Skip to content
Post Views: 67
ரிதம் 10
இப்படியே இரண்டு மாதம் கடந்திருக்க, அவளை அழைத்துச் செல்வதற்காக ப்ரீத்தியும் ரமேஷும் வந்திருந்தார்கள்.
Advertisement
“கௌதம் சாருக்கு போன் பண்ணி பேசுனியா”? என்று கேட்டாள் பிரீத்தி. தன் தோழி உண்மையைச் சொல்கிறாளா அல்லது பொய் சொல்கிறாளா என்று ஆழம் பார்த்தாள் ப்ரீத்தி.
நத்தாஷாவிடம் அலைபேசி நம்பர் இருந்தது. எடுத்தெடுத்துப் பார்த்தாள். ஆனால் பேசவில்லை. அன்று மெசேஜ் அனுப்பியதோடு சரி.
Advertisement
Advertisement
“இல்லைடி” என்று கூறினாள்.
“அவ்வளவு நம்பிக்கையாடி?? அவர்கிட்ட பேசாமலே இவ்வளவு தூரம் பண்ணியிருக்க” என்றாள்.
Advertisement
“அவர் மேல இருக்க நம்பிக்கையில இல்லைடி. உன் மேலயும் அண்ணன் மேலயும் இருக்க நம்பிக்கையில வர்றேன். அப்படி அது கிடைக்கலைனாலும் ஐ.டி கம்பெனி ஒண்ணுக்கு வேலைக்கு அப்ளை பண்ணியிருக்கேன். ரெண்டுத்துல ஏதாவது ஒன்னு கிடைக்கிற வரைக்கும், கையில இருக்கிற சோர்ஸை வச்சுப் பார்த்துக்கணும். கொஞ்ச நாள் கஷ்டமா தான் இருக்கும். ரெண்டுத்துல ஏதாவது ஒண்ணு கிடைச்சிடும். அந்த நம்பிக்கை இருக்கு. கடவுள் எப்பயாவதுதான் கைவிடுவார், எல்லா நேரத்திலும் இல்லை” என்றாள் நத்தாஷா.
“நல்லாதான் பேசுற?” என்றாள் ப்ரீத்தி.
“ஒரு காலத்துல நல்லாப் பாடுறேன்னு சொன்ன?? இப்போ நல்லாப் பேசுறன்னு சொல்ற”? விரக்தியோடு கூறினாள்.
“வேற என்னால என்னடி பண்ண முடியும்”? என்று கேட்டு வைத்தாள் ப்ரீத்தி.
அவர்கள் வருவது தெரிந்து, ஏற்கனவே எல்லாப் பொருட்களையும் ஏறெடுத்து வைத்திருந்தார்கள். உபயோகப்படுத்திய மற்ற பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, வீட்டிலிருந்து வெளியில் வந்து கௌதமிற்கு அழைப்பு விடுத்தாள் ப்ரீத்தி.
“சொல்லுங்க ப்ரீத்தி கிளம்பிட்டீங்களா”? அவள் ‘ஹலோ’ சொல்வதற்கு முன்பாகவே கேட்டிருந்தான்.
“இன்னும் இல்லை சார், ஆல்மோஸ்ட் எல்லாம் எடுத்து வச்சாச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவோம். இதுக்கப்புறம் உங்ககிட்ட சொல்ல முடியுமான்னு தெரியல? அதான் இப்பவே சொல்லிடலாம்னு கால் பண்ணேன். வீட்டுக்குக் போன பிறகு மெசேஜ் பண்றேன்; முடிஞ்சா கால் பண்றேன். இதுக்கு மேல நத்தாஷா கூடவே இருக்க வேண்டியதா இருக்கும், அதனாலதான்” என்று ப்ரீத்தி தயங்கி நிறுத்தினாள்.
“எனக்குப் புரியுது ப்ரீத்தி. அவங்களுடைய மனசும் எனக்குத் தெரியுது. நீங்களா கால் பண்ணாத வரைக்கும் நான் உங்களை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்” என்றான் கௌதம்.
