Skip to content
Post Views: 830
யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 38
சிவராமன் வீட்டிற்கு வந்த பிறகு…அந்த வீடு முழுவதும் மாறி இருந்தது.
முன்பெல்லாம் மூவரையும் தாங்கி நின்ற மனிதர்… இப்போது எழுந்து நிற்க கூட மற்றவர்களின் துணையை தேட வேண்டிய நிலை.
தற்போது அவரை சுற்றி இருந்த மூன்று பெண்களும்… அவருக்காகவே மூச்சு விட்டார்கள்.
Advertisement
லட்சுமி… மனைவியாக இருந்தவள், இப்போது அன்னையாக மாறி இருந்தார்.
அவரால் தனியாக நடக்க முடியாததால்,
காலை கடன்களை முடிக்க கூட தோளாக நின்றார்.குளித்து விடுவது முதல்… மருத்துவ நேரம் வரை…ஒரு தாய் குழந்தையை பார்த்துக் கொள்வதை போல பார்த்துக் கொண்டார்.
“மெதுவா வா… கீழே பாத்து நட…” என்று அவர் கையை பிடித்து அழைத்து செல்லும் லட்சுமியின் குரலில், கணவன் மீது கொண்ட காதலை விட…ஒரு தாயின் பதட்டமே அதிகமாக இருந்தது.
Advertisement
கங்காவும் ரொம்பவே மாறி இருந்தாள்.
தாய்க்கும் தந்தைக்கும் தலைமகளான அவள், இப்போது அப்பாவின் அருகே அமர்ந்து,பல் துலக்க வைத்து, தலையை சீவி விட்டாள்.
Advertisement
சில நேரங்களில், “அப்பா வாய திற… இந்த மாத்திரை போட்டுக்கோ…”
என்று குழந்தையை போல பார்த்துக் கொண்டாள்.
கெளசியும் அக்காவும் அம்மாவுமே அனைத்தையும் பார்த்து சோர்ந்து போகாமல் இருக்க, மருந்து நேரங்களை ஒரு பேப்பரில் எழுதிக் கொண்டு,சரியான நேரத்திற்கு மாத்திரைகளை எடுத்து வந்து கொடுத்தாள்.
“சிரா! இந்த டேப்லட் சாப்பாட்டுக்கு அப்பறம்… இது தூங்குறதுக்கு முன்னாடி…” என்று அவள் கண்டிப்பாக சொல்ல,சிவராமன் அமைதியாக வாங்கி கொண்டார்.
Advertisement
ஒரு காலத்தில், இந்த மூன்று பெண்களையும் தான்தான் பார்த்துக் கொண்டார்.
ஆனால் இன்று…லட்சுமி, கங்கா, கெளசி மூவரும் சேர்ந்து அவருக்கு அம்மாவாகி இருந்தனர்.
சிவராமன் சில நேரங்களில் அமைதியாக அவர்களை பார்த்துக் கொண்டிருப்பார்.
“நான் இல்லனா இவங்க என்ன பண்ணுவாங்க?” என்று பயந்த மனிதருக்கு…
“இவங்க இருந்தா எனக்கு எதுவும் ஆகாது…” என்ற நிம்மதி முதல் முறையாக வந்தது.
முன்பு போலவே, இரு மகள்களும் சம்பளத்தை வாங்கி வந்து அப்பாவின் கைகளிலேயே தந்தனர்.அவரே பட்ஜெட் போட்டு “இந்த பருப்பு வாங்கி வா. அடுத்த மாதம் அரிசி மூட்டை எடுத்தால் போதும்” என்று நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொண்டார்.
கங்காவும் இதுநாள் வரை கடைகளுக்கு எல்லாம் சென்று பழக்கம் இல்லை. அன்று ரேசன் பொருட்கள் வாங்க கடைக்கு சென்று வரிசையில் நின்றாள்.
எவ்வளவு தூரம் நிற்கிறது என்ற கடுப்பு வேறு.”கங்கா இனி வீட்டை நீதான் பாத்துகனும்” என மீண்டும் ஒருமுறை சொல்லிக் கொண்டாள்.அருகில் வந்ததும் கைரேகை வைத்துவிட்டு, அரிசியை வாங்க பையை விரித்து நின்றாள்.ரேசன் கடை ஊழியர் தொப்பென அரிசியை கொட்ட கீழே போட்டு விட்டாள்.
“ஏம்மா உனக்கு அரிசியை கூட சரியா புடிக்க தெரியாதா” என அவர் திட்ட இவளுக்கு அவமானமாகி போனது.பின் கூட்டத்தில் இருந்த ஒருவர் வந்து சிவராமன் மகளா?என்றார்.
ஆமா.
அப்பாவுக்கு உடம்பு பரவா இல்லையா?
