Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மைவிழி ஜாடைகள்.

மைவிழி ஜாடைகள் – 2(b)

மைவிழி – 2(b)

அம் மருத்துவமனை வளாகத்தில் கலைந்த தலையும்,கலங்கும் விழிகளுமாய் தளர்ந்து போய் அமர்ந்திருந்தான் கீர்த்தி வாசன்.



Advertisement

காலச் சக்கரம் கிடைத்தால் கடந்து சென்ற நொடிகளை மாற்றும் மனநிலையில் இருந்தான் அவன்! அதி வேகமாய் துடித்துக் கொண்டிருந்த இதயம் வேறு, ‘நீ அப்படி பேசியிருக்க கூடாது வாசா!’ எனும் வசனத்தையே மீட்டிக் கொண்டிருக்க நடுங்கும் விரல்களால் முகத்தை மூடிக் கொண்டான் வாசன்.

அழுகையில் முதுகு குழுங்கியது. ‘இதோ இப்படித்தானே அன்றும் தனியாய் அழுதான்’ என பாவமாய் தங்களுக்குள் பேசிக் கொண்ட மருத்துவமனைச் சுவர்களின் குரல்கள் நிச்சயமாய் எவருக்கும் கேட்டிருக்க வாய்ப்பில்லை தான்!

Advertisement

Advertisement

அவன் அழுகையின் ஆயுட் காலம் ஐந்து நிமிடங்களாக இருக்க, மெதுவாய் தன் தோள் தொட்ட ஸ்பரிசத்தை உணர்ந்து தலை நிமிர்த்தி பார்த்தான்.

அடையாளம் தெரியாத இரு பெண்கள் நின்று கொண்டிருக்க, இவன் தோள் தொட்டவளே,

Advertisement

“உங்கள ரொம்ப நேரமா டாக்டர் கூப்பிட்டிருக்காங் சார்” எனக் கூறி கை காட்ட, பக்கத்தில் இருந்தவள், “ப்ச், தேவையில்லாத வேலை பார்க்காம வா யமுனா!” என மென் குரலில் அதட்டி அவசரப்படுத்திக் கொண்டிருந்தாள்.

அதட்டியவளின் குரல் வாசனுக்கு கேட்டிருக்காத பட்சத்தில், மருத்துவர் பக்கமிருந்த பார்வையை திருப்பியவன்,அழுத விழிகளைத் துடைக்கத் தோன்றாது, அடைத்த தொண்யை சரி செய்தபடி நன்றி நவில முயல்கையில் “டேய் கீர்த்தி!”என அழைத்த படி அணைத்துக் கொண்ட சிவாவின் குரல் தடை செய்ய, அதற்கிடையில் யமுனாவை இழுத்துக் கொண்டு அங்கிருந்து விறு விறுவென நடந்து சென்றாள் வேதவி.

“கை வலிக்குது, மெதுவாப் போடி” என்ற யமுனாவின் கத்தலுக்கு,

“யார் டி உனக்கு தெரியாதவங்களுக்கெல்லாம் உதவி செய்யச் சொன்னா!” எனும் வேதவியின் பதில் சூடாய் கிடைத்தது.

“அதுக்குன்னு அழுதுட்டிருக்கவரை பார்த்து அப்படியே போகச் சொல்றியா.?டோன்ட் பிஎ செல்ஃபிஷ் வேதா!” காரமாய்த் தான் சொன்னாள் யமுனாவும்.

“எம்மா பரதேவதை! நீ யார்க்கு வேணாலும் ஹெல்ப் பண்ணு. ஆனா எனக்கே ரத்த ஆறா ஓடிட்டிருக்கறப்ப, மத்தவங்களுக்கு உதவி பண்ற பெரிய மனசு படைச்சவ நான் இல்ல. யெஸ் ஐம் எ செல்ஃபிஷ்”என்றவள் முழங்கையை திருப்பிப் பார்க்க முழுவதுமாய் உராய்ந்த காயத்துடன் மணிக்கட்டை தொட்டிருந்தது வேதவியின் ரத்தம்.

