Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

88. வித்யா வெங்கடேஷ் - நிழலாடும் நின் நினைவில்

நிழலாடும் நின் நினைவில் – 16.02

ஓம் ஸ்ரீ சாய்ராம்

இளையவர்கள் வரவேற்பு விழாவிலும், பெரியவர்கள் மறுநாள் முகூர்த்த வைபவத்திலும் கலந்துகொள்வது எனத் தீர்மானித்தனர். மண்டபத்திற்குச் செல்லும் வழியில் ரம்யாவை அழைத்துச் செல்ல திட்டமிட்டான் தருண்.

ஏழு மணிக்குத் துவங்கவிருக்கும் வரவேற்பு விழாவிற்கு, ஐந்து மணியிலிருந்து பரபரக்கும் தம்பியின் அவசரத்தில் புருவங்களைச் சுழித்தான் ஷ்ரவன்.

“பீக் ஹர்ல மாட்டிக்கிட்டா ரிசெப்ஷன் முடிஞ்சுதான் போய் சேருவோம்டா,” தருண் அவனை விரட்ட, வாய்க்குள் சிரித்தாள் உத்ரா.



Advertisement

வண்டி பிரதான சாலையில் வேகமெடுக்க, அப்படியொன்றும் நெரிசலாக இல்லையே என யோசித்த வண்ணம் சுற்றிமுற்றி கண்களைச் சுழலவிட்டான் ஷ்ரவன்.

தற்காலிக மறதியின் உபயத்தால், அவனுக்கு இருந்த மற்றொரு பிரச்சனை, சமீபத்தில் விரிவுப்படுத்தப்பட்ட சாலைகள், செயல்படுத்தப்பட்ட மாற்றங்கள் எதுவுமே அவன் அறிந்திருக்கவில்லை. அதனால் புது இடங்களுக்குப் பயணிக்கும்போது, வழிப்பாதைகளை கூர்ந்து கவனித்து மனத்தில் பதித்துக்கொண்டான்.

இருபது நிமிடங்களுக்கு மேலாக, வண்டி ரம்யாவின் வீட்டிற்குச் செல்லும் அதே வழிப்பாதையில் நகர, இனம்புரியாத உணர்வில் தவித்தான். திருமண மண்டபத்திற்குச் செல்லவும் அதே வழிதான் போல என அவன் ஒவ்வொரு திருப்பத்திலும் தனக்குத்தானே சொல்லிக்கொள்ள, ரம்யாவின் வீடு இருக்கும் அதே தெருவில் வண்டி நுழைந்ததும் அவன் இதயம் இரட்டிப்பு வேகத்தில் துடிக்கத் தொடங்கியது.

Advertisement

ஃப.எம் ரேடியோவில் ஒலித்துக்கொண்டிருந்த பாடலுடன் உச்சஸ்தாயில் பாடியபடி வண்டியை செலுத்தும் தம்பி தன் பதற்றத்தைக் கண்டுவிடக் கூடாது என அதீத ஜாக்கிரதையுடன் முகத்தில் பூத்த வியர்வை துளிகளை கைக்குட்டையில் துடைத்துக்கொண்டான்.

Advertisement

இருப்புக்கொள்ளாமல் தவித்துக்கொண்டிருக்கும் ஷ்ரவனின் அசைவுகளை பின்னாலிருந்து ரசித்தபடி, ரம்யாவை வாசலுக்கு வரச்சொல்லி குறுஞ்செய்தி தட்டிவிட்டாள் உத்ரா.

வண்டி அவள் வீட்டிற்கு மிக அருகில் நெருங்கவும், தேவதையின் குட்டி தரிசனம் கிடைக்காதா என்ற நப்பாசையில் ஜன்னல் பக்கம் தலையை நீட்டினான் ஷ்ரவன்.

மெல்லிய தங்க ஜரிகை கட்டங்கள் கொண்ட பாரம்பரிய ஊதா நிறக் காஞ்சிப்பட்டில் முழு அலங்காரத்துடன் வாசலில் நிற்கும் மங்கயைக் கண்டு அவன் வாயடைத்துப் போகவும், வண்டி அவள் பக்கத்திலேயே நிற்கவும் சரியாக இருந்தது.

Advertisement

என்ன நடக்கிறது என அவன் உள்வாங்குவதற்குள், வசீகரப் புன்னகையுடன் பின் இருக்கையில் உத்ராவின் பக்கம் ஏறிக்கொண்டுவிட்டாள் ரம்யா. வண்டியும் நகரத் தொடங்கியது.

