Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ராஜாளியின் சிறகினில் ரோஜாப்பூ

ராஜாளியின் சிறகினில் ரோஜாப்பூ – 23

 

அத்தியாயம் : 23


Advertisement

அரண்மனை வாசலில் கார்கள் அணிவகுத்து நின்றன. அன்று நள்ளிரவே இராமநாதபுர சமஸ்தானப் பட்டாளம் இராமேஸ்வரம் நோக்கிப் புறப்பட்டது.
இராமநாதபுரத்திற்கும் இராமேஸ்வரத்திற்கும் இடைப்பட்ட அந்தப் பாதை வெறும் தார்ச்சாலை அல்ல. அது சரித்திரமும் புவியியலும் கைகோர்த்து நிற்கும் அற்புத வழித்தடம். ஒருபுறம் வறண்ட நிலத்தின் கம்பீரத்தைக் காட்டும் பனைமரக் காடுகள் இருந்தன. மறுபுறம் கடலின் குளிர்ந்த உப்புக்காற்று வீசியது.

Advertisement

Advertisement

நள்ளிரவு நிலவொளியில், வறண்ட கரிசல் பூமி மெல்ல விடைபெற்றது. இப்போது கடல்நீரின் பேரிரைச்சல் கேட்கத் தொடங்கியது.
பச்சை நிறப் பனிக்கடலின் மேல் இந்தியாவின் பெருமையாக நீண்டு கிடக்கிறது பாம்பன் பாலம்.

