Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

78. கார்த்திகா சக்கரவர்த்தி - உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம்

உடைந்த தூரிகை வரைந்த உயிரோவியம்

அத்தியாயம் 17

     கடந்த கால நினைவுகளில் இருந்து வெளி வந்த அமிர்தா நீலாவுக்கான சிகிச்சையைப் பற்றி யாரிடம் விசாரிக்கலாம், அதற்கு எப்படி பணத்தை திரட்டலாம் என்கிற யோசனையோடு விடிந்த நாளைத் துவங்கினாள்.

     கேசியின் வீடு வழக்கம் போல் அமைதியாக இருந்தது. காலை உணவை ஒன்றாக அமர்ந்து உண்டு கொண்டிருந்தனர் அண்ணன், தம்பி இருவரும். அன்றைய நாள் உணவு கேசிக்கு மிகவும் பிரியமானது.

     விருந்தை மருந்தைப் போல் எடுத்துக்கொள்ள ஆரம்பித்து பல மாதங்கள் கடந்திருந்தது என்பதால், எதை உண்கிறோம் என்கிற நினைப்பு கூட இல்லாமல் தட்டில் இருந்ததை சாப்பிட்டுக்கொண்டிருந்தான் கேசி. அந்த கணம் அவனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. சாப்பிட்டுக்கொண்டே இடது கையால் எடுத்துப் பார்த்தவன் தொடுதிரையில் தெரிந்த பெயரில் பரபரப்பானான்.



Advertisement

     வேகமாக அதை ஏற்று காதில் வைக்க அந்தப் பக்கம் என்ன செய்தி சொல்லப்பட்டதோ பாதி சாப்பாட்டில் கையைக் கழுவிவிட்டு காலில் சக்கரம் கட்டாத குறையாக ஓடினான்.  அங்கிருந்து அவன் வந்து நின்ற இடம் அவனுடைய சொந்த காவல்நிலையம். அங்கே கைகள் கயிறால் கட்டப்பட்ட நிலையில் ஒருவனை பிடித்துக்கொண்டு இவனுக்காக காத்திருந்தார் ஊட்டியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி.

     கையில் இருந்த காப்பை இறுக்கி பின்னால் தள்ளியவாறு தன் முன்னே வந்து கொண்டிருந்தகேசியைப் பார்க்க பார்க்க நெஞ்சம் பதறியது அந்தக் குற்றவாளிக்கு. விஷயம் இதுதான். அவர்கள் குடும்பத்தில் சூறாவளி தாண்டவமாடிய நேரத்தில் கேசி காவல்துறை பயிற்சியை முடிக்கும் தருவாயில் இருந்தான். பயிற்சி முடிந்து வேலை கிடைத்ததும் அவன் செய்த முதல் வேலையே சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே உள்ள காவல்நிலையத்திற்குச் சென்றது தான்.

     முன்னரும் அங்கே சென்றிருக்கிறான் என்றாலும் அப்போது அவன் சாதாரண பிரஜை. அதனால் அவன் வார்த்தைக்கு மதிப்பே இல்லை. வழிப்பறி செய்ய வந்தவர்கள் தான் குற்றச் செயலில் ஈடுபட்டார்கள் என்று போலி குற்றம் சுமத்தி வழக்கை முடித்து வைக்கப் பார்த்தார்கள் அந்த ஏரியா காவலர்கள். அதற்கு சாட்சியாக மோகனன் மற்றும் நீலாவிடம் அவர்கள் பறித்திருந்த நகைகளையும் காட்டினார்கள். என்னவோ அந்த வார்த்தைகளில் நம்பிக்கை வரவில்லை கேசிக்கு.

Advertisement

     தானே நேரில் சென்று சிறையில் இருக்கும் வழிப்பறி கொள்ளையர்களிடம் விசாரித்தான். அவர்கள் மூலம் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மொத்தம் ஐந்து நபர்கள் என்பது தான் கேசி கண்டுபிடித்த முதல் துப்பு.

