Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மைவிழி ஜாடைகள்.

மைவிழி ஜாடைகள் – 5(a)

மைவிழி – 5(a)

நாட்கள் மின்னல் வேகத்தில் கடந்திருக்க, கீர்த்தி வாசனின் வீட்டிலிருந்து சம்மதம் கிடைத்து விட்டதிலிருந்து சரஸ்வதியை கைகளில் பிடிக்க முடியவில்லை. அதீத சந்தோசத்தில் சுற்றிக் கொண்டிருந்தார். வேதவியின் சம்மதம் இதுவரையிலும் கிடைக்காததை நினைத்து, ஒரு பக்கம் பயப்பந்தும் உருண்டது அவருக்கு. ஆனால் எப்படியும் மகளுக்கும் பிடிக்கும் என நம்பிக்கையில் இருந்தார்.



Advertisement

வீட்டில் அனைவரும் கீர்த்தி வாசனின் புகைப்படத்தை பார்த்திருக்க அனைவருக்கும் திருப்தி.

பார்க்க வேண்டியவளோ ஒரு வித பயத்திலும் பதட்டத்திலும் அதைத் தவிர்த்தே வர, மகளிடம் பேசுவதற்கு சங்கரியின் மூத்த மகனை வர வைத்திருந்தார் சரஸ்வதி.

Advertisement

Advertisement

அவன் சொன்னாள் எதையும் கேட்டுக் கொள்வாள் வேதவி. அவனுக்கும் வேதவி என்றால் கொள்ளைப் பாசம். சங்கரிக்கு நான்கும் ஆண் பிள்ளைகளாகவே இருக்க, அந்த குடும்பத்தில் முதல் பெண் பிள்ளை என்றால் வேதவி தான். அதனாலே இரு வீட்டிலும் சலுகைகள் அதிகம் அவளுக்கு.

பெண் பிள்ளை இல்லாதவர்களுக்குத் தான் அதன் அருமை தெரியும் என்று சொல்வார்களே!

Advertisement

அதே போல் தான் சித்தியின்(சரஸ்வதி) மகள்கள் மீது அத்தனை பாசம் அவர்களுக்கு.

ஆனால் என்ன வேதவிக்கு பிறகு தான் மற்ற இருவரும். அதில் சின்னவள் சங்கவிக்கு கடுகளவு பொறாமையே!

“என்ன இருந்தாலும் வேதா தான் உனக்கு மொதல்ல!அப்பறம் தானே நாங்க”என அண்ணன் ரவியிடமே மல்லுக்கு நிப்பாள்.

ஆமென ஒத்துக் கொண்டு அவளை வெறுப்பேற்றுவது தான் அவனின் வாடிக்கையே.

இன்றும் சித்தி அழைக்கவும் வந்தவன் அவருடன் பேசிக் கொண்டிருந்தான்.

“வசந்தா, எப்டியாவது உன் தங்கச்சிக்கு நல்ல புத்தியை சொல்லிக் கொடுடா. கல்யாணத்துக்கு பிடி கொடுக்கவே மாட்டேன்றா” என்றார் சரஸ்வதி பாவமாய்.

சிரித்தான் வஸந்த் ரவி.

“சித்தி,உங்களுக்கு மகனா வேதவிட்ட பேச வேண்டியது என் பொறுப்பு. ஆனா அவளுக்கு அண்ணனா அவ சொல்றது தான் என் முடிவும்! அவளுக்கு புடிக்கலன்னா வற்புறுத்த வேண்டாம்” என சொல்ல,

“ஆளாளுக்கு அவளுக்கே சப்போர்ட்கு நிக்கறீங்களேடா! சித்திய பார்த்தா பாவமால்ல” என்றவர்,

“அந்த மாப்ள தம்பி நல்லவர்னு நீயும் தானேடா சொன்ன..!அதை நம்பித் தானே அங்க பேசிருக்கோம். நீயே இப்படி சொல்லலாமா ரவி!”என்றார்.

