Skip to content
Post Views: 2,410
*19*
சென்னைக்கு சென்று வந்ததிலிருந்து தெளிந்துகிடந்த மகன் முகமே அவன் மனநிலையை உரைக்க, பெற்றவர்கள் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. மாரியம்மாள் மட்டும் தன் புராணம் பாடிக்கொண்டிருந்தார். வள்ளி விஷயத்தில் அடுத்து என்ன என்று தெரியவில்லை என்றாலும் சென்னைக்கு வேலையை மாற்றித் தரும்படி மேலிடத்தில் அழுத்தம் கொடுத்தான்.
காலை எழுவதும் இரவு உறங்குவதும் அவள் குரலில்தான். மறுவாரம் வந்த அவனது விடுமுறையில் அவளை பார்க்க வருகிறேன் என்றவனை கொஞ்சம் ஓய்வு வேண்டும் என்று அதட்டி ஊரிலேயே இருக்க வைத்தாள். முன்னைப்போல மனதில் குழப்பங்களே இல்லை என்றில்லாமல் மனம் சோர்வுறும் சமயம் மனைவியிடம் பகிர்ந்து அதனை தணித்துக்கொள்கிறான்.
“உன்னை பாக்கணும் போல இருக்கு மலர். இந்த வாரம் வந்துட்டு போறேன்.” அலைபேசி காணொளி தவிர்த்து நேரில் பார்ப்பது என்பது பதினைந்து நாட்கள் கடந்து மாதத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. அவள் ஒருவாரம் வந்து செல்வாள் என்று இவன் எதிர்பார்த்திருக்க அவள் வரவில்லை.
Advertisement
“எனக்குதான் ஒருநாள் லீவு, உனக்கு ரெண்டு நாள் இருக்குல்ல நீயாவது வரலாம்ல இங்க.” என்று கேட்டதற்கு,
“ரெண்டு நாள் வந்தாலும் நீங்க கடைக்கு போயிடுவீங்க. அத்தை மாமா வயலுக்கு போய்டுவாங்க எனக்கு போரடிக்குது. மாசத்துக்கு ஒருமுறை வரேன், அடிக்கடி எல்லாம் அலைய முடியாது.” என்ற மனைவியின் மீது ஆதங்கம் முகிலனுக்கு.
மாதத்திற்கு இருமுறை இவனும் இருமுறை அவளும் மாறி மாறி வந்து செல்லலாமே என்று அவன் நினைக்க, மனைவி அப்படி எண்ண வேண்டுமே. கொஞ்சம் வருத்தம், நிறைய சுணக்கம்தான். மனைவியிடம் அதை காட்டவும் செய்தான். ஆனால் வருத்தம் எல்லாம் சில மணி நேரம்கூட தாக்குபிடிப்பதில்லை. அவளே எங்கோ இருக்கிறாள் இப்படி தள்ளி இருந்துகொண்டு சண்டை பிடிப்பதா என்று இறங்கிவிடுவான்.
Advertisement
இப்படி அலைபேசியில் காதல் வாழ்க்கை வளர்பிறையாய் எந்த சங்கடமுமின்றி வளர்ந்தாலும் சில தேய்மானங்கள் இருக்கவே செய்தது. தனித்தனியாக இருப்பதால் இருவருமே அதனை பெரிதுபடுத்திக்கொள்ளவில்லை.
Advertisement
“கல்யாணம் ஆன புதுசுல நீ அங்க போறதும் அவ இங்க வர்றதும்னு இருந்தீங்க. இப்போ என்ன பேச்சு மூச்சே காணோம்? அதுக்குள்ள சலிச்சிப்போச்சா ரெண்டு பேருக்கும்?” என்று பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மாரியம்மாள் வெடித்துவிட, முகம் திருப்பினான் முகிலன்.
“பதில் சொல்லக்கூட வலிக்குதோ…”
“ஏம்மா வேலையை விட்டுட்டு சேர்ந்து இருந்தா போதுமா? சோறு பொங்க காசு வேணாம்?”
Advertisement
“அதுக்குன்னு கடைசி வரைக்கும் காசு சேத்துக்கிட்டே இருந்தா அதை ஆண்டு அனுபவிக்க வாரிசு வேணாம்? அப்படியென்ன வேலைங்குறேன்?”
“அப்போ வேலையை விட்டுறவா?” கடுப்பாகத்தான் வந்தது கேள்வி.
“நீயேன் விடணும்? அவ வரட்டும்.”
“லட்ச ரூபா சம்பளம் வாங்குறா, என்னை விட மூணு மடங்கு அதிகம். அப்போ நான் வேலையை விடுறதுதான் சாமர்த்தியமா இருக்கும்.” என்று இவன் விளிக்க, முகவாயை வெட்டினார் மாரியம்மாள்.
“நல்லா இருக்கே சேதி ஆம்பளை வீட்ல உக்கார பொம்பளை வேலைக்கு போறதா?”
“அவ அளவுக்கு நான் சம்பாரிக்க இன்னும் எத்தனை வருஷம் ஆகுமோ அதுவரைக்கும் நாங்க கஷ்டப்படவா?”
