Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

26. கல்பனா சரவணன் - யுகத்தின் தலைவன்

யுகத்தின் தலைவன் அத்தியாயம் 40

யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 40

சல்மான் வீட்டை அடைந்தாள் கங்கா. கேட்டை திறந்து உள்ளே செல்ல… அவன் வீட்டு போர்டிக்கோவில் சேர்கள் போடப்பட்டிருந்தது.
அதில் சில ஆண்கள் அமர்ந்திருந்தனர்.
கங்கா தன் காலணிகளை ஒரு ஓரமாக விட்டுவிட்டு அவனது வீட்டு வாசல் நோக்கி நடந்தாள்.

உள்ளே இருந்து வெள்ளை நிறத் தொப்பியுடன் ஒரு பெரியவர், கைகளை கூப்பி வணங்கி,” வாங்க” என வரவேற்றார்.கங்கா ஒருநிமிடம் நமக்கா இந்த வரவேற்பு?என பின்னால் திரும்பி பார்த்து.. தனக்குத்தான் என்பதை உறுதி படுத்திக் கொண்டு, பதில் வணக்கம் வைத்தாள்.

ஒரு பர்தா அணிந்த நடுத்தர வயதுடைய பெண் “வாங்க வாங்க” எப்படி இருக்கீங்க? என வாயெல்லாம் பல்லாக வரவேற்றார்.



Advertisement

நல்லா இருக்கோம். நீங்க எப்படி இருக்கீங்க?என பதில் கேள்வி கேட்டாள் கங்கா.

“உட்காருங்க” என போர்டிகோவில் இருந்த சேரில் அமர வைத்தனர்.

என்ன வீட்டுக்குள்ள கூப்பிடாம இங்கையே உட்கார வைக்கிறாங்க?ஒருவேளை இப்படியே அனுப்பிருவாங்களோ? என்ற கேள்வி கங்காவினுள் எழுந்தது.

Advertisement

“சரி சரி நம்ம பார்க்க வந்தது,சல்மானை மட்டும்தான்.அவன மட்டும் பாத்துட்டு இப்படியே கிளம்பிட வேண்டியதுதான்.. அவனை வர சொல்லுவாங்களா?இல்ல இவங்களே பேசி அனுப்பிருவாங்களா?
இதுக்கு மேல எல்லாம் வீட்டுல பொய் சொல்லி ஏமாத்திட்டு வர முடியாதுப்பா” என தனக்குள்ளே பேசியே படி அமர்ந்திருந்தாள்.

Advertisement

அன்று முறுக்கு வாங்கி சென்றவன் அதன்பின் முழுதாக இரண்டு வருடங்கள் கடந்திருக்க…இதோ இன்று அவள் முன்னே வந்து நிற்கிறான்.

அவனை பார்த்தவாறே, கங்கா எழுந்து நின்றாள்.குறைந்தது ஆறு அடியாவது இருப்பான்…இன்று அதில் பாதி குறைந்தது போல தோன்றியது கங்காவிற்கு.சாப்பிடுகிறானா? இல்லையா? இவ்வளவு மெலிந்து விட்டான்.கண்கள் இரண்டும் ரத்த கலரில் சிவந்திருந்தது. அழுதிருப்பானோ? இல்லை அழுகை வரக்கூடாது என அடக்கி வைத்திருக்கிறானோ?இல்லை இரவு முழுவதும் தூங்காமல் இருந்திருக்கிறானோ?அவனுக்கு ஓய்வு தேவைப்படுகிறது போலவே என்று அவள் எண்ணமெல்லாம் அவனையே சுற்றியது.

வாங்க!எப்படி வீடு தெரிஞ்சுது?எப்படி வந்தீங்க?ஓ !ரெண்டு பேரும் ஒன்னாவே வண்டில வந்தீங்களா?என கேள்வியை கேட்டு பதிலையும் அவனே சொல்லிக் கொண்டான்.

Advertisement

அவன் பேசுவானா?மாட்டானா?என்றிருந்தவளுக்கு…அவன் பேசியதும் உலகம் மறந்தது.அது துக்க வீடு என்பதும் மறந்தது.தன்னையும் மீறி அவன் வீட்டு படியை தாண்டி உள்ளே சென்றாள்.

எப்படி இருக்கே?சல்மான்.எப்போ ஊருலே இருந்து வந்தே?பாத்து எவ்ளோ நாள் ஆச்சு…

அவன் எதுவும் பேசாது தலையை மட்டும் நல்லா இருக்கேன் என்றவாறு ஆட்டினான்.

