Skip to content
Post Views: 1,518
அத்தியாயம் 22
கணவனைப் பார்த்த நீலாவின் மூளைக்குள் மின்னல் வெட்டுவது போன்ற வலியும், அதைத் தொடர்ந்த சில நினைவுகளும் வரத்துவங்கியது. தம்பியின் மூலம் நீலாவின் உடல்நிலை பற்றி புரிந்து வைத்திருந்த மோகனனுக்கு அவள் முகத்தில் வந்து போகும் உணர்வுகள் அவளுக்கு நினைவு திரும்புவதை உணர்த்த, “நீலா” என்கிற அழைப்போடு அவள் அருகே சென்றான்.
அவளை முதல்முறையாக பார்த்த தினம், தங்களுடைய திருமணம், அவளோடான அழகான திருமண வாழ்வு, சந்தோஷமாக ஆரம்பித்த ஊட்டி பயணம் என ஒவ்வொன்றாக அவனுக்கும் நினைவு வரத்துவங்கியது. அந்த வகையில் ஊட்டியில் இருந்து திரும்பும் போது நடந்த நிகழ்வுகளும் நினைவு வர, அந்த இடத்திலேயே நின்றான். என்னவோ செய்தது மோகனனுக்கு.
மனக்குதிரை இறக்கை கட்டி பறக்கப் பார்க்க, “இல்ல, அதையெல்லாம் நான் யோசிக்கக் கூடாது. அதெல்லாம் எப்பவோ நடந்தது. நீலாவுக்கு ஒன்னும் இல்ல. என் கண்ணு முன்னாடி நல்லா இருக்கா. அன்னைக்கு என்னால் முடியாத சூழல், இல்லன்னா கட்டாயம் அவளைக் காப்பாத்தி இருப்பேன். அன்னைக்கு நடந்தது மறக்கப்டவேண்டிய கொடூரமான செயல்கள் தானே தவிர, மறுபடி மறுபடி நினைச்சுப் பார்க்க வேண்டிய விஷயங்கள் இல்ல. நான் அதை நினைக்க மாட்டேன். எனக்கு ஒன்னும் ஆகாது.” என தனக்குத் தானே சொல்லிக்கொண்ட மோகனன், மனநோயின் விளைவாக தனக்குள் உருவாகிக்கொண்டிருந்த பதற்றத்தை குறைக்கப் பார்த்தான்.
Advertisement
அதற்குள், பின்னோடு வந்த மகனைக் காணவில்லை என்று பைரவியும், அக்காவைக் காணவில்லை என்று அமிர்தாவும் தேடி வந்து இவர்கள் இருவரின் மோன நிலையைக் கண்டார்கள்.
மோகனனையே பார்த்துக்கொண்டிருந்த நீலா அருகே வந்த அமிர்தா, “அக்கா” என அழைக்க, சத்தம் வந்த திசையில் திரும்பிப் பார்த்து, தங்கையை அடையாளம் கண்டுகொண்டு, “அமிர்தா” என்று அழைத்தாள் நீலா.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு அக்காவின் வாயில் இருந்து தன் பெயர் உச்சரிக்கப்பட்ட சந்தோஷத்தில் அவளைக் கட்டி அணைத்துக்கொண்டாள் அமிர்தா. பைரவி படபடப்போடு நின்றுகொண்டிருந்த மகனை அவன் உடல்நிலை கருதி அங்கிருந்து இழுத்துச் செல்லப் பார்க்க, “நீலா அம்மா” ஒரு மாதிரி குரலில் சொன்னான் மோகன். பதில் சொல்லாமல் அவனை வாணி இருக்கும் இடத்தை நோக்கி அழைத்துக்கொண்டு நடக்கத் துவங்கினார் பைரவி. அவன் சென்ற திசையில் கரத்தை நீட்டி மோகன் என்று மீண்டும் ஒருமுறை அழைத்த நீலா தங்கையின் கரங்களில் மயங்கிச் சரிந்தாள்.
Advertisement
“என் கூடவே இரு மோகன்.” என பைரவி மகனின் கையைப் பிடித்துக்கொள்ள, கைகளால் முகத்தை தாங்கியவண்ணம் தாய் அருகே அமர்ந்தான் மோகனன். வாணி வலியில் துடிக்கும் சத்தம் கேட்டாலும் புத்தியை நிறைக்கவில்லை. யாரையும் நினைவு இல்லாத நிலையில் கூட தன்னைப் பார்த்ததும் கண்டுகொண்ட மனைவி நீலா மேல் தான் அவன் மொத்தக் கவனமும் இருந்தது.
