Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

49. பிரியா முரளி - கண்ணாமூச்சி ஏனடா

கண்ணாமூச்சி ஏனடா… – 2

கண்ணாமூச்சி – 2 

“நிலா… நிலாம்மா…”

அந்தப் பழைய பாணி நடுத்தர வர்க்கத்து வீட்டின் கூடத்தில் ஓங்கி ஒலித்தது தங்கம்மாவின் குரல். அந்த வீட்டின் அச்சாணி, வங்கி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ரங்கநாதனின் இல்லத்தை அன்பால் கட்டி ஆளும் இல்லத்தரசி அவர்.

“காலேஜ் லீவு விட்டாலும் விட்டாங்க, இந்தப் பொண்ணு கால் தரையில பாவாது போல. எங்க போனான்னு தெரியலையே, இன்னுமா தோட்டத்துல செடிகளுக்குத் தண்ணி ஊத்திக்கிட்டு இருக்கா?”



Advertisement

பரபரப்பான சென்னை மாநகரத்தின் ஒரு அமைதியான பகுதியில், செடிகொடிகள் சூழ்ந்த ஒரு சிறிய தனி வீட்டில் வசித்து வந்தது ரங்கநாதனின் குடும்பம். காலை ஆறு மணி. மாநகரமே மெல்ல விழிக்கத் தொடங்கும் அந்த நேரத்தில், வீட்டைச் சுற்றியிருந்த தோட்டத்தில் செடிகளுக்குத் தண்ணீர் தெளிக்கும் மெல்லிய சத்தம் கேட்டது.

வெண்ணிலா… நம் நிலா. பெயருக்கேற்றாற்போல நகரத்து நள்ளிரவிலும் ஒளிரும் நிலவு தான் அவள். ஆனால், வானத்து நிலவை விட இவள் கொஞ்சம் சுட்டி. இந்தக் காலத்து நகரத்துப் பெண்கள் போல ஷார்ட்ஸ், ஜீன்ஸ் என்று அணியாமல், எளிமையான காட்டன் சுடிதாரில், வீட்டின் முன்புறம் வரிசையாக வைக்கப்பட்டிருந்த தொட்டிகளுக்கும், தரையில் படர்ந்திருந்த செடிகளுக்கும் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள். அவளது கண்கள் அறிவின் கூர்மையைக் காட்டினாலும், அவளது புன்னகையில் ஒரு மழலையின் கள்ளமில்லா குழந்தைத்தனம் இருந்தது.

“ஏன் நிலா குட்டி, இன்னுமா செடிகளுக்குத் தண்ணி ஊத்தி முடிக்கலை? அப்பா வாக்கிங் போயிட்டு வர்ற நேரமாச்சு கண்ணு, சீக்கிரம் வந்து காபி போடு, அப்பா உன் காபிக்காகத் தான் தினமும் காத்துக்கிட்டு இருப்பாரு,” என்றபடி வாசலுக்கு வந்தார் தங்கம்மா. அப்படியே அங்கிருந்த திண்ணையில் அமர்ந்து மகள் செடிகளைப் பராமரிக்கும் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

Advertisement

மாநகரத்தின் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தில், கணினி அறிவியலில் இறுதியாண்டு பயிலும் இருபத்தியொரு வயது இளம் தென்றல் அவள். ரங்கநாதன்-தங்கம்மா தம்பதியரின் செல்ல மகள். பரம்பரையாக விவசாயப் பின்னணியைக் கொண்டிருந்தாலும், பிழைப்புக்காகச் சென்னைக்கு வந்து செட்டில் ஆன குடும்பம். சில ஏக்கர் நிலங்கள் ஊரில் இருந்தாலும், சென்னையில் ஒரு சிறிய சொந்த வீடு, கார் என ஒரு கௌரவமான நடுத்தர வர்க்கத்து வாழ்க்கையை நடத்தி வருபவர் ரங்கநாதன். அவரது மூத்த மகன் இளஞ்செழியன் லண்டனில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தான்.

