Skip to content
Post Views: 487
யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 43.1
கங்கா “பிஎச்டி” என்டரன்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாள்.அந்த செய்தி அவளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும்,அதற்குப் பிறகு மனதில் இருந்த ஒரே ஆசை. ராஜசேகர் சாரின் மேற்பார்வையில் தான் ஆய்வு செய்ய வேண்டும் என்பதுதான்.
கடந்த இரண்டு வருடங்களாகவே அந்த எண்ணத்திற்காக காத்திருந்தாள்.
பலரும்,“ஏதாவது வேற கைடு பார்…”என்று கூறிய போதும், அவளுக்கு மனம் வரவில்லை.
அவரது அறிவு, மாணவர்களிடம் பேசும் விதம்,ஆய்வை அணுகும் நேர்மை.. இவை எல்லாம் கங்காவிற்கு ஒரு ஆசிரியரை விட அதிகமான மரியாதையை உருவாக்கி இருந்தது.
Advertisement
அன்று தைரியம் சேர்த்துக் கொண்டு அவரை சந்திக்க சென்றாள்.“சார்… நான் என்டரன்ஸ் கிளியர் பண்ணிட்டே…” என்று தயக்கத்தோடு சொல்ல,
“ரொம்ப சந்தோஷம்மா…” என உண்மையான மகிழ்ச்சியுடன் பாராட்டினார்.
அவளது முகத்தில் அடுத்த கேள்வி இருப்பதை உணர்ந்தவர்,
“என்னம்மா?” என்றார் மெதுவாக.
Advertisement
“சார்… உங்க கைடன்ஸ்ல ரிசர்ச் பண்ணனும்…” என்றாள்.
Advertisement
அவர் சில நொடிகள் அமைதியாக இருந்தார்.
“என்னால இப்போ உன்னை எனக்கு கீழே எடுக்க முடியாத சூழல் இருக்கும்மா…” என்றார் வருத்தம் கலந்த குரலில்.
அந்த ஒரு நொடியிலே கங்காவின் மனம் உடைந்தது.
Advertisement
இவ்வளவு நாட்களாக காத்திருந்த நம்பிக்கை…ஒரே வரியில் முடிந்து போனது போல இருந்தது.
“சரிங்க சார்…” என்று மட்டும் சொல்லி வெளியே வந்தாள்.
படிகளை இறங்கும் ஒவ்வொரு அடியிலும் மனசு கனத்துக் கொண்டே போனது.
‘இரண்டு வருடம் காத்திருந்தேனே…’
என்ற ஏமாற்றம் தொண்டையில் அடைத்துக் கொண்டது.
அந்த நேரத்தில் சுமந்த்தின் ஃபோன்.
“அக்கா… சார் உங்களை மேல வர சொல்றாரு.”
இதயம் மீண்டும் சிறிது நம்பிக்கையோடு துடித்தது.அவள் திரும்ப மேலே செல்ல முயன்றபோது மீண்டும் ஃபோன்.
“அக்கா… சார் கீழே வராரு. நீங்க வெயிட் பண்ணுங்க.”
கங்காவிற்கு உள்ளூராக படபடப்பு.
சில நிமிடங்களில் ராஜசேகர் சாரும், ஈஸ்வரன் சாரும் கீழே வந்தனர்.
“என்னால உனக்கு கைடன்ஸ் கொடுக்க முடியலம்மா… ஆனா அதனால நீ பாதிக்கப்படக்கூடாது…” என்று, அவளை மற்றொரு பேராசிரியரிடம் அழைத்துச் சென்றார்.
“மேம்… இந்த பொண்ணுக்கு நான் கியாரண்டி. ரொம்ப சினசியரான பொண்ணு.தாராளமா உங்க மேற்பார்வைல எடுத்துக்கோங்க…” என்றார் உறுதியாக.
அந்த நொடி கங்காவிற்கு பேச வார்த்தையே வரவில்லை.
அவர் நேரடியாக கைடு ஆகவில்லை.ஆனால் அதைவிட பெரிய ஒன்றை செய்து விட்டார்.
தன் பெயரை வைத்து அவளுக்காக உத்தரவாதம் அளித்திருந்தார்.
ஒரு ஆசிரியர் ஒரு மாணவியை நம்புவது. அது எல்லோருக்கும் கிடைக்கும் விஷயம் அல்ல. கங்காவிற்கு கிடைத்தது.
“தேங்க்யூ சார்…” என்ற ஒரே வார்த்தை மட்டும் அவளால் சொல்ல முடிந்தது.
வீட்டிற்கு திரும்பிய பிறகும் அந்த சம்பவம் மனதில் சுற்றிக் கொண்டே இருந்தது.
ஒருமுறை சல்மான் நாள் முழுவதும் ஃபோன் எடுக்கவில்லை.இரவு எட்டரை மணிக்கு எடுத்தான்.
காலைலே இருந்து எவ்வளவு டைம் ஃபோன் பண்ணுனே ஏன் எடுக்கலே?இனிமே நீ கூப்டாலும் நானும் இப்படிதான் பண்ணப் போறேன்.
