Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

76. Rythm - ரிதம் சரிகமபதநிContest Stories 2026

ரிதம் 24

ரிதம் 24

“ப்ரீத்தி அக்கா, நீங்க கௌதம் சாரைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?” கேட்டுவிட்டு அவளை ஆழம் பார்த்தாள் ராகினி.



Advertisement

“கல்யாணத்துக்கு முன்னாடி நினைக்கலாம்டி, இப்ப அவரைப் பத்தி நினைக்கக் கூடாது,” சொல்லிக்கொண்டே தன் வேலையைப் பார்த்தாள் ப்ரீத்தி.

“தோடா, ஆசையை பாரு? நான் என்ன கேட்கிறேன், நீங்க என்ன பதில் சொல்றீங்க?? கௌதம் சார் நல்லவரா இல்லையான்னு கேட்டேன். அவரோட கேரக்டர் பத்தி, குணத்தைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்று கேட்டாள்.

Advertisement

Advertisement

“இப்படித் தெளிவா கேட்டுத் தொல? நல்லவர்தான். அப்ப எப்படி இருந்தாரோ அப்படியேதான் இப்பயும் இருக்காரு. துளிகூட கர்வமில்ல, ஆணவமில்ல, பணத் திமிரில்ல, பகட்டில்ல, பேரும் புகழும் வந்ததுக்கப்புறம் கூட தலைக்கனம் இல்லாம இருக்காரு. எல்லாத்துக்கும் மேல மத்தவங்களுக்கு உதவி பண்ணனுன்ற நல்ல குணம் இருக்கு. உன் அக்கா இப்ப வச்ச நம்பிக்கையை முதலில் வச்சிருந்தா?? அவள் வாழ்க்கை நல்லா இருந்திருக்கும். இந்தக் கல்யாணம் வேண்டாம், உனக்குன்னு பெரிய எதிர்காலம் காத்துட்டிருக்குன்னு நானும் நிறைய அறிவுரை சொன்னேன். ஆனா அவள் சுத்தமா கேட்கல. கல்யாணத்தை நிறுத்தச் சொல்லி நீ கூட சொன்னதா சொன்னாள். ஆனா எல்லாத்தையும் விட அப்பா அம்மா முக்கியம்னு நினைச்சாள். அவங்களோட கௌரவம் முக்கியம்னு நினைச்சாள். அப்படியெல்லாம் நினைச்சவளுக்குக் கடவுள் என்ன கொடுத்திருக்காரு பாரு?? இந்த உலகம் நல்லவங்களுக்குச் சோதனைகளை மட்டும்தான் வச்சிருக்கு. கெட்டவங்களுக்குத்தான் வாரி வழங்குது,” என்று விரக்தியாகக் கூறினாள் ப்ரீத்தி.

“அப்படியெல்லாம் இல்லக்கா, என்னைப் பொறுத்தவரைக்கும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிடுச்சுன்னு நினைக்கிறேன்.”

Advertisement

“நீங்க நல்லவங்கதான், ரமேஷ் அண்ணனும் நல்லவர்தான். அதனாலதான் கடவுள் உங்க ரெண்டு பேருக்கும் நல்ல வாழ்க்கையைக் கொடுத்திருக்காரு. நீங்க சொல்றபடி பார்த்தா கௌதம் சாரும் நல்லவர்தான். நிறைய பேருக்கு உதவி பண்றாரு. அவருக்கும் கடவுள் நல்ல வாழ்க்கையைக் கொடுப்பார்தானே?” என்றாள் ராகினி.

“நீ சொல்றதை நான் ஒத்துக்குறேன். ஆனா உன் அக்காவோட வாழ்க்கை?? அதை இந்த கடவுள் எப்படி சரி செய்ய போறாரு?? அவளோட நல்ல குணத்துக்கு, அவளும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழத் தகுதியானவள்தானே?? பிறகு ஏன் கடவுள் அவளுக்கு நல்ல வாழ்க்கையைக் கொடுக்கல?” ப்ரீத்தி பேசுவதில் அவளுக்குத் தன் தோழியின் மீது இருந்த அன்புதான் தெரிந்தது ராகினிக்கு.