பரவா இல்லைங்க..
“சரி தள்ளு நான் வாங்கி தரேன்” என அவர் உதவினார்.
இப்படியே ஒவ்வொரு கடையிலும் ஏறி இறங்க யாராவது ஒருவர் வந்து “சிவராமன் மகளா?”என கேட்டே இவள் சொதப்பிய அனைத்திற்கும் உதவினர்.
இவ்வளவு நாளா ஒத்தை ஆளா எப்படி அப்பா இவ்வளவையும் சமாளித்தார்?என்றே தோன்றியது.
இதுதான் ஆண்களின் உலகம். வலியை வெளியே சொல்ல தெரியாது.தனக்காக எதையும் வாங்கி கொள்ள மனமிருக்காது. தன்னை சார்ந்தவர்களுக்காக தன் ரத்தம் வற்றும்வரை உழைக்கும் தாயுமானவர்கள்.
வீட்டிற்கு வந்த கங்காவிற்கு ‘அப்பாடா’ என்றிருந்தது.
கங்கா எனக்கு ‘முள்ளும் மலரும்’ படம் எடுத்து கொடு.
இவளும்,”ஓ தங்கைக்காக” என்ற சலிப்புடன் எடுத்து தந்து,சிறிது நேரம் அவரோடு அமர்ந்து பார்த்தாள்.
அதில் ரஜினி காந்த் பேசிய டையலாக் திரும்ப திரும்ப இவளை போட்டு கொடுக்க சொல்லி கேட்டார்.
“ரெண்டு கையும் காலும் போனா கூட இந்த காளி பொலச்சுக்குவான் சார்.கெட்ட பையன் சார் இந்த காளி”
தற்போது அவர் ஏன் இந்த படத்தை போட சொன்னார் என கங்காவிற்கு புரிந்தது.
கங்கா! இந்த சிவராமனும் இப்படிதான் ரெண்டு கையும் காலும் போனா கூட பொலச்சுக்குவான். ஆனா உங்க மூணு பேரை நினைச்சாதான் கவலையா இருக்கு.
ஏன்ப்பா அப்படி சொல்ற?இனிமே இந்த கவல எல்லா உனக்கு வேண்டாப்பா. எல்லாமே நான் பாத்துக்கறேப்பா.
இல்ல கங்கா.இப்போ பாரு கெளசிக்கு வரன் வாசல்லே வந்து நிக்குது.ஆனா எல்லா நகையும் அடமானத்துக்கு போய்ருச்சு.கையில இருந்த காசும் என் மருத்துவ செலவுக்கு கரைஞ்சு போச்சு. இனி என்னாலே உங்களுக்கு மருத்துவ செலவு மட்டும்தான் மிஞ்சும்.ஏதோ கலா கிளினிக்ல இருக்கறதால நமக்கு உதவியா இருக்கு.
அந்த ஆண்டவன் என்னை இப்படி உங்களுக்கு குறையோட கொடுத்தற்கு, பதிலா முழுசா கூட்டிட்டே போய்ருக்கலாம்.
ஆனா கங்கா எனக்கு மட்டும் எதாச்சு ஆச்சுனா.அம்மாவை விட்ற கூடாது. கெளசி வீட்டுல கொஞ்ச நாள். உன் வீட்டுல கொஞ்ச நாள் வெச்சுக்கனும்.
“அப்பா இப்படி எல்லா பேசாதேப்பா.நீ இல்லாமே என்னால இருக்க முடியாதுப்பா” என அழுக ஆரம்பித்தாள்.
இவர்களின் சம்பாசனையை கேட்டுக் கொண்டிருந்த லட்சுமியும், அழுதவாறே,”நீயே போனதுக்கு அப்புறம் எனக்கு இங்கென்ன வேலை.நானும் உன்பின்னாடியே வந்துருவே.”
லட்சுமி! என்னாலையும் உன்னை விட்டுட்டு இருக்க முடியாது. ஆனா ரெண்டு புள்ளைங்க இருக்கே. அதுகல கரை சேத்தனும்.எனக்கு எதாச்சு ஆனாகூட என் இடத்துல இருந்து நீ எல்லாத்தையும் பண்ணனும்.
கங்காவும் லட்சுமியும் கீழே அமர்ந்தவாறு அவரின் காலை பிடித்தபடி அழுக, கெளசி வந்து மூவரையும்,இப்ப எதுக்கு மூனு பேரும் அழுத்துட்டு இருக்கீங்க?
லட்சு! ஒழுங்கா போய் சமைக்கற வேலயே பாரு.ஏய் கங்கா! உனக்கு பைத்தியமாடி. அவங்க ரெண்டு பேரும் அழுதா.. நீதான் அவங்கள தேத்தணும். ஒழுங்கா எந்திருச்சு போய் வேலயே பாரு. சிரா! நீ டிவி பாரு… என மூவரையும் இயல்பு நிலைக்கு கொண்டு வந்தாள்.