Advertisement

அந்தப் பிரம்மாண்டமான பாலத்தை வண்டிகள் கடந்தது மாயாஜாலமாய் திகழ்ந்தது. இருபுறமும் எல்லையற்ற கருநீலக் கடல் விரிந்திருந்தது. மேலே வட்ட வடிவ நிலவு பிரகாசித்தது. அந்த நிலவின் ஒளி அலைகளில் பட்டுத் தெறித்தது. தூரத்து இராமேஸ்வரத் தீவின் விளக்குகள் வைரக் கற்கள் போல ஜொலித்தன.
அதிகாலை இரண்டரை மணி.
அர்ஜுனும் கௌதமியும் தங்கள் ஹனி மூன் ட்ரிப்பை கான்ஸல் செய்து துரிதமாய் வந்து சேர்ந்திருந்தனர்.
ஒரே இளமையின் துள்ளல் அந்த வாகனத்தினுள்.
மீரா வர்மன்… ரஞ்சனா செம்பியன் …அர்ஜுன் கௌதமி …என
ஒரே வாகனத்தில் அமர்ந்திருந்தனர்.
அனைவரும் மகிழ்வில் கலகலத்திருக்க … மீராவுக்குள் நிறைவின் அமைதி. விளையாட்டாய் பேச்சு ஆரம்பித்தது.
அர்ஜுன் “ஹேய்
ரஞ்சு , மீரா , நம்ப பாட்ச்ல நான் தான் ஃபர்ஸ்ட் மாரீட்… அம் த சீனியர் …டிப்ஸ் ஏதாச்சும் வேணும்னா கேட்டுக்கோங்கப்பா…”
உடனே ரஞ்சு ” டேய் நீ நான் எல்லாம் மீராட்ட நீல் டவுன் பண்ணனும் அவ நம்ம ரெண்டு பேர விட பதினாறு வருடம் சீனியர்..” என்றாள் .
மீரா வெட்கி ” யேய்.. சும்மா இருடீ” என்றாள்.
நமது வர்மன் ராஜாளியாயிற்றே…
” என்ன ?” என்றான் மீராவிடம் கண்களால்.
மீரா “பிறகு சொல்கிறேன்” என்றாள்.
வாகனம் வேகமெடுத்தது.
 நான்கு மணி. அது பிரம்ம முகூர்த்தத்தின் புண்ணிய வேளை.
உலகப் புகழ்பெற்ற இராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி ஆலயமே இறைவடிவமாக நின்றிருந்தது. கருவறையில் ஸ்படிக லிங்கத்திற்குப் பிரத்தியேக அபிஷேகங்கள் நடந்து கொண்டிருந்தன. நாதஸ்வரத்தின் மங்கல இசை ஆலயத்தின் பிரம்மாண்டத் தூண்களில் எதிரொலித்தது.
வேட்டி-சட்டையில் மணமகன்களாக வர்மனும் செம்பியனும் நடந்து வந்தனர். அவர்கள் அந்த ஆலயத்தின் புகழ்பெற்ற மூன்றாம் பிரகாரத்தில் கால் பதித்தனர்.
இந்தியாவின் மிக நீண்ட, உலகையே வியக்க வைக்கும் தூண் வரிசைகள் அவை. அதைப் பார்த்தபோது இருவரின் நெஞ்சுகளிலும் ரத்தம் சிலிர்த்தது. “செம்பியா… இந்த பிரம்மாண்டத்தைப் பார். இதெல்லாம் நம்ம முன்னோர்களான மறவர் குலச் சேதுபதி மன்னர்கள் செதுக்கிய சரித்திரச் சாதனை!” என்றான் வர்மன் பெருமிதத்துடன்.
“ஆமாம் வர்மன்… நம்ப முப்பாட்டன் முத்துராமலிங்க சேதுபதியின் அசாத்திய உழைப்பில் உருவான சுவர்கள் இவை. இன்று நம்ம வாழ்வின் ஆகச்சிறந்த நொடியை … இந்த இடமே வாழ்த்தப் போகுது!” என்றான் செம்பியன். அரச வாரிசுகளுக்கே உரிய பெருமிதம் மின்னியது.
மறுபுறம்… மங்கலப் பெண்கள் குலவையிட்டனர். அந்தச் சத்தத்தோடு மணமகள்கள் பிரகாரத்திற்குள் நுழைந்தனர்.
மீராவும் ரஞ்சனாவும் தூய வெண்பட்டுப் புடவையில் நடந்து வந்தனர். அதில் நெய்யப்பட்டிருந்த மெல்லிய தங்க ஜரிகை, கோவிலின் நெய்விளக்கு ஒளியில் மின்னியது. தலையில் மல்லிகைப் பூச்சூடி, கைகளில் மங்கல நாண் ஏந்தி, அவர்கள் நடந்து வந்த தோரணை அத்தனை அழகு! அந்தத் தெய்வச் சிலைகளே உயிர் பெற்று, பேரானந்தப் பரவசத்தோடு நடந்து வருவது போல இருந்தது.
