Skip to content
Post Views: 1,132
மைவிழி – 4(a)
“என்னடா சொல்ற?!! இந்த பொண்ணை பிடிச்சிருக்கா?”
Advertisement
“கீர்த்தி டேய்! உண்மையா உனக்கு பிடிச்சிருக்கா?”
“எங்களுக்காக சொல்றியா கீர்த்தி?”
Advertisement
Advertisement
“மாமா, நீங்க வேற பொண்ணு ஃபோட்டோ காட்டுங்க”
“இல்ல, வேணாம்! அதுக்கு அவசியமில்லை! எனக்கு இந்தப் பொண்ணையே பிடிச்சிருக்கு” முடிவாய், அழுத்தமாய், நிதானமாய்க் கூறிய வாசனின் பேச்சில் வாயடைத்துப் போனார்கள் கீர்த்தி வாசனின் அண்ணிமார்கள்.
Advertisement
வரிசைக் கட்டிக் கொண்டு வந்த அவர்களின் கேள்விகளெல்லாம் காற்றோடு கரைந்து தான் போயின.
“கீர்த்தி..”பரதனின் மனைவி எதுவோ பேசவர,
“அதான் அவனுக்கு புடிச்சிருக்குன்னு சொல்றான்ல.இன்னும் என்ன வாணி!”என்றாள் விஜயா ஆயாசமாய்.
ஏற்கனவே வாசன் ‘தனக்கு பெண் பார்க்க வேண்டாம்’ என்றதற்கு ஒரு காலாட்டா செய்தார்கள் என்றால், இப்போது பிடித்திருக்கிறது என சொன்னதற்கும், இப்படி ஆளாளுக்கு அவனை கேள்விக் கணைகளால் துளைத்தெடுப்பதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை விஜயாவால்.
வாணியை தீர்க்கமாய் அவள் பார்த்திருக்க, பரதனுக்கோ அக்காவை தாண்டி பேச முடியாத நிலை. அத்தோடு ‘இப்பவாவது தம்பி ஒத்துக் கொண்டானே’ எனும் நிம்மதி அவரிடம்.
“இல்லண்ணி, அவன் கொஞ்சம் யோசிச்சு சொல்லட்டுமே”எனவும், விஜயா மறுத்து பேச முயல்கையில்,
“நீ இரு அக்கா. நான் பேசிக்கிறேன்” என்ற வாசன்,
“சொல்லுங்க அண்ணி! நான் எதுக்கு யோசிக்கணும்?” என வினவ,
“இல்ல..பொண்ணு கொஞ்சம் கருப்பா,குண்டா இருக்கா..”என இழுத்து வைக்க,
“எனக்கப்படி ஒன்னும் தெரியலையே, அழகா தான் இருக்காங்க”என்றான் அமர்த்தலாய்.
வாயடைத்துப் போனார் வாணி! விஜயா முகத்தில் நமுட்டுச் சிரிப்பு எனின் பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்களுக்கும் சிரிப்பே.. அதிலும் அமரேசனுக்கும், மேகலைக்கும் பெரும் நிம்மதி.
“உனக்கு பிடிச்சா சரி தான்” வாணி தான் இறுதியில் கழண்டு கொள்ள வேண்டி இருந்தது.
“வேற யாரும் எதுவும் கேக்கனுமா?” கிருஷ்ணனின் மேல் பார்வை பதித்தபடி கேட்டவன்,
“இப்பவாவது உங்க மகன் கூட பேசுவீங்களா மிசஸ் மணிமேகலை அமரேசன்?” என்றான் தாயை போலியாக முறைத்த வண்ணம்.
“இவனுக்கு கல்யாணம் முடியற அன்னைக்கு தான் பேசுவேன்னு சொல்லிடு கௌசி!” கௌசல்யாவிடம் கூறி விட்டு தவாங்கட்டையை தோளில் இடித்தபடி எழுந்து கொண்டார் மேகலை. கோபமாய் இருக்கிறாராம்!
அவரின் கோபமும் நியாயமானதே! கணவன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மயங்கி சரிய மகன் தானே காரணம் என்ற கோபம்.
