Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

73. வேணு கானமிதுContest Stories 2026

ரிதம் 35

ரிதம் 35

“அக்கா, இந்த டிரஸ்ல நீ தேவதை மாதிரி இருக்க” கண்ணாடியின் முன்னால் நின்று உடை மாற்றிக் கொண்டிருந்தவளைப் பார்த்தபடி கூறினாள் ராகினி.



Advertisement

கண்ணாடியின் வழியாகவே தங்கையைப் பார்த்தவள், “எனக்கு எதுவும் சரியா படல. புரோகிராமுக்கு டிரஸ்ஸைக் கூட அவர் வாங்கிக் கொடுத்தா, அது எப்படி? இது உனக்கு சரியா படுதா?” என்று கேட்டாள் நத்தாஷா.

“இதுல தப்பா எடுத்துக்க என்ன இருக்கு? அவர்தான் கிளியரா சொன்னாரே? பத்தாததற்கு அவரும் அவங்க அம்மாவும் தானே வந்து டிரஸ் குடுத்துட்டு போனாங்க? உனக்கு மட்டுமா கொடுத்தாங்க? எல்லாருக்கும் தானே கொடுத்திருக்காங்க? அவங்க ரெண்டு பேரும் டிரஸ் வாங்கப் போகும்போது நம்ம எல்லாருக்கும் வாங்கினதா தானே சொன்னாங்க? முக்கியமா ஸ்டேஜ் மேல ஏறப் போற உங்களுக்கு டிரஸ் பெக்யூலியரா தெரியணும். அதனால டிசைனர் கிட்ட சொல்லி வடிவமைச்சதா சொன்னாங்க. என்னமோ உங்களுக்கு மட்டும் வாங்குன மாதிரி சொல்றீங்க? ப்ரீத்தி அக்கா எவ்வளவு சந்தோஷமா இருக்காங்க தெரியுமா? அவங்களுக்கு அந்த டிரஸ் ரொம்ப பிடிச்சிருக்காம்” என்று அங்கலாய்த்தாள் ராகினி.

Advertisement

Advertisement

‘இவர்களுக்கெல்லாம் தவறாகத் தெரியாதது, தனக்கு மட்டும் ஏன் தெரிகிறது?’ அவர்களைவிடவும் மிகவும் காஸ்ட்லியான உடையை அவளுக்கு வாங்கிக் கொடுத்திருந்தான். நட்சத்திரங்களின் முன்னால் மேடையில் நீ மின்ன வேண்டும், அதனால் இந்த உடைதான் சரியாக இருக்கும் என்று அதற்குக்காரணம் கூறினான்.

அதுவும் அந்தக்காரணத்தை அவன் கூறாமல், அவன் தாயின் வாய்மொழியாகக் கூற வைத்திருந்தான். மறுத்துப் பேச அவளால் முடியவில்லை. மற்றவர்களுக்குத் தோன்றவில்லை போல?

Advertisement

கிட்டத்தட்ட எல்லோருக்குமே உடைகளை வாங்கி வந்திருந்தான், ரமேஷின் தந்தை உட்பட. ஆனால் அவர் அங்கு வருவதாக இல்லை என்று கூறிவிட்டார்.

‘தனக்கு இதுபோல உடைகள் அணிய அருகதை இருக்கிறதா?’ அவள் மனதில் அடுத்த கேள்வி எழுந்தது.

தமக்கையின் முகம் தெளிவில்லாததை உணர்ந்தவள், “இப்ப என்ன அக்கா உனக்கு பிரச்சனை? இந்த டிரஸ்ஸா, இல்ல இந்த டிரஸ்ஸ வாங்கி கொடுத்தவரா?” என்று ராகினி கேட்டுவிட அவள் தடுமாறினாள்.

“சரி விடுங்க, இன்னைக்கு உங்களுடைய நாள். இதை நீங்க நல்லா என்ஜாய் பண்ணனும். ப்ரோக்ராம் முடிய நைட் ஆயிடுமாம். சில டைம் விடிய விடிய நடக்குமாம். ஆனா நான் சொல்லிட்டேன்பா, முழுசா பார்த்துட்டு தான் வருவேன்னு. நீங்க பாதியில போறதா இருந்தா அங்கேயே பாய் தலைகாணி போட்டு படுத்துடுவேன்” என்றாள் ராகினி.

