Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

76. Rythm - ரிதம் சரிகமபதநிContest Stories 2026

ரிதம் 25

ரிதம் 25

அன்று அவர்களின் ஸ்டூடியோவிற்குத் திரைப்பட நாயகன் ராகவ்வும் அந்தப் படத்தின் இயக்குனரும் வந்திருந்தார்கள்.



Advertisement

கௌதமுடைய இசையமைப்பில் வெளியான அவர்களின் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி நூறு நாட்களைக் கடந்திருந்தது. பாடல்கள் அத்தனையும் பட்டிதொட்டி எங்கும் பிரசித்தி பெற்று எதிரொலித்தது. முக்கியமாக அவர்கள் இருவரும் பாடிய பாடலும் கௌதம் குரலில் பாடிய பாடலும் அந்த வருடத்தின் சூப்பர் ஹிட் பாடலாகத் தேர்வு செய்யப்பட்டிருக்க, அது அந்த இயக்குனருக்கும், நடிகருக்கும், தயாரிப்பாளருக்கும் பெரும் புகழை ஈட்டிக்கொடுத்திருந்தது.

அவர்கள் நுழையும்போதே அந்த ஸ்டூடியோ பரபரப்பைத் தொற்றிக்கொண்டது. பெரிய ஆட்கள் என்பதனால், நேராக இரண்டாம் தளத்திற்கு வந்து அங்கிருந்த சிறிய வரவேற்பறையில் அமர்ந்துவிட்டார்கள்.

Advertisement

Advertisement

கௌதமுக்கு விஷயம் பகிரப்பட்டது. அவன் வெளியில் வந்து கைகுலுக்கி வரவேற்று, அவர்களைத் தன் கேபினுக்குள் அழைத்துச் சென்றான்.

படத்தின் வெற்றியைப் பற்றியும், பாடலின் வெற்றியைப் பற்றியும் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவனும் சிரம் தாழ்ந்து அதையெல்லாம் ஏற்றுக்கொண்டிருந்தான்.

Advertisement

“படத்தோட வெற்றிக்கு உங்களோட பாட்டு, குரல், மியூசிக் எல்லாமே பிளஸ் பாயிண்ட். இதை நான் ஒத்துக்கிட்டே ஆகணும்” என்று அந்தப் படத்தின் நடிகன் ராகவ் கூற, சற்று கடுப்பாக இருந்தது இயக்குனருக்கு.. ‘அவர் கஷ்டப்பட்டுப் படத்தை எடுத்தால், ஒட்டுமொத்த கிரெடிட்டையும் அவன் மியூசிக் டைரக்டருக்குத் தூக்கிக் கொடுக்கிறானே’?

“உங்களோட குரல் வாவ் அமேசிங்! என்னை மெஸ்மரிசம் பண்ணிடுச்சு. இனிவரும் என்னுடைய எல்லா படத்துக்கும் உங்களோட இந்த மெஸ்மரிசிங் வாய்ஸ் வேணும்னு ஆசைப்படுறேன். அக்ரிமெண்ட் மாதிரி போட்டுக்கலாமா கௌதம்”? என்று கேட்டான் ராகவ்.

“ஹான், அக்ரிமெண்ட் எதுக்கு சார்? உங்களோட அடுத்தடுத்த படத்துக்குக் கண்டிப்பா நான் மியூசிக் பண்ணுவேன். அதே மாதிரி உங்களுடைய படத்துல எந்தப் பாட்டை நான் பாடணும்னு சொல்லுங்க, நான் அதைக்கண்டிப்பா பாடித்தரேன்” என்றான் கௌதம்.

“எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு கௌதம். ஆனா அக்ரிமெண்ட் போடுறது நார்மலா நம்ம இண்டஸ்ட்ரில நடக்குற ஒன்னு தானே? அதுக்கு ஏன் நீங்க இவ்வளவு தயங்குறீங்க? எனக்கு உங்க மியூசிக்கும் உங்க வாய்ஸும் ரொம்ப பிடிச்சிருக்கு. அப்புறம் உங்க கூட டூயட் பாடுன ஃபீமேல் சிங்கர்… ரியலி அமேசிங் வாய்ஸ்! அவங்களை நான் பாக்கணுமே. அவங்களுக்கும் ஒரு அக்ரிமெண்ட் போட்டுட்டா நல்லா இருக்கும். நியூ சிங்கர்ன்னு சொன்னாங்க, அப்புறம் ஃபேமஸ் ஆயிட்டாங்கன்னா கையில பிடிக்க முடியாது”? நக்கலாகக் கூறினான் ராகவ்.

‘இவன் கண்ணு வச்சுட்டானா அப்புறம் அந்தப் பொண்ண நாம கரெக்ட் பண்ண முடியாதே? ரொம்ப அழகா வேற இருந்தாள். இவன் கண்ணுல மாட்ட வைக்கக் கூடாது’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டார் இயக்குனர் கிஷோர்.

“கௌதமே அக்ரிமெண்ட் வேணாம்னு சொல்லிட்டிருக்காரு, நீங்க சிங்கர் வரைக்கும் போயிட்டீங்க? முதல்ல கௌதமைப் பிடிங்க. அவரைப் பிடிச்சாலே அவங்க ட்ரூப் சிங்கர்ஸைப் பிடிச்சிரலாம்” என்று பேச்சை மாற்றினார் கிஷோர்.

“ஆமாங்க கௌதம், அக்ரிமெண்ட் போட்டுடலாம். எனக்கு உங்களோட மியூசிக் எல்லா படத்துக்கும் வேணும்” என்றான்.

“ராகவ் சார், படத்துக்கு அக்ரிமெண்ட் போடலாம், தப்பில்ல. ஆனா நீங்க கேக்குற அக்ரிமெண்ட் வேண்டாமே. மியூசிக் பண்ணத்தான் நான் அகாடமி திறந்திருக்கேன், மியூசிக் கம்போசிஷன் பண்றேன். சோ, கண்டிப்பா யாரு கேட்டாலும் பண்ணிக்கொடுப்பேன். படத்துக்கும் பாடலுக்கும் இது மாதிரி பண்ணிக்கொடுக்கிறது என்னோட கடமை, அதுதான் என் வேலை. படம்னு நீங்க கொண்டுவரும்போது கண்டிப்பா அதுக்கான அக்ரிமெண்ட் போட்டுக்கலாம். ஓவரால் அக்ரிமெண்ட் வேண்டாம். என்னோட வார்த்தையை நம்புங்க. உங்களோட அடுத்தடுத்த படங்களுக்கு நான் கண்டிப்பா மியூசிக் போட்டுத் தருவேன்” என்றான்.

“நீங்க பிஸியாகிட்டீங்கன்னா உங்களைக் கையில பிடிக்க முடியாது கௌதம். அப்ப எனக்கு வேலை இருக்கு, நிறைய படத்துக்கு மியூசிக் ஒத்துக்கிட்டேன், கம்போசிஷன் இருக்கு, பண்ண முடியாதுன்னு சொல்லுவீங்க. அதுக்காகத்தான் இதுபோல அக்ரிமெண்ட் போடுறது. இது ஒன்னும் புதுசு இல்லையே? எல்லாரும் பண்றது தானே”? என்றான் ராகவ்.

