யுகத்தின் தலைவன் அத்தியாயம் 12
யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 12
லட்சுமியும் ரமேஷும் சோற்றில் மறைத்த முழு பூசணிக்காயும் வெளியே வந்து விட்டது.அவிநாசியப்பன் வீட்டு முற்றத்தில் காலை பஞ்சாயத்து ஆரம்பித்து.
அவிநாசியப்பனின் ஐந்து அண்ணன் தம்பிமார்கள், தங்கை, வாரிசுகள் என அனைவரும் கூடி விட்டனர்.
கங்காவையும்,கெளசியையும் பள்ளியில் விட்டுவிட்டு சிவராமனும், லட்சுமியும் பஞ்சாயத்திற்கு ஆஜரானார்கள்.
Advertisement
பழனியம்மாள் தன் வீட்டு வாசலருகே அமர்ந்திருந்தார்.இருமகள்களும்,மருமகள்களும் அவரை சுற்றி அமர்ந்திருந்தனர்.
ஆண்கள் ஒருபுறம் திண்ணையில் அமர பெண்கள் ஒருபுறம் திண்ணையில் அமர்ந்திருந்தனர்.
லட்சுமி அம்மாவிடம் செல்லாமல் பெண்கள் இருக்கும் பகுதியில் எல்லார் முகமும் நன்றாக தெரியும் படி , அதே சமயம் சிவராமன் கண்ணில் சற்று மறைந்த படி அமர்ந்து கொண்டார். இங்கு நடப்பதை தம்பிக்கு அப்டேட் செய்ய வேண்டும் அல்லவா.
Advertisement
பொய்யைகூட தவறாக சொல்லி மாட்டிக்கொள்ளும் மனைவியை பற்றி சிவராமனுக்கு தெரியாதா என்ன?
கங்கா”மாமாவும் அம்மாவும் ஜாதிப் பூச்செடி கீழே நின்னு ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தாங்கப்பா என்று சொன்ன போதே இதுதான் விஷயம் என ஓரளவு யூகித்து இருந்தார்.
Advertisement
இருந்தும் மனைவி வாயில் இருந்தே வரட்டும் என அவரை விட்டுப்பிடித்தார்.
என்னதான் தன்கண்ணில் படாமல் மனைவி மறைந்து அமர்ந்தாலும்,அவர் மீது ஒரு கண்ணை வைத்திருந்தார் சிவராமன்.
ஐந்து அண்ணன் தம்பிகளின் வாரிசுகள் அனைவரும், வீட்டில் பார்த்தவர்களை திருமணம் செய்து வாழ,தன் வீட்டில் மட்டும் மூன்று காதல் திருமணம் அதிலும் இரண்டு அசல் என்று தலைகுனிவோடு அமர்ந்திருந்தார் அவிநாசியப்பன்.
Advertisement
அருணாச்சலம் சொந்தத்தில்தான் திருமணம் செய்திருந்தாலும் அதுவும் பெரியோர் இல்லாமல்தான் நடந்தது.ராதா விஷயம் சொல்லவே வேண்டாம்.தற்போது இவனும் இப்படி செய்து விட்டானே என தன் உடன்பிறப்புகளோடு கவலையாக அமர்ந்து கொண்டார்.
முதலில் பிள்ளையார் சுழி பழனியம்மாளே போட்டார்.அவர் ஆரம்பித்தால் தான் சுவாரசியமாக இருக்கும் என உறவுகளும் அவர் முகத்தையே பார்த்தனர்.அவர்களின் எதிர்பார்ப்பை உணர்ந்து கொண்டவரும் இதோ ஆரம்பித்து விட்டார்.
என் பொறந்தவ பேத்தியே இவனுக்கு சம்பந்தம் பேசி, வெள்ளிக் கிழமை கைநனைக்க வராங்க. ஆன இவன் சீமைல எவளோ ஒருத்திய புடிச்சு கட்டிருக்கான்.