Advertisement
அவளை நேருக்கு நேராகப் பார்க்கும் தருணத்தில், தான் தன்னுடைய மனப்பிறழ்வு சுழலுக்குள் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக இரண்டு வருடங்களாக மோகனன் மேற்க்கொண்ட பயிற்சிகளும், மனநல மருத்துவரிடம் எடுத்துக்கொண்ட சிகிச்சைகளும் ஏராளம். அது இப்போது கொஞ்சம் கைகொடுத்தாலும், முழுதாக நடந்த அனைத்தையும் மறந்து நீலாவை நெருங்க அவனால் முடியவில்லை. அதை உணர்ந்து தன் மேலே கோபம் கொண்டான் மோகனன். அப்படி என்ன நோய், இத்தனை வருடங்கள் சிகிச்சை எடுத்துக்கொண்டும் நோய் தீரவில்லை என்றால் தன் மீது தான் எதுவும் தவறோ என்று தன்னையே தாழ்வாக நினைத்தான்.
நீலாவுக்கு நினைவு திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் தெரிய, அனைத்து பரிசோதனைகளும் மீண்டும் ஒருமுறை எடுக்கச் சொன்னார் மருத்துவர். அமிர்தா கேசிக்கு அழைத்து விஷயத்தைச் சொன்னாள். உடனடியாக தேவையான பணத்தைப் போட்டுவிட்டவன் ஒரு மணி நேரம் கழித்தே மருத்துவமனை வந்தான்.
வாணி குழந்தைப்பேற்றுக்காக அனுமதிகக்ப்பட்டிருக்கிறாள் என்று தெரிந்தாலும் கேசி முதலில் பார்க்க வந்தது நீலாவை தான்.
Advertisement
“போன் பண்ணி ஒரு மணி நேரம் ஆச்சு. எதுக்காக இவ்வளவு லேட். என்ன உங்க வாணி அண்ணியைப் பார்த்துட்டு வரீங்களா?” வேண்டுமென்றே கேட்டாள்.
“அக்மார்க் பொண்டாட்டி மாதிரி நடந்துக்காத டி. சில அயோக்கியனுங்களுக்கு அவங்க செஞ்ச தப்புக்கான தண்டனை கிடைச்சது. அதை ஆசை தீர பார்த்துட்டு வரேன்.” என்றான். பட்டென அவனை நிமிர்ந்து பார்த்தாள் அமிர்தா.
ஆம் என்று தலையசைத்தவன், “எல்லா திருஷ்டியும் ஒளிஞ்சு போச்சு. நீ வேண்ணா பார் எல்லாம் பழையபடி மாறிடும்.” நம்பிக்கையோடு சொன்னான் கேசி.
“எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு. இன்னைக்கு அக்காவை நேருக்கு நேரா பார்த்த பிறகும் உங்க அண்ணனுக்கு எந்தப் பிரச்சனையும் வரல தெரியுமா?” என்றவளை அதிர்வாய் பார்த்தான் கேசி.
வாணி இங்கே அனுமதிக்கப்பட்டிருப்பது அவனுக்குத் தெரியும் என்றாலும் எப்படியும் அண்ணன் இங்கே வந்திருக்க மாட்டான் என்று தான் நினைத்திருந்தான். அவன் வந்ததோடு நீலாவையும் பார்த்திருக்கிறான் என்றால் என்று பயந்தவன் வேகமாக அண்ணனை நோக்கி ஓடினான்.
தம்பியைக் கண்டதும் பாய்ந்து வந்து அவனை அணைத்தான் மோகனன். அணைப்பின் இறுக்கமே சொன்னது அவன் கொண்ட பயத்தை. “ஒன்னும் இல்லண்ணா, நீலா அண்ணி நல்லா இருக்காங்க. சொல்லப்போனா உன்னை அவங்க பார்த்தது கூட நல்லதுக்கு தான். ஆபரேஷன் முடிஞ்சு இத்தனை நாள் ஆகியும், நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணியும் ஒரு வார்த்தை பேசாதவங்க, உன்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டுபிடிச்சதோடு அவங்களா உன்கிட்ட பேசியும் இருக்காங்க. நீ வேண்ணா பார், கண்ணு முழிக்கும் போது அவங்க பழைய நீலா அண்ணியா மாறி இருப்பாங்க.” என்று நம்பிக்கை கொடுத்தான்.
