Skip to content
Post Views: 58
ரிதம் 3
அவன் ஷூவில்தான் முதலில் அவள் பார்வை சென்றது. பிறகு அப்படியே அவனை அளவெடுத்துக்கொண்டு மேலே வந்தது.
தாடி அடர்ந்த முகம், கண்ணாடியும் இல்லை. மகாலட்சுமியின் ஒத்த உருவத்தில் இருந்தான். ஆறடி ஆண்மகன் திராவிட நிறத்துடன், ஆண் அழகனாகத் திகழ்ந்தான்.
“பயந்தீங்களா என்ன? யாராவது தப்பு பண்றவங்க சொந்த வீட்டுக்கு, அதுவும் அம்மா இருக்கிற வீட்டுக்குக் கூட்டிட்டு வருவாங்களா?” என்று கேட்டபடி படிகளில் இறங்கினான்.
Advertisement
அவர்களிடம் பதில் இல்லை. ஒருவர் மற்றொருவரின் முகத்தைப் பார்த்துக்கொண்டனர்.
“இல்ல, அம்மாதான் மகன் இருக்குற இடத்துக்குத் தனியா மேல அனுப்பி வைப்பாங்களா?” என்று கேட்டுக்கொண்டே அவர்கள் முன்பாக வந்து தோரணையாக நின்றான்.
நியாயமான கேள்விதான், அவர்களிடம் பதில் இல்லை.
Advertisement
“இல்ல சார், அவங்களை மட்டும் அனுப்புறதா, இல்ல நாங்க மூணு பேரும் வர்றதான்னு ஒரு சின்ன கன்ஃபியூஷன்” என்று அந்தச் சூழ்நிலையைச் சமாளித்தான் வாசு.
Advertisement
புன்னகையுடன் பிரீத்தியின் புறம் திரும்பினான். “நீங்கதான் அவங்களை வற்புறுத்தி அழைச்சிட்டு வந்திருக்கீங்கன்னு தோணுது?” என்றான்.
அவள் ‘ஆமாம்’ என்று அவசரமாகத் தலையாட்டிவிட்டுப் பிறகு, ‘ஈ’ என்று இளித்து வைத்தாள்.
அவள் காலை மிதிப்பதற்காகத் தேடிக்கொண்டிருந்தாள் நத்தாஷா.
Advertisement
“மேல என்னோட மியூசிக் ட்ரூப் இருக்கு. உங்களை மாதிரி இன்னும் பத்து பேர் மேல இருக்காங்க. இவங்க மட்டும் வரணும்னு அவசியம் இல்ல, ஃபர்ஸ்ட் டைம் சேர்ந்து வந்து இருக்கீங்க. எல்லாருமே மேல வந்து பார்க்கலாம். அதுக்கப்புறம் உங்க ஃபிரண்டுக்கு நம்பிக்கை இருந்தால் மட்டும் வந்தா போதும்” என்று அதே புன்னகையோடு கூறினான்.
தாடிக்குள் அந்தப் புன்னகை மறைந்திருந்தாலும், இப்பொழுது கண்ணாடி இல்லாததால் அவள் கண்களில் அந்தப் புன்னகை விழுந்தது.
“நீ இவங்களை மேல கூட்டிட்டுப் போப்பா. நான் எல்லாருக்குமே சாப்பிடறதுக்குக் கொண்டு வர்றேன்” என்றார் மகாலட்சுமி.
அவன் சரி என்று தலையாட்டிவிட்டுத் திரும்பினான். ஆனால் அவர்கள் நகர்வது போலத் தெரியவில்லை. “இன்னும் சந்தேகம் தீரலையா? வாங்க” என்று புன்னகையுடன் கூறினான்.
அவர்கள் தலையாட்டினார்கள். அவன் முன்னால் நடக்க, அவர்கள் பின்னால் நடந்தார்கள்.
“ஹாய் நட்டு, இவரு சிரிச்சா நல்லா இருக்காருல்லடி?” என்று பிரீத்தி கேட்க,
“சும்மா இருடி” என்று நத்தாஷா கூறுவதும் அவன் காதுகளில் தெளிவாகவே கேட்டது. உதடுகளில் இளநகையும் பூத்தது.
மேலே பெரியதாக ஒரு அறை. அந்த அறை வீட்டையே ஆக்கிரமித்து இருக்கும் என்று தோன்றியது. சற்று ஓரமாக இன்னொரு அறை தெரிந்தது.
