Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

74. ஆன் ஜோ - நன்னிலவு நீ தண்நிழல் நான்

நன்னிலவு நீ… தண்நிழல் நான்…-14

அத்தியாயம் – 14

“மழையல்ல… வெயிலுக்குத் தான் பூத்துக் குலுங்கும் மலர்ச்செடி. பிரிவுக்குள் உயிர்க்கும் பெருங்கேவலாய்… காதல்!”

மருத்துவமனையின் அந்த நீண்ட வராண்டாவில் மருந்தின் நெடியும், அமைதியும் கலந்திருந்தது. கலர் கலராய் வரையப்பட்ட சுவர்களும், அரை மூடிய திரைச்சீலைகளும், இடையிடையே ஒலிக்கும் ஒவ்வொரு மணியோசையும் அந்த இடத்திற்கு ஒரு மாறுபட்ட சூழலைத் தந்தன.. ஆதிரைக்கு, இந்த குழந்தைகள் பிரிவு ஒரு விசித்திரமான உணர்வைத் தந்தது. அங்கு வலியும் சிரிப்பும் ஒரே மூச்சில் மாறி மாறி வரும்.  குழந்தையின் கேவலும் கீச்சும் இடைவிடாது ஒலிக்கும். அந்த வளாகத்தில் ஒரு தனி உயிர்ப்பு இருந்தது.



Advertisement

கட்டிலில் கவின் சோர்வாகச் சாய்ந்திருக்க, ஆதிரை அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.  அவன் கண்ணில் ஒரு குறும்பும் ஒரு கவலையும்  கலந்திருந்தது. குழந்தைகளுக்கே உரிய அந்த அபூர்வமான கலவை.

“கவின், தண்ணி குடிச்சியா?” என்று மென்மையாக கேட்டாள் ஆதிரை.

“ம்… கொஞ்சம்.”

Advertisement

“கொஞ்சம் பத்தாது. இன்னும் கொஞ்சம் குடிக்கணும். ஒகே?”

Advertisement

“ம்மா… தண்ணி குடிச்சா தொண்டை வலிக்கும்.”

“குடிக்காட்டா இன்னும் வலிக்கும்.”

“அப்போ எப்படியும் வலிக்கும்ல?” என்று கவின் ஒரு வெற்றியடைந்தவன் போல கண்களை சிமிட்டினான். அருகில் நின்றிருந்த கண்மணி தன் இரு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு அவனை பார்த்தாள். “கவின்… என் அம்மா சொல்றதைக் கேளு. அம்மா ரொம்ப ஸ்மார்ட் தெரியுமா?”

Advertisement

கவின் சற்றும் சளைக்காமல், “என் அப்பாவும் இன்னும் ‘மோர் ஸ்மார்ட்’!” என்றான். “என் அப்பா” என்றால் கண்மணி, “என் அப்பா” என்றான் கவின்… பின் ஒரு கணம் கூட தாமதிக்காமல் “நம்ம அப்பா” என்றனர்… இருவரும் அப்போது வாய் பொத்திக்கொண்டு சிரித்தனர். அந்த சிரிப்பில் யாரும் தோற்கவில்லை, யாரும் வெல்லவில்லை, குழந்தைகளின் சண்டை அப்படித்தான். எதையும் சிக்கலாக்கிக் கொள்வதில்லை.  அவ்வளவு சுலபமாக கடந்து போய்விடும் அந்த மனம் எல்லாம் பெரும் வரம்!

இதை யோசித்தபடி அங்கு தான் மித்ரனும் அமர்ந்திருந்தான். அலைபேசி திரையில் விழிகள் இருந்தாலும், மனம் இவர்களின் உரையாடலின் நடுவில் தான் இருந்தது. ஆதிரை அவனை நிமிர்ந்து பார்த்துக் கொண்டாள். அவன் முகத்தில் எந்த வரவேற்பும் இல்லை. கோபமும் வெளிப்படையாய் தெரியவில்லை. ஆனால் அந்த இறுகிய தாடை, இறுக்கமான கன்னம், ஏதோ கதை சொல்லியது இவளுக்கு.