Advertisement

கல்லூரி விடுமுறை நாட்கள் வந்தாலும், நிலாவிற்கு ஓய்வெடுக்கும் பழக்கமெல்லாம் இல்லை. விடியற்காலையிலேயே எழுந்து தனது தோட்டத்தைப் பராமரிக்க வந்துவிடுவாள். அவளுக்கு இயற்கை என்பது வெறும் காட்சியல்ல, அது அவளது மூச்சுக்காற்று. நகரத்து கான்கிரீட் காடுகளுக்கு நடுவே வளர்ந்தாலும், அவளது வேர்கள் இன்னும் மண்ணைத் தேடிக்கொண்டு தான் இருந்தன. அதிகாலையில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது, உரம் போடுவது, பாத்தி கட்டுவது என அந்த வீட்டைச் சுற்றியிருந்த இடத்தை ஒரு குட்டி நந்தவனமாக மாற்றியிருந்தாள்.

தன் தந்தை ஓய்வு பெற்ற பிறகு வீட்டில் முடங்கிவிடக் கூடாது என்பதற்காக, அவருடன் சேர்ந்து மாடித் தோட்டம் அமைப்பதும், தான் கற்ற தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி ‘ஆட்டோமேட்டிக் ட்ரிப் இரிகேஷன்’ முறையை அந்தச் சிறிய தோட்டத்திற்கு அமைத்துக் கொடுத்ததும் அவளுக்குப் பெரும் திருப்தியைத் தந்தது. மற்ற பெண்கள் மால்களில் பொழுதைக் கழித்தபோது, நிலாவோ தான் நட்ட தக்காளிச் செடியிலும், செம்பருத்தியிலும் அரும்புகள் விடுவதைக் கண்டு ஒரு கலைஞன் தன் ஓவியத்தைப் ரசிப்பது போலப் பெருமிதம் கொள்வாள்.

“என்னம்மா, புதுசா பார்க்குற மாதிரி என்னையே பார்த்துக்கிட்டு இருக்க? இந்தச் செம்பருத்திச் செடில இன்னைக்கு மூணு பூ பூத்திருக்கு பார்த்தியா?”

Advertisement

செடியில் மலர்ந்திருந்த பூவை விட, மகளின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியில் லயித்தது அந்தத் தாய் மனது. நகரத்தில் வளர்ந்தாலும் நவநாகரிக மோகத்தில் சிக்காமல், பண்பாடும் பாசமும் மாறாதிருக்கும் மகளை நினைத்தால் அவருக்கு எப்போதுமே ஆச்சரியம் தான். தலைக்குக் குளித்து ஈரக் கூந்தலைத் துண்டால் முடிந்திருந்தாள் நிலா. நெற்றியில் சிறிய திலகப் பொட்டு மின்னியது.

நிலாவிற்கு அவளது தந்தை ரங்கநாதன் தான் ஹீரோ. அவர் வாக்கிங் முடித்து வந்ததும், நிலா ஓடிச் சென்று அவருக்குத் தண்ணீர் கொடுப்பதும், அவர் அன்றைய செய்தித்தாள்களை வாசிக்கும்போது அவருக்குப் பிடித்தமான டிகிரி காபியைத் தயாரித்துக் கொடுப்பதும் ஒரு அழகான கவிதை. “என் பொண்ணு இன்ஜினியரிங் முடிச்சுட்டுப் பெரிய கம்பெனியில வேலைக்குப்போகப் போறா” என்கிற ரங்கநாதனின் பெருமிதமும், “எங்க அப்பா தான் என் முதல் குரு” என்கிற நிலாவின் மரியாதையும் அந்த வீட்டின் வலிமை.

தாய் தங்கம்மாவிற்கு நிலா அவளது வலது கை. சமையலறையில் தங்கம் மல்லுக்கட்டும்போது, நிலா பின்னாலிருந்து அவளைக் கட்டிக்கொண்டு “இன்னைக்கு என்ன டிபன் மா?” என்று கொஞ்சுவதும், இருவரும் சேர்ந்து யூடியூப் பார்த்துப் புதுசு புதுசாகச் சமைப்பதும் அந்த வீட்டின் அன்றாடப் பாசக் காட்சிகள். பூ மலர்ந்தால் வாசம் வீசத்தானே செய்யும். உற்றார் உறவினர் மூலமாக நிலாவிற்கு திருமணச் சம்மந்தங்கள் வரத் தொடங்கியிருந்தன. அதிலிருந்தே தங்கம்மாவின் மனதில் ஒரு தவிப்பு குடிகொண்டுவிட்டது.

