Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சோடு ரீங்காரம்

ரீங்காரம் – 17

ஒரு வாரம் உருண்டோடி இருந்தது தமிழ்செல்வன் சென்னை வந்து. இன்னும் அவன் படத்தின் கசிந்த காட்சிகள் ஆங்காங்கு அல்ல, பல இடங்களில் பேசப்பட்டுத் தான் வந்தது.

பலர் அவனுக்கு ஆதரவு தெரிவித்து வந்தாலும் “படம் அவ்வளவு தான்” என்கிற வருத்தத்தையும் உடன் தூக்கியே அவனுக்கு ஆறுதல் கூறினர். தமிழோ தலை அசைப்பதோடு சரி, மொத்தமாய் சமூக வலைத்தளங்களில் இருந்து மறைந்து போயிருந்த நிலையில் இப்பொழுது அனைவர் பார்வையும் சரத் சந்திரன் பக்கம் தான்.

“நல்லா தானே சார் இருக்கு, வந்தது ஒரு சீனா இருந்தாலும் நல்லா எடுத்துருக்கான் பையன், நான் சொல்லுற ஆள பாருங்க உதவி கிடைக்கும்” தமிழின் அடுத்த படத்தின் தயாரிப்பாளர், சரத் சந்திரனுக்கு உதவ விநியோகஸ்தர்களும் கிடைத்துவிட்டனர்.

அதே மகிழ்ச்சியில் தமிழுக்கு செய்தி கூறியவர், “எல்லாம் ரெடினா ஒரு பிரஸ் மீட் வைக்கிறேன் வந்துரு” என்றார்.



Advertisement

கூறியது போலவே அடுத்த நாள் காலை பத்து மணிக்கு படத்தின் தயாரிப்பாளர், தமிழ் மற்றும் படத்தின் கதாநாயகனை சுற்றி இருபது முப்பது பேர் சூழ்ந்திருந்தனர்.

“உங்க படத்தோட முக்கியமான கிளைமாக்ஸ் சீன் இப்போ இன்டெர்நெட்ல பிரீ ஷோ மாதிரி ஓடுது. ஒரு டைரக்டரா உங்க கேரியர்க்கு இது ஒரு மிக பெரிய அடி இல்லையா?”

“விநியோகஸ்தர்கள் எல்லாம் பணத்தை திரும்ப கேக்குறாங்களே என்ன பண்ண போறீங்க?”

Advertisement

தமிழ் குறுக்கிட்டு, “நீங்க இன்னும் அப்டேட் ஆகலனு நினைக்கிறன். எங்க படத்துக்கு டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் கெடைச்சிட்டாங்க” என்றான் மெல்லிய சிரிப்போடு.

Advertisement

அதற்கு ஒருவர், “ஓடாத படத்துக்கு இனி எது கிடைச்சா என்ன, கெடைக்கலனா என்ன?” கேலி செய்ய சிரிப்பு அலை அங்கு பரவியது.

படத்தின் நாயகன், “ஒரு டீம் ஓட மொத்த உழைப்பும் போயிருக்கு எப்படி நீங்க கேலி பண்ணி சிரிக்கிறீங்க” மனம் தாங்காமல் சற்று கோபத்தை காட்டிவிட,

“உழைச்சா பத்தாது சார், அதை பத்திரப்படுத்தவும் தெரியணும்” வேறொரு பத்திரிகையாளர் கூற, நாயகனின் கையை பிடித்து அவனை சாந்தப்படுத்தினான் தமிழ்.

Advertisement

“ரொம்ப தேங்க்ஸ் சார், இனி மைண்ட்ல வச்சிக்கிறேன். சரி இந்த லீக் ஆன கிளைமாக்ஸ் எப்படி இருந்துச்சு எனி கமெண்ட்ஸ்?”

தமிழின் கேள்விக்கு, “நல்லா இருந்துச்சு சார், என்ன ரெண்டு நிமிச வீடியோவுக்கே அழுக வச்சிட்டீங்க” என்றான் ஒருவன்.