இந்த ஒரு வார மருத்துவமனை நாட்களில், மித்ரன் கண்மணியிடம் பேசியிருந்தான்…

“கண்மணி, நான் ஜெர்மனியில இருந்து நிறைய கிஃப்ட்ஸ்  கொண்டு வர்றேன்னு சொன்னேன்ல… அதுல ரொம்ப ஸ்பெஷலான, யாருக்கும் கிடைக்காத கிஃப்ட் இவன்தான்… கவின்! A brother.. I have brought for you!”என்றான்.  “அவனுக்குத் தான் தான் பொறுப்பு” எனவும், “அவனுக்கு என்று யாரும் இல்லையெனவும், அவனுக்கு நாம தான் இருக்கிறோம்” என்றும் கூறியிருந்தான் மித்ரன்.

அவன் இதைச் சொல்லும்போது ஆதிரையும் அங்குதான் இருந்தாள். அவன் ஒவ்வொரு வார்த்தையையும் அவளுக்கும் சேர்த்துச் சொல்வது போலவே உதிர்த்தான். “இவ்வளவுதானா?” என்று ஆதிரை அவனை ஏறிட்டுப் பார்க்க ” நீ பார்வையால இப்படி கேட்டா ..அவ்வளவுதான்… போடி!” என்பது போன்ற ஒரு பார்வையையே அப்பொழுது அவளுக்குப் பதிலாகத் தந்திருந்தான்.

ரொம்ப சிம்பிளாகக் கண்மணி அதை ஏற்றுக்கொண்டு விட்டிருந்தாள்

அந்த நிமிடம், செவிலியர் உள்ளே நுழைந்தார். கையில் மாத்திரையோடு வந்தவர், கவினின் கன்னத்தைச் செல்லமாகத் தட்டினார்.

“என்ன நம்ம ஹீரோ, இன்ஜெக்ஷன் (injection) போடலாமா?” என்றார்… “ம்ம்ம்” என்று அழகாக இணங்கி ஊசி போட்டுக்கொண்டான் கவின்.

“தோ… இந்த டேப்லெட்ம் (tablet) போட்டுக்கோ…” என, அதற்கு மட்டும் கண்களை இறுக மூடிக்கொண்டான்.

“வேண்டாம்…”

“என்னப்பா, இன்ஜெக்ஷனுக்கே பயப்படல, நீ டேப்லெட்க்கு இப்படி பண்ற?” என்றார் செவிலியர். ஆதிரை வந்து, “குடுங்க சிஸ்டர், நான் போட வைக்கிறேன்” என்றாள்.

நர்ஸ் சென்றபின், வேண்டாம்னு சொல்லக்கூடாது, வாய் திற என்று ஆதிரை மென்மையாக, ஆனால் உறுதியாகக் கூறினாள்.

“வேண்டாம்!”

“ஏன்டா?”

“அது கசப்பா இருக்கும்… கொடுமையா இருக்கும்!”

“என்னயே பாரு… தினமும் காலை ஹார்லிக்ஸ்  குடிக்கிறேன். அதுவும் கொடுமையா இருக்கு. ஆனாலும் குடிக்கிறேன்!”

“ஹார்லிக்ஸ் கொடுமையா இருக்கா? ஏன்?”

“ரொம்ப ஸ்வீட்டா இருக்கும்!”

“ஸ்வீட்டா இருக்கறது கொடுமையா?” கவின் முகம் ஆச்சரியத்தில் திறந்தது. அந்தச் சமயம் பார்த்து ஆதிரை அவன் வாயில் மாத்திரையை வைத்துத் தண்ணீர் கொடுத்தாள். பின் கூறினாள்… “சில நேரம் ஸ்வீட்டா இருக்கிறது தான் ரொம்ப கொடுமையா இருக்கும்!”. கவின் முழிக்க முழிக்க விழுங்கினான். கண்மணி தாளம் தட்டி கைதட்டினாள்.

“குட் பாய்!”

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கவின், ஆதிரையைப் பார்த்து, ம்மா… நீங்க ‘ட்ரிக்’ பண்ணிட்டீங்க!” என்றான்.

ஆதிரை சிரித்துக்கொண்டே, “நான் ஸ்மார்ட்டா இல்லையா?” என வினவ, கவின் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு புன்னகைத்தான்.

“இது ஸ்மார்ட்னஸ் இல்ல, ச்சீட்டிங் (Cheating),” என்றான் மித்ரன் திடீரென…

ஆதிரை இவனை முறைத்தாள்.

“அவன் டேப்லெட் போட்டுக்கிட்டானா இல்லையா?”