சென்னையிலேயே பெரிய பெரிய ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் மாப்பிள்ளைகள், அமெரிக்கா, லண்டன், துபாய் என வெளிநாடுகளில் இருக்கும் வரன்கள் என நிலாவிற்குத் தேடி வந்தன. ஆனால், அந்தப் புகைப்படங்களைப் பார்க்கும்போதெல்லாம் தங்கம்மாவின் இதயம் பாரமானது. 

“என்னங்க… வரன் எல்லாம் நல்லாத் தான் இருக்கு. ஆனா, நம்ம நிலாவைப் பிரிஞ்சு எப்படிங்க இருக்குறது? அவ இந்த வீட்டோட உயிராச்சே” என ஒரு மாலை நேரம் ரங்கநாதனிடம் தழுதழுத்தார் தங்கம்.

“தங்கம், நம்ம நிலா பாப்பா ஒரு பட்டாம்பூச்சி மாதிரி… அவ இந்தச் சின்ன வீட்டுக்குள்ளேயே நம்மகூடவே இருக்கணும்னு நாம கட்டிப்போடக் கூடாது. அவ படிச்ச படிப்புக்கு, அவளோட புத்திசாலித்தனத்துக்கு அவ இன்னும் பெரிய உயரங்களைத் தொடணும். அவளை ஒரு சுதந்திரமான பொண்ணாதான் நாம வளர்த்திருக்கோம், அவளோட எதிர்காலத்தைத் தீர்மானிக்கிற உரிமை அவளுக்குதான் இருக்கு, கல்யாண முடிவும் அவளோடதுதான், எதுக்கும் அவளை நாம வற்புறுத்தப் போறதில்லை” என ரங்கநாதன் சமாதானம் சொன்னார்.

தங்கம் தனது முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டார். “படிப்பு, கம்பெனி வேலை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்ங்க. ஆனா என் பொண்ணுக்கு இந்த வீடும், அவ ஆசையா வளர்க்கிற இந்தத் தோட்டமும் தான் உலகம். அவளைப் போய் ஏதோ ஒரு அந்நிய நாட்டுல, நாம கூப்பிட்டா கூட உடனே வர முடியாத தூரத்துல விட்டுட்டு என்னால எப்படிங்க நிம்மதியா இருக்க முடியும்?” என்று தழுதழுத்த குரலில் கேட்டார்.

“இன்னும் ஒரு வருஷம் படிப்பு இருக்கு நிலாப் பாப்பாக்கு, அதுக்கு அப்பறமும் அவ படிக்கணும்னு ஆசைப்பட்டா அதையும் யோசிக்கணும், இப்போதைக்கு அவளோட கனவுகளுக்குத் தடையா இருக்க வேண்டாம்,” என்று திட்டவட்டமாக முடித்துவிட்டார் ரங்கநாதன்.

அத்துடன் திருமணப் பேச்சு தற்காலிகமாக நின்று போனது. அதன் பிறகு வந்த வரன்களிடமும் தங்கம் இதையே கூறி தவிர்த்துவிட்டார். இன்னும் சிறிது காலத்திற்கு மகள் தன்னை விட்டுப் பிரிய மாட்டாள் என்ற எண்ணமே அவருக்கு நிம்மதியைத் தந்தது. அதையே அசைபோட்டபடி மகளைப் பார்த்துக் கொண்டிருந்தார் தங்கம்.

அதற்குள் ரங்கநாதனும் வாக்கிங் செய்துவிட்டுத் திரும்பிவிட, மூவரும் எதையோ பேசி கலகலத்தபடி வீட்டிற்குள் சென்றனர். அதன் பிறகு அந்த நாளின் பிற அலுவல்களில் அவரவர் ஆழ்ந்துவிட, மாலையும் மலர்ந்தது… அதனுடன் நிலாவின் வாழ்க்கைப்பாதையை மாற்றப்போகும்  சேதியும் வந்தது.