வர்மனின் பார்வை மீராவின் மீதும், செம்பியனின் பார்வை ரஞ்சனாவின் மீதும் நிலைத்து நின்றது.
மங்கல வாத்தியங்கள் உச்சத்தைத் தொட்டன. வேத விற்பன்னர்களின் மந்திர கோஷங்கள் விண்ணை முட்டின. ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மனின் சந்நிதிகளுக்கு இடையே, ஒரே மேடையில் அந்த மாங்கல்ய தாரணம் நிகழ்ந்தது.
“கெட்டிமேளம்… கெட்டிமேளம்…!”
வர்மன் மீராவின் கழுத்தில் மூன்று முடிச்சுகளை இட்டான். அந்த கணமே அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம்
” லவ் யூ கண்ணம்மா” என்றான் விழியோடு விழி கோர்த்து.
பின் அவளது நெற்றியில் குங்குமம் இட்டான். அப்போது மீராவின் கண்ணீர்த் துளி அவனது கைகளில் பட்டுத் தெறித்தது.
மறுபுறம் செம்பியன் ரஞ்சனாவின் கழுத்தில் மூன்று முடிச்சுகளை இட்டான்.
பின் ரஞ்சனாவின் கைகளைப் பற்றினான். “இனி நீ என் பாதி ரஞ்சு…” என்றான் உரக்க.
” அப்ப மீதி?? என ரஞ்சு குறும்பாய் கேட்க…
” அதுவும் நீ தான் தாயே”
” அது! “
அருகில் அனைவரும் சிரித்தனர்.
சடங்குகள் அனைத்தும் முறைப்படி நிறைவடைந்தன.
அரண்மனை திரும்ப வாகனம் ஏறினர்.
 மங்கல நாண் மீராவின் கழுத்தை அலங்கரிக்க வந்து விழுந்த அந்த நொடியை, அவளது அத்தனை வருடக் காத்திருப்பும், தவிப்பும் முழுமையடைந்த அந்த கணத்தை மீண்டும் மீண்டுமாய் மனதுள் ஓட்டி பார்த்து சிலிர்த்தாள் மீரா.
அவளுக்கு வாழ்க்கை இத்தனை சீக்கிரம் இலகுவாகி விடுமா என்றிருந்தது.
வாழ்வில் பெரும் கொடுமைகளை மட்டும் கண்டு அவைகளையே உரமாக்கி வாழ்ந்து வந்தவளுக்கு …
மகிழ்வை கூட முழுதாய் உணர தோன்றவில்லை.
தாயும் தந்தையும் போன பின்பு தாய் மாமனும் அத்தையின் பேச்சை கேட்டு தான் பூப்படைந்த அந்த மாதமே தன்னை அநாதை என்று ஒரு இல்லத்தில் விட்டுச்சென்றதும்..
தானே தன் கையை மட்டும் ஊன்றி ஆளாகி இன்று நின்றதும் கனவு போல இருந்தது.
எல்லாவற்றையும்
ஒன்று போல காண கண்டு கொண்டவள் இவள். இன்பமோ துன்பமோ… மிக சாதாராணமாக கடந்து போக கற்றிருந்தாள். இன்று அப்படி அவளால் இருக்க முடியவில்லை.
மனதுள் மகிழ்ந்து மகிழ்ந்து நெகிழ்ந்து போனாள்.
” என் இறைவன் என கைவிடவில்லை” என நெக்குருகினாள் .
வர்மனை மெல்ல கிள்ளினாள்.
அவன் ” ஆ…..” என
நிஜம் தான் என உள்ளே கூறிக்கொண்டாள்.
காரின் ஏசி குளிரில், வர்மன் மெல்லத் தன் கையை நீட்டினான். மீராவின் மெல்லிய விரல்களைத் தன் வலுவான கைகளுக்குள் சிறைபிடித்தான். மீரா அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவனது காந்தக் கண்கள் அவளை அடியோடு உலுக்கின.
