யுகத்தின் தலைவன் அத்தியாயம் 15
யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 15
சிவராமனும் லட்சுமியும் கலா வீட்டிற்கு கிளம்ப, கங்காவும் கெளசியும் ஸ்கூலிற்கு ரெடியாகினர்.
“கங்கா,உனக்கு இரண்டு வாட்டர் பாட்டில் தண்ணி வேனுமா?”என கெளசி கேட்க..
சித்தப்பாக்கு என்ன ஆகியிருக்கும்?என்ற யோசனையிலேயே ‘ம்’ போதும் என்றாள். .
Advertisement
அதற்குள் சுமதியின் அண்ணன் ஓடி வந்து, “கங்கா உன்னையும் கெளசியையும் டிரஸ் மாத்திட்டு அப்புச்சி வீட்டுக்கு வர சொல்றாங்க” என்றான்.
நிகழ்காலத்திற்கு வந்தவள் சட்டென எழுந்து யுனிபார்மை மாற்றிவிட்டு கெளசியையும் அழைத்துக் கொண்டு சென்றாள்.
பாதி வழியில் சுமதி வர,கங்கா உங்க சித்தப்பா இறந்துட்டாராமா என்றாள் கண்களில் நீர் தேங்க
Advertisement
இல்ல சுமதி எங்கப்பா உடம்புதான் சரியில்லைன்னு சொல்லுச்சு
Advertisement
“இல்லடி உண்மைதான் நீ அங்க போய் உங்க சித்தியே பாத்துக்க , இன்னைக்கு பர்ஸ்ட் டே டென்த் போசன்ஸ் ஸ்டார்ட் பண்றாங்க இல்ல, நான் நோட்ஸ் எடுத்து வைக்கறே நீ வந்து காப்பி பண்ணிக்க” என்றாள்.
கங்காவும் கெளசியும் உள்ளே நுழைய, ராதா,”வாங்கடி இனிமே உங்க ரெண்டு பேருக்கும் ஒரு சித்தப்பாதான்” என கண்ணீரை துடைத்தவாறே கூறினார்.
வேலைக்கு சென்றவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து சேர்ந்தவுடன் ஒரு பஸ் பிடிக்கப்பட்டது.எல்லோரும் கலா வீட்டிற்கு சென்று சேர்ந்தனர்.
Advertisement
அந்த வீட்டிற்கு சென்றால் வாய் நிறைய ‘வா கங்கா’என கூப்பிட்டு,அவளுக்கு பிடித்ததை எல்லாம் வாங்கி தரும் சித்தப்பா இன்று இல்லை.
பெரியவர்கள் ஆளாளிற்கு நடக்க, பொருட்களை எடுத்து வைக்க, கட்டிப்பிடித்து அழுக என அவரவர் வேலையை பார்த்தனர்.
கங்கா வீடு முழுவதும் சித்தியை தேட காணவில்லை.சோர்ந்து போய் அமர்ந்து கொண்டாள்.
சிறிது நேரத்தில் என்னவென்று உணரமுடியாதபடி உடல் நடுக்கமெடுக்க மெல்ல வெளியே வந்து பார்த்தாள்.கலா அழுது கொண்டே வர “சித்தி!சித்தப்பாக்கு என்ன ஆச்சு? என்றாள்.
சித்தப்பா நம்மள விட்டு போய்ருச்சுடி என அழுது கொண்டே உள்ளே சென்றார். அடுத்தடுத்து கூட்டம் உள்ளே வந்து அழுக ஆரம்பித்தது.
ஒரு ஆம்புலன்ஸ் வீட்டின் முன்பாக வர அந்த இடம் கொஞ்சம் பரபரப்பானது.
கொஞ்சம் வழி விடுங்க, போஸ்ட்மார்ட்டம் பண்ண உடம்பு வீட்டிற்குள்ளே கொண்டு வர முடியாது. யாரெல்லாம் கடைசியா முகத்தை பாக்கறீங்களோ? வந்து பாத்துடுங்க.