“இந்த வீட்டில் இருந்தவரை என்பொண்ணு அண்ணி. அந்த வீட்டுக்குப் போனதும் அந்தப் பொண்ணு அண்ணியா? கல்யாண வாழ்க்கை உங்களை இந்தளவுக்கு மாத்தும் னு எனக்குத் தெரியாமப் போச்சு. உங்க பொண்டாட்டியை அவளுக்குத் தெரிஞ்ச சில வித்தைகளை என் பொண்ணுக்கும் சொல்லிக்கொடுக்கச் சொல்லுங்க. அப்படியாச்சும் அவளுக்கு புத்தி வந்து அடுத்தவங்களைப் பத்தி யோசிக்காம தன்னைப் பத்தி யோசிக்கிறாளா பார்க்கலாம்.” ஒருவித மூர்க்கத்துடன் பேசினார் பைரவன்.
“போதும் மாமா, இதுநாள் வரைக்கும் நீங்க அவங்களைப் பத்தி பேசின பேச்சுக்கள் எல்லாம் போதும். அந்த நேரம், நடந்த கொடூரத்தை தாங்க முடியாத அதிர்ச்சி, அடுத்து என்ன செய்யுறதுன்னு தெரியாத இயலாமை இரண்டும் சேர்ந்து தான், என்னை உங்க பின்னாடி நின்னு பல தப்பை பண்ண வைச்சிடுச்சு. அதுக்காக நான் ரொம்ப நல்லவன்னு எல்லாம் சொல்ல மாட்டேன்.
துர்போதனை செய்தது சகுனியா இருந்தாலும் செயல்பட்டது துரியோதனன் என்பதால் தான் அவன் மொத்தமா அழிஞ்சு போனான். அந்த வகையில் உங்களோட யோசனையைக் கேட்டு கொடுஞ்செயல் புரிந்த நானும் துரியோதனன் மாதிரி தான். அந்த துரியோதன் அவன் திருந்துறதுக்காக கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை வீணடிச்சு மண்ணாப் போனான். ஆனா இந்த கேசி சரியான நேரத்தில் தன்னோட தப்பை உணர்ந்து எழுந்துட்டான்.
என் தப்புக்கு நான் பிரயாச்சித்தம் பண்ற அதே வேளையில் என்னைச் சுத்தி இருக்கும் பெண்களுக்கு யாரும் எந்த பாவமும் செய்ய நான் அனுமதிக்க மாட்டேன்.” உறுதியாய் சொன்னான்.
பைரவன் பதில் சொல்ல முடியாமல் பார்க்க, “நீலா, வாணி இரண்டு பேருமே என் அண்ணிங்க தான். என்ன ஆனாலும் அது மாறாது. வாழ்க்கை இரண்டு பேரில் ஒருத்தருக்கு தான் கிடைக்கும். ஆனா மரியாதை இரண்டு பேருக்கும் கிடைச்சாகணும்.” கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டு அண்ணனை தனியே அழைத்துச்சென்றான்.
நீலாவைப் பார்த்த பின்னாலும் மோகனன் பெரிதாக எந்த ஆர்ப்பாட்டமும் செய்யாமல் இருந்ததிலேயே பைரவனின் மனம் ஆட்டம் கண்டுபோய் இருந்தது. இப்போது இத்தனை பேசிய பின்னர் அவனை தனியே அழைத்துச்செல்லும் கேசியைப் பார்க்கையில் இன்னமும் பயமாக இருந்தது அவருக்கு. மோகனனை மொத்தமாக நீலா வசம் ஒப்படைத்துவிடுவார்களோ, குழந்தையோடு தன் மகள் தனியாகிப்போவாளோ என்று பயந்து தங்கை மகன்களைப் பின்தொடர்ந்து சென்றாள்.