வார்த்தைக்கு வார்த்தை பேசினாலும் மனதில் இருந்ததுதான் வார்த்தையாய் வந்தது. என்னதான் மனைவி அருகில் இல்லை என்ற வருத்தமிருந்தாலும் ஒருபோதும் அவள் வேலையை விடவேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. முன்னர்கூட இங்கு வந்து ஏதாவது வேலை பார்த்துக்கொள்ள சொல்லலாம் என்று ஒருமுறை எண்ணியிருந்தான், எல்லாம் அவள் சம்பள விவரம் தெரிந்தபின் மொத்தமாய் மாறிப்போனது. தன் வளர்ச்சியை விட அவள் வளர்ச்சி அங்கிருந்தால் தான் சாத்தியம் என்று புரிந்தபின் தன் எண்ணவோட்டத்தை மாற்றிக்கொண்டான்.
இருவரில் யாராவது ஒருவர் இறங்கிவந்தால் சுணக்கங்கள் மறைந்து சுமூகமாக செல்லும் உறவு. அதுவே ஒருதலைபட்சமாகும் சமயத்தில் சலித்துவிடும். இருபுறமும் தழைய வேண்டிய இடத்தில் தழைய வேண்டும். சரிசமமான ஐம்பது சதவிகத பகிர்வு என்பது நடைமுறையில் சாத்தியமற்றது. சிலநேரம் எழுபது முப்பது, என்பது இருபது, நாற்பது அறுபது இப்படி சூழலுக்கு ஏற்ப மாறி மாறி தோள் கொடுக்கையில் பூரணமாகும் உறவு.
பிரபாவின் உபயத்தில் இதனை புரிந்துகொண்ட குழலி சொல்லாமல் கொள்ளாமல் பெரிய பெட்டியோடு அவனிடம் வந்து சேர்ந்தாள்.
“என்ன பெட்டியெல்லாம் பலமா இருக்கு? லீவ் போட்டிருக்கியா?” அவள் வந்து நின்ற அதிர்வில் கட்டியணைத்து விலகியவன் அவள் உடைமைகளை பார்த்துக்கேட்க,
“ஒரு மாசம் ஒர்க் ஃபிரம் ஹாம் வாங்கிட்டு வந்திருக்கேன்.” மகிழ்வாக கண்சிமிட்டி சொன்னவளை கண்ணிமைக்க மறந்து வெறித்தான்.
“ஹலோ பாஸ்… எதுக்கு இவ்ளோ ஷாக்? ஒரு மாசம்தான்…”
“இப்படி ஒரு வழி இருக்குனு இத்தனை நாள் சொல்லவே இல்லையேடி நீ… பாவி என்னை பாடாப்படுத்திட்ட…” செல்லமாய் கடித்துக்கொண்டே அவளை தன்னிடம் இழுத்துக்கொண்டான்.
“ஐ.டில வேலை பாத்தாலும் வீட்லேந்து வேலை பார்க்க நாங்க என்ஜினியர் இல்லை… ஃபினாஸ் செக்ஷன்ல இருக்கோம். கொரோனோ அப்போ மட்டும்தான் இது கொடுத்தாங்க. அதுக்கப்புறம் புல்லா ஆபீஸ்தான். அம்மா தான் கேட்டுப்பாரேன்னு சொன்னாங்க. ஆபீஸ்ல உடனே ஒத்துக்கல, மேனேஜரை கொடஞ்சி வாங்கி இருக்கேன்.”
“நீயே மேனேஜர்தானடி…”
“ஆமாதான்… இருந்தாலும் கொஞ்சம் கெஞ்ச விட்டுட்டாங்க. அதுக்கே நீங்க என்னை நல்லா கவனிக்கணும்.” என்று குறும்பாய் அவள் கண்சிமிட்ட, அவன் கவனித்த கவனிப்பில் உடல்வலி வந்து தொலைத்தது.
மனைவியை பின்னிருந்து அணைத்து அவள் வெற்றுத்தோளில் முகம் புரட்டி அவ்வப்போது முத்தங்கள் வைத்து அவள் இருப்பை உணர்ந்துகொண்டான்.
“டைமாச்சு. நான் வந்தப்போ வீட்ல யாருமில்லை, வந்துரப்போறாங்க.” ஹீனமாய் அவள் குரல் அறையில் ஒலிக்க, அலைபேசி எடுத்துப்பார்த்தான். அத்தனை ஒன்றும் நேரமாகிடவில்லை.
“ரெண்டு பேருமே நான் கடைக்கு போனப்புறம் பத்து பதினோரு மணிக்குதான் வருவாங்க.” அவளை சமாதானப்படுத்தி இடையோடு கைகொடுத்து இறுக்கிக்கொண்டான் முகிலன். நாசி அவள் சிகை நுழைந்து வாசம் பிடிக்க, அவன் கைகளில் அழுத்தம் கொடுத்தவள் பின்னகர்ந்து அவனோடு ஒண்டிக்கொண்டாள்.
“ஒருமாசமா என்னை படுத்திட்ட நீ…” மீண்டும் மீண்டும் முனகிக்கொண்டே அவளை நெருக்க,
“ஒருமாசம் தான் வீட்லேந்து வேலை பாக்க பர்மிஷன், அடுத்த மாசம் போகணும்.” என்று மீண்டும் நினைவுப்படுத்த முயன்றாள்.
“இப்போவே எதுக்கு அதை நியாபகப்படுத்துற. ஒரு மாசம் இருக்கு.” நீட்டி முழக்கியவன் அவளிடமிருந்து நகர்ந்து நேராகப்படுத்தான்.