நல்ல துணை கிடைப்பது மட்டுமல்ல, நல்ல தோழமையும் உறவுகளும் கிடைப்பது கூட வரம்தான். அக்காவிற்கு நல்ல துணை கிடைத்து இருக்கிறது; அதன் வழியாக நல்ல எதிர்காலமும் கிடைத்திருக்கிறது. மீதி இருப்பது அவளுக்கு ஏற்ற சிறந்த துணையைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பது. தனது படிப்பு முடிந்தவுடன் அதைத்தான் கையில் எடுப்பேன் என்று மனதினுள் நினைத்துக்கொண்டவள்,

“நீங்க அவங்களோட ஆம்பிஷனைத் தொடர்றதுக்கு வழிவகுத்துக் கொடுத்தீங்க. உதவி பண்ணியிருக்கீங்க, அக்காவோட எதிர்காலத்தை நல்வழிப்படுத்தியிருக்கீங்க. நான் அவங்களுக்கு ஒரு நல்ல துணையைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பேன் அக்கா. அதுக்கு வலைவீசித் தேடுற மாதிரி இருக்கும். பரவாயில்லை நான் தேடுவேன்,” என்று திடமாகக் கூறினாள் ராகினி.

“நானும் அதுக்கு உறுதுணையாக இருப்பேன்,” என்றபடி ராகினியின் கரத்தில் தன் கரத்தைக் கோத்துக்கொண்டாள் ப்ரீத்தி.

“சரி அதெல்லாம் இருக்கட்டும். இப்ப எதுக்குத் தேவையில்லாம கௌதம் சார் பத்தி கேட்ட?? அவர் குணம், கேரக்டர்னு எதுக்கு கேட்ட”? என்று ப்ரீத்தி புருவம் சுருக்கிக் கேட்டாள்.

ராகினி சுற்றும் முற்றும் பார்வையைச் செலுத்திவிட்டு, யாரும் இல்லாததை உறுதிப்படுத்திக்கொண்டு, “நீங்க சொல்றபடி பார்த்தா கௌதம் சார் நல்லவரு. அவர் அக்காவைப் பார்க்கிற விதத்துல எனக்கு வித்தியாசம் தெரியுது,” என்று அவள் முடிக்கவில்லை.

“தப்பா பேசாதடி, அவர் ரொம்ப நல்லவர். அவர் பார்வையை நான் கவனிச்சிருக்கேன்,” என்று படபடத்தாள் ப்ரீத்தி.

“ஐயோ அக்கா, சொல்ல வர்றதை முழுசா சொல்ல விடுங்க?? நம்மகிட்ட அவர் பேசுறதுக்கும் அக்கா கிட்ட பேசுறதுக்கும், பார்வை பரிமாறுவதற்கும் நிறைய வித்தியாசம் தெரியுது எனக்கு. கண்டிப்பாக அக்காவுக்கும் தெரிஞ்சிருக்கும். ஆனா அவங்களும் அவர் மேல கண்மூடித்தனமான நம்பிக்கை வச்சிருக்காங்க. அதனால அவங்களுக்கும் தப்பா நினைக்கத் தோணலையோ என்னமோ?? நீங்க கொஞ்சம் கவனிச்சுப் பாருங்க. அப்ப உங்களுக்கும் ஏதாவது வித்தியாசம் தெரியும். அப்படித் தெரிஞ்சா வந்து என்கிட்ட சொல்லுங்க. இல்லன்னா நான்தான் ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டேன்னு நினைச்சுக்கிறேன்,” என்றாள்.

