Skip to content
Post Views: 396
யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 33
பழனியம்மாள் காலை கோதுமை காயப்போட மொட்டை மாடி சென்றவர்.திடீரென மயங்கி விழுந்தார். கீழே அவரவர் வேலையில் பிசியாக இருக்க,அவரை யாரும் கவனத்தில் கொள்ள வில்லை.
பக்கத்து வீட்டுக்காரர் அவர் வீட்டு மாடியில் துணி காயப்போட போனவர் பார்த்து இவர் வீட்டில் தகவல் சொன்னார்.
ஹாஸ்பிடல் கூட்டி செல்ல,லோ பீ பீ காரணமான விழுந்தவருக்கு கொஞ்சம் முடக்குவாதம் ஏற்பட்டது.படுத்த படுக்கை ஆகிவிட்டார். எல்லாரும் வந்து நலம் விசாரித்து சென்றனர். ரத்தம் வற்ற உழைத்த உடம்பு,அதனால் மேலும் முடங்காமல் தன்னை தேற்றி எழுந்து நடமாட ஆரம்பித்தார்.
Advertisement
அருணாச்சலம்,கஸ்தூரியின் மகள் திவ்யாவின் திருமணம் நடந்தபோது, திவ்யாவிடம் கங்காவை பார்க்க வேண்டாம் என பழனியம்மாள் சொன்னதால் சில மனஸ்தாபம்… பெரியவர்கள் எப்போதும் போல்
அவர்கள் உறவை விட்டுக் கொடுக்காமல் இருந்தனர்.இந்த சின்னஞ்சிறுசுகள்தான் பனி போரை நடத்தி வந்தனர்.
பத்து பேரன் பேத்திகளில் கங்கா, கெளசி தவிர மற்ற அனைவரும் பழனியம்மாளை வந்து பார்த்து சென்று விட்டனர்.”அக்காவை பேசியவர் வீட்டிற்கு நானும் வரமாட்டேன்” என கெளசியும் போர் கொடி தூக்கி விட்டாள். பழனியம்மாள் வாய் திறந்தே கேட்டு விட்டார்.கங்காவையும் கெளசியையும் பார்க்க வேண்டும் போல உள்ளது என..
லட்சுமி இருவரிடமும் சொல்ல,கெளசி பரிதாபப்பட்டு அவரை பார்க்க சரி என்றாள். கங்கா மட்டும் என்னால் முடியாது என முரண்டு பிடிக்க ஆரம்பித்தாள்.
Advertisement
பெற்றவர்களை கண்டு சிறுவயதில் பயந்த காலம் போய், பெற்றவர்கள் தன்னை கண்டு பயப்படுகிறார்கள் என்ற மமதை அவளுக்கு.அவர்கள் கங்காவிற்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்க கொடுக்க இவள் தன் எல்லை மீறி நடக்க ஆரம்பித்தாள்.
Advertisement
அவளுக்கு லட்சுமியை பற்றி நன்றாக தெரியுமே,அம்பை எங்கே எறிந்தால் அவருக்கு வலிக்கும் என்று குறிபார்த்து அடித்தாள்.அவரால் இவளது பேச்சுக்கு எல்லாம் சரிக்கு சமமாக நின்று பேச முடியவில்லை.அழுது கொண்டே சிவராமனுக்கு ஃபோனை போட்டார்.
எல்லா வேலையையும் மூட்டை கட்டி வைத்து விட்டு வீட்டிற்கு வந்தார்.நடு ஹாலில் ஃபேனுக்கு கீழே ஒரு சேரை இழுத்து போட்டு,கால் மேல் கால் போட்டு பேப்பர் படித்து கொண்டிருந்தாள் கங்கா .
வந்தவர் நேரே கிச்சன் சென்றார்.மூவரும் கூடி பேச,இவள் காதை சமையல் கட்டு வரை நீட்டிக் கேட்க ஆரம்பித்தாள்.
எப்படியும் தன்னை பற்றிய குற்றப் பத்திரிக்கைதான் என்பது நன்றாக தெரியும். அவ்வளவுதான் இவளை பற்றிய புகாரை லட்சுமி முடித்துவிட,ஹாலுக்கு வந்தனர் இருவரும்.
