Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

76. Rythm - ரிதம் சரிகமபதநிContest Stories 2026

ரிதம் 34

ரிதம் 34

“ஸ்ரீதர் சார், நத்தாஷா ஃபேமிலியும் கௌதம் சாரும் சொந்தக்காரங்களா?” என்று கேட்டபடி வந்து நின்றாள் திவ்யா.



Advertisement

“இல்ல, ஏன் கேக்குற?”

“இல்ல, இந்த டூருக்கு வந்ததிலிருந்து நானும் பார்த்துட்டிருக்கேன். அவங்க அம்மா தனியா இருக்காங்க, அதனால நத்தாஷா அம்மாவோட இருக்கிறாங்கன்னு நினைச்சேன். ஆனா இவரும் அவங்க கூடவே இருக்கிற போல இருக்கு? ஐ மீன் நம்மளை எல்லாம் கவனிக்கிறாரு, பாக்குறாரு, பேசுறாரு. ஆனா அதுக்கப்புறம் பைனலா அவங்க கூட போய் நின்னுக்கிறாரு? ஈவன் நத்தாஷாவோட தங்கச்சி அந்த பொண்ணு ராகினி கிட்ட கூட ரொம்ப க்ளோசா பேசுறாரு. அங்க பாருங்க எப்படி ரெண்டு பேரும் சிரிச்சு பேசிட்டு இருக்காங்கன்னு?” என்று திவ்யா காட்டிய இடத்தில் அவனும் திரும்பிப் பார்த்தான்.

Advertisement

Advertisement

“இப்ப ஃபிரண்டாகியிருக்கலாம்னு நினைக்கிறேன், எனக்கு சரியா தெரியல. ஆனா நான் வந்த பிறகு தான் நத்தாஷா வந்தாங்க. ரொம்ப பயந்த சுபாவம். எங்களை எல்லாம் முதல்ல நம்பவே இல்ல, அதுக்கப்புறம் கண்டிப்பா வந்து இந்த குரூப்ல ஜாயின் பண்ணுவேன்னு போனாங்க. இப்பதான் வந்து ஜாயின் பண்ணி இருக்காங்க. மே பி, இப்ப ரொம்ப ஃபிரண்ட்ஸாகியிருக்கலாம்னு நினைக்கிறேன். நத்தாஷாவுடைய ஃப்ரெண்ட் ப்ரீத்தியும் கௌதமுக்கு நல்லா தெரியும்” என்றான் ஸ்ரீதர்.

“நாமளும் தான் நல்லா பேசுறோம். ஆனா நம்ம கிட்ட எல்லாம் அவர் க்ளோசா பேச மாட்டேங்குறாரு. உங்ககிட்ட பேசினாலும், ஃபீமேல் சிங்கர் கிட்ட ரொம்ப டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணுவாரு. பட், இந்த ஃபீமேல் சிங்கரும் அவங்களோட ஃபேமிலியும் ஆப்ஷனலா?” என்று கேட்டவளை புரியாமல் பார்த்தான் ஸ்ரீதர்.

Advertisement

இதுவரை அவனுக்கு அப்படி தோன்றியதில்லை. அவள் கூறும்போது சற்று அதிகப்படியான பிணைப்பு இருப்பது போலத்தான் காட்சியளித்தது. ஆனால் அது அவர்களின் விருப்பம். அதை கேட்பதற்கு யாருக்கும் உரிமையிலையே? அதையே தான் அவளிடம் கூறி அனுப்பினான்.

சுற்றிப் பார்த்த இடங்களை முடித்துக் கொண்டு திரும்புகையில் தேநீர் குடிப்பதற்காக நிறுத்தி இருக்க, தேவையானவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பருக ஆரம்பித்தார்கள்.

அப்போது கௌதமுக்கு அழைப்பு வந்தது. அவனும் சற்று ஒதுங்கி சென்று பேச ஆரம்பித்தான். அவன் பேசி முடித்துவிட்டு திரும்புகையில் அவன் எதிரில் நின்று கொண்டிருந்தாள் திவ்யா.

“என்னாச்சு திவ்யா, ஏதாவது வேணுமா?” என்று கேட்டான்.

“என் பேரு திவ்யான்னு கூட உங்களுக்கு ஞாபகம் இருக்கா சார்?” என்று அவள் கேட்ட கேள்வியில் அவன் புருவம் இடுங்கியது.