ஆள் நடமாட்டம் குறைந்த இடத்தில் அண்ணனை நிறுத்தி, “உன் முகமே சரியில்லையே அண்ணா. என்னாச்சு, உனக்கு என்ன செய்யுது?” நேரடியாக விஷயத்திற்கு வந்தான் கேசி.
“தெரியல கேசி, சரியா சொல்லத் தெரியல. என்னவோ பண்ணுது, ஆனா என்னன்னு இனம் கண்டுபிடிக்க முடியல. அதை விடு, நான் நீலாவைப் பார்த்தேன். அவளைப் பார்த்த பின்னாலும் எனக்குப் பெருசா எதுவும் ஆகல பார். நான் நல்லா இருக்கேன்.” என குழந்தையைப் போல் நின்ற இடத்திலேயே சுற்றிக் காண்பித்தான்.
கேசி அண்ணனையே பார்த்துக்கொண்டிருக்க, “நீங்க தேவையில்லாம பயந்து அவசரப்பட்டு தப்புத்தப்பா எல்லாத்தையும் பண்ணி வைச்சுட்டீங்க டா. எனக்கு ஒன்னும் இல்ல பார். என்னால் நீலா கூட சந்தோஷமா வாழ முடியும் கேசி.” என்று மோகனன் சொல்லும் போது, என்னைத் தாண்டி எப்படிப் போவாய் என்பதாய் வாணியின் வயிற்றில் இருந்து உதித்திருந்தாள் அவனின் பெண்குழந்தை.
குழந்தை பிறந்த சத்தம் கேட்டு உடலின் ஆற்றல் மொத்தமும் வடிந்தது போல் தொய்ந்து அமர்ந்தான் மோகனன். பல வித கேள்விகள் மனதிற்குள் அணிவகுத்து நிற்க, முதலில் எந்தக்கேள்வியை வைக்கவேண்டும், அதற்கு எப்படி பதில் அளிக்கவேண்டும் என்று தெரியாமல் அவன் கைகளும், கால்களும் நடுங்கத் துவங்கியது.
“அண்ணா” என்கிற அழைப்போடு அணைத்து அமைதிப்படுத்தினான் கேசி.
நீலாவுக்கான பரிசோதனை முடிவுகள் வந்தது. அவள் முழுமையாக குணமடைந்துவிட்டாள். அவள் கண்ணைத் திறக்கும் போது பழைய நீலாவாக இருப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவர் சொல்ல, அமிர்தாவைக் கையில் பிடிக்கமுடியவில்லை.
பெற்றெடுத்த தாய்க்கு குழந்தைகளை முதல்முதலில் அறிமுகப்படுத்தும் போது அவர்கள் மிகவும் அழகாக இருக்கவேண்டும் என பார்த்துபார்த்து பிள்ளைகளைத் தயார் செய்து அழைத்து வரச்சொன்னாள். அத்தோடு அவள் ஆரவாரம் அடங்கவில்லை.
இந்த சந்தோஷமான செய்தியை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்ற கேசியைத் தான் அவள் மனம் தேடியது. அந்த நேரம் அதுவரை நடந்த அனைத்தையுமே மறந்திருந்தாள். அந்த மருத்துவமனை வளாகத்தில் கேசியையும் மோகனையும் ஒன்றாகப் பார்த்தவள் அவர்களை நோக்கி நடக்க, கையில் குழந்தையோடு அங்கே வந்த பைரவன் நிகழ்காலத்தை உணர்த்த, அவ்வளவு நேரம் இருந்த சந்தோஷம் அனைத்தையும் அப்படியே புதைத்துவிட்டு நின்ற இடத்திலேயே நின்றுவிட்டாள்.
குழந்தையை ஒருபார்வை பார்த்த கேசி எதேச்சையாக திரும்பி அமிர்தா நிற்பதைக் கவனித்து அவளிடம் வந்தான். “அண்ணி கண்ணு முழிச்சுட்டாங்களா?” என்க, “இப்ப தானே குழந்தை பிறந்திருக்கு. அதுக்குள்ள கண்ணு முழிச்சிருக்க மாட்டாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு போய் உங்க அக்கறையைக் காட்டுங்க. ரொம்ப சந்தோஷப்படுவாங்க.” என்றாள்.
