி கொள்வாள். அப்படி மிரட்டி பார்க்க தான் குடித்து விட்டு வந்து இருக்கிறான்.

  அப்போ குமரன் அறிந்து கொண்டான். தேவி இனி சுயமாக தான் நிற்பாள். மனைவியாக ஒரு போதும் அவன் வீட்டிற்க்கு வர போவதில்லை என்று… அந்த கோபம் தான். தேவி வெளிய வரவே இல்லை. குமரன் வாய்க்கு சாலா சமாளித்து கொண்டு இருந்தாள்.

   பொதுவாக ஆண்கள் உறவு நிலைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அந்த வகையில் குமரன் குடித்து இருந்தாலும் எதிரில் இருப்பது தங்கை எனும் போது வார்த்தையில் வரைமுறை இருக்கும். அதே மனைவி எனும் போது செயலில் கூட வரைமுறை இருக்காது.

    தேவி அறையை விட்டு வெளிவரவே இல்லை. குமரன் வாயும் அடங்க வில்லை.

  “குமரா, உனக்கு மூணு பிள்ளைக இருக்கு. சித்ராவ யோசிச்சு பாரு… வேணாம்னு விலகி போற உறவா, ஒட்டி வைக்க நினைக்காத…”

 “எல்லாம் தெரிஞ்சு தான தேவி சரின்னு சொன்னா. இது என் தேவியே இல்லை. அவ தங்கச்சிய தான நான் கட்டி இருக்கேன். இவளும் முன்ன நின்னு தான் நடத்தி வச்சா. இத்தனை வருசம் ஒழுங்கா தான இருந்தா… இப்போ மட்டும் என்னவாம்.”

  “இப்போ தான் புத்தி வந்து இருக்கு போல…” வெறுப்பாக சாலா சொல்ல.

  “இல்லை சாலா, உங்க மதினிக்கு விவரம் வந்து இருக்கு. அவ சேலை கட்ட பார்த்த தான. அவ கிட்ட நிறைய மாற்றம்…”

 “என்ன சொல்ல வார…”

  “அவளுக்கு வேற ஆசை வந்துருச்சு போல… கட்டுன புருசன் கண்ணுக்கே தெரியலை.”

 “வெளிய போடா குடிகார பயலே…” கொதித்து விட்டாள் சாலா.

  “நெசம் தான் அவளுக்கு வேற என்னவோ, யார் சப்போட்டோ. பேங்க்கு தனியா போக பயப்படுறவ, தனியா கடை வச்சு, தனியா வீடு பார்த்து வாழ போறேன்னு சொன்னா என்னை அர்த்தம்…” என்று கத்த,

   பக்கத்தில் இருந்த சொம்பை அவன் மேலயே விட்டு எரிந்தாள் சாலா.

  “விசாலம், உங்க அண்ணன் ரெண்டு கல்யாணம் பண்ணாலும் உத்தமன். ரெண்டு பொண்டாட்டியும் சரி சமமா நெஞ்சுல வச்சு இருக்கேன். ரெண்டு பேருக்கும் உண்மையா இருக்கேன். எனக்கு துரோகம் பண்ணிட்டா உங்க மதினி…” என்று புலம்பியபடி தான் கண் அசந்தான்.

   விடிய விடிய முழித்து நின்றது சாலாவும், தேவியும் தான். குமரன் உறங்கிய பின்னும் தேவியை விட்டு நகர சாலாக்கு விருப்பம் இல்லை.

    காலையில் அரைகுறையாக எழுந்தவன், திரும்ப ஒரு அக்கபோரை கூட்டி தான் நடையை கட்டினான். அங்கு மூன்று பிள்ளைகள் இருக்கே, தொழிலும் இருக்க கிளம்பி விட்டான்.

     சாலா, தேவி முகம் தான் பார்த்து நின்றாள்.

 “என்ன பண்ண போறீங்க மதினி…”

  “நீயே சொல்லு, என்ன பண்ணலாம்ன்னு?…”

  “நீங்க தான் முடிவு எடுக்கணும்…”

 “சாருபாலா ஒரு லாயர் அட்ரஸ் கொடுத்தாங்க, போய் பார்க்கவா…” என்று தேவி கேட்க.

  “சரி போய் பாருங்க மதினி. அது சாரு புருசன் தான். ரொம்ப நல்ல மாதிரி…” என்று சாலா சொன்னாலும், முடிவை கேட்க வில்லை. அது தேவியே எடுக்கட்டும் என்று விட்டு விட்டாள்.

