Skip to content
Post Views: 1,037
யுகத்தின் தலைவன்.
அத்தியாயம் 17
கங்கா,டீச்சர் ட்ரெயினிங் முறை ரத்து செய்யப்பட்டதை படித்தவுடன் சிவராமனுக்கு முகமே வாடியது.அந்த நாள் முழுவதும் ஒரே யோசனையுடனே இருந்தார்.
ஏன் ஒருமாதிரி இருக்கே?-லட்சுமி
கங்காவை பனிரெண்டாவது முடிச்சதும் டீச்சர் ட்ரெயினிங் சேர்த்து விடலானு பார்த்தே, கவர்மென்ட் ஒரு டிகிரி முடிச்சாதா படிக்க முடியுனு ரூல்ஸ் மாத்திருச்சு.
Advertisement
சரி டீச்சர் படிப்பு இல்லாட்டி வேற படிப்பு படிக்க வைக்கலாம்.
நான் என்ற புள்ளைய டீச்சருக்குதான் படிக்க வைப்பேன்.இந்த சிவராமன் படிக்காதே மக்கு.ஆனா அவன் புள்ளை ஊருக்கே பாடம் சொல்லி கொடுக்க போதுனா. அது எனக்கு எவ்வளவு பெருமை.
அடே சாமி!நீ ‘மக்கு’னா யாராச்சு நம்பு வாங்களா? சரி ஒரு டிகிரி படிக்கட்டும் அப்பறோம் டீச்சருக்கு படிக்க வை.
Advertisement
நான்,” இன்னொரு நாலே வருஷம்.என் புள்ளைக்கு கல்யாணம் பண்ணி பேரனை பாக்கலானு இருந்தே”. இந்த கவர்மென்ட் இப்படி என் ஆசைலே மண்ண அள்ளி போட்டுருச்சு.
Advertisement
நாலு வருஷங்கறது ஆறு வருஷம் ஆக போது அவ்வளவு தானே.சீக்கிரமா போய்ரும்.விடு பாத்துக்கலாம்.
ஆமா கங்காவே மட்டும் பாத்தா போதுமா?கெளசியே என்ன பண்றது? ரெண்டு பேருக்கும் ஒரு புள்ளை, பையன் பொறக்கனும்.நான் என்னோட மொபட்லே முன்னாடி ஒரு பேரன். பின்னாடி ஒரு பேரனை உட்கார வெச்சு என்ற ரீடு கடைக்கு கூட்டிட்டு போய்ட்டு வருவேன்.
அப்போ பேத்திங்க வேண்டாமா?
Advertisement
அதுங்களே நீ பாத்துக்க.எனக்கு பேரனுங்க போதும்.
இருவர் கண்களிலும் மகள்களின் எதிர்காலத்தை பற்றிய கனவுகள் நிறைந்திருந்தது.
சரி கெளசியே எதுக்கு படிக்க வைக்கலாம்?
அது உங்க அம்மா மாதிரி நல்லா வாய் பேசுது.ஊரு வம்பு சண்ட எல்லா இழுத்துட்டு வரும் போல தெரிது. அதுனால வக்கீலுக்கு படிக்க வெச்சரலாம்.
அப்போ சிவராமனுக்கு ரெண்டு புள்ளைங்க ஒன்னு டீச்சர்.ஒன்னு வக்கீல் என லட்சுமி சொல்ல இருவரும் பூரித்து கொண்டார்கள்.
கங்காவும் சுமதியும் சேர்ந்து விட்டால் போதும்,எல்லாரையும் கேலியும் கிண்டலும் பண்ணி சிரிப்பது. திருட்டுத்தனமாக மாங்காய் பறித்து தின்பது.வீட்டில் பெரியவர்களை பொய் சொல்லி ஏமாற்றி விட்டு தையல் வகுப்பு,கம்பியூட்டர் வகுப்பு என அவர்களின் லட்சியங்களை ஓடி செல்வது என அவர்களின் உலகத்தில் மகிழ்ச்சியாக இருந்தனர்.
இருபாலர் படிக்கும் பள்ளியை விட பெண் பிள்ளைகள் மட்டும் படிக்கும் பள்ளியில் கொண்டாட்டங்களுக்கும், லூட்டிகளுக்கும் அளவிருக்காது.அது அங்கு படித்தவர்களால் மட்டுமே உணர முடியும்.
எக்னாமிக்ஸ் பீரியட். ஆசிரியர் எல்லோரையும் படிக்க சொல்ல.. நித்யா, கங்கா,சுமதி,மைதிலி, நால்வரும் சுவற்றில் சாய்ந்து அமர்ந்து புத்தகத்தை முகத்திற்கு நேராக வைத்தவாறே கதை பேச ஆரம்பித்தனர்.