என்ற பொறந்த வூட்டு முன்னாடி என் மானம், மரியாதை போச்சு. நாளைக்கு ஏதாச்சு நல்லது கெட்டதுனா நான் எப்படி அந்த வூட்டுல தலைநிமிந்து நிப்பேன்.என்ற வூட்டு சனம் இனி எப்படி என்னை மதிப்பாங்க. அந்த கருணையாத்தாக்கு கூட என்ற மேல கருணையே இல்ல என தெய்வத்திடமும் தன் மனத்தாங்கலை பதிவு செய்தார்.
“அத்தே நேத்துல இருந்து ஒருவாய் கூட சாப்பிடுலே இந்த காப்பியாது குடிங்க” என்றார் கஸ்தூரி.
என்ற மானமே போச்சு இனி காப்பி குடிச்சு நா என்ன பண்ண போறே
அத்தே இதோ இத்தன பேரு இருக்காங்க அவங்க எல்லாம் பாத்துக்குவாங்க,எதும் சாப்பிடாம உங்களுக்கு எதாச்சு ஆகிடப்போது ஒருவாய் ‘தண்ணி’யாது குடிங்க என்றார் பெரிய மருமகள் ஈஸ்வரி.
ஏம்மா அதுதா ரெண்டு பேரு மாறி மாறி சொல்றாங்க இல்ல. காப்பிய குடி.அவனை நம்ம தலவாசல் கூட மிதிக்கறதுக்கு இல்லாம பண்ணிறலாம் என்றாள் ராதா.
அத்தோடு அவனை ஒருத்தர் குத்துவேன், வெட்டுவேன் என வாய்ச்சவடால் விட்டனர்.
இப்ப முடிவா என்னதான் சொல்றீங்க என சிவராமன் அங்கு நடந்த நாடகத்தை முடிவுக்கு கொண்டுவர முயன்றார்.
இங்க பாரு சிவராமா, நம்ம வீட்டுல பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கறதுதான் வழக்கம்.சொந்தமும் விட்டு போக கூடாது. சொத்தும் விட்டுப் போகக் கூடாது.
இப்போவே இரண்டு அசல் ஆளுங்கனா அடுத்த தலைமுறையே நினைச்சு பாரு..
எல்லாம் ஆளுக்கு ஒருத்தரை கல்யாணம் கட்டிட்டு வந்தா,நம்ப குடும்பம் கெட்டு குட்டிச் சுவரா போயிரும்.
அதுனாலே ரமேஷை ஏத்துக்க வேண்டா, அவனுக்கு கொடுக்கற தண்டனையே பாத்து சின்னதுங்களுக்கு ஒரு பயம் இருக்கும்.அப்பா அம்மா பாத்து வெக்கரவங்கள கட்டுவாங்க என பஞ்சாயத்தில் தீர்ப்பு சொல்லப்பட்டது.
நீங்க உங்க முடிவே சொல்லிடீங்க நான் என்ற முடிவே சொல்றே என சிவராமன் ஆரம்பித்தார்.
நடு மச்சினன் கல்யாணம் பண்ணுன அப்போவே நான் வேண்டானே அப்ப யாரும் கேக்குல
கொளுந்தியா கல்யாணத்தப்போ நா ஊருலே இல்ல.ஆனா அதையும் ஏத்துக்கிட்டோம் இல்லைனு சொல்லுல .
இப்ப இவன மட்டும் வேண்டானு சொன்னா அது நியாயமா?
பெரியவங்களுக்கு ஒரு நியாயம் சின்னவனுக்கு ஒரு நியாயம்.அவனை மட்டும் எச்சுகமியாவா வளத்தனீங்க.
நா போய் என்ற சின்ன மச்சினனே கூட்டிட்டு வரேன் என்றார்.