“எல்லாரும் பண்றதுதான், ஆனா நான் பண்றதில்ல ராகவ் சார். ப்ளீஸ், இதுல மட்டும் என்னை ஃபோர்ஸ் பண்ணாதீங்க. உங்களைப் போலவே இதுக்கு முன்னாடியும் ரெண்டு மூணு பேர் இதே போல கேட்டிருக்காங்க. அவங்களுக்கு நான் ஓகே சொல்லியிருந்தா, இன்னிக்கு உங்க படத்துக்கும் என்னால பண்ணியிருக்க முடியாது. நான் இதுபோல அக்ரிமெண்ட்டை எப்பவுமே ஒத்துக்குறது இல்ல. நம்மளோட டீலிங் நல்லா இருக்குன்னும்போது, கண்டிப்பா நம்மளோட அடுத்தடுத்த ப்ராஜெக்ட்ஸும் நல்லாதான் இருக்கும்.”

அவனைப் பேச்சில் வளைக்க முடியாது என்று தோன்றியது ராகவிற்கு.

“இந்தப் படத்துக்கு நீங்க வாங்கின அமௌன்ட்ட விட டபுள் மடங்கா தயாரிப்பாளர் கிட்ட சொல்லி வாங்கிக் கொடுக்கச் சொல்றேன். அப்படி என் படத்துக்கு வர ஒவ்வொரு தயாரிப்பாளர் கிட்டயும் நான் இதைக் கன்வே பண்ணுவேன். அப்படிப் பண்ணும்போது அக்ரிமெண்ட் இருந்தாதான் நல்லா இருக்கும். அதைக் காட்டினால்தான் நம்புவாங்க” என்றான் ராகவ்.

அதற்குள் குளிர்பானம் வர, அவர்களுக்கு எடுத்துக் கொடுத்தான். பொறுமையாகக் குடிக்கும் வரை அமைதியாக இருந்தனர்.

“நீங்க ரெண்டு பேரும் அடுத்து சேர்ந்து படம் பண்ணப்போறீங்களா? படத்தோட பெயர் என்ன”? என்று கௌதம் பேச்சை மாற்றினான்.

அவர்கள் கேட்டுக்கொண்டே இருப்பது, அவன் அதை நிராகரித்துக்கொண்டே இருப்பது, இது தேவையற்ற பிரச்சினைகளை வலுப்படுத்தும். இவர்களுக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்தாலும், அதற்கு அவர்கள் அடிக்கல் நாட்டிவிட்டார்களா என்று தெரிந்துகொள்ளக் கேட்டான்.

“பண்ணலாம்னு ஒரு ஐடியா இருக்கு. கதையும் ரெடியாத்தான் இருக்கு. ராகவ் சாருக்குப் பிடிச்சிருக்கு. அதற்கான தயாரிப்பாளரை பார்த்துட்டிருக்கோம்” என்றார் கிஷோர்.

“அப்ப சரி, தயாரிப்பாளர் கிடைச்சவுடனே அக்ரிமெண்ட் போட்டுக்கலாம். அப்ப நீங்க வந்து என்னைப் பாருங்க” என்று கூறினான்.

“அப்போ, ஓவராலா அக்ரிமெண்ட் வேணாம்னு சூட்சமமா சொல்றீங்க… அப்படித்தானே”? என்று ராகவ் கேட்க, அவன் அமைதியாகச் சிரித்து வைத்தான்.

“உங்க கூட டூயட் பாடின அந்தப் புதுப் பொண்ணோட பெயர் என்ன”? என்று கேட்க, அவன் “நத்தாஷா” என்று பதிலுரைத்தான்.

“அந்தப் பொண்ணுக்கும் கிரேட் ஃபியூச்சர் இருக்கு. இந்த ஒரே படத்துல எல்லாப் பாட்டும் ஒரே சிங்கர் பாடுறதைப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க”? என்று கேட்டான் ராகவ்.

“நல்லாத்தான் இருக்கும். இன்ஃபேக்ட் எனக்கும் அப்படி ஒரு ஐடியா இருந்திருக்கு. நார்த்ல இதுபோல புகழ்பெற்ற நடிகர்களுக்குப் பாடி இருக்காங்க” என்றான் கௌதம்.