சிறிதுநேரம் மெளனம் மட்டுமே.அடுத்து என்ன பேசுவது? என கங்காவிற்கு தெரியவில்லை.
வந்தாயிற்று,அவனை பார்த்தாயிற்று,
பேசியும் ஆயிற்று… அவள் பயந்தவாறு எதுவும் நடக்கவில்லை. எல்லாம் சுபமாகவே முடிய.சரி கிளம்பலாம். அவனுக்கு ஓய்வு தேவைபடுகிறது என எண்ணி வாயை திறக்க…

“என்ன கங்கா?அதுக்குள்ள கிளம்பறே.இனிதான் உன் வாழ்க்கையோட அழுத்தமான நபரை நீ சந்திக்க போறே” என விதி அவள் காதில் கிசுகிசுத்தது.

அங்கிருந்த அவன் வீட்டு பெரியவர். சல்மான்!”அவங்கள அம்மாவை பாக்க கூட்டிட்டு போ”என்றார்.

வாங்க! என இவர்களை அழைக்க… எதுவும் பேசாது அவனை பின் தொடர்ந்தனர்.அவன் வீட்டு ஹாலை கடந்து பெட்ரூமை அடைந்தனர்.

“இதுக்குமேல உள்ள நடக்கறே சம்பவத்துக்கு நான் பொறுப்பில்ல கங்கா” என, அவர்களை உள்ளே அனுப்பிவிட்டு கதவருகே நின்று கொண்டான் சல்மான்.

உள்ளே குறைந்தது ஒரு பத்து பெண்கள் இருந்தனர்.அதில் சிலர் பர்தா அணிந்தும், சிலர் தங்கள் புடவை முந்தானையால் தலையை முடிய படியும் அமர்ந்திருந்தனர்.

இவர்களை பார்த்ததும் எல்லோரும் எழுந்து நின்று,வாங்க என அழைத்தனர்.அதில் யார் சல்மான் அம்மா?என கங்காவிற்கு தெரியவில்லை.
முன்பின் அவரை ஃபோட்டோவில் கூட பார்த்தது இல்லை.

இவளே வாயை திறந்து சல்மான் அம்மா?எனக் கேட்க… இதோ அவங்க தான் “சல்மான் அம்மா” என அவர் நின்ற திசையை காட்டினர்.

சல்மான், இதுவரை அவன் அம்மா பற்றி பேசிய போதெல்லாம்… அவன் உருவத்திலேயே அவரை உருவகப்படுத்தி எண்ணி இருந்தாள்.

அவனை போலவே உயரமாக.. கொஞ்சம் குண்டாக…அவன் நிறத்தில்…

ஆனால் உண்மையில் அவரை பார்க்க ஆச்சரியமாக இருந்தது. குட்டையாக.. ஒல்லியாக..வட்ட முகம்.. கங்காவை பொறுத்தவரை சல்மானே நல்ல நிறம்தான்.ஆனால் அவன் அம்மாவின் ரோஜா நிறத்தோடு ஒப்பிட சல்மான் கொஞ்சம் மொக்கை நிறமாகவே தோன்றினான்.

எவ்வளவு அழகாக இருக்கிறார்? என எண்ணிக் கொண்டாள்.

தலை முக்காட்டை சரிபடுத்தியவாறே, “வாங்கம்மா!அப்பாதான் நம்மள விட்டுட்டு போய்ட்டாங்க” என கண்களில் நீரோடு இவர்களை அழைத்தார்.

அவர் கண்களில் நீரை பார்த்ததும் ஏனோ கங்காவிற்கு துக்கம் தொண்டையை அடைத்தது.அவர் அருகே சென்று அவர் கைகளை பிடித்துக் கொண்டாள்.

அம்மா!அழாதீங்க… நாங்க எல்லா இருக்கோம்…

அதற்குமேல் என்ன பேசுவது என கங்காவிற்கு தெரியவில்லை.
முன்பின் எதாவது துக்க வீட்டிற்கு சென்றிருந்தாலாவது கொஞ்சம் தெரிந்து இருக்கும்.

இவள் நிலையை அவரும் உணர்ந்து கொண்டாரோ என்னவோ, “உட்காருங்கம்மா” என இருவரையும் அமர சொன்னார்.