“ இல்ல, நீங்க அவன்கிட்ட அந்த டேப்லெட் என்ன, அதை ஏன் போடணும் அப்படிலாம் எக்ஸ்பிளைன் பண்ணி புரிய வச்சுல்ல கொடுத்திருக்கணும், மிஸஸ் ஆதிரை?”

“அட என்னங்க நீங்க… அதெல்லாம் எப்போ நடக்கிறது? இப்போ ரிசல்ட்ட பாருங்க… தோ டேப்லெட் போட்டுட்டான் ஒரு நிமிஷத்துல! இதப்போய் ச்சீட்டிங்காம் ச்சீட்டிங்..”

மித்ரன் மெல்லச் சிரித்தான்… “ஆங்… இதான்! சில சூழ்நிலைகள் நமக்கு விளக்கம் கொடுக்க நேரத்தைத் தராது. ரிசல்ட்நோக்கித்தான் ஓடணும். இதெல்லாம் புரிஞ்சா இப்படி மரமண்டையாவா இருக்கப் போறோம்?”

ஆதிரை அவனை விழித்து முறைத்தாள்.

ஒன்றுமே நடவாதது போல் மித்ரன் கண்மணியிடம் பேசத் துவங்கினான்.

ஆதிரை கவினின் தலையணையை சரி செய்து, அவனை மெதுவாக சாய வைத்தாள். அந்த சோர்வடைந்த சிறு முகத்தை பார்க்கும்போது எந்தவொரு குழந்தையும் நோயுற்று படுக்கையில் இருக்கும்போது ஏற்படுகிற அந்த நெஞ்சு பிசைகிற வலி ஆதிரைக்கும் வந்தது. அவள் அவனை தன் குழந்தையாகவே பார்த்தாள் அந்த கணம்.

அப்போது, அறையின் கதவு மெல்லத் திறக்கப்பட, டாக்டர் காயத்ரி உள்ளே நுழைந்தார்.

ஐம்பது வயது மதிக்கத்தக்க டாக்டர் காயத்ரி, கவினின் அருகில் வந்தவர், அவன் கையைப் பற்றி நாடித் துடிப்பைப் பார்த்தார். “என்ன  சேம்பியன், இப்போ எப்படி இருக்கு?” என்று தன் அனுபவ முதிர்ச்சியோடு கவினைப் பரிசோதித்துவிட்டு நிமிர்ந்தார். அவரது கண்கள் குழந்தைகளின் பயத்தைப் போக்கும் வித்தையை அறிந்திருந்தன.

“மிஸ்டர் மித்ரன், கவின் இப்போ நல்லா தேறிட்டான். இன்னைக்கு ஈவினிங் நீங்க டிஸ்சார்ஜ் பண்ணி கவினை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாம்,” என்றார்.

கவினின் முகத்தில் பட்டாசு வெடித்தது போல் ஒரு வெளிச்சம்! “வீட்டுக்கா? ஜாலி!” என்று மெல்லக் கூவினான்.

டாக்டர் தொடர்ந்தார், “ஆனா, வீட்டுக்குப் போனதும் கொடுத்திருக்கிற மெடிசின்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரக்ஷன்ஸை கரெக்டா ஃபாலோ பண்ணிக்கோங்க. இன்னும் ஒரு வாரம் கம்ப்ளீட் ரெஸ்ட் எடுக்கணும், சரியா?”

“கண்டிப்பா டாக்டர்,” என்றான் மித்ரன்.

டாக்டர் காயத்ரி சட்டென்று நின்று மித்ரனை ஏறிட்டுப் பார்த்தார். அந்தப் பார்வையில் ஒரு தேர்ந்த மருத்துவரின் கணிப்பு இருந்தது.

“மிஸ்டர் மித்ரன்… ஒரு நிமிஷம் நில்லுங்க,” என்றார் டாக்டர். மித்ரன் புரியாமல் நிற்க, அவர் மிக அருகில் வந்து மித்ரனின் முகத்தைக் கூர்ந்து கவனித்தார். “உங்க கண்ணுல ஒரு ‘ரெட்னஸ்’ தெரியுது. ஒரு வாரமா நீங்க சரியாத் தூங்கலைன்னு உங்க முகம் சொல்லுது… இருங்க, ஒரு ஐ டிராப்ஸ் (Eye drops) எழுதித் தர்றேன், போட்டுக்கோங்க… சரியாயிடும்,” என்றார்.