“கீர்த்தி நல்லவன் தான் சித்தி. சென்னைல நாங்க ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கும் போது எங்களோட ஒரே ரூம்ல தான் தங்கி இருந்தான். நம்ம கிஷோரும் அவனும் தான் ஒன்னா படிச்சவங்க” என்றவன்,

“ஹ்ம்ம்,மத்ததெல்லாம் உங்களுக்கே தெரியும் தானே!”என பெரு மூச்சுடன் சொல்ல,

“ஆமா ரவி. நீயும், கிஷோரும் அந்த பையன் பத்தி சொன்னதும் விசாரிச்சோம். ஊருக்குள்ளயும் அந்த தம்பிக்கு நல்ல பேரு! ஆனா.. ஹ்ம்ம்!விசாரிச்சதுல அந்த தம்பிக்கு காதல் தோல்வியாம்னு பேசிக்கிட்டாங்க. அவர் கதை இங்க சில பேருக்கு தெரிஞ்சிருக்கு! அவங்க வீட்லயும் இதை மறைக்கல. நம்ம வேதவிய புடிச்சிருக்குன்னு சொல்லும் போது இதையும் சொன்னாங்க.. மறைக்கிறவங்க இப்படி சொல்ல நினைப்பாங்களா? நல்லவங்களா தெரியறாங்க” என்றவரின் வேண்டுதல் மகளுக்கு இது பற்றி தெரிந்திருக்க கூடாதே என்பது தான்.

“சித்தி..”என ரவி எதையோ கேட்க வருகையில், வீட்டினுள் நுழைந்தாள் வேதவி.

கூடத்திலிருந்த வஸந்தனை கண்டவள்,

“ரவிண்ணா! வாண்ணா, எப்போ வந்த” என விசாரித்தப்படி அவன் அருகில் வர,

“இப்போ தான்டா! என் தங்கச்சிக்கு கல்யாணமாமே, அதான் பெரிய மனுசியை பார்த்துட்டு போலாம்னு வந்தேன்!” என சீண்டியவனை, முறைக்க முடியாமல் “ண்ணா!” என சிணுங்கி வைத்தாள் வேதவி.

சிரித்தவன், “இங்க வாயேன்! இப்படி வந்து உக்காரு” எனக் கூப்பிட,

“இருண்ணா பிரெஷாயிட்டு வரேன்” என போக எத்தனித்தவளை,

“டே கருப்பி! வா வந்து உக்காரு”என கைப்பிடித்து தன் அருகில் அமர வைத்தான்.

“அப்பறம்,உன் படிப்பெல்லாம் எப்டி போகுது?”

“ம்ம், நல்லாவே போகுது!”இவள் பதில் சொல்ல,

“நீங்க ரெண்டு பேரும் பேசிட்டிருங்க. ரவிக்கு நான் டீ போடறேன்” என எழுந்து கொண்ட சரஸ்வதி,

“உனக்கும் போடவா வேதா?” என மகளிடமும் கேட்க, இல்லையென்று தலையசைத்தவள், தமையனின் பேச்சில் திரும்பினாள்.

“ம்ம், சொல்லு! சித்தி சொல்லுச்சு கல்யாணம் வேண்டான்றியாம்?”

“அது…படிப்பு முடியட்டும். கொஞ்ச நாள் போகட்டுமேன்னு தாண்ணா”

“அதெல்லாம் படிச்சிடலாம் கருப்பி!இதுக்கா வேணான்ற?” என்றான் சிரிப்புடன்.

“பார்க்கற மாப்ள படிக்க வேணான்னு சொல்லிட்டா?”

“உங்கப்பா அப்படியானவரை உனக்காக தேர்ந்தெடுப்பார்னு நினைக்கறியா? இல்ல நாங்க தான் விட்ருவோமா?”என போலியாக மிரட்டியவன்,

“பையன் போட்டோ பார்த்தியா?”எனக் கேட்க,

தலையைக் குனிந்து கொண்டு இல்லையென தலையசைத்தாள்.