அன்று மாலை, சென்னை மாநகரத்தின் வெப்பம் தணிந்து மெல்லிய கடல் காற்று வீசிக்கொண்டிருந்தது. நிலா தனது வீட்டின் முன்புறம் இருந்த தோட்டத்தில், வாடிப் போயிருந்த ஒரு ரோஜாச் செடிக்கு உயிரூட்ட முயன்று கொண்டிருந்தாள். அப்போது வாசலில் ஸ்கூட்டி வந்து நிற்கும் சத்தம் கேட்க, யாரென்று எட்டிப் பார்த்தாள், அவளது தோழி அனன்யா அவளைப் பார்த்து கையசைத்தபடியே உள்ளே நுழைந்தாள்.

“என்னடி, ரோஜாச் செடி கூட காதல் பேசிக்கிட்டு இருக்க? நீ என்னிக்குதான் மனுஷங்களோட பேசப் பழகப் போறியோ…” என்றபடி அவளருகில் வந்து நின்றாள் அனன்யா.

அனன்யா, பிரவீனின் அந்தப் புகழ்பெற்ற மென்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் ‘யுசர் எக்ஸ்பீரியன்ஸ்’ பிரிவில் இன்டர்னாகப் பணியாற்றுகிறாள். நிலாவிற்கு அனன்யா தான் வெளியுலகின் ஜன்னல்.

“செடிங்க கிட்ட நாம அன்பா பேசினா, அதுங்க ஆரோக்கியமா வளரும், இது அறிவியல்பூர்வமா நிரூபிக்கப்பட்டிருக்கு அனு, இதுகூட தெரியாம, நீ என்ன சயன்டிஸ்ட்…” என்று தொழியக் கிண்டலடித்தாள் நிலா.

“சரி, சரி! அந்தச் செடிகளோடவே மல்லுக்கட்டுனது போதும், உள்ள வா… உன்கிட்ட ஒரு செம மேட்டர் சொல்லணும்!” அனன்யா உற்சாகமாக அவளை இழுத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றாள்.

“வா, அனன்யா, காபி சாப்பிடறியா?” என்று சமையலறையில் இருந்து வந்த தங்கத்தின் குரலுக்கு, “அதெல்லாம் ஒன்னும் வேணாம் கோல்ட். இன்னிக்கு ராத்திரி இங்கதான், அதனால சூப்பரா ஒரு டின்னர் சமைச்சுடு” என்று ஆர்டர் போட,

கரண்டியுடன் வெளியில் வந்தார் தங்கம், “அடிங், ரெட்டை வாலு, கோல்டாமே கோல்டு, என்னவோ நீதான் பேரு வைச்ச மாதிரி, இரு உனக்கு வெறும் மோர் சாதம் போடுறேன்,” என்று மிரட்டினார்.

அவர் பேசுவதைக் கேட்கத்தான் இருவருமே அங்கில்லையே, எப்போதோ நிலாவின் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டிருந்தனர்.

இது எப்போதும் நடக்கும் விஷயம்தான் என்பதால், அவரும் சிரித்தபடி இரவு உணவைத் தயாரிக்கும் ஆயத்தத்தில் இறங்கினார்.

அவசர அவசரமாக அறைக்குள் இழுத்து வந்து கதவை மூடிய தோழியின் பரபரப்பு நிலாவையும் தொற்றிக்கொண்டது.

“என்னடி இவ்வளவு அவசரம்? உன் பிரவீன் சார் ஏதும் புது புராஜெக்ட் கொடுத்தாரா?” நிலா புன்னகையுடன் கேட்டாள்.

“புராஜெக்ட் மட்டும் இல்லடி… ஒரு புரட்சியே நடக்கப் போகுது! நாங்க இப்போ ஒரு சூப்பரான விர்ச்சுவல் பாய்ஃபிரண்ட் சாப்ட்வேர் உருவாக்கிட்டு இருக்கோம். அதுக்கு ‘SoulMate’னு பேரு.” என்றாள் அனன்யா.