Advertisement

     இரண்டாவது, குற்றவாளிகளில் ஒருவனை கொள்ளையர்களில் ஒருவன் பார்த்திருந்தான் என்பதால் அங்க அடையாளங்கள் சொல்லப்பட்டு மாதிரி ஓவியத்தை வரைய வைத்து அதைக் கொண்டு சுற்றுவட்டாரத்தில் தேடச் சொல்லி உத்தரவிட்டிருந்தான் கேசி.

     வந்தவர்களின் வாகன பதிவேட்டு எண் முழுவதுமாக நினைவில் இல்லாமல் போனாலும், அது சுற்றுலாப் பயணிகள் வந்த வாகனமாக அல்லாமல் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்வர்களுடையதாக தான் இருக்கும் என்று கொள்ளையன் ஒருவன் கணித்து சொல்லி இருக்க, தேடுதல் வேட்டை தீவிரமானது.

     இத்தனை மாதங்களுக்குப் பிறகு ஒருவழியாக சிக்கிஇருந்தான் குற்றவாளி. அவனைக் கையோடு இழுத்துக்கொண்டு சென்னை வந்திருந்தார் உள்ளூர் காவலர். வரும் வழி எங்கும் எவ்வளவோ பேரம் பேசிப் பார்த்தான். ஆனால் தன் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்கிற உணர்வில் அவன் காட்டிய ஆசை எதற்கும் அடிபணியாமல் கேசியிடம் அவனை ஒப்படைத்து இருந்தார் அந்த நல்ல மனிதர்.

Advertisement

     கையில் தொக்காக மாட்டிய அவனை இழுத்துக்கொண்டு நண்பன் நடத்தும் ஜிம்மிற்கு வந்திருந்தான் கேசி. அங்கே குத்துச் சண்டைக்கான பயிற்சி நடக்கும் என்பதால் அடி வாங்கி அவன் அலறினாலும், அக்கம் பக்கத்தினர் யாருக்கும் பெரிதாக சந்தேகம் வராது என்று நினைத்திருந்தான். அதை அப்படியே சொல்லவும் செய்தான். பயத்தில் நடுங்கவே ஆரம்பித்து விட்டான் அந்தக் குற்றவாளி.

     யாருக்காக அடிவாங்கப் போகிறான் என்பதை அவன் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்த கேசி நீலாவின் புகைப்படத்தைக் காட்ட அதைப் பார்த்தவனுக்கு, அன்று நடந்தது அனைத்தும் நினைவு வந்தது.

     “என் அண்ணிடா. என் அம்மாவுக்கு இணையா பார்த்தேன் அவங்களை. இந்தக் கை தானே அவங்க மேல பட்டது.” என்ற கேசி நொடியில் குற்றவாளியின் வலது கரத்தை உடைத்தே விட்டான்.

     வலியில் பயங்கரமாக அலறினான் அவன். “அன்னைக்கு உன்கூட இருந்த கேடுகெட்டவங்க யாருன்னு எனக்கு காட்டுற. இல்லாமப் போனா இந்த இடத்தை விட்டு போகும் போது உன் உடம்பில் ஒரு எலும்பு கூட ஒழுங்கா இருக்காது.” என்க, நன்றாகப் பயந்து போனவன் நண்பர்கள் அனைவரையும் போட்டுக்கொடுத்துவிட்டான்.

     அடுத்த நாளே அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தூக்கி வந்திருந்தான் கேசி. பாரபட்சம் பார்க்காமல் மீதம் இருந்த நால்வருக்கும் அதே தண்டனையைத் தர, இருவர் மட்டும், “நாங்க அந்தப் பொண்ணை எதுவும் பண்ணல சார்.” என்று கத்தினர்.

     “எதுவும் பண்ணலன்னா நீங்க யோக்கியவானுங்களா டா. தப்பு நடக்கும் போது தன்னால் தட்டிக் கேட்க முடியலன்னா தட்டிக்கேட்கும் தைரியம் இருக்கும் நபர்களுக்கு தகவலை கொண்டு போகவாவது செய்யணும். ஆனா நீங்க உங்களோட சுயநலத்துக்காக தப்பு நடக்கும் போது அதைப் பார்த்துக்கிட்டு அமைதியா இருப்பீங்க. தப்பு பண்ணவங்களோட கூட்டணி வைச்சிருப்பீங்க. ஆனா நீங்க நல்லவங்க இல்ல.” காறி உமிழாத குறையாகத் திட்டினான் கேசி.

