Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மைவிழி ஜாடைகள்.

மைவிழி ஜாடைகள் – 4(b)

மைவிழி – 4(b)

“யாரைக் கேட்டுமா போட்டோ அனுப்புனீங்க?” சரஸ்வதியின் வழியை மறைத்த படி சத்தமிட்டாள், வேதவி.



Advertisement

“யாரடி கேக்கனும்!இல்ல யாரைக் கேட்கனுங்கறேன்?! அங்குட்டு போவியா. எனக்கு வேலை கெடக்கு”என்றவர் அவளை தாண்டிச் செல்ல முற்பட,

“என்னைக் கேட்டிருக்கனும் நீங்க!என் விருப்பமில்லாம எப்டி நீங்க அனுப்பலாம்?” என படபடத்தாள்.

Advertisement

Advertisement

“ஆமா கேக்கறாங்க! கோழிட்ட கேட்டா கொச்சிக்கா அரைக்கிறாங்க..! இவட்ட கேக்கனுமாம்ல”என நொடித்து கொண்டவர்,மகளைத் தள்ளி விட்டு கூடம் புக,

“சரஸு!”எனப் பற்களை நறநறத்தவள்,

Advertisement

“கோழிட்ட கேட்டா மட்டும் பதில் சொல்லிடுமா.? நீ எங்கிட்ட கேட்டிருக்கனும்ல” என்றாள் கடுப்பாய்.

விளக்குமாறுடன் திரும்பியவர்,

“அப்படியே நான் கேட்டா மட்டும் ஆமான்னு சொல்லிடுவியா டி!”என முறைத்தார் மகளை.

“தெரியுதுல்ல, பின்ன எதுக்கு மாப்ள பார்க்கறீங்க. எனக்கு படிக்கணும்” எரிச்சல் அவள் குரலில்.

“வேதா, அடி வாங்காம போயிடு” என்றவர்,

“அதானே!”என எதிர்க்குரல் கொடுத்தவாறு,

இவர்களையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சின்ன மகளை முறைத்தார் விளக்குமாறின் முனையை உள்ளங்கையில் குற்றியபடி.

பகீர் என்றானது சங்கவிக்கு.

“அவ குதிக்கிறதுக்கு என்ன ஏன்மா முறைக்க?”என குரலை உயர்த்தினாள் சின்னவள்.

“என்னடி அம்மாக்கு குரல் உயத்தி பேசுற!” கோபமாய் அவளை நெருங்க,

“சரஸு ம்மீ!இது உனக்கே நியாயமா இருக்கா. பேச்சு பேச்சா இருக்கனும்! இப்படி விளக்குமாரெல்லாம் தூக்கப்படாது”என்றவள் ஓட்டமெடுத்தாள்,

“சையா! இந்தா அம்மாட்டருந்து காப்பாத்து”என அலறிக் கொண்டு.

“ம்மா! என்னம்மா இது?நீங்க போடுற சத்தத்துல எனக்கு படிக்க முடில” என்றபடி வெளியில் வந்த சைந்தவி, வேதவியைப் பார்த்து விட்டு, விடயம் புரிந்தவளாக தாயைப் பார்த்தாள்.

சப்போர்ட்கு ஆள் கிடைத்து விட்ட நிம்மதியில் கோபம் குறைந்தவராக,

“நீயே கேளேன் சையா..!இந்த ஒரு மாசமும் நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு தெரியும் தானே இவளுக்கு ஒரு மாப்ள பார்க்க”என இரண்டாவது மகளிடம் சொல்லி வருந்த,

“நான் பார்க்க சொன்னேனாடி.? இல்ல உங்கம்மாவை கஷ்டப்படத் தான் சொன்னேனா”என்றாள் வேதவி, தங்கையிடம் கோபம் குறையாதவளாக.

“வாஸ்த்தவமான பேச்சு”என முனகிக் கொண்டாள் சைந்தவி.