“என்ன கலெக்டர் அம்மா… இப்போவாச்சும் இந்த வர்மன் உங்க சொந்தக்காரன்னு நம்புறீங்களா? இல்லை இன்னும் சந்தேகம் இருக்கா?” என்று வர்மன் குறும்போடு கேட்டான்.
மீராவின் கன்னங்கள் தக்காளிப் பழமாய் சிவந்தன. “வர்மன்… ப்ளீஸ், முன்னாடி கார் டிரைவர் இருக்கார். கொஞ்சம் பேசாம இருங்களேன்…” என்று அவள் கிசுகிசுத்தாள்.
“சரி பேசல” என அசராமல் பேசினான். அவளது தோளோடு தன் தோளை இணைத்தான். அவளை இன்னும் நெருக்கமாக இழுத்துக் கொண்டான். அவளது வெண்பட்டின் ஜரிகை அவனது சட்டையோடு உரசியது. அவளது மல்லிகைப் பூவின் வாசம் வர்மனின் நரம்புகளை முறுக்கேற்றியது.
அவனது விரல்கள் அவளது இடையில் ஊர்ந்தது. மெல்ல ஒரு அழுத்து அழுத்தினான்.
அவள் ‘விலுக்’ என நிமிர இவன் “என்ன?” அவள் விழிகளுக்குள் வினவினான்.
” ஒரு ஐபிஎஸ் பண்ற வேலையா இது… என இவள் கிசுகிசுக்க…
” இன்னும் பார்ப்ப பாரு! “என்றான்.
வண்டி இன்னும் கொஞ்சம் தூரம் நகர்ந்திருக்க…
” ட்ரைவர் இங்க அடுத்து வர்ற ஷாப்பிங் மால்ல ஒரு வாட்டர் பாட்டில் வாங்கி வாங்க”
இவள் ” தோ இங்கிருக்கே” என ” இல்ல ச்சில் டா வேணும்..”
ட்ரைவர் இறங்கிய நொடி
இவளை அப்படியே மடியில் அலேக்காய் தூக்கி இருந்தினான் .
இவள் “ஏய் டேய்..” என
” என்னடி கட்டின புருஷன டேய் ங்கிற”
இவள் வாய் திறந்து பதில் கூறும் முன்
அவள் இதழ்களை சிறையிட்டிருந்தான்.
மெல்ல… ஆரம்பித்த அந்த இதழ் முத்தம்… அவள் மூச்சுக்கு தவிக்கும் வரை தொடர்ந்தது. விட்டான்…
உயிரை உறிஞ்சியதாய் இருந்து அந்த முத்தம்!
இத்தனை கால தவிப்பிற்கும் சேர்த்து ஒரு நீண்ட, ஆழமான முத்தம்!
” மோசம் வர்மன் நீ”
” இதுக்கே வா…???” என கண்ணடிக்க…
ட்ரைவர் வந்திருந்தான்.
மறுபுறம், செம்பியன் மற்றும் ரஞ்சனாவின் காரிலோ காதல் அதகளப்பட்டுக் கொண்டிருந்தது.
“என்ன செம்ப்.. கல்யாணம் முடிஞ்சதுல இருந்து ஒரே வெட்கமா இருக்கு? எப்பவும் பேசுற அந்தப் பேச்சு எங்கே போச்சு?” என்று ரஞ்சனா கேட்க..
செம்பியன்… ” ஏய் மெதுவா டீ..”. “ட்ரைவர் ட்ரைவர் “என்றான்.
“பார்த்தா பார்க்கட்டும்… என் புருஷன் , என் உரிமை!முழு லைசென்ஸ் இருக்கு!” என்று கூற செம்ப் க்கு
உள்ளே காதல் உதறலடித்தது.
அரண்மனைக்கு வந்து சேர்ந்ததும், புதுமணத் தம்பதிகளுக்கு ஆரத்தி எடுத்தனர். திருஷ்டி கழித்து முறைப்படி உள்ளே அழைத்தனர் பெரியம்மாக்கள். அவர்கள் உள்ளே நுழைந்தபோது, சொக்கலிங்கம் ஐயா முகத்தில் பெரும் மகிழ்ச்சியோடு ஓடிவந்தார்.
“அம்மா… அய்யா… ஒரு சந்தோஷமான செய்தி!” என்றார் சொக்கலிங்கம்.
“என்ன சொக்கலிங்கம் ஐயா? எல்லாரும் நல்லபடியா சாப்பிட்டாங்களா?” என்று கேட்டான் வர்மன்.