     “எனக்கு நிஜமாவே இதெல்லாம் பிடிக்காது சார். அன்னைக்கு இவங்களுக்கு டிரைவரா தான் நான் வந்தேன். என்னையும் கட்டாயப்படுத்தி குடிக்க வைச்சு மட்டையாக்கிட்டாங்க. நான் என்னோட சுயநினைவிலே இல்ல. ஒருவேளை நான் என்னோட கட்டுப்பாட்டில் இருந்திருந்தா அந்தப் பொண்ணைக் காப்பாத்த என்னால் ஆன முயற்சியை கட்டாயம் செய்திருப்பேன். என்னை நீங்க நம்பணும். அந்த நாளில் இருந்து நான் இவங்க கூட தொடர்பில் கூட இல்ல.” என்று ஒருவன் தன்னை நல்லவனாக காட்ட முயற்சிக்க, “அப்புறம் என்ன  ஹேருக்கு இவனுங்களைப் பத்தி போலீஸில் சொல்லாம இருந்த.” என்று மார்பிலே உதைத்து தள்ளிவிட்டு, மீதம் இருந்த இன்னொரு நபரிடம் சென்றான்.

     “அடிக்காதீங்க சார், நானே எல்லா உண்மையையும் சொல்லிடுறேன். எதிராளி கத்தி அழுதா தான் எனக்கு விருப்பம் வரும். நான் என்ன அடிச்சும் அந்தப்பொண்ணு கத்தவே இல்ல. அது எனக்குப் பிடிக்கல. அதனால் விலகிட்டேன்.” என்றான். அவன் வார்த்தைகளில் கேசியின் கோபம் திரி தூண்டிவிடப்பட, ஓங்கி ஓங்கி மிதித்தான் அவனை.

     கேசி சற்று விலகிச் சென்றபோது, “அன்னைக்கே அந்தப்பொண்ணு சொன்னுச்சு, என்னைக் கொன்னுடுங்க, என்னை மட்டும் கொன்னுடுங்கன்னு. அதை சரியா செஞ்சிருந்தா இன்னைக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது.” என்று ஒருவன் புலம்ப, அது தெளிவாக கேசியின் காதுகளில் விழுந்தது.

     குழந்தைகளுக்காகவும், உயிர் போகும் அளவுக்கு அவர்கள் தன்னை தாக்கிவிடக்கூடாது என்பதற்காகவும் தானே நீலா அமைதியாக தனக்கு நிகழ்ந்த அநீதியை ஏற்றுக்கொண்டாள். அப்படி இருக்க, இவன் என்ன புதிய கதை சொல்கிறான் என்று குழம்பியவன், அவன் பனியன் காலரைப் பிடித்து தூக்கி, “அன்னைக்கு நடந்ததை முழுசா சொல்லு.” என்க, பயந்தவனும் சொல்ல ஆரம்பித்தான்.

     “ஆரம்பத்தில் அந்தப் பொண்ணு புருஷன் பெயரைச் சொல்லி உதவி கேட்டுச்சு சார். அப்புறம் என்ன நினைச்சதோ எங்களைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு என்னைக் காயப்படுத்தி கத்த வைக்காதீங்க. நீங்க போகும் போது என்னை மட்டும் கொன்னுடுங்கன்னு சொன்னுச்சு.” என்று சொல்லி முடிக்க, கேசியின் கையில் இருந்த லத்தி நழுவி கீழே விழுந்தது.

     பூமியின் அடியில் இருந்த நரகவாசல் திறந்து தரையைப் பெயர்த்துக் கொண்டு வெளியே வந்த ஆயிரம் கரங்கள் தன் காலைப் பிடித்து தன்னையும் நரகத்திற்குள் இழுப்பது போல் உணர்ந்தான்.