“எஸ், எனக்கும் அப்படி ஒரு இன்ட்ரெஸ்ட் இருக்கு. லதா மங்கேஷ்கர், அவங்க ஒத்துக்குற எல்லாப் படத்திலும் முழுப் பாட்டையும் அவங்க மட்டும்தான் பாடுவாங்க. அவங்களுக்கு கம்பேனியனா நம்ம எஸ்.பி.பி பாடியிருக்காரு. நிறைய படங்கள் அவங்க ரெண்டு பேரோட காம்பினேஷன்ல வந்திருக்கு. அதெல்லாம் இன்னும் பல பேரோட மொபைலில் இடம்பெற்றிருக்கக் கூடிய அற்புதமான பாடல்கள்.”

“அதுபோல நானும் ஒரு ட்ரெண்டை சவுத்ல கிரியேட் பண்ணலாம்னு நினைக்கிறேன். அதுக்கு உங்களோட வாய்ஸ் பெர்ஃபெக்ட்டா இருக்கும். என்னோட ஃபேஸுக்கும் எக்ஸ்பிரஷனுக்கும் உங்களோட வாய்ஸ் ரொம்ப நல்லா சிங்காகுதுன்னு எனக்குத் தோணியிருக்கு. நிறைய பேர் என்கிட்ட இதைச் சொல்லவும் செஞ்சிருக்காங்க. லதா மங்கேஷ்கர் – எஸ்.பி.பி மாதிரி இந்த சவுத்துல, கௌதம் – நத்தாஷா இவங்க ரெண்டு பேரோட காம்பினேஷன்ல வர பாடல்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும். மார்க் மை வேர்ட்ஸ்” என்று கூறினான் நாயகன் ராகவ்.

அதைக் கேட்கும்போது அவன் மனதிலும் சாரலடித்தது.

‘ஆனால், அப்படிப் பாடினால் அது மற்றவர்களுக்குத் தேவையில்லாத சந்தேகத்தை எழுப்பும்’ என்று நினைத்தான்.

அவர்கள் இருவரின் காம்பினேஷனில் உருவான பாடல் உண்மையில் நன்றாக இருந்தது. இதுவரை அவனுடன் டூயட் பாடிய பெண்களை விட, இவளின் குரல் அவன் குரலுக்குப் பொருந்துவது போல அவனுக்கும் தோன்றியிருக்கிறது. இன்றல்ல, எப்பொழுதோ தோன்றிய சிந்தனைதான் அது.

“சரி, எங்க படத்துல பாடின சிங்கர்ஸ் எல்லாரையும் பார்க்கலாமா? முக்கியமா உங்க கூட சேர்ந்து டூயட் பாடின அந்தப் பொண்ண அந்தப் பொண்ணையும் பாக்கணும். நீங்கதான் அக்ரிமெண்ட் போட மாட்டேன்னு சொல்லிட்டீங்க, அட்லீஸ்ட் அந்தப் பொண்ணுகிட்டயாவது அக்ரிமெண்ட் வாங்கிக் கொடுங்க. என்னுடைய எல்லா படத்திலும் நீங்களும் அந்தப் பொண்ணும் பாடணும்” என்றான் ராகவ்.

“என்னை மீறி என்னோட ட்ரூப் மெம்பர்ஸ் யாரும் போக மாட்டாங்க. அவங்க உங்களோட படத்துக்குப் பாடுவாங்க, அதுக்கு நான் கேரண்டி கொடுக்கிறேன். ஆனா, யாருமே அக்ரிமெண்ட்ல சைன் போட மாட்டாங்க.”

“நீங்க சொன்னா கூட போட மாட்டாங்களா”?

