ரிதம் 9
ரிதம் 9
“தனியா விட்டுட்டுப் போகச் சொல்லி நான் சொல்லலையே?? இனிமே உனக்கும் உன் தங்கச்சிக்கும் துணையா நான் இருப்பேன். நாம எல்லாருமே போகலாம்” என்றார்.
Advertisement
“ஆனா எப்படிம்மா? அப்ப இந்த வீடு”?? என்று நத்தாஷா கேட்க.
“முதல்ல சென்னையில நமக்கு யாரும் இல்லை. உன்னோட பாதுகாப்புக்காகத்தான் நான் பயந்தேன். ஆனா இப்போ ப்ரீத்தி இருக்காள். அவளுடைய குடும்பமே இருக்கு. நாம எதுக்கு பயப்படணும்?? யாரோ ஒருத்தர் அன்னைக்குக் கொடுத்த வாக்கை இன்னைக்கு நிறைவேத்த நினைக்குறாரு. இப்பயும் முட்டாள்தனம் செய்யக்கூடாது. அவங்க வீட்லதானே வாடகைக்கு இருக்கப் போறோம்?? இந்த வீட்டை வாடகைக்கு விட்டுடலாம். இங்க வாடகை வாங்கி அங்க கொடுத்துக்கலாம். ராகினியையும் அங்கேயே கல்லூரியில சேத்துடலாம்” என்றார் புஷ்பவல்லி.
Advertisement
Advertisement
“ஆனா எல்லாத்தையும் உடனே உடனே பண்ண முடியாதுமா”?
ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பதும், வாடகைக்கு விடுவதும் அவ்வளவு சுலபமாக நிகழ்ந்துவிடுவதில்லை. குறைந்தது மூன்று மாதங்களாவது அதற்கு ஆகும். கிடைத்த வேலையை விட்டுவிட்டு யாரையோ நம்பிப் போகச் சொல்கிறார்கள்.
Advertisement
அவள் தனி மனுஷியாக இருக்கும்போது அந்த முடிவெடுப்பது சுலபமாக இருந்தது. ஆனால் இப்பொழுது ஒரு குடும்பமே தன்னை நம்பி இருக்கும்போது முடிவெடுப்பது சுலபமாக இருந்துவிடவில்லை.
“முயற்சி பண்ணலாம், நடக்கும்போது நடக்கட்டும். அம்மா, எனக்கு வாடகை எல்லாம் வேண்டாம். நத்தாஷாவுக்கு முதல்ல ட்ரைனிங்தான் கொடுக்கப் போறதா சொன்னாங்க. கண்டிப்பா நத்தாஷாவுடைய டேலண்டுக்குச் சீக்கிரமா அவளுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அப்படி கிடைச்ச பிறகு எனக்கு வாடகை கொடுத்தா போதும்” என்றான் ரமேஷ்.
“அது எப்படி தம்பி? பாதுகாப்பா இருக்கிறதுக்கு ஒரு இடத்தைக் கொடுத்திருக்கீங்க. அப்புறம் எப்படி தம்பி வாடகை கொடுக்காமல் இருக்க முடியும்? அது சரி இருக்காது தம்பி” என்றார் புஷ்பவல்லி.
“எல்லாம் சரியா இருக்கும் அம்மா. எனக்கு ஒரு தங்கச்சி இருந்தா அவளுக்காக நான் இதை பண்ணுவேன். என்னை அவ அண்ணன்னு தானே கூப்பிடுறாள்? அந்த தங்கச்சிக்காக நான் பண்ணக் கூடாதா?? நான் வாடகையே வாங்காம இருக்கப் போறது இல்லை. நத்தாஷாவுக்குச் சேலரி கிடைக்கிற வரைக்கும் வாங்காம இருக்கப் போறேன் அவ்வளவுதான்” என்றான் ரமேஷ்.
தனக்காகப் பேசிக் கொண்டிருக்கும் மற்றவர்களைப் பாதூரமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் நத்தாஷா. ஒரு காலத்தில் தனக்காக இப்படி யாரும் குரல் கொடுக்க மாட்டார்களா? என்று ஏங்கியிருக்கிறாள். இன்று கிடைக்கிறது.
ஆனால் ஏற்பதற்கு அவளிடம் தடுமாற்றம் நிறையவே இருந்தது.
அப்புறம் என்ன என்று ஆர்வமாக எல்லோரும் அவள் முகத்தைப் பார்ப்பது தெரிந்தது.
“அப்பயும் உடனே எல்லாம் முடியாதுடி, அதுக்கான ஸ்டெப் எடுத்து ப்ரோசீட் பண்றதுக்கு த்ரீ மந்த்ஸாவது ஆகும்” என்றாள் நத்தாஷா.
