Skip to content
Post Views: 47
அத்தியாயம்: 25
நேரம், நடு நிசியை நெருங்கிக் கொண்டிருந்தது…
Advertisement
சமையலறையில் எதையோ உருட்டிக் கொண்டிருந்தாள் ரிதன்யா.
காதில் உய்ங் உய்ங் என்று ஆம்புலன்ஸ் இரையும் சத்தம் கேட்டதும், செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தி விட்டு, உடனே எட்டிப் பார்த்தாள்.
Advertisement
Advertisement
அங்கு ஜெயசுதா ஸ்டெக்சரில் படுக்க வைத்து அவசர ஊர்தியில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தார்.
என்னானது என்று பயந்து கீழே இறங்க, பத்ரி கதவைச் சாத்தி விட்டு ஆம்புலன்ஸ்ஸில் ஏற முனைந்து கொண்டிருந்தான்.
Advertisement
“என்னாச்சி?” என்றாள் அவனின் தோய்ந்த முகத்தைப் பார்த்து.
“தெரியல. திடீர்னு மயங்கிட்டாங்க…” என்றான் எங்கோ வெறித்தபடி.
அவனின் இறுக்கம் அவளைப் பாதித்தது.
“பெருசா ஒன்னும் இருக்காது. சரியாகிடும்…” என்றாள் பொதுவாக மெல்லியக் குரலில்.
“ம்…” என்றுவிட்டு ஏறி அமர்ந்தவன், கதவு மூடும் முன்.
“தன்யா… அதி உள்ள தான் இருக்கா. பயந்து போயிருப்பா. கொஞ்சம்…”
“நான் பாத்துக்கிறேன்.” என்றவளிடம் நின்று பேச நேரமில்லாது வண்டி எடுக்கப்பட்டது.
அதிதியை அழைத்தபடி, உள்ளே சென்று பார்க்க, வீடு அலங்கோலமாக இருந்தது. எல்லாப் பொருளையும் தரையில் வாரி இறைத்து போட்டு விட்டு, மூளையில் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தாள் அதிதி.
“அதிம்மா…” என்று அவளின் தோளைத் தொட, பாய்ந்து கட்டிக் கொண்டவள்,
“நான் தான் காரணம் ரிது ஆன்டி. அம்மம்மா நெஞ்சப் பிடிச்சிட்டு விழ நாந்தான் காரணம். எல்லாத்தையும் நான் கெடுத்திட்டேன்.” என்பதை திரும்பத் திரும்பச் சொல்லி நடுங்கிக் கொண்டிருந்தாள்.
அவளை நெஞ்சோடு அணைத்தபடி வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். அவளை வற்புறுத்தி கொஞ்சம் சாப்பிட வைத்தவள், முதுகை நீவி விட்டு உறங்க வைத்தாள்.
அவளுக்கு உறக்கம் வரவில்லை. மெத்தையில் உருண்டு பிரண்டு கொண்டிருந்தவளுக்குச் சுதாவின் நலம் தெரிந்தாக வேண்டும். எப்படிக் கேட்பது? அதுவும் இந்த நேரத்தில்? என யோசித்தவள், மணியைப் பார்க்க, அதிகாலை நான்கரை என்றது.
விடியும் வரை பொறுமை இல்லை. என்னானது என்பது அறிந்தே ஆக வேண்டும் என்று ஆவல் மேலோங்க,
“ஆன்டி எப்படி இருக்காங்க?” என்று கேட்டு குறுஞ்செய்தி அனுப்பினாள் பத்ரிக்கு.
அவன் எப்பொழுது பார்க்கிறானோ அப்பொழுது பார்த்து பதில் சொல்லட்டும் என்று அலைபேசியை அணைக்கப் போக, டிங் என்ற சத்தம் அவன் பதிலைத் தந்தது.
“மைல்ட் அட்டாக்.” என்று வர, மனம் பொருக்காது,
“ஆன்டிக்கு எதுவும் ஆகாது. நீங்க வொர்ரி பண்ணிக்காதிங்க. ப்ளீஸ்…” என்று வாய்ஸ் நோட் அனுப்பினாள்.