“கண்டிப்பா நான் சொன்னா போடுறதுக்கு வாய்ப்பிருக்கு, ஆனா நான் சொல்ல மாட்டேன். அவங்களோட முன்னேற்றம்தான் எனக்கு முக்கியம். ஆனா அதுல யாரையும் பாகுபாடு பார்க்கக் கூடாது, இது இங்க எழுதப்படாத ரூல்ஸ். உங்க படத்துக்கு நீங்க அப்படி ஆசைப்படுறீங்கனா அதைக் கண்டிப்பா நாங்க பண்ணிக்கொடுப்போம். தயாரிப்பாளர் கிடைச்சு படம் கன்பார்ம் ஆயிடுச்சுன்னா, உங்க படத்துக்கு மட்டும் அப்படி ஒரு அக்ரிமெண்ட் போட்டுக்கலாம். ஆனா அந்தப் படத்துக்கு மட்டும்” என்றான்.

ஒரு படம் என்றால் அப்படி செய்யலாம் என்று தோன்றியது. அதுவும் நடிகரே அப்படி கேட்கும் போது, தன் ஆசைக்காகவும் படம் முழுவதும் அவர்கள் இருவரின் பாடல்கள் மட்டுமே இருப்பது போல பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தான் கௌதம்.

“அந்தப் பொண்ணு உங்களை மீறி வெளியே போயிடுச்சுனா என்ன பண்ணுவீங்க கௌதம்? குரல் ரொம்ப அருமையா இருக்கு. நீங்களும் அந்தப் பொண்ணும் இப்ப சென்சேஷனலா மாறியிருக்கீங்க. ஸ்பெசிபிக்கா அந்தப் பொண்ணைப் பத்தி எப்படி இவ்வளவு கான்ஃபிடென்ட்டா சொல்றீங்க”? என்று கேட்டான்.

“என்னோட ட்ரூப் மெம்பர்ஸ் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. அப்படியே மீறி வெளியே போனாலும் எனக்குப் பிரச்சினை இல்லை. அவங்களை வளர்த்துவிடணும்னுதான் நினைச்சேன், இப்ப வளர்த்துவிட்டுட்டேன். யார்கிட்ட வேணாலும் அவங்க போய் வேலை செய்யலாம். பட் ஐ அம் டேம் ஷ்யூர் போக மாட்டாங்க” என்றான்.

‘இதுபோல ஒரு சிலரை பேசிப் பேசியோ அல்லது பயமுறுத்தியோ, எமோஷனல் பிளாக்மெயில் செய்தோ தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும். ஆனால் இவனைப் பேசிக் கரைக்க முடியாது’ என்று தோன்றிவிட, “சரி, அடுத்த படத்துப் பூஜைக்குத் தேதியைக் குறிச்சுட்டு, நான் இங்க வருவேன்” என்று கூறினான் ராகவ்.

அவனும் சம்மதம் தெரிவிக்க, அவர்கள் படத்திற்குப் பாடல் பாடிய மற்ற பாடகர்களைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டார்கள். தன் காரியதரிசியின் உதவியோடு அவர்களைத் தன் கேபினுக்கு வர வைக்க எண்ணி அவன் அலைபேசியை எடுத்தான். ஆனால் அவர்களோ, கீழேயே சென்று பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார்கள்.

வேறு வழியில்லாமல் அவர்களை அழைத்துக்கொண்டு மின்தூக்கியின் வழியாக வெளியே வந்தான்.

“இவன் என்ன ஓவரா பண்றான் கிஷோர்?? நாம நேர்ல வந்து, இவ்வளவு தூரம் பேசியும் இறங்க மாட்டேன் என்கிறானே”?

“இப்ப ட்ரெண்டிங்காயிட்டு இருக்கான். அதனால கையில பிடிக்க முடியாது. பான் வித் கோல்டன் ஸ்பூன்தான். ஆனாலும் எல்லாத்தையும் உதறிவிட்டு தன் உழைப்பாள உயர்ந்திருக்கான். சோ அந்த திமிரு இருக்கத்தான் செய்யும்” என்றார் கிஷோர்.

“மத்த விஷயங்களுக்கு எப்படி”?