“அன்னைக்கு நீங்க வந்துட்டு போனதுக்கு அப்புறம் அம்மா என்ன நினைச்சாங்களோ தெரியல, இனிமே இப்படி தனித்தனியா இருக்கக்கூடாது. மாப்பிள்ளையால வரமுடியலைனா நீ போய் இருக்கப் பாருன்னு சொல்லிட்டே இருந்தாங்க. அவங்க புஷ் பண்ணவும்தான் நானும் ஆபீஸ்ல புஷ் பண்ணேன். ரெண்டு பேருமே எபோர்ட்ஸ் போட்டாதான நம்ம லைஃப் ஸ்மூத்தா இருக்கும்…” அவளும் நேராகப் படுத்து தன் முடிவிற்கு பின்னான காரணத்தை பகிர, இலகுவான பேச்சுவார்த்தைகள் அங்கே.
“நமக்குள்ள ஏதோ பிரச்சனைன்னு அவங்களுக்கு புரிஞ்சிருக்கும், இங்கேயும் அப்பா கேட்டாங்க. அத்தை தனியா இருக்காங்களா மலர்?”
“வந்தனாவும் சந்தியாவும் பாத்துக்குறேனு சொல்லியிருக்காங்க. நீங்க அங்க வந்ததும் அவங்க வீட்டுக்கு விருந்துக்கு போகணும். முன்னாடியே போயிருக்கலாம் இங்க முதல்ல முடிச்சிட்டா நீங்க அங்க வந்ததும் பாத்துக்கலாம்னு இருந்துட்டேன்.”
“போலாம் மலர். இங்க போற ஐடியா இல்லை.” என்றவன் விருந்துக்கு போகாததற்கான காரணத்தை பகிர அவள் அமைதியாக இருந்தாள்.
“எனக்கு கஷ்டமா இருக்கு மலர். அங்க அவ அழுதுட்டு இருக்குறப்போ அதை சரிசெய்யுறது என் கடமை இல்லையா.” சங்கடமாய் அவன் பார்க்க,
“எடுத்தோம் கவுத்தோம்னு செய்ய முடியாது. கொஞ்சம் அமைதியா இருங்க.”
“அமைதியா இருக்க இருக்க அவ நினைப்பு தப்புனு எப்படி புரியும்? அவ சொன்னதோட வீரியம் இன்னும் அவளுக்குப் புரியல. எப்படி புரிய வைக்குறது யாருகிட்ட சொல்றதுன்னும் எனக்குத் தெரியல. நீ இதை எப்படி எடுப்பேன்னு வேற யோசனை.” வள்ளி அப்படி சொல்லிய பின்பும் தன்னால் அதற்கு தீர்வு காணமுடியவில்லையே இன்னும் இன்னும் கஷ்டப்படட்டும் என்று அவளை விட்டுவிட்டோமே என்ற குற்றவுணர்வு தான் இத்தனை நாளும்.
“தெரியலைனாலும் நீங்க மட்டும்தான் புரிய வைக்க முடியும். இதை வேற யாருகிட்ட சொன்னாலும் அபத்தமாகிடும். நாளைக்கே அவ எல்லாத்தையும் புரிஞ்சிகிட்டு வாழ ஆரம்பிக்குறப்போ இந்த உண்மை தெரிஞ்சவங்க நிம்மதியா வாழ விடணுமே. அதான் சொல்றேன் முதல்ல நீங்க அமைதியாகுங்க, அப்புறம் போய் பேசுங்க. எனக்கு பாஸ்ட் முக்கியமில்லை எதிர்காலம்தான் முக்கியம். அதுல நேர்மையா ஒளிவுமறைவு இல்லாம வாழனும்.” என்று தன் கண்ணோட்டத்தை பகிர்ந்தாள். அவள் சொல்வதும் சரிதானே என்று மனைவிக்கு செவி சாய்த்தவன் அவளை இழுத்து நெற்றி முத்தம் வைத்து எழுந்துகொண்டான்.
இருவருமாக பின்கட்டு சென்று பேசிக்கொண்டே பல் துலக்கி, குளித்து, துணிகளை ஊற வைத்தனர்.
“வாஷிங் மெஷின் வாங்கலாமா மலர்?” மனைவி துணிகளை ஊற வைப்பதைப் பார்த்து யோசனையுடன் கேட்டான் முகிலன்.
“வாங்குனாலும் வைக்க இடமில்லை.”
“ஆமால்ல… பாத்ரூம் போணும்னாலும் இங்கதான் வரணும், கிச்சன்ல பாத்திரம் தேய்க்க முடியாது. இந்த வீடு வசதிப்படாதுனு தான் மாறலாம்னு நினைச்சேன். நீயும் அம்மாவும் வேணாங்குறீங்க.”
“அத்தை மாமாவுக்கு வசதி பத்தலைனா மாறிடலாம். இருக்கப்போற கொஞ்ச நாளுக்காக எனக்காக மாத்த வேணாம்.”
“உனக்கு எதுவும் சங்கடம்னா உடனே சொல்லு என்ன பண்ணலாம்னு பாப்போம். கஷ்டப்பட வேணாம்.” என்று இயல்பான பேச்சுக்களுக்குப் பின் மாரியம்மாள் சமைத்து வைத்ததை இருவருமாக சேர்ந்து உண்டனர்.
