Skip to content
Post Views: 47
ரிதம் 30
நாட்கள் அதன் போக்கில் நன்றாகச் சென்றன.
Advertisement
அவன் இசையமைத்த பாடல்கள் எல்லாம் வெற்றி பெற்றுவிட, அவனுக்கு பெரிய டைரக்டர்களிடமிருந்தும், நடிகர்களிடமிருந்தும், புரொடியூசர்களிடமிருந்தும் வாய்ப்புகள் வந்தவண்ணம் இருந்தன.
ஆனால், அவன் மிகக் கவனமாகப் பார்த்துத் தேர்வு செய்தான். இதற்கு நடுவில் ராகவ், கிஷோர் மூலமாகப் கௌதமைத் தொடர்பு கொண்டான்.
Advertisement
Advertisement
“அதுக்கென்ன சார்?? பேஷா பண்ணிடலாம். நான் கொடுத்த வாக்கை மீற மாட்டேன். அதுபோல நானும் எதிர்பார்ப்பேன். அதை ராகவ் சார்கிட்ட இதைச் சொல்லிடுங்க. நீங்களும் ஞாபகம் வச்சுக்கோங்க” என்று அழுத்தமாகக் கூறினான்.
அவரை மிரட்டியது நினைவில் நிழலாடியது, எச்சிலை உள்கூட்டி விழுங்கினார். ஆனால், கௌதம் அதையெல்லாம் கண்டும் காணாமல் பேசினான். அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்ற ரீதியில் பேசினான்.
Advertisement
“அப்ப ஸ்டூடியோவுக்கு எப்ப வரலாம்??” என்று கிஷோர் கேட்டார்.
“ஸ்டூடியோவுக்கே நீங்க வரவேண்டாம். கம்போசிங் முடிஞ்சவுடனே நானே உங்க ஆபீஸ்க்கு வந்து போட்டுக் காட்டுறேன். அப்போ உங்களோட ஹீரோவை வரவச்சுக்கோங்க. லிரிக்ஸ் யார்கிட்ட கொடுக்குறீங்களோ அவங்ககிட்ட சீக்வென்ஸ் எல்லாம் சொல்லிடுங்க. உங்களுக்கு பெஸ்ட்டா பண்ணிக் கொடுக்குறேன்” என்றான் கௌதம்.
“இல்ல, லிரிக்ஸ் கூட நீங்களே எழுதினா நல்லா இருக்கும்னு தோணுது. போனவாட்டியும் நல்லா இருந்துச்சு. தொடர்ந்து எங்க ரெண்டு பேருக்கும் பிளாப் மூவிஸ், உங்களுடைய மியூசிக்னால எங்களுக்கு வெற்றி கிடைச்சிருக்கு. சோ, அடுத்ததும் அதே காம்பினேஷன்ல பண்ண நினைக்கிறோம்” என்று கிஷோர் தயக்கத்தோடு முடித்தார்.
“அப்ப சரி, நோ ப்ராப்ளம். என்ன மாதிரி பாட்டு வேணும்?? சீக்வென்ஸ் என்ன?? கதையோட ஓவர் ஆல் அவுட்லைன் எனக்கு வேணும். அதுக்கு ஒரு நாள் புக் பண்ணுங்க, நான் உங்க ஆபீஸ்க்கு வர்றேன்” என்று முடித்துக்கொண்டான்.
அதேபோலச் சொன்ன நேரத்திற்குச் சென்று கிஷோரைப் பார்த்தான். அன்று ராகவ் வரவில்லை. அவர் கதையைப் பற்றிய அம்சங்களைக் கூற, அவன் எல்லாவற்றையும் குறித்துக்கொண்டான். “லிரிக்ஸ் எழுதிட்டு உங்களுக்கு மெயில்ல அனுப்புறேன். கம்போசிங் முடிந்ததுக்கப்புறமா நானே கொண்டுவந்து இங்கு போட்டுக் காட்டுறேன். ஏதாவது மாற்றம் இருந்தா சொல்லலாம். எதுனாலும் போன்லயும், மெயில்லயும் காண்டக்ட் பண்ணிக்கலாம்” என்று முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.