இதே போல பல பாராட்டுகள் வர, “ரொம்ப தேங்க்ஸ். உங்க எல்லாருக்கும் ரொம்ப நன்றி வந்ததுக்கு. உங்கள வர சொன்ன விஷயத்தை சொல்லுறேன். நீங்க எல்லாரும் சொன்ன மாதிரி என்னோட படம் லீக் ஆனது உண்மை தான். அது என்னோட படமே தான் சந்தேகமே வேணாம்.

பட் திருடுனவங்களால என்னோட சிந்தனைய திருட முடியல, நீங்க பாத்து ரசிச்சு பாராட்டுன அந்த கிளைமாக்ஸ் நான் ரிஜெக்ட் பண்ணது” கூட்டத்தில் மீண்டும் ஒரே சலசலப்பு.

“சார், படத்தை ஓட்ட இதெல்லாம் ஒரு கதையா?” பத்திரிகையாளர் கேட்க,

தமிழ், “நான் ஏங்க இப்போ சொல்ல போறேன், என் படம் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. என் கதைக்கு நான் மூணு விதமான கிளைமாக்ஸ் எடுத்து வச்சிருந்தேன். அதுல இது நான் மட்டும் இல்ல என் டீம் மொத்தமும் ரிஜெக்ட் பண்ண முதல் சீன்” என்றான்.

“அது கிளைமாக்ஸ் இல்லனா அதை மேடைக்கு மக்களுக்கும் தெரிவிக்க வேண்டியது தானே, எதுக்கு இவ்ளோ நாள்?” பத்திரிகையாளர்.

“ஓசில விளம்பரம் பண்றதுக்கு யாருக்கு தான் சார் பிடிக்காது? கடவுளே பாத்து குடுத்தான்னு நினைச்சு யூஸ் பண்ணிக்கிட்டோம்” என்றான் கொஞ்சமும் அசராமல்.

“சொல்லப்போனா இத லீக் பண்ண அந்த நல்ல உள்ளங்களுக்கு என்னுடைய நன்றிகள். நீங்க எல்லாரும் சொன்ன மாதிரி என் படம் முடியலைங்க, இப்போ தான் இன்டெர்வலே முடிஞ்சிருக்கு”

தமிழின் அதிரடியான பத்திரிகையாளர் சந்திப்பிற்கு பிறகு இன்னும் അവൻ படத்தை பற்றிய பேச்சுகளும் எதிர்பார்ப்பும் அதிகம் பரவியது.

“படத்தின் நீக்கப்பட்ட காட்சியே இதனை அருமையாக உள்ளதெனில் உண்மையான கிளைமாக்ஸ் எப்படி இருக்கும்?” என்றும்,

“இவ்ளோ நல்ல சீன் கட் பண்ணிட்டு மொக்கையான சீன் தான் போட போறாங்க” என்றும்,

“படத்தை ஓட வைக்க இப்டி சொல்றாங்க, தியேட்டர்ல பாத்தா அதே சீன் தான் இருக்க போகுது” என பல விதமான பேச்சுகளும் சர்ச்சைகளும் காற்றில் பறந்து வந்தது.

அத்தனை கலவரத்தின் மத்தியிலும் படம் குறித்த நாளில் வெளியாகி பலரின் எண்ணத்தை மாற்றியது.

தந்தையின் ஆசைப்படி சேலத்தின் மிக பெரிய திரையரங்கில் அவன் படம் வெளியாக, ரசிகர்களோடு பார்க்க சென்ற தமிழுக்கு எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு. பாராட்டு மழையில் தமிழும், படத்தின் நடிகர் நடிகைகளும் நனைந்து போயினர்.

அடுத்தடுத்த நாட்களில் கூட்டம் கூட முக்கிய காரணமே தமிழ் மாற்றிய அந்த கிளைமாக்ஸ் காட்சி தான். சரத் சந்திரன் தமிழை ஆற தழுவி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

“எவ்ளோ கஷ்டம் வந்தாலும் நீ ஜெயிச்சு முன்னேறி போய்கிட்டே இருப்படா” அதோடு நில்லாமல், “சக்தி வீட்டுக்கு போகலாமா?” பெரிய குண்டாய் தூக்கி போட்டார்.