“பாத்திரம் நான் தேய்ச்சிக்குறேன், நீங்க கிளம்புங்க.” கொல்லைக்கு வந்து மனைவிக்கு உதவ முயன்றவனை தடுத்தவளாய் சற்று சிரமப்பட்டு அமர்ந்தவாக்கில் பாத்திரங்களை தேய்த்தாள்.
“உனக்கு வசதிப்படல பாரு. தள்ளு, நான் பாத்துக்குறேன். நீ போய் துணியை அலசி காயப்போடு.” அவளை விரட்ட, இவளும் சலவை கல்லுக்கு மாறிவிட்டாள்.
“சமைக்குறீங்க, பாத்திரம் கழுவுறீங்க, துணியும் துவைப்பீங்களோ. எப்படிங்க? அத்தையை பார்த்தா உங்களை தாங்கு தாங்குனு தாங்குற அம்மாவா தெரியுது, எப்படி வேலை செய்ய விட்டாங்க உங்களை?”
“முதல்ல பெரிய குடும்பமா வேற வீட்ல இருந்தோம் சித்தப்பா, சித்திங்கனு. அத்தைங்க அடிக்கடி வந்துட்டு போவாங்க. வீடே விழா கணக்கா இருக்கும். நிறைய சமைக்கணும், நிறைய சுத்தம் பண்ணனும்னு வேலை இருந்துட்டே இருக்கும். ஆரம்பத்துல சித்திங்க செஞ்சாங்க, அவங்களுக்கு பசங்க பொறக்கவும் தனியா போயிட்டாங்க. அப்புறம் எல்லா அம்மாதான்.
மாறி மாறி அத்தைங்க பிரசவம், அவங்களுக்கு உடம்பு முடியாதப்போ பாக்குறது சித்திங்க இல்லைனா அவங்க வீட்டையும் பாக்குறதுனு கிட்சன்ல ஏகப்பட்ட வேலை. ஒருதடவை முடியாம படுத்துட்டாங்க, அப்போ தட்டுத்தடுமாறி கிட்சனுக்கு போய் அம்மாக்கு கஞ்சி வச்சி குடுத்தேன். அதுலேந்து கொஞ்ச கொஞ்சமா கத்துக்கிட்டேன்.
சில சமயம் அத்தைங்க மாமா கூட ஏதாவது உரண்டையை இழுத்துட்டு பொசுக்கு பொசுக்குனு வந்துடுவாங்க. எடுத்துக்கட்டி செய்யனும். அம்மாக்கு அதுவும் கொஞ்சம் கோவம், அவங்க இங்க வந்தா அதிகாரம் மட்டும் பண்றாங்க, உதவிக்கு வரலைன்னு. நம்ம வீட்டு பொண்ணு அமைதியா போன்னு அப்பா சொல்லி சொல்லி அப்போ அடக்கிட்டாங்க போல. சொத்து பிரிச்சி எல்லாரும் வளந்து பிசி ஆனதும் போக்குவரத்து குறைஞ்சிடுச்சு. அம்மா கை ஓங்கவும் பேச வாய்ப்பு கிடைச்சு கொஞ்சம் பேசிடுறாங்க.
வயசாக வயசாக அவங்களுக்கும் உதவி தேவைப்பட்டுருச்சு. அப்பா வெளில எல்லாம் பாத்துப்பாரு வீட்ல ஒன்னு நகர்த்த மாட்டாரு. அதனால நான் ஆர்வம் காட்டவும் பழக்கி விட்டுட்டாங்க.” என்று நீண்ட விளக்கமாக தன் முப்பது வருட குடும்பக்கதையை சுருக்கிக் கூறினான் முகிலன்.
கதை கேட்டுக்கொண்டே அவள் வேலை முடிக்க, இவனுக்கும் நேரமானது. முகத்தை துடைத்துக்கொண்டு உடை மாற்ற, பின்னோடே வந்தவள் அவனைத் திருப்பி சட்டை பொத்தான்களை போட்டுவிட்டாள்.
“இது நல்லாயிருக்கே…” அவளை சுற்றி வேலியாய் கையை படரவிட்டு மூக்கோடு மூக்குரசி அவள் செய்வதை இரசித்தான்.
“தினமெல்லாம் செய்ய மாட்டேன். எனக்கா தோணனும்.” சீண்டலாய் சொல்லியவள் அவன் தோள் தட்டி இரண்டடி பின்னெடுக்க,
“எங்க போற? இன் பண்ணி விடு.” என்று தன்னிடம் வம்பாய் இழுத்தான் முகிலன்.
“ஆசைதான். இவர் சின்ன பாப்பா தலை சீவி, பவுடர் போட்டு, டவுசர் மாட்டி விடுறாங்க…” செல்லமாய் அவன் முகத்தினில் குத்த, ஆர்ப்பாட்டமாய் சிரித்தான்.
“என்ன சிரிப்பு?”
“நீ சொன்னது எல்லாம் கற்பனை பண்ணி பாத்தேன். அத்தனை ஒன்னும் மோசமில்லை…” என்றவன் மகிழ்வு அவன் கண்களை எட்டியிருந்தது. அவளையும் அது தொற்றிக்கொள்ள, எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டு ஓடிவிட்டாள் குழலி.
