ரஞ்சிதாவிற்கு இரண்டு மாத கர்ப்பம் உறுதியானது.அந்த செய்தியை மருத்துவர் சொன்ன நொடி…அவளது கண்கள் தானாகவே கண்ணீரால் நிறைந்தன.மெல்ல தன் வயிற்றை தொட்டுப் பார்த்துக் கொண்டாள். இன்னமும் உருவமே பெறாத சிறிய உயிர்,தனது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தை, ஒரு பிடிப்பை தந்து விட்டதாக எண்ணினாள்.
கர்ப்பம் உறுதியான அதே நாளில் ராஜீவனுக்கு குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் ஒரு பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் ப்ராஜெக்ட்டில் வேலையும் உறுதியானது.நீண்ட நாட்களாகவே இந்த வாய்ப்பை எதிர் நோக்கி காத்திருந்தவனுக்கு இன்று கிடைத்த வாய்ப்பு அவ்வளவு மகிழ்ச்சியைத் தரவில்லை.ஒரு காலத்தில் இந்த வேலைக்காக எத்தனை கனவுகள் கண்டான்.ஆனால் இப்போது கையில் கிடைத்த வெற்றியும் அவனுக்கு தோல்வியாகவே தெரிந்தது.
தான் அப்பா ஆகி விட்டோம் என்ற சந்தோசமோ,தான் ஆசைப்பட்ட வேலை கிடைத்து விட்டது என்ற திருப்தியோ அவனிடம் இல்லை.அவனை பொருத்தவரையில் வாழ்க்கையில் மோசமாக… இல்லையில்லை மிக மிக மோசமாக தோற்றுவிட்டோம்.. என்றே எண்ணிக் கொண்டான்.
Advertisement
பிரியாவிற்கு துரோகம் செய்து விட்டோம்…ரஞ்சிதாவுடன் வாழ்வதே பிரியாவுக்குச் செய்யும் துரோகம் என்ற எண்ணம் உள்ளுக்குள் நசுக்கியது.
மேலும் ரஞ்சிதாவுடன் அவன் வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்வை நினைத்தால் அவன் மீது அவனுக்கே அருவருப்பை தந்தது.அவளின் முகத்தை கூட பார்க்க முடியாமல் குற்ற உணர்வில் அவளை தவிர்த்தான்.
ரஞ்சிதாவின் நிலையோ வேறு… பெற்றவர்கள் இல்லை..தன்னை வளர்த்து ஆளாக்கிய பாட்டிக்கு இனியும் சுமையாக இருக்க வேண்டாம் என்ற எண்ணம்.அனைத்து பெண்களையும் போல கட்டியவனை முழுமையாக நம்பினாள்.ஆனால் நம்பிக்கை தரக்கூடியவனோ அந்த நிலையில் இல்லை.
Advertisement
இருந்தும் மகளாக நினைக்கும் மாமனாரின்,”ஒரு நாள் அவன் உன்னை ராணி மாதிரி பார்த்துப்பாம்மா” என்ற வார்த்தைகளை நம்பினாள். ராமமூர்த்தி சொன்ன அந்த “ஒரு நாள்” வருவதற்குள்… அவளது வாழ்க்கை இன்னும் எத்தனை சோதனைகளை கடக்கப் போகிறது என்று அவளுக்குத் தெரியாது….
Advertisement
ராஜீவன் குஜராத் கிளம்பும் நாள். ரஞ்சிதா அவனுக்கு தேவைப்படும் பொருட்களை எடுத்து வைத்திருந்தாள். கிளம்பிக் கொண்டிருந்த அவனிடம், “என்னங்க… சாப்பிட்டுட்டு கிளம்புங்க…” என்று தயக்கத்தோடு சொன்னாள்.
ராஜீவன் அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவள் முன்பே எதிரே இருந்த அம்பிகாவிடம்,”அம்மா… நான் கிளம்பறே… உடம்ப பத்திரமா பாத்துக்கோங்க..ஏதாச்சு தேவைபட்டா உடனே ஃபோன் பண்ணுங்க” என்று சொல்லிவிட்டு, தனது பையை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.
