Skip to content
Post Views: 58
ரிதம் 38
“அவன் டென்த் படிக்கும்போதுதான் இந்த டிவி சேனலும் இந்த ப்ரோக்ராம் கண்டக்ட் பண்றவங்களும் ஒருத்தர்தான்னு அவனுக்கு தெரிஞ்சது. அவங்க அப்பாகூட அப்படி ஒரு சண்டை. அந்த சேனல் முக்கியமா? நான் முக்கியமா?? எனக்காக அந்த ப்ரோக்ராமை நிறுத்துங்கன்னு கூட சொன்னான். ஆனா அவர் அதை கேட்கல. அவருக்கு எல்லாத்தைவிடவும் அவருடைய சேனல் பெருசு. அது எனக்கு தெரியும். அப்பத்தான் அவன் தெரிஞ்சுகிட்டான்.”
Advertisement
“அதுக்கப்புறம் வீட்டை விட்டு வெளியே வந்துட்டான்; ரோட்ல நின்னான். என் அப்பா வந்து கையோட கூட்டிட்டு போனாரு. பிளஸ் ஒன், பிளஸ் டூ எல்லாமே அங்கதான் படிச்சான். அதுக்கப்புறம் காலேஜுக்குதான் திரும்பவும் சென்னை வந்தான். அவன் சென்னையில காலேஜ் படிக்க போறேன்னு சொன்னவுடனே, எங்க அப்பா இங்க வீட்டை வாங்கி கொடுத்துட்டாரு. அடுத்தடுத்து அவரும் போய் சேர்ந்துட்டாரு. இன்னைக்கு இவனோட வெற்றியை பார்க்க அவர் உயிரோட இல்ல” என்றார் மகாலட்சுமி.
“கௌதம் சாருக்கு ரொம்ப கோபம் வருமா?” என்று கேட்டாள் ப்ரீத்தி.
Advertisement
Advertisement
“இல்ல, ரொம்ப அமைதிதான். நியாயமான ஒன்னுக்குதான் அவனுக்கு கோவம் வரும்.”
“எங்க அக்கா மேல அஞ்சு வருஷ காதல்னு சொன்னாரு?? ஆனா இவங்க மீட் பண்ணியே மூன்றரை வருஷம் தானே ஆகுது?” என்று கேட்டாள் ராகினி.
Advertisement
இதே கேள்விதான் அவள் மனதிலும் ஓடிக் கொண்டிருந்தது.
“அதை நீ சொல்றியா? இல்ல நான் சொல்லவா?” என்று மகாலட்சுமி தன் மகனை பார்க்க,
“இந்த கதை சொல்ற வேலையெல்லாம் நீங்கதான்மா நல்லா பண்ணுவீங்க. சோ நீங்களே சொல்லுங்க. என்னோட எல்லா கதைகளும் உங்களுக்கு தெரியுமே?” என்றான்.
“அவன் பிளஸ் ஒன், ப்ளஸ் டூ படித்தது மதுரையில் இருக்கிற சேவியர் ஸ்கூல்” என்று கூற, அவர்கள் இருவரின் புருவமும் இடுங்கியது. அது அவர்கள் பள்ளிக்கு அருகில் தான் இருந்தது.
“அங்கயா நீங்க படிச்சீங்க?? அப்ப உங்களுக்கு எங்களை முன்னாடியே தெரியுமா?” என்று கேட்டாள் ராகினி.
“சாரி, உன்னை நான் கவனிச்சதில்ல?? ஆனா உன் அக்காவை பார்த்திருக்கேன்” என்றதும், அவள் பொய் கோபத்துடன் முறைத்தாள்.
“உண்மையதான சொல்ல முடியும்? உன் அக்காவை பார்த்த பிறகு யாரையும் பார்க்க தோணலையே?? அவள் பாடி கேட்ட பிறகு, எல்லாமே என்னை சுத்தி மறைஞ்சிருச்சு” என்றான். அந்தக் குரலில் அத்தனை காதலிருந்தது.
“என்னை கதை சொல்ல சொல்லிட்டு, நீயே சொல்றியேடா?” என்று மகாலட்சுமி சொல்ல,
“சரி, மீதியை நீங்களே சொல்லுங்க” என்றான்.
இப்பொழுது மகாலட்சுமி தன் பேச்சை தொடர்ந்தார். நத்தாஷாவின் பார்வை அவர் புறம் திரும்ப,
இவன், அவள் காட்டப் போகும் பாவனையை பார்ப்பதற்காக, கன்னத்தில் கை வைத்தபடி அவளை பார்த்திருந்தான்.