“எந்தக் குழந்தையை சொல்ற?” என்று குழம்பியவனுக்கு அதன் பிறகே அவள் பேச்சின் சாரம்சம் புரிய, அவள் கன்னம் பற்றி தன்னை நோக்கி நிமிர்த்தியவன், தன் கண்களைப் பார்க்க வைத்து, “நீலா, வாணி இரண்டு பேருமே என் வாழ்க்கையில் பெரும் மரியாதைக்கு உரியவங்க. அவங்க இரண்டு பேரில் ஒருத்தருக்காக இன்னொருத்தரை விட்டுக்கொடுக்க என்னால் முடியாது.” என்றான். பயங்கரமாக அவனை முறைத்தாள் அமிர்தா.
“நடந்ததுக்கு நான் என்ன விளக்கம் சொன்னாலும் அது சரியா இருக்காது. சில நியாயமான காரணங்களுக்காக தப்புன்னு தெரிஞ்சு, சிலர் வருத்தப்படுவாங்கன்னு புரிஞ்சு செஞ்ச தப்புக்கு, மன்னிப்பு கேட்டு அது கிடைக்கும் வரை காத்திருக்கிறதை தவிர வேற என்ன வழி இருக்கு சொல்லு.
எல்லா விஷயமும் சரியான நேரத்தில் ரொம்ப சரியா நடக்கும் னு நம்புறேன். அதுவரை தள்ளி நின்னு வேடிக்கை மட்டும் பார்ப்போமே.” என்றவனுக்கு பதில் சொல்லாமல் முன்னேறி நடந்தாள்.
“காலையில் இருந்து எதுவும் சாப்பிட்டு இருக்க மாட்ட, குழந்தைங்க வந்துட்டா அதுக்குப் பிறகு உன்னால் சாப்பிட முடியாது. அதனால் என்கூட வா.” என்று கேண்ட்டீனுக்கு அழைத்துச் சென்றான்.
அறைக்குள் இருந்து அமிர்தா வெளியேறிச் சென்ற நொடியில் இருந்து நீலாவின் கண்மணிகள் உருளத்துவங்கியது. அன்னை, தந்தை முகம், முதன்முதலாக கண்ணாடியில் பார்த்த தன் முகம், பிறந்த குழந்தையாக தங்கை அமிர்தாவின் முகம் வளரும் போது பழக்கமான தோழிகளின் உருவம், அமிர்தாவின் காதலனான சாருகேசியின் முகம் என சிறிது சிறிதாக அனைத்தும் நினைவு வர, மோகனன் முகம் நினைவில் வந்த அடுத்த நொடி முழு சுயநினைவுடன் கண்களைத் திறந்திருந்தாள் நீலா.
கண்களைத் திறந்த நொடியில் மழுக்கென்று கண்ணீர் தான் வந்தது அவளுக்கு. அவள் மூளையில் இறுதியாகப் பதிந்த நினைவுகளை நினைத்து பெண்ணாக தன்னைத் தானே அருவருத்தாள் என்றால், கணவனுக்கு என்ன ஆகி இருக்குமோ என்று பயப்படவும் செய்தாள்.
தான் பிழைத்திருக்கிறோம் என்றால் கணவனும் கண்டிப்பாக பிழைத்திருப்பான். ஆனால் நடந்த சம்பவங்களால் மனதளவில் பாதிப்பட்டு இருப்பானே என்று பரிதவித்தாள். அவனை நேரில் பார்த்து அவன் நலம் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டால் தான் மனம் சாந்தம் அடையும் என்று தோன்ற, அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்துகொள்ளப் பார்க்கையில் தலை சுற்றுவது போல் தோன்ற அப்படியே அமர்ந்துவிட்டாள்.
பைரவன் தன் மகள் பெற்றெடுத்த மணிமுத்தை மோகனிடம் நீட்ட, தூக்காமல் ஒரு பார்வை மட்டும் பார்த்துக்கொண்டான். “தூக்குப்பா.” பைரவி அவன் கைகளை நீட்டப் பார்க்க, வலுக்கட்டாயமாக கைகளை இறுக்கிக்கொண்டான்.
“ஏன்டா இப்படி பிடிவாதம் பிடிக்கிற. அந்தக் குழந்தைங்களுக்கு நடந்தது அநியாயம் னு சொல்ற நீ, அதே அநியாத்தை இந்தக் குழந்தைக்கு செய்யலாமா?” பைரவி கேட்க, எதுவும் பேசாமல், பேச முடியாமல் தனியாய் போய் நின்றுகொண்டான்.