மின்மயானத்திற்கு வரவங்க அந்த வேனுல ஏறுங்க என ஒரு பெரிசு சத்தமிட்டது.
கங்கா சித்தப்பாவின் முகத்தை மெல்ல எட்டிப் பார்க்க, வெள்ளை துணியால் முக்காடு போல கட்டப்பட்டிருந்தது.
மின்மயானம் செல்லும் வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டாள். யார் அருகில் இருக்கிறார்கள்?எங்கே இருக்கிறோம்? அப்பா,அம்மா,தங்கை என்ன ஆனார்கள்?மற்ற உறவுகள் எங்கே?என்ற எண்ணமெல்லாம் துளியும் இல்லை. அவளை பாதித்த முதல் இழப்பு.
எட்டு வருட திருமண வாழ்வின் நினைவுகள், ஏழு வயது மகள், நிறைவேறாத ஆசைகள் என அனைத்தும் சேர்த்து அவரது உடல் எரியூட்டப்பட்டது. இதில் கொடுமை என்னவென்றால் அவரது ஏழு வயது மகள் ‘வெண்ணிலா’ தந்தை இறந்ததுகூட உணராமல் சொப்பு சாமானம் வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
வந்தவர்கள் பாவம் கலா,வாழவேண்டிய வயசு. இந்த புள்ளையே வெச்சுட்டு என்ன பண்ண போறாளோ? என்று தங்கள் ஆதங்கத்தை கொட்டிச் சென்றனர்.
‘கீதாச்சாரம்’ யுத்த களத்தில் அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் எடுத்துரைத்தது.அதை எங்கே வேண்டுமானாலும், எந்த சூழ்நிலையிலும் படித்து அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளலாம்.
ஆனால்… மயானத்தில் அதை படித்து புரிந்து கொள்வது, முற்றிலும் வேற மாதிரியான உணர்வை தரும்.
யுத்த களத்தில் நின்ற அர்ஜூனன், போரின் கடமையையும் தர்மத்தையும் புரிந்து கொண்டான்.
ஆனால்… தனது அன்பிற்குரியவர்களை இழந்து, மயானத்தின் அமைதியில் நின்று கீதையை படிக்கும் ஒருவன்
வாழ்க்கையின் நிலையற்ற தன்மையையும், உறவுகளின் உண்மையான மதிப்பையும், “எது நம் சொந்தம்?” என்ற கேள்வியையும் ஆழமாக உணர்கிறான்.
வீங்கிய கண்களோடு அமர்ந்திருந்த கங்காவின் கண்களில் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த கீதாச்சாரம் பட்டது.
“எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றோருவருடையதாகிறது
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமாகும்.”
அவ்வளவுதான் மனித வாழ்வு எல்லாம் முடிந்தது.
வீட்டிற்கு வர உணவு வழங்கப்பட்டது. எல்லோரும் உண்டனர்.கங்கா,கலாவின் அருகிலேயே அமர்ந்து கொண்டாள். எப்போ சித்தப்பாவை கடைசியாக பார்த்து என யோசிக்க ஆரம்பிக்க…
கடைசி அரையாண்டு விடுமுறை. அப்புச்சி வீட்டில் திண்ணை மீது அவர் அமர்ந்திருக்க கங்காவை பார்த்து ‘இங்கே வா’ என அழைத்து அருகில் அமர சொன்னார்.
சொல்லுங்க சித்தப்பா
ஏன் கங்கா நீ வர வர என்கிட்ட சரியா பேசமாட்டீங்கறே?
பதில் கூறாமல் தலையை குனிந்து கொண்டாள்.
கங்கா, உங்க அப்பாக்கும் எனக்கும் ஆயிரம் இருக்கும் இன்னைக்கு அடிச்சுக்குவோம்,நாளைக்கு சேர்ந்துக்குவோம்.
நாங்க பேசாம இருக்கறதாலே நீ என்கிட்ட பேசாம இருக்க கூடாது.