     அண்ணனுக்காக, அவன் மனநலனுக்காக தனக்கு நடந்த அநீதிகளை சகித்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறாள். அவள் உயிரைப் பற்றி கவலைப்படவில்லை, வயிற்றில் இருந்த குழந்தையைப் பற்றி கவலைப்படவில்லை. அவள் கவலை முழுக்க முழுக்க கணவனுக்கு மனநோய் திரும்ப வந்துவிடக்கூடாது என்பதில் தான் இருந்திருக்கிறது என்பது புரிய, ஐயோ ஐயோ என கேசியின் நெஞ்சுக்குள் பெரும் ஓலம் கேட்டது.

     நீலாவைப் பற்றி தன் வீட்டுப் பெரியவர்களும், சமூக வலைதளப்போராளிகளும் பேசியவை அனைத்தும் நினைவு வர, மூச்சடைப்பது போல் உணர்ந்தான்.

     எத்தனை பெரிய பாவம், எத்தனை பெரிய துரோகம். அவளைப் போன்ற ஒருவள் கிடைக்க தன் அண்ணனும், தங்கள் குடும்பமும் எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஆனால் நாங்கள் அனைவரும் சேர்ந்து அவளுக்கு என்ன செய்திருக்கிறோம். அன்றுமட்டும் அவள் தன் வலியைப் பெரிதாக எடுத்திருந்தால், உதவி கேட்டு குரல் கொடுத்திருந்தால் அண்ணன் என்னவாகி இருப்பான் என்பது புரிய, சொந்த மனசாட்சியே செருப்பால் அடித்தது கேசியை.

     காக்கி உடையில், கைது செய்து சிறை வைத்திருக்கும் குற்றவாளிகள் முன்பு, நண்பர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்கிற எண்ணத்தையும் மறந்து அடிபட்ட நாய்க்குட்டியைப் போல் அழுதான் கேசி. அவன் செய்தது பாவம் என்று அவனுக்கு முன்பே தெரியும் தான். ஆனால் அந்தப் பாவத்தின் பாரத்தை உணர்ந்த போது உயிர் வாழ்வதே வீண் என்று தான் தோன்றியது அவனுக்கு.

     அங்கிருந்து நேரே அமிர்தா வீட்டுக்கு தான் வந்தான். அவனைக் கண்டதும் என்னவோ ஏதோ என்று பதறிய கேர்டேக்கரைக் கண்டுகொள்ளாதவன் அந்த வீடு முழுக்க தேடினான். ஒரு அறை மட்டும் வெளியே தாழிடப்பட்டு இருக்க, மரித்தது போக மீதம் இருக்கும் தைரியத்தை எல்லாம் ஒன்று திரட்டி கதவைத் திறந்தான்.

     இருளான அந்த அறையின் மூலையில் அமர்ந்து கால்களை கைகளால் கட்டிக்கொண்டு அதன் மீதே தலை சாய்ந்து அமர்ந்திருந்த நீலாவைக் கண்ட நொடி தான் பிடித்திருந்த கதவின் மீதே தொய்ந்து அமர்ந்து அழுதான் கேசி.

     தன் அம்மாவிற்குப் பிறகு தான் பாசமாய் பார்த்த பெண், பெருமையாய் பார்த்த பெண், கௌரவத்தோடு தன் வீட்டில் வளைய வந்த பெண், தன் அண்ணனின் சந்தோஷம் நிறைந்த வாழ்க்கைக்கு சொந்தக்காரி அவளை இப்படியொரு நிலையில் பார்க்க தைரியம் இல்லாத காரணத்தால் தான் இத்தனை நாட்களாக இங்கே வராமல் இருந்தான். இப்போது பார்க்க பார்க்க உள்ளம் உலைக்கலனாக கொதித்து.

     யாரும் சிறிய சத்தம் கொடுத்தால் கூட பெரிதாக ஆர்ப்பாட்டம் செய்யும் நீலா தன்னைப் பார்த்து கத்தி கதறி அழும் கேசியை ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டு கைகளால் அருகே வரும்படி அழைத்தாள்.