தேவையில்லாத எந்தப் பேச்சுக்களும் இல்லை. முதலிலேயே அவன் அப்படித்தான், இப்பொழுது இன்னும் தன் வட்டத்தைச் சுருக்கிவிட்டான். அவர்கள் இருவரைப் பொறுத்தவரையில், அதில் அவர்களுக்கு அனுமதி இல்லை.
அவர்களுக்கு இப்போது வேண்டியது வெற்றிப்படம், அதற்கு அவனுடைய மியூசிக், பாடல் எல்லாம் உறுதுணையாக இருக்கும். பழையவற்றைக் கிளறாமல் இருப்பதால் அவர்களும் கண்டும் காணாமல் இருந்துவிட்டார்கள். நேரடியாகச் சந்தித்துக்கொண்டு வாதங்கள் நடந்ததால், ராகவ் அவனை எதிர்கொள்ளத் தயங்கினான். ஆனால், கிஷோருக்கு வேறு வழியில்லை.
இப்படியே தத்தமது வேலைகளில் எல்லோரும் பிஸியாக இருந்தனர். நத்தாஷா உட்பட அவளுடைய குரலுக்கும் வெற்றிப் பாடலுக்கும் அவளுக்கும் நிறைய வாய்ப்புகள் வந்தன. குறிப்பிட்டு அவளைப் பாடச் சொல்லுங்கள் என்று கேட்டனர்.
…….
(Filmfare Awards) தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கௌதமுக்கும், பாடகருக்கான விருதும் ஒருங்கே தேர்வு செய்யப்பட்டிருப்பதாக விஷயம் கசிந்தது. அதனோடே, சிறந்த பாடகிக்கான விருதும் நத்தாஷாவிற்கு வழங்க இருப்பதாகத் தேர்வு அறிவிப்புக் குழுவிலிருந்து விஷயம் கௌதமிற்குப் பகிரப்பட்டிருக்க, அவனுடைய சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. அதைத் தன் ட்ரூப்பிடம் பகிர்ந்துகொள்ள நினைத்தான்.
பகிர்ந்துகொள்ளப்பட்ட விஷயங்கள் நம்பகமானதா என்று உறுதி செய்துகொண்டு, கீழே உள்ள வளாகத்திற்கு வந்தவன், புளூடூத் மைக்கை ஆன் செய்து எல்லோரையும் அங்கு அசெம்பிள் ஆகும்படி செய்தான்.
எல்லோரும் அங்கு கூடினார்கள். “நாளைக்கு நம்ம அகாடமில டீம் லஞ்ச் இருக்கு. ஒரு குட் நியூஸ், அதைச் சொல்றதுக்காக நான் அரேஞ்ச் பண்ணியிருக்கேன். ஷிப்ட் வைஸ் இல்லாம, எல்லாருமே நாளைக்கு வந்துடுங்க. மத்தபடி நாளைக்கு வேலை கிடையாது. பார்ட்டி அண்ட் லஞ்ச் அவ்வளவுதான்” என்று கூறிவிட்டான்.
அனைவருக்கும் சந்தோஷம். என்ன ஏது என்று கூடத் தெரியவில்லை என்றாலும், ஏதோ ஒரு சந்தோஷ நிகழ்வு என்று மகிழ்ந்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை, அந்த அகாடமியில் நடக்கும் எந்தவொரு நல்ல நிகழ்வும், அவர்களுக்கும் சந்தோஷம் கொடுக்கும் நிகழ்வுதான். அவர்கள் வேறு, அந்த அகாடமி வேறு என்று யாரும் நினைக்கவில்லை. அப்படி ஒரு பிணைப்பைத்தான் கௌதம் உருவாக்கியிருந்தான்.
அடுத்த நாள் எல்லோரும் காலையிலேயே கிளம்பி வந்திருந்தார்கள்.
கௌதம் கருப்பு நிற சபாரியில், அவனுக்கு மிகவும் பிடித்த அல்ட்ரா லக்சரி ஷூவை அணிந்துகொண்டு வந்தான்.
ஏற்கனவே அழகாக இருப்பவன், அந்த உடையில் இன்னும் ஆண் அழகனாகத் தெரிந்தான்.
நத்தாஷா கண்களிலும் ஒரு நிமிடம் மின்னல் மின்னி மறைந்தது. குடும்பத்தாரையும் அழைத்து வரலாம் என்று சொன்னதால், பிரீத்தியும் ராகினியும் கூட உடன் வந்திருந்தார்கள்.