“அவ சொல்லாட்டியும் ஒரு அம்மாவா என் கடமையை நான் செய்ய வேண்டாமா? வயசு போகறது அவளுக்கு தெரியலையா.? ஒவ்வரு வரன் பார்க்கயில இவளை அதையும், இதையும் சொல்லி அந்த வரன் அமையாம போகும் போது என் மனசு படற பாடு உங்களுக்கு தெரியுமா? உங்கப்பா தான் புரிஞ்சிக்காம இருக்கார்னா.. நீங்களும் ஏண்டி என்னப் படுத்தறீங்க” என கண்கலங்கியவர்,

“மொதல்ல கருப்பா குண்டா இருக்கான்னு சொல்லி இவளை வேண்டான்னு சொன்னாங்க. சரி எல்லாம் அமையற நேரமா பார்த்து, இவ உயரமா இருக்காளாம்னு சொல்லி வேண்டான்னு சொல்றாங்க. எவ்ளோ பயந்து போயிருக்கேன் தெரியுமா, இவளுக்கு இப்படியே வரன் அமையாம இருந்துருமோன்னு. ஆனா அவளுக்கு இதைப் பத்தியெல்லாம் கவலை இருக்கா.? எப்போ பாத்தாலும் எங்கூட சண்டைக்கே நிக்கறா”என அழுதார்.

சரஸ்வதி பேச பேசப் உள்ளுக்குள் தைத்தது வேதவிக்கு. அவள் உருவம் இப்படி அமைந்ததற்கு அவளும் தான் என்ன செய்வாள்.?

அதுவுமின்றி இந்த ஒரு மாதமும் வீட்டினரின் விசித்திரமான நடவடிக்கையில் தனக்கு வரன் தேடுகிறார்களோ என சந்தேகத்தை விதைத்திருக்க, ஏற்கனவே நாதனிடம் இதைச் சொல்லி அழும் போதும் கேட்டிருந்தவளுக்கு சந்தேகம் உறுதியாகிருந்தது.

தனக்கு தெரியாது என நினைத்து சங்கவி மறைந்திருந்து போட்டோ எடுப்பதும், தாயும் தந்தையும் பேசிக் கொள்வதும், மறைமுகமாக பெரியம்மா திருமணத்தை பற்றி பேசி இவளின் மனதை மாற்ற முயற்சிப்பதும் என இந்த ஒரு மாதமும் இப்படியே நடக்க அதைக் கூட அறியாத அளவுக்கு முட்டாள் அல்லவே அவள்!

எனவே,முதலில் திருமணத்தை மறுத்து முரண்டிய மனம், பெற்றவர்கள் படும் கஷ்டத்தைப் பார்த்து ஒத்துக் கொள்ள, மீண்டும் மீண்டும் அவள் நிராகரிக்கப்படுகையில் ஒரு வித கோபமும், வலியும்.

அதற்காக தன் தோற்றத்தை நினைத்து வருந்தவெல்லாம் இல்லை வேதவி. அது அவளின் குணத்தில் சேர்த்தியும் இல்லை.இது தான் வேதவி!கடவுளின் படைப்பு என்ற திண்ணம் அவளுக்கு.

ஆனால் சரஸ்வதியின் கவலையைப் பார்க்கும் போது தான் வருத்தமாய் போகும் பெண்ணுக்கு.

சந்திரா வீட்டிற்கு சென்று வந்த பிறகு தான் வேதவிக்கு மாப்பிள்ளை பார்க்கும் எண்ணம் அவரிடம் வலுத்தது.

நாதன், கனியன் என யார் தடுத்தும் பேச்சைக் கேளாமல், மிகத் தீவிரமாக வரன் பார்ப்பதில் இறங்கிருந்தார் அவர்.