இரவு நேரம் உறங்கும் பிள்ளைகளையும், முத்துலெட்சுமியையும் தொந்தரவு செய்யக் கூடாது என்று குரல் தாழ்த்திப் பேசி அனுப்பி வைத்தாள்.
அந்தக் குரலில் என்ன கண்டானோ, அவனின் பாரம் அகன்றார் போல் ஓர் உணர்வு. எல்லாம் மாறும் என்ற நம்பிக்கை.
கூடவே, உடல் ஒரு நொடி சிலிர்த்து அடங்கியது. அதன் காரணம் புரியாது,
“தூங்கலயா தன்யா?”
“தூக்கம் வரல. ஆன்டிக்கு என்னாச்சிங்கற நினைப்பே தூங்க விடல.” என்பதையும் வாய்ஸ் நோட்டாகவே அனுப்பினாள்.
“வீட்டுச் சாவி உங்கிட்ட தான இருக்கு?”
“ம்…”
“எடுத்திட்டு கீழ வா.”
“நீங்க வீட்டுலயா இருக்கீங்க?”
“ம்… வாசல்ல தான் நிக்கிறேன்.” என்றுவிட்டு நிமிரும் போது மெல்லிய கொலுசொலி காதில் கேட்டது.
ஐந்தே ஐந்து முத்து தான் அவளின் கொலுசில் இருக்கும். அதிகமாக சத்தம் எழுப்பாது. ஆனால் இரவு நேர பூச்சிகளின் சத்தத்தையும் மீறி அவளின் வருகையை அறிவித்த அது வித்தியாசமாக இருந்தது.
நைட்டி அணிந்திருப்பாள் போலும். மேலே துப்பட்டாவைப் போர்த்தி, அதன் முனைகளை நெஞ்சோடு அணைத்தபடி இறங்கி வந்தாள்.
“நீங்க ஏன் இங்க வந்திங்க? அங்க சுதா ஆன்டி கூட யார் இருக்கா? ஏன் அவங்களத் தனியா விட்டுட்டு வந்திங்க?” என்று படபடவென்று பொரிய, அவளின் முகம் பார்க்காது இருளுக்குள் நிறமற்றுக் கிட்டந்த செடிகளை வெறித்தான்.
அவனின் உடைந்த தோற்றம் அவளுக்குள் வருத்ததைத் தந்தது. இரு தினங்களுக்கு முன் சுருதியின் வைபவத்தில் பார்த்தவனா இது.
அவளும் தான் பார்த்தாளே!
அவனின் உடையில் இருந்த நேர்த்தி, அலையாய் ஆடிய சிகையை ஜெல் கொண்டு அடைத்து கலைய விடாமல், வசீகரம் குறைய விடாது, உதடுகளில் படர்ந்த புன்னகையை வாட விடாது நின்றவனை விழிகள் கொண்டு வந்து நிறுத்தியது.
ஆண்மை ததும்பும் சிரிப்பிலும், சுருதி கேட்டாள் என்பதற்காக இறங்கி செய்த அவன் வேலைகளையும் ரசிக்காமல் இல்லை அவள்.
நல்ல கம்பீரமான ஆண்மகன் என்று உள்ளம் சொல்லியது.
கூடவே நல்ல மகன்.
தாயின் மீது அதீத அன்பு கொண்டவன். அவரை ஒரு வேலை செய்யவிட்டது இல்லை. அவன் வீட்டில் இருக்கும் நேரங்களில் அவன் தான் சமையல். வீட்டில் இருக்கும் சின்ன சின்ன வேலைகளைக் கூட தூர இருந்து கொண்டே செய்து முடிப்பான்.
கொஞ்சம் மூச்சு பலமாக வாங்கினால் கூட, அவன் பதறி விடுவான் என்பது அவள் அறிந்த ஒன்று.
அப்படிப்பட்டவனால் எப்படித் தாயை மருத்துவ உபகரணங்களுக்கு மத்தியில் பார்க்க முடியும்.
“பத்ரி…” என்று அவள் அழைக்க, அவன் திரும்பவில்லை.
வேகமாக அவள் மாடியேறும் அரவம் கேட்டது. சில நிமிடங்கள் வருகிறாள் என்றது கொலுசொலி. கூடவே நாசியை நிறைத்தது உணவின் வாசனை.