“ம்ம் போயி?” கேட்டான் அவரை கேலி செய்யும் நோக்கோடு.

“பொண்ணு கேப்போம்” என்றார் அவரும் விடாமல்.

“என்கிட்ட என்ன இருக்குனு பொண்ணு கேக்குறது?” – தமிழ்

“உன்னோட நல்ல மனசு இருக்கு, அதை விட என்ன வேணும்?” பேரழகன் கேட்டார் குறுக்கே வந்து.

அவரை முறைத்தவன், “பணம் வேணும். அவ குடும்பம் எவ்ளோ வசதி தெரியும்ல? இப்போ என்கிட்ட சொந்தமா ஒரு பைக் கூட இல்ல. எந்த மூஞ்ச வச்சு கேக்க சொல்றிங்க?”

“படம் நல்லா போகுதுல, மத்த ப்ரொட்யூசர்ஸ் மாதிரி இவரும் உனக்கு கார் வாங்கி தருவார் தல” சந்தடி சாக்கில் ஒரு பில்லை நிமலன் போட, பதறினார் சரத்.

“அடி போடுவேன். வாங்கி தரலாம் அதுக்குன்னு பெரிய வண்டி எல்லாம் முடியாது” என்றார்.

தமிழ் அதையும் பெரிதாக எடுக்கவில்லை, “சார் உங்களுக்கு ஏதாவது செய்யணும்னு தோணுச்சுனா அதை எனக்கு பணமா தந்துடுங்க, தப்பா நினைக்க வேணாம்” என்றான்.

“சரிடா, நீ எப்படி எல்லாத்தையும் சமாளிக்க போற? ஒரு வருஷமே வச்சுக்கோ, அது வர அந்த பொண்ணு நிலைமையை யோசி, அவ வீட்டுல ஏற்கனவே கல்யாணம் பேசி நின்னுருக்கு. சும்மா இருப்பாங்களா சுத்தி இருக்குறவங்க?” சரத் சந்திரன் கேள்வி அவனுக்கே எழுந்தது தான் இருந்தும் வெறும் கையோடு சென்று நிற்க இயலாதே.

நெற்றியை தேய்த்தான், “நான் போனா உடனே ‘இந்த பொண்ண வச்சுக்கோ’னு தூக்கி கொடுக்கவா போறாங்க? ஏன் நீங்களும் வந்து எனக்காக பேச்சு வாங்கணுமா?”

“டேய் உனக்காக நான் என்ன மலையா சாய்க்க போறேன், அவங்க அவ்ளோ எடுத்து எரிஞ்சு பேச மாட்டாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றார்.

தமிழ் பேசும் முன்பே, “எப்படியும் உனக்கு நோ தான் தல சொல்லுவாங்க, ஆனா இந்த முறை என்ன காரணம் சொல்றாங்க பாக்கலாம்” என்றான் நிமலன்.

சுசிகரனும் அலட்டிக்கொள்ளாமல், “அவங்க வீடு பெருசா இருக்குமாம் வாயேன் தல போய் எப்படி இருக்குனு பாத்துட்டு வரலாம்”

இருவரையும் பார்த்தவன், “உங்களுக்கு போன ஜென்மத்துல ஏதோ பாவம் பண்ணிருக்கேன்” நொந்துகொண்டாலும் அவர்கள் கூறியது போல முயற்சி செய்து பார்க்க சரி என்றான்.

அடுத்த நாளே சரத் சந்திரன், அவர் மனைவி, தமிழ் மற்றும் அவன் ஆட்கள் என ஐந்து பேர் சக்தி வீட்டில் இருந்தனர். தகவல் தெரிவிக்காமல் வந்ததற்கு மன்னிப்பு கேட்ட சரத் சந்திரன் வீட்டின் ஆண்கள் வரவிற்கு காத்திருக்க பெண்கள் அனைவரின் பார்வையும் தமிழ் மேல் தான் ஆராய்ச்சியாய் விழுந்தது.