    லாயர் வீர நெடுஞ்செழியன். அவன் முன் அமர்ந்து இருந்தாள் தேவி. அவளுக்கு கொஞ்சம் அதிர்ச்சி. அப்படியே சாருக்கு எதிர்பதமாக, ஒல்லி உடல்வாகில் கல்லூரி பையன் போல இருந்தான்.

  “என்ன வேணும் சிஸ்டர்…” என்று வீரா கேட்க.

   “சாரு…” என்று இழுத்தாள் தேவி.

  “அவங்க இருக்கட்டும். உங்க தேவையை நீங்க சொல்லுங்க…”

   நிமிர்ந்து அமர்ந்த தேவி, “விவாகரத்து வேணும் சார்…”

  “காரணம்…”

ஒரு பெருமூச்சு விட்டு எல்லாவற்றையும் கொட்டினாள்.

  “பார்டா, அவனவன் ஒத்த பொண்டாட்டியை சமாளிக்க முடியாம ஓடி ஒளியிரான். இவன் யார்டா ரெண்டு பொண்டாட்டியும் வச்சு பதினஞ்சு வருசம் சமாளிச்சு இருக்கான். எனக்கே அவனை பார்க்கணும் போல இருக்கே…” என்ற வீரா, தேவியின் முகத்தை பார்த்து,

  “சும்மா, ஜோக்கு சிஸ்டர். இத்தனை வருசம் இல்லாமா, இப்போ ஏன் இந்த முடிவு…”

  “பெருசா படிப்பறிவு இல்லை. சுயமா நிக்கிற துணிவும் இல்லை. தனியா போராட தைரியமும் இல்லை. நாம நிக்குற இடம் தப்புன்னு தெளிவும் இல்லை…”

  “உங்க வயசு சிஸ்டர்?…”

  புரியாமல் பார்த்தவள், “நாற்பத்தி ஐந்து”

   “வாவ், இந்த வயசுலையாவது தெளிவு வந்துச்சே. நிறைய பேரு இது தான் வாழ்க்கைன்னு வாழ்ந்து முடிச்சு போய்ட்டாங்க…” சாதரணமாக சொன்னான் வீரா.

  தேவி அமைதியாக இருக்க,

   “உங்க கணவர் கூட தனியா எட்டு வருசம் வாழ்ந்து இருக்கீங்க. அத்தோட பாதிப்பு இருக்கும். அதையும் தாண்டி விவாகரத்து வேணுமா?…”

   “நிச்சயம் வேணும். ஏன்னா நிகழ்காலம் மாத்த முடியாது. எப்போ என் புருசன் வாழ்க்கையில வேற ஒரு பொண்ணு வந்ததோ, அப்பவே நான் ஒதுங்கி போயிருக்கணும். அன்னைக்கு நான் அவ்வளவு விவரம் இல்லை…”

  “எல்லாரும் சொல்லும் போது ஈசியா தான் தெரிஞ்சுச்சு. ஆனா, நிஜம் வேற. பங்கு போடவோ, விட்டு கொடுக்கவோ முடியாத ஒரு உறவு புருசன், பொண்டாட்டி உறவு…” தெளிவாக தேவி சொல்ல.

   “அப்ப விட்டு கொடுக்காம இருக்கலாம் தானே…” எதிர் கேள்வி வந்தது.

   “அது முடியாது. என்னையும் தாண்டி அவருக்கு ஒரு குடும்பம் இருக்கு. அங்க நான் ஒன்னுமே இல்லை. எனக்கு எதிரே நிக்குறது என் சொந்த தங்கச்சி. என்னால தான் அவ வாழ்க்கை உள்ள வந்தது. அதுக்கு நான் தான் பொறுப்பு…” என்றவள், பெருகும் கண்ணீரை அடக்கி கொண்டு,

   “அத்தோடு எனக்கு குழந்தை இல்லை. மூணு பிள்ளையோடு நிக்கிற அவ பக்கம் தான் நியாயம் பேசும். புருசன், பொண்டாட்டி, மூணு பிள்ளைகன்னு அவங்க குடும்பமா நிக்கும் போது, நான்…” தடுமாறியவள்,

   “விடுங்க பிளீஸ், எனக்கு விவாகரத்து தான் வேணும்…” பிடிவாதமாக தேவி சொல்ல,

  “உங்க வலி புரியுது சிஸ்டர். ஆனா, நியாயமும், நிதர்சனமும் வேற வேற. ரெண்டும் ஒரே தட்டுல நிக்காது…” என்றான் விரா.