“தேங்க்ஸ் சார், எல்லாத்தையும் புரிஞ்சுக்கிறீங்க. சிச்சுவேஷனையும் புரிஞ்சுக்கிறீங்க. அவளுக்கு வாய்ப்பையும் கொடுக்குறீங்க. உங்களுக்கு நான் காலத்துக்கும் கடமைப்பட்டிருக்கேன்” என்று நெகிழ்வாகக் கூறினாள்.
‘நானும்’ என்று மனதினுள் நினைத்தவன், “டேலண்ட் இருக்கிற ஒரு வாய்ஸை வெளி உலகத்துக்குக் கொண்டுவர வாய்ப்பை, நீங்க எல்லாரும் சேர்ந்து எனக்குக் கொடுத்திருக்கீங்க. சோ, ஃபார்மாலிட்டீஸான பேச்சுக்கள் வேண்டாம் ப்ரீத்தி. லெட் பி ஃபிரெண்ட்ஸ். நீங்க என் பேரைச் சொல்லியே அழைக்கலாம்னு நான் உங்ககிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன். ஆனா நீங்க இன்னும் சாருன்னே கூப்பிட்டிட்டு இருக்கீங்க. உங்க ஃபிரெண்ட் வந்ததுக்கப்புறமாவது பேர் சொல்லி கூப்பிடுறீங்களான்னு பார்க்கலாம்” என்றான் கௌதம்.
“அது உங்க பெருந்தன்மை சார். இப்ப நீங்க இருக்கிற பொசிஷன், அதுக்கு நாங்க மரியாதை கொடுக்கணும் இல்லையா”?? என்றாள்.
“லெட் இட் பி. டேக் யுவர் ஓன் டைம்” என்றான்.
“தேங்க்யூ சார். ஊருக்கு நாளைக்கு வந்து சேர்ந்திருவோம். அப்புறம் செட்டில் ஆகறதுக்கு ஒரு டூ த்ரீ டேஸ் ஆகும். சோ, அதுக்கப்புறம் என்னைக்கு உங்ககிட்ட கூட்டிட்டு வரணும்னு நீங்க எங்களுக்குச் சொல்லுங்க. நான் அவளை அங்கே கூட்டிட்டு வர்றேன்” என்றாள்.
அவனும் சரி என்ற பிறகு, அழைப்பைத் துண்டித்தவள் ஆழ்ந்த பெருமூச்சை விட்டாள். வானத்தை அண்ணாந்து பார்த்தபடி கன்னத்தில் போட்டுக் கொண்டாள். ‘எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் கடவுளே’ என்று வேண்டிக் கொண்டாள்.
எல்லாவற்றையும் ஏறக்கட்டி வாகனத்திலும் ஏற்றிவிட்டு, அவர்களை மட்டும் தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார்கள் தம்பதியினர் இருவரும்.
‘எல்லாரும் கிளம்பியாச்சு’ என்று வாட்ஸப்பில் மட்டும் மெசேஜைத் தட்டிவிட்டாள் ப்ரீத்தி. அவனிடமிருந்தும் தம்ஸப் போல கையை உய்த்திக் காட்டியிருக்கும் எமோஜி வந்தது.
அடுத்த நாள் காலையில் சென்னைக்கும் வந்து சேர்ந்துவிட்டார்கள்.
வாயார வரவேற்ற ரமேஷின் தந்தையைப் புஷ்பவல்லி அண்ணா என்று அழைத்துவிட, அவருக்குமே, தெரிந்த குடும்பம் அங்கேயே வருவது சந்தோஷம்தான். கணவன் மனைவி இருவரும் தந்தையிடம் அமர்ந்து பேசியபிறகு, சம்மதம் வாங்கித்தான் எல்லா ஏற்பாடுகளையுமே செய்திருந்தார்கள். யாரோ வாடகைக்கு இருப்பதைவிட தெரிந்த மனிதர்கள் இருப்பது, தன் மருமகளுக்கும் துணையாக இருக்கும் என்று நினைத்தார். பிள்ளைகள் ஒரு குடும்பத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கு அவர் தடையாக இருப்பானேன்? முக்கியமாக அவர்களின் நிலை, பெண்களின் பாதுகாப்பு என்று சிந்தித்தவர். உடனே சம்மதம் தெரிவித்திருந்தார்.