இலேசான நெஞ்சு வலியை ஹார்ட் அட்டாக் அளவுக்கு கொண்டு சென்று நாடகமாடி மகனை ஒரு வழியாக திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தது தெரிய வர, அமரேசனையும் ஒரு பிடி பிடித்திருந்தார் தான் மேகலை.
இவ்விடயம் அவரைத் தவிர, எவரும் அறிந்திருக்கவில்லை. குறிப்பாக அன்று அந்த குதி குதித்த மூத்த மகன் கிருஷ்ணனுக்கே தெரியாது.
அந்தளவுக்கு நடித்திருந்தார் அமரேசன். துணையாக மருத்துவரும். ஆனால் கணவனை முழுதாக அறிந்து வைத்திருக்கும் மேகலையிடமிருந்து தப்ப முடியவில்லை அவரால்.
ஆகவே இறுதியில் மனைவியிடம் உண்மையை ஒத்துக் கொண்டார் அமரேசன். பாவம் அவரும் தான் என்ன செய்வார்? மகனின் உறுதியை வாங்க இதைத் தவிர வேறு வழி தெரிந்திருக்கவில்லை அந்த தந்தைக்கு.
“அவன் தான் கொஞ்ச நாள்ல கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னான்ல. எதுக்குங்க இப்படி நடிக்கனும்.? ஏற்கனவே உடைஞ்சி போயிருக்கான் என் மகன்.. நீங்களும் உங்க பங்குக்கு அவனுக்கு குற்ற உணர்ச்சியை கொடுத்திட்டீங்கல்ல” என்றார் மேகலையும் ஆற்றாமையும், ஆதங்கமுமாய்.
அப்போது தான் அமரேசனுக்கும் தான் அவசரப்பட்டு விட்டோம் எனப் புரிய,
“பையன் தவிப்பான்னு தெரியாம போச்சே மேகா! நான் அப்படி யோசிக்கலையே! அவன் என்ன தான் என்கிட்ட கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னாலும் அது வாய் வார்த்தையா தான்னு எனக்குத் தெரியும் போது.. இதை விட்டா வேற வழி தெரியலையே!” என தவித்தார்.
“சரி விடுங்க! இப்போ உங்க கிட்ட உறுதியா சொல்லிட்டான்ல கல்யாணம் பண்ணிக்கிறேன்னு. ஒரு, ஒரு மாசம் போகட்டும். பொறுமையா வரன் பத்தி பேசலாம். அவனுக்கும் நேரம் எடுக்கும்ல” என்றார் மகனுக்கு கொடி பிடித்தபடி.
“பையனை விட்டுக் கொடுக்க மாட்டியே!” என சிரித்த அமரேசன்,
“ஆமா, உனக்கு தான் நான் ஹார்ட் அட்டாக்கு நடிச்சேன்னு தெரிஞ்சிடிச்சில்ல..? அப்பறம் ஏன் அவன் கூட பேசாம இருக்கே. பாவம் புள்ளை. வீட்ல என்னைத் தவிர யாருமே பேசலன்னு வருத்தப்படறான் மேகா! நீயாவது பேசக்கூடாதா. பேசேன்!”என வேண்டுதல் வைத்தார்.
“உங்களை அவன் அப்படி பேசிருக்கும் போது, ம்ஹூம்! நான் பேச மாட்டேன். கொஞ்ச நாள் போகட்டும்!” என பிடிவாதமாக கூறி,கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டவருக்கு, தன் கணவனை எதிர்த்துப் பேசியதில் மகன் மேல் கோபம் குறைய மறுத்தது.
கணவனுக்கு பிறகு தான் கடைக்குட்டி! புருஷனுக்கு அப்பறம் தான் புள்ளைகுட்டி! என்ற நவீன மொழிக்கிணங்கவே தான் நடந்து கொண்டார் மேகலையும்.
மனைவியின் பேச்சில் சிரித்துக் கொண்டார் அமரேசன்.