“அடடே என் தங்கச்சிக்கு வெக்கத்தை பாரேன்”என கிண்டலடிக்க, தமையனின் தோளில் பட்டென போட்டாள் இவள்.

“இதான் எங்க வேதவி!இவ்ளோ நேரம் எங்கயோ என் தங்கை காணாம போய்ட்டான்னு நினைச்சேன்”என அதற்கும் அவளை கலாய்க்க,

“ண்ணாவ்வ்!!”என்றாள் கடுப்பாய்.

“சரி, இந்தா பையன் போட்டோ பாரு!”என பட்டென தன் போனை நீட்ட, அண்ணன் செய்கையில் தடுமாறிப் போனாள் வேதவி.

“உன்னை நம்ப முடியாது கருப்பி. உன்ட்ட இருக்கிற போட்டோஸ் பிரிக்கப்படாம அப்டியே தான் இருக்கும்.. நீ பார்க்கவும் மாட்ட”என்றான் தங்கயை அறிந்தவனாய்.

தயக்கமாய் அண்ணனின் போனை வாங்கியவள் புகைப்படமாக இருந்த கீர்த்தி வாசனைப் பார்த்தாள்.

கண்களில் கூலர்ஸும்,முகம் முழுக்க பல மாத தாடியும் என இருந்தாலும் அதரங்கள் குறுஞ்சிரிப்பை தாங்கிருக்க வசீகரித்துக் கொண்டிருந்தான், கீர்த்தி வாசன்.

ஆனால் வேதவிக்கோ, 

‘என்ன இவ்ளோ தாடி?’என்ற கேள்வி தான் மண்டைக்குள் ஓடியது.

அவள் எண்ணத்தை அறியாத ரவியோ வாசனைப் பற்றி சொல்லத் துவங்கியிருந்தான்.

“பையன் பேரு கீர்த்தி வாசன். **** ஸ்கூல்ல டீச்சரா வேலை பார்க்கறான். வீட்ல கடைக்குட்டி!ரொம்ப நல்ல பையன். எங்க கூட தான் ஒரு ரெண்டு வருஷம் சென்னைல இருந்தான். நம்ம கிஷோர் வயசு தான்!”என்றவன், புகைப்படமே கண்ணாய் இருந்தவளிடம்,

“கருப்பி,டேய்!கேக்கறியா?” எனக் கேட்க,

“ம்ம்ம், ம்ம் கேக்கறேன்! நீ சொல்லுண்ணா”என்றாள் படத்திலிருந்து கண்களை விலக்காத படி.

“சர்தான்!” என நமுட்டு சிரிப்புடன்,

“டீச்சிங்க தவிர்த்து வேற ஏதோ மேல படிக்கிறான் போல. எந்த கெட்ட பழக்கமும் இல்லாத பையன். ஆனா என்ன லவ்..”என சொல்லிக் கொண்டிருக்கையில் மீதியை முடிக்க விடாமல் அவ்விடம் வந்த சரஸ்வதி ரவியின் கைப் பற்றி வேண்டாமென தலையசைத்தார்.

“டீ குடி ரவி!”எனக் கொடுத்தவர், மகளைக் கண்களால் காட்டி ‘சொல்லாதே’ என குறிப்புக் கொடுத்தார்.

புரிந்தும் புரியாத நிலையில் தன் பேச்சை அத்தோடு நிறுத்திக் கொண்டான் வசந்த்.

இதெதையும் கவனித்திராத வேதவி,

“எதோ சொல்லிட்டு இருந்தியேண்ணா?”எனக் கேட்க,

“நத்திங் பா!நான் பையன் பத்தி சொல்லிட்டேன். இனிமே உன் முடிவு தான் வேதா”என்றான் சரஸ்வதியை ஒரு பார்வை பார்த்தபடி.

என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை பெண்ணுக்கு. பிடித்திருக்கிறதா? ம்ஹூம்!என்ன உணர்கிறாள் என அவளுக்கே தெரியவில்லை.