Advertisement
கங்கா சேரில் அமர்ந்து இருக்க,இருவரும் கீழே அமர்ந்து கொண்டனர். பேப்பரில் எல்லாம் அவள் கவனம் இல்லை இருவர் மீது மட்டுமே. ‘கேளு’ என லட்சுமி ஜாடை செய்ய,’இரு’ என சிவராமன் சமாதானம் சொன்னார்.
“நீ அவகிட்ட கேட்க மாட்டே”,என சலித்து போனவராய்,
நைட்டுக்கு என்ன சமைக்கட்டும்?என்றார் லட்சுமி.
எனக்கு நீ பருத்தி கொட்டையை சமைச்சு கொடுத்தாலும் நான் சாப்பிடுவேன்.
சமையல் பற்றி கங்காவிடம் கேட்க சொல்லி சிவராமன் மீண்டும் ஜாடை காட்ட, இரு ஆள்காட்டி விரலையும் பெருக்கல் கூறி போல காட்டி நான் மாட்டேன் என்றார்.
கெளசி இங்க வா, உனக்கு என்ன வேணும்?
ஆஹா!இவ்வளவு நாளா நான் சொல்லி தானே சமைப்பார்கள். இன்று என்ன அவளிடம் கேட்கிறார்கள். தன்னுடைய பிடிவாதத்தால் உரிமை பறிபோவதாக தோன்றியது கங்காவிற்கு.
இவளை பற்றி உடன் பிறந்தவளுக்கு தெரியாத என்ன?அடேங்கப்பா என்ன ஆச்சரியம்!எப்பவும் இந்த வீட்டு மகாராணிகிட்ட இல்ல கேட்டு சமைப்பீங்க. என்னை நீங்க தவுட்டுக்குதானே பெத்து இருக்கீங்க. அவகிட்டையே கேட்டுங்கோங்க என உள்ளே சென்றாள்.
‘அப்பாடா’என்றிருந்தது கங்காவிற்கு
சிவராமன் மெல்ல ஏன் கங்கா அப்புச்சி அம்மா வை போய் ஒரு எட்டு பாத்துட்டு வரலாம் இல்ல.
நான் அந்த வீட்டுக்கு போக மாட்டேன்.
ஏன்?
ஏன்?னு உனக்கு தெரியாதாப்பா.அந்த அம்மா அன்னைக்கு என்ன பேச்சு பேசுச்சு.
அவங்க அந்தகாலத்து ஆளு. அப்படிதான் இருப்பாங்க. பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கனும் கங்கா. அதுமட்டுமல்ல நம்ம மேலே தப்பு இருக்கு.
ஆமா நான் பண்ணுனது தப்புதான்.இல்லைனு சொல்லுலே.ஆனா இருபத்தியோர் நாள் உன்னை ஜெயிலுக்கு அனுப்ப எழுதி கொடுத்தாங்க இல்ல. அதுக்கெல்லா இந்த ஜென்மத்துல அவங்களுக்கு மன்னிப்பு கிடையாதுப்பா.
இங்க பாரு கங்கா. எனக்கும் அவங்களுக்கும் நடுவுல ஆயிரம் மனஸ்தாபம் இருக்கு. நான் இல்லைனு சொல்லுலே.நாங்க ரெண்டு பேரும் ஒருத்தர் முகத்தை இன்னொருத்தர் பாத்து கூட பேசிக்க மாட்டோம். ஆனா இந்த நிமிஷம் அந்த வீட்டு வாசல்ல நான் போய் நின்னாலும்,என்னை பாத்து பாத்து உபசரிப்பாங்க.
இதுதான் எனக்கும் அவங்களுக்கும் உள்ள உறவு.
உன்னை மாதிரி எடுத்தெரிஞ்சு எல்லா ஒருநாளும் நான் அவங்கள பேசுனது இல்ல.எனக்கு என் மாமியார் வேணும்னுதான் நான் நினைப்பேன். உடம்பு சரியில்லாம படுக்கையில இருக்கறவங்கலே வாய்விட்டு உன்ன பாக்கணும்னு கேட்கறாங்க.ஒரு எட்டு போய் பாத்துட்டு வா. இல்லைனா அவங்களுக்கு அது ஒரு ஏக்கமாக இருக்கும் கங்கா.நீ போய் பாத்தினா இன்னும் கொஞ்சம் தெம்பா இருப்பாங்க.