“ஹப்பா, செம்ம ஹேண்ட்ஸமா இருக்காரு கௌதம் சார். அவருக்குப் கேர்ள் பிரண்ட் இல்லன்னு தெரிஞ்சா நான் அப்ளிகேஷன் போடலாம்னு நினைக்கிறேன்” என்றாள் ராகினி.
“ஏற்கனவே நிறைய பேர் அதுக்கு அப்ளிகேஷன் போட்டு ரிஜெக்ட்டும் ஆகியிருக்காங்களாம். இங்க வந்து உட்கார்ந்து வேற என்ன கலெக்ட் பண்ணேன்னு நினைக்கிற?? இந்த கதைகளைத்தான் கலெக்ட் பண்ணேன்” என்று கூறினாள் பிரீத்தி.
“ரொம்பக் கேவலமான வேலை. சரி, போரடிக்கிறதுக்காகச் செஞ்சிருப்பீங்க, விட்டுத் தள்ளுங்க. அப்ப எனக்கு வாய்ப்பில்லைன்னு சொல்ல வர்றீங்களா??” என்று கேட்டு வைத்தாள் ராகினி.
அவள் ‘ஆமாம்’ என்று கூறினாள்.
“ஓகே காய்ஸ், என்னுடைய அழைப்பை ஏற்று இங்க கூடியிருக்கிற எல்லாருக்கும் ரொம்ப நன்றி. அப்படியே ஒரு சந்தோஷமான விஷயத்தைப் பகிர்ந்துகொள்வதற்காகத்தான் நாம இங்கே கூடியிருக்கோம்” என்றதும், அங்கிருந்தவர்கள் என்ன என்று சத்தமாகக் கேட்டனர்.
“அதை என் அம்மா வாயால சொல்லணும்னு நினைக்கிறேன்” என்று கூறினான் கௌதம்.
அவன் தாய் மேலே ஏறி வந்தார். சிகப்பு நிறப் பட்டுப்புடவையில் தெய்வ கடாட்சமாகத் தெரிந்தார்.
“உங்க எல்லாரையும் திரும்பிப் பார்த்ததில் எனக்கு ரொம்பச் சந்தோஷம். தினமும் என் கையால சாப்பிட்டுட்டு இருந்தீங்க, இன்னைக்குத் திரும்பவும் என் கையால உங்களுக்குச் சாப்பாடு போடுற பாக்கியம் எனக்குக் கிடைச்சிருக்கு. அப்படியே அந்த நல்ல விஷயத்தையும் உங்ககிட்ட பகிர்ந்துக்கிறேன். இந்த வருஷம் தென்னிந்திய பிலிம்பேர் அவார்டுக்கு நம்மளோட மியூசிக் அகாடமியைச் சேர்ந்த ரெண்டு பேர் தேர்வாகியிருக்காங்க. அதுவும் ரெண்டு நாமினேஷன்ல… ஒன்னு மியூசிக் டைரக்டர் அவார்டு, அதுல நம்ம கௌதம் பேர் நாமினேட் ஆகியிருக்கு. அதுமட்டுமில்லாம, சிறந்த பாடகருக்கான விருதும், பாடலுக்கான விருதும் கூடக் கிடைச்சிருக்கு. அந்தப் படத்துல வந்த ‘மின்னல் போல என் வாழ்வில் வந்தவளே’ பாட்டுக்குத்தான் கிடைச்சிருக்கு.”
“இன்னொரு சந்தோஷமான விஷயம் என்னன்னா?? இந்த வருஷம் நமக்கு ரொம்பவே லக்கிதான். ஃபீமேல் சிங்கருக்கான பிலிம்பேர் அவார்டும் நம்ம அகாடமியைச் சேர்ந்தவங்களுக்குத்தான் கிடைச்சிருக்கு. அது வேற யாரும் இல்ல, நம்மளுடைய நியூ இன்ட்ரோடியூஸான நத்தாஷாவுக்குத்தான் இந்த வருடத்தோட ஃபீமேல் சிங்கர் அவார்டும் கிடைச்சிருக்கு” என்று கூறிய நொடி, பெருத்த கரகோஷ ஒலி அந்த ஆடிட்டோரியத்தை ஆக்கிரமித்தது.