“ம்ம்ஹூம், அதுக்கும் வேலைக்காக மாட்டான். ரொம்ப ஸ்ட்ரிக்ட், ரொம்ப நல்லவன். எதுக்கும் இறங்கி போக மாட்டான்.” என்றார் கிஷோர்.

 அவர்கள் என்னதான் சிறு குரலில் பேசிக்கொண்டாலும், அவனுக்கு பட்டும் படாமல் கேட்டது. அவர்களை விட்டு சற்று முன்னால் விலகி இருந்தவன். தனக்குள்ளாக சிரித்துக்கொண்டான்.

முதல் தளத்திற்கு வரும்போதும், பெரிய ஹீரோவைப் பார்த்ததும் நிறைய பேர் ஆர்வமாக அவனைப் பார்த்து நின்றனர். சிலர் கையொப்பம் வாங்கத் துடித்தனர். பெருமிதமாக எல்லோருக்கும் கையெழுத்திட்டு அவர்களைத் தாண்டிக் கொண்டு சென்றான் ராகவ்.

அந்த ரெக்கார்டிங் ரூம் நான்கு தடுப்புக் கண்ணாடிச் சுவர்களால் கட்டமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொருவரும் அதில் ரெக்கார்ட் செய்து கொண்டிருக்க, அதை அமர்ந்து பார்ப்பது போல ஒரு பெரிய ஹாலும் அதில் சோபாக்களும் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இவர்கள் உள்ளே நுழைந்தவுடன் கௌதம் அங்கிருந்த ஒலிபெருக்கியின் உதவியோடு அனைவரையும் வெளியில் வரச் சொன்னான். அந்தப் படத்தில் பாடியவர்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினான். ஆனால், நத்தாஷா மட்டும் அங்கு இருந்திருக்கவில்லை.

“அந்தப் பொண்ணு இல்லையா”? என்று ராகவ் கேட்க.

“நத்தாஷா எங்க ஸ்ரீதர்”? என்று கேட்டான் கௌதம்.

“காபி குடிக்கப் போயிருக்காங்க. ஐ திங்க் பிரீத்தியும் கூட இருக்காங்கன்னு நினைக்கிறேன். இருங்க கௌதம், அவங்களை அழைச்சிட்டு வரச் சொல்றேன்” என்றான் ஸ்ரீதர்.

அப்பொழுது பேசிச் சிரித்தபடி அந்தப் பெரிய கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த இரு பெண்மணிகளின் மீதும் அனைவரின் பார்வையும் சென்று நின்றது.

ப்ரீத்தி ராகவைப் பார்த்துக் கண்களை விரித்து, வாயைப் பிளந்து நின்றுவிட்டாள்.

கிட்டத்தட்ட நத்தாஷாவின் நிலையும் அதுதான். இதுவரை திரைப்படங்களில் மட்டும் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெரிய நடிகன் அவர்கள் முன்னால் நிற்பதை அவர்களால் நம்ப முடியவில்லை.

“ஏய் நட்டு, என் கையை கொஞ்சம் கிள்ளேன்” – கல்லூரியில் படிக்கும் ப்ரீத்தி மீண்டிருந்தாள்.

ஆனால், அதற்குள் கௌதம் அவளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். “ஷி இஸ் நத்தாஷா, அவர் நியூ சிங்கர்” என்றான்.

அவன் குரலில் துணுக்குற்று, வேகமாக அவன் எதிரில் வந்து நின்றவள், “வணக்கம் சார்” என்று கரம் குவித்து புன்னகைத்தாள்.

அதில் இயக்குநர் மட்டுமல்ல, நிறைய அழகிகளைப் பார்த்துக்கடந்து வந்த அந்த நாயகனும் சொக்கித்தான் போனான்.

அவளின் அந்த வெகுளித்தனமான இயல்பைக் கௌதமின் கண்களும் ரசித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!