“பார்டன்” (Pardon) என்று ஒற்றை வார்த்தையில் நிறுத்தினான்.

“இல்ல சார், உங்களுக்கு நத்தாஷா ஃபேமிலிலயிருக்க மெம்பர்ஸை தவிர வேற யாரையும் கண்ணுக்கு தெரிய மாட்டேங்குது” என்றாள்.

“அதுக்கு?” என்று புருவங்களை ஏற்றியபடி கேட்டான்.

“பாருங்க, எங்க கிட்டையெல்லாம் ஒத்த வார்த்தையில பேசுறீங்க? அவங்ககிட்ட எப்படி பேசுறீங்கன்னு உங்களுக்கே தெரியும்? அப்படி என்ன அவங்க உசத்தியா போய்ட்டாங்க?”

“கண்டிப்பா தெரிஞ்சுக்கணுமா?” என்று அவன் கேட்க, அவள் ஆமாம் என்று பதில் அளித்தாள்.

“அவார்ட் ஃபங்க்ஷன் வருவீங்கள்ல? அப்ப கண்டிப்பா தெரிஞ்சிப்பீங்க” என்று கூறிவிட்டு அவள் பதிலுக்கு கூட காத்திருக்காமல் நடந்து விட்டான்.

அவளுக்கு அவமானப்பட்ட உணர்வு. அவள் சொல்ல வந்தது வேறு, ஆனால் கேட்டது வேறு.

அவனோ மனதில் வேறு ஒன்றை சிந்திக்க ஆரம்பித்து விட்டான். இதை அப்படியே விடுவது சரியில்லை. அவன் காத்திருந்த நேரமும் நெருங்கி விட்டது. முடிந்த அளவு ஏற்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

அதன் பிறகு அவன் முகம் தீவிரமாக இருந்தது. எதைப்பற்றியோ ஆழமாக சிந்தித்துக் கொண்டிருந்தான். அவனை நெருங்கும் தைரியம் யாருக்கும் இல்லை.

இந்த இரண்டு நாளில் புஷ்பவல்லியும், மகாலட்சுமியும் நல்ல தோழமைக்குள் வந்திருந்தார்கள். மனதில் இருப்பதை பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு.

அதை முதலில் துவக்கி வைத்தது மகேஸ்வரி தான். தன் கணவனுக்கும் மகனுக்கும் இடையே இருக்கும் பனிப்போரை அவர் கூறிக் கொண்டிருக்க,

“நீங்க அதை சமாதானப்படுத்தணும்னு நினைக்கலையா?” என்று கேட்டார் புஷ்பவல்லி.

“ரெண்டு பேரும் அவங்கவங்க நிலையில சரியா இருக்காங்க. அதேபோல ரெண்டு பேருக்கும் பிடிவாதம் அதிகம். அவர் சின்னதா தொடங்கின டிவி சேனல் மேல அவருக்கு அபரிதமான காதல். அதுதான் அவருக்கு முதல் மனைவின்னே சொல்லலாம். அதனால, அவர் அதுல எந்த காம்ப்ரமைஸும் பண்ண மாட்டாரு. அதே சமயத்துல கௌதமோட கோரிக்கைகள் எனக்கு நியாயமாப்படுது. பணம் மட்டுமே குறிக்கோள் இல்லைன்னு தோணுது. அதனால தான் அவனோட இந்த முயற்சிக்கு நானும் துணையா இருந்தேன். அவங்க அப்பாவோட காசுலயிருந்து எந்த உதவியும் வாங்க மாட்டேன்னு சொல்லிட்டான். வீட்டை விட்டு கூட வெளியில் வந்து நின்னுட்டான். ஆனா என்னால அவனை அப்படியே விட முடியல. இப்ப அவன் கிட்ட இருக்கிற எல்லாமே அவனோட சொந்த உழைப்புதான். இருந்தாலும் கொஞ்சம் முதல் நான் போட்டிருக்கேன். அதுவும் என் அப்பாவுடையதுதான். நாங்க இருக்கிற வீடு கூட அப்படித்தான், அப்பா எனக்கு எழுதி வச்சது. அதை நான் அவனுக்கு எழுதி வச்சிட்டேன். என் கணவரோட சல்லி காசு வேணாம்னு சொல்லிட்டான்.”