“ராகினி, நீ புரிஞ்சுதான் பேசுறியா?? அவர் பெரிய இடம், அவரோட ஸ்டேட்டஸ்க்கு?” என்று வார்த்தையை முடிக்காமல் நிறுத்தியவள்,

“நத்தாஷா ரொம்ப நல்லவள், அழகானவள். ஒரு நல்ல துணையை அடையறதுக்கும் தகுதியானவள். ஆனா அவள் வாழ்க்கையில நடந்த கசப்பான அனுபவங்களை எல்லாம் நான் கௌதம் சார்கிட்ட சொல்லியிருக்கேன். அதுமட்டுமில்ல, எனக்குத் தெரிஞ்சதை விடவும் அவர் நிறைய விஷயங்கள் தெரிஞ்சிட்டிருக்காரு. அப்படி இருக்கும்போது அவரு நத்தாஷாவை???” என்று மீண்டும் தயங்கி நிறுத்தியவள், “அதுக்கு வாய்ப்பில்லைன்னுதான் நினைக்கிறேன்,” என்று முடித்தாள்.

“நீங்க சொல்ல வர்றதெல்லாம் எனக்கு ஒன்னும் புரியாம இல்ல?? ஆனா நீங்க கொஞ்சம் கவனிச்சுப் பார்த்தீங்கன்னா உங்களுக்கு ஏதாவது தெரியவரும். இதோட எனக்குக் காலேஜ் தொடங்கிடும், அதுக்கப்புறம் என்னால இப்படி கவனிக்க முடியாது. அக்கா கூட நீங்கதான் அடிக்கடி போறீங்க. அதனால உங்களுக்குக் கவனிக்கிறதுக்கு வாய்ப்புக் கிடைக்கும். கொஞ்சம் கவனிச்சு மட்டும் பாருங்க, இல்லன்னா விட்டுடலாம்,” என்றாள் ராகினி.

சம்மதமாகத் தலையாட்டிவிட்டு வந்தாலும் ப்ரீத்திக்கு அது யோசனையாகவே இருந்தது. அவ்வளவு பெரிய பணக்காரன், எதிலும் குறைவில்லாதவன், நத்தாஷாவின் அழகிற்காக மட்டும் அவளை விரும்புவானா?? அப்படி இல்லை என்று நினைத்தாலும், தவறாக எண்ணவும் அவளால் முடியவில்லை.

‘ஆனால் இந்த ராகினி என்ன சொல்ல வருகிறாள்? அவள் கூறுவதை எடுத்துக்கொள்வதா, அல்லது அசட்டை செய்வதா?? ஜஸ்ட் கவனிக்க மட்டும்தானே சொல்கிறாள், அதைச் செய்வதில் தனக்கென்ன ஆகிவிடப்போகிறது? பார்க்கலாம். கவனித்துப் பார்க்கலாம். இதற்காகவே செல்லலாம்’ என்று நினைத்தவளுக்கு. மாமனாரின் கெடுபிடி இப்பொழுது சற்று அதிகமாகவே இருந்தது.

மாதங்கள் செல்லச் செல்ல, “குழந்தைக்காக முயற்சி செய்யுங்கள்” என்ற பேச்சை ஜாடைமாடையாகப் பேசிக்கொண்டிருப்பவர், இப்பொழுது நேரடியாகத் தன்னிடமும் கணவனிடமும் பேச ஆரம்பித்துவிட்டார். இதற்கு மேல் தான் அடிக்கடி வெளியில் சென்று வந்தால், அது நத்தாஷாவிற்குமே பிரச்சனையாகிவிடும்.

யாரும் இல்லாத குடும்பம் என்று நல்ல மனதோடுதான் இருப்பதற்கு இடம் தந்திருக்கிறார்கள். ரமேஷைப் பொறுத்தவரைப் பிரச்சனை இல்லை. ஆனால் அவனுடைய தந்தை எதிர்பார்க்கும் விஷயங்கள் தடைப்பட்டுக்கொண்டே செல்லும்போது, அது மற்றவர்களின் மீது கோபமாகத் திரும்ப வாய்ப்பிருக்கிறது.