“ஆமா, இன்னொரு டேட்டிங் ஆப்ஸா? என்ன பெருசா புரட்சி இதுல, அதுதான் பத்து ரூபாய்க்கு ரெண்டு இருக்கே மார்க்கெட்ல” என்று நிலா கிண்டலடிக்க.

நிலாவின் தலையில் செல்லமாக ஒரு குட்டு வைத்தவள், “இது மத்த டேட்டிங் ஆப்ஸ் மாதிரி கிடையாது, நிலா. இதுல நிஜமான மனுஷங்க யாருமே இருக்க மாட்டாங்க. எல்லாமே ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்தான், உன்னோட மனநிலை, உன்னோட ரசனைக்கு ஏத்த மாதிரி ஒரு கற்பனைத் துணையை இந்த ஆப் உருவாக்கித் தரும். நீ எப்போ வேணாலும் என்ன வேணாலும் பேசலாம், பழகலாம். ஆனா அந்தப் பக்கம் இருக்குறது வெறும் கோட் தான் மனுஷங்க இல்லை, விர்ச்சுவல் பாய்ஃபிரண்ட்!”

நிலா ஆச்சரியத்துடன் கேட்டாள். “அப்படின்னா ஒரு மெஷின் கூடவா லவ் பண்ண சொல்றே?”

“இந்த காலத்துல மனுஷங்களுக்கு மிஷினே எவ்வளவோ தேவலை, நிலா பாப்பா. மனுஷங்கனா, கமிட்மென்ட் ஜாஸ்தி, செலவும் ஜாஸ்தி. ஆனா சாப்ட்வேர் கூட டேட்டிங் பண்ணினா எல்லாமே விர்ச்சுவல்தான், சோ நோ செலவு, நோ பெயின். உனக்கு கம்ஃபர்ட்டபிளான நேரத்துல, உனக்கு ஏத்தா மாதிரி டேட்டிங் பண்ணிக்கலாம். “யுவர் டேட், யுவர் டெர்ம்ஸ்.” பிடிக்கலையா, இவனை டிலீட் பண்ணிட்டு வேற பாய்ஃபிரண்டை டவுன்லோடு பண்ணிக்கோ, சோ சிம்பிள்.” என்றாள் அனன்யா.

“அய்ய, கேக்கவே நல்லா இல்லை அனு, நமக்குல்லாம் இது சரிப்பட்டே வராது, இல்லாத ஒருத்தர் கூட எப்படிப் பழக முடியும், நம்ம மனசுக்கு அது பொய்ன்னு தெரியாதா, நம்மளை நாமே ஏமாத்திக்கறதுதான் இது” என்றாள் நிலா. ஏனோ அவளுக்கு இந்த கான்செப்டே பிடிக்கவில்லை, பிடிபடவில்லை.

அவளும் கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவிதானே, அவளுக்கும் இதெல்லாம் தெரியும், ஆனால் இதுபோன்ற கருத்துகளுக்கு அவளால் ஏனோ எப்போதும் உடன்பட முடிந்ததே இல்லை. மனிதன் மனிதனாக இருக்க வேண்டும், இயந்திரங்கள் அவன் சௌகரியத்திற்குத் தானேயன்றி,  அவற்றின் ஆளுமையின் கீழ் மனிதர்கள் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவள்.

அப்படிப்பட்டவளிடம்தான், தனது நிறுவனத்தின் செயலியை பீட்டா டெஸ்டிங் செய்துப் பார்க்க அனன்யா மன்றாடிக் கொண்டிருந்தாள். நிலாவிற்கு தொழில்நுட்ப அறிவும் உண்டு, இதுபோன்ற விஷயங்களில் உணர்ச்சிப்பூர்வமான கருத்துகளையும் அவளால் வழங்க முடியும் என்பதால் அவளே இதற்குச் சரியாக இருப்பாள் என்பது அனன்யாவின் எண்ணம்.