நேத்து சரியான வெய்யில்,நீங்க ரெண்டு பேரும் எங்கையோ போயிட்டு வந்தீங்களே.நான் பாத்தே என மைதிலி கேட்க…
இருவரும் ஒருவர் முகத்தை மற்றவர் கொஞ்சம் நக்கலாக பார்த்துக் கொண்டே…
ரொம்ப குளிரா இருந்துச்சு அதா பாலைவனம் வரைக்கு போயிட்டு வந்தோம் என்றாள் சுமதி.
நடந்தேவா பாலை வனத்துக்கு போயிட்டு வந்தீங்க?-மைதிலி
இல்லடி டவுன் வண்டிலே போனோம்- கங்கா
நம்ம ஊரு டவுன்வண்டி உங்க ரெண்டு பேருக்கும் பாலைவனம் வரைக்கு போகுதா?
ஆமா என்றனர் கோரஸாக…
சத்தம் போடாதீங்கடீ.. மிஸ் பாத்தா அவ்வளவுதா என்றாள் நித்யா.
அப்படியே பேச்சு எங்கெங்கையோ போய் பேய் கதையில் வந்து நின்றது. தோழிகள் கூட்டமும் கொஞ்சம் கூடியது.
ஒருத்தி கதை சொல்ல ஆரம்பித்தாள். எங்க ஊருலே ஒரு காட்டுவழிப்பாதை இருக்கு.அங்கே மாரப்பன்னு ஒருத்தர் இருந்தாரு.நைட் நல்லா கறி சோறு சாப்பிட்டுட்டு புளிய மரத்தடிலே படுத்து தூங்கிருக்காரு.
அவரே பேய் அடிச்சு கொன்றுச்சு.
அச்சச்சோ!..-சுமதி
இப்போ மாரப்பனும் அங்கே ஆவியா அலஞ்சுட்டு இருக்காரு.
அதெப்படி உனக்கு தெரியும்? என்றாள் கங்கா
அந்த வழியா எங்க ஊரு கீரை விக்கறே பாட்டி கறி சோறு எடுத்துட்டு போயிருக்காங்க..
பின்னாடி யாரோ வர மாதிரி காலடி சத்தம் கேட்டுருக்கு.திரும்பி பாத்தா யாரும் இல்லையாமா.
அப்றோம் என்ன ஆச்சு?-மைதிலி
மறுபடியும் சத்தம் கேட்க ,கீரை பாட்டி திரும்பாமையே என்ன வேணும் உனக்கு?னு கேட்டுருக்கு
நீ கொண்டு போறே கறி சோறு நல்ல வாசனையா இருக்கு. அதுதா வேணும்னு சொல்லிருக்கு.
சரி நீ யாருனு? பாட்டி கேட்க,சத்தமா சிரிசிட்டே நான்தான் மாரப்பன்னு சொல்லிருக்கு
அடுத்த செகண்டே பாட்டி கறி சோத்தை கீழே போட்டுட்டு ஓடி போய்ருச்சு என்று முடித்தாள்.
அடுத்தவள் ஆரம்பிதத்தாள்.நான் சாமி கதை சொல்றே எங்க ஊருலே அரச மரத்தடிலே ஒரு புள்ளையாரு இருக்காரு.அவரு பேரு கூட கூப்பிடு பிள்ளையாரு.
அதென்ன கூப்பிடு பிள்ளையாரு-சுமதி
ஆமாடி நீ அந்த வழியா மதியம் பனிரெண்டு மணிக்கு தனியா நடந்து போனா உன் பேர சொல்லி கூப்பிடும்.
சுமதி,” நாளைக்கு நாம ரெண்டு பேரும் ஸ்கூல்க்கு லீவு போட்டுட்டு,அந்த புள்ளையாரே செக் பண்ணிரலாம்” என்றாள்,கங்கா.
அடுத்து நித்யா நான் ஒரு பேய் கதை சொல்றே என்றாள்.
“கங்கா இந்த நித்யா ஒரு டுபாக்கூரு. அவ சொல்றே எதையுமே நம்பாதே” என கங்காவின் காதை கடித்தாள் சுமதி.
இருடி அவ என்ன சொல்றானு கேக்கலாம்.
எங்க வீட்டு பக்கத்துல ரேச்சல்னு ஒரு அக்கா இருக்காங்க அவங்க ஒரு ஜர்னலிஸ்ட். ஒருநாள் அவங்களுக்கு ஒரு டிவிடி ப்ளேயர் கிடைச்சு இருக்கு.
அவங்க வீட்டுல இல்லாத அப்போ அவங்க கஸின்ஸ் அதே போட்டு பார்த்துருக்காங்க,ஏழு நாளுல அவங்க இறந்துட்டாங்க.