இரவு வேளைக்கான உணவை முடிக்கவில்லை என்பதை மேசையில் இருந்த பதார்த்தங்கள் சொல்ல, அதிதியை உண்ண வைத்து விட்டாள். பத்ரியும் சாப்பிட்டிருக்க மாட்டான் என்றுணர்ந்து, துரிதமாக, கிச்சடி செய்து எடுத்து வந்திருந்தாள் ரிது.
“சாப்பிடுங்க…” என்று தட்டை நீட்ட, அவன் வாங்கவில்லை திரும்பவும் இல்லை.
“அன்று போல் இன்றும் உன் மனத்தில் இருப்பதை என்னிடம் செல்லேன். உன் பிரச்சினைக்குத் தீர்வாக இல்லையென்றாலும் வடிகாளாக இருப்பேன்.” என்ற அவனின் கவலை தோய்ந்த முகம் காணாது, அவள் மனம் அலற, அவன் தான் அசைய மறுக்கிறானே.
ஏதோ ஒன்னு உந்த, அவனின் தோளில் கரம் பதித்தாள். வைத்தக் கரத்தை அழுத்திப் பிடித்தான். பிடியில் இறுக்கம் இருக்கவே அது தாளாது,
“ஸ்…ஆ…” என்று விட்டாள்.
தன் நினைவு அடைந்தவன்,
“சாரி தன்யா…” என்க, மீண்டும் தட்டை நீட்டினாள். பசியின் தீவிரத்தில் கை வேகமாக வேலை செய்து வயிற்றை நிறைந்தது.
உண்டு முடித்த பின்னரும் எதுவும் சொல்லாது அவன் இருக்க,
“எதாவது சொல்லணுமா?” என்றாள் அவனின் மனக்கிணறு திறக்க வேண்டி.
இல்லை என்பது போன்று தலையை அசைக்க வந்தவன், அவளை அருகில் அமர்ந்துபடி சமிக்ஞைச் செய்தான்.
“அதி எனக்கு எப்பவும் ஸ்பெசல். அவ அம்மா அப்பா கூட இருந்த நாள்கல விட எங்கூட தான்… பவானி… என்னோட அக்கா. அதி மாதிரியே இருப்பா.
லவ் மேரேஜ்… PG பண்ணும் போது கூட படிக்கிற பையன லவ் பண்றதா சொன்னா. ஜான் நல்ல வசதியான இடம். சம்பாதிக்க வேண்டிய அவசியமே கிடையாது. அவ்வளோ சொத்து. நிறைய சேர்ஸ் அவன் பேர்ல உண்டு. அதுவே ரெண்டு தலைமுறைக்குத் தேறும்.
அவனுக்குப் பவானிய ரொம்ப பிடிக்கும். அவளுக்கும் தான். எங்க போனாலும் கூடவே கூட்டீட்டு திரிவான். அவள விட்டு ஒரு நொடி கூட பிரிஞ்சி இருக்குறத அவன் விரும்ப மாட்டான். பவானியும் ஹஸ்பெண்ட் கூடவே தான் இருப்பா, எப்பவும்… ரெண்டு பேரும் சேந்து போகாத நாடே இல்லை. ஒரு டிப் ப்ளான் பண்ணாங்க. இத்தாலில எங்கயோ…
அதி பிறந்து மூணு மாசம் தான் இருக்கும். தாய் பால் மறக்காத குழந்தை அவ. திரும்பி வர்றப்ப அதிக்கு ஒன்னற வயசாகிடுச்சி.” என்றவன் பவானியின் கதையைக் கூறினான். அதிதியின் கதையும் கூட.
சாகச விளையாட்டுக்களில் ஆர்வம் கொண்ட ஜான் பனி சறுக்கில் சிக்கி, சில நாள்கள் தேடுதலுக்குப் பின் நடைபிணமாக கண்டறியப்பட்டான்.