உடல் சிலிர்க்க நின்றாள் நத்தாஷா. அவள் கேட்டதை அவளாலேயே நம்ப முடியவில்லை. ஆனால், அது உண்மைதான் என்று அனைவரும் அவளை நெருங்கி வாழ்த்துக் கூறியதில் புரிந்தது.
ராகினி சந்தோஷத்தில் அவளைக் கட்டிக்கொண்டாள். தன்போக்கில் அவள் கைகளைக் கட்டி அணைத்தாலும், அவள் சிந்தனை எங்கோ இருந்தது. மேடையில் நின்றிருந்த அந்த இரண்டு பேரில் நின்றது.
அவன் புன்னகை முகமாக அவளைப் பார்த்துக்கொண்டிருக்க, மற்றவர்கள் மேடை ஏறி அவனுக்கும் வாழ்த்துச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
“இந்தச் சந்தோஷமான விஷயத்தைப் பகிர்ந்துகொள்வதற்காகத்தான் இன்னைக்கு இந்தப் பார்ட்டியும், ட்ரீட்டும். அதுமட்டுமில்லாம தேசிய விருதுக்கும் இதே பாடல் நாமினேட் ஆகியிருக்கு. அதுக்கான ரிசல்ட் இன்னும் சரிவரத் தெரியல” என்று முடித்து வைத்தான் கௌதம்.
இன்னும் கரகோஷ ஒலி வானைப் பிளக்க ஆரம்பித்தது. “உங்களுக்குக் கண்டிப்பா கிடைக்கும் சார்” என்று தங்கள் சந்தோஷத்தைச் சத்தமாகப் பகிர்ந்துகொண்டார்கள்.
“இந்தப்பாட்டுக்குக் கிடைச்சிருக்கிறது என்னோட தனிப்பட்ட சந்தோஷம். இந்தப் படத்துக்கும், மியூசிக் டைரக்டரா எனக்குக் கிடைச்சதிலும் ரொம்பப் பெரிய சந்தோஷம். ஆனா, அது என்னால மட்டும் சாத்தியப்படவில்லை. இங்க இருக்கிற ஒவ்வொருத்தரும் அதுக்குத் தூணாக இருந்திருக்கீங்க. மியூசிஷியன்ஸ், சிங்கர்ஸ், இந்த அகாடமில வேலை செய்றவங்கன்னு எல்லாருமே ஹெல்ப் பண்ணியிருக்கீங்க. சோ, இந்த அவார்டை உங்களுக்கு நான் சமர்ப்பணம் செய்கிறேன். இந்த அவார்ட் ஃபங்ஷனுக்கு நீங்க எல்லாருமே அங்க வரணும்னு ஆசைப்படுறேன். உங்க எல்லாரையும் மேடை ஏத்தணும்னு ஆசைப்படுறேன்” என்று கூறினான்.
அங்கிருந்த ஊழியர்கள் வரை எல்லோரும் கைத்தட்டி ஆர்ப்பரித்தனர், தங்கள் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டனர்.
“ஒருவேளை, இன்கேஸ் நமக்குத் தேசிய விருது கிடைச்சா?? நாம எல்லாரும் டெல்லிக்குப்போய் இதே மாதிரி அவார்ட் வாங்கலாம்” என்று கூறினான்.
அது சாத்தியப்படாத ஒன்றுதான், அந்த அவார்ட் ஃபங்ஷனுக்குப் பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் இருக்க எல்லோருக்கும் அனுமதி கிடைக்காது. ஆனால், அனைவரையும் அங்கே அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தான். அது அவர்களுக்கும் புரிந்தது.
“பார்க்கலாம் அதுக்கு வாய்ப்பு இருக்கான்னு” என்று ஆழ்ந்த பெருமூச்சை வெளியிட்டான்.
“கண்டிப்பா கிடைக்கும் கௌதம் சார்” என்று நிறைய குரல்கள் கேட்டன.
“ஓகே, கொஞ்ச நேரம் கேம் ஷோ, அதுக்கப்புறம் சாப்பாடு, அதுக்கப்புறம் என்ஜாய்மென்ட் ஃபுல்லா டான்ஸ். மேடை ஏறிப் பாடுறவங்க பாடலாம், ஆடுறவங்க ஆடலாம்” என்று கூறினான்.