அந்த அறைக்கதவைத் திறந்தான். அது சாதாரண கதவு போல அல்ல, ஆட்டோமேட்டிக் லாக்குடன் வலுவாக இருந்தது. அதைத் திறந்துகொண்டு உள்ளே சென்றவன், அவர்களை வரவேற்கும் விதமாய், கைகளை மடக்கி உள்ளே வரும்படி சைகை செய்தான்.
விளக்குகளால் ஒளிர்ந்துகொண்டிருந்த அந்த இடம் இன்ஸ்ட்ருமென்ட்களால் நிரம்பியிருக்க, அங்கு ஆட்கள் இருப்பது தெரிந்தது.
அவர்கள் முன்னால் நடக்க, வாசுவும் பின்னால் நடந்தான். கதவு தானாக மூடிக்கொண்டது. அந்த வெளிச்சத்தில் அங்கு இருப்பவர்கள் யாரென்று பார்த்தாள் நத்தாஷா.
அங்கு இருப்பவர்களில் ஒரு சிலரை எங்கோ பார்த்தது போல இருந்தது.
“வெல்கம் டு அவர் ஹோம்” என்று அவன் கூறியதும்,
புருவ முடிச்சுடன் திரும்பிப் பார்த்தாள் நத்தாஷா.
“ஐ மீன், எங்க ட்ரூப்புக்கு நீங்க இப்பதான் புதுசா வந்திருக்கீங்க. இது எங்களோட வீடு மாதிரி. வீடுன்னா கோயில் மாதிரி. எங்களோட உலகமே இதுதான். சோ, வெல்கம் டு அவர் வேர்ல்டுன்னு சொல்லலாம்” என்று அவர்களிடம் கூறியவன்,
மற்றவர்களின் புறம் திரும்பி, “ஹாய் காய்ஸ், திஸ் இஸ் நத்தாஷா. முந்தாநேத்து புரோகிராமில் பார்த்திருப்பீங்க” என்று கூற,
அவர்கள் தங்கள் கையில் இருந்ததை எல்லாம் வைத்துவிட்டு அவளை நோக்கி முன்னால் வந்தார்கள்.
“ரொம்ப நல்லா பாடுனீங்க. அதுலயும் ஸ்பெஷலா அந்த லாஸ்ட் பாட்டு, சான்ஸே இல்லை. பெண்குரல், ஆண்குரல்னு எங்கேயும் ஸ்ருதி மிஸ் ஆகலை. மேடை ஏறி அந்தப் பாடலை அப்படிப் பாடுவதற்கு ஒரு டேலண்ட் வேணும். அது உங்ககிட்ட இருக்கு. எப்படிப் பெண்குரல் இனிமையா இருக்கோ, ஆண்குரலும் ஓரளவுக்குத் தத்துரூபமா இருந்துச்சு. நீங்கதான் வெற்றி பெறுவீங்கன்னு நினைச்சேன்” மீண்டும் அதே புளித்துப்போன குரல்கள்.
“கமான் காய்ஸ், இதே வார்த்தையை அவங்க ஏற்கனவே கேட்டிருப்பாங்க. திரும்பியும் அதே தேய்ந்துபோன ரெக்கார்டு வேண்டாம். உங்களை அறிமுகப்படுத்திக்கங்க. அடுத்து என்ன பண்ணலாம்னு பேசலாம்” என்றான் அந்த நெடியவன்.
“கௌதம் சார், பக்கத்துல இருக்கவங்க யாருன்னு சொல்லவே இல்லையே?” என்று கேட்டான், முதல் வருட போட்டியில் இறுதிச் சுற்று வரை வந்து தோற்றுப்போன ஸ்ரீதர்.
இவ்வளவு நேரம் மூளையைக் கசக்கிப் பிழிந்து கண்டுபிடித்துவிட்டாள் பிரீத்தி.
“உனக்கு உன் கவலை. இவங்க நத்தாஷாவோட ஃபிரெண்ட், ஐ திங்க் பிரீத்தி. கரெக்டா?” என்று, ஸ்ரீதரிடம் ஆரம்பித்தவன் பிரீத்தியிடம் முடித்தான்.
“ஆமாம்” என்று தலையாட்டியவள், “நீங்க லாஸ்ட் இயர் கண்டஸ்டண்ட் ஸ்ரீதர் தானே?” என்று துள்ளலுடன் கேட்டாள் ப்ரீத்தி.
“ஆமாங்க, ஒரே ஒரு நல்ல விஷயம் என்னன்னா, அந்த ஸ்டேஜ்ல ஏறுனதுனால எங்க முகம் தெரியுது. ஆனா வெற்றியின் விளிம்புக்கு எடுத்துச் சென்று, தள்ளி விட்டுட்டாங்க.” ஏமாற்றம் அவன் குரலில் அப்பட்டமாகத் தெரிந்தது. அதை நத்தாஷாவால் சரியாகப் புரிந்துகொள்ள முடிந்தது.