அவள் அமர்ந்துகொண்ட பக்கம் தலையைத் திருப்பியவன், காண்பது கனவா நிஜமா எனக் கண்கொட்டாமல் பார்க்க,

பெரியப்பா, தன்னைத் தூக்கிக்கொள்ளவதற்குத் தான் திரும்பியிருக்கிறான் எனக் குதூகலம் அடைந்த விரூபா, தன் இரு கைகளையும் சிறகென விரித்து அவனிடம் தாவப் பரபரத்தாள்.

உற்சாகத்தில் தள்ளாடும் குழந்தையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட உத்ரா,

“பார்த்து… கழுத்து சுளுக்கிக்கப் போகுது அண்ணா,” அவன் கண்ணெதிரே சொடுக்குப் போட்டு கிளுகிளுத்தாள்.

இமைகளைச் சிமிட்டியவன், “நீயும் கல்யாணத்துக்கு வரேன்னு சொல்லவே இல்லையே ரம்யா,” அப்பாவியாகக் கேட்டுக்கொண்டே குழந்தையை வாங்கி தன் மடியில் அமர்த்திக்கொண்டான்.

தனக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமுமே இல்லை என்ற ரீதியில் வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்த தருணைப் பார்வையால் சுட்டிக்காட்டி,

“எல்லாம் இவனால தான்!” என அவன் பின்முதுகில் செல்லமாக அடித்தாள் ரம்யா.

தருண் நமுட்டுச் சிரிப்புடன் அண்ணனுக்குக் கண்சிமிட்ட, ரம்யாவே மேலும் பேசினாள்.

“என்னை வரச்சொல்லிக் கட்டாயப்படுத்தினது மட்டுமில்லாம, உங்ககிட்ட சொல்லக்கூடாதுன்னு வேற சொல்லிட்டான்,” என்றதும் தம்பியை முறைத்தான் ஷ்ரவன்.

“என் புருஷன் அப்படிச் செய்யலேனா இங்கே கண்ணும் கண்ணும் நோக்கியான்னு இலவசமா ஒரு காதல் காட்சி ஓடிருக்காதுல ‘ண்ணா,” உத்ரா கிண்டல் செய்ய, அழகாய் அசடுவழிந்தான் ஷ்ரவன்.

கழுத்தைச் சற்று லேசாகத் திருப்பினாலே உத்ரா அவனை சரமாரியாக ஓட்ட, மண்டபம் வந்து சேரும்வரை அடக்கிவாசித்தான் ஷ்ரவன்.


குருமூர்த்தியும் அவர் மனைவியும் அவர்களை வாய்கொள்ளா புன்னகையுடன் வரவேற்று சிற்றுண்டி உண்டு வரச்சொல்லி அன்பாய் உபசரித்தனர்.

மாலை நேரத்தின் இதமான தென்றல் காற்றில் கலந்த சிற்றுண்டிகளின் வாசத்தைப் பிடித்த வண்ணம் உத்ராவும் தருணும் முன்னால் நடக்க, எதிர்பாராமல் அமைந்திருக்கும் இந்தச் சந்திப்பில் லயித்தவர்களாக, கை விரல்களும் மனமும் உரச, பின்னால் நடந்தனர் ரம்யாவும் ஷ்ரவனும்.

நேசம் வழிய பேசிக்கொண்டு வரும் இருவரையும் கண்டுகொண்ட ஊழியர்கள் வாயடைத்து நின்றனர். கண்கள் அகல வியந்து பார்க்கும் அவர்கள் முக பாவனையிலேயே அவர்கள் உள்ளத்தை எல்லாம் படித்தாள் ரம்யா.

அவர்களுக்கு நெற்றியடி பதில்கொடுக்கும் விதமாக, கணவனின் வலதுகை இடுக்குக்குள் தன் கையை வளைத்துக்கொண்டும் அவன் மறு கைமடிப்பில் சவாரி செய்த விரூபாவின் கன்னத்தைக் கிள்ளி கொஞ்சியப்படியும் புன்னகை முகமாய் உடன் நடந்தாள்.