‘அவள் எப்படி சொல்வாள், உடை மட்டுமல்ல அதை வாங்கிக் கொடுத்தவனும் பிரச்சனைதான் என்று?’ இவள் என்னமோ அதை நினைத்துச் சந்தோஷப்படுகிறாள். இதுவரை அவர்கள் வாழ்க்கையில் எட்டாத உச்சத்தை அவள் எட்டி இருக்கிறாள். அந்தச் சந்தோஷம் அவள் தாயின் முகத்திலும் தெரிந்தது. அவள் முகத்திலும் இதுநாள் வரை தெரிந்துகொண்டுதான் இருந்தது.

ஆனால் இப்போது அதில் ஏதோ தடுமாற்றம் தெரிந்தது. எல்லாம் ஒரு நாள் கானல் நீராக மறைந்து விடுமோ என்ற தவிப்பு தெரிந்தது. இதெல்லாம் மாயை, எதுவும் நிலைக்காது என்ற எண்ணம் வலுத்தது. தேவையில்லாத தவிப்பு அவள் மனதை ஆட்கொண்டது.

ரமேஷின் காரில்தான் அனைவரும் புறப்பட்டனர்.

குறிப்பிட்ட நேரத்திற்கு அவர்கள் அந்த இடத்தையும் அடைந்து விட்டனர். கௌதம் அவர்கள் ட்ரூப் மெம்பர்ஸையும் வர வைத்திருந்தான். தன் சொந்தப் பணத்தில் அவர்களுக்கெல்லாம் அவனே டிக்கெட்டும் வாங்கி இருந்தான். ஆனால் முதல் வகுப்பு டிக்கெட் கிடைக்கவில்லை. அதெல்லாம் விருது வாங்கும் திரைத்துறையைச் சார்ந்தவர்களின் குடும்பங்களுக்கு மட்டும்தான். அதில் நத்தாஷாவின் குடும்பமும், கௌதமுடைய தாயும் இருந்தார்கள்.

பரிசு பெறுபவர்கள் எல்லாம் அதற்கும் முன்னால் இருந்த சிறப்புப் பகுதியில் அமர்ந்திருந்தனர். இரண்டாம் வகுப்பு டிக்கெட்டைத்தான் மற்ற ட்ரூப் மெம்பர்ஸுக்கும் பாடகர்களுக்கும் வாங்கி இருந்தான். மியூசிக் டைரக்டருக்கான அவார்ட் வாங்கும்போது, அவர்களையும் மேடை ஏற்றும் எண்ணம் இருந்தது. ஆனால் பாடகராக வாங்கும் போது யாரை ஏற்ற வேண்டும் என்று முடிவை அவன் எடுத்திருந்தான்.

நிலா தொலைக்காட்சியும் அங்கு அதை ஒளிபரப்பிக்கொண்டுதான் இருந்தது. ஆனால் அவனுடைய தந்தை அங்கு வந்திருக்கவில்லை, அவன் அழைக்கவும் இல்லை. அதிலெல்லாம் அவருக்குக் கோபம்தான். இன்னும் அவருக்குக் கோபமூட்டும் செயலைச் செய்ய அவன் காத்திருக்கிறான்.

ட்ரூப் மெம்பர்ஸ் அமர்ந்திருக்கும் இடத்தைப் பார்வையிட்டுவிட்டு, அந்தப் பொறுப்பை ஸ்ரீதரிடம் கொடுத்துவிட்டு, அவன் தன் தாய் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.

“அவங்களுக்கெல்லாம் ஃபர்ஸ்ட் கிளாஸ், நமக்கு செகண்ட் கிளாஸ். நத்தாஷாவோட குடும்பம் இருக்கு சரி, அந்த ப்ரீத்தியோட குடும்பமும் ஃபர்ஸ்ட் கிளாஸ்ல இருக்கு. அவங்கள விட நாம பின்தங்கி இருக்கோமா? இவங்களுக்கு எல்லாம் முன்னாடி இவருக்குத் துணையாய் இருந்தது நம்ம ட்ரூப் மெம்பர்ஸ் தானே? அதெல்லாம் மறந்துட்டாரு” அங்கிருந்தவர்களிடம் ஏற்றிவிட்டுக் கொண்டிருந்தாள் திவ்யா.