வெண்ணிலா மாதிரி நீயும் கெளசியும் எனக்கு புள்ளைங்க தான்.
நீங்க ரெண்டு பேரும் வேற, வெண்ணிலா வேறைனு நான் என்னைக்குமே நினைக்க மாட்டேன்.
கண்களில் நீர் ததும்ப சரிங்க சித்தப்பா என்றாள்.
அதே கண்ணீரோடு இன்று அவர் இல்லாத வீட்டில் அமர்ந்திருக்க, அவளது மாமன்மார்கள் கையில் வெள்ளை புடவையுடன் உள்ளே நுழைந்தனர்.
கங்கா என்ன நடக்கிறது? என உணர்வதற்குள்,கஸ்தூரி வந்து,”பாப்பா இதெல்லா நீ பாக்ககூடாது வெளியே போ” என கூறினார்.
ஐய்யோ! என் புள்ளைக்கு வெள்ளை புடவை போர்த்தராங்க என தலையில் அடித்துக் கொண்டே பழனியம்மாள் மயங்கி விழுந்து விட்டார்.
சிறிது நேரத்தில் கலாவின் வளையல், கம்மல், கொலுசு எல்லாம் கழற்றப்பட்டது.கங்கா மறுமுறை சித்தியை பார்க்க மனதொடிந்து விட்டாள்.
ஒரு பெண்ணிற்கு சிறுவயது முதல் பூவையும், பொட்டையும் வைத்து அழகு பார்ப்பது அவளை பெற்ற அன்னை மட்டுமே, இடையில் வரும் கணவனால் அது தரப்படவில்லை.அப்படி இருக்கையில் கணவன் இறந்தவுடன் ஏன் பொட்டையும் பூவையும் எடுக்கிறார்கள்?இவற்றையெல்லாம் ஒரு பெண்ணிடம் இருந்து எடுக்க உரிமையுள்ள ஒரே நபர் அந்த பெண்ணை பெற்றவள் மட்டுமே.
சரி கணவன் இறந்தவுடன் பூவையும், பொட்டையும் பறித்து விட்டீர்கள், வளையலை உடைத்தீர்கள், அணிகலன்களை அகற்றினீர்கள், வெள்ளை புடவை சுற்றினீர்கள்,இனி அந்த பெண்ணின் கனவுகளை என்ன செய்யப் போகிறீர்கள் என்றால் மெளனத்தை தவிர வேறு எந்த பதிலும் இல்லை.
இதற்குமேல் அந்த வீட்டில் கங்காவால் இருக்க முடியவில்லை.தனது மூச்சே தனக்கு பாரமாக இருப்பதை போல உணர்ந்தாள். ஆயிரம் பேர் தன்னை நாலாபக்கமும் சூழ்ந்து தன்னை நெருக்குவதான தோற்றம் ஏற்பட வெளியே வந்துவிட்டாள்.
ஆண்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த சிவராமன் கண்ணில்பட அவரை நோக்கி வந்தாள்.
உறவுகள் என்றாலும் தன்னை தவிர மற்ற ஆண்கள் முன் கங்கா வருவது சிவராமனுக்கு பிடிக்காது.இது கங்காவிற்கும் நன்றாகவே தெரியும்.
இருந்தும் இன்றைய சூழல் அவரைத் தேடி செல்ல வைத்தது. கங்கா வருவதை பார்த்த சிவராமனும் எழுந்து அவளை நோக்கி வந்தார்.
“ஏ சாமி”
அப்பா ரொம்ப தலைவலிக்குது நம்ம வீட்டுக்கு போலாம்ப்பா
அம்மாவும் கெளசியும் எங்கே?
தெரியலப்பா
உள்ளேதா இருப்பாங்க தேடி,கூப்பிட்டு வா போலாம்.