சிரித்துக்கொண்டே தலை சீவி, இன் செய்து கிளம்பிவர மாரியம்மாள் சமைத்து வைத்திருந்ததை அவனுக்கு டிபன் பாக்சில் போட்டு எடுத்துவந்து நீட்டினாள். விட்டுச்செல்ல மனமே இன்றி மீண்டும் அவளை அணைக்கப் போக,
“ஒருமாசம் இங்கதான் இருப்பேன். நைட் கட்டி புடிச்சிக்கலாம். இப்போ சட்டை கசங்கிடும்.” இஸ்திரி போட்டு நேர்த்தியாய் இருந்த அவன் சீருடையின் நெஞ்சுப்பகுதியை தேய்த்துவிட்டு ஆசுவாசப்படுத்தினாள்.
வாசல் வரை சென்று அவனுக்கு கைகாட்டி அவனை அனுப்பிவிட்டு உள்ளே வந்தவள் அசதியில் அறைக்கதவை தாழிட்டு படுத்துவிட்டாள். செல்லும் வழியில் இவள் வந்திருப்பதை தந்தையிடம் சொல்லிவிட்டு சென்றான் முகிலன். அவர் மாரியம்மாளிடம் சொல்ல,
“அவ வர்றது தெரியாம எல்லா வேலையும் முடிச்சிட்டேனே. மதிய சமைக்க சொல்லியிருக்கலாம், இப்போ ஒரு வேலையும் இல்லாம தூங்குவாளோ?” என்று மோவாயில் கைவைத்தார் அவர்.
“உன் புத்தி போகுது பாரு… அலைச்சல்ல தூங்குது எழுப்ப வேணாம்னு முகிலு சொல்லிட்டு போயிருக்கான்.” என்று கந்தசாமி அவரை அடக்கினார்.
“அவனுக்கு ஒன்னும் தெரியாது, அவளை தலையில தூக்கி வச்சிப்பான்.” என்றவரிடம் ஒருமாதம் இவள் இங்கிருந்தே வேலை பார்க்கப்போகிறாள் என்று தெரிவித்ததும் அவர் முகத்தில் மலர்ச்சி.
“இப்போவாச்சும் சாமர்த்தியம் வந்துச்சே. என்னமோ நான் பேசுறேன்னு என்னை வசவுறீங்களே நான் சொல்லவும்தான் ரெண்டும் யோசிச்சி இன்னைக்கு அவ வீடு வந்திருக்கா. அதுக்குதான் நெம்பிகிட்டே இருக்கணும்ங்குறது, விட்டா அவங்க இஷ்டத்துக்கு இருப்பாங்க.” தான் நடந்துகொள்வதுதான் சரியென்று வாதிட்டவர் மறுநாளில் இருந்து மருமகளிடம் வீட்டுப் பொறுப்பை நயமாக தள்ளிவிட்டார்.
ஏற்கனவே வந்து சென்ற இருநாளும் இப்படித்தான் நடந்தது என்பதால் அவளுக்கு பெரிதாக தெரியவில்லை. அதுவும் பெரியவர்கள் ஏதாவது வேலை என்று பாதி நேரம் வெளியில் சென்றுவிடுகிறார்கள். மாரியம்மாள் இருக்கும் சமயம் மட்டுமே கொஞ்சம் குடையும் பேர்வழி. அதை சமாளித்துவிடலாம் என்று எளிதாக கணக்கு போட்டுவிட்டாள் குழலி.
விடுமுறை நாளான அந்த வாரயிறுதியை எளிதாக கடந்தவள் வார நாட்கள் வந்ததும் தடுமாறினாள். காலை ஒன்பதரைக்கு துவங்கும் வேலை மாலை ஆறரை வரை நீளும். இடையில் இரண்டு சிறிய இடைவேளையும் மதிய உணவு நேரமும் உண்டு, மற்றைய நேரம் எழுந்திருக்க முடியாது. அதனால் மாரியம்மாள் போலவே காலையே அனைத்தும் சமைத்துவிடலாம் என்று முடிவு செய்து திங்கள் அன்று நேரமே எழுந்து செய்தவளால் செவ்வாய்க்கிழமை செய்ய முடியாமல் போனது.
ஏகாந்தம் கொடுத்த நறுமணத்தில் புதுமணத்தம்பதியரின் இரவுகள் நீள, உறக்கத்தின் அளவு குறைந்தது. காலை எழுவதே சிரமமாக இருக்க, முயன்று உடலை நகர்த்தி சமையல்கட்டுக்கு வந்து காலை உணவு மட்டுமே செய்தாள். மதிய உணவு செய்ய நேரமில்லை என்று கணவனை பாவமாக பார்த்தாள். அவள் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டவனோ வெளியில் பார்த்துக்கொள்கிறேன், பொறுமையாக சமைத்துக்கொள் என்று கொஞ்சம் காய்கறிகள் மட்டும் நறுக்கி கொடுத்தான். மலர்ந்த முகமாய் அவனை அனுப்பிவிட்டு எளிமையாக சமையல் செய்து வேலையில் அமர்ந்துவிட்டாள் இவள். வீட்டிற்கு வந்த மாரிக்கு அவள் முகிலனுக்கு மதிய உணவு கொடுக்கவில்லை என்று தெரிந்திருக்கவில்லை.