ஒரு சிலருக்கு ‘அப்படியும் இருக்குமோ?’ என்ற எண்ணம் கூட எழுந்தது.

“நத்தாஷாவை இங்க கூட்டிட்டு வந்ததில் பெரும்பகுதி ப்ரீத்தியோட ஃபேமிலிக்கு இருக்கு. அவங்க ரெண்டு பேரும் யாரோ கிடையாது, நத்தாஷாவோட ஃபேமிலி தான். அதனால அவங்களுக்கும் டிக்கெட் வாங்கி இருக்காங்க. நத்தாஷா இங்க பார்ட்டிசிபென்ட், சோ அவங்க பேமிலி மெம்பர்ஸ் வந்திருக்காங்க. ஆனா நாம கௌதம் சாருக்காக மட்டும்தான் வந்திருக்கோம், நத்தாஷாவுக்காக கிடையாது” என்று ஸ்ரீதர் புரிய வைத்தான்.

அவன் சொல்வதும் சரி என்று சிலருக்குத் தோன்றியது. ஆனால் சிலருக்குக் குழப்பம் தேங்கி இருந்தது.

“அப்ப அவங்களுக்கும் செகண்ட் கிளாஸ் டிக்கெட் வாங்க வேண்டியது தானே?” என்றாள் திவ்யா.

“இங்க டிக்கெட் கிடைக்கிறது ஒன்னும் அவ்வளவு சுலபம் கிடையாது. இத்தனை பேருக்கும் ஃபர்ஸ்ட் கிளாஸ்ல வாங்க முடியாது. என்னைப் பொறுத்தவரைக்கும் கௌதம் சார் ட்ரை பண்ணி இருப்பாரு. ஏன், இதுக்கு முன்னாடி லீலா வாங்கும்போது அவளும் அவளுடைய ஃபேமிலி மெம்பர்ஸும் மட்டும்தான் வந்தாங்க. அவங்களுக்கும் ஃபர்ஸ்ட் கிளாஸ்ல தான் டிக்கெட் வாங்கி கொடுத்து இருந்தார். அப்ப நானும் கௌதமும் மட்டும் வந்திருந்தோம், ட்ரூப் மெம்பர்ஸோட வெற்றியை கொண்டாடுவதற்காக மட்டும், அவங்களை என்கரேஜ் பண்றதுக்காக” என்றான் ஸ்ரீதர்.

அப்பொழுதும் அவள் எதையோ கூற வர, “ஒவ்வொன்னத்தையும் தப்பான கண்ணோட்டத்தில் பார்த்தால் எதுவும் நிலைக்காது. நாம இங்க நிக்கிறோம்னா அது கௌதமால மட்டும் தான், அதை மறந்துட்டுப் பேசக்கூடாது. அவர் இல்லனா முகம் தெரியாத யாரோ ஒருத்தரா இருந்திருப்போம். இன்னைக்கு பாடகரா படத்துலயும் பாடறதுக்கு வாய்ப்பு கிடைக்குதுனா அது அவரால் மட்டும் தான். கிட்டத்தட்ட நாற்பது பேருக்கு மேல இருக்கோம். இத்தனை பேருக்கும் ஃபர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் எப்படி அவரால வாங்க முடியும்? நாம மட்டும் இல்ல, அங்க இருக்கிற சீட்டுக்கு ஏத்துதான் அவங்க அலோவ் பண்ணுவாங்க. அதுவும் முக்கியமா அவார்ட் வாங்குற ஃபேமிலி மெம்பர்ஸ்க்கு மட்டும்தான் கொடுப்பாங்க. இதெல்லாம் தெரியாமல் பேசிட்டிருக்காத திவ்யா. அவருடைய அவார்ட் ஃபங்க்ஷன்ல நம்மளையும் அவர் நிறுத்த நினைக்கிறார், அதுவே பெரிய விஷயம். இது அவருடைய டேலண்டுக்கு கிடைத்த பரிசு, அதை நம்மகூட பங்கு போட்டுக்க நினைக்கிறாரு. அதைத் தப்பா பேசக்கூடாது” என்று கண்டிக்கும் குரலில் கூறினான் ஸ்ரீதர்.

அவன் சொன்ன வார்த்தை எவ்வளவு சரியானது என்பதை அங்கிருந்த பலர் புரிந்து கொண்டனர். ஆனால் அவள் மனது மட்டும் மாறவில்லை.