மங்கையின் நெருக்கமும், அவள் தலை நிறைய சூடியிருந்த மல்லிகையின் வாசமும் ஒன்று சேர்ந்து உணர்ச்சிகளைத் தூண்ட, கண்ணியத்தைக் கடைபிடிக்க பெரும்பாடுபட்ட மன்னவனின் பாடுதான் திண்டாட்டமானது.

புரளி பேசிய ஊழியர்களில் சிலர் ரம்யாவை நேரில் கண்டதும், கொஞ்சம் கூடக் குற்றவுணர்ச்சியே இல்லாமல் அந்தர் பல்டி அடித்தனர். அவர்கள் வழியிலேயே சிரித்துப்பேசி அவர்கள் மூக்கை உடைத்தாள் ரம்யா.

சமோசா, பாவ் பாஜ்ஜி, போன்டா எனத் தட்டு நிறைய பதார்த்தங்களுடன் வாய்க்கும் கைக்கும் சண்டையிட்டுக் கொண்டே தோழியின் எதிர்வினைகளைப் பெருமிதம் பொங்க ரசித்தான் தருண்.

“அக்கா! இந்த மிளகாய் பஜ்ஜி அல்டிமேட்,” உயிர்வரை பரவிய காரத்தை மகிழ்ந்து அனுபவித்தபடி கண்களைச் சுருக்கி சப்புக்கொட்டிய உத்ரா ரம்யாவுக்கு ஊட்டினாள்.

பெண்களின் பரிபாஷைகளைக் கவனித்துக் கொண்டிருந்த வயதில் முதிர்ந்த பெண் ஊழியர் ஒருவர், “குழந்தைக்கு ஃபீட் பண்ணும்போது இவ்வளவு காரம் சாப்பிடக்கூடாது உத்ரா,” என அக்கறையாக எச்சரித்தார்.

எப்போதும் கனிவுடனும் ஆத்மார்த்தமான அன்புடன் பழகும் ரகம் அவர்.

அதனால், “சொல்பேச்சுக் கேட்டாதானே மேடம்,” ஒத்தூதிய ரம்யா அவள் கையிலிருந்து தட்டைப் பிடுங்கி பஜ்ஜியை ருசிக்க,

“நீயும் கவனமா இருக்கணும் ரம்யா,” என்றார்.

ஷ்ரவன் அளந்த கதைகளை நம்பி அறிவுறுத்துக்கிறார் என யோசித்த ரம்யா, “சாதாரண காய்ச்சல்தான். இப்போ எனக்கு உடம்புக்கு எதுவுமில்ல மேடம்,” என மென்னகைத்தாள்.

“ஓ! ஏதோ விசேஷம் இருந்திருக்கும்; அதான் நீ திடீர்ன்னு ஆபீஸுக்கு வரத நிறுத்திட்டன்னு நெனச்சேனேமா,” அவர் வருந்த,

அதைக் கேட்ட பெண்ணவளுக்கு நடந்த அசம்பாவிதங்கள் யாவும் ஒன்றன் பின் ஒன்றாக கண்முன் விரிய, துக்கம் தொண்டையை அடைத்தது.

சுற்றி நிற்பவர்களின் பரிதாபப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.

என்ன சொல்லித் தேற்றுவது எனப் புரியாமல் உத்ராவும் ஷ்ரவனும் கைகளைப் பிசைந்து கொண்டு நிற்க, புதிய பானிபூரி தட்டுடன் தோழியைப் பின்தொடர்ந்தான் தருண்.

“என்ன நீ! பானிபூரிய ட்ரை பண்ணாம வந்துட்ட,” சகஜமாய்க் கேட்டபடி அவளருகில் வந்தமர்ந்தான்.

உண்ணுவதில் கவனமாக இருந்தவன், சற்று முன் நடந்ததைக் கவனித்திருக்க மாட்டான் என்ற யூகத்தில், புன்சிரிப்பை உதட்டில் ஒட்டிக்கொண்ட வண்ணம், “வயிறு ஃபுல்,” என வயிற்றைத் தடவி கண்சுருக்கினாள்.

வயிற்றை வருடிய அவள் கைவிரலகள் குழந்தைகளின் ஸ்பிரசத்தை நினைவூட்டி சித்திரவைதை செய்ய, அவன் கண்களைத் தவிர்த்தாள்.

உணர்வுகளை மறைக்கப் பாடுபடும் தோழியின் மனப்போராட்டங்களைக் கண்டும் காணாமல் நடித்தவன், சாப்பிட்டே தீரவேண்டுமென வலியுறுத்தினான்.