ரஞ்சிதாவின் கண்களில் நீர் திரண்டது. வாசலில் நின்றபடி அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
Advertisement
ஏழுமாதம் வளைகாப்பிற்கு ராமமூர்த்தி அழைக்க…ஐந்து முறை எந்த பதிலும் இல்லை. ஆறாவது அழைப்பில் எடுத்தான்… வேலை இருப்பதாக கூறி வர மறுத்து விட்டான்.ஊரையே கூட்டி விழா நடத்தினார் ராமமூரத்தி.ஆனால் உரியவன் மட்டும் வரவில்லை. உறவினர்கள் வந்து ரஞ்சிதாவை ஆசீர்வதித்தனர்.’ராஜீவன் வரைலையா?’என்ற கேள்விக்கு ‘அவனுக்கு வேலை இருக்கு’ என சொல்லி சமாளித்தார் ராம மூர்த்தி.
வளைகாப்பு முடிந்தும் தாய் வீடு செல்லாமல் புகுந்த வீட்டிலேயே தங்கி கொண்டாள் ரஞ்சிதா.அவளது அண்ணியை பற்றித்தான் தெரியுமே..
ரஞ்சிதாவின் வயிறு வளர வளர, அவளது முகத்தில் தோன்றும் ஏக்கம் ராம மூர்ததியை உள்ளுக்குள் வருத்தியது.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்தவளுக்கு இரவு பதினொன்றரை மணி பிரசவ வலி ஏற்பட்டது.அம்பிகா எதையும் கண்டு கொள்ளவில்லை.ராம மூர்த்தி தன் அண்ணன் குடும்பத்தின் உதவியோடு ஹாஸ்பிடல் அழைத்துச் சென்று பிரசவம் பார்த்தார்.அழகான ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தையின் முதல் அழுகை கேட்டதும், ரஞ்சிதாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வந்தது.ராமமூர்த்தியும் குழந்தையை தூக்கி அணைத்துக் கொண்டார். “என் பேரன்… என் பேரன்…” என்று கர்வமாக அனைவரிடமும் காட்டினார்.ராஜீவனுக்கு ஃபோன் போக…’சரி’என்ற ஒற்றை வார்த்தை யோடு முடித்து விட்டான்.
மூன்று மாதத்தில் பெயர் வைக்க நிறைய அலசல். ரஞ்சிதா ஐந்து பெயர்களை தேர்ந்தெடுத்து வைத்திருந்தாள்.இருந்தும் ராஜீவனிடம் கலந்தாலோசிக்க விரும்பினாள். ஆனால் பேசவே விருப்பமில்லாதவனிடம் என்ன பேச?எனவே ராம மூர்த்தியையே கேட்க சொன்னாள்.
அவனோ, “என் வாழ்க்கையில எல்லா முடிவையும் நீங்கதான் எடுத்தீங்க இப்ப மட்டும் ஏன் என்கிட்ட வரீங்க இதையும் நீங்களே முடிவு பண்ணுங்க” என கடுகடுத்தான்.
பின் ரஞ்சிதாவே ‘சித்தார்த்’என்ற பெயரை தேர்வு செய்தாள்.சரி,” பெயர் வைக்கும் விழாவிற்கு வா “என அழைக்க அதற்கும் மறுத்து விட்டான்.
ராஜீவனின் மகன் குப்புற விழுந்து, தவழ்ந்து,நடக்கவும் ஆரம்பித்து விட்டான். ஆனால் இன்னமும் மகனை பார்க்க வரவில்லை.
என்ன நினைத்து ரஞ்சிதா தன் மகனுக்கு ‘சித்தார்த்’ என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தாளோ தெரியவில்லை… அந்தப் பெயருக்கே உரிய குறும்பும் சுட்டித்தனமும்…. அந்த மாயக் கண்ணனைப் போல,நாளுக்கு நாள் அவனிடம் கூடிக்கொண்டே போனது.
“ஆப்பிள் பழம் போல உருண்டு திரண்ட கன்னங்கள்… அவன் சிரித்தால் கன்னங்கள் இன்னும் புடைத்துக் கொள்ளும்…பவளச் செப்பை ஒத்த சின்ன உதடுகள்… அந்த உதட்டில் ஒரு துறுதுறு சிரிப்பு…பேசாமலே ஆயிரம் குறும்புகளைச் சொல்லும் பெரிய விழிகள்… அந்த விழிகளில் ஆயிரம் கேள்விகள்…தத்தித் தத்தி ஓடும் குட்டிக் கால்கள்… வீட்டைச் சுற்றி பம்பரம் போல சுழன்று கொண்டிருக்கும் சுறுசுறுப்பு… ஓடினால் காற்றே அவனைப் பிடிக்க முடியாது… முகம் முழுக்க அப்பாவித்தனம். யார் பார்த்தாலும் தூக்கி அணைத்துக் கொஞ்சத் தோன்றும் குழந்தை…ஒரு நொடிகூட அமைதியாக இருக்கத் தெரியாத அந்தக் குறும்புக்காரன் தான் சித்தார்த்.”
