Skip to content
Post Views: 976
யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 5
லட்சுமியின் அண்ணன் அருணாச்சலம் அவரது ஆருயிர் காதலியான கஸ்தூரியை காதல் திருமணம் செய்து கொண்டார். இதில் கஸ்தூரி அவர் உறவுப் பெண்தான் கொஞ்சம் பொறுத்து அண்ணனுக்கு திருமணம் முடிந்த உடன் வீட்டில் பேசி முடித்திருக்கலாம்.
ஆனால் அதற்குள்ளாக திருமணம் செய்து விட்டார்களே என்ற வருத்தம் பெரியவர்களுக்கு,அதுமட்டுமல்ல வீட்டில் முதல் காதல் திருமணம். கொஞ்சம் அதிர்ச்சி,எதிர்ப்பு இருந்தாலும் சொந்தத்தில் அமைந்ததால் ஏற்றுக் கொண்டனர்.
கஸ்தூரியும் அந்த வீட்டிற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டார். அதுமட்டுமா பழனியம்மாளின் ஃபேவரெட் மருமகள் ஆகிப் போனாள்.
Advertisement
ஆனால் சிவராமன் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார். பெரிய மச்சினன் செல்வத்திற்கு திருமணம் நடைபெறும் வரை அவர்களை ஏற்றுக்கொள்வதில்லை என…
ஆனால் அண்ணன் தங்கை பாசம் அவரது கொள்கையை ஏற்றுக் கொள்ளாதே.திருமணம் முடிந்து வீட்டில் அனைவரையும் சமாளித்துவிட்டு நேரே தங்கையையும் குழந்தையையும் காண வந்தார் அருணாச்சலம்.
வந்தவர் குழந்தைக்கு நான் இன்னமும் ஏதும் செய்யவில்லை என கூறி தன்னிடம் இருந்த கொஞ்சப் பணத்தை லட்சுமி கையில் தந்து விட்டு சென்றார்.
Advertisement
சிவராமனின் தாய் பாப்பம்மாள் வாய் பேசாத காது கேட்காத ஸ்பெஷல் பர்சன். ஆனால் நிறைய மனதைரியமும் புத்தி சாதுர்யமும் உடையவர் மூன்று பிள்ளைகள் என்றாலும் சிவராமன் மீது அதிக பிரியம்.
Advertisement
சிவராமனின் தாய்பாசத்தை சொல்லவா வேண்டும். இரவு வேலை முடிந்து வந்ததும் இருவரும் சைகை மொழியில் அன்றைய நிகழ்வுகளை பரிமாறிக் கொள்வர்.
அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது யாருக்கும் புரியாது. ஆனால் உள்ளூர் முதல் உலக நிகழ்வுகள் வரை அனைத்தும் அலசி ஆராய்ந்து விடுவார்கள் இருவரும்.
அப்படியே லட்சுமியின் அண்ணன் வந்ததும், கங்காவிற்கு ஏதாவது வாங்கி கொடுக்க பணம் தந்ததும் சைகை மொழியில் சிவராமனுக்கு கூறினார் பாப்பம்மாள்.
Advertisement
உடனே,” லட்சுமி! உங்க அண்ணன் வந்தானா?பணம் கொடுத்தானா?”
“ஆமா கங்காவுக்கு ஏதாச்சு வாங்கிக்க சொல்லி பணம் கொடுத்தான்”.
அந்த பணம் எம்புள்ளைக்கு வேண்டா நீ உடனே உங்க வீட்டுக்கு போய் பணத்தை திருப்பி கொடுத்துட்டு வந்துரு.
கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்தா என்ன நினைப்பாங்க?- லட்சுமி
“என்னமோ நினைச்சிட்டு போறாங்க. எனக்கு அதை பத்தி எல்லா கவலை இல்ல. பெரிய மச்சினனுக்கு கல்யாணம் ஆகற வரை இதெல்லா எதுவும் எம்புள்ளைக்கு வேண்டா நீ கொண்டு போய் கொடுத்துட்டு வா” என்றார் உறுதியான குரலில்.