சிவராமன் பழைய பாடல்கள் கேட்க, லட்சுமி சமையல் வேலையை பார்த்தார். கங்கா குளித்து விட்டு வந்தவள் சிவராமனை பார்க்க காணவில்லை.
மீண்டும் எட்டிப்பார்க்க ஜன்னலை பிடித்து நின்றிருந்தார்.அப்பா! என கத்திக் கொண்டே, அவரை பிடித்துக் கொண்டாள்.இவளது சத்தம் கேட்டு கெளசியும் ஓடி வந்து அவரை பிடித்து கொண்டாள்.
வலது கையை கங்கா தன் தோள் மீது போட்டு பிடித்து கொண்டாள். கெளசியும் இடது கையை அவள் தோள் மீது போட்டு பிடித்து கொண்டாள்.
எந்த அப்பா சிறுவயதில் தங்கள் கைகளை பிடித்து நடைபழக சொல்லி தந்தாரோ.அதே அப்பாவிற்கு இருவரும் நடைபழக உதவினர்.
சிவராமனும் மகிழ்ச்சியாக,”எனக்கு இனி எந்த கவலையும் இல்ல. என்னோட ரெண்டு சிங்க குட்டிகளும் என்னை பாத்துக்கும்” என்றார்.
நித்யா சல்மானின் ஒரு ஃபோட்டோவை பகிர்ந்து,”கங்கா இப்போ உன் பிரெண்ட் கன்னியாகுமரிலே ஒரு பிரைவேட் யுனிவர்சிட்டில புரோபசர் ஆகிட்டான் டீ” என மெசேஜ் செய்திருந்தாள்.
கங்கா அந்த ஃபோட்டோவை ஜூம் செய்து பார்க்க,கோட் சூட்டுடன் மைக்கை கையில் பிடித்த படி ஏதோ மாணவர்களை நோக்கி பேசிக் கொண்டிருந்தான்.
ஏற்கனவே நல்ல நிறம்தான் சல்மான். இப்போது இன்னமும் கலராக இருந்தான். முகத்தில் மேல்வர்க்க கலை. உடம்பையும் குறைத்து பாலிவுட் ஹீரோ போன்ற தோற்றத்தில் இருந்தான். ஆனால் கங்காவிற்கு இந்த சல்மானை கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அவள் பார்த்து எல்லாம் குழந்தை தனமான சிரிப்பு கொண்ட சல்மான்தான்.அந்த ஃபோட்டோவில் ஏதோ அன்னியமாக தெரிந்தான்.
இப்போதெல்லாம் பள்ளி முடிந்து வந்தவுடன்,சிவராமனுடன் சிறிது நேரம் உரையாடுவதை வழக்கமாக்கிக் கொண்டாள் கங்கா. அன்று கஸ்தூரியின் மகள் திவ்யா தனது கைக்குழந்தையை எடுத்துக் கொண்டு, சிவராமனை பார்க்க வந்து போனதை பகிர்ந்து கொண்டார்கள்.இந்த திவ்யா,குழந்தையே கையிலையே வெச்சுட்டு இருக்கு.
நாங்களும் உன்னை இப்படிதான் கங்கா கையிலையே வெச்சுட்டு இருப்போம். உனக்கு எதுமே ஒத்துக்காது.அடிக்கடி நலக்கம் வந்துரும். நைட் எல்லா தூங்க மாட்டே.சரியா சாப்பிட மாட்டே.நான் உன்னை கீழே கூட இறக்கி விட மாட்டேன் என்று பழைய நினைவுகளை பகிர்ந்தார் சிவராமன்.
மெல்ல அவரது சின்ன வயது கதைகளை கேட்டாள் கங்கா.
அப்போ எனக்கு ஆறு வயசு.எங்க அப்பாக்கும் அம்மாவுக்கும் சண்டை. எங்க அப்பா எங்க அம்மாவை அடிச்சுட்டாரு.எனக்கு சரியான கோபம், “என் கண்ணு முன்னாடியே எங்க அம்மாவே அடிக்கறையானு” கீழே இருந்த வெங்கச்சன் கல்லே எடுத்து எங்க அப்பா மேலே வீசிட்டேன்.
அப்பறோம் எங்க சங்கரம்மா வந்து, என்னையே தேவர் சோலைக்கு கூட்டிட்டு போய்ருச்சு.அப்பறோம் எங்க அப்பா இறந்துட்டாருனு மலைலே இருந்து கூட்டிட்டு வந்தாங்க.
தாத்தா ஏன்ப்பா இறந்தாங்க?