அவன் குணமறிந்தவள், சம்பிரதாயத்திற்காகத் தட்டை வாங்க முயல,

“எப்பவும் நான்தானே உனக்கு ஊட்டுவேன்,” என உருளைக்கிழங்கு நிறைந்த பூரியில் மசாலா தண்ணீரை நிரப்பி அவள் வாயில் இட்டான்.

உப்பிய கன்னங்களுடன் மென்று விழுங்கி புன்னகைக்கும் மனையாளைக் கண்கொட்டாமல் பார்த்து நின்றான் ஷ்ரவன்.

அதையும் கவனிக்கவே செய்தான் தருண்.

“உன் புருஷனுக்கு இங்க நடக்கிறது எதுவுமே புரியல; திருதிருன்னு முழிச்சிட்டு நிக்குறான்; பாம்பேல நீ பானிபூரி சாப்பிட்ட லட்சணத்தை ரீக்ரியேட் பண்ணி காட்டுறியா,” தோழியின் காதுகளில் கிசுகிசுத்தான்.

பம்பாய்க்குச் சுற்றுலா பயணமாகச் சென்றிருந்தபோது, நடைபாதை கடைக்காரரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமால் பானிபூரியை கையில் வாங்கும்போதே சுக்குநூறாக உடைத்தும், வாயிலிட்டுக் கொண்டதை மெல்ல முடியாமல் சுடிதார் முழுவதையும் கரையாக்கிக் கொண்டும் என ஒரு பெரும் அக்கப்போரே செய்திருந்தாள் பேதை.

அந்தநாள் கலாட்டாக்களை நினைவுகூர்ந்தவள், “ச்சீ போடா,” என நண்பனுக்கு அடிகொடுக்க, அவள் இயல்புக்குத் திரும்பிய திருப்தியில் மீதியையும் ஆசைதீர ஊட்டிவிட்டான்.

நால்வரும் அங்கே அமர்ந்தபடி ஊர்கதை பேசிக்கொண்டிருக்க, தாம்பூலப் பைகள் நிறைந்த மூட்டையுடன் தள்ளாடி நடக்கும் குருமூர்த்தியின் மூத்த மாப்பிள்ளையைக் கண்டுகொண்டான் தருண்.

அவருக்கு உதவ அவன் நகர, சில நொடிகளில் விழாவிற்கு வந்த உத்ராவின் கல்லூரித் தோழி அவளை அடையாளம் கண்டுகொண்டு நலன்விசாரித்துப் பூரித்தாள். மற்ற தோழிகளும் வந்திருப்பதாக அவள் அறிவிக்க, குழந்தையுடன் அவர்களைக் காண நகர்ந்தாள் உத்ரா.

தனிமையில் பேசும் சந்தர்ப்பம் கிட்டிட, “தருண் என்ன சொன்னாலும் கேட்டுப்பியா ரம்யா,” மெல்ல பேச்சுக்கொடுத்தான் ஷ்ரவன்.

பானிபூரி கதையா…” அவள் தொடங்க,

“ம்ப்ச்… அது இல்ல ரம்யா,” அவன் குறுக்கிட்டது தான் தாமதம். அவன் கேள்வியைப் புரிந்துகொண்டவள்,

“நீங்க வான்னு கூப்பிட்டு இருந்தாலும் தான் வந்திருப்பேன் ஷ்ரவன்,” என மென்னகைத்தாள்.

“அது சரி! அப்போ விலகியிருக்கணும்… பேச்சு வார்த்தை எதுவும் வேண்டாம்னு மேடம் போட்ட ரூல்ஸ் எல்லாம் எங்கே போச்சு,” உள்ளுக்குள் மகிழ்ந்தபோதும் குத்திக்காட்டவே செய்தான்.

அதற்கும் அளவாய் சிரித்தாள் அவன் சரிபாதி.

“சிரிச்சு மழுப்பாத. பதில்சொல்லு,” முறைத்தான் அவன்.

“விலகியிருக்கணும்னு நினைக்கிறது உண்மைதான் ஷ்ரவன். ஆனால் அது நம்ம குடும்ப கௌரவத்துக்கு இடைஞ்சலா இருக்கும்போது, என் கொள்கைதான் பெருசுன்னு கொடி பிடிச்சிட்டு இருக்குறது எந்தவிதத்துல நியாயம்,” விளக்கம் தந்தாள்.