“அவங்க எல்லாருமே ஏத்துக்கிட்டாங்க உனக்கு மட்டு என்ன?எங்க அண்ணன்தானே பணம் கொடுத்துட்டு போனான்.
என்னமோ மூச்சிக்கு முன்னூறு தடவை எம்புள்ளை எம்புள்ளைகறே நானுந்தானே பத்து மாசம் சுமந்து பெத்தே.
எம்புள்ளைக்கு என்ன வேணு,வேண்டாங்கறதே முடிவு செய்றே உரிமை எனக்கும் இருக்குதானே.
என்னாலே பணத்தை திருப்பி கொடுக்க முடியாது என்றார் லட்சுமியும் உறுதியான குரலில்.
இந்த பணத்துக்கு என் வீட்டுல இடமில்லே. நீ உங்க அப்பன் வீட்டுக்கு கொண்டு போய் வெச்சுக்க.
சரி எம்புள்ளையை கொடு நான் எங்க அப்ப வீட்டுக்கு போறே- லட்சுமி.
புள்ளையெல்லா கொடுக்க முடியாது நீ மட்டும் கிளம்பி போ- சிவராமன்.
இவ்வளவு நேரமும் சண்டை பெரியதாகி விடக் கூடாது என தன் வீட்டின் கதவோரம் நின்று பானுமதி இறைஞ்சி கேட்காத தெய்வம் இல்லை.
நிலைமை கைமீறி போவதை உணர்ந்த அவர் தர்மசங்கடமாக உள்ளே வந்து,எதுக்கு சத்தம் வேண்டா பொறுமையாக போங்க என்றார்.
“லட்சுமி பணத்தை கொண்டு போய் கொடுத்துட்டு வந்துரலாம்” என நிலைமையை சமாளிக்க முயன்றார்.
பானுமதி சொன்ன உடன்தான் லட்சுமியும் சிவராமனை உணர்ந்து கொண்டார்.அவருக்கு சில விஷயங்கள் பிடிக்க வில்லை என்றால் இறுதி வரை அதில் பிடிவாதத்தோடு மட்டுமே இருப்பார்.
இருவரில் ஒருவர் இறங்கி வந்தால் மட்டுமே இல்லறம் நல்லறமாகும் என உணர்ந்து,அவர் வழிக்கே இறங்கி வந்தார் லட்சுமி.
“சரி நா பணத்தை திருப்பி கொடுக்கறே”.
“நங்கை(அண்ணி ) இங்க வாங்க நீங்களும் கூட போங்க, அங்க போய் வேற எதும் பேசக் கூடாது. தண்ணீ கூட அந்த வீட்டுல வாங்கி குடிக்க கூடாது. பணத்தை கொடுத்தும் திரும்பி வந்தரனும்” – சிவராமன்.
அதுவரை தான் சொன்ன வார்த்தையால் தான் சண்டை என்பதை அறியாமல்,ஏதோ வாக்குவாதம் இருவருக்குள்ளும் எப்படி சமாளிப்பது என்று கங்காவை கையில் பிடித்தபடி கவலையாக நின்றிருந்தார் பாப்பம்மாள்.
கங்கா இரண்டு கைகளையும் வாயில் வைத்தபடி ஜொள் விட்டுக் கொண்டு அம்மாவையும் அப்பாவையும் மாறி மாறி பார்த்திருந்தாள். அவர்களது சண்டைக்கு கருவில் வளரும் போதே தன்னை பழக்கப்படுத்திக் கொண்டாள் எனதான் சொல்ல வேண்டும்.
லட்சுமி பிள்ளையையும் தன்னுடன் அழைத்துச் செல்ல எடுக்க, “வேண்டா இன்னேரம் கங்காவை வெளிலே தூக்கிட்டு போக வேண்டா. ஏற்கனவே நலங்கிட்டு இருக்கு, மறுபடியும் உடம்பு முடியாம போய்ற போது என தடுத்துவிட்டார்.