“ஓகே ஆகட்டும். நாங்களும் எங்க வீட்டுக்கு மேல இருக்கிறவங்களை காலி பண்ண வைக்கணுமில்லையா?? அதுக்கும் நாள் ஆகும். நீ ஆபீஸ்ல இப்பவே பேப்பர் போட்டுடு” என்றான் ரமேஷ்.
அவர்களுக்குத் திருமணமான அன்று, ப்ரீத்தி ஆசையாகத் தோழியை அறிமுகப்படுத்தி வைக்க, அவள் தயங்கி தயங்கி மேடையில் நெளிந்து கொண்டு நின்றாள். ஆனால் அவளைப் பற்றி ப்ரீத்தி முன்பே சொன்னதனால், அவன் அவளிடம் சகஜமாகப் பேசினான்.
“அண்ணன்கிட்ட பேசுறதுக்கு உனக்கு தயக்கமாம்மா’? என்று கேட்டு அவளையும் இலகுவாக்கி வைத்திருந்தான்.
அன்றிலிருந்து தயக்கங்களை மறைத்து அவளும் அண்ணா என்று பேச ஆரம்பித்திருக்க. அவர்களிடம் நல்ல பழக்கமும், உரிமைப் பேச்சும் வந்திருந்தது. அவன் ஒருமையில் தான் அவளை அழைப்பான்.
இப்பொழுதும் அவன் கூறுவதற்கு, ‘சரி அண்ணா’ என்றுதான் நிறுத்திக் கொண்டாள்.
ஆனாலும் முடிவெடுப்பதற்குத் தடுமாறினாள். அவளுக்குக் கௌதமின் மீது எந்த அவநம்பிக்கையும் இல்லை. ப்ரீத்தி, ரமேஷின் மீதும் மலையளவு நம்பிக்கை இருந்தது.
அவள் தயங்குவதற்கான காரணம் புதிய இடம் என்றுதான். அதிலும் முக்கியமாகத் தாய் எப்படிப் புதிய இடத்தில் பழகுவார்கள்?? அதுவும் சொந்த வீட்டை விட்டு, வாடகை வீட்டிற்குத் தன்னால் இவர்கள் குடிபெயர வேண்டுமா? என்ற தயக்கம். ஆனால் மற்றவர்கள் அவளுக்குத் திடம் கொடுத்தார்கள். தன்னம்பிக்கையையும் கொடுத்தார்கள்.
“ரொம்ப யோசிக்காத அக்கா, எனக்குச் சென்னையில வாழணும்னு ரொம்ப ஆசை. உன் புண்ணியத்துல அது கிடைச்சுட்டுப் போகட்டுமே“? என்று ராகினியும் கூறிவிட்டாள்.
முடிந்தவரை அதற்கான ஏற்பாடுகளைச் சீக்கிரமே செய்வது என்று முடிவானது.
“நீ சென்னைக்கு வரப்போறேன்றதை அந்தச் சார் கிட்ட சொல்லிடலாம். அய்யய்யோ, அவர்கிட்ட நம்பர் வாங்க மறந்துட்டேனே”.
‘அநியாயத்துக்கு நடிக்கிறாளே’? என்று சிலாகித்துக் கொண்டான் அவளுடைய கணவன்.
நத்தாஷா அமைதியாக இருக்க,
‘இவள் வேலைக்காக மாட்டாள்’ என்று கணவனிடம் கண்களை உருட்டினாள் ப்ரீத்தி. அவனுக்கும் அப்படித்தான் தோன்றியது.
“ஹான், அன்னைக்கு அவர் கொடுத்த விசிட்டிங் கார்டு உன்கிட்ட இருக்காடி? கொஞ்சம் தேடிப் பாரேன்” என்று கூறினாள்..
“அது… அது வந்து…” என்று நத்தாஷா தடுமாறினாள்.
அந்த, ‘வந்து போயி’ என்ற தடுமாற்றமே, அது அவளிடம் இருக்கிறது என்பதை ப்ரீத்திக்கு உணர்த்திவிட்டது. கௌதம் கூறிய வார்த்தைகளும் ஞாபகம் வந்தது. ப்ரீத்தி அவளைச் சங்கடப்படுத்த விரும்பவில்லை.
“சரிடி, அதைத் தேடி எடுத்து, அவருக்குப் போன் பண்ணி நீ வர்றதைச் சொல்லிடு. அப்படியே வர்றதுக்குக் குறைஞ்சது மூணு மாசம் ஆகும்னு மட்டும் சொல்லிடு” என்று கூறிவிட்டாள் ப்ரீத்தி.
அவள் எச்சிலை உள் கூட்டி விழுங்கிக் கொண்டு அமைதியாக இருந்தாளே தவிர, தன்னிடம் இல்லை என்று சொல்லவே இல்லை; இருக்கு என்றும் சொல்லவில்லை.