அதிலும் ஒவ்வரு தடவையிலும் வேதவியின் உருவ அமைப்பைக் காட்டியே அவளை வேண்டாம் என்றிருக்க, இடையில் பார்த்த பையனின் வீட்டில் எல்லாம் சரியாகி வந்த நிலையில், பெண்ணைப் பார்க்க வேண்டுமென்று சொல்லவும் வேதவிக்குத் தெரியாது அவளை தூரத்திலிருந்து பார்த்த பையன் அவளின் உயரத்தைக் காட்டி மறுத்திருந்தான்.

இப்படியே பார்க்கும் வரன் எல்லாம் மகளைத் தட்டிக் கழிக்க, பயந்து தான் போனார் சரவஸ்வதி.

அவர் பயத்தை பற்றி நாதனிடம் கூறினாலோ,

“என் பொண்ணுக்குன்னு இந்த உலகத்துல ஒரு பையன் பொறந்திருப்பான். அதனால அவளுக்கு அமைய வேண்டிய நேரத்துக்கு எல்லாம் சரியா அமையும். உன் பயம் அவசியமில்லாதது” என எதார்த்தத்தைப் பேசி எழுந்து செல்வதுடன் சரி.

கணவரும் பொடு போக்காக இருப்பதில் கவலை கொண்டு தன் மூத்த சகோதரனிடம் பொறுப்பை ஒப்படைக்க அங்கே தான் ஆரம்பித்தது உண்மையான பிரச்சனை.

என்னவெனின், அவர் பார்த்துக் கொண்டு வந்த வரனிலிருந்தவன் பெரிய படிப்பு படித்திருப்பதாகவும், நல்ல வேலையில் இருப்பதாகவும் சொல்ல, கனியன் விசாரித்துப் பார்த்ததில் அத்தனையும் பொய்யெனத் தெரிய வந்தது.

அண்ணன் பொய் சொல்ல மாட்டான் என நம்பியிருந்த சரஸ்வதிக்கு விழுந்த பேரடி இது. இதன் பின்னணி சதியில் தன் அண்ணன் மனைவி/ அண்ணி இருப்பார் என யூகிக்க முடிந்தது. அண்ணி கொஞ்சம் குணமில்லாதவர் எனத் தெரியும். ஆனால் அவருடைய மகள் வயதுடைய தன் மகளின் வாழ்க்கையை இப்படி பாழ் செய்ய முயற்சிப்பார் என கனவிலும் நினைத்திருக்கவில்லை சரஸ்வதி.

இவையனைத்தும் நாதனின் காதை எட்டி விட,அவர் கோபத்துக்குள்ளாகியது தான் மிச்சம்! கனியனுமே தாயை பேசி விட்டிருந்தான்.

இத்தனை நடந்து முடிந்திருந்தும் மணமகன் தேடுதலை கொஞ்ச நாட்களுக்கு கூட ஒத்தி வைக்காமல், இதோ இறுதியில் கீர்த்தி வாசனின் வீட்டிற்கு வேதவியின் புகைப்படத்தை அனுப்பி வைத்திருந்தார் சரஸ்வதி.

அந்த போட்டோவை எடுக்க அவரும், சங்கவியும் பட்ட பாடு சொல்லி மாளாது. அத்தனை அழிச்சாட்டியம் செய்திருந்தாள் வேதவி.

மறைந்திருந்து போட்டோ எடுத்து களைத்துப் போன சங்கவி, இறுதியில் தமக்கையின் கையில், காலில் விழுந்து கதறி போஸ் கொடுக்க வைக்க.. அவளோ ‘வேண்டா வெறுப்பாய் பிள்ளையை பெற்று காண்டா மிருகம் என பெயர் வைத்தது’ போல் ஒரு பாவனையை முகத்தில் காட்டிருந்தாள்.

அத்தனை போட்டோக்களிலும் வேண்டுமென்றே சிரிக்காது முறைத்த படியே தான் நின்றிருந்தாள் இவள்.

‘தாயின் பொறுமையை சோதிப்பதில் இந்த மூத்த பெண்களுக்கு அப்படி என்ன ஆனந்தமோ!’ என சங்கவியே பொங்கி விட்டாள்.