   “என்ன சொல்றீங்க… எனக்கு புரியலை”

  “நாப்பது வயசுகாரங்க எல்லாம் மெண்டல் புடிச்சவங்க…” என்றான் நக்கல் குரலில்.

   “என்ன…” என்று தேவி அதிர்ந்து பார்க்க.

  “நிஜமா! என்னடா வாழ்க்கை இதுன்னு நாப்பத்தி அஞ்சை கடக்கும் போது தான் தோணும்…”

  “புரியலையா?… தாம்பத்திய வாழ்க்கையோட ஆரம்பம் பிரைவேட் பஸ்ல போற மாதிரி. வெளிய விக்கிறது தேங்காயா, மாங்காயான்னு பாக்குற முந்தி ஓடி போகும். கல்யாணம் முடிஞ்ச மாதிரி இருக்கும் ஒரு புள்ளை, அடுத்த மூணு வருசத்துல ரெண்டாவது புள்ளை. வீடு வாங்கணும், காரு வாங்கணும், படிக்க வைக்கணும், புரொமோஷன் வரணும், நகை வாங்கணும்ன்னு என்னடா வாழ்ற அப்படின்னு நின்னு திரும்பி பார்க்க கூட நமக்கு நேரம் இருக்காது. யாருக்கு இந்த ஓட்டம்ன்னு கூட தெரியாம ஓடி திரிவோம்…”

  “அதுவே ஐம்பது வயதுக்கு மேல வாழ்க்கை. லோக்கல் பஸ்ல ஊருக்கு போற மாதிரி. ஓடுற மாதிரி இருக்கும் ஒன்னும் நகராது. பேசாம நாம இறங்கி போய் தள்ளலாமான்னு இருக்கும். காபி கேட்டா கூட கால் மணி நேரம் ஆகும். பத்து எட்டுல பஸ்சை புடிக்க ஓடுவோம். ஐம்பது வயசுக்கு மேல வீட்டை சுத்த அரைமணி நேரம் ஆகும். அது தான் மனுசன். ஆடி அடங்கும் உடம்படா இதுன்னு ஏன் சொன்னாங்க…”

 “உங்களை பயமுறுத்த இதையெல்லாம் சொல்லலை சிஸ்டர். எல்லாம் புரிஞ்சு ஒரு முடிவு எடுங்க. பேச்சு வழக்கில் ஒரு சொல்லு சொல்லுவாங்க கேட்டீங்களா!… தப்பு பண்ற, பின்னாடி அனுபவிப்பன்னு, அது ஏன்?… மனுசன் தளரும் போது வாழ்ற வாழ்க்கை நிறைய பாடம் சொல்லும்…”

  தேவிக்கு புரிந்தும் புரியாத நிலை தான்.

    லேசாக சிரித்தான் வீரா, “பொதுவா என் கிட்ட நாப்பத்தி அஞ்சு வயசுக்கு மேல விவாகரத்து கேட்டு யாரும் வர மாட்டாங்க. ஒரு நடுத்தர வயசுல துணை இழந்து தனியா நிக்குறது கொடுமை. நம்மளை எந்த கேட்டகிரிலையும் வைக்க மாட்டாங்க. முன்பக்க வயசுகாரங்க எளிதா விவாகரத்து எடுப்பாங்க. ஏன்னா, அடுத்து ஒரு வளமான எதிர்காலத்தை எதிர்பார்க்கலாம். ரொம்பவும் கஷ்டபட்டு அனுசரிச்சு, விட்டு கொடுத்து போகணும்ன்னு அவசிமில்லை…”

  “அதே போல முதுமை கண்ட பின்னாடியும் விவாகரத்து பத்தி யோசிக்க மாட்டாங்க. அப்போ அவங்களுக்கு அது தேவையும் இல்லை. யாரு முன்ன போவா, யாரு பின்ன போவான்னு தெரியாது. ஒருத்தருக்கொருத்தர் துணையா நின்னு கடந்துருவாங்க…”