அன்றைய உணவு வெளியில் இருந்து வரவழைக்கப்பட, ரமேஷ் வீட்டிலேயே அமர்ந்து ஒரே குடும்பமாகச் சாப்பிட்டார்கள்.
அதன் பிறகு அடுத்து வந்த மூன்று நாட்களில் வீட்டை ஒழுங்காகச் சீர்படுத்தி நிமிரும்போது அக்கடா என்று இருந்தது.
ராகினியின் அந்த வருடப் படிப்பு முடிய இன்னும் இரண்டு மாதங்கள்தான் இருந்தது. அந்த இரண்டு மாதங்களைத் தள்ளிப்போட்டுச் சென்னைக்குத் தாமதமாகச் செல்ல அவளுக்கு விருப்பமில்லை. எப்படியும் தேர்வுக்கு முன்னாலும் விடுமுறை கிடைக்கும் என்பதால், நீண்ட விடுப்பு எடுத்துக் கொண்டு தேர்வுக்கு மட்டும் வந்து எழுதுவதாக லெட்டர் கொடுத்துவிட்டு வந்துவிட்டாள்.
இவர்கள் குடித்தனம் வந்துவிட்டார்களே தவிர, அவர்களின் மதுரை வீட்டிற்கு யாரும் குடிவந்திருக்கவில்லை. தாமதம் ஆவதும் நல்லதுக்குத்தான் என்று எண்ணினார்கள். ராகினியின் தேர்வின்போது வீட்டிற்கே சென்று தங்கித் தேர்வை முடித்துவிட்டு வரலாம் என்ற முடிவைத் தாயும் சிறிய மகளும் எடுத்திருந்தார்கள். அடுத்த வருடப் படிப்பை மட்டும் இங்கே சென்னையில் தொடர்ந்து கொள்ளலாம் என்று ஏற்பாடு.
“ஏய், வீடு செட்டிலாயிடுச்சுல்ல?? நாளைக்குப் போய் கௌதம் சாரைப் பார்த்துட்டு வந்துடலாமா”? என்று கேட்டாள் ப்ரீத்தி.
அவளுக்கு இன்னுமே ஏதோ சங்கடம் இருந்தது. இந்த மூன்று வருடங்களில் சாரீரம் எல்லாம் மாறிவிட்டதோ? ஸ்ருதியும் நயமும் சேருமா? முதலில் எல்லாம் அவள் பாடம் படித்தாலும் அவ்வப்போது பயிற்சிகளையும் மேற்கொள்வாள். ஆனால் இப்பொழுது இந்த ஒரு வருடமாக அது எல்லாமே மாறியிருந்தது. அவள் வாழ்க்கையைப்புரட்டிப் போட்ட அந்த ஒரு வருடம் அவள் நினைவுகளில் வராமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் வந்தது. தாழ்வு மனப்பான்மை அவளுக்கு அதிகமாகவே இருந்தது.
“என்னடி, நான் கேட்டுக்கிட்டே இருக்கேன், நீ கனவு கண்டுகிட்டு இருக்கிற?? இப்பவே பெரிய பாடகி ஆயிட்ட மாதிரி கனவு காண்றியா? அந்த கனவுல எங்கேயாவது ஒரு மூலையில நான் இருக்கேனா”?
“கனவு காண்றதையே நான் விட்டுட்டேன்டி. எனக்கு என்ன நடக்கணும்னு விதி இருக்கோ அது நடந்தேயாகும். நான் விதியோட வழியில போகலாம்னு முடிவெடுத்துட்டேன். எதைப் பத்தியும் யோசிக்கலை. கடல்ல விழுந்து தத்தளிக்கிறவனுக்கு நீச்சல் தெரியலைன்னாலும், நீந்த முயற்சி பண்ணுவான். ஆனா ஒரு கட்டத்துல சோர்வடஞ்சிடுவான். முடியலைன்னு ஒரு நிலை வரும்போது அலை எந்தப் பக்கம் இழுத்துச் செல்லுதோ அந்தப் பக்கம் போகலாம்னு முடிவெடுத்து அமைதியா இருந்திடுவான். அந்த நிலையில்தான் நானும் இப்ப இருக்கேன்” என்றாள் நத்தாஷா.