இரவு சமையல் முடித்து மறுநாளுக்கு தேவையான காய்கறிகளை இவள் நறுக்கவும்தான் மாரியம்மாளுக்கு சந்தேகம் வந்தது.
“அதான் சமையல் ஆச்சே. இப்போ எதுக்கு இவ்ளோ நறுக்குற?”
“நாளைக்கு சமைக்க அத்தை.”
“ஏதே! நாளைக்கு சமைக்க இன்னைக்கே நறுக்குறியா?” வாய் பிளந்துவிட்டருக்கு நறுக்கென்று வந்தது.
“காலையில செய்ய நேரம் இருக்க மாட்டேங்குது. இன்னைக்கே மதியத்துக்கு அவங்களுக்கு கொடுக்க முடியல. அதுதான் நைட்டே கட் பண்ணி பிரிட்ஜ்ல வச்சிட்டா காலையில ஈஸியா இருக்கும்னு பண்றேன்.”
“பட்டணத்து பழக்கமா இதெல்லாம்? இங்க எல்லாம் புதுசா தான் செய்யணும், இப்படி பழசை சாப்பிட்டா எப்படி உடம்புல சேரும்?”
“பத்திரமா டப்பாவுல போட்டு வச்சிட்டா ஒன்னும் ஆகாது அத்தை. உடம்புக்கு எதுவும் செய்யாது.” என்று சொல்லிப்பார்த்தாள் அவர் காதில் வாங்க வேண்டுமே.
விவசாய குடும்பத்தில் வந்து புதிதாய் சமைத்துச் செய்யாமல் இதென்ன பழக்கம். நான்கு பேருக்கு ஒரு அரை கிலோ காய்கறி நறுக்க முடியாதளவுக்கு அப்படியென்ன தூக்கம்? தேங்காய் முதற்கொண்டு முதல் நாளே கீறுவாயா? என்று எல்லா பக்கமும் சாமியாடினார். வெளியே அமர்ந்து போன் பார்த்துக்கொண்டிருந்த கந்தசாமி சத்தம் கேட்டு உள்ளே வந்து விசாரிக்க, மாரியம்மாள் அவரிடம் ஒருபாடு ஆடினார்.
“அப்படி புதுசாதான் வேணும்னா நீ காய் நறுக்கி கொடு, குழலி சமைக்கட்டும்.”
“தோட்டத்தை பாக்க வேணாமா நானு? மருமவ வந்தும் கொஞ்சம் கூட ஓய்வில்லாம எல்லாம் நானே பாக்கணுமா?” என்று பிடிவாதமாய் நின்றார்.
இத்தனை வருடம் அவர்தானே பார்த்தார். அதெப்படி மருமகள் வந்த ஒருசில நாட்களிலே முடியாமல் போகிறதோ என்று எழுந்த எண்ணத்தை சட்டென துடைத்த குழலி மாமனாரைப் பார்க்க, அவர் மாரியம்மாளிடம் சிறிய குரலில் பேசிக்கொண்டிருந்தார்.
“உன்னால முடிஞ்சா உதவு இல்லை அமைதியா இரு. வேலையும் பாத்துட்டு இதையும் எப்படி பாக்கும்?” மருமகள் முன் மனைவியை கடியக்கூடாது என்று பொறுமையாக அவர் பேச, மாரியம்மாளுக்கு அந்த எண்ணமெல்லாம் இல்லை.
“ஏன் நான் பாக்கல? தோட்டம் துரவு எல்லாத்தையும் கவனிச்சிகிட்டு வீட்டையும் சமாளிக்கல. அதுவும் உக்காந்து பாக்குற வேலைதான என்னை மாதிரி வெயில்ல நின்னா செய்யுறா? ஏன் இவ்ளோ பேசுற நீங்க வேளைக்கு புதுசா வேணும்னு சமைக்க வச்சி சாப்பிட்ட ஆளுதான? இப்போ என்ன?”
“எப்போவோ நடந்தது எல்லாம் பேசாத. அந்த பொண்ணுக்கு அதுதான் வசதின்னா விடேன். நேரத்துக்கு உன் தட்டுல சோறு இருக்குல்ல, அதுவும் நீ சொல்ற மாதிரி உன்கிட்ட கேட்டுட்டு நம்ம வீட்டு வழக்கப்படிதான் செய்யுது.” என்று மருமகளுக்கு வக்காலத்து வாங்க, மாரி விடுவேனா என்று நின்றார்.
பொறுத்துப்பார்த்தவள், “என்னால இவ்வளவுதான் பண்ண முடியும் அத்தை. இதைவிட சீக்கிரம் எழுந்தேன்னா கம்ப்யூட்டர் பாக்க முடியாது, தலைவலி வந்துடும். உங்களுக்கு புடிக்கலைனா எப்போதும் போல காலைல நீங்களே செஞ்சிடுங்க. நைட் எல்லா வேலையும் நான் பாக்குறேன்.” என்றுவிட்டாள் குழலி.
‘எவ்வளவு திமிராக பேசுகிறாள். இவள் சொகுசாய் தூங்க நான் செய்ய வேண்டுமா?’ என்று வீம்பு வளர்த்துக்கொண்டவர், “இப்படி முன்னாடியே எல்லாம் செஞ்சு வச்சி எங்களை ஆஸ்பித்திரிக்கு அனுப்பாம இருந்தா சரி.” என்றுவிட்டு வெளியே சென்றுவிட்டார்.