நத்தாஷா படிக்கும் பள்ளியின் ஆண்டு விழா நடந்து கொண்டிருந்தது. அந்தப் பள்ளியை ஒட்டியது போல இருந்த ஆண்களின் பள்ளியில் அது கேட்டுக் கொண்டிருந்தாலும், அவர்களுக்கு அதில் கவனம் இல்லை. பள்ளி முடிந்து எல்லோரும் கிளம்பிக் கொண்டிருக்க, அப்பொழுது ஒரு பாடல், அதன் குரல், அவனை தடுத்து நிறுத்தியது. கண்களை மூடி ஆழமாக கேட்டான்.
நந்திதா பாடுவது போலவே தோன்றியது. “தாத்தா ஒரு நிமிஷம் இருங்க. அந்த ஸ்கூல்ல போய் யார் பாடுறதுன்னு பாத்துட்டு வந்துடலாம்” என்று கூறினான்.
“டேய், நேரம் ஆச்சுடா” என்று அவன் தாத்தா கூறினாலும், அவன் அடம் பிடித்து அந்த பள்ளியின் உள்ளே சென்றான்.
ஆண்டு விழா என்பதால், தடுப்பதற்கு ஆட்கள் இருந்திருக்கவில்லை. யார் வேண்டுமென்றாலும் வரலாம், போகலாம் என்ற நிலையில் இருந்தது.
அதுவும் பள்ளி சீருடையில் அவன் செல்லும்போது, யாரும் அவனை தடுக்கவில்லை. உள்ளே சென்று பாடிக்கொண்டிருப்பவளை பார்த்தவனுக்கு, நந்திதாவையே மேடை மீது பார்ப்பது போல தோன்றியது. அவள் குரலை ரசித்துக்கொண்டே அவள் முகத்தை பார்ப்பதற்காக இன்னும் இன்னும் முன்னேறினான் கௌதம். அவன் இழுத்த இழுப்புக்கு அவன் தாத்தாவும் முன்னேறினார்.
முகம் தெளிவாக தெரியும் இடத்திற்கு வந்து நின்ற பிறகுதான், அது நந்திதா இல்லை என்பது புலப்பட்டது. குரலிலும் இப்பொழுது சற்று வித்தியாசம் தெரிந்தது. ஆனால் அந்தப் பெண்ணின் மருண்ட விழிகளும், சாரீரமும், அவனை அங்கேயே தேங்கி நிற்க வைத்தது.
இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன், பாடல் முடிந்த அந்தப் பெண் மேடையில் இருந்து கீழே இறங்கும் வரை பார்த்துக் கொண்டே இருந்தான்.
அவனைத் தாண்டிக் கொண்டு சென்று அவள் தாயின் அருகில் அமர்ந்து கொண்டாள் அந்தப் பெண். குடும்பமாக அமர்ந்திருந்தாலும், அவன் பார்வை என்னமோ தேங்கி நின்றது அந்தப் பெண் மீது மட்டும்தான்.
அவளை சுற்றி அமர்ந்திருந்தவர்கள் அவளுக்கு வாழ்த்துகள் கூற, இவனுமே சென்று கையை நீட்டியபடி “பாப்பா ரொம்ப நல்லா பாடினீங்க. உங்க பேர் என்ன?” என்று கேட்டான்.
“நா…” என்று அவள் ஆரம்பித்ததும்,
“நந்திதாவா?” என்று அவன் கேட்டுவிட,
அவள், “நத்தாஷா” என்று முடித்தாள்.
“எத்தனாவது படிக்கிறீங்க?”
“பிப்த் ஸ்டாண்டர்ட்” என்றாள்.
“பெருசானா என்னவாக போறீங்க?”
“பெரிய சிங்கராக போறேன்” என்றாள்.
அவன் இதழ்களில் மெல்லிய புன்னகை. அதன் பிறகு, தினமும் மாலையில் பள்ளியில் இருந்து வெளியில் வரும்போதெல்லாம் அந்தப் பெண்ணை பார்ப்பதற்காகவே காத்திருப்பான். அவள் தந்தையோடு இரு சக்கர வாகனத்தில் செல்வாள்.