என்னால அவங்கள போய் பாக்க முடியாதுப்பா.அந்த வீட்டு வாசலே மிதிக்க எனக்கு பிடிக்கல.
உன்ன விட வைராக்கியமா எனக்கு இருக்க தெரியும் கங்கா.ஆனா எனக்கு என் வீட்டுல நல்லது கெட்டது சொல்ல பெரியவங்க இல்ல. நான் என் மாமனார்,மாமியாரை என் அப்பா,அம்மா வாதான் நினைக்கிறேன்.
எனக்கு அவங்க முக்கியம்.
உனக்கு அவங்க முக்கியமா இருந்துட்டு போகட்டும்.எனக்கு அவங்க வேண்டாம்ப்பா.
முடிவா என்ன சொல்றே?அங்க வரையா இல்லையா?
வரமுடியாதுப்பா என்றாள் திடமாக…
இதற்கு மேலும் இவளிடம் பேச விருப்பமில்லாமல் சிவராமன் எழுந்து விட்டார்.”இங்க பாரு கங்கா,தோளுக்கு மேல வளந்த புள்ள,அடுத்த வீட்டுக்கு போற புள்ளனு எல்லா நான் பாக்க மாட்டே, தப்புன்னு தோணுச்சு சாட்டை எடுத்து வெளுத்து உட்ருவே. என்னோட பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு. அதை நீ ரொம்ப சோதிக்கறே. பழைய சிவராமனா என்னை சாட்டை எடுக்க வெச்சிராதே” என எச்சரித்து கிளம்பி விட்டார்.
வீட்டிற்குள் சண்டை இல்லாமல் இருந்தால் சரி என,லட்சுமியும் கெளசியும் மட்டுமே பழனியம்மாளை பார்க்க சென்றனர்.
சிவராமனுக்கும் கங்காவிற்கும் இடையில் வாக்குவாதம் நடக்கும் போதே சல்மானும், நித்யாவும் மாறி மாறி ஃபோன் செய்தனர். மூவரும் கிளம்பிய பின் நித்யாவுக்கு ஃபோன் செய்தாள்.
எதுக்குடீ இவ்ளோ டைம் கூப்பிடுவே?
இவளது கேள்விக்கு அவள் பதில் சொன்னால் தானே, “கங்கா,நீ ,நான், சல்மான்,மாலதி நாலு பேரும் சினிமாக்கு போலாம் வா.”
ஐய்யோ! இப்போதா வீட்டுல ஒரு பெரிய புயலே அடிச்சு ஓய்ஞ்சு போய்ருக்கு.நா வரலே நீங்க மூனு பேரும் போயிட்டு வாங்க.
சரி சல்மான் கிட்ட கூப்பிட்டு,நா வரலே, மூனு டிக்கெட் மட்டும் எடுனு சொல்லிரு.
‘சரி’ என கட் செய்து சல்மானுக்கு அழைத்தாள்.
சல்மான் நா சினிமாக்கு வரலே. நீங்க மூனு பேரும் போயிட்டு வாங்க.
ஏன்?கங்கா
வீட்டுல கொஞ்சம் வேல இருக்கு.
என்ன வேலை?
வீட்டில் வேலை என்று ஏதாவது செய்தால்தானே சொல்வதற்கு,”வேலை இருக்குனா விடே…”
“அதெல்லா எனக்கு தெரியாது கங்கா.நீ வரே.இல்லைனா எங்கிட்ட இனிமே பேசாதே” என கட் செய்து விட்டான்.
நினைத்ததை சாதித்தும் விட்டான்.
லட்சுமியிடம் ஃபோன் செய்து,”அம்மா நான் நித்யா கூட சினிமாக்கு போய்ட்டு வரேன்”.
நடந்த சண்டைக்கு மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிவிடும் என்ற பயத்தில் இருந்தவர். “சரி போய்ட்டு வா” என சம்மதம் தந்தார்.