இதற்கு மேலும் முடியாது எனப் புரிந்து தான் எடுத்த புகைப்படத்தையே அனுப்பி வைத்து விட,அது தெரிந்து தான் குதித்துக் கொண்டிருந்தாள் வேதவி.

இன்றோ தாயிற்கும் மகளுக்குமான வாக்கு வாதம் அரை மணித்தியாலத்திற்கு மேலாகியும் அரங்கேறிக் கொண்டிருக்க,

‘அவசரப்பட்டு இப்படி வந்து சிக்கிட்டியேடா சையா!! அவ்வ்வ்வ்’ – சைந்தவியின் மைண்ட் வாய்ஸ்.தாயை பாவமாய் பார்த்து வைத்தவளிடம்,

“நானே பயந்து போயிருக்கேன். அந்த போட்டோ பார்த்தும் இவளை வேண்டாம்னு சொல்லிடுவாங்களோன்னு இவளுக்கு அதெல்லாம் தோணுதா பாரேன்” என நடுமகளை நடுவராய் வைத்து நியாயம் கேட்டார் சரஸ்வதி.

‘என்னை எப்படியாவது காப்பாத்தி விடேன்’ எனும் விதமாக இவளோ தமக்கையைப் பார்க்க,

அன்னை பேசியது உள்ளுக்குள் சிறு வலியை உண்டாக்கினாலும் வெளியில் விரைப்பாகவே காட்டிக் கொண்டாள் வேதவி.

“மனுசன்னா எப்போவும் சிரிச்சிட்டேவா இருப்பான். போட்டோக்கு சிரிச்சிட்டு மட்டும் போஸ் குடுத்தா நாள பின்ன கல்யாணத்தைக்கு அப்பறமும் சிரிச்சிட்டே இருப்பேன்னு இருக்கா?இந்த போட்டோ பார்த்து வேண்டான்னு சொன்னா அவனுக்கு தான் லாஸ்ன்னுட்டு நினைச்சுக்க வேண்டியது தான்” என அலட்சியமாகவே பதில் கொடுத்தாள்.

மனதிலே ‘சபாஷ்’ போட்டுக் கொண்டாள் சைந்தவி.

“ம்ஹுக்கும், இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல உன் அக்காளுக்கு”என நொடித்துக் கொண்ட சரஸ்வதி,முறைத்த வண்ணம் இருந்த மகளை கடைக்கண்ணால் பார்த்தபடி,

“இப்ப பார்த்திருக்க வீட்ல இவ போட்டோ பார்த்து நல்ல பதிலா சொல்லனும்னு உங்கக்கா கிட்ட வேண்டிக்க சொல்லுடி” என்றார் சைந்தவியிடம்.

“அதெல்லாம் முடியாதுன்னு சொல்லுடி உங்கம்மா கிட்ட. எனக்கு வேற வேலை வெட்டி இல்லாம இருக்குப்பாரு, வேண்டிடுட்டு இருக்க!” என இவளும் கடுப்பாய் சொல்ல, பொங்கி விட்டாள் சைந்தவி.

“அடேய்ஸ்! உங்களுக்குள்ள சண்டைன்னா நீங்க ரெண்டு பேரும் போட்டுக்க வேண்டியது தானே. அதை விட்டுட்டு ஒரு சின்ன புள்ளை கையை புடிச்சி இழுத்து நடுவுல வுடறீங்க!” கடுகடுப்புடன் அவ்விடம் விட்டு நகர்ந்து விட,

“இப்ப உனக்கு என்ன தான் பிரச்னை வேதா?” என்றார் நேரடியாக மூத்த மகளிடம்.

“நீங்க பாட்டுக்கு மாப்ள பார்க்கறீங்க. என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டீங்களா?” என்றாள் எரிச்சலாய்.

“உன் விருப்பம் இல்லாம நாங்க உனக்கான முடிவை எடுப்போமா வேதா?”