அந்த இடமே ஆர்ப்பரித்தது. சிறிது நேரம் ஏதேதோ விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. மியூசிக்கல் சேர், கார்டு கேம்ஸ், பலூன் ஸ்வைப்பிங் என்று இன்னும் இதுபோல நிறைய. தங்களை மறந்து, தங்கள் மன அழுத்தங்களை மறந்து, எல்லோரும் பங்கேற்றுக்கொண்டார்கள், ராகினி உட்பட.
ராகினிக்குத் தன் தமக்கையின் வெற்றியில் அவ்வளவு சந்தோஷம். உடனே தன் தாய்க்குப் பகிர்ந்துகொண்டாள். அவருக்குமே போயிருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றியது. ஆனால், விருது விழாவிற்கு அவரை அழைத்துச் செல்வதாகக் கூறிவிட்டார்கள்.
இங்கு, பிரீத்தி ரமேஷுக்குச் சொல்ல, அவனும் தன் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொண்டான். மாலையில் தன்னுடைய ட்ரீட் வீட்டில் இருப்பதாகக் கூறினான்.
விருப்பம் இருப்பவர்கள் கலந்துகொண்டார்கள், விளையாடினார்கள். ஆனால், நம் நாயகி அமைதியாக அமர்ந்திருந்தாள், எதிலும் பங்கேற்கவில்லை. அந்தச் சந்தோஷத்தை உள்வாங்கிக்கொண்டு, அனைவரின் சந்தோஷத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள்.
பிரீத்தியும் இம்முறை விளையாடவில்லை. அவளுக்கு நாட்கள் தள்ளிப் போயிருந்தன. மருத்துவரிடம் செல்லவில்லை, ஆனால் நல்ல விஷயமாகத்தான் இருக்கும் என்று நம்பினார்கள்.
ஒரு வழியாக விளையாட்டுப் போட்டிகள் நடந்து முடிந்தன.
“ஓகே காய்ஸ், வாங்க சாப்பிடலாம். முதல்ல வயித்தை ஃபில் பண்ணிட்டு, அதுக்கப்புறம் மீதி கொட்டம் அடிக்கலாம். இந்த வீக் எண்ட் எங்கேயாவது டூர் புரோகிராம் போடலாம்னு நினைக்கிறேன். யாருக்காவது ஏதாவது புரோகிராம் இருந்தா சொல்லிடுங்க” என்று கேட்டான்.
எல்லோரும் ‘நாங்கள் வருகிறோம்’ என்ற ரீதியில் பேசினார்கள்.
“ஓகே, எத்தனை பேர் போறோம், என்ன ஏதுன்னு நீங்க சொல்லிட்டீங்கன்னா, நான் அதுக்கேத்தபடி பஸ் அரேஞ்ச் பண்ணிடுவேன். அங்கு ஒரு ரிசார்ட் பெருசா புக் பண்ணிக்கலாம், அது இருக்கிற மாதிரி இடத்தையும் பார்த்துக்கலாம். இந்த எல்லா புரோகிராமும் முடிஞ்சதுக்கப்புறம், என்னோட செக்ரட்டரிகிட்ட பேரைக்கொடுத்துடுங்க. இந்தவாட்டி சில பேருக்கு வர முடியாமல் ஏதாவது காரணங்கள் இருக்கலாம், ஆனால் ஒன்னும் பிரச்சினை இல்லை, நெக்ஸ்ட் டைம் பார்த்துக்கலாம். யாருக்கும் எந்தக் கம்பல்சனும் இல்லை. வர முடிஞ்சவங்க வாங்க, சந்தோஷமா என்ஜாய் பண்ணலாம்” என்றான்.
அனைவரும் சாப்பிடச் சென்றனர். கௌதம், பிரீத்தியை நெருங்கி வந்தான். அவளும் ராகினியும் தனிப்பட்ட முறையில் வாழ்த்துக்கள் கூறினார்கள். நத்தாஷாவை நெருங்கி அவன் வாழ்த்துக் கூற,
“இது எல்லாமே உங்களால மட்டும்தான் சாத்தியப்பட்டுச்சு சார். இந்த எல்லா அவார்டுக்கும் நீங்க தகுதியானவர்” என்றாள் நத்தாஷா. மகாலட்சுமி வாழ்த்துக்கள் கூறினார். தனிப்பட்ட முறையில் பிரீத்தியை அவன் டூருக்கு வரவேற்றான்.