“ஆமாங்க தம்பி! நீங்க சொன்னபடியே நம்ம ராமநாதபுரம் மாவட்டம் முழுக்க இருக்குற ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் காப்பகங்கள், சுத்துப்பட்டு கிராமங்கள்னு ஏறத்தாழ பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு நம்ம சமஸ்தானத்தோட பிரம்மாண்ட அரச விருந்து சாப்பாடு முழுசா போய்ச் சேர்ந்துடுச்சுங்க! எல்லாரும் மனசார புதுமணத் தம்பதிகளை வாழ்த்திச் சாப்பிட்டாங்க,” என்று அவர் நெகிழ்ச்சியோடு கூறினார்.
இந்தச் செய்தியைக் கேட்டதும் மீராவின் கண்களில் கலெக்டருக்கே உரிய ஒரு சமூகத் திருப்தியும் ஆனந்தமும் மின்னின.
“இந்த ஏழை மக்களோட வயிறாரக் கொடுத்த வாழ்த்தும் ஆசிர்வாதமும் தான் வர்மன், நம்ம வாழ்க்கைக்குக் கிடைச்ச ஆகச்சிறந்த திருமணப் பரிசு,” என்று மீரா நெகிழ்ந்து கூறினாள். தன் வர்மனின் கரங்களை இன்னும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள்.
“உண்மைதான் மீரா. மக்கள் பசி ஆறுறதுதான் இந்தச் சமஸ்தானத்தோட உண்மையான ராஜபோகம்,” என்றான்.
 அந்த அரண்மனையின் இரட்டை முதலிரவுத் திருநாள் இன்னும் கூடுதல் தெய்வீகப் பொலிவோடு தொடங்கியது.
அரண்மனையின் அந்தப் பிரம்மாண்டமான இரு அறைகளும், மணமக்களுக்காகத் தனித்தனியே சொர்க்கபுரியாக மாற்றப்பட்டிருந்தன. வாசனை மலர்களாலும், ரோஜா இதழ்களாலும் கட்டில்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பால், பழங்கள், பன்னீர்ச் செம்புகள் என அங்கே அத்தனையும் தயாராக இருந்தன.
அரண்மனையின் விளக்குகள் ஒவ்வொன்றாக அணைந்தன. அந்த இரு அறைகளின் கதவுகளும் காதலின் புதிய சரித்திரத்தை எழுதத் தயாராக மூடிக்கொண்டன!
ஆயிரம் கனவுகளும், ஆயுள் கால ஆசைகளும் நெஞ்சுக்குள் சிறகடிக்க… பால் செம்பைக் கைகளில் ஏந்தியபடி அந்தப் பிரம்மாண்டமான முதலிரவு அறைக்குள் நுழைந்தாள் மீரா.
அறை முழுவதும் மல்லிகைப் பூக்களின் வாசம் நாசியைத் துளைத்தது. பன்னீரும் ரோஜா இதழ்களும் தூவப்பட்டிருந்த அந்தப் பட்டு மெத்தை அவளது இதயத்துடிப்பை இன்னும் அதிகமாக்கியது. இத்தனை காலம் வறண்ட பாலையாக இருந்த தன் வாழ்வில், வர்மன் புயலென நுழைந்து வசந்தத்தைத் தந்திருக்கிறான். அந்த நிறைவோடு கதவை மெல்லத் தாழிட்டுவிட்டுத் திரும்பினாள்.
அறையில் வர்மனைக் காணவில்லை. “வர்மன்…” என்று மெல்லக் குரல் கொடுத்தாள்.
பதில் இல்லை. ஆனால், அடுத்த நொடி… இருட்டில் மறைந்திருந்த வர்மன், பின்னாலிருந்து சிறுத்தையெனப் பாய்ந்து அவளைத் தன் வலுவான கரங்களுக்குள் சிறைபிடித்தான்.
“ஆஹ்…” என மீரா அலறுவதற்குள், அவளது இதழ்களைத் தன் கைகளால் மூடி, அவளது முதுகைத் தன் அகன்ற மார்போடு அழுந்த அணைத்துக் கொண்டான்.
அவன் சட்டையின்றி ஸ்லீவ்லெஸ் பனியனோடு நின்றிருந்தான். உடற்பயிற்சியால் செதுக்கப்பட்ட அவனது பிரம்மாண்டமான மார்பும், தோள்களும் அவளது மெல்லிய உடலை மொத்தமாய் விழுங்கிவிடுவது போல் இருந்தன. அவளது வெண்பட்டுப் புடவையின் வழியே வர்மனின் மார்புச் சூடு அவளுக்குள் இறங்கியது.