அதெப்படி ஒரே பார்வையில் எவனையோ ஒருவனை பிடித்திருக்கின்றது என சொல்ல முடியும்? இவனைப் பற்றி என்ன தெரியும் எனக்கு? திருமணம் என்றால் இதற்கு பிறகான காலம் முழுவதும் இவனோடு தானல்லவா?

மனதுக்குள் பெண்களுக்கே உரிய பயம் அவளிடம் தலை தூக்கியது.

சிறு கலக்கமும் யோசனையுமாய் இருந்தவளை பார்த்திருந்தனர் சரஸ்வதியும், ரவியும்.

அவள் எண்ணங்களின் ஊர்வலம் புரிந்தவராக சரஸ்வதி எழுந்து வந்து அருகில் உட்கார, தாயை முறைத்தாள் இவள். 

“பாரேன்டா வசந்தா!இப்படித்தான் எதுக்கெடுத்தாலும் என்னையே முறைக்கறா இவ” என புகார் கொடுக்க, சிரிப்புடன் தோள் குலுக்கியவன்,

“என்ன சொல்ற வேதா?”என தங்கையிடம் வினவினான்.

“நீ என்ன சொல்றண்ணா?”என இவள் அவனிடமே கேட்க,

“டேய் கருப்பி! எனக்கு கல்யாணமாகி புள்ளை குட்டி இருக்குடா. உங்கண்ணி ஒரு ஆம்பள பையன என்னைக் கட்டிக்க விட மாட்டா”என தீவிரமான பாவத்துடன் கூற,

“ண்ணா! ச்சீ பேஹ்”என்றாள் வேதவி.

“உனக்கு புடிச்சிருக்கா வேதா?” சரஸ்வதி கேட்க, அண்ணனையும், அன்னையையும் ஒரு பார்வை பார்ப்பதும், வாசனின் படத்தை பார்ப்பதுமாக இவள் இருக்க,

“நம்ம வேதாக்கு புடிக்கல போல சித்தி! நீ வேற மாப்ள பார்க்க ஸ்டார்ட் பண்ணிடு” என்றவனின் பேச்சில் இடைபுகுந்தவளாய்,

“இல்ல,இல்ல!பிடி.. பிடிச்சிருக்கு வேண்டாம்!”என அவசரமாய் குரல் கொடுத்தாள் வேதவி.

“ஹா ஹா!”

“ண்ணா!”

செல்லமாய் தங்கையின் தலையை அழுத்தியவன், நிம்மதி பெருமூச்சு விட்ட சரஸ்வதியை பார்த்து திருப்தி கொண்டான்.

“இதை சொல்றதுக்கு என்னை என்ன பாடு படுத்திட்டா” என்றார் அவர்.

“ம்ம்மா!”என்று அதட்டியவள்(!) தன் அறையினுள் சென்று மறைந்தாள்.

வேதவி மறைந்ததும், சரஸ்வதியை வெளியில் கூட்டிக் கொண்டு வந்த ரவி,

“ஏன் சித்தி, கீர்த்தி லவ் பெயிலியர் பத்தி வேதா கிட்ட மறைக்கற?” என கேட்க,

“வேணான்னு சொல்லிடுவான்ன பயம் தான் வசந்த்!”என கவலை கொண்டார்.

“ப்ச், அதுக்காக? சித்தி அவகிட்ட சொன்னா புரிஞ்சிப்பா!நாம எல்லாரும் மறைக்கிறோம்னு தெரிஞ்சா தான் கோபப்படுவா?” என்றான் புரிய வைக்கும் நோக்கில்.

“அதெல்லாம் சொல்லிக்கலாம் டா! அவ சம்மதம் சொன்னதை கேட்டு எனக்கே இப்போ தான் நிம்மதியா இருக்கு”

“சித்தி, நீ மட்டும் முடிவெடுத்தா சரியா? அவளுக்கு இது பத்தி தெரிய வந்ததுக்கு அப்பறம் நீ என் முன்னாடி வந்து நிக்க கூடாது. சொல்லிட்டேன், ஆமா?”