இன்னும் இரண்டு பாடகர்கள் அதேபோல, அதற்கு முன்பாக இருந்த போட்டிகளில் அவளைப் போலவே வெற்றி விளிம்பில் தோல்வியுற்றவர்கள். இவள் ரசித்து வியந்து பார்த்த பாடகர்கள் எல்லாம் அங்கு இருந்தார்கள். மற்றவர்கள் எல்லாம் மியூசிக் ட்ரூப்பைச் சேர்ந்தவர்கள். அதாவது இன்ஸ்ட்ருமென்ட் வாசிப்பவர்கள்.
“நான் வெல்கம் டு அவர் ஹோம்னு சொன்னது, இவங்களோட இந்த ஜோதியில நீங்களும் இணைய விருப்பப்பட்டீங்கன்னா இணைந்துக்கலாம்” என்று அவன் கூறும்போது, அந்த அறையின் உள்ளே வித்தியாசமான ஒரு சத்தம் கேட்டது.
அதைத் தொடர்ந்து அறையைத் திறந்துகொண்டு உள்ளே வந்தார் மகாலட்சுமி. வேலைக்காரர்களின் கையில் ஜூஸ் ட்ரே இருந்தது. ஒரு தட்டில் கேக் துண்டுகள்.
எல்லோருக்கும் கொடுக்கப்பட்டது. அவளும் வாங்கிப் பருகினாள். பருகும்போதே சுற்றத்தை ஆராய்ந்து கொண்டே இருந்தாள். அவன் அதையும் கவனித்தான்.
“உங்களுடைய எச்சரிக்கை உணர்வை நான் வெகுவா பாராட்டுறேன். அது தப்பு கிடையாது. இன்ஃபேக்ட், பெண்களுக்கு முக்கியமானதும் கூட. உங்களுக்கு அப்ஜெக்ஷன் இல்லைன்னா உங்க ஃபிரெண்டும் கூட வரட்டும்” என்றான் அந்த நெடியவன்.
“நாங்க எல்லாம் காலேஜ் ஸ்டூடென்ட்ஸ். அதுவும் இங்க இல்ல, மதுரையில படிச்சுக்கிட்டிருக்கோம். இங்கே எங்களால் இருக்க முடியாது” என்று அவசரமாகக் கூறினாள் பிரீத்தி.
“ஓகே, அப்ப என்ன பண்ணப்போறதா ஐடியா?” என்று நத்தாஷாவைப் பார்த்துக் கேள்வி எழுப்பினான்.
அவள் உதட்டைப் பிதுக்கித் தெரியவில்லை என்றாள்.
“என்னைக்கு ஊருக்குப் போறீங்க?” என்று அவன் கேட்க,
அதற்கும் உதட்டைப் பிதுக்கித் தெரியவில்லை என்று கூறினாள் பிரீத்தி.
“இஃப் யூ டோன்ட் மைண்ட். இன்னும் டூ மன்த்ஸ் இருக்கு உங்களோட காலேஜ் முடிய, ஐ மீன் உங்களோட செமஸ்டர் முடிய. அடுத்த வருஷம் காலேஜ் சென்னையில ஜாயின் பண்றதுக்கு ஏற்பாட்டை நான் பண்றேன். ரெண்டு பேருக்கும் கூட பண்றேன். இங்கேயே படிச்சுட்டு ஈவினிங் டைம்ல இங்க பிராக்டிஸ் எடுத்துக்கலாம். நீங்க யோசிச்சு முடிவு பண்ணுங்க” என்றான் அந்த நெடியவன்.
அவள் சரி என்று தலையாட்டினாள். ஆனாலும் குழப்ப ரேகைகள் அவள் முகத்தில் அதிகமாக இருந்தது.
“நீங்க இன்னும் கன்ஃபியூஷன் ஸ்டேஜ்லதான் இருக்கீங்க. இன்னைக்கு ஒரு நாள் எங்ககூடவே டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க. அப்புறம் புடிச்சிருந்தா இங்க கண்டினியூ பண்ணலாம். ஓகே காய்ஸ், லெட்ஸ் ரெடி” அவளிடம் கூறிவிட்டு, அவள் பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்தவர்களிடம் கையை உயர்திக் கூறினான் கௌதம்.
“ஓகே” என்றபடி எல்லோரும் தங்கள் கட்டைவிரலை உயர்த்திக் காட்டினார்கள்.