எப்படி இறந்தாங்க?-கங்கா
அந்த டிவிடி ப்ளேயர்ல இருக்கறதே யாரு பாத்தாலும் இறந்துருவாங்க.அது ஏன்னு அந்த அக்கா தேடிட்டு இருக்காங்க.என் கிட்ட கூட ஹெல்ப் கேட்டாங்க.
ஏய் இது போன வாரம் டிவில போட்ட ஹாலிவுட் படம் டி..இவ அதைதான் உருட்டிட்டு இருக்கா என கூட்டத்தில் ஒருத்தி நித்யாவின் முகத்திரையை கிழித்தாள்.
சுமதி நீ சொன்னது கரெக்ட் தான்டி.நான் கூட ஆர்வமா கேட்டே என்றாள் கங்கா.
நா சொல்லுலே இவ ஒரு டூபாக்கூருனு. ஒரு படத்துல வடிவேல்,பிரபு தேவா கமெடி வருமே.
அந்த வடிவேல் வேற யாரு இல்ல இந்த நித்யாதான் என்றாள் சுமதி.
ஆமா சுமதி சந்திரமுகி,காஞ்சனானு தமிழ் பேய் எல்லா இவ சொல்ல மாட்டா, இவ பேய் கூட கொஞ்சம் காஸ்ட்லியான பேய்தான் போலே.
பேய் கதை முடிஞ்சதா என எக்னாமிக்ஸ் ஆசிரியர் இவர்களின் பின்னே வந்து நிற்க, தோழிகள் வட்டம் பயந்தவாறே எழுந்து நின்றது.
உங்க பேரன்ட்ஸ் மழைலையும், வெயில்லையும் கஷ்டப்பட்டு உங்கள படிக்க அனுப்புனா, நீங்க இங்க வந்து பேய் கதை பேசிட்டு இருக்கீங்க
‘சாரிங்க மிஸ்’ என்றனர்.
இது ஹார்டு சப்ஜெக்ட்தான் இல்லைனு சொல்லுலே.டையர்டா இருக்கையிலே கொஞ்சம் கேப் விட்டு படிங்க.இப்படி மொத்தமா உட்கார்ந்து கதை பேசக் கூடாது.
சரிங்க மிஸ்
அப்பறோம் உங்க பேய் கதைலே வந்த புளியமரத்தை பத்தின ஒரு மூட நம்பிக்கையை நான் தெளிவு படுத்தறேன்.
புளிய மரம் பகல்லே தூய்மையான காற்றையும், இரவு நேரத்துல மோனோ கார்பன்டையாக்சைடையும் வெளியேற்றும்.
இரவுல புளிய மரத்து அடியிலே தூங்குனா மூச்சடைப்பு ஏற்படும். யாரோ மேலேயிருந்து அழுத்தற மாதிரி இருக்கும்.
இது போன்ற விஞ்ஞான விளக்கத்தை சொன்னா நமக்கு புரியாது.
அதனால் தான் நம் முன்னோர்கள் இரவுல புளிய மரத்துல பேய் இருக்குனு சொல்லலிருக்காங்க என்றார்.
கதை கேட்டுட்டு, பரிட்சைலே மார்க் வரலே அவ்வளவுதான்னு எச்சரித்து கிளம்பினார் ஆசிரியர் .
நாட்கள் பனி போல கரைந்து ஓடியது. தற்போது கங்கா பனிரெண்டாம் வகுப்பு.கெளசி பத்தாம் வகுப்பு.
கங்கா,சுமதி இருவரின் நட்பை பார்த்து மற்ற தோழிகளுக்கு சற்று பொறாமையே.இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல்,தன் நலனைவிட,தோழியின் நலனை பெரிதும் விரும்புகிறார்கள் என்று.. அதற்கு திருஷ்டி கழித்தது போன்று இருவர் நட்பிலும் விரிசல் வந்தது.
அன்று நல்ல மழை கங்காவும், கெளசியும் பள்ளி முடிந்து வீட்டிற்கு வர , அப்பா போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதாக தகவல். இருவரும் பதறி அடித்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் நோக்கி சென்றனர். வழியில் லட்சுமி அழுது கொண்டே வந்தார்.
அவர் பின்னே பாப்பம்மாள் ஒன்றும் புரியாமல் வந்தார். அவருக்கு நடப்பது புரியவில்லைதான். ஆனால் மகனுக்கு ஏதோ பிரச்சனை என்று மட்டும் தெரிந்தது.
கங்கா என்ன ஆச்சுமா ? என கேட்க
சுமதி அப்பாக்கும், நம்ம அப்பாக்கும் சண்டை கங்கா. நம்ம அப்பா கல்லை எடுத்து அவர அடிச்சுருச்சு. அவங்களுக்கு ஒரே ரத்தம், அதுனால எல்லாரும் சேர்ந்து அப்பா மேல கேஸ் கொடுத்துட்டாங்க .