இந்த ஒரு வாரத்தில் கவினைப் பற்றியும், அவனது மனநிலை மற்றும் மருந்துகள் குறித்த ஆலோசனைகள் வழியாகவும், கவினைப் பற்றி நிறையக் கேட்டுத் தெரிந்துகொண்ட பின், மித்ரனுக்கு காயத்ரி மேடம் மிக நன்றாகப் பரிச்சயமாகியிருந்தார்.

கவினை ஒரு மருத்துவராக மட்டும் அணுகாமல், அவன் மீது கொண்ட உண்மையான அக்கறையால் காயத்ரி மேடம் காட்டிய அந்த ஈடுபாடு, மித்ரனின் மனதில் அவர் மீது ஒரு மரியாதையை உருவாக்கியிருந்தது. கவினின் ஒவ்வொரு சிறு மாற்றத்தையும், அவனது தேவைகளையும் அவர் நுணுக்கமாகக் கவனித்த விதம், மித்ரனுக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது

அறை வாசலில் நின்று ஆதிரை அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தாள். கோப்புகளைச் சரிபார்த்தபடி வெளியே நடந்தவரைத் தொடர்ந்து மித்ரனும் சென்றான்.

கவினும் கண்மணியும் உற்சாகத்தின் உச்சியில் இருந்தனர். “ஹேய் கவின்… இன்னைக்கு வீட்டுக்குப் போறோம்! ஜாலி ஜாலி!” என்று கண்மணி குதிக்க, “கண்மணி, உன் திங்ஸ் (things) எல்லாம் எடுத்து வை… நாம எல்லாம் பேக் பண்ணி கிளம்பலாம்” என்று அவள் கட்டளையிட, அந்த இடமே “அப்பாடா!’ என்று ஒரு பெரும் நிம்மதியைத் தந்தது போலானது.

சரியாக அந்தத் தருணத்தில் மித்ரன் உள்ளே நுழைந்தான். ஒரு கையில் அலைபேசியில் யாரிடமோ தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தான், மறு கையில் டாக்டர் கொடுத்த அந்த ஐ டிராப்ஸ் இருந்தது.

ஆதிரை அவனை ஒரு நிமிடம் ஏறிட்டுப் பார்த்தாள். மிக இயல்பாக அவன் அருகில் சென்றவள், அவன் கையில் இருந்த அந்த டிராப்ஸ் பாட்டிலை சட்டென்று வாங்கினாள் , இல்லை, பிடுங்கினாள் என்று தான் சொல்ல வேண்டும்.

மித்ரன் அவளைப் பார்க்க, அவள் தன் ஒற்றை விரலை உயர்த்தி “போனை வைங்க” என்று சைகை காட்டினாள். அவளது பார்வையின் தீவிரத்தில் மித்ரன் பேச்சை முடித்துவிட்டு போனை அணைத்தான்.

“உட்காருங்க…” என்றாள் ஆதிரை, மென்மையான ஆனால் அதிகாரமான குரலில்.

மித்ரன் எதையோ சொல்ல வாயெடுக்க, ஆதிரை அவனது தாடையை மெல்லப் பிடித்து, “நிமிர்ந்து பாருங்க…” என்றாள்.

அவன் முகம் அவளது முகத்திற்கு மிக அருகில்… அவளது விரல்கள் அவன் தாடையைத் தாங்கிப் பிடிக்க, மித்ரன் இமைக்க மறந்து அவளைப் பார்த்தான். ஆதிரை அவன் கண்களுக்குள் ஆழ்ந்து நோக்கினாள்.

“கண்ணை நல்லாத் திறங்க!” என ஒரு மிரட்டு மிரட்ட அவன் விழிகளைத் திறக்க, அவள் மிகக் கவனமாக மருந்தின் ஒரு துளியை இடது கண்ணில் விட்டாள். அந்தத் துளி அவன் கண்ணில் விழுந்தபோது, அவன் அனிச்சையாகக் கண்ணை மூட முயல, ஆதிரை தன் கட்டைவிரலால் அவனது புருவத்தை மென்மையாகத் தூக்கிப் பிடித்துக் கொண்டாள்.