அவர்களின் புறம் திரும்பியவன், “ப்ளீஸ் பீ சீட்டட்” என்று அங்கிருந்த சோபாவை பார்வையால் காட்டிவிட்டு, அவன் மைக்கை எடுத்துக்கொண்டு சென்றான்.
ஸ்ரீதரும் மைக்கைப் பிடிக்க, இருவரும் சேர்ந்து பாடலைப் பாடினார்கள்.
மேடையில் இரண்டு ஆண்கள் பாடிய போட்டிப் பாடல் அது. அதுதான் இவர்களும் ஆரம்பித்திருந்தார்கள்.
“என்னம்மா கண்ணு சௌக்கியமா?” என்று கௌதம் நத்தாஷாவைப் பார்த்துக்கொண்டே ஆரம்பித்தான்.
“ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்” என்று ஸ்ரீதர் பாடினான்.
அந்தப் பாடலை இருவரும் மாறி மாறிப் பாடிக்கொண்டிருந்தார்கள். பிரீத்தி வாயைப் பிளந்து நின்றுவிட்டாள். அவ்வளவு அருமையாக இருந்தது கௌதமின் குரல்.
ஸ்ரீதரின் குரலை அவள் ஏற்கனவே ரசித்திருக்கிறாள். இப்போது கௌதம் குரல் அவளை மெஸ்மரிசம் செய்யவல்லதாக இருந்தது. நத்தாஷாவின் நிலையும் அதேதான்.
‘என்ன மாதிரி குரல்? இவ்வளவு இனிமையான குரலா?’ என்று அதிசயித்தாள்.
ஆனால் இந்தக் குரலை அவள் எங்கோ கேட்டிருக்கிறாள். எங்கென்றுதான் பிடிபட மறுத்தது.
பாடல் முடியும்வண்ணம் டிரம் பீட் அதிகமாக ஒலிக்க, தன் சிந்தனை கலைந்து அவர்களைப் பார்த்தாள் நத்தாஷா.
அடுத்தது ஸ்ரீதரும் ஒரு பெண்ணும் பாடினார்கள்.
அதற்கு அடுத்தது, கௌதமும், அதே பெண்ணும் பாடினார்கள்.
அது முடிவடைந்து அந்தப் பெண் நடக்கும்போது, “மிஸ் நத்தாஷா, நீங்க இந்தப் பாட்டு பாடுங்க” என்று அவளை அழைத்தான் கௌதம்.
தானாக அவள் கால்கள் அவனை நோக்கிச் சென்றன.
அவள் தன் முன்னால் இருந்த லிரிக்ஸ் புத்தகத்தில் பாடலைப் பார்க்க, அதில் அவள் மேடையில் கடைசியாகப் பாடிய அதே பாடல் இருந்தது.
அவள் பாடல் என்னவென்று பார்க்கும்போதே மியூசிக் ஆரம்பிக்க, அவனும் பாடலை ஆரம்பித்துவிட்டான்.
“நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய். செங்கனி ஊறிய வாய் திறந்து, நீயொரு திருமொழி சொல்லாய். அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித் தரளம் நீர்வடியக் கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா?
அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித் தரளம் நீர்வடியக் கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா?” என்று முடித்துவிட்டு அவளைப் பார்த்தான்.
ஆனால் அவள் அடுத்துப் பாடாமல் வாயைப் பிளந்து அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
கையை உயர்த்திப் பாடச் சொல்லிக் கூறியவன், அப்பொழுதும் அவள் பாடாமல் இருப்பதை உணர்ந்து,
“என்ன ஆச்சு நத்தாஷா? எனிதிங் ராங்? நான் சரியா பாடலையா?” என்று அவளிடமே கேட்டான்.
அவள் சற்று நிலைப்படுத்திக்கொண்டு தலையை உலுக்கிக்கொண்டாள்.
“ஈஸி, ரிலாக்ஸ். முடியலைன்னா விட்டுடுங்க, ஒன்னும் பிரச்சனை இல்லை. ஐ திங்க் நீங்க இன்னும் அந்த கான்டெஸ்ட்ல இருந்து வெளியே வரலைன்னு நினைக்கிறேன். இந்த ஷோஸ் எல்லாம் அவங்களோட டி.ஆர்.பிக்காக நடக்கிறது. பட், உங்களோட வாய்ஸ் அப்படி கிடையாது. அதுல இருந்து வெளியே வந்து அடுத்தது என்னன்னு பாருங்க. இன்னைக்கு முடியலைன்னா பரவாயில்லை, ஒன்னும் பிரச்சனை இல்லை. நீங்க ரெக்கவர் ஆகுங்க, அப்புறம் பாடிக்கலாம். உங்களுக்கு எப்ப போரடிக்குதோ அப்ப நீங்க தாராளமாக் கிளம்பலாம்” என்று கூறினான் கௌதம்.