சரிப்பா
கங்கா வரும்போது தலையே சீவிட்டு வா, எப்படி கலஞ்சு இருக்குனு பாரு
சரிப்பா என்றவள் உள்ளே சென்று லட்சுமியையும் கெளசியையும் அழைத்துக் கொண்டு சிவராமனிடம் வந்தாள்.
ஏன் லட்சுமி இரண்டு புள்ளைங்க தலையும் பாரு,ஒரு சீப்பு எடுத்து சீவி விட்டு கூட்டிட்டு வரலாம் இல்ல
ஆமா எழவு வூட்டுல சீப்பு போட்டு சீவுனா நாலு சனம் என்ன சொல்லும்?
ரெண்டு பேரும் தலமுடியே கைலே ஒதுக்கி விடுங்கடீ என மகள்களை அதட்டினார் லட்சுமி.
இருவரும் கைகளில் முடியை ஒதுக்கி கிளம்ப தயாராகினர்.
“லட்சுமி உங்க அம்மா பாரு பக்கத்தூட்டு வாசல்ல படுத்துட்டு இருக்கு உள்ளே போய் படுக்க சொல்லு” என்றார் சிவராமன்.
அம்மா நாங்க வீட்டுக்கு போய்ட்டு காலைலே வறோம்- லட்சுமி
சரி, பாத்து போங்க- பழனியம்மாள்
அம்மா நீ உள்ளே போய் படு
இல்ல லட்சுமி நா அப்பறோம் போய்கறே என்றார் கரகரத்த குரலில்..
அவர் கூறுவது சிவராமன் காதில் விழ, “ஏனுங்க உள்ளே போய் படுங்க,இப்படி ரோட்டுல படுத்தா நல்லாவா இருக்குது” என ஒரு சத்தம் போட்டார்.
அடுத்த நொடி எழுந்து தள்ளாடிக் கொண்டே உள்ளே செல்ல, கஸ்தூரி வந்து கையை பிடித்து அழைத்துச் சென்றார். வண்டியை பிடித்து நால்வரும் வீடு வந்து சேர்ந்தனர்.
இரண்டு நாட்கள் கடந்திருக்க கங்கா, பள்ளியில் நடத்தி முடித்திருந்த வட்டநாற்கரத்தை வரைய ஆரம்பித்தாள்.
காம்பஸினுள் பென்சிலை இறக்கி, அதன் இரண்டு முனைகளையும் ஒரே அளவில் வைக்க போனவளுக்கு கண்ணீர் துளிகள் நீர்த்து,காம்பஸ் முனையையும்,பென்சில் முனையையும் தெளிவாக காட்டவில்லை.
கண்ணீரை துடைத்தவளை கெளசி பார்த்து விட்டாள். அம்மா,”இந்த கங்கா பாரு அழுதுட்டு இருக்கா”
சமையல் கட்டிலிருந்து வந்தவர்.
எதுக்குடீ அழுதுட்டு இருக்கே?
ஸ்கூல டீச்சர் எதாச்சும் அடிச்சாங்களா?
இல்ல..
அப்பறோம் எதுக்கு அழறே?
சித்தப்பா ஏன் இறந்துச்சு?
உடம்பு சரி இல்லாம
இல்ல..நீங்க எல்லா என்னமோ மறைக்கறீங்க
சித்தப்பாக்கு வயித்துல குடல் பிரச்சனை ஆபரேசன் எல்லா பண்ணியும் காப்பாத்த முடிலே. உங்ககிட்ட இதெல்லா சொன்னா பயத்துக்குவீங்கனு அப்பாதா சொல்ல வேண்டானு சொல்லுச்சு.
இனிமே சித்தப்பா இல்லாம கலாவும், பாப்பாவும் எப்படி இருப்பாங்க?
அவங்கள நம்ம அப்புச்சி வீட்டுக்கு கூப்பிட்டுட்டு வரப்போறோம்.இனிமே சித்தியும், பாப்பாவும் நம்ம கூடவே இருப்பாங்க.
ஆனா சித்தப்பா இல்லையேமா என்றாள் அழுது கொண்டே..