“ம்ம்… கத்தாதீங்க கலெக்டர் அம்மா… உங்க புருஷன் தான்,” அவளது காதோரம் அவனது மீசை உரசி, மூச்சுக்காற்று சுடச்சுடப் பாய்ந்தது.
மீரா அவனது கரங்களை விலக்கி, அவனது அகன்ற மார்பில் தன் கைகளைப் பதித்து, அந்த அணைப்பில் அப்படியே உருகி நின்றாள். “என்ன வர்மன் இது… பயந்தே போயிட்டேன்,” என்றாள் மூச்சிரைக்க.
அவளைத் தன் பக்கமாகத் திருப்பி, அவளது மோவாயைத் தூக்கித் தன் காந்தக் கண்களால் பார்த்தான் வர்மன்.
முதல் அச்சாரமாய் நெற்றியில் முத்தமிட்டான்.
அவள் விழிகள் தாழ,
 அவளது வெட்கம் அவனுக்குள் மோகத்தைத் தூண்டியது.
” என்னடி வெட்கமா?”
” ம்ம்..இல்ல பயம்!”
” எதுக்கு நான் தான் கூட இருக்கேனே…”
திடீரென்று அவன் மனதில்  காரில் ரஞ்சனா சொன்ன அந்த வார்த்தை வந்து போனது.
அணைப்பை லேசாகத் தளர்த்தி, அவளது கண்களை உற்றுப் பார்த்தபடி, “ஹேய் கண்ணம்மா… சொல்லு,  கார்ல ரஞ்சு ஏதோ பதினாறு வருஷம் சீனியர்னு கிண்டல் பண்ணாளே… என்ன விஷயம் அது? எனக்குத் தெரியாம நீங்க ரெண்டு பேரும் என்ன ரகசியம் வச்சிருக்கீங்க?” என்று குறும்போடும் ஆர்வத்தோடும் கேட்டான்.
மீரா புன்னகைத்தாள். அந்தப் புன்னகையில் ஒரு பழைய நினைவின் அற்புதம் இருந்தது. அதை
அவனுக்கு தெரியபடுத்தும் ஆர்வம் இருந்தது…
அவளின் வர்மன்… அதற்கு முன்பே அவளின் வீரனான கதை!
அவனுக்கே அவன் கதையை கூற விளைந்தாள் பெண்ணவள்.
” வாங்க ” என கட்டிலில் அமர்த்தினாள்.
” உங்க பனியன கழட்டுங்க…”
” ஏய் என்னடி… இங்க எல்லாம் தலைகீழா நடக்குது” என வர்மன் குஜாலாக…
அவள் ” உஷ்” சொன்னத செய்ங்க…
அவன் செய்தான்…
வெற்று மார்புடன் வர்மன் இருந்தான்..
அவனது இட மார்பின் மேலே தோளுக்கு கீழே அது இருந்தது.
மீரா அந்த வெண்மையான காகிதத்தில் விழுந்த மைத்துளி போன்ற அந்த துல்லியமான அந்த சிறு கருப்பு தழும்பை பார்த்தாள் .
விழி யகன்று பார்த்தாள்.
விழி நனைந்து சிரித்தாள்.
அவனை அனணத்து அந்த தழும்பில் மென்மையாய் தன் இதழ் பதித்தாள்.
வர்மனுக்கு ஒன்றும் விளங்கவில்லை…
” என்னடி என்ன ஆச்சு ” என பதறினான்.”
 ” நீங்க மதுரை சித்திரை திருவிழாக்கு அழகர் ஆத்துல இறங்குறதை பார்க்க போவீங்களா?” என்று கேட்டாள்.
“ஆமா, போவேனே.”
“ஒவ்வொரு வருஷமும் போவீங்களா?”
“ஆமா, ஆல்மோஸ்ட் எல்லா வருஷமும் போவேன். ஏன்?” வர்மன் புருவத்தைச் சுருக்கினான்.
“எப்பல இருந்து போறீங்க?”
“எனக்கு ஒரு அஞ்சு வயசு இருக்கும் போதுல இருந்து… எங்க பாட்டி ராஜேஸ்வரி பாட்டி கூடப் போவேன்,” என்றான் வர்மன், இன்னும் புரியாமல்.
“அப்போ… 2011-ஆம் வருஷம் ஞாபகம் இருக்கா? உங்களுக்கு அப்போ பதிமூணு வயசு இருக்கும்…” என்றாள் மீரா.
” எஸ்… “
“அங்க ஒரு சின்ன பொண்ணு … அவள இரண்டு பேர் துரத்த… நீங்க கல்லெறிஞ்சு காப்பாற்ற….”
அவன் விழி விரிய அவளை பார்த்தான்.