அவள் சற்றுமுன் தன்னை உரசி நடந்த விதம், ஊழியர்களுக்குப் பதிலளித்த தோரணை அனைத்தையும் அசைபோட்டவன்,

“அப்போ ஆபீஸ்ல நடந்த எல்லாத்தையும் தருணும் சொல்லிக் கேட்டு, ஸ்டாஃபுக்குப் பதிலடி தர வந்திருக்க. எனக்காக வரல. அப்படித்தானே,” அழுத்தமாய்க் குத்திக்காட்டினான்.

‘என் கணவனின் பெயருக்கு ஒரு களங்கமும் வந்துவிடக் கூடாது என்பதற்காகத் தானே இத்தனை மெனக்கெட்டேன்,’ என யோசித்த பாவைக்கும் கோபம் சுள்ளென்று ஏறியது.

“ஆபீஸ்ல நடந்த விஷயத்தை எல்லாம் என் புருஷன் என்கிட்ட மனசவிட்டுச் சொல்லியிருந்தா, ஆபீஸுக்கே நேருல வந்து சூட்டோட சூடா பதிலடி தந்திருப்பேன்,” எங்கோ பார்த்தபடி பேசினாள்.

“ரம்யா….” அவன் பதற,

“உடல் அளவுல மட்டும்தான் நான் உங்களை விட்டு விலகியிருக்கேன் ஷ்ரவன். ஆனால் நீங்க மனசளவிலும் விலகியிருந்து என்னை அந்நியப்படுத்திட்டீங்க,” தேக்கிவைத்திருந்த ஆதங்கத்தைக் கொட்டினாள்.

“சொல்லக்கூடாதுன்னு இல்ல ரம்யா… ஏற்கனவே என்னோட இந்த மெமரி லாஸ்ன்னால நீ நிறைய கஷ்டங்கள அனுபவிக்குற. இதை வேற சொல்லணுமான்னு தான்,” அவன் புரியவைக்க,

“நோ எக்ஸ்க்யூஸஸ் ஷ்ரவன். நீங்க மறைச்சது தப்புதான்,” கண்களை உருட்டினாள்.

வாயைக்கொடுத்து மாட்டிக்கொண்டேனே என அவன் கப்சப் என்று அமைதிகாக்க,

“அண்ணா! இவளைக் கொஞ்ச நேரம் வச்சிருங்க. என் ஃப்ரெண்ட்ஸ் முகத்தைப் பார்த்தாலே அழுறா,” என விரூபாவை மடியில் விட்டுவிட்டுப் பறந்தாள் உத்ரா.

தேம்பி அழுதுகொண்டிருந்த குழந்தை சுற்றி சுற்றிப் பார்த்து அழ, கால்நடையாகத் தாலாட்டினால் சமாதானம் ஆவாள் என யோசித்த ஷ்ரவன், “அவள தூங்க வச்சிட்டு வரேன்,” என்றான்.

“என்கிட்ட கொடுங்க,” ரம்யா இறுகிய குரலில் கேட்க, ரம்யாவிடம் செல்ல மறுத்த குழந்தையின் அழுகையின் டெசிபலும் கூடியது.

“சரி! சரி! நீ யார்கிட்டயும் போகவேண்டாம்,” எனச் சமாதானம் சொல்லிக்கொண்டே ஷ்ரவன் எழுந்துகொள்ள,

அவன் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்திய ரம்யா, “உனக்கும் உன் பெரியப்பாவுக்கும் என்னைப் பார்த்தால் பூச்சாண்டி மாதிரி இருக்குதாடி,” எனக் குழந்தையின் கன்னத்தில் நறுக்கென்று கிள்ளி தன்னவனை முறைத்தாள்.

பெண்மானின் கோபமெல்லாம் அதீத காதலின் பிரதிபலிப்பு என மூளைக்கு உரைக்க, தாரை தாரையாகக் கண்ணீர் வடிக்கும் குழந்தையைத் தோளில் சாய்த்துக்கொண்டு சமாதானப் படுத்தியவன்,

“என் கண்ணுக்கு நீ தேவதை மாதிரி இருக்குற ரம்யா,” காதோரம் கிசிகிசுத்து, அவள் எதிர்வினை காட்டும் முன், கெட்டியாக அவள் கரம்பிடித்துக்கொண்டு ஆள் நடமாட்டம் அதிகமில்லாத ஓர் ஓரத்திற்கு வந்தான்.