அமிர்தாவும் கேசியும் அறைக்குள் வரும் போது நீலா மெத்தையில் சாய்வாக படுத்திருந்தாள். “அக்கா” பரபரப்பாக அழைத்துக்கொண்டு அருகே சென்ற அமிர்தா அவள் தலை முதல் கை வரை வருடிப்பார்க்க, அவள் கன்னத்தில் கை வைத்து, “அமிர்தா.” என்று அன்போடு அழைத்தாள் நீலா.
“அக்கா, உனக்கு என்னைத் தெரியுதா?” ஆச்சர்யம், அதிர்ச்சி, சந்தோஷம் என பல விதமான உணர்வுக்கலவையில் கேட்க, “ஏன் தெரியல. அது தான் என் கண்ணு முன்னாடி இவ்வளவு பெருசா நின்னுக்கிட்டு இருக்கியே.” என்ற நீலா அதன்பிறகு தான் தங்கையின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியையும், நெற்றி வகுட்டுக் குங்குமத்தையும் கண்டாள். படுக்கையில் இருந்து வேகமாக எழுந்துகொள்ளப் பார்க்க, அவசரமாய் முன்னே வந்து உதவினான் கேசி.
அவனை ஒரு பார்வை பார்த்த நீலா, “நீங்களா அமிர்தாவோட புருஷன்.” ஆச்சர்யமாகக் கேட்டாள்.
“ஏன் அண்ணி இவ்வளவு ஆச்சர்யம். உங்க தங்கச்சியோட ஒப்பிடும் போது நான் கொஞ்சம் அழகில் கம்மி தான். அதுக்காக அவளை எனக்கு கொடுக்க மாட்டீங்களா என்ன?” சிரித்து சூழ்நிலையை இலகுவாக்கப் பார்த்தான் கேசி. ஆனால் அவனுடைய இருதயம் மட்டும் மத்தளத்தைப் போல் பலமாக அடித்துக்கொண்டது.
அண்ணி, அண்ணனைப் பற்றிக் கேட்டால் அவளுக்கு என்ன பதில் சொல்வது. தன் அண்ணனைக் காப்பாற்ற கொடுமைகளை சகித்தவள் உடலோடு மனதையும் சரிசெய்து வருகையில் அந்த அண்ணனே அவளுக்கு இல்லை என்று எப்படி அவன் வாயால் சொல்வது.
எந்த வித காரணமும் சொல்ல முடியாத, அவளுக்கு அநீதியை மட்டுமே செய்த நடப்பு நிகழ்வுகளை அவள் மனமும், உடலும் நோகாமல் எப்படி சொல்லி புரியவைப்பது. எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட பிறகு அவள் என்ன முடிவெடுப்பாள் என்று பலவித கேள்விகள் படையெடுத்து நிற்க, பந்தயத்திற்கு தயார் நிலையில் நிற்கும் விளையாட்டு வீரர்களைப் போல் தவிப்பில் நின்றுகொண்டிருந்தான்.
அவன் எதிர்பார்ப்புகள் எல்லாவற்றையும் பொய்யாக்கி, “இந்நேரம் உங்களுக்கும், எங்க குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் ஆக்கி இருப்பீங்களே. அப்புறம் எப்படி உங்க இரண்டு பேரோட கல்யாணம் சாத்தியம் ஆச்சு.” என்கிற கேள்வியை முன்வைத்து கேசியோடு சேர்த்து அமிர்தாவையும் ஆச்சர்யப்படுத்தினாள் நீலா.
“அக்கா நீ சுயநினைவு இல்லாத இரண்டு வருஷத்தில் நடந்தது எல்லாம் உனக்கு நினைவு இருக்கா? ஆனா அது நினைவில் இருக்க வாய்ப்பில்லைன்னு டாக்டர் சொன்னாரே.” சந்தேகமாகக் கேட்டாள் அமிர்தா.
“இரண்டு வருஷமா நான் சுயநினைவில் இல்லாம இருந்தேனா?” அதிர்ச்சியாய் கேட்டாள் நீலா.