  “ஆனா, இடையில நிக்கிறாங்க பாருங்க ஒரு குரூப். பாவ பட்டவங்க. அவங்களால எந்த பக்கமும் போக முடியாது, அந்த பக்கமும் போக முடியாது. இந்த பக்கமும் வர முடியாது. நிறைய யோசிப்பாங்க. இந்த வாழ்க்கையை விட்டு வெளியேறி போனா, இதுகப்புறம் ஒரு வாழ்க்கை சாத்தியமா? நம்மளால நிக்க முடியுமா? தனியா ஓட முடியுமா? பிள்ளைக வாழ்க்கை எண்ணாகும்? இவ்வளவு நாள் குடும்பம்ன்னு ஒன்னை காட்டிட்டு இதுகப்புறம் தனியா நிக்கும் போது பிள்ளைக தனியா போவாங்களே? வீடு, சொத்து, சேவிங் எல்லாம் எப்படி பிரிக்க? நாப்பத்தி ஐஞ்சு வயசுல தனியா வாழ்க்கை எப்படி இருக்கும்?…”

   “இந்த வயசுல கண்டிப்பா ஏதாவது ஒரு தொடர் வியாதி இருக்கும். அனுசரணை தேடும். மாத்திரை போட்டையா கேட்க ஆளு தேடும். வாழ்க்கை நீண்டதா இருக்கும். எப்பவேன, என்னவேன நடக்கும்ன்னு பயம் இருக்கும். சம்பந்த பட்ட ஆட்களோட பிள்ளைகளும் நிறைய பார்ப்பாங்க. அவங்களையும் தாக்கும். இது வந்து பிராக்ட்டிகல், இதுக்கு பயந்து தான் பாதி பேரு இந்த பக்கமே வர மாட்டாங்க…”

   தேவி இறுகி போய் வீராவை பார்க்க,

   “உங்களை பயமுறுத்தி பார்க்க சொல்லலை சிஸ்டர். நல்லா படிச்சு, நல்ல நிலையில் இருக்கவங்களுக்கும் மாற்றம் கிடையாது. நாம எல்லாம் குடும்பத்தை மையமா கொண்டு வாழ்றவாங்க. ரொம்ப ஈசியா அதை தாண்டி வர மாட்டோம். அது எல்லாத்தையும் விட…” சற்று தயங்கினான் வீரா.

  “கணவன், மனைவி உறவு உன்னதமானது. அதை உடைக்கிறது அவ்வளவு லேசானது இல்லை. உடைச்சு போட்டு வருந்தவும் கூடாது. நாளைக்கு உங்க தங்கச்சி கூட உங்க கணவர் சேர்ந்து நிக்கும் போது மனம் மருகி பார்க்க கூடாது. காத்து நிக்க உறவு இல்லை, தூக்கி பிடிக்க குடும்பம் இல்லை, தள்ளி போக பிள்ளையும் இல்லை. அப்படியிருக்க வாழ்க்கை ரொம்ப கொடியது. ஒரு நொடி நாம அவசரபட்டுடோமோன்னு நினைக்க கூடாது இல்லையா… நமக்கான வாழ்க்கை என்னன்னு ஒரு தெளிவு இருக்கணும். அதுல நிலையா நிக்கனும்…” என்று மேலும் விளக்கம் கொடுத்தான் வீரா.

   “எனக்காக என் கணவர் நிக்கல. நீங்க சொன்ன உன்னத உறவு, ரொம்ப சரியானது. அப்படிப்பட்ட உறவு எனக்கு கிடைக்கலையே. உங்க பேச்சு எனக்கு தெளிவா புரிந்தது. இவ்வளவு நாளும் இரட்டை வாழ்க்கை தான் வாழ்ந்தேன். அப்பவும் என் கணவரை நான் விரும்பினேன். இன்னைக்கு எல்லாம் தெரியும் போது வலிக்குது. என் கணவர் எனக்கு இல்லை அப்படின்னு, என்னை மாதிரி குடும்பத்தை அடிப்படையா கொண்ட பொண்ணுக்கு பெரிய வலி தான். ஆனாலும் என் புருசன் என் கண் முன்னாடியே… முடியலை வலிக்குது…”

  “இப்போவும் ரெண்டு தாரம் நம்ம பக்கம் நடக்குது தான். இது ஒன்னும் நமக்கு புதுசு இல்லை. அதெல்லாம் ஒத்துமையா வாழலாம், அப்படி சொல்லும் போது ஒன்னுமே தெரியலை. ஆனா, யார மாதிரி ஒரு குழந்தை வேணும்ன்னு எட்டு வருசம் தவம் இருந்தேனோ, அவரை மாதிரி ஒரு குழந்தை. ஆனா என் வயித்துல இல்லை. மசக்கையா இருக்கும் போது, பிள்ளை பெரும் போது, பேர் வைக்கும் போது, பிள்ளையை வளர்க்கும் போது எனக்கு என் புருசன் கிட்ட இருந்து எண்ணலாம் கவனிப்பு கிடைக்கணும்ன்னு ஆசைப்படேனோ, அதெல்லாம் நான் பார்க்க… முடியலை, பெருந்தன்மையா எடுத்துக்க முடியலை…”