சிவராமனா இப்படி கூறுவது என எல்லோருக்கும் அதிர்ச்சி.என்ன சிவராமா நீதான் இந்த விஷயத்தை முதல்லே எதிர்பேனு நாங்க எல்லா நினைச்சோ இப்ப நீயே சப்போர்ட் பண்றே என்றனர்
நான் உள்ளதே உள்ளபடி நியாயமா பேசறே ஆளு.நீங்க முதல்ல வீட்டை விட்டு வெளியே போய் கல்யாணம் பண்ணுன ரெண்டு பேரையும் வெளியே அனுப்புங்க. அவனையும் நா கூட்டிட்டு வரலே என்றார் வீம்பாக நின்று.
அதெப்புடி கஸ்தூரி நம்ம சொந்தம்,ராதா வூட்டுகாரரு தங்கமான ஆளு அவங்க ரெண்டு பேரையும் எப்படி வெளியே அனுப்ப முடியும்.
இதுக்குமேல சரிபட்டு வராது. நல்ல நேரம் முடியரதுக்குல்ல நா என்ற மச்சுனனே கூட்டு வரே என்று சிவராமன் கிளம்ப போக..
அவனுக்கு இந்த வூட்டுல எடம் இல்ல என்று எங்கோ பார்த்துக் கொண்டே மருமகனுக்கு பதில் கூறினார் பழனியம்மாள்.
என்னதான் ஆறு பவுனாக லட்சுமிக்கு, சிவராமன் எடுத்து போட்டிருந்தாலும், அந்த மூன்று பவுனும், அதனால் உண்டான மனஸ்தாபமும் இருவருக்குள்ளும் ஒரு லட்சுமண கோட்டை வரைந்து பிரித்திருந்தது.ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்வது இல்லை.
இந்த வூடு இல்லைனா என்ன நான் என்ற வூட்டுக்கு கூட்டிட்டு போறேன் என மாமியாருக்கு அவர் ஸ்டைலிலேயே தெனாவெட்டாக பதில் கூறினார்.
வெட்டறவங்க குத்தரவங்க எல்லாம் என்ற வூட்டுக்கு வாங்க என்ற மேலே கைவெச்சிட்டு அப்பறோம் அவ மேலே கை வைங்க என சிவராமன் சொல்ல..
சிவராமா கொஞ்சம் நல்லா யோசி,இது நம்மளோட முடியரது இல்லே.அடுத்த தலைமுறையும் தப்பான பாதைலே போயிருவாங்க.
நீயும் ரெண்டு புள்ளைங்க வெச்சிருக்கே,அதுங்க இப்படி பண்ணிட்டு வந்தா என்ன பண்ணுவே?
சின்ன மாமனாரே நல்ல நேரம் முடியரதுக்குல்ல என்ற மச்சுனனே கூட்டிட்டு வர சோலி இருக்கு, அதே முடிச்சிட்டு வரேன்.
பாண்டவர் பூமினு ஒரு புதுப்படம் ரிலீசு ஆகி இருக்காமா நம்ம ரெண்டு பேரும் அதை போய் பாத்துட்டு வரலாம் என கிளம்பி விட்டார்.
கணவரின் முடிவு லட்சுமிக்கு இன்ப அதிர்ச்சி.கொஞ்சம் விட்டு இருந்தால் மேளதாளத்தோடு பல்லக்கில் கணவரை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருப்பார்.அந்த அளவிற்கு மனதில் சந்தோசம் கரைபுரண்டு ஓடியது கணவரை நினைத்து.
சிவராமன் கிளம்பிய அடுத்த நொடியே வீட்டிற்கு வந்து தன் தம்பிக்கும்,தம்பி மனைவிக்கும் பாயாசம்,வடை என சிறப்பு உணவு தயாரிக்க ஆரம்பித்து இருந்தார்.
மணமக்களை சிவராமன் தன் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்.இருவரையும் லட்சுமி ஆலாத்தி எடுத்து வரவேற்றார்.
தங்கள் நாடகம் சிவராமனுக்கு தெரியாது என்பதை போலவே நடந்து கொள்ள முயன்றார்.