ப்ரீத்தி அவளின் தோள்களைப் பிடித்து இப்படியும் அப்படியும் அசைத்து அவளுக்குப் பின்னால் யாரையோ தேடினாள்.
“என்னடி”? என்று நத்தாஷா கேட்க,
“என்னோட டியர் ஃபிரெண்ட் நத்தாஷான்னு ஒரு பொண்ணு இங்க இருந்தா, அவளைப் பார்த்தீங்களா பாட்டி”? என்று கேட்டு வைத்தாள்.
முதலில் புரியாமல் விழித்தவள், பிறகு தன்னைத்தான் அவள் அப்படிக் கூறுகிறாள் என்பதை உணர்ந்து, நீண்ட நாளுக்குப் பிறகு மெல்லிய புன்னகையை உதிர்த்தாள்.
“இனிமே உன் வாழ்க்கையில இந்தப் புன்னகை எப்பவுமே இருக்கணும். இந்த வீட்ல தொடங்கின இந்தப் புன்னகை காலத்துக்கும் உன்கிட்ட இருக்கணும்னு நான் வேண்டிக்குறேன்.”
நத்தாஷா இரு பக்கமும் தலையாட்டினாள். “இந்தப் புன்னகை என்கிட்ட இருக்குமான்னு தெரியலை, ஆனா நீங்க எல்லாம் என் மேல வச்சிருக்க நம்பிக்கையைக் காப்பாத்தணும்னு தோணுது.”
“ஏன் இருக்காது?? இனி அது உன்கிட்டதான் காலம் முழுக்க இருக்கப் போகுதுன்னு என்கிட்ட இப்ப வரும்போதுதான் சொல்லிட்டுப் போச்சு” என்று அவள் கூறியது என்னவோ நத்தாஷாவின் புன்னகையைப் பற்றித்தான்.
“வர வர நீ ரொம்ப கிண்டல் பண்ற”?
“நீ எதிர்த்துக் கிண்டல் பண்றதைத் தொடங்குற வரைக்கும் நான் பண்ணிக்கிட்டேதான் இருப்பேன்” என்றாள் ப்ரீத்தி.
எல்லோரும் அவளை மீட்டெடுக்கத்தான் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவளால் அது முடியுமா?? என்றுதான் தெரியவில்லை. இருந்தாலும் இவர்களுக்காகவாவது அவ்வப்போதுதான் புன்னகைக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
“எனக்கு ஏதோ ஒரு தயக்கம் இருக்குடி. எனக்கு அது சரியா சொல்லத் தெரியலை? என்னால சரியாப் பாட முடியுமான்னு கூடத் தெரியலை” என்றாள் நத்தாஷா.
“எங்களுக்கெல்லாம் உன் மேல இருக்கிற நம்பிக்கையை நீ உன் மேல வை. உன்னால கண்டிப்பா பாட முடியும். கௌதம் சார் அன்னைக்கு ஒண்ணு சொன்னாரு. எனக்கு அது புரியலை, ஆனா உனக்குத் புரியும்னு சொன்னாரு. கண்டிப்பா கொஞ்சம் மாதங்கள் பிராக்டிஸ் கொடுத்துட்டு அதுக்கப்புறம்தான் பாடுறதுக்கு வாய்ப்புக் கொடுப்பாராம். ஏன்னா மேடையில பாடுறதும், சினிமா ஸ்டுடியோவுல பாடுறதும் ஒண்ணு கிடையாதாம். இன்னும் இதுபோல குரல்வளம், ஸ்ருதி நயம்னு ஏதேதோ சொன்னாரு. எனக்கு ஒண்ணும் விளங்கலை. ஒரு பாட்டு தூக்கி விட்டுடுச்சுன்னா, அதுக்கப்புறம் உங்களைக் கூட உங்க ஃபிரெண்ட் கண்டுக்க மாட்டாங்கன்னு சொன்னாரு” என்று கூறிவிட்டு இலகுவாகப் புன்னகைத்தாள்.