“டேய், எனக்கு நேரம் ஆச்சுடா” என்று அவன் தாத்தா அழைத்தாலும்,
“இருங்க தாத்தா. கொஞ்ச நேரத்துல ஒன்னும் ஆகிடாது” என்று கூறிவிட்டு காத்துக் கொண்டிருந்து, அந்தப் பெண்ணை பார்த்துவிட்டுதான் செல்வான். இதெல்லாம் அவன் தந்தையின் மூலமாக மகாலட்சுமிக்கு தெரிந்த விஷயங்கள்தான்.
“என்னடா?? இந்த வயசுலேயே ரூட்டு விடுற. அந்தப் பொண்ணு சின்னப் பொண்ணுடா” என்று அவன் தாத்தா கூற,
“தப்பு தப்பா பேசாதீங்க தாத்தா. அந்தப் பொண்ணு நல்லா பாடுறாள். அந்த குரல் நந்திதா குரல் மாதிரியே இருக்கு. நான் கூட முதல்ல நந்திதாவே வந்துட்டானு நினைச்சேன். ஆனா இல்லை, இது நத்தாஷா. அந்தப் பொண்ணு பாடகி ஆகணும்னு நான் ஆசைப்படுறேன். அவள் ஆகுறாளான்னு நான் பாத்துட்டே இருப்பேன். அப்படி அவளால ஆக முடியலனா, நான் அவளை ஆக்குவேன். என் நந்திதாவிற்கு ஏற்பட்ட தோல்வியை இந்த நத்தாஷாவுக்காக விட மாட்டேன்” என்றான் திடமாக.
“அதெல்லாம் பெரிய ப்ராசஸ்டா. இந்தப் பொண்ணு சின்ன வயசுல இப்படி சொல்லுது. பெருசானா அந்தப் பொண்ணுக்கு மனசு மாறிடும்” என்றார் அவர்.
“நான் இங்க இருக்கிற வரைக்கும் பார்க்கிறேன் தாத்தா. அதுக்கப்புறம் நீங்க பாத்துக்கோங்க. ஆனா நான் மியூசிக் அகாடமி வைக்க போறேன். அதுதான் என்னுடைய ஆம்பிஷன். நந்திதா மாதிரி தோத்துப்போனவங்களுக்கு அதுல வாய்ப்பு கொடுப்பேன். இந்தப் பொண்ணுக்கு கூட வாய்ப்பு கொடுப்பேன்” என்று அவன் அன்று கூறியது, இன்று நிஜமாகிப் போனது.
“அப்ப, அஞ்சாவது படிக்குற என் அக்கா மேல இவருக்கு காதல் வந்திருச்சா?” இம்முறையும் ராகினிதான் கேட்டாள்.
“அம்மா, இதுக்கான பதிலை நான் சொல்றேன்” என்றான் கௌதம்.
“இல்ல, நான் அகாடமி ஆரம்பிச்சதுக்கப்புறம் நத்தாஷாவை பாக்குறதுக்காக மதுரைக்கு வந்து நின்னேன்” என்று கூறியவுடன் நத்தாஷா அவனை அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் புறம் திரும்பினான் கௌதம்.
“நான் உன்னை அதுக்கப்புறம் பார்க்க வந்தது, நீ பிளஸ் ஒன் படிக்கும் போதுதான். காலங்கள் உருண்டோடினாலும் உன் ஞாபகங்கள் என் நெஞ்சிliருந்து மறையல. அடிக்கடி உன் குரலும், உன் முகமும் ஞாபகம் வரும். ஓரளவுக்கு நான் அகாடமியை செட்டப் எல்லாம் பண்ணிட்டேன். ஆனா நீ பாடிட்டுதான் இருக்கியான்னு எனக்கு தெரிஞ்சுக்க வேண்டியிருந்தது. அப்பயும் நீ உன் ஸ்கூல்ல ப்ரோக்ராம்ல பாடிட்டுதான் இருக்கேன்னு தெரிஞ்சுது. ஆனா அதுக்கடுத்த வருஷம் என்னோட தாத்தா இறந்துட்டாரு. அங்க வரதுக்கு வாய்ப்புகளும் இல்லாம போயிடுச்சு.”
“ஆனாலும் வந்தேன். உனக்காக உன் ஸ்கூல் ஆன்வல் டே என்னைக்குன்னு தெரிஞ்சுட்டு, அதுல நீ பாடுறீயான்னு பாக்குறதுக்காக வந்தேன். நீயும் பாடின” என்று அவளைப் பார்த்தபடி நிறுத்தினான். அந்த நினைவலைகளில் அவன் கண்கள் மின்னுவது அவளுக்கு புரிந்தது.