நித்யாவும்,அவரும் கட்டிலின் மீது அமர, அவர்களுக்கு எதிரே கங்கா சேரில் அமர்ந்து கொண்டாள்.

உங்க பேரு என்னமா?

என் பேரு கங்கா.இவ நித்யா.

கங்கா என்ற பெயரை கேட்டதுமே.ஏதோ ஒரு யோசனையோடு,எதோ ஞாபகம் வந்தவராய்… “ஓ! நீதான் கங்காவா?
நீதான் சல்மானுக்கு முறுக்கு கொடுத்து விட்டையா?உன்னோட சம்படம் இன்னமும் நம்ம வீட்டுலதாம்மா இருக்கு”என்றார்.

நம்மை பற்றிய அறிமுகம் ஏற்கனவே அவருக்கு இருக்கு என்றே தோன்றியது. மெல்ல சல்மானை திரும்பி பார்க்க, முதல்நாள் கேஜி வகுப்பில் சேர்ந்த குழந்தை..எப்படி அம்மாவை ஏக்கமாக பார்க்குமோ?அப்படி நின்று அவரை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவரே நிலையை இயல்பாக்க… இவளும் கொஞ்சம் இயல்பாகி பேச ஆரம்பித்தாள்.

அப்பாவிற்கு என்ன ஆச்சுங்கம்மா?

சனிக்கிழமை நைட், பத்துமணி இருக்கும் நெஞ்சு வலிக்குது கொஞ்சம் தண்ணி கொடுனு கேட்டாரு. நான் கொண்டு வந்து கொடுத்தேன். அப்பறோம் நம்ம வீட்டுல ஒரு நர்ஸ் வாடகைக்கு குடி இருக்காங்க. நான் அவங்கள வந்து பார்க்க சொன்னே. அவங்க பாத்துட்டு. ஹார்ட் அட்டாக்!சீக்கிரமாக ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க என்றார்.

அதுவரை அவரோட ஃபோன் எல்லா நான் எடுத்து பார்த்தது இல்லமா.எங்க மச்சாண்டார் பையனுக்கு ஃபோன் பண்ண எடுத்தே. சல்மானோட பர்த்டே டேட் தான்,அவரோட பாஸ்வோர்ட்..அதை போட்டு லாக் எடுத்தே…

சல்மானுக்கு கூப்பிட வேண்டா.பையன் தனியா அவ்வளவு தூரத்தில இருக்கான். சொன்னா அவ பதட்டமாகிருவானு கூப்பிடுலே.

எங்க மச்சாண்டார் பையனுக்கு, ஃபோன் பண்ணி விஷயம் சொல்ல.. பத்தே நிமிஷத்துல வந்துட்டான்.

ஹாஸ்பிடல் கூப்டுட்டு போய்ட்டோம். “எனக்கு ஒன்னுமில்ல நீ எதுக்கு அழறே.அழாதேனு!”
நல்லா கணீர் குரல்லே பேசிட்டுதான் உள்ளே போனாரும்மா.
இன்ஜெக்ஷன் போட்ட உடனே கொஞ்ச நேரம்தான் பேச்சு மூச்சே இல்ல…

அப்பறோம் சல்மானுக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொல்ல,நைட் ஃபுல்லா ட்ராவல் பண்ணி விடிய காலை மூனு மணிக்கு வந்தான்.

அவங்க அப்பாவுக்கு எல்லாருக்கும் உதவுற குணம்.தனக்கு இல்லைனாலும் மத்தவங்களுக்கு கொடுத்து உதவுவாரு. யாராச்சு வண்டிலே பெட்ரோல் இல்லைனு சொன்னா..உடனே தன் வண்டியே கொடுத்து இதுல போய்ட்டு வாங்கனு சொல்லுவாரு.அந்த குணம் அப்படியே சல்மான் கிட்டே இருக்கும்மா…

அவங்க அப்பாக்கு சல்மான் மேல ரொம்ப பாசம்மா.அவன் எங்களுக்கு ஒரே பையன் இல்ல. அதுனால எங்க கவனம் எல்லா அவன் மேல மட்டும்தான் இருக்கும்.வாராவாரம்,
” இந்தா காசு சல்மான்கிட்ட கொடு. அவனுக்கு எதாச்சு செலவுக்கு வெச்சுகிட்டும்” என என் கையில கொடுத்து அவன்கிட்ட கொடுக்க சொல்வாரும்மா.
பையனுக்கு எப்போ கல்யாணம்னு யாரச்சு கேட்டா… என் பையன் “கிரீன் இன்க்”ல கையெழுத்து போட ஆரம்பிச்சதுக்கு அப்றோம்தான் கல்யாணம்னு சொல்வாரும்மா..