உடலில் பல அங்கங்கள் செயல் படவே இல்லை. அவனுக்குத் தனியாக ஒரு கேர் டேக்கர் வைக்க பவானி சம்மதிக்கவில்லை. தன் கணவன் தன் கணவன் என்று அருகில் இருந்து சேவகம் செய்தவளுக்கு ஒரு மகளைப் பெற்று வைத்திருக்கிறோம் என்பது நினைவில் வரவே இல்லை.
ஜானின் குடும்பம் பவானியின் ராசியால் தான் இப்படி நடந்தது என்று பலி போட, அவர்கள் பேச்சிற்கு அஞ்சி கூட அவள் கணவனின் காலடியிலேயே கிடந்தாளோ என்னவோ!
ஊர் ஊராகச் சுற்றினாள், எங்கு சிறந்த மருத்துவம் கிடைக்கும் என்று. அவ்வபோது அதிதியையும் வந்து பார்த்து விட்டுத் தான் செல்வாள். ஆரம்ப கட்டத்தில் கணவன், குழந்தை என்று மெனக்கெட்டவளாள், முடியாது போக, குழந்தை பொறுப்பை முழுமையாக தாயின் வசம் ஒப்படைத்தாள்.
அதற்கு ஜானின் வீட்டாள்களும் ஒரு காரணம். அவர்கள் வீட்டுப் பையன் நடமாட முடியாது கிடைப்பதால், பவானி மட்டுமல்ல அதிதியின் சிரிக்கும் முகத்தைப் பார்க்க விருப்பமில்லை அவர்களுக்கு. தேள் நாக்கு, பவானியைப் பதம் பார்த்து கொண்டே இருந்தது. அவனை முழுதாக கவனித்து, தன்னை நிறுபிக்க வேண்டி, பிள்ளையை மறந்து போனாள்
அதிதியைப் பற்றிக் கூறும் பொழுதெல்லாம், “அதான் நீங்க இருக்கீங்கள்லம்மா… பாத்துக்கங்க.” என்றாள்.
“உன்னை அம்மாயி தேடுறா பவானி. புருஷனுக்காகப் பாக்குறது தப்புன்னு சொல்லை. ஆனா அம்மாயிக்கு ஐஞ்சு வயசு தான் ஆகுது. இது நீ அவ கூட இருக்க வேண்டிய நேரம். ஒன்னு நீ அவ கூட இரு. இல்லன்னா உங்கூட கூட்டீட்டு போ.”
“ம்மா… என்ன பேசுறீங்க? இவள கூட வச்சிட்டு எப்படி நான் அவரக் கவனிப்பேன். அப்பா ட்ரீட்மெண்ட்டுக்காக வெளி நாடு போயிருக்குறதா எடுத்துச் சொல்லி புரிய வைங்க.”
“புரிஞ்சுக்க கூடிய பாக்குவம் கிடையாது பவானி அவளுக்கு. நீயே அவ கிட்ட பேசு.”
“அடிக்கடி நான் பேசுனா அவ அழுவா. பாக்கணும்னு அடம்பிடிப்பா. உங்களுக்குத் தான் வீண் டென்சன். அதுனால நான் இனி பேச போறது இல்ல. சமாளிம்மா. எல்லாம் கொஞ்ச காலத்துக்குத் தான.” என்க,
காலங்கள் பல ஓடியன.
ஜான் குணமாகவே இல்லை. அப்படிச் சொல்வதை விட, அவனுக்குக் குணமாக வேண்டும் என்ற எண்ணமே இல்லை. கால்கள் உணர்ச்சியை மீட்டிருந்தன. எழுந்து வெகு நேரம் நிற்கும் வலு இல்லையென்றாலும், நிற்க முடியும். சக்கர நாற்காலியில் அமர்ந்து செல்லும் அளவிற்கு தேறியும் இருந்தான்.
ஆனால் மனைவியின் செழித்த அன்பை இழக்க விரும்பாதவன், தன் முயற்சியைக் கை விட்டான்.
ஒரு முறை மருமகனைப் பார்த்து விட்டு வந்த சுதா, “அவனுக்கு உடம்பு நல்லா தான் இருக்கு. ஆனா எழுந்து நடக்கணுங்கிற ஆசையே இல்லை. ஆசை இருந்தாத்தான் அடுத்த அடி எடுத்து வைக்கிற முயற்சி எடுப்பான். அவன் நடிக்கிறான்.” என்றார்.