 அதனால் அதையும் அவள் கவனித்துத்தானாக வேண்டும். அதே சமயத்தில் ராகினியின் பேச்சை உதாசீனப்படுத்தாமல் அதையும் கவனிக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டவள், ‘ராகினி யாரிடமும் இதைப்பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று சொல்லியிருப்பதால்’ இதைப் பற்றி ரமேஷிடம் கூடப் பகிர்ந்து கொள்ளவில்லை.

ஆனால் அவளுக்கு ஒன்றும் பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை. அவள் கவனித்த வரையில் எதுவும் தவறாகவும் தெரியவில்லை. அவர்கள் தேவையில்லாமல் சந்தித்துக்கொள்வதே இல்லை; மிக மிக அரிதாகத்தான் சந்தித்துக்கொண்டார்கள்.

 ‘ஒருவேளை காதல் இருந்தால் பார்க்க வேண்டும், பேச வேண்டும், அவளோடு நேரம் செலவழிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் இருக்கும் அல்லவா?? ராகினி எதையோ தவறாகப் புரிந்து கொண்டு பிதற்றுகிறாள். தன் அக்காவின் மீது அன்பு இருப்பதனால் அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்காதா என்று எதையோ உளறிக்கொண்டிருக்கிறாள்’ என்றுதான் நினைத்தாள் ப்ரீத்தி.

……

அன்று நத்தாஷா, கௌதமுடைய காரியதரிசியிடம் கௌதமைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டாள். அவள் அதைக் கௌதம் காதிற்குக்கொண்டு செல்லும்போது, வேலைகள் இருந்தபோதும் அவளை உடனே அழைத்து வரச் சொன்னான்.

அவளும் கதவைத் தட்டிவிட்டு அவன் கேபினில் நுழைந்தாள்.

“வாட் ஏ சர்ப்ரைஸ்? அன்னைக்கு வீட்டுக்கு வந்ததோடு சரி, அதுக்கப்புறம் எந்தப் பேச்சுக்களும் இல்ல, ஒரு ஹாய் – பாய் கூட இல்ல, வாட்ஸப்ல மெசேஜ் கூட இல்ல. ரொம்ப நாள் கழிச்சு மேடமுக்கு என் ஞாபகம் வந்திருக்கு போல?” என்று கேட்டு வைத்தான்.

“அப்படியெல்லாம் இல்ல சார். எனக்குப் புதுசா வாழ்க்கை அமைத்துக் கொடுத்த உங்களை நான் எப்படி சார் மறப்பேன்? அதுவும் உங்க அகாடமிக்கு நான் வரும்போது உங்களைப் பத்தி நினைக்காம இருக்க முடியுமா?? ஆனா நீங்க கம்போசிங்ல ரொம்ப பிஸியா இருந்தீங்க. அடுத்தடுத்துப் படங்கள் கிடைச்சிருக்கு, அதுக்கு முதல்ல வாழ்த்துக்கள்,” என்றவள் பேசும்போதே, அவள் கையில் கொண்டு வந்திருந்த பொருளைக் கவனித்தான்.

“தேங்க்ஸ், முதல்ல உட்காரு,” என்று அவன் கவனிப்பதை அவளும் கவனித்துவிட்டாள்.

“வந்து சார், இது உங்களுக்காகத்தான் கொண்டு வந்தேன். இதுவரைக்கும் மத்தியானம்தான் வந்துட்டுப் போயிட்டு இருந்தேன், இன்னைக்குத்தான் காலையில வருவதற்குச் ஷெட்யூல் போட்டிருந்தாங்க. அதான் உங்களுக்கு இதைச் செஞ்சு கொண்டு வரணும்னு தோணுச்சு,” என்றபடி டேபிளின் மீது லஞ்ச் பேக்கை எடுத்து வைத்தாள்.

“ரியலி சர்ப்ரைஸ்தான். எனக்காகச் செஞ்சு கொண்டு வந்திருக்கியா?? உண்மையிலேயே எனக்கு அது பெரிய கிப்ட்தான். அப்ப நாம ரெண்டு பேரும் ஒண்ணா லஞ்ச் சாப்பிடலாமா?? கவலைப்படாதே, அம்மா கூட இருப்பாங்க,” என்றான் கௌதம்.