நிமலன், சுசிகரன் தான் சம்பந்தமே இல்லாமல் கேள்வி எழுப்பி தமிழின் முறைப்பைப் பெற்று வைத்தனர்.

அதோடு நில்லாமல், “சக்தி அக்காவை கூபிடுங்களேன், பாத்து ரொம்ப நாள் ஆச்சு” நிமலன் கேட்ட கேள்வியில் அவள் அன்னை அவனை தீயாய் முறைத்து போனார்.

“சும்மா இருடா” என்றான் தமிழ் பற்களை கடித்து. சக்தி இவை அனைத்தையும் மேல் மாடியில் நின்று சிரிப்போடு கவனித்துக்கொண்டிருந்தாள். முக்கியமாக தமிழை. அவன் முகத்தில் மகிழ்ச்சி மீண்டு பிரகாசம் தெரிந்தது. அதுவே அவளுக்கு போதுமானதாக போனது.

சில நிமிடத்தில் வீட்டின் ஆண்கள் வர, அத்தனை நேரம் சேட்டை செய்து அர்த்தமற்ற கேள்வி எழுப்பிக்கொண்டிருந்த சுசிகரன் நிமலன் அமைதியாகிவிட்டனர்.

வந்தவர்களோ தமிழ்செல்வன் என்பவனை ஒரு ஆளாய் கூட மதிக்கவில்லை, குறிப்பாக வேலு. தமிழ்செல்வன் மரியாதை நிமித்தமாய் எழுந்து நின்ற பொழுது கூட அவனை திரும்பியும் பார்க்கவில்லை.

“நாங்க சுத்தி வளைச்சு பேச விரும்பல, சக்தியை தமிழுக்கு பொண்ணு கேட்டு வந்துருக்கோம்” சரத் நேராக விஷயத்தை போட்டுடைத்தார்.

வேலு சிறிதும் கோபத்தையோ விருப்பமின்மையோ முகத்தில் காட்டவில்லை, “எங்களுக்கு விருப்பம் இல்லங்க” என்றார் ஒரே வார்த்தையில்.

“இப்டி சொன்னா எப்படிங்க? பசங்களுக்கு புடிச்சிருக்கு அவங்க விருப்பம் தானே முக்கியம் நமக்கு?” மற்ற ஆண்களை பார்த்து ஆதரவு கிடைக்குமா என பார்த்தார் சரத்.

“அவங்க ஆசைப்படுற எல்லாத்தையும் செய்ய முடியாதே. அறுவது எழுவது வயசுல நாமளே தப்பு பண்றப்போ இருபது அஞ்சு வயசுல அவங்க எடுக்குற முடிவு எப்படி சரியா இருக்கும் சொல்லுங்க?” தமிழுக்காக அவர் பேச வந்திருப்பதை தான் குறிக்கிறார் என அனைவருக்கும் புரிந்தது.

தமிழுக்கு தான் சங்கடமாக இருந்தது அவர் பேச்சு, சரத் சந்திரன் முகத்தை பார்த்தான் பேச வேண்டாம் என.

ஆனால் அவரும் விடுவதாய் இல்லை, “உங்க வசதிக்கு அவன் சரி வர மாட்டான்னு தான் யோசிக்கிறீங்க புரியிது. இதோ இந்த படம் நல்லா போகுது, அடுத்த படமும் பெரிய ஹீரோ, இன்னும் நல்லா போகும். அவன் வளர்ற பையன் சார், திறமை கொட்டி கெடக்கு. உங்க அளவு வசதியா இல்லைனாலும் உங்கள விட நல்லாவே உங்க பொண்ண பாத்துப்பான்” என்றார் பெருமையாக.

சம்பூரணம் குறுக்கிட்டு, “நீங்க பேசுறது எல்லாம் சரியாவே இருக்கட்டும் தம்பி, அவர் வேலை பாக்குற இடமே எங்களுக்கு மொத திருப்தி இல்ல” என்றார்.