கங்கா நான் ரிசர்ச் வொர்க்ல பிசியா இருந்தே.எங்க அம்மா நைட் சாப்பிட கூப்பிட வந்தவங்க எனக்காக வெயிட் பண்ணி அப்படியே தூங்கிடாங்க.டைம் போனதே தெரிலே. விடிய காலை மூனு மணி இருக்கும்.. எங்க அப்பா ரூம் கதவு தட்டுனாரு.என்னனு பார்த்தா ஹார்ட் அட்டாக்.நான் ஹாஸ்பிடல் கூப்பிட்டு போய் இப்போதா வந்தேன்.அதான் உனக்கு கூப்பிட முடியலே.
அச்சோ!சாரி சல்மான். நீ எவ்வளவு கஷ்டத்துல இருந்து இருக்கே. அது தெரியாம நான் உன்ன திட்டிட்டே. இப்போ உங்க அப்பா எப்படி இருக்காரு?
நல்லா இருக்காரு.
சரி இப்போ போய் தூங்கி,ரெஸ்ட் எடு.
இல்ல கங்கா இன்னமும் வொர்க் இருக்கு.
ஒருநாள் லீவு எடுத்துட்டு அப்பறோம் வேலையே பாரு.
சார் என்மேல ரொம்ப நம்பிக்கை வெச்சுருக்காரு.நான் அதுக்கெல்லாம் சரியான ஆள்தானானு எனக்கு ரொம்ப பெரிய சந்தேகம்.அவரோட நம்பிக்கையே நான் காப்பத்தனும் கங்கா. ஃபர்ஸ்ட் வொர்க் அப்பறோம்தான் ரெஸ்ட்.
“சரி நீ சொன்னா கேட்க மாட்டே. இருந்தாலும் சொல்றே உடல்நிலை சரியிருந்தாதான் மத்தது எல்லாம் பாக்க முடியும்.நீ பாரு நான் அப்பறோம் கூப்பிட றேன்” என ஃபோனை வைத்தாள்.
இன்று நினைவுகளில் சல்மான் வார்த்தைகள். அன்று அவன் சொன்னது சரியே. சல்மான் அளவிற்கு தூங்காமல் எல்லாம் நம்மால் வேலை செய்ய முடியாது. யாருக்காகவும்..எட்டு மணி நேர தூக்கத்தையும்,மூன்று வேலை சாப்பாட்டையும் தியாகம் செய்யும் எண்ணமெல்லாம் தனக்கு இல்லை. ஒரு வேலை சாரிடம் சீட் கிடைத்து,அதன் பின் அவர் நம்பிக்கையை இழந்து இருந்தால்… அதை நினைக்கவே அவளுக்கு பிடிக்கவில்லை.
அவரது மேற்பார்வை கிடைத்திருந்தால் அது பெயரளவுக்கே இருந்திருக்கலாம்…
ஆனால் இன்று அவர் தன்மேல் காட்டிய நம்பிக்கை… அதைவிட பெரிய மரியாதை.
‘ஒரு ஆசிரியரிடம் இருந்து இதற்கு மேல் என்ன வேண்டும்?’ என்று நினைத்தாள்.
அன்று இரவு அவருக்கும் துறைத் தலைவருக்கும் ஒரு நன்றி செய்தி அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்தாள்.
சிறிய மெசேஜ்தான்.
ஆனால் அதை எழுத அரை மணி நேரம் எடுத்துக் கொண்டாள்.
ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக தேர்ந்தெடுத்தாள்.
எங்காவது மரியாதை குறையுமோ…
அல்லது அதிக உணர்ச்சி போல தெரியுமோ…என்று ஆயிரம் முறை படித்து திருத்தினாள்.
இறுதியாக காலையில் எழுந்தும் ஒரு முறை சரிபார்த்து விட்டு “செண்ட்” பட்டனை அழுத்தினாள்.
மெசேஜ் சென்றதும்…மனதிற்குள் ஒரு விசித்திரமான அமைதி.
சில மனிதர்கள் நமக்கு நேரடியாக எதையும் தராமல் கூட…நம்மை நம்புவதன் மூலம் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத பலத்தை கொடுத்து விடுகிறார்கள்.
சிவராமன் காலை இழந்ததும்.. அவருடைய தொழில் முறை போட்டியாளர் மாதவன் வம்படியாக சிவராமன் தொழில்களை தன் வசம் இழுத்தார். இருந்தும் தனது சக்திக்கு மீறி சிவராமன் வேலை செய்தார்.மாதவன், “இனியெல்லாம் சிவராமன் அவ்வளவுதான் நான்தான் இந்த தொழிலின் ஒற்றை விடிவெள்ளி” என எல்லா தறிகுடோன்களிலும் தன் ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தார்.
கொடிய சர்க்கரை வியாதி அவரது கண்பார்வை வரை பாதித்தது. லட்சுமியும் “நீ நல்லா இருந்தா போதும்,ரொம்ப கஷ்டப்படாதே” என்றார்.