அவன் வசியப்பேச்சுக்கு மயங்கிவிடக்கூடாது என மிகவும் திடமாக இருந்தவள் கற்சிலையாக நிற்க, அவனோ விரூபாவைத் தூங்க வைப்பதில் மட்டுமே கவனமாக இருந்தான்.

அருகிலிருந்த பெரிய அளவிலான மின்விசிறியின் ஜில் ஜில் காற்றில், கண்கள் சொருக, நிமிடத்தில் துயில் கொண்டாள் அவர்கள் தாரகை. குழந்தை உறங்கியதும், “வா போகலாம்!” என அவன் கூற,

குழந்தையின் சிவந்த கன்னங்களை வருடியவள், “நான் கொஞ்ச நேரம் தூக்கி வச்சுக்கவா,” என ஏக்கம் பொங்க கேட்டாள்.

மென்சிரிப்புடன் குழந்தையை அவளிடம் விட்டான். புசுபுசுவென தோள்பட்டையை வருடிய குழந்தையின் மூச்சுக்காற்றில் பேதையின் கண்ணோரம் மழைத்துளி தேங்கியது. கண்களைச் சிமிட்டியபடி குழந்தையை இறுக அணைத்துக்கொண்டாள்.

“எனக்கும் என் தம்பி பொண்ணுக்கும் ரம்யான்னா ரொம்பப் பிடிக்கும்,” என்றவன் அவள் தோளினை சுற்றி அரவணைக்க, நொடியில் எத்தனித்தாள் பெண்.

பெருமூச்செறிந்தவன், “ஆனால் ரம்யா மனசுல என்ன இருக்குது; அவ எப்போ நெருங்கி வருவா; எங்கள நெருங்க விடுவான்னு தெரியாததுனால தயங்கித் தயங்கிப் பழகவேண்டியதா இருக்கு,” தன் ஆதங்கத்தைக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அவனைப் பின்தொடர்ந்து வந்தவள் மன்னிப்புக் கேட்க வாய்திறக்கும் முன், அவர்கள் அருகில் வந்த தருண்,

“குழந்தையை உன்கிட்ட விட்டுட்டு அரட்டை அடிக்க கிளம்பிட்டாளா என் பொண்டாட்டி,” தோழியின் அரவணைப்பில் துயில் கொண்டிருந்த தன் தாரகையின் தலைகோதி முத்தமிட்டான்.

ரம்யா சிரமப்பட்டுச் சிரிக்க, “பொண்ணு மாப்பிள்ளைக்கு விஷ் பண்ணிட்டுக் கிளம்பலாமா டா. லைட் மியூசிக் சத்தத்துல லேசா தலை வலிக்குது,” என்றான் ஷ்ரவன்.

அவன் தலைவலிக்கான உண்மை காரணத்தை அறிந்தே இருந்தாள் பெண்.

இதற்கிடையில் பரிசுப்பொருளுடன் மேடை அருகே வரச்சொல்லி உத்ராவை அழைத்துப் பேசிய தருண்,

“டென் மினிட்ஸ் டா. கிஃப்ட் காருலே வச்சிட்டாளாம். எடுத்துட்டு வந்துட்டு இருக்கா,” எனக் கூறி அவர்களுடன் மேடை அருகே நடந்தான்.

கோழித்தூக்கம் போட்டு விழித்துக்கொண்ட விரூபா, ரம்யாவின் முகத்தைக் கண்டு சிணுங்கவும், அவளை அமைதியாக நண்பனிடம் விட்டாள்.

மேடை ஏறியவர்கள் மணமக்களுக்கு வாழ்த்துக்கூறி புகைப்படத்திற்காக வரிசியில் நிற்க, தன்னவனின் இடது கைவிரல்களை இறுக்கக் கோத்துக்கொண்டு மன்னிக்கக்கோரி தூதுவிட்டாள் ரம்யா.

முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் மேடை இறங்கியவன், மன்னித்தானா இல்லையா என்று கூட அவளால் கணிக்கமுடியவில்லை. அமைதியாக அவனைப் பின்தொடர்ந்தாள்.