“இளங்கன்று பயமறியாது” என்பதை போல அனைத்து சாகசங்களையும் செய்வான்.ராஜீவன் அறியாத வயதில் ஆறு அடி பாம்பை பிடித்து இழுத்தவன்… இன்று அவன் மகனோ எட்டு அடி பாம்பை இழுத்து வந்து போட்டான். ரஞ்சிதா அலறி ஓடிவந்து அவனைப் பிடித்தாள்.ஒரு குச்சியை எடுத்து அடி பிண்ணி விட்டாள்.குச்சி ஒடிந்து அவளுக்கு கை வலி எடுத்ததே தவிர மகனின் குறும்பு தனங்களை சமாளிக்க முடியாமல் தினறினாள்.
ராஜீவனிடம் காட்டிய கெடுபிடிகளை பேரனிடம் காட்டவில்லை ராம மூர்த்தி.அவன் ஆசைப்பட்டதை யெல்லாம் வாங்கி கொடுத்து நிறைவாக வளர்த்தினார். அவருக்குதான் மகனின் பிடிவாதத்தை பற்றி தெரியுமே…”பேரனுக்கு ‘அப்பா’ ஏக்கம் வந்து விடக் கூடாது” என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தார்.
கேட்டதெல்லாம் வாங்கி கொடுக்கும் தாத்தா…அம்மா அடித்தாலும் தாத்தாவை கூட்டி வந்து நியாயம் கேட்க வைக்கும் சுட்டி தனம் என ராஜாவாகவே வளர்ந்தான் சித்தார்த்.
அன்று சித்தார்த்தின் முதல் பிறந்தநாள் விழா. எல்லாரும் கலந்திருக்க… ராஜீவன் மட்டும் வரவில்லை.உறவுகள் விளையாட்டு பொம்மைகள்,ரிமோட் கார்,கேக் என வாங்கி வந்து கூடி இருக்க….அதை பார்த்த சித்தார்த்துக்கு உற்சாகம் பொங்கியது. இரண்டு கைகளையும் தட்டி தட்டி வாயில் வைத்துக் கொண்டு களிப்படைந்தான். போதாக் குறைக்கு வெள்ளை கோட் சூட் அணிந்து விட்டாள் ரஞ்சிதா…அலமேலு சிறுக சிறுக சேர்த்த காசில் ஒரு பவுன் எடுத்து அவனுக்கு போட்டு விட்டாள்.
ராமமூர்த்தி,”இன்னைக்கு என் பேரன்… ராஜாவாட்டம் இருக்கான்!”என்று தூக்கிக் கொண்டார்.பின் ராஜீவனுக்கு போன் செய்து,”ராஜீவா உன்னால இங்க வரத்தான் முடியலே வீடியோ கால் வா. வந்து உன் பையன் செய்றே குறும்பே பாரு. உனக்கு அவனே பாத்துட்டே இருக்கலானு தோணும்.அப்படியே உன்ன உரிச்சு வெச்சிருக்கான்… எல்லாரும் அவனே குட்டி ராஜீவன்னுதா சொல்றாங்க…”என்று ஏக்கமாக சொல்ல…அதை எதையுமே கேட்கும் மனநிலையில் அவன் இல்லை…
சித்தார்த்திற்கு உடை மாற்றிக் கொண்டிருந்த ரஞ்சிதாவிடம்,”ராஜீவன் ஃபோன்ல இருக்கான்… வீடியோ கால் பண்ணுமா…அவன் சித்தார்த் கேக் வெட்டறதே பாக்கட்டும்” என்றார்…
“இவ்வளவு நாளாகவே எந்த ஒட்டுதலும் இல்லாமல் இருக்க…இன்றாவது இருவரும் பேசட்டும்” என சித்தார்த்தை எடுத்துக் கொண்டு வெளியே போனார் ராம மூர்த்தி
“எங்க அப்பனுக்குதா அறிவு இல்லனா உனக்கும் இல்லையா?இங்க நிக்க நேரம் இல்லாம நான் அலைச்சிட்டு இருக்கே. நீங்க என்னடானா வீடியோ கால் பண்ணு. கேக் கட் பண்றோம்னு விளையாடிட்டு இருக்கீங்க…முதல்ல ஃபோன் வை…”என சிடுசிடுவென எறிந்து விழுந்து ஃபோனை வைத்து விட்டான்.