குழலி மாமனாரை சங்கடமாகப் பார்க்க, “உனக்கு எது வசதியோ பண்ணுமா.” என்று சொல்லி நகர்ந்துவிட்டார் அவரும்.
அந்த பிரச்சனை அதோடு முடிந்தது என்று நினைக்க, மகன் வந்ததும் அவள் இப்படி பேசுகிறாள் என்று குறை படித்தார்.
“அவளுக்கு அதுதான் முடியும்மா. உன்னை மாதிரியே செய்யணும்னா நீதான் செய்யணும்.” என்றுவிட்டான்.
எல்லாரும் அவள் பக்கம் சென்றுவிட்டனர் என்று முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு சுற்ற,
“கொஞ்சமாச்சு புத்தி இருக்கா உனக்கு? சின்னஞ்சிறுசுக சந்தோஷமா இருந்தா போதும்னு விடுவியா எல்லாத்துலயும் குறை கண்டுபுடிச்சிட்டு இருக்க? சமையகட்டுல உன் ராஜாங்கம் முக்கியமா வாரிசு முக்கியமாடி?” என்று கந்தசாமி மனைவியை தனியாக கடிய, என்னவென்று பார்த்தார் மாரி.
“கூறுகெட்டவ, சும்மா தூங்கி எழுந்து உனக்கேத்த மாதிரி அந்த பொண்ணு ஆக்கிப்போட்டா மட்டும் போதுமா. கொஞ்சமாச்சும் யோசி.” என்றதும் கப்சிப் என்றாகிவிட்டார் மாரியம்மாள். அவ்வப்போது சின்ன சின்ன சலசலப்பு மட்டும் எழுந்து அடங்கியது.
“எதுக்கு செலவு பண்ணி இதை இழுக்குற?”
“அவ வேலைக்கு இது தேவைமா?” என்று தரைவழி இணைய இணைப்பு எடுத்தவனை பிடித்துக்கொண்டார்.
“அதான் போன்ல வருதே. எதுக்கு இப்போ மூவாயிரம் செலவு பண்ணனும்.” என்றவரை பேசி சமாளிப்பதற்குள் ஆயாசமாகிப் போனது முகிலனுக்கு.
மாதாந்திர தினத்தில் சிரமம் இல்லையென்றாலும் கொஞ்சம் சோர்வு இருக்கும் அவளுக்கு. அன்றைக்கு எழமுடியவில்லை என்று அவள் படுத்திருக்க, அவளின் அசைவுகளில் விழித்தவன் என்னவென்று விசாரித்து அவளை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு எழுந்து சென்றான்.
“என்ன இந்நேரமே எழுந்துட்ட?” என்று அதிசயித்த மாரியம்மாளிடம் விஷயம் சொல்ல,
“இந்த மாசமும் விலக்கிடுச்சா?”
“ம்மா, ஒரு ரெண்டு நாள் உன்னால முடிஞ்சதை சமைச்சிடேன்.” அவர் சொல்லியதை கண்டுகொள்ளாதது போல் கடந்து, தான் சொல்ல வந்த விஷயத்தை சொல்லிவிட்டு நகரப்போக,
“அவளை தனியா படுக்கச் சொல்லு. அவங்க பழக்கம் என்னவோ எல்லாம் ஈஷுவாங்களா இருக்கும்.” என்றார். அதையும் பெரிதுபடுத்தாமல் உள்ளே வந்தவன் அவளருகில் படுத்து அவள் வயிறை இதமாக தேய்த்துவிட, பதறி எழுந்தவள் அவனை தள்ளிப்படுக்கச் சொன்னாள்.
“அம்மாவும் அதான் சொல்லுச்சு. நீ தூக்கம் வராம புரண்டு படுக்குறதை பார்த்துட்டு எப்படி தள்ளி நிக்க? நான் மசாஜ் பண்றேன் நீ தூங்கு. வேற எதுவும் வேணுமா?” என்று அவளை பார்த்து பார்த்து கவனிக்க, பெண்ணின் மனம் மொத்தமும் அவன் பித்தம்தான்.
அன்றைக்கு அவனுக்கு வாரவிடுமுறை. சோம்பலாக விழித்த சமயம் பளிச்சென்று அமர்ந்திருந்தாள் குழலி. இரசனையாக அவளை பார்த்துக்கொண்டே புரண்டுப்படுத்தவன், “பிரிட்ஜ்லேந்து எடுத்த ஆப்பிள் மாதிரி பிரஷ்ஷா இருக்க மலர்… கொஞ்சம் கடிச்சிக்கவா?” ஆசையும் ஆவலுமாக அவன் கேட்க, கிளுக்கிச் சிரித்தவள்,
“பிரிட்ஜ்ல ஆப்பிள் இருக்கு பிரேக் டைம்ல எனக்கு கட் பண்ணி வேணும்னா குடுங்க…”
“சேட்டைடி…”
“உங்களைவிடவா?”
“நான் என்ன பண்ணேன்?”
“என்ன பண்ணலைங்குறேன்?” தன் மடிக்கணினியை உயிர்ப்பித்தவண்ணம் குறும்பாய் கேள்வியாய் அவள் புருவம் உயர்த்த, வெட்கச் சிரிப்பு உதிர்த்து எழுந்தான் முகிலன்.