“இல்ல சார், நான் எப்படியும் இதைச் சாப்பிட மாட்டேன். வீட்டுக்குப்போய்த்தான் சாப்பிடுவேன். இது உங்களுக்காக மட்டும்தான், நீங்க அம்மாகூட சேர்ந்து சாப்பிடுங்க,” என்று அவள் கூறும்போது, அவன் புருவம் சுருங்க, அந்தப் பேகைத் தன் புறம் இழுத்து அதைத் திறக்கும்போதே வாசனை தூக்கலாக இருந்தது.

முகர்ந்துகொண்டே அவளை நிமிர்ந்து பார்த்தவன், “நான்-வெஜ்ஜா?” என்று கேள்வி எழுப்பினான். அவள் ஆமாம் என்று தலையாட்டினாள்.

“மட்டன், கரெக்டா?” டிபன் பாக்ஸைத் திறந்து கொண்டே அவன் கேட்டிருக்க, அவள் ஆமாம் என்று புன்னகை பூத்தாள்.

“எனக்காகச் செஞ்சு கொண்டு வந்தியா?” அவன் குரல் இறங்கி ஒலித்தது, அதில் அவ்வளவு நெகிழ்வு இருந்தது.

“சார் உங்களுக்குப் பிடிக்கும்னுதான் செஞ்சேன். அன்னைக்கு உங்க வீட்ல நீங்க மட்டன் நல்லா சாப்பிட்டீங்க. எனக்கு அதெல்லாம் சமைக்கத் தெரியாது, அன்னைக்குத்தான் நானே ஃபர்ஸ்ட் டைம் சிக்கன் செஞ்சேன். இன்னொரு வாட்டி உங்களை வீட்டுக்கு அழைத்து மட்டன் செஞ்சு கொடுக்கலாம்னு யோசிச்சேன், ஆனா ரொம்ப பிஸியா இருந்தீங்க, அதனால கூப்பிடல. சரி, ஏன் செஞ்சு இங்க கொண்டு வரக்கூடாதுன்னு யோசிச்சேன்,” என்று அவள் பேசிக்கொண்டிருக்க, அவன் அவளையே ஆழமாகப் பார்த்தான்.

அந்தப் பார்வையின் வீரியத்தைத் தாங்க முடியாமல் அவள் தலை கவிழ்ந்தாள்.

‘தப்பா நினைச்சுட்டாங்களோ’ என்று மனதினுள் பரிதவித்தாள்.

“சார் அப்ப நான் கிளம்புறேன். ஆண்ட்டி வந்தா நான் கேட்டதா சொல்லுங்க, டேஸ்ட் பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லச் சொல்லுங்க. எனக்கு ப்ராக்டிஸ் முடிஞ்சிருச்சு, நான் வீட்டுக்குத்தான் கிளம்பப் போறேன்,” என்றபடி நேரத்தைப் பார்த்துக்கொண்டே கூறினாள்.

அவன் சி. சி. டிவி பார்த்துவிட்டுத் தன் தாய் வருவதை உறுதி செய்துகொண்டு, “ஒரு ஃபைவ் மினிட்ஸ் இரு நத்தாஷா, அம்மா வந்துகிட்டிருக்காங்க,” என்றான்.

அவன் அப்படிக் கூறும்போது செல்லவும் முடியாது, அதே சமயத்தில் அங்கேயே அவளால் காத்திருக்கவும் முடியாது. வெளியில் அமர்ந்திருப்பதாகச் சொல்லிவிட்டு வந்து, அங்குப் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்துவிட்டாள்.