போன வாரம்… சல்மான் அவ்வளவு தூரத்தில இருக்கான். உனக்கோ எனக்கோ எதாச்சுனா..நம்ம ரெண்டு பேருல தனியா இருக்க போறவங்களுக்கு கஷ்டம்னு சொன்னாரு.. இப்படியெல்லாம் அவர் பேசி நான் பாத்ததே இல்லம்மா…

ஒரு பெண்ணுக்கு எல்லாமுமாக இருந்த கணவர் இறந்துவிட…மகன் ஆயிரம் மைல் தொலைவில் இருக்க…அந்த நள்ளிரவில், தனது கணவரின் உயிரற்ற உடலை ஹாஸ்பிடலில் இருந்து வீட்டிற்கு கொண்டு வந்த அவரின் அந்த பயணத்தை நினைக்கவே கங்காவிற்கு மனம் கனத்தது.தான் இதுவரை முகம் பார்க்காத,பேசாத அவருக்காக மனதில் மானசீகமாக வேண்டிக் கொண்டாள். முருகா!அவருடைய ஆத்மா நல்லபடியா சாந்தியடையனும்.

சல்மான் அப்பாவை எப்போ கடைசியா பார்த்தாங்கம்மா?

பொங்கல் அப்போ நிறைய லீவு வந்துச்சு இல்ல..அப்போதா அவன் ஊருக்கு வந்திருந்தான்.அதான் அவன் கடைசியா அவர பார்த்தது.

இறக்கும்போது அவன் பக்கத்தில் இல்லையே என்ற துக்கம் மறுபுறம் வாட்டியது அவளை…

அம்மா,அப்பாவ நினைச்சு ஃபில் பண்ணாதீங்க…

சரிம்மா.நைட்தான் தூக்கம் வரவே மாட்டேங்குது.ஏன் இப்படி நடந்துச்சுனு? ஒரே யோசனை. யோசிச்சு யோசிச்சு தலை சுத்தறே மாதிரி இருக்கும்மா…

அப்படி எதாச்சு தோணுனா..எங்களுக்கு கூப்பிடுங்க..நாங்க இருக்கோம்… மேலும் அவர் துக்கமடையாமல் இருக்க.. அவரது பேச்சை திசை திருப்பினாள்.

சல்மான் ரொம்ப நல்ல பையன்மா. ரொம்ப புத்திசாலி.திறமையான பையன்.இவ்வளவு நாளா அப்பா அவனே பாத்துக்கிட்டாங்க..
இனி அவன் அவரே பாத்துக்கும் போது அவரு இல்லாம போய்டாருனு நினைக்கும் போது கஷ்டமா இருக்குகங்கம்மா.

அதற்குள் ஒருவர் குடிக்க ஜூஸை கொண்டு வந்து கொடுத்தார்.எடுத்து குடித்த படியே… “அம்மா,அப்பாவுக்கு பதினாறு நாள்லே சாமி கும்பிடுவீங்களா? என கேட்டாள்.

இல்லம்மா நாங்க அப்படியெல்லாம் கும்பிட மாட்டோம். நாற்பது நாள் கணக்கு.அதுவரை நான் என் பையன், கூட பிறந்த அண்ணன் தம்பியை தவிர வேற ஆண்களை பார்க்க கூடாது.டிவி பார்க்க கூடாது. குரான் படிக்கனும்…அது அவரை மேல் உலகத்துல நல்லபடியா வெச்சிருக்கும்.

அம்மா உங்க கூட பிறந்தவங்க எத்தனை பேரு?

“இதுதான் என் தங்கச்சி..அது சல்மான் அத்தை. அது சல்மான் பெரியம்மா”என ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினார்.

ஒருமுறை சல்மான் தன் சித்தி பையனுக்கு காலில் ஆப்ரேசன் எனவும். அவன் குணமடையும் வரை என் வீட்டில் இருப்பான் எனவும்,அவனுக்கு டியூசன் சொல்லி தர முடியுமா?எனவும் அவன் கேட்டது நினைவில் வந்தது.

சல்மான் சித்தியிடம் திரும்பி,”உங்க பையனுக்குதான் காலில் ஆப்ரேசன் செய்தீர்களா?”என கேட்டாள்.