     இப்படியான நிலையிலும் அண்ணிக்கு தன்னை அடையாளம் தெரிகிறதா என்று ஆச்சர்யமாகப் பார்த்த கேசி உள்ளே செல்லத்தான் நினைத்தான். ஆனால் அவளை இப்படியொரு நிலைக்கு ஆளாக்கிய உனக்கு அவளைப் பார்க்கும் தகுதி இருக்கிறதா என்று கேட்ட மனசாட்சி அவன் கால்களை நகர விடாமல் தடுத்துப் பிடித்துக்கொண்டது.

     அது புரியாமல், “போங்க சார், நீலா பொண்ணுக்கு உங்களை அடையாளம் தெரியுதுன்னு நினைக்கிறேன். எப்பவாச்சும் தான் சிரிப்பாங்க. குழந்தைகளை மட்டும் தான் ஆசையாக அவங்க பக்கம் கூப்பிடுவாங்க. இப்ப உங்களைக் கூப்பிடுறாங்க.” என்று கேர்டேக்கர் சொல்ல, கேள்விப்படும் ஒவ்வொரு வார்த்தையும் அவன் நெஞ்சில் தோட்டாக்களாகப் பாய்வது போல் அத்தனை வலித்தது அவனுக்கு.

     உணர்வு மரத்து கனமாகிக் கிடந்த காலை கடினத்தோடு நகர்த்தி முன்னே சென்றவன் நீலாவின் அருகே அமர்ந்து, அவள் காலைப் பிடித்தபடி கதறி அழ, சில நொடிகள் அவனையே பார்த்துக்கொண்டிருந்த நீலா அவன் காக்கி சட்டையில் இருந்த நட்சத்திரங்களை பிய்த்து விளையாட ஆரம்பித்தாள்.

     “அண்ணி” என்று கேசி கண்கலங்க, ம்ம்ம் என்று பதில் கொடுத்தாள் நீலா. அனிச்சை செயலாக அவள் தனக்குப் பதில் கொடுக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டவன் தலையிலே அடித்துக்கொண்டான். சூழ்ந்துவிட்ட பிரச்சனைகள் யாவற்றையும் எப்படி சரிசெய்ய என்று புரியாமல் தடுமாறியவனைப் பார்த்து சிரித்தாள் நீலா. பிரச்சனைகள் அனைத்திற்கும் பதில் என்னால் மட்டும் தான் கொடுக்க முடியும் என்று சொல்லாமல் சொல்வது போல் இருக்க, கையாலாகத தனத்தோடு எழுந்து வாசலுக்கு வர, அங்கே அப்போது தான் வேலை முடித்து வந்திருந்தாள் அமிர்தா.

     வீட்டு வாசலில் காவல் வாகனம் நிற்கவும் என்னவோ என்று பயந்தவள் வேகமாக உள்ளே வந்து கேசியின் மீது மோதினாள். தடுமாறி விழப்பார்த்தவளின் இடையோடு பற்றி தடுத்தான் கேசி.

     அவனையும், அவன் முகத்தில் இருந்த கட்டுக்கடங்காத தவிப்பையும் பார்த்து சற்றே முகம் சுருக்கினாள் அமிர்தா. அவனைப் பற்றி அவளுக்கு நன்றாகத் தெரியும் என்பது உண்மையாக இருந்தால், இந்த சமயம் தாங்கிக்கொள்ளவே முடியாத துயரில் இருக்கிறான் என்பதை யூகித்தாள். எதற்காக இந்தக் கவலை, ஒருவேளை மோகனனுக்கு எதுவுமோ என்று யோசித்தவள், அவன் தன் வீட்டின் உள்ளிருந்து வெளியே வந்ததை உணர்ந்ததும், காரணம் புரிந்தவளாக அவனை மிதப்பாகப் பார்த்து வைத்தாள்.