“ப்ச்!”என சலித்துக் கொண்டவள்,

“சாரி வேதா!”என்றவளின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டதாய் தெரியவில்லை. முதலில் காதிலே வாங்கிக் கொண்டாளோ என்னவோ?

நடையில் வேகத்தைக் கூட்டி யமுனாவை விட்டுவிட்டு முன்னால் சென்றிருந்தாள் வேதவி.

“இவளைப் பத்தி தெரிஞ்சிருந்தும் இவ கூட வந்தேன் பாரு” நெற்றியில் அறைந்த படி முணுமுணுத்தவள்,

“வேதா!நில்லுடி”என்று சத்தமிட்டழைத்தவாறு ஓடினாள்.

இவர்களின் பேச்சு சிவாவிற்கு தெளிவாய் கேட்டிருந்தது. கீர்த்தி வாசனுக்கு காதில் விழுந்தாலும் அவ்வளவாய் கருத்தில் பதிந்திருக்கவில்லை.

நெஞ்சைப் பிடித்துக்கொண்டு மயங்கி சரிந்த தந்தையின் உடல் நிலை பற்றிய கவலையே அவன் மனதை அழுத்திக் கொண்டிருந்தது.

மருத்துவரைப் பார்த்து விட்டு வந்தவர்கள் அமரேசன் அட்மிட் செய்யப்படிருந்த அறை நோக்கி சென்றனர். சரியான நேரத்திற்கு அமரேசனை கொண்டு வந்ததனால் பயப்படும் படி பெரிதாய் எதுவுமில்லை. இருப்பினும்,

‘மைல்ட் ஹார்ட் அட்டெக்! கிரிட்டிகல் ஸ்டேஜ்ஜ தாண்டிட்டார்னாலும், நீங்க கொஞ்சம் ஸ்மூத்தா அவரை ஹேண்டில் செய்திருக்கணும் கீர்த்தி’ என்ற டாக்டரின் கூற்று குற்ற உணர்ச்சியை ஆழமாய் விதைத்து விட்டது கீர்த்தி வாசனுக்கு.

தந்தை அனுமதிக்கப்படிருந்த அறைவாசலில் நின்று, “சிவா”என நடுங்கிய குரலில் நண்பனை அழைத்தான் வாசன்.

தோளணைத்து ஆறுதலாய் அழுத்திக் கொடுத்தவனுக்கு கீர்த்தியைப் பார்க்கையில் மனதிறங்கியது.

“நான் அப்பா கிட்ட அப்படி பேசிருக்க கூடாதுடா சிவா! ப்ச்,மடையன் மாதிரி பேசிட்டேன். இப்படியாகும் நினைக்கவே இல்லடா.. சரியாயிடுவார் ல?” என்றவனின் தோற்றம் சிவாவிற்கு இதற்கு முன் இதே இடத்தில் மடிந்து கதறிய வாசனை நினைவு படுத்தியது.

‘மச்சா அவ எங்கிட்ட வந்துடுவால்ல?’

‘சரியாயிடும்னு சொல்லு மச்சா’

‘இதெல்லாம் வெறும் கனவுடா வாசான்னு சொல்லுடா சிவா!’ என்று அழுதானே..! இன்றும் அதே தோற்றத்தில்.

இருட்டில் தொலைந்து போய் திக்குத் தடுமாறும் வழி தெரியா சிறுவனைப் போலான தோற்றம். எப்போதோ வாழ்க்கையை வெறுத்து விட்டிருந்தவன், இப்போது பற்று கோலாய்ப் பிடித்திருப்பது அவனுக்கானவர்களைத் தானே. 

“அப்பா சரியாயிடுவார்டா கீர்த்தி!”என்றான் சிவா, ஆறுதலாக அவன் கரங்களை தட்டிக் கொடுத்தபடி.

நண்பனை நிமிர்ந்து நோக்கியவன், “அன்னைக்கும் நீ இதையே சொல்லிருக்கலாம் டா”என்றான், விரக்தியாய் சிரித்த படி.

“கீர்த்தி!”