கீழே விழுவது இயற்கை தான். விழுந்தால் எழ வேண்டும். அல்லது எழ முயல வேண்டும். எழும் வழியையாவது கண்டறிய வேண்டும். இப்படி எதுவும் செய்யாது செக்குமாடாய் கிடப்பவனுக்காக நீ பெற்ற பிள்ளையைத் தண்டிக்கிறாய். என்று அவர் சண்டை போட, கோவித்துக் கொண்டு சென்று விட்டாள்.
அப்பொழுது அதிதிக்கு வயது எட்டு இருக்கும். அதன் பின் அதிதியிடம் கூட பேசுவே இல்லை.
சீனிவாசன் கூட எவ்வளவோ சொன்னார். “கணவன் முக்கியம் தான். ஆனா கணவனே கதி என்று இராதே. அவனின் நிலைக்கு நீ காரணமல்ல. உனக்கென்று ஒரு வாழ்க்கை உள்ளது. உன் குழந்தை இருக்கிறது. அதையும் நீ தான் வளர்க்க வேண்டும். செவிலியர் யாரையாவது பணிக்கு வைத்து கவனித்துக் கொள்ளலாம்.” என்று.
ஆனால் பவானி கேட்கவில்லை.
இனி பார்க்க எந்த வைத்தியமும் இல்லை. எல்லாம் கடவுள் செயல் என்று விட, வெளிநாட்டு வாசம் முடிந்து இருவரும் சென்னைக்கே வந்து சேர்ந்தனர். அது அதிதிக்குத் தெரியாது. அவள் தாயும் தந்தையும் வெளி நாட்டில் இருக்கின்றனர் என்று நினைத்துக் கொண்டாள். அவளுக்கு அவர்களின் நினைவே வராதது போல் பத்ரி பார்த்துக் கொண்டான்.
பன்னிரண்டு வயதிருக்கும் அதிதிக்கு. அப்பொழுது பள்ளிச் சுற்றுல்லா சென்ற இடத்தில் பவானியைப் பார்த்து விட்டாள். கணவனை வீல் சேரில் அமரவைத்து கபாலீஸ்வரர் கோயிலுக்குக் கூட்டி வந்திருந்தாள். தன் தாய் தான் என்று பார்த்ததும் அடையாளம் கண்டவளை, மகள் என்று இனம் காணாது கடந்து சென்றாள் பவானி.
தாயும் தந்தையும் ஒரே ஊரில் தான் இத்தனை காலமும் இருந்திருக்கின்றனர். தன்னைத் தான் பார்க்க வரவில்லை என்பது அந்தக் குழந்தையின் நெஞ்சைக் கீறியது. தன் தாய் தன்னை வெறுத்தை ஒதுக்குகிறாள். அவளுக்கு நான் வேண்டாதவள் என்று நினைத்து, அன்று தொடங்கியது அதிதியின் பாதுகாப்பின்மை.
கூடவே பொறாமை இருந்தது. அதுவும் சுதா மற்றும் பத்ரியின் பாசமான உறவில்.
பசுவும் கன்றுவும் சேர்ந்திருந்தாலே தனக்கு அந்த உறவு கிடைக்கும் வரமில்லாது போயிற்றே என்று வருந்தினாள்.
பத்ரியிடமிருந்து கூட விலகியே இருந்தாள்.
என்ன சொன்னாலும் தன்னைத் தான் சமாதானம் செய்வார்கள். அவர்களின் சமாதானம், தனக்குக் கிடைக்காத ஒன்றை திரும்பித் தந்து விடுமா என்ன? என்ற அலட்சியத்துடன் பழகியவளுக்கு ரிதன்யாவின் மீது பிடிப்பு வந்ததை என்னென்று சொல்வது.
அன்றைய இரவு…
தட்டில் தோசையை வார்தெடுத்து, டீவி முன் அமர்ந்திருந்த தாயிடம் நீட்டினான் பத்ரி.
“பசி இல்ல தம்பி. கொஞ்ச நேரம் ஆகட்டும்.”