அவரும் நீண்ட காலங்களாக மனதில் தேக்கி வைத்ததை கொட்ட ஆரம்பித்து விட்டார். அவர் முடிக்கும் தருவாயில் இவரும் தன் கணவன், மகள்கள் என்று ஆரம்பிக்க, அப்படியே நத்தாஷாவின் வாழ்க்கையும் அங்கு பேசும் பொருளானது.

எல்லாமே மகாலட்சுமிக்கு தெரிந்திருந்தாலும், புதிதாக கேட்பது போல கேட்பத்துக் கொண்டார்.

“அன்னைக்கே படிச்சு படிச்சு சொன்னாள். நான் கொஞ்சம் உடன்பட்டிருந்தா கூட அவள் வாழ்க்கை இன்னைக்கு நல்லா இருந்திருக்கும்” என்று கண் கலங்கினார் புஷ்பவல்லி.

“அப்படியெல்லாம் சொல்லாதீங்க, எது நடக்கணும்னு விதி இருக்கோ, அதுதான் நடக்கும். அண்ணனோட இறப்பு அந்த நேரத்துல நடக்கணும்னு இருக்கு. நத்தாஷா அவரை மீறி சென்னைக்கு வந்திருந்தா, இதனால தான் அந்த இறப்பு நடந்ததா மேபி நீங்களும் வருத்தப்பட்டிருப்பீங்க. அவளும் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி இருப்பாள். நடந்தது நல்லதுக்குன்னு சொல்ல மாட்டேன். ஆனா பெரிய குற்ற உணர்ச்சியிலிருந்து நீங்க எல்லாம் மீண்டு இருக்கீங்க. கடந்து போனதை மறந்துடுங்க. உங்க ரெண்டு பொண்ணுக்கும் நல்ல வாழ்க்கை ஏற்படுத்தி கொடுங்க. அதுக்கு நானும் துணையா இருக்கிறேன்” என்று கூறினார் மகாலட்சுமி.

“எனக்கும் அதே எண்ணம் தாங்க. ஆனா, நத்தாஷா அதை ஏத்துப்பாலான்னு தான் தெரியல?” என்று கண்களை தன் முந்தானையால் துடைத்துக் கொண்டு கூறினார்.

“சின்ன வயசுல கசப்பான மருந்த பிள்ளைகளுக்கு கொடுப்போம், அதை அவங்க லேசுல குடிச்சிடுவாங்களா? அதட்டி, மிரட்டி, உருட்டி, கட்டி வச்சாவது கொடுப்போமில்ல? அவங்க நல்லதுக்காக தானே நாம பாப்போம். அதுபோல ஏதாவது ஒன்னு பண்ணி தான் இந்த நல்ல விஷயத்தையும் நடத்தி வைக்கணும்” என்றார்.

“எனக்கு ராகினியை பத்தி கூட கவலையில்லை. ஏன்னா அவள பாத்துக்க நத்தாஷா இருக்காள். அவளும் கொஞ்சம் தைரியமா படபடப்பா பேசுறவள். ஆனா என் பெரிய பொண்ணு நத்தாஷா அப்படியில்ல. முன்ன விட இப்ப ரொம்ப தன் கூட்டுக்குள்ள சுருங்கிட்டாள். சிறகை விரிச்சு அவளை உங்க பையன் பறக்க வச்சிருக்கார். இனி அவள் பறந்து அந்த வானத்தோட எல்லையை தொடணும். அதேபோல அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையையும் அமைச்சு கொடுக்கணும். அது மட்டும் தான் என்னோட வேண்டுதலா இருக்கு. நீங்க சொன்னது மட்டும் நடந்துச்சுன்னா, நான் உங்களுக்கு காலத்துக்கும் கடமை பட்டிருக்கேன்” என்று புஷ்பவல்லி நெகிழ்வாகப் பேசிக் கொண்டிருந்தார்.

“ஹாய் அம்மாக்களா? நைட்டு தூங்குற எண்ணம் இல்லையா?” என்று கேட்டபடி அவர்கள் அருகில் வந்து அமர்ந்தான் கௌதம்.

“பொம்பளைங்க பேச உக்காந்தா பேசுவதற்கு வார்த்தைகள் சேர்ந்து கொண்டே இருக்கும் டா. ரெண்டு வீட்டு கதைய பேசினாலே போதுமே? அதுக்கு நேரம் பத்தாதே?” என்று அவர் லகுவாக சிரித்தார்.