உடம்பில் ரத்தம் இல்லையென்றால் கூட எப்படியாவது சமாளித்துவிடுவார்.
தன் வேர்வை துளியால் உருவான தனது உழைப்பை ஒரு நொடி கூட விட அவர் சம்மதிக்க வில்லை. நகை அனைத்தும் அடமானத்தில் உள்ளது.கல்யாண சேமிப்பிற்கு இருந்த மொத்த பணமும் மருத்துவ செலவிற்கு செல்ல..சும்மா உட்கார முடியுமா?மூவரிடமும் சொல்லாமலே நிறையே வேலைகளை இழுத்து போட்டு செய்ய ஆரம்பித்தார்.
தற்போது குடி இருக்கும் வாடகை வீட்டு ஓணரம்மா.தன் வீட்டு கரண்ட்டையும் சிவராமன் தலையிலேயே கட்டினார்.மேலும் சிவராமன் மருந்து மாத்திரை உட்கொள்வதால் அதன் வாசனை வருகிறது என தினமும் இவர்கள் வீட்டு வாசலில் ஊதுபத்தி வைக்க ஆரம்பித்தார்.அது போக தனக்கு சாமி உள்ளது எனவும் பெண்கள் வீட்டிற்கு தூரமாவது தனக்கு ஒத்துக் கொள்ளாது. அந்த மாதிரி நேரத்தில் கங்காவும் கெளசியும் எதிரே வருவதை தவிர்க்க வேண்டும் என தான் ஒரு பெண் என்பதையும் மறந்து கண்டிஷன் போட்டார்.
இவற்றை பார்த்த சிவராமன் இருமகள்களையும் பூர்வீக வீட்டிற்கே அழைத்து வந்து விட்டார்.
பூர்வீக வீடு சாதாரண வீடு அல்லவே. அது ஒவ்வொரு மனிதனின் அடையாளம்.அதுவும் நம் சிவராமனுக்கு அது உயிரினும் மேலான ஒன்று.
அந்த காலத்து ஓட்டு வீடு.இரண்டு எட்டு வைத்தால்,சகலமும் கண்முன்..அந்த அளவிற்கு போக்குவரத்து வசதி உள்ள வீடு.
கங்காவிற்கும் கெளசிக்கும் இந்த வீடு வந்ததில் சற்று மகிழ்ச்சி குறைவாகவே இருந்தது.
சிரா!சொந்த வீடு ஓகேதான்.ஆனா அதை இடிச்சு நல்லா பெரிய வீடா கட்டிட்டு வந்துருக்கலாம்.
வீட்டுல கை வெச்சா. கல்யாண செலவுக்கு பணம் இல்லாமே போய்ரும்னு போட்டு வெச்சது தப்புதான் கெளசி. இப்போ பாரு காசும் கரைஞ்சுது. வீடும் அப்படியே இருக்கு.
அப்ப இந்த வீட்டே வித்துட்டு.புது வீடு வாங்கிக்கலாம் சிரா.
இந்த சிவராமன் உயிரோட இருக்கறே வரை இந்த வீட்டை விற்க மாட்டான், கெளசி.
“கங்கா பதினொரு மாசம் கொழந்தையா இருக்கும் போது இந்த வீட்டுக்கு கரண்ட் புது ஒயர் மாத்துனே.கங்கா நாலாவது படிக்கைலே அந்த ஜன்னலே எடுத்துட்டு கதவு வெச்சேன்.கங்கா சீருக்கு மண்ணை எல்லாம் எடுத்துட்டு காரை போட்டேன். கங்கா பனிரெண்டாவது படிக்கைலே புது ஓடு மாத்துனே” என அடுக்கிக் கொண்டே போனவரை…
போதும் சிரா! எப்பவுமே “கங்கா.. கங்கா.. கங்கா..” அவதானே உனக்கு புள்ளை.என்னை நீ தவுட்டுக்கு தானே பெத்தே.
நீயும் என்ற புள்ளைதான்.யாரு இல்லைனா?
சும்மா சொல்லாதே சிரா! உனக்கு எப்பவுமே என்னை விட கங்காதான் ஒசத்தி.
‘இல்லை’ என்றாலும் அவர் மனம் ஏற்கவில்லை.
இருவரது சம்பாஷனையை கேட்ட கங்காவிற்கும் சிவராமன் மனதில் என்ன உள்ளது என்றும் நன்றாகவே தெரியுமே.
தற்போது கங்காவின் சம்பளம் வீட்டிற்கும் நகை வட்டி கட்டுவதற்கும் சென்றது.கெளசியின் சம்பளம் சிவராமனின் மருத்துவ செலவிற்கு சென்றது. மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களை ஓட்டுவது ரொம்ப சிரமமானது.
இதோடு பழனிச்சாமி ‘வீட்டை விற்கலாம்’ என அடுத்த பிரச்சனையை ஆரம்பித்தார்.
சிவராமன்,” உன் பங்கை விற்றுக் கொள்.நான் எனது பங்கை விற்க மாட்டேன்” என பிடிவாதமாக நின்றார்.
—தலைவன் வருவான்…
error: Content is protected !!