     “புது அண்ணி இருக்கும் போது பழைய அண்ணியை எதுக்காக ஏசிபி சார் பார்க்க வந்தாராம்.” நக்கல் போலக் கேட்க, “என் அண்ணியோட கொழுந்தன் ஒரு போலீஸ், அதுவும் அவங்களுக்காக மட்டுமே போலீஸ் ஆனவன், அவங்க மேல கைவைச்சவங்க கையை உடைச்சுப் போட்டுட்டு தான் அவங்களை போலீஸா சந்திப்பேன்னு நினைச்சிருந்தேன். அதை இன்னைக்கு சாதிச்சுட்டேன். அதனால் தான் வந்தேன்.” என்றான்.

     ஒரு சில நொடி அமிர்தாவின் கண்களில் ஒரு குரூர நிம்மதி வந்தது. அவர்கள் அனைவரையும் கொன்று போட்டுவிட்டேன் என்றுசொல்லி இருந்தால் இன்னமும் சந்தோஷப்பட்டு இருப்பாள். ஆனால் அது நடக்காத காரியம் என்பது புரிய, இதிலே திருப்திபட்டுக்கொண்டாள்.

     “அண்ணியை சரிபண்ண என்ன செய்யலாம் னு இருக்க?” என்று கேட்டான்.

     “என்ன செஞ்சாலும் தான் உங்களுக்கு என்ன சார்? அவ என்ன உங்க அண்ணியா? உங்க அண்ணன் இன்னும் அவ புருஷனா தான் இருக்காரா? இல்ல அவர் கட்டின தாலி தான் என் அக்கா கழுத்தில் கிடக்கா. சரி இதை விடுங்க, என்அக்கா பெத்த குழந்தைங்க உங்க வீட்டு வாரிசு, உங்க அண்ணனோட குழந்தைன்னு ஏதும் அங்கீகாரம் கொடுத்து வைச்சிருக்கீங்களா?” சுளீர் சுளீர் என சாட்டைபோன்ற வார்த்தைகளால் கேட்க, “கொஞ்சம் கொஞ்சமா கொல்றதுக்கு மொத்தமா கொன்னுடு டி. நிம்மதியா செத்தாச்சும் போறேன்.” என்று கத்திய கேசி, அங்கிருந்து சென்றான்.

     அவன் இருந்தவரை காட்டிக்கொள்ளாத சோர்வு, பதற்றம் என அனைத்தையும் இப்போது காட்டினாள் அமிர்தா. அக்காவை குணப்படுத்த வழி தேடி அல்லோலப்பட்டவளுக்கு கடைசியாக ஒரு வழி கிடைத்தது. அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் தோழியின் அண்ணன் மனைவி கீர்த்தனா மருத்துவம் படித்து பெரிய தனியார் மருத்துவமனையில் வேலையில் இருப்பதால், அவரிம் நீலாவின் பழைய மெடிக்கல் கோப்புகள் அனைத்தையும் கொத்தால் ஏதாவது வழி பிறக்கலாம் என்று சொல்லி இருக்க, அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு எப்படியாவது தன் அக்காவிற்கு ஒரு வழி கிடைத்துவிட வேண்டும் என்கிற வேண்டுதலோடு கோப்புகளை எடுக்க வந்திருந்த இடத்தில் தான் கேசியைப் பார்த்திருந்தாள் அமிர்தா. உணர்வுகளால் நிறைந்திருந்த அவனைப் பார்த்த போது பழைய அன்பு கொஞ்சம் துளிர்விட்டது உண்மை. ஆனால் விரைவிலேயே அனைத்தையும் துடைத்து எறிந்தவள், தன்தோழியின் வீட்டிற்கு கிளம்பினாள்.

     இவள் நல்ல நேரத்திற்கு கீர்த்தனாவும் வீட்டில் தான் இருந்தார். கோப்புகளை வாங்கிப் பார்த்தவாறே நடந்த விஷயங்களை கேட்டுக்கொண்டார்.