ஏன்டா தம்பி இங்கே இத்தன பேரு இருக்கை யிலே,தனியா போய் ஏன்டா கல்யாணம் பண்ணுனே என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருந்தீனா நான் மாமன் கிட்ட பேசி,நம்ம வீட்டுல பேச சொல்லிருப்பனே என்றார்.
அதற்குமேல் சிவராமனால் பொறுமை காக்க முடியாமல்,நடிச்சது போதும் உன்ற தம்பி வர வழிலேயே எல்லா உண்மையும் சொல்லிட்டான் என போட்டு வாங்க,
ஆமா அவன் போகையிலே என்கிட்ட சொல்லிட்டு தான் போனா என்று சொல்லி உண்மையை உடைத்து விட்டார்.
லட்சுமி நான் மாமன் கிட்டே எதுமே சொல்லுலே என கூறிய தம்பியை பார்த்து அசடு வழிய சிரித்தார் லட்சுமி.
இப்ப தெரிதா உங்க அக்கா ‘வூட்டு நிர்வாகம்’ என மச்சினன் தலையிலும் ஒருகுட்டு வைத்தார்.
சரி நான் போய் புள்ளைகள ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு,கறி எடுத்துட்டு வரேன் என கிளம்பி விட்டார்.
வீடு வந்த கங்காவிற்கு ஒரே குஷிதான்.இந்த தீபாவளிக்கு புது அத்தை கிடைத்து விட்டதனால்..அக்கா தங்கை இருவரும் சேர்ந்து புது அத்தையை படுத்தி எடுத்து விட்டனர்.
பாவம் சத்யா இவர்களை திட்டவும் முடியாமல்,அடிக்கவும் முடியாமல் மருமகள்களின் செல்ல இம்சைகளை பொறுத்துக் கொண்டார்.
இரண்டு நாட்கள் கழிய, அவிநாசியப்பன் வீட்டினர் வந்து புதுமணத் தம்பதிகளை அழைத்துச் சென்று விட்டனர்.என்ன இருந்தாலும் வீட்டின் கடைக்குட்டி.ஒரு ஆணி அடிப்பது முதல் கொண்டு பரண் மீது எதாவது பொருள் எடுப்பது வரை “டேய் ரமேஷ் இங்க வா அதை எடு இதை எடு” என அவனை அழைத்தே பழக்கப்பட்டு விட்டனர்.
இவனும் கூப்பிட்ட குரலுக்கு போய் நின்று பழகி விட்டான்.இன்று அவன் இல்லாத வீடு வெறுமையை தந்தது. அது போக சிவராமன் பெரியவங்களுக்கு ஒரு நியாயம் சின்னவங்களுக்கு ஒரு நியாயம் என கேட்டது நன்றாக உரைத்து விட்டது.
அதனால் மணமக்களை அழைத்துச் சென்று, இரண்டு நாள் சம்பந்தி விருந்து தடபுடலாக நடந்தது.பின் காதல் ஜோடி இருவரும் வேலைக்காக சத்யா வீட்டருகே தஞ்சமடைந்தனர்.
ரமேஷ் மட்டும் வீட்டில் இருப்பவர்கள்,”டேய் ரமேஷ்”என கூப்பிட்டு முடிப்பதற்குள் வந்து நின்று செல்வதை வழக்கமாக வைத்திருந்தான்.
இரவு அரிசியம் பருப்பும்,முட்டை பொடிமாஸும் லட்சுமி செய்திருக்க நால்வரும் உணவருந்த அமர்ந்தனர்.
“அம்மா எனக்கு ‘எக்கு’ வேண்டா” என்றாள் கங்கா
என்டி வேண்டாங்கறே
அம்மா கம்பம் போட்டுருக்காங்க இல்ல,நாளைக்கு காலைலே நானும் ஆத்தாவும் கோவிலுக்கு போறோம் அதுனாலே எனக்கு ‘எக்கு’ வேண்டாம்.