“நாளைக்கு மத்தியானம் நாம கிளம்பனும். காலையில இந்த ரெசார்ட்டுக்கு சொந்தமான ஃபால்ஸ் போய் பார்க்கறதுக்கு பர்மிஷன் வாங்கி இருக்கேன். அதை பார்த்துட்டு லன்ச் முடிச்சிட்டு கிளம்பிடனும். இன்னைக்கு ஓய்வு எடுத்துக்கோங்க. அப்பதான் சரியா இருக்கும்” என்றான் கௌதம்.

இருவரும் அவன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு எழுந்து நின்றனர்.

“அம்மா, உங்க பொண்ண பத்தி கவலைப்படாதீங்க. இனிமே அவள் என் பொறுப்பு. கவலைய மறந்துட்டு நிம்மதியா போய் தூங்குங்க” என்று புஷ்பவல்லியை பார்த்து கூறினான் கௌதம். அவரும் தலையாட்டி விட்டு சென்றார்.

எல்லோரும் சென்று விட்டார்களா, பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டே அவன் தன் அறை இருந்த காரிடாருக்கு வரும்போது, அங்கிருந்த ஸிட்டவுட்டில் கைகளை கட்டியபடி நின்று கொண்டிருந்தாள் நத்தாஷா. அவளை பார்த்ததும் அவன் முகத்தில் இளநகை படர்ந்தது.

அவள் அருகில் அமைதியாக சென்று அதேபோல நின்று கொண்டான். அதை எதிர்பாராதவள் திகைத்து சற்று ஒதுங்கி நின்றாள். அவன் அதைக் கண்டு கொண்டதாக காட்டிக் கொள்ளவில்லை.

“நேத்து பாடுன அந்த ஓல்டு மெலோடி ரியலி ஆஸம். எனக்கு ஒரு ஆசையிருக்கு நத்தாஷா. நம்ம இண்டஸ்ட்ரில யாரும் மேல் அண்ட் ஃபீமேல் வாய்ஸை கலந்து ஒரே சிங்கரா பாடுனதில்ல. மேடையில பாடி இருக்காங்க, ஆனா படத்துல அது போல வந்ததில்ல. உன்னை அது போல பாட வைக்கணும்னு ஆசையிருக்கு. அதுக்கான கான்செப்ட் வருதான்னு பார்ப்பேன். அப்படி இல்லன்னா நாமலே ஒரு கான்செப்ட் கிரியேட் பண்ண வேண்டியது தான். ஆல்பம் சாங் பண்ற ஐடியா இருக்கு. சோ, அதுல அப்படி ஒன்னை ட்ரெண்ட் பண்ணிடலாம்” என்று லகுவாக கூறினான்.

எப்படி இவனால் சாதாரணமாக பேச முடிகிறது? இப்போது தானும் அதுபோல பேச வேண்டுமா? அல்லது மனதில் உள்ள கேள்விகளை கேட்க வேண்டுமா? அவள் திண்டாடி போனாள். அவள் பார்வை தவித்தது.

“என்ன ஆச்சு நத்தாஷா? யூ ஆர் நாட் இன்ட்ரஸ்டட்?” என்று கேள்வி எழுப்பினான்.

“அப்படி இல்ல சார். எனக்கு இதை பத்தி சரியா தெரியல” என்றவள். எதையோ கேட்க வந்து, தயங்குவது அவனுக்கு புரிந்தாலும், என்ன ஏது என்று அவன் கேட்கவில்லை.

“குட் நைட் நத்தாஷா” என்றவன், அவன் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டான். பிறகு நின்று அவளை திரும்பி பார்க்க, அவள் இன்னும் அங்கேயே தவித்துக் கொண்டு நிற்பது தெரிந்தது.

“நத்தாஷா, உன்கிட்ட ஒன்னு சொல்ல மறந்துட்டேன். ப்ரோக்ராமோட டேட் அறிவிச்சுட்டாங்க. நெக்ஸ்ட் டூ வீக்ஸ்ல, ஃபிலிம் பேர் அவார்ட் நடக்கப்போகுது. கெட் ரெடி ஃபார் யுவர் ஃபர்ஸ்ட் அச்சீவ்மென்ட்” என்று கூறிவிட்டு அகன்று விட்டான்.