அவன் கண்களில் அத்தனை காதலை அவளால் உணர முடிந்தது. இதுவரை யார் கண்ணிலும் உணராத காதல். ‘ஒருவரால் தன் காதலை கண்களில் சொல்ல முடியுமா?’ என்று சந்தேகமே எழுந்தது அவளுக்கு. ஆனால் அவன் காட்டிக் கொண்டிருந்தான். ஒரு நிமிடம் அந்த காதலில் அவள் கட்டுண்டாள் என்பதுதான் நிஜம்.
“அந்தப் பாட்டைக் கேட்டு நான் என்னையே மறந்துட்டேன். ஏதோ என்னை கட்டிப்போட்ட மாதிரி ஒரு பீல். இந்த முறை குழந்தைத்தனமான மென்மையான குரல் இல்லாம, அந்தக் குரல்ல ஆழமும், முதிர்ச்சியும் தெரிஞ்சது. பாட்டை கட்டுப்படுத்தி அதுல உணர்வுகளைக் கொண்டு வர தெரிஞ்சுது. வயது பெண்ணின் அழகான பெண் குரல். அப்ப நந்திதாவோட குரல் மாதிரி இல்ல. நத்தாஷாவோட குரல் இதுதானே வெளிப்படுத்துற மாதிரி இருந்தது. ரொம்ப இனிமையா ஒரு சிறந்த பாடகி போல இருந்துச்சு.”
“அந்த வயசுல அதெல்லாம் ஒரு எமோஷனல் ஃபீல்தான்னு என்னால புரிஞ்சிக்க முடிஞ்சுது. ஆனாலும் என்னை கட்டுப்படுத்திக்க முடியல. ஸ்கூல் படிக்கிற பொண்ணு மனச கலைக்கக்கூடாதுன்னு அமைதியா தூரமா நின்னுட்டேன். ஆனா அதுக்கப்புறம் உன்னுடைய சிந்தனை ரொம்ப அதிகமா இருந்தது. இதுக்கு பேர் என்னன்னு நான் ரொம்ப சிந்திச்சு சிந்திச்சு சோர்ந்து போயிட்டேன்.”
“ஃபைனலா ஒரு முடிவுக்கு வந்தேன். ஆனா உன்னை நேரில் பார்த்தா கண்டிப்பா என் மனசு திறந்து காட்டிடுவேன்னு, என்னை நானே கண்ட்ரோல் பண்ணிக்கிட்டேன். முயற்சி பண்ணியிருந்தா உன்னோட வீட்டு அட்ரஸ் வாங்கி, எந்த காலேஜ் சேர்ந்தன்னு என்னால பார்த்திருக்க முடியும். ஆனா நான் பண்ணல. முதல்ல என்னை நான் உயர்த்திட்டு, அதுக்கப்புறம் உன்னை அணுகனும்னு நினைச்சேன்.”
“ஆனா நீ ‘சரிகமபதநி’ல பார்ட்டிசிபேட் பண்ணுவேன்னு நான் சுத்தமா எதிர்பார்க்கல. கண்டிப்பா உனக்கு தோல்விதான் கிடைக்கப் போகுதுன்னு எனக்கு தெரிஞ்சாலும், என்னால உன்னை அதிலிருந்து மீட்க முடியல. இந்த ப்ரோக்ராம் வேணாம், இதிலிருந்து வெளியே வந்துடுன்னு உனக்கு நிறைய வாட்டி நான் சொல்ல ட்ரை பண்ணேன். ஆனா நான் யாரோவா இருந்து சொல்லும்போது, நீ அதை அக்சப்ட் பண்ண மாட்ட.”