என்னவோ எல்லாம் அவள் கையில் இருந்து தட்டிப் பறிப்பது போல இருந்தது. எல்லாம் அவளுடைய மாயை தான். அவளுக்கு விருப்பம் இல்லை என்றால் வராமல் இருந்திருக்கலாம், ஆனால் வரவேண்டும் என்றும் தோன்றிவிட்டது.

ஒரு வாரம் முன்பாக அவனைத் தனியாகச் சந்தித்துப் பேசுவதற்காகக் காரியதரிசியிடம் அனுமதி வாங்கி அவன் கேபினுக்குச் சென்று பேசினாள் திவ்யா.

“வாங்க திவ்யா, உட்காருங்க. என்ன விஷயம்? ஏதாவது ஹெல்ப் வேணுமா?” நுழைந்ததும் நுழையாததுமாகக் கேட்டான் கௌதம்.

“கொஞ்சம் பர்சனலா பேசணும் சார்” என்றாள்.

அவன் புருவம் சுருங்கினாலும், “என்ன சொல்லுங்க? எந்த உதவினாலும் பண்ண தயாராயிருக்கேன்” என்று அக்கறையாகத் தான் கேட்டான்.

அவள் சிறிது நேரம் தன் கை விரல்களைப் பார்த்திருந்துவிட்டு, பிறகு மெல்லப் பேச்சைத் தொடங்கினாள்.

“நான்… எனக்கு உங்களை முதல்லயே ரொம்பப் பிடிக்கும். நீங்க என்னுடைய இன்ஸ்பிரேஷன் மாதிரி. அப்புறம் உங்க கிட்டயே வந்து சேர்ந்ததும் அவ்வளவு சந்தோஷம். கடவுளா என்னை உங்ககிட்ட கொண்டு வந்து சேர்த்ததா நினைச்சேன்.”

அதுவரையும் அவனுக்கு வித்தியாசம் தெரியவில்லை. இதுபோல நெகிழ்வான பேச்சுகளை அவன் அவ்வப்போது கேட்டிருக்கிறான். ஆண் பெண் என்ற பேதம் இல்லாமல் அவன் பார்க்கும் கேட்கும் வார்த்தைகள்தான் இது. அதனால் அப்படித்தான் அவனும் அதை நினைத்தான். ஆனால் அவள் பேச்சைத் தொடரும்போது எல்லாம் மாறி இருந்தது.

“எனக்கு உங்க மேல இருந்த க்ரஷ், இங்க வந்து சேர்ந்ததுக்கப்புறம் காதலா மாறிடுச்சு. உங்க கூட டூயட் பாடும்போதெல்லாம் நான் அதை ரசிச்சு உணர்ந்து பாடினேன். உங்ககிட்ட எப்பயோ சொல்லணும்னு நினைச்சுட்டிருந்தேன். ஆனா ஏதோ ஒரு தயக்கம். இனிமேல் மறைக்கக் கூடாதுன்னு நினைச்சுதான் சொல்ல வந்துட்டேன் கௌதம் சார்” என்று அவள் வாயைத் திறக்க, அவன் எழுந்து நின்றபடி கையை உயர்த்திவிட்டான்.

“எனக்கு என்கேஜ் ஆயிடுச்சு திவ்யா. என்னோட நீண்ட நாள் காதலியை நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். ரெண்டு பேர் வீட்லயும் சம்மதம் வாங்கி திருமணத்துக்கு ஏற்பாடு பண்ணியாச்சு. இதுக்கு மேல நீங்க மனசைப் போட்டுக் குழப்பிக்காம, இதை இப்படியே விட்டுட்டுப் போறது நல்லது” என்று கூறிவிட்டுக் கஷ்டப்பட்டு முகத்தில் புன்னகையை கொண்டுவர முயன்றான்.

அவளுக்கு மீண்டும் அடிபட்ட உணர்வு, அவமானப்பட்ட நிலை. அவள் சொன்னதும் அவன் ஏற்றுக் கொள்வான் என்று நினைக்கவில்லை தான். ஆனால் அவன் மறுதலிக்காமல், திருமண ஏற்பாடே முடிந்துவிட்டது என்று சொல்லும்போது அவளுக்கு இன்னும் கடுப்பாகியிருந்தது.