புதுப் பணித் திட்டத்தின் வாடிக்கையாளர் எதிரில் வர, அவருடன் கலகலத்து உரையாடிய ஷ்ரவன், திடுதிப்பென்று,

“ஆன்ட் ஷி இஸ் மை பெட்டர் ஹாஃப் ரம்யா,” எனத் தோள் சுற்றி அரவணைத்து அறிமுகம் செய்தபடி அவளுக்குக் காதலாய்க் கண்சிமிட்ட, பூரித்துப் போனாள் பெண்.

மலர்ந்த முகத்துடன் இரவு உணவு உண்டு வீட்டிற்குப் புறப்பட தயாரானார்கள்.

“குருமூர்த்தி அங்கிள் வெயிட் பண்ண சொன்னாரு. என்னன்னு கேட்டுட்டுக் கிள்மபுவோம்,” தருண் சொல்ல, தலையாட்டினான் ஷ்ரவன்.

மணமேடை ஏறும் விருந்தாளிகளின் அலங்காரங்களை விமர்சித்த வண்ணம் பெண்கள் இருவரும் அரட்டை அடிக்க,

“இந்த வசுமதி எப்படி வளர்ந்துட்டா பாருடா. இப்பதான் ஸ்கூல் ஃப்ர்ஸ்ட் வந்ததுக்கு லட்டு கொடுத்தா மாதிரி இருக்கு. அதுக்குள்ள அவளுக்கு கல்யாணம்,” தருண் அவன் போக்கில் அண்ணனுடன் பேச, ரம்யாவின் கருவிழிகள் அவர்கள் பக்கம் திரும்பியது.

“ஏன்டா! உனக்கு வேறே எதுவுமே சொல்லத் தோணலையா,” தம்பியை அதட்டியபடி, மனையாளைப் பார்த்து அசடுவழிந்தான்.

அவர்கள் பரிபாஷைகளைக் கண்டுகொண்ட தருண், “அப்படியென்ன சொல்லிட்டேன்! எதுக்கு அவனைப் பார்த்து முறைக்குற,” இருவரையும் மாறி மாறி பார்த்து வினவினான்.

“அண்ணனுக்கும் தம்பிக்கும் என்னவொரு ஒத்துமை,” ரம்யா ராகமாய் இழுக்க, தருணின் பார்வை ஷ்ரவன் பக்கம் திரும்பியது.

அன்று அலுவலகத்தில் அவனும் இதேபோல பேசியதை ஒப்பித்தான். அதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார்கள் தருணும் உத்ராவும். எல்லாம் புரிந்ததுபோல விரூபாவும் எகிறி எகிறி பல் இளித்தாள்.

“விரூ குட்டி! நீயுமா,” ஷ்ரவன் முகம் சுருக்க, குழந்தைக்கு ஹைஃபை தந்து, தன்னுடன் எட்டி நின்று விளையாடும் குழந்தையின் பரிபாஷையில் நெகிழ்ந்தாள் ரம்யா.

சிரிப்பொலியில் மிதந்தவர்களின் அருகே வந்த குருமூர்த்தி, “இவங்க என் சித்தப்பா சித்தி,” என வயதில் முதிர்ந்த தம்பதிகளை அறிமுகம் செய்துவைத்து, “இவங்க வீடும் உங்க ஏரியாவில் தான் இருக்குது. ஃபேமிலி எமர்ஜென்சின்னு திடீர்ன்னு அவங்க ட்ரைவர் கிளம்பிட்டாரு. உங்க ரெண்டு பேருல ஒருத்தர் அவங்க கார ஓட்டிட்டுப் போகமுடியுமா,” எனக் கேட்டார்.

“அதனால என்ன அங்கிள்,” உதவ முன்வந்த தருண், “நீ ரம்யாவை ட்ராப் பண்ணிட்டு, உத்ராவையும் குழந்தையையும் வீட்டுக்கு அழைச்சிட்டு வாடா. நான் இவங்களோட கிளம்புறேன்,” என்றான்.

ஷ்ரவன் தலையாட்ட, “நாங்களும் உன்கூடவே வரோம் தருண். பாப்புக்கு மாத்து துணி எடுத்துட்டு வரல,” திட்டத்தை மாற்றினாள் உத்ரா.

வாசல் வரை வந்த ரம்யா, “ஷ்ரவன்! எனக்கொரு ஆட்டோ பிடிச்சுக் கொடுத்துட்டு நீங்க உத்ராவையும் குழந்தையையும் அழைச்சிட்டுப் போங்க,” மெல்ல கேட்டாள்.