“பிரீத்தி, நீங்களும் வரலாம், உங்க ஹஸ்பண்டையும்க் கூட்டிட்டு வரலாம்” என்று கூறினான்.
கசக்குமா என்ன பிரீத்திக்கு?? வருகிறேன் என்று முதலில் கூறியவள், உடனே தன் கணவனுக்கும் அழைப்பு விடுத்ததைக் கூறிவிட்டாள்.
ஆனால், அவள் கர்ப்பம் காரணமாகச் சற்றுத் தயங்கினாள். அதே தயக்கத்தோடு மதிய உணவு முடிந்தது.
தடபுடலாக விருந்துச் சாப்பாடு ஏற்பாடு செய்திருந்தனர், அதுவும் பஃபே சிஸ்டத்தில். பணத்தை வாரி இறைத்திருந்தான் கௌதம். அவன் சந்தோஷம் அங்கிருந்த உணவுகளில் தெரிந்தது.
உணவு முடிந்து ஆடிட்டோரியத்தில் எல்லோரும் கூடினார்கள்.
“ஹெவியான சாப்பாடு, இப்பப் பாட்டுப் பாடுனா கண்டிப்பா தூக்கம் வந்துரும். என்ன பண்ணலாம்?? பொட்டி படுக்கையைக் கட்டலாமா, இல்ல??” என்றான் கௌதம்.
“பாடலாம் ஆடலாம் சார். நீங்க உங்களோட வெற்றி பெற்ற பாடலை முதல்ல பாடுங்க, அப்புறம் அந்தப் படத்தோட பாடலை எல்லாரும் பாடலாம், அதுக்கப்புறம் மத்த பாடல்கள் எல்லாம் ஆரம்பிக்கலாம்” என்று குரல்கள் அதிகமாக எழுப்பப்பட, அவனும் சரி என்று சம்மதம் தெரிவித்தான்.
அதன்பிறகு அவார்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட அந்தப் பாடலை அவன் பாடுவதற்கு நத்தாஷாவை மேடைக்கு அழைத்தான்.
இருவரும் தங்கள் தேன் போன்ற இனிமையான குரலினால், அங்கு இருப்பவர்களை மகிழச் செய்திருந்தனர். கண்களை மூடித் தங்களை மறந்து மெய்மறந்து பாடினார்கள். அந்தப் பாடல் அவர்களைத் தங்களுக்குள் இழுத்துக்கொண்டது.
உணவிற்குப் பிறகான இசை கச்சேரி கலை கட்ட ஆரம்பித்தது.
அவர்கள் இருவரும் தங்களின் குரலில் அனைவரையும் மெஸ்மரசம் செய்திருக்க. அவர்கள் பாடல் முடிந்தவுடன் கைத்தட்டல்கள் வானை பிளந்தது.
இவர்களுக்கு பிலிம் பேர் அவார்டு மட்டுமல்ல, தேசிய விருதும் கிடைக்க வேண்டும். அதற்கு தகுதியானவர்கள் என்று, ஒவ்வொருவரின் மனமும் நினைக்க தொடங்கியது. அதில் ஒருத்தியை தவிர.
அந்த பாடல் முடிந்த பிறகு, அந்த படத்தில் பாடிய ஒவ்வொருவரும் தாங்கள் பாடிய பாடலை பாடி முடித்தார்கள்.
அவர்களின் முதல் பட பாடல், ஆரம்பித்த பாடல், என்று எல்லா பாடல்களும் பாடப்பட்டது. எல்லோரும் மேடை ஏறினார்கள். பாடினார்கள். சிலர் பாடிக்கொண்டே ஆடினார்கள். சந்தோஷப்பட்டார்கள். ஒரே ஒருத்தி மட்டும் வருத்தமாக அமர்ந்திருந்தாள். அவள் கண்களில் பொறாமை டன்டன்னாக தெரிந்தது. அது திவ்யா தான்.
…….
error: Content is protected !!