மற்றுமொரு இரவு மகள் அம்மா வீடு சென்றாள்.உடன் பானுமதியும் வந்திருக்க உபசரிப்பு சற்று அதிகமானது.
வா பானு,உட்காருங்க ரெண்டு பேரும்.. காபி,டீ ஏதாச்சு போடட்டுமா? இல்ல சாப்பாடு சாப்பிடறீங்களா? என வாய் எல்லாம் பல்லாக சிரித்த முகமாக உபசரித்தார் பழனியம்மாள்.
இருவரும் எதுவும் பதில் பேசாது எப்படி ஆரம்பிப்பது என கையை பிசைந்து கொண்டு நின்றனர்.
புதுப்பெண் கஸ்தூரியும் இருவருக்கும் தோசை ஊற்றுவதாக கூறினார்.வேண்டாம் என மறுத்து எப்படியோ விஷயத்தை கூற எல்லோர் முகத்திலும் ஒரு திருப்தியின்மை நன்றாகவே தெரிந்து.
பழனியம்மாளும்,ராதாவும் ஆரம்பித்து விட்டனர்.
“ஏன் என் பையன் காசு கொடுத்தா உன் புள்ளை கொறைஞ்சு போயிடுவாளா?கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்தா என்ன மரியாதை எங்களுக்கு? உன் புருஷன சொல்லி குத்தம் இல்ல, நா பெத்ததே சொல்லனும் வந்த உடனே உன்னை பாக்க உன் வீட்டுக்கு வந்தான் பாரு” என கோபம் அவர் பையன் பக்கம் திரும்பியது.
“அது என்ன அந்த பணம் என் புள்ளைக்கு வேண்டானு சொல்லறது. எங்க அண்ணனுங்க இல்லாம உன் புருஷனே எல்லாத்தையும் உன் புள்ளைக்கு பண்ணிருவாங்களா?
பொட்ட புள்ளைய பெத்து வச்சிருக்கீங்க நாளைக்கு காதுகுத்து, சீர்,கல்யாணம் எல்லாத்துக்கும் தாய் மாமனுங்க சீர் இல்லாம உன் புருஷனே எல்லாத்தையும் உன் புள்ளைக்கு பண்ணிருவாரா? என்றாள் ராதா.அவர் கூறுவதுதான் இறுதியில் பலிக்க போகிறது என்று தெரியாமல்…
சிவராமனை பேசிய உடன் லட்சுமிக்கு கோபம் வந்துவிட்டது. எம்புள்ளைக்கும் சரி எனக்கும் சரி அந்த ஒத்த ஆள் போதும். எல்லாத்தையும் மாமனே பாத்துக்கும் எனக்கு உங்க பணமும் வேண்டா சீர் செனத்தியும் வேண்டா என பணத்தை கொடுத்து விட்டு கிளம்ப போக…
எல்லாத்துக்கு மாமா மாமாகிறே இவ்வளவு நாளா அம்மாவும் அண்ணனும் உன்னை எப்படி வளர்த்துனாங்க?
ஒரு நிமிஷத்துல எல்லாத்தையும் வேண்டானு தூக்கி போட்டுட்டு போறே என மறுபடியும் மல்லுக்கு நின்றாள் ராதா.
ஆமா எனக்கு மாமா தான் வேணும் என உறுதியாக லட்சுமியும் கூற,அடுத்து பழனியம்மாள் ஆரம்பிக்க ரெடியானார்.
லட்சுமியின் அண்ணன் நிலைமையை சமாளிக்க இருவரையும் கிளம்ப சொல்லி,வாசல் வரை வந்து வழியனுப்பினார்.
“இங்க பாரு லட்சுமி சிவராமனுக்கு கொஞ்சம் முன்கோபம் அதிகம் போல,நீயும் அதுக்கு தகுந்த மாதிரி நடந்துக்க.. நம்ம அம்மாவை பத்தியும் உனக்கு தெரியும் தானே…”என்றார்.
“உனக்கு ஏதாச்சு கஷ்டமா இருந்தா என்னை மன்னிச்சிடு.