“இந்த ராத்திரி நேரத்துல உன்னை ஆட்டோல அனுப்புறதுல எனக்கு இஷ்டமில்ல,” அவன் கூற,

“அதுக்கில்ல ஷ்ரவன்…” மறுத்துப்பேச அவள் வாய்திறக்க,

வெடுக்கென்று நின்றவன், “என் பேச்சையும் கேட்பேன்னு சொன்னது எல்லாம் சும்மா ஒரு ஃபார்மலிடிக்குத்தானா,” கடிந்தான் ஷ்ரவன்.

அவன் மனத்தை நோகடித்தது வரை போதுமெனத் தீர்மானித்தவள், “சரி! சரி! நீங்களே டிராப் பண்ணுங்க,” எனச் சமரசத்துக்கு வந்தாள்.

அந்த முதியவரின் வண்டியை நோக்கி நடந்துகொண்டிருந்த தருண், “ஏய் பாப்பு டயாப்பர் பேக்கை நான்தானே காருல வச்சேன்,” மனையாளிடம் வினவினான்.

“தெரியும்! வேணும்னுதான் பொய்சொன்னேன்,” உத்ரா கண்சிமிட்ட, ஆடித்தான் போனான் அவன்.

“ஏன்டி அப்படிச் செஞ்ச?”

“டின்னர் சாப்பிடும் போது அவங்கள கவனிச்சியா?” என்றாள்.

“ம்ஹூம்…ஏன்….” அவன் உதட்டைப் பிதுக்க,

“தட்டுலேந்து தலையைத் தூக்கினால் தானே,” செல்லமாகக் குட்டியவள்,

“பஃப்ஃபே ட்ரேலேந்து அண்ணா பால்கோவா எடுத்துட்டு வரவும், அதை மேடம் கையில் வாங்காம ஊட்டிவிடுன்னு வாய் திறக்கவும் ஒரே ரொமான்ஸ்தான் போ,” கிளுகிளுத்தாள் பாவை.

கேட்டவன் வாயைப்பிளந்தான்.

“ஏதோவொரு இமோஷன்லத்தான் பிரிஞ்சு இருக்கணும்னு முடிவெடுத்திருக்காங்களே தவிர, ஒருத்தர ஒருத்தர் ரொம்ப மிஸ் பண்ணறாங்க தருண். பூனைக்கு யார் முதல்ல மணி கட்டுறதுன்னு ரெண்டுபேரும் முழிக்கிறது அப்பட்டமா தெரியுதுடா,”

ஆழ்ந்து யோசனையில் தலையசைத்தவன், “ஆனால் இந்த ஒரு குட்டி கார் ட்ரிப்ல என்ன நடந்துடப்போகுது,” என்றான்.

“அப்படியா சொல்ற,” பலமாக யோசிப்பதுபோல அன்னார்ந்து பார்த்தவள், “குட்டி கார் ட்ரிப்பை ஓவர்னைட் ஸ்டேவா எக்ஸ்டென்ட் பண்ணிட்டா போச்சு,” அசால்டாகக் கண்சிமிட்டினாள்.

தோழியின் எச்சரிக்கை குறிப்புகள் கண்முன் நிழலாட, “அவசரப்படாதே உத்ரா. ரம்யாக்கு மட்டும் இந்த உண்மையெல்லாம் தெரிஞ்சா பத்திரகாளியா மாறிடுவா,” மறுத்தான் தருண்.

“அடப்போடா! நீ உன் ஃப்ரெண்டுக்குப் பயப்படு; எனக்கு எந்தப் பயமும் இல்லை,” என்றவள் காரில் ஏறிக்கொள்ள, அந்த முதியவர்கள் முன் எதுவும் கேட்க முடியாமல், உள்ளுக்குள் பதறியபடி வண்டியைச் செலுத்தினான் தருண்.

மங்கள வாத்தியங்கள் மனத்தை பிசைய,
மல்லிகை வாசம் மயக்கத்தில் தள்ள,
மங்கையின் ஸ்பரிசங்கள் உயிர்வரை பாய,
மணநாள் காட்சிகளில் மனப்பாரம் கூடியது!
மங்கலான மணவாழ்க்கையை மீட்டெடுக்க – விடை தேடுகிறேன்
மனக்கண்ணில் நிழலாடும் நின் நினைவில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!