அமிர்தாவுக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் போலீஸ்காரன் கேசிக்கு எதுவோ புரிவது போல் இருந்தது. “நீங்க சுயநினைவில் இல்லாத நேரத்தில் நான் என்ன செஞ்சிருப்பேன்னு உங்களுக்கு ஏதாவது யூகம் இருக்கா அண்ணி.” மெதுவாய் கேட்டான் கேசி.
“பெருசா என்ன பண்ணி இருப்பீங்க. உங்க அண்ணனோட நல்லதுக்காக என்னையும், அவரையும் பிரிக்க நினைச்சிருப்பீங்க. என்னோட பொறுப்பை எங்க அம்மாகிட்ட ஒப்படைச்சு, என்னை மொத்தமா உங்க குடும்பத்தில் இருந்து ஒதுக்கி வைச்சிருப்பீங்க. உங்க அண்ணனை இன்னொரு கல்யாணம் பண்ணிக்க சொல்லி வற்புறுத்தி இருப்பீங்க. அதனால் உங்களுக்கும், அமிர்தாவுக்கும் நடுவில் சண்டை வந்திருக்கும். சரிதானே.” என்னவோ அனைத்தையும் அருகே இருந்து பார்த்தது போல் சொன்ன நீலாவினை ஆச்சர்யமாகப் பார்த்தனர் மற்ற இருவரும்.
“குறைவா பேசுறவங்க, தன்னைச் சுத்தி நடக்கிற எல்லாத்தையும், எல்லோரையும் நல்ல கவனிப்பாங்கன்னு கேள்விப்பட்டு இருக்கேன். உங்க விஷயத்தில் அது உண்மை தான் அண்ணி.” என்றான்.
எனில் தான் கணித்தது உண்மை. கணவனின் பழைய மனநலப் பாதிப்பு மறுபடியும் தூண்டப்பட்டிருக்கிறது. அது தீவிரமடையக் கூடாது என்பதற்காக தனக்கும் அவருக்குமான உறவை எங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களாக விலக்கி வைத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்ட நீலா கண்களை மூடித்திந்துவிட்டு, “உங்க அண்ணனை என்னைப் பார்க்கவிடாம செய்ய நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பீங்க இல்ல.” கசப்பான சிரிப்போடு கேட்டாள். அவளைப் பாவமாய் பார்த்தான் கேசி.
உன் கணவன் உன்னைப் பார்க்க வரக்கூடாது. அதன் பலனாய் அவன் உயிருக்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக அவனை மொத்தமாக இன்னொரு பெண்ணுக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டோம் என்று எப்படி சொல்வது என தவியாய் தவித்தான் கேசி. நரக வேதனை என்றால் என்ன என்று கேட்டால் இப்போது கடந்து கொண்டிருக்கும் நொடிகளை தான் கை காட்டுவான் கேசி.
“எல்லாத்தையும் இப்பவே தெரிஞ்சக்கணுமா? முதலில் நாம நம்ம வீட்டுக்குப் போகலாம். அதுக்கு முன்னாடி உனக்கு இரண்டு பேரை நான் அறிமுகப்படுத்தணும்.” என்ற அமிர்தா வெளியே நின்றிருந்த கேர்டேக்கரை வரவழைத்தாள்.
இரண்டு குழந்தைகளையும் பார்த்து ஆச்சர்யமான நீலா, “உனக்கு குழந்தைங்க இருக்காங்களா அமிர்தா. அச்சோ எவ்ளோ அழகு செல்லங்கள் இரண்டும். என்ன பேர் வைச்சிருக்க.” கேட்டபடி குழந்தைகளுக்காக கை நீட்டினாள்.
“லவன், லாதங்கின்னு பேர் வைச்சிருக்கேன். இவங்களை வளர்த்தது நான் தான். ஆனா இவங்களைப் பெத்த அம்மா நீ.” அக்காவைப் பார்த்து சொன்னாள் அமிர்தா.
குழந்தைகளைக் கொஞ்சிக்கொண்டிருந்த நீலாவின் கரங்கள் ஒரு சில கணங்கள் நின்றது. அன்று தன் மனதில் விழுந்த சந்தேகத்திற்கு உயிர் இருந்திருக்கிறது. அந்த உயிர் நல்லபடியாக வளர்ந்து பயிராகி நிற்கிறது என்பதைப் புரிந்துகொண்டவளுக்கு, வேறு சிலதும் புரிய, “குழந்தைகளையும் அவரைப் பார்க்க விடாம பண்ணிட்டீங்களா கேசி.” என்றாள் சற்றே வருத்தமாய்.