வேகமாக ரெடியாகி பஸ் ஸ்டாபிற்கு வந்தவள் கண்ணில் அங்கிருந்த பேக்கரி பட்டது.உள்ளே சென்று சல்மானுக்கு குலாப் ஜாமூன் வாங்கி கைப்பையில் வைத்துக் கொண்டாள். அடடே! தொப்பியை மறந்து விட்டோமே. சரி அடுத்த முறை எடுத்துச் செல்லலாம் என எண்ணினாள்.
தியேட்டர் வாசலில் கங்காவும், நித்யாவும் நிற்க சல்மான் வந்து சேர்ந்தான்.
சல்மான் நா வந்துட்டே.
எனக்கு தெரியும் கங்கா.நீ வருவேனு.
மூவரும் டிக்கெட் எடுத்துகொண்டு உள்ளே செல்ல மாலதியை காணவில்லை.அதற்குள் கவுண்டரில் செக்கிங் செய்து குலாப் ஜாமூனை வாங்கி வைத்து விட்டனர்.
“மூவி முடிஞ்சு வெளியே வரும் போது கொடுத்துருவோம்” என உறுதியளித்த பின்னரே சமாதானமாக உள்ளே சென்றாள்.ஒருவழியாக மாலதியும் வந்து சேர்ந்தாள்.
ஏன் மாலதி லேட்?என்றாள் கங்கா.
டிராபிக் டீ.இந்த சுடி உனக்கு நல்லா இருக்கு என மேலும் ஏதேதோ பேசி அவளை தன்னுடைய கைக்குள் வைத்துக் கொண்டாள்.
சல்மானும்,நித்யாவும் தாங்கள் புக் செய்த சீட்டில் அருகருகே அமர்ந்த பின்னரே, மாலதி இவளை உள்ளே அழைத்துச் சென்று,நித்யா பக்கத்தில் அவள் அமர்ந்த பின் கங்காவை அமர வைத்தாள்.அதாவது எந்த விதத்திலும் கங்காவும் சல்மானும் பார்த்து கொள்ளாதபடி அவளை அமர வைத்தாள் மாலதி.
படம் போடப்பட்டது. இவர்கள் மூவர் மட்டுமே பெண்கள் பிறகு அனைவரும் ஆண்கள்.படம் முழுக்க இரண்டை அர்த்த வசனங்கள் கொண்ட அடல்ட் கன்டென்ட் மூவி,ஏன்டா வந்தோம் என்றிருந்தது,நால்வருக்கும்.
இடைவேளையில்,சல்மான் இனியும் இந்த படம் பார்க்க வேண்டாம் என மூவரையும் கூட்டி வந்து விட்டான்.ஒரு ஐஸ்கிரீம் கடைக்கு சென்று ஐஸ்கிரீம் சாப்பிட்டனர்.இப்போதும் கங்காவை உள்ளே தள்ளி கார்னரில் அமர்ந்து கொண்டாள் மாலதி.
இவளுடைய செய்கை கங்காவிற்கு எரிச்சலை தந்தது. நிலையை இயல்பாக்க சல்மான் அந்த படம் நல்லாதான் இருந்துச்சு.நீ ஏன் பாதிலையே கூட்டிட்டு வந்தே?என வேண்டுமென்றே அவனிடம் வம்பிழுத்தாள்.
“இப்பவும் ஒன்னும் ஆகலே.இன்னொரு டிக்கெட் எடுத்து தரேன்.நீ போய் பாத்துட்டு வா” என பதிலுக்கு அவனும் வம்பிழுத்தான்.
இந்த ஐஸ்கிரீம் எல்லா எனக்கு பத்தாது, என முக்கால் மணி நேர பயணம் செய்து ஒரு கையேந்தி பவனுக்கு சாப்பிட அழைத்து சென்றான் சல்மான்.
நால்வரும் அந்த ரோட்டோர கையேந்தி பவனில் சாப்பிட்டனர். “ஆ!ரொம்ப காரம் இவ்ளோ காரம் எல்லா நா சாப்பிட்டது இல்ல” என்றாள் கங்கா.