“ஆமா, இப்படி தான் சொல்லி மேத்ஸ் படிக்கிறேன்ன என்னை ஆர்ட்ஸ்ல சேர்த்து விட்டீங்க”

“அடியே! எதை எதோட சேர்க்கற?”என்றவர்,

“இத்தனை வருஷம் உங்களை வளர்த்து,உங்களுக்கு பொருத்தமானதை செஞ்ச எங்களுக்குத் தெரியாதா.. நல்ல வாழ்க்கைத் துணையை அமைச்சி தர?உன்னைப் பெத்தவங்களை கல்நெஞ்சக்காரங்கன்னா நினைச்ச!”என தாய் குலத்துக்கே உரிய பிட்டைப் போட,

“ப்ச், என்னவோ செஞ்சு தொலைங்க! ஆனா, பையன் என் போட்டோ பார்த்து புடிச்சிருக்குன்னு சொல்றானோ இல்லையோ..! அவங்களுக்கு முதல்ல அதை நான் சொல்லனும்!”என்றாள் வீராப்பாய்.

“இல்லைன்னா மட்டும் அப்டியே உங்கப்பா உனக்கு கட்டாய கல்யாணம் பண்ணி வெச்சிடுவாரு பாரு! என் பொண்ணுக்கு பையன புடிச்சாத் தான் கல்யாணம்னு சொல்லிட்டு திரியுறாரு அந்த மனுஷன். இந்த வீர வசனத்துக்கு மட்டும் அப்பனுக்கும் மவளுக்கும் கொறச்சல் இல்ல” என நொடித்துக் கொண்ட சரஸ்வதி,

“இங்கயே இருடி வரேன்!”என்று விட்டு அவர் அறையினுள் நுழைந்தவர், வெளிவருகையில் கையில் கவரொன்று!

வேதவியின் கை பிடித்து அதை திணித்தவர்,

“இந்தா இதுல மாப்பிள்ளை போட்டோ இருக்கு. பார்த்துட்டு சொல்லு” எனவும் வெடவெடத்துப் போனாள் பெண்.

அவள் ஒரு பேச்சுக்காக சொல்லவில்லை தான். மணமகன் தனக்கும் பிடித்தவனாக இருக்க வேண்டுமென்று.

அதற்காக தாய் இப்படி போட்டோவை பொசுக்கென்று நீட்டுவார் எனவும் எதிர் பார்க்கவில்லை.

அது அவள் உடல் மொழியிலே தெரிய,

‘வெட்டி வீராப்புக்கு மட்டும் பஞ்சமில்லை. எவ்ளோ பேசிட்டு இப்ப நடுங்கறா இவ!’ என மனதுக்குள் மட்டுமே சிரிப்புடன் அங்கலாய்த்துக் கொண்டார் சரஸ்வதி.

பின்னே!அதை வெளியே சொல்லி, வேதவி போட்டோவை கிழித்துப் போட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஒருபக்கம் அவருக்குமே பயமிருந்தது, பிடிக்கவில்லை என சொல்லிடுவாளோ என.?

எனவே அடக்கியே வாசித்தவர், என்னடி அப்டியே நின்னுட்ட?” எனக் கேட்க,

“ம்மா!”என்றாள் வேதவி நெளிந்து கொண்டே.

“நான் தானாக்கும்!”என்றவர் அவளின் முறைப்பில்,

“போட்டோ பார்த்து நீ சொல்றது தான் முடிவு வேதா!”என பொறுமையாக சொல்ல,

“ஹ்ம்ம்” என கேட்டுக் கொண்டவள், யோசனையுடனே அறையினுள் புகுந்து கொண்டாள்.

அடுத்து வந்த இரு நாட்களுக்கும் பிரிக்கப்படாத புகைப்படமாகவே தான் இருந்தான் கீர்த்தி வாசன், வேதவியின் அறையில் ஆயுள் கைதியாய்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!