“நீ நல்லா பாடுன, கிட்டத்தட்ட டாப் லெவல்ல போன. ஆனா டாப்ல போறவங்களுக்கு என்ன நிலைமைன்னு எனக்கு தெரிஞ்சிருந்தது. யாரு டாப்ல போறாங்களோ அவங்கள ஏத்துற மாதிரி ஏத்திட்டு, அதுக்கப்புறம் சேனலோட டி.ஆர்.பிக்காக அவங்கள அப்படியே விட்டுட்டு இன்னொருத்தரை ஜெயிக்க வச்சுருவாங்க. அவங்க வைல்ட் கார்டுல இருந்து வந்தவங்களா இருக்கலாம், இல்ல பெரிய ஆட்களோட பிள்ளைகளா இருக்கலாம். எப்பவுமே பைனல் காம்பெடிஷனுக்கு மட்டும் வர நான், அந்த வாட்டி எல்லா ப்ரோக்ராமுக்கும் வந்தேன், உன்னை பார்க்கிறதுக்காக மட்டும். கடைசியா நீ உடைஞ்சு அழறதை பார்க்கும்போது, என் நெஞ்சு வெடிச்சுருச்சு. அப்பவே உன் முன்னாடி வந்து அணைச்சு ஆறுதல் படுத்தணும்னு தோணுச்சு. என் பிரண்டுக்கு என்னால பண்ண முடியல, உனக்காச்சும் பண்ணனும்னு என் கைகள் பரபரத்தது. ஆனா அப்ப நமக்குள்ள எந்த உறவும் இல்லை, நட்புகூட இல்லை.”
“இருந்தாலும் வந்தேன். ஆனா, நீ என்னை தப்பா நினைச்சுட்ட. அட்லீஸ்ட் என்னோட ட்ரூப்ல உன்னை இணைச்சுக்கணும்னு யோசிச்சேன். அது மூலமா உனக்கு ஒரு ஹோப் கொடுக்கலாம்னு நினைச்சேன். ஆனா உன்னோட படிப்பு முடியல, பேரண்ட்ஸ் அலோவ் பண்ணல, இப்படி நிறைய ரீசன்ஸ் இருந்தது. நீ வருவியா வரமாட்டியான்னு ரொம்ப தவிப்பா இருந்தேன். நீ போன் பண்ணதுக்கப்புறம், நீ கண்டிப்பா வருவேன்னு தோணுச்சு. உன் படிப்பு முடியுற வரைக்கும் உன்னை டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுன்னு நினைச்சேன். ஆனா அதுக்குள்ள என்னென்னமோ நடந்துடுச்சு” என்று நிறுத்தினான்.
கடைசி வார்த்தையில் அவன் குரலும் கம்மியது. அதை கட்டுப்படுத்திக் கொள்ள, அவன் உதட்டை மடித்து கடித்தபடி தலை குனிந்து கொண்டான்.
சூழ்நிலை இறுக்கமாவதை உணர்ந்த ராகினி,
“அது எப்படி சார்?? நீங்க சொல்லாமலே உங்க மனசுக்குள்ள இருக்கிற காதல் எங்க அக்காவுக்கு தெரியும்?? மனசுக்குள்ள ஹீரோ முரளின்னு நினைப்பா? நீங்க சொன்னாலே என் அக்கா ஏத்துக்க மாட்டாளாம்? இதுல நேர்லேயும் பார்க்க மாட்டீங்களாம், சொல்லவே மாட்டீங்களாம், தூரத்திலேயே நிப்பீங்களாம், பாப்பீங்களாம், ரசிப்பீங்களாம், உதவி பண்ணனும்னு நினைப்பீங்களாம். இப்படி இருந்தா, ஆப்போசிட்ல இருக்கிற பர்சனுக்கு எப்படி தெரியும்?”
“ஒருவேளை எங்க அக்காவுக்கு வேற ஏதாவது காதல் வந்திருந்தா?? என்ன பண்ணியிருப்பீங்க?? தேவதாஸ் மாதிரி தாடியை வளர்த்துட்டு சுத்தி இருப்பீங்களா?” என்று கேட்க,
அவன் இரு பக்கமும் தலையாட்டி சிரித்தபடி அவளை நிமிர்ந்து பார்த்தான்.
“நீ விளையாட்டா கேட்டாலும் கரெக்டான கேள்விதான் கேட்குற. உன் அக்காவுக்கு ஒரு காதல் இருந்திருந்தால் நான் கண்டிப்பா அவளோட வாழ்க்கைக்குள்ள தலையிட்டிருக்க மாட்டேன். ஆனா அவளோட கான்சென்ட்ரேஷன் ஃபுல்லா பாட்டுலதான் இருந்தது; மனுஷங்க மேல திரும்பல. அதை நான் அப்பவே கவனிச்சேன். ஒரு காலத்துல நானும் அப்படித்தான் இருந்தேன். அதனாலவே கொஞ்சம் கான்ஃபிடென்ட்டா இருந்தேன்னு சொல்லலாம். ஆனா விஸ்வாமித்திரரா இருந்த என்னை, மேனகையா என் தவத்தை உன் அக்கா கலைச்சிட்டாள். ஆனாலும் அவள் படிச்சு முடிக்கட்டும்னு நான் காத்துட்டிருந்தேன். கடைசியில் காத்துட்டு இருந்தவன் பொண்டாட்டியை…” என்று வார்த்தைகளை முடிக்காமல் நிறுத்தினான்.