நம்மளோட உறவு முறை அவ்வளவுதானே.. ஒன்னா பிறந்து வளர்ந்தோம்.இப்ப கல்யாணம் ஆனதும் நீ யாரோ நான் யாரோங்கற மாதிரி ஆயிடுச்சு..
உன்னோட காசுலே எம்புள்ளைக்கு செய்யக்கூட எவ்வளோ சண்டை. அங்கே மாமன் பேசுது..இங்க அம்மா பேசுது.. என கலங்கினாள் லட்சுமி..
“அழாதே புள்ள.. குடும்பம்னா சண்டை சச்சரவு வரத்தான் செய்யும்..
சிவராமனும் நம்ம அம்மாவும் பேசறதுனாலே நாம அண்ணன் தங்கச்சி இல்லைனு ஆயிடுமா?
எனக்கு உன் மேல என்ன கோபம்? சிவராமனுக்கு கோபம் சரியானதும் நானும் கஸ்தூரியும்,கங்காவுக்கு ஏதாச்சு வாங்கிட்டு வரோம்”. அண்ணன் தங்கை இருவர் கண்ணிலும் நீர்…
அழுத தங்கையை வாசலோடு வழியனுப்ப மனமில்லாமல் இருவரையும் ரோடு வரை வந்து விட்டுவிட்டு வீடு திரும்பினார் அருணாச்சலம்.
சிறிது தூரம் நடக்க பின்னால் மூச்சு வாங்க ரமேஷும், கலாவும் ஓடி வந்தனர்.
“லட்சுமி மாமாவுக்கும் உனக்கும் மறுபடியும் சண்டையா?அம்மாவும் ராதாவும் கத்திட்டு இருந்தாங்க நாங்க ரெண்டு பேரும் இப்போதா வீட்டுக்கு வந்தோம்.விஷயம் கேள்விப்பட்ட உடனே வந்துட்டோம்.
ஆமா செல்வனுக்கு கல்யாணம் ஆகற வரை நான் நம்ம வீட்டுக்கு வரக்கூடாதுன்னு மாமா சொல்லிருச்சு.
நீங்க ரெண்டு பேரும் அம்மாவையும் அண்ணனையும் பாத்துக்கோங்க என்றார் லட்சுமி அழுத வாறே..
நா வேணுனா மாமாகிட்ட பேசறே நீ வா என ரமேஷ் முன்னே செல்ல..
“வேண்டா ரமேஷு மாமன் ஏற்கனவே கோபத்துல இருக்கு உங்க ரெண்டு பேரையும் ஏதாச்சு சொல்ல போது -லட்சுமி
மாமா என்னைய எதும் சொல்லாது நீ வா நான் பேசறே என மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க…
கலா தடுத்து விட்டாள். வேண்டா விடு லட்சுமி மட்டும் போகட்டும் செல்வனுக்கு கல்யாணம் ஆகற வரை நாங்களும் அங்கே வர மாட்டோம்.
எங்களுக்கு மாமா மேலே எந்த கோபமும் இல்லை.ஆனா நீயே நம்ம வீட்டுக்கு வராத போது நாங்க எப்படி உன் வீட்டுக்கு வரது.
அவங்கதான் அப்படி செய்றாங்கனா? நீங்க ரெண்டு பேரும்கூட புடிவாதமா இருக்கீங்க என கண்களில் நீர் தேங்க லட்சுமி சொல்ல..மற்ற இருவர் கண்களிலும் நீர்.
பானுமதி சுற்றம் உணர்ந்து அழாதீங்க கண்ணுகளா… ரோட்டுல நின்னு அழுதீங்கனா பாக்கற நாலு சனம் என்ன நினைப்பாங்க அழாத போங்க.. காலத்துக்கும் சொந்தம் வேணும் இப்ப வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுனு பேசிட்டு நாளைக்கு வருத்தப்படக் கூடாது இல்ல.. பொறுமையா போலாம் என்றார்.