“நேரமாச்சும்மா. இப்ப சாப்பாட்டாத்தான் செமிக்கும் உங்களுக்கு. இல்லன்னா வயிறு ஊதிக்கும். சுடு தண்ணி குடிச்சிட்டு தூங்காமா நடமாடிட்டே இருப்பீங்க.” என்றபடி தாயின் அருகில் அமர்ந்து ஊட்டிவிடத் தொடங்கினான்.
இரவு உணவு எட்டு மணிக்கும் முடித்தாக வேண்டும். அவரின் உடல் நலனுக்காக அவன் இட்ட கட்டளை அது.
ஹாலில் அவர் படுக்க ஏதுவாய் விரிப்புகளை விரித்தவன், சிறிது நேரம் அமர்ந்து தாயுடன் சீரியல் பார்த்தான். பார்த்தான் என்பதை விட கேலி செய்தான். அதற்கு அவர் சிரித்து மகனைச் செல்லமாக அடித்தார்.
ஆர்டர் செய்ய உணவு வரவும், தாயை உறக்கும் படிச் சொல்லி விட்டு டிவியை அணைத்தான்.
“பட்டர் பன்… உனக்கு ‘நான் வித் சிக்கன் பட்டர் மசாலா’ வாங்கிட்டு வந்தேன். சூடு ஆறுறதுக்கு முன்னாடி சாப்பிட வா.” என்று மேஜையில் அமர, அதிதி வரவில்லை.
“அதி… அதி…” என்று உரக்க அழைத்தபின் வந்தமர்ந்தாள்.
அவளுக்குப் பரிமாறி விட்டு, மத்தியம் மீந்து போன சாததைத் தட்டில் போட்டு, சுதா செய்த மோர் குழம்பை ஊற்றினான்.
சுதாவின் சமையலில் உப்பும் காரமும் இருக்கவே இருக்காது. அதிதிக்கு அது பிடிக்காது. காலையில் வரும் வேலையாள் காலை, மத்தியம், இரவு என்று மூன்று வேளைக்கும் சமையலை முடித்து விட்டுத்தான் செல்வார்.
ஆனால் பத்ரி வந்திருக்கும் நாள்களில் அவரைச் சமைக்க விட மாட்டார் சுதா. முட்டி வலியையும் பொருட்படுத்தாது தானே நின்று சமைப்பார்.
சுவையில்லை என்று மத்திய உணவை அவள் எடுக்கவில்லை. அவளுக்கு பிரியாணி வாங்கிக் கொடுக்க, அவனைக் கடிந்து கொண்டார் சுதா.
“வெளில ஆர்டர் போட்டு வாங்கித்தராம, வீட்டுல அவளச் சாப்பிட சொல்லு தம்பி.” என்று.
“பாவம் ம்மா… பெத்த கடனுக்காக நீங்க வைக்கிறத சாப்பாடுன்னு மதிச்சி நான் சாப்பிடுவேன். அவளால முடியுமா?” என்று கேலி செய்தான்.
இரவுக்கும் வெளியே ஆர்டர் செய்தவன், தனக்கு மீதம் உள்ளதை எடுத்துக் கொண்டான்.
“ரிது அம்மா நார்த்தங்கா குடுத்தாங்க. ஊறுகாய் போட்டு வச்சேன். ஊறிருக்கும்னு நினைக்கிறேன். இந்தா இதையும் சாப்பிட்டுப் பாத்து எப்படி இருக்குன்னு சொல்லு.” கஷ்டப்பட்டு எழுந்து வந்தவர்,
“ப்ரசர வச்சிட்டு ஊறுகாய் போட்டு சாப்பாடுறீங்களா?” என்று அதட்டிய மகன் தட்டில் வைக்க, அவன் சுவைத்துப் பார்த்து புருவங்களை உயர்த்தினான். மகனின் அழகில் மயங்கியவர், கேசத்தைத் தன் விரல்களால் கலைத்து எடுக்க,
ஏனோ அதிதிக்கு அந்தக் காட்சிப் பிடிக்கவில்லை. பட்டென எழுந்து கொண்டவள், “எனக்கு பசிக்கல.” என்றாள்.