அதை இருவருமே புரிந்துகொண்டு தங்களுக்குள் பார்வைகளைப் பரிமாறிக் கொண்டனர்.
“அப்ப ஃபைனலா சென்னைக்கு போறோமா?? ஹை ஜாலி ஜாலி” என்று துள்ளிக் குதித்தாள் ராகினி.
அன்று உணவை அங்கேயே முடித்துவிட்டு, இரவு தங்கி, காலையில் புறப்பட்டு, அவர்கள் சென்னைக்கு வந்து மற்ற ஏற்பாடுகளைப் பார்த்துக்கொள்ள, இவர்கள் சென்னைக்குக் கிளம்புவதற்கான ஏற்பாடுகளைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.
“சார், அவள் கிட்ட இருந்து கால் வந்ததா”?? சென்னைக்கு வந்த அடுத்த இரண்டு நாட்களில் ப்ரீத்தி கௌதமிற்கு கால் செய்து கேட்டாள்.
“இல்லை ப்ரீத்தி, நீங்க சொன்னதுதான். அவங்க இன்னும் எதுவும் பண்ணலை, ஐ மீன் மெசேஜ் கூட பண்ணலை” என்றான் கௌதம்.
“நீங்க சொன்ன மாதிரி அவள்கிட்ட போன் நம்பர் இருக்கான்னு கேட்டேன் சார். இல்லைன்னும் சொல்லலை, இருக்குன்னும் சொல்லலை, ஆனா திணறினாள். சோ, அவள்கிட்ட போன் நம்பர் இருக்குன்னுதான் எனக்கும் தோணுது. ஆனா ஏன் கால் பண்ண மாட்டேங்குறான்னுதான் தெரியலை” என்று ப்ரீத்தி பேச.
“என் மேல நம்பிக்கை இல்லை, வேற என்ன சொல்றது”? என்றான் கௌதம்.
அவன் குரலில் என்ன இருந்தது என்று ப்ரீத்தியால் கணிக்க முடியவில்லை.
“ஐயோ, அப்படியெல்லாம் இல்லை சார். அன்னைக்கு நடந்ததை வச்சு நீங்க இதுபோல யோசிக்காதீங்க. அன்னைக்கு உங்க வீட்ல இருந்து வந்ததுக்கப்புறம் உங்களைப் பத்தி அவள் நல்லாதான் பேசிட்டிருந்தாள். உங்க குரலைப் பத்தியும் பேசினாள். அவளுக்கு உங்க குரல் ரொம்ப பிடிக்கும், இன்னைக்குப் பார்க்கச் சந்தர்ப்பம் கிடைச்சதுன்னு ரொம்ப பெருமையா பேசினாள்” என்றாள்.
“அப்ப நான் வாய்ப்பு கொடுக்க மாட்டேன்னு தப்பா நினைச்சுட்டாங்களாமா”? என்று கௌதம் கேட்டான்.
“இல்லை சார், அப்படி இருக்காது. வேற ஏதோ காரணம்னு நினைக்கிறேன். என்னன்னு எனக்கும் சரியா தெரியலை. எப்படியும் அவளை நான் கூட்டிட்டு வரத்தான் போறேன். கூட்டிட்டு வந்துட்டு உங்ககிட்ட இன்ஃபார்ம் பண்றேன்” என்று சொல்லிவிட்டு, சோர்ந்த முகத்தோடு அலைபேசியை வைத்தவள், தோழிக்கு அழைத்து பிடி பிடி என்று பிடித்துவிட்டாள்.
“இன்னுமா உனக்கு நம்பர் கிடைக்கலை?? நீ சொன்னாதானே அது மரியாதையா இருக்கும், நான் சொன்னா மரியாதையா இருக்குமா?? ஒரு மனுஷன் நமக்கு இத்தனை வருஷம் கழிச்சு உதவி பண்றேன்னு சொல்லியிருக்காரு. அவருக்கு மரியாதை கொடுக்கணும்னு உனக்குத் தோணலையா?? ஒழுங்கா தேடிப் பிடிச்சு அவருக்குக் கால் பண்ணு. அட்லீஸ்ட் மெசேஜாவது பண்ணித் தொல” என்று காய்ந்துவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
அன்று இரவு கௌதமிடமிருந்து கால் வந்தது.
‘நத்தாஷா தன்னை ஞாபகம் இருக்கிறதா என்று கேட்டு, தான் சென்னைக்கு வருவதாக மெசேஜ் செய்திருப்பதாகச்’ சொன்னான். அப்போதுதான் ப்ரீத்திக்கு நிம்மதியானது.