இவர் திருமணப் பேச்சின்றி இந்த ஒரு மாதமும் கடத்த மனைவியின் உத்தரவே காரணம். அதோடு தனக்காகவே பார்த்த மகனை நினைத்து பெருமை கொண்டவர் மகனுக்காகவும் பார்த்தார் என்று சொல்ல வேண்டுமோ!
எப்படியோ நாட்கள் கடந்தோடிருக்க, இதோ கீர்த்தி வாசனின் சம்மதம் கிடைத்து விட்டதில் அத்தனை சந்தோசமும் மகிழ்ச்சியும் பெற்றவர்களிடத்தில்.
விஜயா தவிர்த்து மற்றவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்,
‘இந்த பொண்ணுக்கு போய் சம்மதம் சொல்லி விட்டானே’ என. அது அவர்களின் வதனத்திலும், வார்த்தைகளிலும் வெளிப்பட்டாலும் அதை பொருட்படுத்தவில்லை அமரேசன்.
கீர்த்தி வாசனுக்கும் அவர்களைப் புரிந்து தான் இருந்தது. அதற்காக அவர்கள் விருப்புக்கு தலையசைக்க முடியுமா? அவனை என்னவோ இந்த புகைப்படம் ஈர்க்கச் செய்திருந்தது மட்டும் உண்மை.
சற்று நேரம் விம்பமாய் இருந்த பெண்ணைவளையே பார்த்திருந்தவன் அனைவரின் பார்வையும் தன் மேலே இருப்பதை உணர்ந்து கொண்டான்.
மீசையோடு மேழுதட்டை கடித்து சிரிப்பை அடக்கியவன்,
“பொண்ணு பேரென்ன?” நிமிர்ந்து கேட்க, குழுமியிருந்தவர்களுக்கு அதிர்ச்சி அவன் பேச்சிலும் செய்கையிலும்.
“என்ன அப்படி பார்க்கறீங்க? பொண்ணு பேர் தெரியாமலா போட்டோ காட்டுனீங்க”மென் சிரிப்புடன் அவன் வேண்டுமென்றே கேட்க,
தம்பியின் கேள்வியில் தெளிந்த விஜயா, “வேதவி” என்றாள்.
“ம்ம்,பியூட்டிபுல் நேம். பொண்ணு மாதிரியே!இல்லண்ணி?”என வாணியையும்,சௌந்தர்யாவையும் பார்த்து வைக்க, மாறி மாறித் தங்களைப் பார்த்துக் கொண்டவர்கள்,ஆம் என தலையசைக்க எழும் சிரிப்பை அடக்க வேண்டி இருந்தது வாசனுக்கு.
“நான் சம்மதம் சொல்லிட்டேன்” என்றவன், சிறு இடைவெளி விட்டு..
“எப்போ பொண்ணு வீட்ல பேசறீங்க” என கேட்க,
“இன்னும் ரெண்டு நாள்ல பேசலாம்னு இருக்கோம்” என்றார் கிருஷ்ணன் தம்பி முகம் பார்க்காமல்.
“ஓஹோ!”என்றவன்,
“என்னைப் பத்தி எதையும் மறைக்காமலே அவங்க கிட்ட சொல்லிடுங்க”என்றான் தீர்க்கமான குரலில் அழுத்தமாக.
தன் காதல் தோல்வி பற்றி சொல்லியே பெண் வீட்டிலும் சம்மதம் கேட்க சொல்கிறான் என அவன் சொல்ல வந்தது புரிய, தடுமாறினார்கள்.
இதை சொல்லப் போய் பெண் வீட்டில் மறுத்தார்கள் எனின் என்ற நினைப்பு அவர்களை தடுமாறச் செய்திருக்க, அப்போதைக்கு கீர்த்தியின் பேச்சுக்கு ஒத்துக் கொண்டார்கள்.
“சரி, எனக்கு வேலையிருக்கு நான் கெளம்புறேன்ப்பா” தந்தையிடம் சொன்னவன், அண்ணங்களை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து அகல,
“என்ன ப்பா இப்படி சொல்லிட்டு போறான்.! இவன் காதல் தோல்வி பத்தி சொன்னா அந்த பொண்ணு வீட்ல ஒத்துப்பாங்களா?”என கேட்டார், கிருஷ்ணன்.