“என்ன அம்மாயி இது. சாப்பாட்ட வேஸ்ட் பண்ணலாமா? உனக்காகத்தான் மாமா இதெல்லாம் வாங்கிருக்கான். வேண்டாங்கிற” என்று உணவைப் பிட்டு வாயருகே கொண்டு செல்ல,
“நான் தான் பசிக்கலன்னு சொல்றேன்ல…” என்று சொல்லி கையைத் தட்டி விட, அவர் இரு அடிகள் பின்னால் நகர்ந்து சுவரில் சாய்ந்து நின்றார்.
“அதிதி… என்ன பழக்கம் இது? பெரியவங்க கிட்ட இப்படித்தான் நடந்துப்பாங்களா?” என்று காட்டமாக கேட்டான் பத்ரி. அவனுக்கு அவனின் தாயை யார் எதிர்த்து பேசினாலும் கோபம் ஏறி விடும்.
“அம்மம்மாட்டா சாரி கேளு.” என்று உறும, அவள் அசையாது நின்றாள்.
“அதிதி…” என்க,
“விடுடா… சின்னப்பிள்ளை. அவளப் போய் அதட்டீட்டு. மூடு சரியில்லாம இருக்கும். நான் பேசவும் கோபமாகிட்டா.” என்று ஆதரவுக்கு வர, உள்ளுக்குள் எரிச்சல் மூண்டது அவளுக்கு.
‘பார்! உனக்குத் தான் சப்போர்ட் செய்கிறார்கள். அவரைப் போய் நீ தள்ளி விடுகிறாய்.’ என்று பத்ரி குற்றம் சுமத்தும் பார்வை பார்க்க,
“எனக்கு இந்த வீட்டப் பிடிக்கல. யார் கஸ்டடில இருக்க விரும்புறன்னு அன்னைக்கு ஜர்ஜ் கேட்டப்பவே அப்பா வீட்ட சூஸ் பண்ணிருக்கணும். நிம்மதியா இருந்திருப்பேன்.” என்று அழுது கொண்டே சொல்ல, அதிர்ந்து நின்றனர் இருவரும்.
ஜான் இறந்த போது, பவானியை அந்தக் குடும்பம் பேசாத பேச்சுக்களே இல்லை. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேல் படுக்கையில் கிடந்தவனைக் கவனித்தது பவானி தான் என்ற நினைப்பே இல்லாது துவேசம் தூவி, தன்னைத் தானே மறித்துக் கொள்ளும் அளவிற்கு பவானியைத் தள்ளியது அந்தக் குடும்பம்.
தமக்கையை இழந்த தடம் நீங்குவதற்குள் அதிதியின் பொறுப்பை தாங்கள் எடுத்துக் கொள்வதாக ஜான் வீட்டார் வந்தனர். ஜானின் பெயரில் இருக்கும் பங்குகள் அதிதி பெயருக்குச் செல்ல விரும்பாது.
தமக்கையைத் தான் தாரை வார்த்து பறிகொடுத்தேன். அவளின் மகளை உங்கள் வசம் கொடுத்து பலியிட மாட்டேன் என்று, அதிதியின் கார்டியன் என்ற கஸ்டடியை எடுக்கப் படாத பாடு பட்டான். அப்பொழுது அதிதிக்கு பன்னிரெண்டு வயது என்பதால் அவளின் கருத்தும் முக்கியமாக இருந்தது.
“மாமா கூட தான் இருப்பேன்.” என்று கைகளைக் கட்டிக் கொண்டு சொன்ன அவனின் பட்டர் பன்னா இப்பொழுது இப்படிப் பேசி விட்டுச் செல்கிறாள். அவன் அதிர்ந்து நின்றான்.
மகள் அங்கு சென்றதால் தான் இறந்து போனாள். தற்போது பேத்தியும் அங்கு செல்லத் துடிக்கிறாளே என்று அவரின் இதயம் வேகமாக துடிக்க, மயங்கி விழுந்தார் சுதா.
சிறுமியாக இருந்தவள் வளர்ந்து விட்டாள் என்பதை பெற்றவர்களும் பெரியவர்களும் உணரும் தரும் அது.
கானம் இசைக்கும்…
error: Content is protected !!