“நந்திதாவையும் விட்டுட்டேன், உன்னையும் விட்டுட்டேன். ஆனா இதுக்கு மேல விடக்கூடாதுன்னு தோணுச்சு. அதனாலதான் ரமேஷ் – ப்ரீத்தி மூலமா உன்னை இங்க வர வச்சேன். இவங்க ரெண்டு பேரும் என்னை தேடி வரலனாலும், ஏதாவது பண்ணி உன்னை நான் இங்க வர வச்சிருப்பேன். என்னோட வேலையை அவங்க சுலபமாகிட்டாங்க. ஆனாலும் உன்கிட்ட நெருங்குறதுக்கும் உன்கிட்ட காதலை சொல்றதுக்கும் எனக்கு தைரியம் வரல. உன்னை ஒரு நிலையில உயர்த்திட்ட பிறகுதான், என்னோட மனசை திறந்து காட்டணும்னு தோணுச்சு. அதனாலதான் இந்த அவார்ட் ஃபங்ஷன் வரைக்கும் காத்துட்டிருந்தேன்.”
“அப்ப எங்க அக்காவுக்கு அவார்டு கிடைக்க இன்னும் ரெண்டு மூணு வருஷம் ஆயிருந்தா, அதுவரைக்கும் காத்துட்டே இருந்திருப்பீங்களா?” இப்போதும் கேட்டது ராகினிதான்.
“வாயாடி மச்சினிச்சி இருந்தா எல்லாத்துக்கும் பதில் சொல்லித்தான் ஆகணும். நானும் சொல்றேன். ஆனா உன் அக்காவுக்கு ஏதாவது கேள்வி இருக்கான்னு கேட்டுடு” என்றபடி அவன் நத்தாஷாவை திரும்பி பார்க்க,
அவள் மௌனமாக தலை கவிழ்ந்தாள்.
“உன் அக்காவோட டேலண்ட் மேல எனக்கு அசாதாரணமான நம்பிக்கை இருந்தது. அவள் அந்த சின்ன வயசுல பாடும் போதே அவ்வளவு கான்ஃபிடன்ட் இருந்தது. கண்டிப்பா அவளுக்கு முதல்வாட்டியே அவார்ட் கிடைச்சிடும்னு எனக்கு நம்பிக்கை இருந்தது. அப்படியே இந்த வாட்டி மிஸ்ஸானாலும் நெக்ஸ்ட் வாட்டி கிடைச்சிடும். ரெண்டு மூணு வருஷம் வரைக்கும் ஆகாதுன்னு என்னோட நம்பிக்கை. ஒருவேளை தள்ளிப் போயிட்டே இருந்தா, காதலை சொல்லியிருப்பேன். ஆனா அவார்ட் வாங்குன பிறகுதான் கல்யாணம் பண்ணிட்டிருந்திருப்பேன்” என்றான் கௌதம்.
“உங்களை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. எனக்கு கல்யாணமே வேணாம். நான் ராசி இல்லாதவள். என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்கனா உங்களுக்கு கிடைச்சிட்டிருக்க வெற்றி கூட கிடைக்காமல் போயிடும்” என்று கண்ணீரில் கரைந்தபடி வீட்டை விட்டு வெளியில் ஓடினாள் நத்தாஷா.
அவன் எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தான். ராகினி உதட்டை பிதுக்கி தோள்களை குலுக்கினாள்.
“இவ்வளவு நேரம் மூச்சு பிடிச்சுகிட்டு நானும் என் அம்மாவும் சொன்னதெல்லாம் வேஸ்ட்டா?” என்று கேட்டான் கௌதம்.
“எங்க அக்காவை கரெக்ட் பண்றது ரொம்ப கஷ்டம் பாஸ்” என்றாள் ராகினி.
அது அவனுக்கும் தெரியும். அவள் எதில் சுழன்று கொண்டிருக்கிறாள் என்பதும் புரிந்தது. ஆனால் தன்னை தனக்காகவே ஏற்றுக் கொள்வாள் என்ற நம்பிக்கையும் இருந்தது.
error: Content is protected !!