” அவ உயிர அவ மானத்தை அன்னிக்கு நீங்க காப்பாத்தினீங்க… அதவிட ….”

கண்கள் நனைந்து தொடர்ந்தாள்…

 ” அவ தன் பால்யம் தீர்ந்து பூப்பெய்திய அந்த நாளில்… அந்த சிறுமி முதலில் பார்த்த அந்த முகம் நீங்க !
” அந்த பொண்ணு நான்!..”
மீரா உணர்ச்சிப் பெருக்குடன் சொல்லி முடிக்க… வர்மனின் நினைவுகள் சட்டென்று பின்னோக்கி ஓடின. பதிமூன்று வயது சிறுவனாக அவன் அழகர் கோவில் கூட்டத்தில் ஒரு சிறுமியை பார்த்தது… அவளது அபலை க்குரல் தனை வருத்தியது… தாங்காது தான் கல்லெறிந்தது… அவளுக்கு தன் சட்டையை கழற்றி கொடுத்தது என அனைத்தும் மங்கலாக நினைவுக்கு வந்தது. பின் தெளிவானது.
“யெஸ்… ஓஹ்! நீ… நீ அந்தப் பொண்ணா?! ஆமா, ஆமா, ஆமா… இப்போதான் எனக்குப் புரியுது!” என்று வர்மன் வியப்பின் உச்சத்துக்கே போனான். தன் வாழ்வில் இவள் இத்தனை வருடங்களுக்கு முன்பே பிணைக்கப்பட்டிருக்கிறாள் என்பதை அவனால் நம்ப முடியவில்லை.
மீரா அத்தோடு நிறுத்தியிருக்கலாம்.
ஆனால், மீரா அத்தோடு நிறுத்தவில்லை. அவளது முகத்தில் ஒரு மெல்லிய தடுமாற்றம் தோன்றியது.
“ஆனா வர்மன்… அன்னைக்கு நான் பார்த்தது உங்க அந்த சின்ன பையன் முகத்தை. உங்க பாட்டி உங்களை ‘வீரா… வீரா…’னு கூப்பிட்டது மட்டும்தான் என் காதுல விழுந்தது. நான் வளர்ந்த அப்புறமும் அந்த ‘வீரா’வைத்தான் தேடுனேன்.
தேடிட்டே இருந்தேன்….
அவனோட தான் என் வாழ்வுன்னு இருந்தேன்..”
வர்மன் புன்னகையுடன் கேட்டிருந்தான்.
“முசோரில உங்கள அவாய்ட் பண்ணது அதனால …”
“ஆறு வருஷத்துக்கு அப்புறம் தேனில சந்திச்சப்புறமும் அதனால தான் உங்கள்ட்டேர்ந்து ஓடினேன்..”
வர்மன் முகம் தீவிரமானது.
“சிட்டிசன் டேட்டா பேஸ் ல தேடினேன்…
முதல்ல… கொடிவீரன்தான் அந்தப் பையனோனு தப்பா நினைச்சுட்டேன்.
அவன் இல்லைனு எனக்கே ப்ரூவ் பண்ணிக்கிட்டேன்..”
அவன் யோசனையாய் பார்த்தான்.
“அப்புறம்… அர்ஜுன் மேரேஜ்ல சின்ன பாட்டி மா பார்த்து ஒருவேளை செம்பியனா இருக்குமோனு கூடக் குழம்புனேன்.”
வர்மன் முகத்தில் புன்னகை அகன்றது.
 “கடைசியாதான் தெரிஞ்சது, அது நீங்கதான்னு…” என்று சொல்லிச் சிரித்தாள்.
மீரா அதைச் சாதாரணமாக, ஒரு பழைய குழப்பமாகத்தான் சொல்லி முடித்தாள்.
ஆனால், அவள் சொல்லி முடித்த அடுத்த நொடி… அறையின் வெப்பம் சட்டென்று குறைந்தது போலிருந்தது.
வர்மனின் முகம் அப்படியே இறுகியது. அவனது கண்களில் இருந்த காதல் மறைந்து, ஆபத்தான கோபமும், சந்தேகமும் குடியேறின. அவளது தோள்களைப் பற்றியிருந்த அவனது கைகளில் கிரிப் ஏறியது.
“என்ன சொன்ன?” வர்மனின் குரல் இடிபோலக் கேட்டது.
“வர்மன்…” மீரா திடுக்கிட்டுப் பார்த்தாள்.
“அப்போ… நீ தேடுன அந்த ‘வீரா’ , செம்பியனோனு நினைச்சியா? உன் பெஸ்ட் பிரெண்ட் ரஞ்சனா செம்பியனைக் காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டதால… உனக்கு வேற வழி இல்லாம, செம்பியன் கிடைக்காததாலதான் நீ என்கிட்ட வந்தியா?! என்னை ஏத்துக்கிட்டியா?!” வர்மனின் வார்த்தைகளில் சந்தேகம் விஷமாய் கக்கியது.
“வர்மன்! என்ன பேசுறீங்க? தப்பா புரிஞ்சுக்காதீங்க… “
“அந்த குழப்பத்துல தான் நீ அன்னிக்கு மயங்கின….” மீரா பதறி அவனது கைகளைப் பற்ற வந்தாள்.
“நீங்க தானே என் வீரா…”
” நோ நான் வர்மன்! .. இப்போ நான் வர்மன்! . நீ இந்த வர்மன ஒரு போதும் காதலிக்கல , அதானே”
மீரா வுக்கு வலித்தது..
வர்மன் அவளைத் தன் மார்பிலிருந்து பின்னுக்குத் தள்ளினான். எதிர்பாராத அந்தத் தள்ளலில் மீரா தடுமாறி மெத்தையின் ஓரத்திற்கு போனாள்.
” போதும்
… அம் டன்..”
 ஆயிரம் கனவுகளோடு வந்த அந்த முதலிரவு அறை, அடுத்த சில நிமிடங்களிலேயே ஒரு புரிதல் பிழையால் புயலில் நிலைகுலைந்ததாய் நின்றது.
மீரா கண்களில் கண்ணீரோடு உறைந்து போய் வர்மனைப் பார்த்தாள்.
வர்மன் அவளுக்கு முதுகு காட்டி திரும்பி படுத்திருந்தான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!