ஆரம்பிச்சுடாளா இவ என்றிருந்தது லட்சுமிக்கு,கங்கா இன்னைக்கு சாப்புடு நாளைக்கு அம்மா வீடு துடைச்சு விடறேன்.
சாய்ந்தரம் ஸ்கூல் விட்டு வந்து கோவிலுக்கு போலாம் என்றார் லட்சுமி
இல்ல எனக்கு வேண்டாம் என்றாள்
சரி விடு இந்த கங்கா புடிவாதம் புடிச்சா விடாது.நம்ம மூனு பேரும் சாப்பிடலாம் என சுமூகமாக போனார் சிவராமன்.
சிவராமன் வீட்டு எல்லை மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா.காலை மாலை இருவேலையிலும் கம்பத்தை சுற்றி இளைஞர்களும்,ஆண்களும் மத்தள சத்ததிற்கு ஒரு சேர கால்களையும் கைகளையும் அசைத்து ஆடுவர்.
அதிலும் காலை வேலைக்கு செல்லும் அவசரத்திலும் இந்த வைபவத்தில் கலந்து கொள்ளும் ஆண்களை கண்கூடாக பார்க்க முடியும்.இன்ஸ்டா,டிவிட்டர் என்றில்லாமல் இளைஞர்களும் இதில் அடக்கம்.பெண்களும் மஞ்சள் கலந்த தண்ணீரை கம்பத்திற்கு ஊற்றி பயபக்கியாக கம்பத்தை சுற்றி வருவர். இப்போதுள்ள அவசர உலகம் போல அது அல்ல.
தகவல் தொடர்பு சாதனங்கள் வளராத இனிமையான காலம்.
காலை கம்பத்தை சுற்றி ஆடும் ஆட்டம்
முடிந்த பின், பொட்டுக்கடலையில் கரும்பு சர்க்கரையை சேர்த்து தருவர்.
இது கங்காவிற்கு பிடித்த ஒன்று. இதற்காக காலையில் எழுமணிக்கு எழுந்து பாப்பம்மாளை அழைத்து செல்வாள்.
ஆனால் இன்று என்னவோ எழுந்திரிக்க மணி எட்டு ஆகிவிட்டது.
ஆட்டம் முடிந்து விட்டது.எழுந்தவள் “என்னை ஏன் எழுப்பி விடலே?” என்று வீட்டை இரண்டாக்கி விட்டாள்.
கோபம் வந்த லட்சுமி கங்காவை இரண்டு கண்ணங்களிலும் அடித்து விட்டார்.இப்ப எதுக்கு எம்புள்ளைய அடிச்சே என சிவராமன் எகிற..
அது என்ன ஒன்னு வேணுணு புடிவாதம்.
புடிச்சா புடிச்சதுதான்.
இன்னைக்கு இல்லைனா நாளைக்கு போலாம்னா கேட்க மாட்டிங்கறா.
சாமி எங்காது போய்ருமா?இந்த வருஷம் இல்லைனா அடுத்த வருஷம் கம்பம் போடத்தானே போறாங்க என்றார் லட்சுமி.
இப்படி காலைலே ஸ்கூலுக்கு போகைலே அடிச்சா அது எப்படி அங்க போய் படிக்கும்.
அதுக்குனு அவ புடிவாதம் புடிக்கற எல்லா நீ செய்ய போறையா?என கேள்வி கேட்டார் லட்சுமி.
ஆமா என்ற புள்ளை என்ன கேட்டாலும் என்ற சக்திக்கு தகுந்த மாறி எல்லாம் பண்ணுவே என்றார்.
அத்தனை அடியையும் வாங்கி கொண்டு,ஒரு சொட்டு கண்ணீர்கூட விடாது அழுத்தமாக பையை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு கிளம்பிய மகளின் எதிர்காலத்தை நினைத்து இருவரும் திகிலடைந்தனர்.
–தலைவன் வருவான்.