‘அவர் ஏன் அப்படிப் பார்க்கிறார்? நீதான் கொஞ்சம் அதிகப்படியா நடந்துக்கிற நத்தாஷா. அவர் மட்டன் சாப்பிட்டா உனக்கென்ன, சிக்கன் சாப்பிட்டா உனக்கென்ன? அதைச் செஞ்சு கொடுக்கிறதுக்கு அவங்க அம்மா இருக்காங்க, நீ எதுக்காக மெனக்கெட்டு வாங்கிட்டு வந்து செஞ்சு கொடுக்கிற? அதுவும் இந்த வாட்டி ரமேஷ்கிட்ட எல்லாம் சொல்லல, நீயே கடைக்குப்போய் வாங்கிட்டு வந்த. அந்த இடத்துல அதை கட் பண்ணும்போது ரத்தம் வர்றதைப்பார்த்து உன் நெஞ்சு எவ்வளவு துடிச்சது. ஆனாலும் கண்ணையும், மூக்கையும் மூடிகிட்டுக் வெயிட் பண்ணி வாங்கிவந்து சமைச்சுட்டு வந்திருக்க, ஏன் பண்ற’? என்று அவள் மூளை கேள்வி கேட்டது.

‘எனக்காக இத்தனை செய்பவருக்குச் சமைத்துக் கொடுக்கலாம் என்று ஆசைப்பட்டேன்’ என்று அவள் சமாதானம் கூறிக்கொண்டாலும், அந்தச் சமாதானத்தை அவள் மூளை ஏற்க மறுத்துக்கொண்டிருந்தது.

அதற்குள் மகாலட்சுமி வந்துவிட, “ஹேய் நத்தாஷா, வாட் ஏ சர்ப்ரைஸ்! உள்ள போகலாம் வாம்மா,” என்றபடி அவளைக் கையோடு உள்ளே அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு சர்ப்ரைஸாக உணவுக்கூடை வரவேற்றது.

“இது யாரோட லஞ்ச் பேக் கௌதம்?” என்று கேட்டபடி அவர் கொண்டு வந்த லஞ்ச் பேகையும் மேலே எடுத்து வைத்தார்.

“நத்தாஷா எனக்காக, ஐ மீன் நமக்காக மட்டன் செஞ்சு கொண்டு வந்திருக்காள். சாப்பிட்டுப் பார்த்துட்டு டேஸ்ட் எப்படி இருக்குன்னு நீங்க சொல்லணுமாம், நான் சொல்லத் தேவையில்லையாம்,” என்று நக்கலாகக் கூறினான்.

“ஐயோ அப்படியெல்லாம் இல்லை சார். ஜஸ்ட் ஆண்ட்டி வர்றதுனால அவங்களைக் கேட்கச் சொன்னேன், அவ்வளவுதான்,” என்றாள் அவள்.

அவள் முன்பாகவே அவனுடைய டிபன் பாக்ஸைத் திறந்து, அதில் இருந்து எடுத்துச் சுவை பார்த்தான். சப்புக் கொட்டி, கை விரல்களைக் கூடத் தன் வாய்க்குள் திணித்து ருசி பார்த்தான்.

அவளைப் பார்த்துக்கொண்டே தன் தாயிடம் நீட்டினான். அவரும் எடுத்துச் சுவை பார்த்துவிட்டு, “அற்புதமாக இருக்கிறது,” என்றார்.

ஆனால், ‘நீ எதற்காக என் மகனுக்காக இவ்வளவு சிரமப்பட்டுச் செய்கிறாய்?’ என்று அந்தத் தாய் கேட்கவில்லை. இம்முறை அவனும் கேட்கவில்லை. மனதிற்குள் இருவருக்கும் ஒரு சாரல் மழை அடித்துக் கொண்டிருந்தது. அது எப்போது அதிகரிக்கும் என்று அவன் எதிர்பார்த்திருந்தான்.

ஆனால் அதற்கான காலம் இன்னும் கனிந்து வரவில்லை போல!

அவர்கள் வாழ்க்கையின் ரிதம் எப்பொழுது ஒன்றாக இணையும் என்று பார்க்கலாம்.

……..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!