     “வெறுமென மனஅதிர்வா இருந்தா அது பிரசவ வலி தூண்டப்படும் போது தன்னால் சரியாகி இருக்க நிறைய வாய்ப்பிருக்கு. ஆனா இவங்க விஷயத்தில் அப்படி எதுவும் நடக்கல. அதோட மரக்கிளையால் தலையில் பலமான அடிபட்டு நிறைய தையல் போட்டு இருந்ததுன்னு சொல்றீங்க. ஆனா எம்ஆர்ஜ ரொம்ப நார்மலா இருக்கே.” அசுவாரசியமாக சொல்லிக்கொண்டே வந்தவர் அடுத்த நொடி நேராக நிமிர்ந்து அமர்ந்து, “உங்க அக்கா பேர் நீலாம்பரின்னு தானே சொன்னீங்க. ஆனா இந்த ரிப்போர்டில் வேற ஏதோபெயர் இருக்கு.” என்க, அமிர்தாவிற்கு பயங்கர அதிர்ச்சி.

     “என்னம்மா இது? வாங்கும் போது சரியான ரிப்போர்ட் தான் வாங்குறோமான்னு பார்த்து வாங்க மாட்டீங்களா? அந்த நேரம் சரியான எம்ஆர்ஐ வாங்கிப் பார்த்திருந்தா, உங்க அக்காவோட பிரச்சனை இந்நேரம் சரியாகி இருக்கக் கூட வாய்ப்பிருக்கே.” என்று சொல்ல, அமிர்தா என்ன மாதிரி உணர்ந்தாள் என்று அவளாலேயேகணிக்க முடியவில்லை.

     “இவளைச் சொல்லி என்ன பண்றது அண்ணி. நம்ம கவர்மெண்ட் ஹாஸ்பிடல் இலட்சணம் நமக்குத் தெரியாதா?” என தோழி ஆதவுக்கரம் நீட்ட, “அதுவும் சரிதான். அமிர்தா நீங்க ஒன்னு பண்ணுங்க. உங்க அக்காவுக்கு மறுபடி எல்லா டெஸ்ட்டும் எடுங்க. ஏதாவது பிரச்சனை இருந்தா அதுக்கான ட்ரீட்மெண்ட் பார்த்து உங்க அக்காவை சரி பண்ணிடலாம்.” என நம்பிக்கை கொடுக்க, அமிர்தாவுக்கு கடவுளே இறங்கி வந்து சொல்வது போல் இருந்தது.

     தன்னிடம் இருந்த கடைசி தங்க நகையான கம்மலை விற்று பெற்றுக்கொண்ட பணத்தோடு நீலாவுக்கான அனைத்து பரிசோதனைகளையும் செய்தாள். இரண்டாம் நாளில் அவளை மீண்டும் தன் வீட்டிற்கு வரச்சொன்னார் மருத்துவர் கீர்த்தனா.

     “நீங்க சரியான நேரத்தில் என்னைப் பார்க்க வந்தது ரொம்ப நல்லதாப் போச்சு அமிர்தா. இன்னும் கொஞ்சநாள் தாமதிச்சு இருந்தாலும் உங்க அக்கா உயிருக்கே ஆபத்தா முடிஞ்சிருக்கும். உங்க அக்காவோட பின்னந்தலையில் மரக்கிளையால் அடிபட்டதில், அபாயகரமான இடத்தில் ஆழமான காயம் உண்டாகி இருக்கு. அந்த இடத்தில் உள்ள மூளையின் செல்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் தான் அவங்க இன்னைக்கு இந்த நிலையில் இருக்காங்க. ஒரு ஆபரேஷன் பண்ணி அங்க இறுகிப்போய் இருக்கும் இரத்தக்கட்டியை நீக்கிட்டு, சரியான மருந்து மாத்திரை எடுத்துக்கிட்டா அவங்க குணமாக நிறையவே வாய்ப்பிருக்கு.” என்று நிறுத்தினார்.

     “பண்ணலாம் டாக்டர். உடனே பண்ணலாம். எனக்கு எப்படியாவது என் அக்கா பழையபடி மாறினால் போதும்.” வேகவேகமாகச் சொன்ன அமிர்தா, “ஆபரேஷனுக்கு பத்து முதல் பதினைந்து இலட்சம் வரை செலவாகும்.” என்று கீர்த்தனா சொன்ன நொடி, பதிலுக்கு எதுவும் சொல்ல முடியாமல் திணறிப்போனாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!