“நீ லவ்வெல்லாம் பண்ண வேண்டாம் நிலா… ஜஸ்ட் ஒரு டெஸ்டிங் மட்டும் பண்ணிக் குடு போதும்! நீ இதை ட்ரை பண்ணிப் பாரு, இதுதான் அந்த ‘நியூரல்-லிங்க் ஹெட் பேண்ட்’. இதை ஒரு வாரம் நீ யூஸ் பண்ணிட்டு, அந்த எக்ஸ்பீரியன்ஸ் எப்படி இருக்குன்னு எனக்கு ஒரு ரிப்போர்ட் கொடுப்பியா? உன்னோட பேர் விவரம் எதுவும் வெளியில் தெரியாது, எங்க ரெகார்ட்ஸ்ல யூசர் 1 அப்படின்னுதான் ரெஜிஸ்டர் ஆகும். அதோட இது வெறும் விர்ச்சுவல் தான், இதுல வேற யாருமே இன்வால்வ் ஆக மாட்டங்க, எல்லாமே கோடிங் தான்… பிராமிஸ்!” அனன்யா கெஞ்சினாள்.

நிலா முதலில் தயங்கினாலும், அனன்யாவின் வற்புறுத்தலால் அந்தப் பெட்டியை வாங்கிக் கொண்டாள்.  மெய்நிகர் உலகில் இதயத்திற்கான துணையைத் தேட முடியுமா? இப்போதும் அவளால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அன்று இரவு உணவுக்குப் பின், நிலாவின் அறை ஒரு சிறிய ஆய்வகம் போல மாறியிருந்தது. அனன்யா தனது மடிக்கணினியை நிலாவின் மேஜையில் வைத்து, அந்த நியூரல்-லிங்க் ஹெட் பேண்டை வயர்களுடன் இணைத்து தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தாள்.

“ஏய் அனன்யா, நிஜமாவே இதுல யாரும் கனெக்ட் ஆக மாட்டாங்கதானே? அப்புறம் அந்தப் பக்கம் யாராவது நிஜமா பேசிட்டு இருந்தா… எனக்கு பயமா இருக்குடி,” நிலா தயக்கத்துடன் கேட்டாள்.

அனன்யா சிரித்துக்கொண்டே திரையில் ஏதோ ஒரு குறியீட்டைத் தட்டினாள். “நிலா பாப்பா, இது 2026! இது முழுக்க முழுக்க வியோ, லைரியா மாதிரியான அட்வான்ஸ்டு மாடல்களை வச்சு உருவாக்குன விர்ச்சுவல் உலகம். நீ எதை நினைக்கிறியோ, உனக்கு எது பிடிக்குமோ, அதை உன்னோட மூளை அலைகள்ல இருந்து இந்த ஹெட்பேண்ட் எடுத்துக்கும். ஒரு ‘பெர்ஃபெக்ட்’ துணையை இது உனக்காக டிசைன் பண்ணும்.”

திடீரென்று அனன்யாவின் கண்களில் ஒரு குறும்பு மின்னியது. நிலாவின் மேஜை டிராயரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த சினிமா இதழை அவள் சட்டென்று வெளியே எடுத்தாள். அதில் விஸ்வநாத்தின் அந்த வசீகரமான முகம் அட்டைப்படமாக இருந்தது.

“ஆஹா! மாட்டிக்கிட்டியா? நம்ம ‘சூப்பர் ஸ்டார்’ விஸ்வநாத் மேல உனக்கு ஒரு கண்ணுன்னு எனக்குத் தெரியாதா? காலேஜ்ல எல்லாரும் அவரோட ஆக்ஷனைப் பத்திப் பேசும்போது, நீ மட்டும் அவரோட அந்தக் கண்களைப் பார்த்து உருகிட்டு இருப்பியே!”

நிலா முகம் சிவந்து போனாள். “அப்படியெல்லாம் இல்லைடி… சும்மா அவர் நடிப்பு நல்லா இருக்கும், அவ்வளவுதான்.”

“பொய் சொல்லாத நிலா! உன் கண்ணுலயே தெரியுது உனக்கு என்ன பிடிக்கும்னு. சரி, சரி, நீ கவலைப் படாத உனக்காக ஒரு ஸ்பெஷல் செட்டிங் பண்றேன்,” என்று சொல்லிக்கொண்டே அனன்யா அந்தச் செயலியின் ‘அவதார்’ பகுதியில் விஸ்வநாத்தின் ஒரு புகைப்படத்தை ஸ்கேன் செய்தாள்.