அவருக்கு ஏதோ உடம்பு சரியில்லனு சொன்னாங்க. அப்பவெல்லா வெளி உலக அறிவு அந்தளவுக்கு இல்ல கங்கா.
எங்க அப்பா இறந்த கொஞ்ச நாள்லே எங்க சங்கரம்மாவுக்கு உடம்பு சரியில்லாம படுத்த படுக்கை ஆகிட்டாங்க.தேன் கொடுத்தா சரியாயிடும்னு சொன்னாங்க.நானே மலங்காட்டுக்கு போய். மரத்துல ஏறி தேன் எடுத்தே.தேனீ என் கையே கொட்டிருச்சு. இருந்தும் எப்படியாவது எங்க சங்கரம்மாவை காப்பாத்தனும்னு வலியை பொறுத்துட்டு தேனை கொண்டு வந்தேன்.அவங்க வாயில ஊத்துனோம். அதோட அவங்க சாமிகிட்ட போய்ட்டாங்க.
அவங்க போனதுக்கு அப்பறோம் சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டம் கங்கா.நான் ஒரு ரைஸ் மில்லுலே மூட்டை தூக்கறே வேலைக்கு சேர்ந்துட்டேன்.
அப்பவெல்லாம் அரிசிக்கு ரொம்ப தட்டுப்பாடு.இப்போ கிடைக்கறே மாதிரி எல்லாம் கிடைக்காது. நான் வேலை முடிச்சிட்டு வரும் போது என்னோட ரெண்டு பேண்ட் பாக்கெட்லையும் அரிசி எடுத்து போட்டுட்டு வந்துருவேன்.
நான் வர வரைக்கும் எங்க அம்மாவும், தங்கச்சியும் தூங்காம காத்திட்டு இருப்பாங்க. நான் அங்கிருந்து கொண்டு வர அரிசிதான் நைட் சாப்பாடு எங்களுக்கு. அதுனால சாப்பாட்டை மட்டும் வீணாக்க எனக்கு பிடிக்காது
வேற என்னவெல்லாம்ப்பா உனக்கு பிடிக்கும்?
ஐம்பது பைசாக்கு மிருகங்க உருவம் போட்ட பிஸ்கட் விப்பாங்க அது எனக்கு ரொம்ப பிடிக்கும் கங்கா. ஆனா அது வாங்க கூட காசு இருக்காது.இப்போ காசு இருக்கு அந்த பிஸ்கட் இல்ல.
அப்பறோம் ‘எம்ஜிஆர்’ படம்னா ரொம்ப பிடிக்கும். சந்தோசம்னாலும் சரி. துக்கம்னாலும் சரி ஒரு குவார்ட்டர் வாங்கி குடிப்பே கங்கா.
ஆனா நான் எல்லாத்தையும் ஜெயிச்சு வந்தேன் கங்கா.நான் தோத்தது ரெண்டே விஷயத்துல ஒன்னு உன் கல்யாணம். இன்னொன்னு என் காலை இழந்தது.
அதுவரை கண்ணோரம் நீரோடு கேட்டிருந்தவள் தன் திருமண பக்கம் பேச்சு திரும்ப,அவரை திசை திருப்பி டிவியை ஆன் செய்தாள்.
கட்டிலின் மேல் அவர் படுத்திருக்க கீழே அமர்ந்தவாறு அவர் காலை பிடித்து விட்டு கொண்டே டிவியில் ஓடிய பாட்டை கேட்டாள்.சிறிது நேரத்தில் அவர் கால் மீதே தலை வைத்து தூங்கிப் போனாள்.
அடுத்த நாள் காலை நித்யாவும், கங்காவும் கோவிலுக்கு சென்றனர்.
கங்கா அங்கே பாருடி ஜோசியம் பாக்கறாங்க.நமக்கு எப்போ கல்யாணம் ஆகும்னு பாக்கலாம் வாடி.
நா வரலே நித்யா.நீ போய் பாரு.
சரி நானே ரெண்டு பேருக்கும் பாக்கறே.
முதலில் நித்யாவிற்கு பாக்க..மாமியார் இல்லாத வரன். நல்ல உத்தியோகமுள்ள வரன் அமையும் என்றார்.
மாமியார் இல்லாத வரன் என்றவுடன் நித்யாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
அடுத்து கங்காவிற்கு பார்க்க..
உங்களுக்கு காதல் திருமணம்தான். அதுவும் உங்கள் பழக்க வழக்கத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாத வரன்தான் அமையும்.
இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து மகிழ்ச்சியாக, “ஈருடல் ஓர் உயிராக வாழ்வீர்கள்” என ஆரூடம் சொல்லப்பட்டது.
–தலைவன் வருவான்…
error: Content is protected !!