பானு அக்கா நீங்கதான் எங்க அக்காவை பாத்துக்கணும் என்றாள் கலா..மூவரும் பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றனர்.
பெண்கள் இருவரும் மீதமிருந்த வழியில் பேசிக் கொண்டே சென்றனர்.
“லட்சுமி கொழுந்தனுக்கு ஒருசில விஷயங்கள் புடிக்காது.நீயும் அதுபடி நடந்துக்க.. என்ன சண்டைனாலும் நாலு சுவத்துக்குள்ளதா இருக்கனும்.இப்படி அடிக்கடி உங்க அம்மா வீட்டுக்கு போகற மாறி வெச்சுக்காதே..
அவங்க ஒன்னு பேச நாம ஒன்னு பேச சண்டை வந்தா சங்கட்டம் ஆயிடும்…
நாளை பின்னே ஒருத்தர் முகத்தை இன்னோர்த்தர் எப்படி பாத்துக்குவோம்.ஏதோ உங்க அண்ணன் பொறுமைசாளியா இருக்கறதுனாலே இன்னைக்கு சமாளிச்சிட்டோம்.
ஆனா தினமும் இப்படியே நடக்காது கண்ணு.. குடும்பம் நல்லபடியா போகனுனா ஒருத்தர் கோபப்படும் போது இன்னோர்த்தர் விட்டுக் கொடுத்து போகனு…
நம்ம குடும்பம் நல்லா இருக்கனு கண்ணு… கொஞ்சம் விட்டு கொடுத்து பொறுமையா போ லட்சுமி..” என புத்திமதி சொல்ல…
லட்சுமியும் “சரிங்க அக்கா” என தன் உடன் பிறவா சகோதரியின் அறிவுரையை ஏற்றுக் கொண்டார்.
என்னதான் சிவராமன் பிடிவாதமாக பணத்தை மறுத்துவிட்டாலும் அவர் கூறுவதும் நியாயம் தானே மூத்தவர்கள் இருக்கையில் இளையவர்கள் திருமணம் செய்யக் கூடாது அல்லவா.. அது வேறு வகையில் உளவியல் பிரச்சனைகளை கிளப்பி விடும்.
வீட்டிற்கு வர அதுவரை பாப்பம்மாள்
தூங்கவில்லை. இரு மருமகள்களின் முகத்தை கவலையோடு பார்க்க.. “ஒன்னுமில்லை” என்ற பதில் ஒரு சேர சைகை மொழியில் அவருக்கு சொல்லப்பட்டது.
கங்கா தொட்டிலில் நன்றாக தூங்கி கொண்டிருந்தாள்.அதற்குள் சிவராமன் இருவருக்கும் இரவு உணவு,நடு இரவில் கங்கா பசியில் அழுதால் அவளுக்கு பால் என அனைத்தையும் தயார் செய்து வைத்திருந்தார்.
அடுத்தடுத்த நாட்களில் லட்சுமி அம்மா வீடு செல்வதை குறைத்துக் கொண்டார்.தன் பெரிய அண்ணனுக்கு சீக்கரம் திருமணம் நடந்து குடும்பம் ஒன்று சேர்ந்து விட்டால், பண்ணாரி கோவிலுக்கு பூமுடி தருவதாக வேண்டிக் கொண்டார். அவர் வேண்டிய மூன்று மாதத்தில் தெய்வமும் வரம் கொடுத்து விட்டது.
லட்சுமியின் பெரிய அண்ணன் செல்வத்திற்கும்,உறவு பெண்ணான பரமேஸ்வரிக்கும் திருமணம் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டது.
பத்திரிக்கையில் சிவராமன் பெயர் அச்சடிக்கப்பட்டு தாம்பாள தட்டில் பூ,பழங்களுடன் மாமானார் அழைப்பு விடுத்தார்.
அதே சமயம் திருமணத்தில் இன்னொரு பெரிய பிரச்சினை வெடிக்க தயாராக இருந்தது.
–தலைவன் வருவான்.
error: Content is protected !!