“ஆமாம்மா!”என்றார் அவரும்.

இப்போ தம்பிக்கு எப்படி இருக்கு?

நல்லா இருக்கும்மா..

அதற்குள் ஜூஸ் குடித்த கப்பை வாங்க வந்து விட்டார்கள்.

“கொடுங்க கப்பை”

“கங்கா நீ சாப்பிட்ட எச்சில் தட்டை அடுத்தவங்க கழுவறது பாவம்” என்ற லட்சுமியின் குரல் கேட்க…

இல்லைங்க..டஸ்பின் எங்கே இருக்குனு சொல்லுங்க..நானே போட்டுக்கறேன்.

“கொடும்மா பரவா இல்லை”என்றார் சல்மான் அம்மா.

சரி என தட்டில் வைக்க…அந்த பெண் முகம் “ம்க்கும்” என்பதை போல இருந்தது.

சரிம்மா நாங்க கிளம்பறோம். நீங்க உடம்பை பாத்துக்கோங்க..என அவரிடம் இருந்து விடை பெற்றாள்.

வெளியே வந்து சல்மானை தேட.. அவன் கிச்சன் ஸ்லாப் மீது சாய்ந்தவாறு கைகளை குறுக்கே கட்டி நின்று யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான். இவர்களை பார்த்ததும் வெளியே வந்தான்.

“சரி சல்மான்.நாங்க போய்ட்டு வறோம்.நீ நல்லா சாப்பிடு. உடம்பை பார்த்துக்க.நீ நல்லா இருந்தாதான் அம்மாவை பார்த்துக்க முடியும். எதாச்சுனா கூப்பிடு.நாங்க வறோம்” என அவனிடமும் விடை பெற்றாள்.

கேட் வரை வந்தவள் மீண்டும் திரும்பி பார்க்க,கிச்சன் ஸ்லாப் மீது சாய்ந்தவாறே… தனது பேச்சை தொடர்ந்திருந்தான்…

அவன் வீட்டில் மூன்று பெட்ரூம் ஒன்றில் அவன் அம்மா இருக்க…மற்ற இரண்டு ரூம்களிலும் அவன் வீட்டு ஆட்கள் தூங்கிக் கொண்டிருந்தனர்.
ஹாலிலும்,போர்டிக் கோவிலும் கூட ஆட்கள் அமர்ந்திருந்தனர்.

அவனுக்கு ஓய்வு தேவை.இங்கிருந்தால் நிச்சயமாக கிடைக்காது போலவே.. கன்னியாகுமரியே சென்று விடட்டும் என எண்ணிக் கொண்டாள்.

வேகமாக வீட்டிற்கு வந்தவள்..யாராவது வருவதற்குள் குளித்து உடையை மாற்றி விடலாம் என துரிதமாக செயல்பட்டாள்…

அவளது கெட்ட நேரம்..கெளசியே காலிங் பெல்லை அடித்தாள்.கதவை திறந்தவளை பார்த்து, “ஆமா! எதுக்கு இவ்ளோ குளிருலே தலைக்கு குளிச்சுருக்கே?” என்றாள்.

எங்க ஸ்கூல்ல இன்னைக்கு கொஞ்சம் ஃபைல்ஸ் எல்லாம் கிளீன் பண்ணுனோம். ஒரே டஸ்ட் அதுதான் குளிச்சேன் என சமாளித்தாள்.

அன்றிரவு தூங்க போனவளின் எண்ணங்களில் சல்மானிற்கு பதில் அவன் அம்மாவே நிறைந்திருந்தார். எப்படி வேறு ஒருவனை நினைக்க கூட இடமில்லாத அளவிற்கு அவள் இதயம் முழுவதும் சல்மான் ஆக்கிரமித்து இருக்கிறானோ…
அதைப் போலவே அவனது அம்மாவும் அவளது இதயத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்து விட்டார்.

அவர் கூறியது போல மற்றவருக்கு உதவும் குணம் வேண்டுமானால் அவன் அப்பாவிடம் இருந்து வந்திருக்கலாம். ஆனால் மற்றவர் மனமறிந்து பேசுவது. குழந்தை தனமாக பேசி எல்லார் மனதிலும் இடம் பிடிப்பது எல்லாம் அவன் அம்மாவிடம் இருந்தே வந்திருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டாள்.

–தலைவன் வருவான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!