“ஸாரி டா மச்சா!”என்றவன் கண்களையும், முகத்தையும் அழுத்தமாய் துடைத்துக் கொண்டு அறையினுள் நுழைய விழித்திருந்தார் அமரேசன்.

பாவமாய் தன்னைத் திரும்பிப் பார்த்தவனின் முதுகில் கை வைத்து தள்ளி விட்ட சிவா,

“போடா போய்ப் பேசு!” என்றான்.

தந்தை அருகில் வந்துவிட்டவன், தவிப்பாய் ஏறி இறங்கும் ஆடாம்ஸ் ஆப்பிளின் ஆட்டத்தை குறைக்க முயற்சிக்க தொண்டையைச் செருமினான்.

“ப்ப்பா!”

மெதுவாக மகனை திரும்பி நோக்கினார் அமரேசன்.

கலங்கும் விழிகளுடன் நின்றிருந்தவனைப் பார்த்து, விழி மூடி திறந்தார், தனக்கு ஒன்றுமாகவில்லை எனும் விதமாக.

அவர் வலது கரத்தைப் பற்றிக் கொண்டவன்,

“கல்யாணம் பண்ணிக்கிறேன் ப்பா!”என்றான் உறுதியாய்.

அமரேசன் முகம் நிம்மதியில் விகசித்தது.

தந்தை – மகன் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த சிவாவிற்கு நண்பனின் முடிவில் சந்தோசமே என்றாலும், ஒரு பக்கம் வருத்தமாகவும் இருந்தது.

இவ்வுறுதியைக் கொடுக்க எத்துணை கஷ்டப்பட்டிருப்பான் என புரிந்து கொள்ள முடிந்தது அவனால்.

மேலும் அங்கு நிற்க முடியாமல் சிவா வெளியில் வர, கீர்த்தி வாசனின் அண்ணன்மார்களும், சகோரிகளும் வந்து கொண்டிருந்தனர்.

இவன் தான் மருத்துவமனை வரும் வழியில் கீர்த்தியின் மூத்த சகோதரனை போனில் அழைத்து சொல்லி விட்டு வந்திருக்க, முகம் முழுக்க கோபத்துடன் வந்தவர்களை பார்த்து, ‘அவசரப்பட்டியேடா சிவா’ என மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்.

“எங்கடா அவன்? அப்பாவ எங்க கொண்டு வந்து நிறுத்திருக்கான் பார்த்தியா உன் பிரெண்டு!” வந்ததும் வராததுமாய் சத்தம் போட்டார் கிருஷ்ணன், வாசனின் மூத்த அண்ணன்.

“அண்ணா..”என்கையில்,

“நீ அவனுக்கு சப்போர்ட்க்கு நிக்காதே சிவா”என இடையிட்டார் பரதன், இரண்டாவது அண்ணன்.

“ஊர் உலகத்துல இல்லாத லவ் பெயிலியர் பாரு உன் நண்பனுக்கு” என இன்னுமே கிருஷ்ணன் பேச வர,அவரைத் தடுத்து விட்டிருந்தாள் விஜயா.

“போதும் அண்ணா! இது ஹாஸ்பிடல். அப்பாவை பார்க்க வந்துட்டு நீ கீர்த்தியைப் பேசாதே” என்றாள், தம்பியின் காதல் தோல்வி பற்றி தெரிந்தவளாய்.

மேற்கொண்டு எவரும் கீர்த்தி பற்றி பேசாவிடினும், என்ன நடந்தது என கேட்டு அறிந்து கொண்டனர் இரு சகோதரிகளும்.

ஆண்கள்,முன்பே சிவா மூலம் நடந்ததை அறிந்து கொண்டிருக்க, மீண்டும் அவன் சொல்லிக் கேட்கையில் தம்பியின் மீது கோபம் அதிகரிக்காமலில்லை.

எல்லாம் வாசன் திருமணம் பற்றியது தான். அமரேசன் மகனுக்குத் தெரியாமல் வரன் பார்த்திருந்ததோடு அல்லாமல், புகைப்படத்தையும் அவனிடம் காட்டிருக்க பொறுமை எல்லை தாண்டியதில் வெடித்திருந்தான் இவன். இருவருக்கும் வாய்த் தர்க்கமாகிருக்க சற்று அதிகமாகவே தந்தையைப் பேசி விட்டதில் நெஞ்சை பிடித்துக் கொண்டு மயங்கி சரிந்திருந்தார் அமரேசன்.