“அதுக்கெல்லாம் அதிர்ஷ்டம் வேணும். ஆனா நான் அதிர்ஷ்டம் இல்லாதவள். அதனாலதான் எந்த முயற்சியும் எடுக்கறதுக்கு எனக்குத் தயக்கமா இருக்கு” என்றாள் நத்தாஷா.
“சும்மா ஏதேதோ உளறாத.”
“அவருக்கும் என் மேல ரொம்ப நம்பிக்கை இருக்குல்ல?? ஆனால் அந்த நம்பிக்கை சரியா தவறான்னு எனக்குச் சொல்லத் தெரியலை”? என்றாள் நத்தாஷா.
“பார்த்துக்கலாம்டி. இவ்வளவு தூரம் வந்தாச்சு. எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணியாச்சு. அவரை நேர்ல பார்த்து, அவர்கிட்ட பேசிட்டா கொஞ்சம் மனசு ரிலாக்ஸாகிடும். அப்புறம் அவர் என்ன சொல்றாரோ, அப்படி பண்ணிக்கலாம். இவ்வளவு பண்ணிட்டோம், அதைப்பண்ண மாட்டோமா”? என்றவள், அடுத்த நாள் கௌதமை நோக்கிச் செல்வது என்று முடிவெடுத்து, அதையும் அலைபேசி வழியாக அவனுக்குத் தெரியப்படுத்திவிட்டாள் ப்ரீத்தி.
“வீட்டுக்கே வந்துருங்க” என்று அவனும் கூறியிருக்க, மறுநாள் ரமேஷோடு சேர்த்துதான் அந்த வீட்டிற்கு மூவருமாகப் புறப்பட்டார்கள்.
“அக்கா, அந்த கௌதம் சாரைப் பார்க்கணும் போல எனக்கும் ஆசையா இருக்கு” என்று கேட்டாள் ராகினி.
“எனக்கே ரொம்பத் தயக்கமா இருக்குடி” என்று கூறினாள் நத்தாஷா.
“கொஞ்ச நாள் போகட்டும் ராகினி. அவர் நல்ல டைப்தான். உங்க அக்கா அங்க முதல்ல சேரட்டும், ப்ராக்டிஸ் எடுக்கட்டும். அதுக்கப்புறம் உன்னைக் கூட்டிட்டுப் போறதுல எந்தப் பிரச்சனையும் இருக்காது. நீயும் அதுக்குள்ள உன் எக்ஸாம்ஸ் எல்லாம் கவனிச்சு முடிச்சுட்டு வந்துரு” என்று கூறினாள் ப்ரீத்தி.
அவளுடைய சங்கடம் ஓரளவுக்குத் தங்கைக்கும் புரிந்தது. அதனால், ப்ரீத்தி சொல்வதை உடனே ஏற்றுக் கொண்டாள்.
“ஓகே ஓகே, ஒண்ணும் பிரச்சினை இல்லை. நீங்க சொல்றது கரெக்ட்தான். நானும் இப்பவே போய் பார்க்கணும்னு ஆசைப்படல, ஜஸ்ட் உங்க காதுல போட்டு வைக்கிறேன். எங்க அக்கா பெரிய பாடகியானதுக்கப்புறம் அவரை நேர்ல பார்த்து நன்றி சொல்லணும். அப்பதான் அவரை முதல் முறையா நான் பார்ப்பேன்” என்று கூறினாள்.
தங்கையின் கன்னத்தை வருடிவிட்டு, தாயின் காலில் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு, ரமேஷின் தந்தையிடமும் நல்லாசி பெற்றுக் கிளம்பினாள் நத்தாஷா தன் புதிய பயணத்தை நோக்கி.
அது புதிய பயணமா? அல்லது அவள் வாழ்க்கையின் மறுதொடக்கமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
error: Content is protected !!