அவளுக்கு சந்தோஷப்படுவதா? அல்லது குழப்பத்தில் இருக்கும் மனதை அடக்குவதா? என்று தெரியவில்லை.

அவனிடம் கேள்விகள் கேட்க வேண்டும் என்று தொண்டைக் குழி வரை வரும் வார்த்தைகள், அதற்கு மேல் வெளிப்பட மறுக்கிறது. அப்படியே கேட்பதென்றால் கூட என்னவென்று கேட்பது?

‘நீ நினைப்பது போல் ஒன்றும் இல்லை, நீ என்ன அவ்வளவு பெரிய ரதியா?’ என்று அவன் முகத்திற்கு நேராக சொல்லிவிட்டால், உன் முகத்தை எங்கே சென்று வைத்துக் கொள்வாய்? முதலில் உனக்கு கேட்பதற்கு என்ன அருகதை இருக்கிறது? அதற்கு நீ தகுதியானவளா?’ என்று அவள் ஆழ்மனம் கேட்ட கேள்விக்கு, அவளிடம் பதில் இல்லை. தலையை உலுக்கிக் கொண்டு தன்னறையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

தன்னறையிலிருந்து கதவை சிறிதாக திறந்து வைத்துக்கொண்டு, அதன் வழியாக பார்த்துக் கொண்டிருந்த திவ்யாவிற்கு, இவர்களுக்குள் ஏதோ ஒன்று இருக்கிறது என்று தோன்றியது.

ஒருவேளை இந்த கௌதம் ஊருக்கு முன்னால் நல்லவன் வேஷம் போட்டுக் கொண்டு திரை மறைவாக சில லீலைகளை செய்து கொண்டிருக்கிறானா? அதற்கு உடன்படும் பெண்களை அவன் தூக்கி விடுகிறானோ? ஆனால்?

இல்லை என்று ஒரு மனமும், அப்படி இருக்குமோ என்று இன்னொரு மனமும் அவளை குழப்பியது. கண்ணால் பார்ப்பது ஆமாம் என்று அவளுக்கு எடுத்துரைக்க, இதுவரை அவள் உணர்ந்த கௌதமின் பிம்பம் திவ்யாவின் மனதில் வேறாக பரிமாணம் எடுக்க ஆரம்பித்தது.

அடுத்த நாள் நீர்வீழ்ச்சிக்கு சிலர் மட்டும்தான் வந்தனர். பலர் அறையிலேயே ஓய்வெடுத்துக் கொண்டனர். அதன் பிறகு அனைவரையும் திரட்டி சென்னை வந்து சேரும் போது மாலை கடந்து விட்டிருந்தது.

எல்லோரையும் வழி அனுப்பி வைத்தவன் அவர்கள் சென்று வீட்டில் நல்லபடியாக சேர்ந்தார்களா என்று விசாரிக்க மறக்கவில்லை.

நத்தாஷாவின் குடும்பத்தை அழைக்க ரமேஷ் வந்துவிட, அவர்களையும் பாதுகாப்பாக அனுப்பி வைத்து விட்டான். தனக்காக காத்திருந்த தன் வாகனத்தில் ஏறி புறப்பட்டான்.

புஷ்பவல்லி தன்னிடம் பகிர்ந்து கொண்டதை மகனிடம் மகாலட்சுமி பகிர்ந்து கொள்ள, அவனெடுத்த முடிவுகளையும் அவரிடம் பகிர்ந்து கொண்டான் அவன்.

“எல்லாம் சரியானா உங்க அப்பா கிட்ட இதை பத்தி சொல்ல வேண்டாமா?” என்று கேட்டார் மகாலட்சுமி.

“என்னோட கல்யாணத்துல என் அப்பாவா அவர் கண்டிப்பா இருப்பாரு. அதுல மாற்றம் இல்ல. ஆனா என் வாழ்க்கையை மாத்தணும்னு அவர் நினைக்க கூடாது. உங்களால பாத்துக்க முடியும்னு தோணுச்சுன்னா, நீங்க இப்பவே சொல்லலாம். இல்லனா ஊருக்கு தெரியும்போது அவருக்கும் தெரியட்டும்” என்று முடித்துக் கொண்டான் கௌதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!