“அப்றம் ஏன் உங்க பேத்தியை அனுப்புனீங்க?” அனைவருக்கும் முன் முந்திக்கொண்டு நிமலன் கேட்டுவிட்டு தமிழிடம், ‘எப்பூடிடிடி…’ என பார்க்க தமிழ்செல்வன் செய்வதறியாமல் சிகையை கோதிக்கொண்டான்.

இவற்றை எல்லாம் மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்த சக்தியும் அன்பரசியும் வாய் பொத்தி சிரித்தனர்.

“காதலிச்சு கல்யாணம் பண்ணி கொஞ்ச நாள்ல புளிச்சு போயிருது அந்த வாழ்க்கை. இல்லையா வேற ஒருத்தர் மேல ஈர்ப்பு வந்துரும்” சக்தியின் பெரியப்பா சேந்தன் கூற,

“அதெல்லாம் மனசு மாறாது சார். நான் சக்தியை பத்து வருஷம் மேல லவ் பண்றேன். இந்த சலிப்பு, புளிப்பு எல்லாம் வரணும்னா இந்த பீல்ட்குள்ள நான் வந்த உடனே வந்துருக்குமே” அவர் பேச்சை ஏற்க முடியாமல் தமிழ்செல்வன் வேகமாக கூறினான்.

“கிடைக்கிற வர அது பொக்கிஷம் தான் ப்பா, கிடைச்சா அதோட அருமை கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சிடும்” என்றார் வேலுவும்.

“எனக்கு கிடைச்ச பொக்கிஷம் சார் சக்தி. நான் இருந்த தவத்தோட வரம். அத விட என்னோட ஒரே குடும்பம் அவ, அதை நானே அழிச்சுப்பேனா?” அடி மனதிலிருந்து தோன்றியதை தமிழ் கூற வாய் விட்டு சிரித்தார்.

“குடும்பம்னு சொல்றியே தம்பி, உன் குடும்பத்தை எங்க வெப்ப? நடு ரோட்டுலயா இல்ல வாடகை வீட்டுலயா?”

வீரா தாத்தாவிடம், “அவனுக்கு இங்க ஒரு வீடு இருக்கு” என்றான்.

வீட்டிற்கு வந்தவனை அசிங்கப்படுத்தியதில் சிரிப்போடு நின்ற வேலுவிற்கு பேரனின் இந்த நினைவூட்டல் சிரிப்பை மெல்ல மெல்ல மறைய செய்தது, “எனக்கு எதுவும் தெரியாது நினைச்சியா ப்பா?” என்றவர், தமிழை பார்த்து, “இந்த டைரக்டர் தம்பி படத்துக்கு பிரச்சனைனு வந்த நேரம் அவரோட வீட்டையே அடகு வச்சிட்டார், பைக் வித்துட்டார், ஏன் கைல இருக்க வாட்ச், போன்ன்னு குடுத்து தான் சாப்பாடே சாப்பிடுறாராம்” இதனை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த சக்தியின் கண்கள் அதிர்ந்து விரிந்தது.

இதனை பற்றி எல்லாம் தமிழ் தன்னிடம் கூறியதில்லையே. எதற்கு இத்தனை இழப்பு? அவளுக்காகவா? இல்லை அவளாலா?

“என் பேத்தியை, உன் தங்கச்சிய ரோட்டுல நடத்தியே தான் தம்பி கூட்டிட்டு போவாரு வீரா. அதுவும் வாடகை வீட்டுக்கு. வாசல் தாண்டுனா ஏசி கார், ஊருக்கு ஒரு வீடுன்னு வாழ்ந்த உன் தங்கச்சி இனி இப்டி தான் இருப்பா இவனை கட்டுனா” என்றார் அவனுக்கு ஆதரவு தர தயாரான தன்னுடைய பேரனிடம் இளக்காரமாக.

“அதுக்கு யார் காரணம்னு நான் உங்களுக்கு சொல்ல தேவையில்லை சார். ஆனா அதை எல்லாம் தமிழ் ஒரே வருசத்துல மீட்டுடுவான்”

“ஒரே வருசத்துல எப்படி? அடுத்த படத்துக்கும் சம்பளம் வராதாமே கேள்விப்பட்டேன்” என்றார் வேலு இழுவையாக.