அப்பா இப்போ ஸ்டேஷன்லே இருக்குனு சொல்ல, மூவரும் அங்கே சென்றனர்.
லட்சுமி வீட்டார் எல்லாரும் சுமதியின் அப்பா பக்கம் நின்று கேஸ் கொடுத்தனர். சிவராமனின் பக்கம் இவர்கள் நால்வர் மட்டுமே
அதிலும் லட்சுமியின் தாய் பழனியம்மாள் “எங்க உயிருக்கு நீங்கதா பாதுகாப்பா இருக்கனு. அவனை வெளியே விடாதீங்க” என அழுது கொண்டிருந்தார்.
அப்பா அடித்தது சுமதி அப்பாவை அவர்கள் வீட்டில் கேஸ் கொடுக்கட்டும் அது நியாயம். இவர் ஏன் இப்படி கதற வேண்டும்? என்ற கேள்வி கங்காவிற்கு,
லட்சுமியின் இரண்டு பவுன் நகை, கங்காவின் சீருக்கு சிவராமன் புடவை எடுத்தது என அப்பாவின் மீது ஒருவித குரோதம் அவருக்கு இருந்தது கங்காவிற்கு தெரியும் .
ஆனால் இன்று ஏன் இப்படி செய்ய வேண்டும்? ஒரு செயினிற்கும், புடவை பஞ்சாயத்திற்கும் உயிருக்கு உத்திரவாதம் வேண்டும் என கதறுகிறாரே என்று… அதோடு அவரை வெறுத்து ஒதுக்கி விட்டாள் கங்கா .
சும்மாவெல்லாம் அப்பா யார் மீதும் கைவைக்க மாட்டார். சுமதியின் அப்பா ஏதாவது செய்திருப்பார். அதனாலேயே அப்பா அடித்துள்ளார் என அவள் புரிந்து கொண்டாள்.
பதினைந்து நாள் ரிமேண்ட் என கூறி விட லட்சுமியின் சொந்தம் மகிழ்ச்சியாக சென்று விட்டனர். கங்கா ,கெளசி, லட்சுமி மூவரும் அழுது கொண்டே வீடு திரும்பினர். பாப்பம்மாள் மட்டும் ஸ்டேஷன் வாசலில் மகனுக்காக நின்றிருந்தார்.பின் எப்படியோ புரிந்து கொண்டு வீடு வந்தார்.
அடுத்த நாள் காலை ஏழு மணிக்கு மூவரும் மீண்டும் போலீஸ் ஸ்டேஷன் சென்றனர் சிவராமனை பார்க்க, ஆனால் அங்கு தாலுக்கா ஆபிசில் உள்ள மத்திய சிறைக்கு அனுப்பி விட்டோம் என கூறினர்.
மூவரும் அங்கு சென்று கேட்க, கோவை மத்திய சிறைக்கு அனுப்பி விட்டோம் என்றனர்.
பஸ்ஸை பிடித்து கோவை மத்திய சிறைக்கு சென்றனர். இதுவரை வெளி உலகம் தெரியாமல் வளர்ந்த மூவருக்கும் மத்திய சிறை எங்குள்ளது எனக்கூட தெரியவில்லை. எப்படியோ விசாரித்து கண்டுபிடித்து விட்டனர்.
அன்று செவ்வாய் கிழமை ,மத்திய சிறையில் உள்ள ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை திங்கள், புதன், வியாழன் அவர்கள் உறவினர்கள் பார்க்க அனுமதி எனவும், ரிமேண்ட் கேஸ்கள் செவ்வாய், வெள்ளி எனவும்..
நீங்கள் யாரை பார்க்க வந்திருக்கீங்க? என அங்குள்ள உடல் பருமனான போலீஸ் கேட்க, ரிமேண்ட் என கூறி உள்ளே சென்றனர்.
நிறைய சோதனைகளை செய்த பின்தான் உறவினர்கள் சிறையின் உள்ளே அனுமதிக்கப் படுவார்கள். இவர்களும் எல்லா சோதனைகளையும் மதியம் இரண்டு மணி அளவில் கடந்து உள்ளே சென்று சிவராமனை பார்க்க ஆர்வமாக வரிசையில் நின்றனர்.
காலைமுதல் உணவு எதுவும் உண்ணவில்லை. முதலில் அப்பாவை பார்த்து விட்டு பிறகு சாப்பிடுகிறோம் என மகள்கள் மறுத்துவிட, லட்சுமியும் சாப்பிடாமல் வரிசையில் நின்றார்.
ஒரு போலீஸ் வந்து அடையாள அட்டை கேட்க, மூவரிடமும் எதுவும் இல்லை என்றவுடன் திருப்பி அனுப்பட்டனர். மூவரும் சிவராமனை காணாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
–தலைவன் வருவான்…
error: Content is protected !!