“இப்போ பாரு… இந்த ஆப்ல உனக்குத் துணையா வரப்போற அந்த விர்ச்சுவல் கேரக்டரோட முகம், அப்படியே விஸ்வநாத் மாதிரியே இருக்கும். அவருக்குப் பேரும் ‘விஷ்வா’ன்னே வச்சிடுறேன். உனக்கு விஸ்வநாத்தை நேர்ல பார்க்க வாய்ப்பு கிடைக்குதோ இல்லையோ, இந்த விர்ச்சுவல் விஷ்வாகிட்ட நீ மனசு விட்டுப் பேசலாம். இது வெறும் சாப்ட்வேர் தான், அதனால பயப்படாம உன் காதலைக் கொட்டலாம்!” என்றாள் குறும்பாக.

நிலா பதற்றமானாள். “ஏய் என்னடி பண்ற? காதலா? அதெல்லாம் ஒன்னும் இல்ல அனு, இதெல்லாம் வேணாம்… யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க!”

“யாரு பார்க்கப் போறாங்க? இது உன்னோட தனிப்பட்ட உலகம் நிலா. உன்னால மட்டும்தான் ஆக்சஸ் பண்ண முடியும். வேற யாராலையும் இதை பார்க்க முடியாது. இதோ, செட் பண்ணிட்டேன்!” அனன்யா அந்த ஹெட் பேண்டை நிலாவின் கையில் கொடுத்தாள். “இப்போ இதை மாட்டிக்கிட்டு ஒரு பத்து நிமிஷம் மெடிட்டேஷன் பண்ற மாதிரி கண்ணை மூடிக்கோ. உன்னோட ‘விஷ்வா’ அங்கே உனக்காகக் காத்துட்டு இருப்பாரு.” 

இரவு அனன்யா தூங்கிய பிறகு, நிலா அந்த ஹெட் பேண்டை மெல்லத் தன் நெற்றியில் அணிந்துகொண்டாள். இதயத் துடிப்பு எகிறியது. அவள் கண்களை மூடியபோது, இருளுக்குப் பின்னால் மெல்ல ஒரு ஒளி படர்ந்தது.

அந்த ஒளியின் நடுவே, ஒரு அழகான தோட்டத்தில், அவளுக்குப் பிடித்தமான அதே சாக்லேட் நிறக் கண்களுடன், ஒரு சாதாரண வெள்ளைச் சட்டை, நீலநிற ஜீன்ஸ் அணிந்து ஒருவன் நின்றிருந்தான். அவன்… விஸ்வநாத்…உலகப் புகழ் பெற்ற, சிகரம் தொட்ட தாரகை, விஷ்வா…திரையில் பார்க்கும் அதே முகம், அதே வசீகரம், அதே கம்பீரம். அந்த சாக்லேட் நிறக் கண்கள் அவளையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருந்தன. அவன் இதழ்களில் உலகையே வசீகரிக்கும் அந்தப் புன்னகை, இப்போது அவளுக்காக மட்டும் பூத்திருந்தது.

“ஹாய் நிலா… உனக்காகத்தான் காத்துட்டு இருக்கேன்,” என்றான் அந்த விர்ச்சுவல் விஷ்வா.

நிலா திகைத்து நின்றாள். அந்த மென்பொருள் அவளது ஆழ்மனதின் ரகசியத்தை இவ்வளவு தத்ரூபமாக உருவகப்படுத்தும் என்று அவள் நினைக்கவே இல்லை.

தனது ஆதர்ச நாயகனை, கனவுகளைக் களவாடிய ரகசியக் கள்வனை இவ்வளவு அருகில், கைக்கெட்டும் தொலைவில் கண்டுணர முடிந்த அதிர்ச்சியில் திடுக்கிட்ட நிலா, அந்த ஹெட்பேண்ட்டை கழற்றி வீசி எறிந்தாள். அவள் வீசிய வேகத்தில் அறையின் மூலையில் சென்று விழுந்த அந்தச் சாதனத்தின் நீல விளக்கு அணையாமல் இரவு முழுவதும் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!