“வசந்தா, நீயே இப்படி சொன்னா..”என கலங்கியவரைப் பார்த்து கோபத்தை குறைத்துக் கொண்டவன்,

“என்ன நீயே இப்படி சொன்னா..! அவ உன் கூட மட்டும் இல்ல. எங்கிட்டயும் சண்டை போடுவா! என்ன வண்டி வண்டியா கிழிப்பா உன் பொண்ணு. நான் இதை மறச்சத தெரிஞ்சா!” என்றான். அவனுக்கு அவன் கவலை!

“…”

“இப்படி அமைதியா இருந்தா சரியா? இதுக்கு சித்தப்பாவுமா உடந்தை?”

“அவர் உண்மையை சொல்லிட சொல்லித்தான் என்னை திட்டறார்டா!அவர் மட்டுமில்ல நான் பெத்த மத்ததுங்களும் தான்”என பாவமாகச் சொல்ல,

“அப்போ.. நீ அமுக்கினியா இருந்து ஆள் சேர்க்க பார்க்கறல்ல? என்னையும் கூட்டுக் களவாணியா ஆக்கப் பார்க்கற! நான் மாட்டேன் ப்பா!” என தப்பிக்க பார்த்தவன்,

“பாவம் உன் புருஷன்!என் சித்தப்பா எந்தா பெரிய லாயரா இருந்தாலும், முடிவுன்னு வந்துட்டா பொண்டாட்டி சொல்லுக்கு தானே கட்டுப்படறாரு”என அங்கலாய்த்தான். 

“அவர ஏன்டா பேசற!பாவம்டா அவரு”

“அதை தானே சொல்றேன். அந்த மனுஷன் பாவம்னு” என்றவன்,

“ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டு என் சித்தப்பனை நீ ஏமாத்தலாம். ஆனா என்னை!நெவர்”என எகிறியபடி,

“நீ பெத்த மித்த(மிச்ச) நாலும் நீ சொல்ற பேச்சை கேட்டு அமைதியா இருக்குங்க! இதுல அவங்க யாரும் என் பேச்சை கேக்கறது இல்லைன்னு ஊருக்குள்ள பொய்யா சொல்லிட்டு திரியுற! கிரிமினல உள்ள வெச்சிட்டு என் சித்தப்பு வெளிய தேடறாரு”என்றான் கடுப்பாக.

“ஹிஹி, வசந்தா!”என சமாளிக்க பார்த்தார் சரஸ்வதி.

“இந்த பாச்சா எல்லாம் எங்கிட்ட பலிக்காது.. நான் வேதவிட்ட இப்பவே சொல்லப் போறேன்!” என எகிறியவனை அதே இரண்டு சொட்டு கண்ணீர் விட்டுக் கரைத்தார் சரஸ்வதி.

அவருக்கு மகள் சம்மதம் மட்டுமே போதுமானதாக இருந்தது. உண்மை தெரிய வரும் நேரத்தில் தெரிந்து கொள்ளட்டும் மற்றபடி எவரும் சொல்லிக் கொள்ள வேண்டாம் என்று விட்டார்.

அடிக்கடி முந்திரிக் கொட்டை போல் முந்திக் கொள்ளும் சங்கவியையும் ஒரு வழியாய் அடக்கியாயிற்று. வீட்டு ஆண்களுக்கு சிறிதும் உடன் பாடில்லை தான்..ஒருவாறு அவர்களையும் பேசி சமாளித்தாயிற்று.

அந்த வீட்டில் எழுதப்படாத விதியில் ஒன்று. சரஸ்வதியின் முடிவு, இறுதியான முடிவென்பது. தாய் சொல்மிக்க மந்திரமில்லை என்பது போல் சிலசமயங்களில் பிள்ளைகளும் அதற்கே தலையாட்டி விடுவதுண்டு! நல்ல பழக்கம்!

ஆனால் இந்த உண்மையை முன்பே சொல்லிருக்கலாம் என பின்னாளில் தான் வருந்தப் போவது சரஸ்வதிக்கு தெரியாமல் போனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!