பிரீத்தி அவளை அவசரமாக நெருங்கி, “என்னடி, பாட வேண்டியதுதானே?” என்று கேட்டாள்.
அவள் நாக்கால் தன் உதடுகளை ஈரமாக்கினாள். “ஐ அம் ரெடி” என்று கூறினாள்.
“ஹுஹுஹூ” என்று மற்றவர்கள் ஒலி எழுப்ப, மீண்டும் அவன் கை உயர்த்த, அதே மியூசிக் வாசிக்கப்பட்டது.
ஆண் பாட வேண்டிய முதல் வரிகளை அவன் பாட ஆரம்பித்தான். அதற்கு அடுத்த பெண் வரிகளைப் பிசிறு இல்லாமல் அவள் பாடினாள் இப்போது.
இருவரின் குரல் பொருத்தம் அவ்வளவு இனிமையாக இருந்தது. அந்தப் படத்தில் பாடிய பாடகர்களை விட நன்றாக இருந்தது என்று சொல்லலாம். இருவரும் ஜோடி சேர்ந்து அந்தப் பாடலை முடித்தார்கள்.
ஆண் : அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித் தரளம் நீர்வடியக் கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா
பெண் : ஆ ஆஆ ஆஆஆ
ஆண் : நீயா
பெண் : ஆ ஆஆ ஆஆஆ
ஆண் : நீயா
பெண் : ஆ ஆஆ ஆஆஆ
ஆண் : நீயா
அங்கே அமர்ந்திருந்த அவனுடைய தாயும் எழுந்து நின்று கரகோஷத்தை எழுப்பினார்.
கண்களை மூடிப் பாடிக்கொண்டிருந்தவள் கண்களைத் திறந்தாள். அது ஒரு பெரிய அறையாக இல்லாமல், அவ்வளவு பெரிய ஆடிட்டோரியமாகவும், அங்கிருந்தவர்கள் எல்லாம் சொற்பமாக இல்லாமல் ஆயிரக்கணக்கில் மக்கள் இருப்பது போலவும் அவள் கண்ணில் வந்து மறைந்தது.
“வாவ் நைஸ், ரொம்ப அழகா பாடுனீங்க. முந்தாநேத்து இரண்டு குரலையும் பாடின உங்களோட வாய்ஸ்ல நான் என்னையே மறந்துட்டேன். நான் ஜட்ஜா இருந்திருந்தா, கண்டிப்பா உங்களுக்குத்தான் பிரைஸ் கொடுத்திருப்பேன். பட், அந்தப் புரோகிராம், அதுல பிரைஸ் வாங்கப் போறவங்க, அதுல யார் எந்த லெவலுக்கு வரணும்னு, இப்படி எல்லாமே ஏற்கனவே ஷெட்யூலானது. யாருக்கு பிரைஸ் தரணும்னு அவங்க ஏற்கனவே டிசைட் பண்ணிட்டுத்தான் புரோகிராமே ஸ்டார்ட் பண்ணுவாங்க. உன்னைப் போலத்தான் இவங்களும் ஃபைனல் வரைக்கும் கூட்டிட்டுப் போனவங்க. அதுக்கப்புறம் சின்ன அப்ரிசியேஷன் ரிவார்டு போல எதுவுமே இல்லாம வெளியே அனுப்பிட்டாங்க” என்று அவன் காட்டிய மூவரையும் அவளுக்கு நன்றாகவே தெரியும். இரண்டு பெண், ஒரு ஆண் என்று இருந்தார்கள்.
எவ்வளவு அழகாக ஏமாற்றப்பட்டிருக்கிறோம்! அதுவும் அலங்கரித்து, மேடை ஏற்றி, ஏமாற்றி இருக்கிறார்கள். எப்படிப்பட்ட ஏமாற்றம் இது? அவளுக்குத் தாளாமல் கண்ணீர் வந்துவிட்டது.
ஆனால் தன்னைச் சுதாரித்துக்கொண்டு உடனே துடைத்துக்கொண்டாள்.
“ஓகே ரிலாக்ஸ், ஜூஸ் எடுத்துக்கோங்க. அம்மா, லஞ்ச் ரெடி ஆயிடுச்சா?” என்று கேட்டுக்கொண்டே அவன் தன் தாயோடு வெளிநடப்பு செய்தான்.
error: Content is protected !!