“சார், அட்ஜஸ்ட்மென்ட் பண்றதா இருந்தாலும் நான் ரெடியா இருக்கேன்…” என்று அவள் வார்த்தையை முடிக்கவில்லை, டேபிளை ஓங்கித் தட்டியபடி எழுந்து நின்றான். அவன் பொறுமை காணாமல் போயிருந்தது.

“ஸ்டாப் இட்! அண்ட் கெட் அவுட் ஆஃப் மை ரூம்!” என்றான் கர்ஜனையாக. அதற்கு மேல் பதறித் துடித்து வெளியில் வந்துவிட்டாள்.

அந்தப் பேச்சை ஜீரணிக்கவே முடியவில்லை கௌதம்மால். தன் ட்ரூப்பைச் சேர்ந்த ஒரு பெண், தன்னிடமே வந்து இப்படிப் பேசுவாள் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதற்காகவா அவன் பாடுபட்டான்? அதுவும் காதலை சொல்ல வந்தவள், அடுத்த நொடியே அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசுகிறாள். எப்படிப்பட்ட காதல் இது??? ச்சே!!

 அவன் நினைத்தது அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதன் பிறகு கடந்த அந்த ஒரு வாரமும் அவள் அகாடமிக்குச் செல்லவே இல்லை. அவளுக்கும் டிக்கெட் வாங்கி இருப்பதாக ஸ்ரீதர் சொன்ன பிறகுதான் இங்கு வந்து சேர்ந்திருக்கிறாள்.

அதையெல்லாம் நினைத்தபடி அமர்ந்திருந்தவளுக்குக் கோபம் அதிகமாகவே இருந்தது.

பெரிய பெரிய நடிகைகள் மேடை ஏறி ஆடினார்கள், பாடகர்கள் பாடினார்கள். கௌதம் மேடை ஏறினான் பாடுவதற்காக.

“ஹாய் கைஸ், இந்த ஃபிலிம் பேர் அவார்ட் ஃபங்க்ஷன்ல உங்களைத் திரும்பவும் பார்த்ததுல எனக்கு ரொம்பச் சந்தோஷம். நான் பாடப்போற இந்தப் பாட்டு எனக்கு ரொம்ப அட்டாச்சான பாட்டு. இது நான் பாடின பாட்டு இல்ல, ஆனா என் மனசுக்கு ரொம்பவும் நெருக்கமான பாட்டு. எனக்குப் பிடிச்ச இந்தப் பாட்டை இந்த மேடையில உங்க முன்னாடி பாடணும்னு ஆசைப்படுறேன்” என்றபடி கைகளை நீட்டிக் காட்டியவன்……..

“கொஞ்சம் உன்

காதலால் என் இதயத்தை

நீ துடிக்க வை

கொஞ்சும் உன் வார்த்தையால்

என் காதலை

நீ மிதக்க செய்

என்னோடு நின்று

கொல்லடி

விலகிச் செல்ல

வேண்டுமோ

என்னோடு சேர்ந்து செல்லடி

பிரிந்து போக வேண்டுமோ….

ஓஹோ ஓ

ஓஹோ ஓ ஓஹோ…”

பாடலை அவன் முடிக்கும்போது கரகோஷம் ஒலித்து வானைப் பிளந்தது. கண்களை மூடியபடி ரசித்து உணர்ந்து பாடினான்.

அங்கிருந்த ஒவ்வொருவரையும் அவன் உருக்கித் தன் குரலில் மயக்கி வைத்திருந்தான். பாடிய அந்தப் பாடகரை விடவும் அவன் சிறப்பாகப் பாடியிருக்கிறான் என்றுதான் சொல்ல வேண்டும்.

 தங்கையின் கையை அழுத்தமாகப் பிடித்தபடி இருந்த நத்தாஷாவின் கைகளின் வியர்வைத் துளிகள் ராகினியின் கைகளை நனைத்திருந்தது.

இத்தனை குளிரில் இவளுக்கு இப்படி வியர்க்கிறது என்றால்? இவள் மனதிலும் ஏதோ இருக்கிறது என்று அவள் தங்கைக்குப் புரிந்தது.

ஆனால் இன்று நடக்கவிருப்பது இன்னும் அவளுடைய பதட்டத்தை அதிகப்படுத்தும் என்று ராகினிக்குத் தெரிந்தாலும், அமைதியாக அதை எதிர்நோக்கிக் காத்திருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!