சிவா சொல்ல, கேட்டுக் கொண்டிருந்த பெண்களுக்கு, என்ன சொல்வதென தெரியவில்லை. தந்தையின் நிலை கவலையைக் கொடுக்க, கீர்த்தியை நினைக்கையில் வருத்தமும் சிறு ஆதங்கமும்.

“ராஸ்கல்” என பல்லைக் கடித்தனர் அண்ணன்மார்கள்.

“கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னா பொறுமையா சொல்லிருக்க வேண்டாமா இவன்? எந்த தகப்பனுக்கு தான் பெத்த புள்ளை இப்படி இருக்கான்னா பார்த்திட்டிருக்க தோணும்! கடைசி மகனுக்கு கல்யாணம் பண்ணி பார்க்க ஆசப்பட்டிருக்காரு. அதுல ஏதாவது பேசினா இவன் பொறுத்துட்டு போக வேண்டியது தானே கௌசல்யா! இவளோத்தையும் பண்ணிட்டு இப்ப எதுக்கு அப்பா கிட்ட பேசுறான், அவனை வெளிய வரச் சொல்லு சிவா!” கிருஷ்ணனுக்கு தாளவில்லை. தங்கையிடம் ஆதங்கமாய் பேசியவர் சிவாவிடம் முடித்தார்.

இவனுக்கோ வாசனைப் பற்றிப் பேசியதில் அவர்கள் மேல் கோபம் எழுந்தாலும் அது நியாயமற்றது எனத் தெரியும். ஆனால் அவனைப் புரிந்து கொண்டால் என்ன எனும் ஆதங்கம்.

இவர்களை சமாளிக்க முடியாது ஐ.சி. யூ இனுள் செல்ல, தூங்கிக் கொண்டிருந்த அமரேசனைப் பார்த்தபடி கீர்த்தி வாசன்.

நெடுமூச்செரிந்த சிவா, வெளியிலிருந்த நிலவரத்தை சொல்லி நண்பனை அழைத்து வந்தான்.

கீர்த்தி வந்து விட்டதை கண்டவுடன் அவனுக்கு திட்ட ஆரம்பித்து விட்டனர் கிருஷ்ணனனும், பரதனும்.

அமைதியாய் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியபடி அவர்கள் பேச்சை வாங்கிக் கொண்டான் அவன்.

விஜியும், கவுசல்யாவும் கைகளை பிசைந்த படி என்ன செய்வதென தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்க, தன்னை அடக்கிய படி சிவாவும்.

அதே நேரம் அவ்வழியில் தங்களுக்கான சிகிச்சையை முடித்துக் கொண்டு வந்த வேதவி, யமுனாவின் கண்களில் அவர்கள் பட வேதவி எதையும் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை. ஒரு தோள் குலுக்களுடன் நடையைத் தொடர,

“நாம வரும் போது அழுதிட்டிருந்தவருக்கு யாரோ திட்டிட்டுருக்காங்க போல” என சொன்னாள் யமுனா.

“ஓஹோ!”அவ்வளவு தான் வேதவியின் ரியாக்ஷன்.

அதில் கடுப்பாய் இருந்தாலும் அவளைக் கண்டு கொள்ளாமல் தன் பாட்டில் புலம்பத் தொடங்கினாள் யமுனா.

“அவர் அழகா இருக்காரு, எனக்கு அண்ணான்னு கூப்பிட மனசே வர மாட்டேங்குது வேதா” என நடந்த படி கீர்த்தி வாசனை திரும்பிப் பார்த்து இவள் கூற,

“அப்படியா? அப்போ கூப்பிடாதே” என அலட்டலின்றி கூறிய இதே வேதவி தான்.. ஒரு நாளில் இதற்காகவே பொறாமை கொள்ளப் போகிறாள் என அறிந்திருக்க வாய்ப்பில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!