சாப்பிட்டு முடித்தவுடன் பஸ்ஸ்டாப் நோக்கி நடந்தனர்.தற்போதும் மாலதி கங்கா கையை விடாமல் பிடித்துக் கொண்டாள்.திரும்பி பார்க்க சல்மானை காணவில்லை.
நித்யாவிடம் சல்மான் எங்கே?என்றாள்.
வருவான். வாங்க நாம மூனு பேரும் பஸ் ஸ்டாப்ல உட்காரலாம் என அங்கிருந்த சீட்டில் அமர்ந்தனர்.
நித்யா நம்ம ஊருக்கு போறே பஸ் எல்லாம் போகுதுடி என்றாள் கவலையுடன் கங்கா.
சிறிது நேரத்தில் சல்மான் மீண்டும் ஐஸ்கிரீமுடன் வந்து சேர்ந்தான்.
மதியம் தானே ஐஸ்கிரீம் சாப்பிட்டோம் இப்போ எதுக்கு சல்மான் என்றாள் கங்கா.
நீதான் காராமா இருக்குனு சொன்னையே அதான் வாங்கிட்டு வந்தேன். சாப்பிடு என்றான்.
அந்தி சாயும் பொழுது நால்வரும் பஸ் ஸ்டாப்பில் இருந்த இருக்கையில் அமர்ந்தபடி ஐஸ்கிரீமை சாப்பிட்டு முடித்தனர்.
பின் பஸ்ஸில் ஏறியவுடன்,இந்த முறையும் மாலதி கங்காவை ஜன்னலோர சீட்டில் அமர வைத்து பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். அவளை அடுத்து நித்யாவை அமர வைத்தாள். அருகில் இருந்த சீட்டில் சல்மான் தனியாக அமர்ந்து கொண்டான். நித்யா அவனிடம் பேச்சு கொடுத்தபடி வந்தாள்.
கங்கா அவர்களை பார்க்க,மாலதி முன்னும் பின்னும் தள்ளி இவளை பார்க்க விடாமல் செய்தாள். கடுப்பான கங்கா பஸ்ஸில் பாடிய பாட்டில் கவனம் செலுத்தி,வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
“மழை சுடுகின்றதே அடி அது காதலா..
தீ குளிா்கின்றதே அடி இது காதலா.. இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா..”
இப்படி பொழுது சாயும் வேளையில் எல்லாம் கங்காவை சிவராமன் வாசல்படியை கூட தாண்ட அனுமதிக்க மாட்டார்.அதுவும் இப்படி ரோட்டோர கையேந்தி பவனில் எல்லாம் தானே சென்று சாப்பிட்டெல்லாம் அவளுக்கு பழக்கம் இல்லை.ஏதேனும் வேண்டுமென்று சொன்னால் வீட்டிற்கே வாங்கி வந்து விடுவார்.இன்று இதெல்லாம் அவளுக்கு புது அனுபவத்தை தந்தது.
நால்வரும் கங்கா ஊரின் பஸ் நிலையம் வந்து இறங்கினர். கங்காவிற்கு உள்ளூர பதற்றம்.குலாப் ஜாமூனை சல்மானிடம் தர வேண்டும். இந்த மாலதி முன்னால் தர வேண்டாம். அதே சமயம் தன் ஊரில் நின்று கொண்டு ஒரு ஆணிடம் பேசும் தைரியம் எல்லாம் கங்காவிற்கு இல்லை. யாராவது பார்த்து சிவராமனிடம் சொல்லிவிட்டால், முடிந்தது கதை இருந்தும் அதை அவனிடம் கொடுக்க நினைத்தாள்.
மாலதியை முடிந்த அளவு தவிர்க்கவே எண்ணினாள்.அவள் ஏதோ கங்காவிடம் இருந்து சல்மானை காக்க வந்த ரட்சகன் தான்தான் என்பதை போல நடந்து கொண்டாள்.
மாலை ஆறு மணி தாண்டி வெளியே வராதவள்,பின்னொருநாள் ஒன்பது மணிக்கு நடு ரோட்டில் நின்று சல்மானுக்காக மாலதியிடம் வாக்குவாதம் செய்ய போவதை நினைத்து விதியும் சிரித்துக் கொண்டது.
–தலைவன் வருவான்…
error: Content is protected !!