“லன்ச் செய்யலைல நீ?”
“என் பையனுக்கு இருக்கிறதே இந்த ஒருநாள் லீவ் தான். அதுல அவனை ரெஸ்ட் எடுக்கவிடாம உனக்கு ஆக்கிப்போட சொல்றியேன்னு அத்தை கத்தினதையும் காதுல வாங்காம காலைக்கு மட்டும் சமைச்சிட்டு வந்துட்டேன்.”
“உனக்காக ஸ்பெஷல் பிரியாணி இன்னைக்கு.” என்று கண்சிமிட்டியவன் இரவே சொல்லிவிட்டான் மதியத்திற்கு அவள் சமைக்க வேண்டாமென. அவளுக்கு ஒருநாள் ஓய்வு கொடுக்கிறானாம்.
“இன்னைக்கு உங்க அத்தை பொண்ணுகிட்ட பேசுங்க.” என்று சென்ற வார விடுமுறை நாளன்று வந்து நின்றாள் குழலி.
“இன்னைக்கா? என்ன பேச?”
“நாம ஆசைப்படுற எல்லாமே நமக்கு கிடைக்காது, கிடைச்சதை ஆசைப்படுற மாதிரி மாத்திக்கலாம்னு சொல்லுங்க. இல்லைனா வாழ்க்கை தொலைஞ்சிடும் பொறுமையா எடுத்து சொல்லுங்க. இன்னோருத்தரோட வாழ்க்கை இணைஞ்சதுக்கு அப்புறம் உங்களை நினைக்குறது தப்பு, அது அவ புருஷனுக்கு பண்ற துரோகம்னு சொல்லுங்க. எனக்கு தெரிஞ்சி அவ சின்ன பொண்ணு, உங்களை விட்டு வெளிய வரத்தெரியாம கஷ்டப்படுறாளா இருக்கும். எடுத்து சொன்னா புரிஞ்சிப்பா. பழிவாங்குற அளவுக்கு எல்லாம் போக மாட்டா.”
“அது எனக்கே தெரியும் மலர். இருந்தாலும் யோசனையா இருக்கு.”
“யோசிச்சிட்டே இருந்தா அவ லைஃப்தான் காம்ப்ளிகேட் ஆகும். இவ்ளோ நாள் உங்களை பொறுமையா இருக்க சொன்னதே நீங்க ஸ்டேபிள் ஆகணும்னுதான். குற்றவுணர்ச்சிதான் இவ்ளோ நாள் பிரதானமா இருந்துச்சு. அதோட அவகிட்ட பேசுனா எமோஷனலா அவளை ஹாண்டில் பண்ற நிதானம் உங்ககிட்ட இருக்காது. ஆனா இப்போ தெளிவா இருக்கீங்க. அவ என்ன சொன்னாலும் உங்களால சமாளிச்சு அவளை சரியான வழியில கொண்டுபோக முடியும். நான் வரல, தனியா போய் பேசுங்க. எனக்கு இந்த விஷயம் தெரிஞ்சதா காட்டிக்க வேண்டாம். இது உங்க ரெண்டு பேருக்குள்ள முடிஞ்சதாவே இருக்கட்டும். அதுதான் எல்லாருக்கும் நல்லது.” என்று சொல்லி அனுப்ப, அவன் பயந்ததற்கு மாறாக,
“நான் அப்படி பேசியிருக்க கூடாது அத்தான். அன்னைக்கு அவ்ளோ ஈஸியா நாம பழகல கடந்துடலாம்னு சொல்லிட்டு இன்னைக்கு ஒருத்தவங்களை பாத்த ஒருமாசத்துலேயே அத்தையை எதிர்த்து கல்யாணம் பண்ணிட்டேங்குற ஆதங்கத்துல சொல்லிட்டேன். என் மனசுல அசைக்க முடியாத ஒரு இடத்துல நீ இருக்க, அதை என்ன செஞ்சும் யார் வந்தும் மாத்த முடியாது. ஆனா அதை ஓரமா வச்சிட்டு மத்ததை பாக்க முடியும்.” என்று தெளிவாக பேசியவளை இவன் ஆச்சர்யமாக பார்க்க,
“என் வீட்டுக்காரரும் லவ் பெயிலியராம். அவர் சொல்லிக்கொடுத்த பாடம் இது. வாழ்ந்துடுவேன் சந்தோஷமா…” என்று சொல்லிச் சென்றவளை நிம்மதியுடன் பார்த்தான் முகிலன்.
வீட்டிற்கு வந்து மனைவியிடம் சொல்லி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவன் அன்று முதல் எவ்வித கசப்புமின்றி இலகுவாக உணர்ந்தான். அந்த துள்ளலில்தான் இந்தவாரம் அவளுக்கு சிறப்புச் சமையல்.
சமையல் போலவே அவர்களது வாழ்க்கையும் மணந்து ருசிகரமாக செல்ல அவளது ஒருமாத ஒர்க் பிரம் ஹோம் காலம் முடிவடைந்து சென்னைக்கு திரும்பினாள். பின்னோடே இவன் வருவான் என்று எதிர்பார்க்கையில் மீண்டும் மாரியம்மாளின் பேச்சில் இவன் குழம்பி முட்டிக்கொண்டது இருவருக்கும்.
error: Content is protected !!