“சார், நீங்க ஒண்ணும் தப்பா எடுத்துக்காதீங்க. அவள் லைஃப் இப்படி ஆனதுல இருந்தே அவள் யார்கிட்டயும் சரியா பேசுறதில்லை?? என்கிட்டயும் அந்த நிலைமைதான்னா பார்த்துக்கோங்களேன்? ஆனா நான் விடுறது இல்லை, தினமும் கால் பண்ணி பேசிடுவேன். அவளைத் தனியா விடுவதே கிடையாது” என்று படபடப்பாகப் பேசினாள் ப்ரீத்தி.
‘நானா? நானா அவளைத் தவறாக எடுத்துக் கொள்வேன்’? என்று மனதினுள் நினைத்தவன்,
“கண்டிப்பா எடுத்துக்க மாட்டேன். அவங்க என்கிட்ட இவ்வளவு பேசுனதே பெரிய விஷயம், அது எனக்கும் தெரியும்” என்று கூறினான்.
அப்போதுதான் அவளுக்குமே நிம்மதியாக இருந்தது.
……..
நாட்கள் இப்படியே உருண்டோடியது. ஆனால் அந்த நாட்கள் அவ்வளவு இலகுவாக இருந்துவிடவில்லை.
நத்தாஷாவின் திருமணத்திற்கு என்று கனகராஜ் நிறைய செலவு செய்திருந்தார். மகளின் வாழ்க்கை தொலைந்த பிறகு, தன்னால்தான் அவள் வாழ்க்கை தொலைந்தது என்ற வருத்தத்திலேயே உழன்று கொண்டிருந்தவருக்குப் பெரும் விபத்து அரங்கேறியது. ஒரு துக்கத்திலிருந்து மீள்வதற்குள் இன்னொரு துக்கம் அவர்கள் வீட்டை ஆட்கொள்ள. தந்தையைக் காப்பாற்ற, இருக்கும் அனைத்தையும் விற்றுத் தீத்துப் போராடினார்கள்.
ஆனாலும் தோல்விதான் கிட்டியது. அதில் அவர்களின் பண இருப்பு, நகைகள் என்று எல்லாம் கரைந்து போனது.
இப்பொழுது அந்த இரண்டு மாதங்களை வருமானம் இல்லாமல் ஓட்டுவது மிகச் சிரமமாக இருந்தது. அவர்களின் நிலை அறிந்து ரமேஷ், ப்ரீத்தி உதவி செய்ய முன் வந்தார்கள்.
ஆனால் புஷ்பவல்லி அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். தன்மானத்தோடு தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று அவர்களிடம் கூறியவர், காதிலும் கையிலும் போட்டிருந்த சொற்ப சிறு சிறு நகைகளை விற்று அந்த இரண்டு மாதத்திற்கான செலவுகளைப் பார்த்துக் கொண்டவர், சென்னை மாறுவதற்கான ஏற்பாடுகளையும் செய்தார்.
அதீத நம்பிக்கையுடன் எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தனர். அவர்களின் நம்பிக்கை வீண் போகாமல் இருக்குமா???
பார்க்கலாம்…..
……..
மின்னலே நீ வந்ததேனடி,
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி,
என் வானிலே நீ மறைந்துப் போன மாயம் என்னடி….
சில நாழிகை நீ வந்து போனது,
என் மாளிகை அது வெந்து போனது, மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே…
கண் விழித்துப்பார்த்தபோது கலைந்த வண்ணமே,
உன் கை ரேகை ஒன்று மட்டும்
நினைவுச் சின்னமே..
கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இன்று சிதறிப்போன சில்லில் எல்லாம்
உனது பிம்பமே…
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்….
பாடல் ஒலியில் தன்னை மறந்திருந்தான் கௌதம்.
“கௌதம், கௌதம்” என்று குரல் கொடுத்துப் பார்த்துவிட்டு, அவன் அருகில் வந்து அவனைத் தொட்டு உலுக்கினார் மகாலட்சுமி.
திடுக்கிட்டுத் தாயைப் பார்த்தான்.
“என்ன ஆச்சு”? என்று தாய் கேட்க, என்ன சொல்வது என்று புரியாமல் விழித்தவன்,
“நத்திங்மா, எஸ்பிபி வாய்ஸுக்கு ஈடு இணையே இல்லை. எத்தனை வருஷம் ஆனாலும் அவரோட குரலும், ஏ. ஆர். ரகுமான் மெலோடிஸும், வைரமுத்துவோட லிரிக்ஸும் நம்மளைக் கட்டிப் போட்டு வச்சுடும்” என்று கூறினான்.
“வெறும் பாடல் மட்டும்தான் உன்னைக் கட்டிப் போடுதா?? இல்லை நினைவுகளும் கட்டிப்போடுதா கௌதம்”? என்று தாய் கேட்க, அவனிடம் பதில் இல்லை.
புன்னகைத்தபடி தாயை அரவணைத்துக் கொண்டான்.
🥰🥰