“மறைக்க முடியாத கிருஷ்ணா. முறையா நாம சொல்லி தானே ஆகணும்”என்றார் அமரேசன்.
“ப்ச், நீங்க வேறங்க! அவங்க எப்படி சம்மதிக்காம போவாங்க.நம்ம கீர்த்தி அழகுக்கும்,படிப்புக்கும் அந்த பொண்ணு குறைஞ்சவ தானே”என்ற சௌந்தர்யாவை, கிருஷ்ணன் முறைத்து வைக்க,
அமரேசன் அதிருப்தியாக பார்த்தவர்,
“இந்த வீட்டு மூத்த மருமகமா நீ, எங்களுக்கு அப்பறம் நீங்க தான் இந்த வீட்ட பார்க்கப் போறீங்க! நீங்களே இப்படி பேசலாமா?” வருத்தமாய் கூறி விட்டு எழுந்து சென்று விட, சௌந்தர்யாவிற்கும் தான் பேசியது அதிகப்படி எனத் தோன்றியது.
அதிலும் மருமகளெனப் பாராமல் மகளாவே தன்னைப் பாவிப்பவரின் முன்னிலையில் இப்படி சொல்லி விட்டது தவறென்று புரிந்து வருத்தமாய் மாமியாரை நோக்கினாள்.
“அத்த, நான் தப்பா ஒன்னும் சொல்ல வரல. கீர்த்தி நான் பார்க்க வளர்ந்த பையன். அவனுக்கு பொண்ணு பார்க்கும் போது அவனுக்கு பொருத்தமா இருக்கனும்னு நினைச்சு தான் அப்படி பேசிட்டேன் த்தை” என்றாள் கவலையாய்.
சௌந்தர்யா திருமணம் முடித்து இந்த வீட்டிற்கு வரும் போது கீர்த்தி வாசனுக்கு வயது பதினைந்தே. அவன் படித்தது எல்லாம் கிருஷ்ணன் வீட்டில் இருந்த படி தான். அதனாலே என்னவோ மகனாகவே அவனைப் பார்த்து பழகி விட்டாள் அவள்.
அண்ணி என்பதை விட அன்னை ஸ்தானத்தில் தான் இருந்தாள் சௌந்தர்யா. ஏன் கீர்த்திக்கும் அப்படித் தான்! அக்கா விஜயாவை விட அண்ணி சௌந்தர்யா ஒரு படி மேல் தான்.
வாணி சொல்லியதை ஒரு வேளை சௌந்தர்யா சொல்லிருந்தால் கூட வாசன் அந்த நேரம் யோசித்திருப்பானாக இருக்கும். அத்தனை பாசமும் மரியாதையும் இவள் மேல். அது தெரிந்து தான் இவரும் பேசாமல் இருந்தாள்.
முகம் தெளிவில்லாமல் இருந்த மருமகளின் கைகளைப் பற்றிக் கொண்ட மேகலை,
“எனக்குத் தெரியும்மா உன்னை! அவன் மேல பாசம் இருக்கப் போய் தான் நீ இப்படி பேசற. இதுக்காக வருந்துவியா விடு”என்றார் ஆறுதலாக.
“மாமா எதுவும் நினைசிக்கிட்டரோ அத்தை?” அப்போதும் சௌந்தர்யா கேட்க,
“அதெல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டாரு.”என்றவர்,
“இன்னும் ரெண்டு நாள்ல பொண்ணு வீட்லயும் பேசனும். நீங்க தானே இந்த கல்யாணத்தை முன் நின்னு நடத்தனும்” என்றார் மலர்ந்த முகத்துடன்.
மாமியாரைப் பார்த்து புன்னகைத்த சௌந்தர்யா அரை மனதாகவே தலையசைத்தாள்.
இங்கு இப்படியாக இருக்க, வேதவியின் வீட்டிலோ பெரிய கலவரமே அரங்கேறிக் கொண்டிருந்தது.
error: Content is protected !!