எவ்வளவு முயன்றும் அழுகை நிற்க வில்லை.இதற்குமேல் விட்டால் நிலைமை அவ்வளவுதான் என சிவராமனுக்கு போனை போட்டுவிட்டார்.
சிவராமன் வரும் வரையிலும் அழுகை நிற்க வில்லை.வந்தவர் மகளை மடியில் படுக்க வைத்துக் கொண்டார்.
இங்க பாரு கங்கா எல்லாரு ஒருநாள் இறக்க போறவங்கதான்.என்ன அவரு முன்னாடி போய்ட்டாரு நாம பின்னாடி போக போறோம் அவ்வளவுதான்.
இதையெல்லாம் நினைச்சு அழுதுட்டு இருக்ககூடாது.
யாருமே இந்த உலகத்துல சாகாவரம் வாங்கிட்டு வரலே. ஒருநாள் நானும் இறக்கதான் போறேன்.நீயும் இறக்கதான் போறே..
அப்ப உனக்கு எதாச்சு ஆகிருமாப்பா?
கங்கா,இந்த சிவராமனே யாருனாலையும் அசைக்க முடியாது. எனக்கெல்லா ஒன்னும் ஆகாது.நீ கண்டதையும் நினச்சு மனசே கொழப்பிட்டு,படிப்புல கோட்டை விட்டறாதே கங்கா.நமக்கு படிப்புதான் முக்கியம்.
அப்பா உனக்கு சித்தப்பா மேலே கோபம் இல்லையே
எனக்கு அவரு மேலே என்ன கோபம் கங்கா. இறக்கர வயசு இல்ல. அதைவிட கலாவை நினைச்சாதான் கவலையா இருக்கு.
அதையெல்லா நாங்க பாத்துக்கறோம் நீ கவலையே விட்டுட்டு படி, பத்தாவதுல மார்க் கொறஞ்சுது அவ்வளவுதான் தொலச்சு கட்டிருவேன்
சரிப்பா நா படிக்கறே, ஆனா எனக்கு பயமா இருக்குப்பா
என்ன பயம் கங்கா
தெரியலப்பா
சரி அழாதே படு என மடியில் படுக்க வைத்து,தலையை கோதி விட்டுக் கொண்டே தாலாட்டு பாட ஆரம்பித்தார்.
“தேனே தென்பாண்டி மீனே
இசை தேனே இசைத்தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமாரை
ஆரீராரோ
நெற்றி மூன்றாம் பிறை
தாலே லே லோ”
சிறிது நேரத்தில் தூங்கிவிட்டாள். அலுங்காமல் தலையணையை எடுத்து தலைக்கு வைத்துவிட்டார்.
கெளசியையும்,லட்சுமியையும்குண்டூசி விழும் சத்தம் கூட எழுப்ப விடவில்லை.
இங்கபாரு லட்சுமி இந்த கங்காகிட்ட இனிமே உன்ற குடும்ப விஷயத்தை சொல்லாதே.கெளசி விளையாட்டு போல எல்லாத்தையும் மறந்துரும். ஆனா இந்த கங்கா எல்லாத்தையும் மனசுல வெச்சுட்டு நைட் எல்லா தூங்காது.அப்பறம் உடம்பு முடியாம போனா பத்தாவதுல மார்க் வராது.
நீ உன்ற ரெண்டாவது படிப்பே தியாகம் பண்ணி உன்ற தம்பியே ஐஞ்சாவது படிக்க வைச்ச கதை மாதிரி எல்லாம் இல்லே.
இனி ரெண்டு புள்ளைகளும் பன்னிரெண்டாவது படிச்சு முடிக்கறே வரை எந்த நல்லது கெட்டதுக்கும் கூட்டிட்டு போகக் கூடாது என, பின்னாளில் கங்கா இழுத்து கொண்டு வரப்போகும் விபரீதம் தெரியாமல் கட்டளையிட்டார்.
–தலைவன் வருவான்…