“மன்னிச்சிடுங்க அண்ணி.” என்று அவள் காலைப் பிடித்தான் கேசி. தன்னோடு சேர்த்து தன் பிள்ளைகளுக்கும் துரதிஷ்ட நிலை தான் என்பதைப் புரிந்துகொண்ட நீலா, “உங்க அண்ணன் இன்னும் என் கணவரா தான் இருக்காரா?” தட்டுத்தடுமாறி கேட்க, அவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தான் கேசி.
என்ன நடந்தது என்று சரியாகத் தெரியவில்லை என்றாலும் தனக்கு சாதகமாக எதுவும் நடக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டு, “குழந்தைங்களோட வெளியே போய் இரு அமிர்தா. எனக்கு கொஞ்சம் தனியா இருக்கணும்.” என்றுவிட்டு படுத்துக்கொண்டாள் நீலா.
“என்ன தான் சொல்லு, எனக்கு உன்னளவு சமார்த்தியம் பத்தலக்கா. உன்னைச் சுத்தி இருக்கும் ஒவ்வொருத்தரையும் எந்த சூழ்நிலையில் என்ன செய்வாங்கன்னு புரிஞ்சு வைச்சிருக்க. ஆனா நான் வெளுத்தது எல்லாம் பால் னு நம்பி எத்தனை முட்டாள்தனம் செஞ்சு வைச்சிருக்கேன் தெரியுமா?” என்று ஆரம்பித்தவள் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லிமுடித்தாள்.
இவர்களுக்கு முதுகு காட்டி படுத்திருந்த நீலாவின் கண்களில் இருந்து விடாமல் கண்ணீர் வடிந்தது. நேற்று உறங்கி இன்று எழுந்தது போல் தான் இருந்தது அவளுக்கு. ஆனால் அதற்குள் அவள் வாழ்வில் எத்தனை மாற்றங்கள். அவள் தாய், தந்தை அவளை விட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள். முத்துக்கள் போல அழகான இரண்டு பிள்ளைகளைப் பெற்றிருக்கிறாள். தங்கை தாயாக மாறி தனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறாள். எல்லாவற்றுக்கும் மேல் கணவன் மொத்தமாக கைவிட்டுப் போய்விட்டான் என்பதை நினைக்க நினைக்க, முற்றும் முழுதாய் தன்னை வஞ்சித்த கடவுள் மேல் கோபம் வந்தது அவளுக்கு.
தலைவலிப்பது போல் இருக்க, முகத்தை அழுந்தத் துடைத்து எழுந்தவள் தங்கையிடம் தலைவலிக்கான மாத்திரையோடு சேர்த்து ஒரு தூக்க மாத்திரையும் கேட்டு வாங்கி போட்டுக்கொண்டு படுத்தாள். தன்னால் தங்கை பட்ட துயரங்கள் போதும் என்று நினைத்தவள் அந்த இடத்தில் தீர்க்கமான முடிவுக்கு வந்தாள்.
தம்பிக்கு அழைத்து நீலா கண்விழித்துவிட்டாள் என்கிற செய்தி கேட்ட மோகனன் அங்கே வரப்பார்க்க, “எனக்கு தூங்கணும் கேசி. நடந்தது எல்லாத்தையும் தாங்கிக்கிறதுக்கு எனக்கு கொஞ்சம் நேரம் வேணும். நான் தெளிவான பிறகு நானே அவரைத் தேடி வரேன்னு சொல்லுங்க.” என்றுவிட்டு கண்ணை மூடிக்கொண்டாள்.
அவளிடம் பேசுவதற்கு, தன் துரதிஷ்டநிலையை சொல்லி புரிய வைப்பதற்கு, தன்னுடைய கையறு நிலைக்கு யோசனை கேட்பதற்காக என பலவற்றிற்காக மோகனன் அவனுள் சேர்த்து வைத்திருந்த தைரியம் மொத்தமும் காற்றில் பறக்க, அவள் இருக்கும் அறையை பார்த்துக்கொண்டு தள்ளி நின்றான்.
error: Content is protected !!