அவர் பேசியது, தமிழை பார்த்து இளக்காரமாய் சிரித்தது என பொறுமையாக இருந்தவர்களால் இதற்குமேல் இன்னும் என்ன என்று தான் தோன்றியது.

நிமலனால் அவர் பேச்சுகளை கேட்க முடியவில்லை, “காசு வராதுன்னு தெரிஞ்சவருக்கு அது யாரால வராதுனும் தெரிஞ்சிருக்கணுமே”

“டேய் நிமலா” தமிழ் வேகமாக அவனை நிறுத்த பார்க்க, சரத் சந்திரனும் அவனை அடக்க பார்த்தார்.

நிமலன் உச்சக்கட்ட கோபத்தில் இருந்தான், வேலுவை பார்த்து மரியாதை நிமித்தமாய் வாயை மூடி இருந்தவனால் இப்பொழுதும் அதையே கடைபிடிக்க முடியவில்லை. தமிழ்செல்வனுக்காக பேசியே ஆக வேண்டிய வெறி தான் இருந்தது.

“சும்மா இரு தல, இப்டி நீ இருக்க போய் தான் உன்ன அடிச்சு வேடிக்கை பாக்குறாங்க” என்றவன் வேலுவிடம், “அடுத்த படத்துக்கு சம்பளம் இப்போ இருக்குறத விட மூணு மடங்கு பெருசுங்க. ஆனா அது கைக்கு வந்து சேரல, அன்னைக்கே அவரை விட்டு போனதுக்கு காரணம் இவ்ளோ நேரம் நீங்க யாரை காப்பாத்த துடிக்கிறிங்களோ அதே உங்க பேத்தி தான்”

“என்னங்கடா ஒரு காசு சேர்த்து வைக்க வக்கில்லை எங்கப்புள்ள மேல பழி போடுற. இங்க இல்லாத காசா இவன்ட வந்து அவ வாங்க” முரளி மகள் மேல் குற்றம் வரவும் முரளி எகிறிக்கொண்டு வந்தார்.

“ஒன்னும் இல்ல, அவன் ஏதோ புரியாம பேசிட்டான். மன்னிச்சிருங்க” வேகமாக வந்த தமிழ் நிமலனை இடைமறித்து தனக்கு பின்னால் மறைத்து முன் நின்றான்.

அத்தனை நேரம் கை கட்டி அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த வீராந்தகன், தமிழை நெருங்கி அவனுக்கு பின்னிருந்த நிமலனை முன் நிறுத்தினான்.

“அவன் தான் தெரியாம சொல்லிட்டான்னு சொன்னேன்ல” தமிழ் தலையிட கை காட்டி அவனை நிறுத்தினான் வீரா. பிறகு நிமலனிடம், “நீ பேசு எதையும் மறைக்காம” அதிகாரமாக கூற, வேலுவின் பார்வை பேரனை விட்டு அகலவில்லை.

நிமலன் பார்வை தமிழை தொட்டது, ‘பேசுறத பேசிட்டு இப்போ பாக்குற’ என்கிற கோபம் தமிழ் கண்ணில்.

நிமலன் முகத்தை தன்னை நோக்கி திருப்பி, “சொல்லு” என்றான் வீரா அழுத்தமாக.

கோபத்தில் உரக்க பேசியவனுக்கு முன்பிருந்த வேகம் இப்போதில்லை, அதுவும் தமிழின் பொறுமை, கெஞ்சல் பார்வையில் சுத்தமாய் பேச்சு வரவேயில்லை.

“இவன் பேச விட மாட்டான்ங்க” அனைவர் பார்வையையும் தன் பக்கம் திருப்பினார் பேரழகன்.

“உங்க வீட்டு பொண்ணுன்னு வந்தா இவன் மொத்தமா எல்லாத்தையும் இழக்க ஒரு நிமிஷம் யோசிக்க மாட்டான். அப்டி தான் அன்னைக்கும், சக்தி பண்ண தப்பால ஸ்டூடியோல தீ புடிச்சிருச்சு. பயத்துல அந்த புள்ள மயக்கம் போட்ருச்சு, நீங்களும் ஓடி வந்து உங்க பொண்ணை மட்டும் பத்திரமா கூட்டிட்டு போயிட்டீங்க. அதுக்கு அப்பறம் என்னாச்சுன்னு யோசிச்சீங்களா?”