   “வேணாம் சார். இந்த குடும்பத்துல இருந்தாலும் பின்னாடி ஒரு காலத்துல தனிமையை உணருவேன், மத்தவங்களுக்கு பாரமா இருப்பேன். அது எதுக்கு? சித்ராவும் பாவம். என்னோட வலி தான் அவளுக்கும்… பிள்ளைகளுக்கும் நல்ல எதிர்காலம் வேண்டும். நான் சுமந்து பெக்கல தான். ஆனா நான் தான் வளர்த்தேன். அவங்களுக்கு நல்ல வாழ்க்கை வேணும்…” தேவி தெளிவாக தான் இருந்தாள்.

   “தனியா நிக்கும் போது ரொம்ப எளிதா விமர்சிக்க படுவீங்க. உங்க ஒழுக்கம் கேள்வி குறியாகும். உங்க கணவரோட ரெண்டு கல்யாண வாழ்க்கை ஆறு பேருக்கு தப்பா தெரியலாம். உங்களுக்கு ஆதரவு கூடலாம். அதே, உங்க துணிவு நாலு பேருக்காவது தப்பா தோணும். அப்ப முதல்ல வராது உங்க நடத்தை தான். ஒரு பாதுகாப்பின்மை, எதிர்காலத்தை பற்றிய பயம், சாவை குறித்து விரக்தி, சமூக வேறுபாடுன்னு இருக்கு. இங்க புரட்சி பண்ற யாருக்கும் சிவப்பு கம்பளம் விரிக்க மாட்டாங்க…” வீரா விடுவதாயில்லை.

   விரக்தி சிரிப்பு தேவி முகத்தில், “காய்ச்ச மரம் தான் கல்லடி படும்ன்னு சொல்லுவாங்க. இது பட்ட மரம், நெறைய பார்த்தாச்சு…”

   “குமரன் இல்லாம போனா கூட நீங்க அவரை நெருங்க முடியாது…” இது கொஞ்சம் வலித்தது.

  “கண் நிறைக்க தாய் இருக்க, பிள்ளை இல்லாத எனக்கு, அவ பிள்ளை வேணும்ன்னு பங்கு போடுறதை விட, தாயில்லா பிள்ளைகளுக்க தாயா இருக்க தான் நினைக்கிறேன். அங்க யாரும் பங்கு போட முடியாது தான்ன…”

 “அப்ப, திருக்குமரன்…”

  “எந்தங்கச்சி புருசன்…”

  “அப்ப இந்தாங்க இதுல கையெழுத்து போடுங்க…” என்று ஒரு பேப்பரை நீட்ட.

   ஆச்சர்யமாக பார்த்தாள் தேவி.

  “நேத்தே சாரு மூலம் எல்லாம் வந்தாச்சு. சும்மா ஆழம் பார்த்தேன். ஏன்னா, வாழ்க்கைன்றது ரொம்ப சுலபம் கிடையாது. ஒரு கஷ்டத்துக்கு ஒரு சந்தோசம் வரும். அந்த சந்தோசமும் நிரந்தரம் கிடையாது, அப்புறம் வர கஷ்டமும் நிரந்தரம் கிடையாது…”

  “நம்ம கிட்ட வர பாதி பேரு, நாலு பேரு சொல்ற விமர்சனத்தை நல்லதுன்னு நினைச்சு எடு நோட்டீசை, புடி விவாகரத்தைன்னு ஓடி போறாங்க. காலம் கடந்து நிதானம் வரும் போது விட்ட வாழ்க்கையும் பிடிக்க முடியலை, ஓடுற வாழ்க்கையும் தொடர முடியல, நிக்கிறதையும் நகர்த்த முடியாலன்னு கஸ்டபடுறவங்க அதிகம். அதான் உங்க தெளிவை யோதிச்சேன்…”

சின்ன சிரிப்பில் கையெழுத்து போட்டு தேவி தனக்கும், குமரனுக்குமான பந்தத்தை முறித்து கொண்டாள்.

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!