இரண்டாவது துளியை அடுத்த கண்ணில் விடும்போது, இருவரின் மூச்சுக் காற்றும் ஒன்றோடொன்று கலந்தது. மித்ரனின் கண்கள் இப்போது மருந்தினால் அல்ல, அவளது அருகாமையினால் சிவந்திருப்பது போலத் தோன்றியது.

மருந்தை விட்டுவிட்டு, அவள் விரல்களால் அவன் கண்களின் ஓரத்தில் வழிந்த அந்தச் சிறு ஈரத்தைத் துடைத்தாள்.

கண்களை மூடி அந்த மருந்து துளிகளின் குளிர்ச்சியை அவன் உணர்வதற்குள்,. “தேங்க்யூ மிஸஸ் ஆதிரை!” என அவளைத் தள்ளாத குறையாக எழ முயன்றான் மித்ரன்.

“ஏங்க… கண்ணை மூடி ரெண்டு நிமிஷம் கூட ஆகல, அதுக்குள்ள எப்படி டிராப்ஸ் வேலை செய்யும்? இருங்க!” என அவள் மீண்டும் அவனை அமர்த்த முயல…ஸ்டாப் இட் ரைட் ஹியர்!” என மித்ரன் சட்டென்று அவள் கையை விலக்கிவிட்டு, “போதும் போதும் உங்க அக்கறை! நான் பார்த்துக்கிறேன், பட் நோ (Know) யுவர் லிமிட்ஸ்”, என வெடுக்கென்று கூறினான்.

அந்தக் குரலில் இருந்த அந்நியம் ஆதிரையை ஒரு கணம் நிலைகுலையச் செய்தது. சில நிமிடங்களுக்கு முன் இருந்த அந்த மென்மையான நெருக்கம் மறைந்து, மீண்டும் ஒரு ‘பனிப்போர்’ அங்கே முளைத்தது. ஆனால் இம்முறை அதன் குளிர்ச்சி ஆதிரையின் இதயத்தையே உறைய வைப்பதாக இருந்தது. ஆதிரை அப்படியே பேச்சற்று நின்றாள். கையில் இருந்த மருந்துக் குப்பி நழுவத் துடித்தது. மித்ரன் அவளைத் திரும்பிப் பார்க்காமல், விறுவிறுவென வெளியேறினான்.

வெளியில் வந்த மித்ரன் ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றான். அவன் இதயத்தின் தாளம் அவனுக்கே கேட்கும் அளவிற்குத் தறிகெட்டு எகிறியிருந்தது. ஆதிரையின் அந்த அருகாமை… அவளது மூச்சின் வெப்பம்… அந்த உரிமையுடனான தீண்டலில் வழிந்த அதிகாரம்… அத்தனையும் ஒரு சேர அவனை நிலைதடுமாறச் செய்திருந்தன. அவள் அவனது தாடையை நிமிர்த்தியபோது தென்பட்ட அவளது ஒற்றைப் பார்வை… அவன் விழிகளுக்குள் அப்படியே விழுந்த அவளது அந்தப் பொன் வதனம்,  அந்தக் கணத்தின் நெருக்கம் அவனது நரம்புகளில் ஒரு விசித்திரமான கிளர்ச்சியைத் தூண்டியது.

ஒரு தீராக் காதலின் தாகம் ‘தாபமாய்’ உருவெடுத்து அவனைச் சுட்டெரித்தது. அவளைத் தள்ளி நிறுத்தினால் ஒழிய, தன்னைக் கட்டுப்படுத்த முடியாது என்று அவனுக்குத் தோன்ற, தன்னைத் தானே மறைக்கத்தான் அவன் அவ்வளவு வன்மமாக அவளிடம் வார்த்தைகளைக் கொட்டியிருந்தான்.

“சை… என்ன மனுஷன்டா நான்? ஹாஸ்பிடல்னு கூடத் தோணாம…” தன் இதயத்தின் பாரம் தாங்காமல் நொந்தபடியே நின்றிருந்தான்.

அவன் வீசிய அந்த “நோ யுவர் லிமிட்ஸ்”  என்ற வார்த்தை, ஆதிரையை விட இப்போது அவனையே அதிகம் குத்திக் கிழித்தது. அவளது விழிகளில் தெரிந்த அந்த ஒரு நொடி அதிர்ச்சியும் அதன்பின் வழிந்த அந்த வலியும் அவன் மனக்கண்ணில் மீண்டும் மீண்டும் வந்து அவனை வதைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!