அவர் கேட்ட கேள்வியை ஏற்கனவே சக்தி தமிழிடம் கேட்டிருந்தால் ஆனால் அவனோ உண்மையை மறைத்து, “அதெலாம் உங்க பக்கமும் தப்பிருக்குன்னு பிளேட்டை திருப்பி போட்டு, அவர் பன்னிருந்த இன்சூரன்ஸ்ல கவர் பண்ணிட்டார் சரத் சார்” என்று கூறி வைத்திருந்தான்.

“அவன் போட்டான் சார், மொத்த காசும். அடுத்த படத்தோட அட்வான்ஸ் கைக்கு வந்த வேகம் இல்ல, உங்க பொண்ணு பண்ண தப்புக்கு எல்லாத்தையும் தூக்கி குடுத்தான். சக்தியோட கனவு முக்கியம் அவனுக்கு. உங்கட்ட காசு கேக்க போறேன்னு தான் ஸ்டூடியோ காரன் நின்னான். இதை காரணம் காட்டி நாளைக்கு சக்தியோட கனவுக்கு நீங்க தடை சொல்லிருவீங்கன்னு பயந்து தன்னோட சாப்பாடுக்கு கூட காசு வைக்காம மொத்தமா குடுத்தான் சார். இப்போ கேளுங்க அவன்ட உன் சம்பளம் எங்க போச்சுன்னு” பேரழகனுக்குள் இன்னும் எத்தனையோ ஆதங்கம் இருந்தது இருந்தும் பேசியது போதுமென நிறுத்திவிட்டார்.

வீராவின் பார்வை மாடியில் இருந்து தமிழை கண் சிமிட்டாமல் பார்த்து கண்ணீர் விட்டு நிற்கும் சகோதரி மேல் படிந்தது. தமிழின் காதல் ஆழம் புரிந்தது அவனுக்கு, சகோதரிக்காக அவன் செய்யும் காதலின் ஆழம் புரிந்தது. வந்ததிலிருந்து சகோதரியை தேடாத அவன் கட்டுப்பாடு பிடித்தது. அமைதியாக சகோதரியை, சிரமமே இல்லாமல் அவன் பக்கம் இழுக்கும் விதம் தான் பிடிக்கவில்லை.

“சார் எல்லாத்தையும் விட்ரலாம். கொஞ்சம் இறங்கி வாங்க. உங்க பெண்ணுக்காக உயிரையே விடுற பையனா எங்க தேடுனாலும் கிடைக்க மாட்டாங்க. அவங்க மனச புரிஞ்சுக்கோங்களேன்” என்றார் சரத் தன்மையாக.

பேரழகனும் தன் பங்கிற்கு இலகுவாக பேசி பார்க்க வேலு மசியவேயில்லை. முகம் இன்னும் இன்னும் அசௌகரியமாக தான் போனது.

“ஏன் சார் உங்களுக்கு இவ்ளோ பிடிவாதம்?” பொறுக்கமாட்டாமல் சரத் வேலுவை பார்த்து கேட்டுவிட,

“கட்டுன புருஷன் புள்ளை இருக்குறப்போவே இன்னொருத்தனோட குடும்பம் நடத்துன பொம்பளையா இவன் அம்மா. அந்த அவமானத்துல இவன் அப்பா தூக்குல மாட்டி செத்து, பொண்ணையும் கொன்னுட்டான். அப்டிப்பட்டவனோட பையனுக்கு உன் பொண்ண நீ குடுப்பியா?” இருக்கையிலிருந்து எழுந்து வேலு கேட்ட கேள்வியில் மொத்த இடமும் நிசப்தத்தில் விழுக, அனைவர் பார்வையும் தலை தாழ்ந்து நிற்கும் தமிழ்செல்வன் மேல் விழுந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!