வந்த அழுகையை அடக்கிக் கொண்டு கேக் வெட்டும் கொண்டாடத்தில் கலந்து கொண்டாள் ரஞ்சிதா.மருமகளின் முகத்தை பார்த்தே மகனின் நிலையை உணர்ந்து கொண்டார் ராம மூர்த்தி. ரஞ்சிதா இரண்டு மாத கர்ப்பமாக இருக்கும் போது போனவன், குழந்தை பிறந்து அதன் முகத்தை கூட இன்னமும் பார்க்க வரவில்லை…ஒரு வருடம் முடிந்தும் விட்டது…கானல் நீராய் நாட்கள் கரைய நாளை பேரன் வளர்ந்து ‘அப்பா’ எனக் கேட்டால் என்ன சொல்வது என எண்ணினார்…
இனியும் இவனை விட்டு வைக்க கூடாது என ரயிலைப் பிடித்து குஜராத் கிளம்பினார் ராம மூர்த்தி.எப்படியோ மகன் வேலை செய்யும் துறைமுகத்தை அடைந்து விட்டார்.அங்கு பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் ராஜீவனை வரச்சொல்லி ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டார்.அவர் வந்த விஷயத்தை சொல்ல வந்த தொழிலாளியிடம்….தான் வேலை விஷயமாக வெளியே போயிருப்பதாக சொல்லி அவரை திருப்பி அனுப்பி விட்டான். ஏமாற்றத்தோடு வீடு திரும்பினார்.
ஆனாலும் விடாது இரண்டு மூன்று முறை மகனை பார்த்து கையோடு அழைத்து வர குஜராத் சென்றார். பலன்தான் இல்லை.இப்படியே மூன்று முறையும் கடந்திருந்தது…பேரனுக்கு ஒரு வருடம் ஐந்து மாதம் கடந்திருக்க இன்னமும் பிறந்த முடி எடுக்கவில்லை… என்ன நடந்தாலும் மகன் இல்லாமல் பேரனுக்கு பிறந்த முடி எடுக்கப் போவதில்லை என உறுதி கொண்டார்.
இந்த முறை எத்தனை நேரம் ஆனாலும் காத்திருந்து அவனை பார்த்து விட்டுதான் கிளம்ப வேண்டும் என்ற உறுதியோடு ரயில் ஏறினார். துறைமுகத்தை அடைந்த தந்தை தன்னைப் பார்க்கும் முன்பே அவரை பார்த்துவிட்டான் ராஜீவன்.உடன் வேலை செய்பவரை அழைத்து… வழக்கம்போல தான் வர ஒரு மாதமாகும் என பொய்யுரைக்க சொன்னான். மீண்டும் ஏமாற்றத் தோடு வீடு திரும்பினார் ராம மூர்த்தி.
அன்றிரவு திரும்ப திரும்ப அதே எண்ணங்கள்.. மூவர் வாழ்க்கையையும் கெடுத்து விட்டோமா?இவர்களோடு சேர்ந்து அந்த சின்னக் குழந்தையும் அல்லவா பாதிக்கப்படும் என்ற பலவித எண்ணத்தோடு, உறங்க போனவர் நெஞ்சில் பயங்கர வலி ஹாஸ்பிடல் அழைத்துச் செல்ல பத்து நிமிடத்தில் எல்லாம் முடிந்துவிட்டது….
“ராஜீவா ஒருவாட்டி வந்து உன் பையன பாருடா….அவனே பார்த்தா நீ ஒரு நிமிஷம் கூட அவனே விட்டுட்டு இருக்க மாட்டே….உன்னை அப்படியே உரிச்சு வெச்சிருக்கா..எல்லாரும் அவனை குட்டி ராஜீவன்னுதா சொல்றாங்க” என்ற தந்தையின் வார்த்தைகள் அவனது காதில் எதிரொளித்தனர்…
இருகூர் ரயில் நிலையம் வந்ததும்… கனத்த இதயத்தோடு கீழே இறங்கினான் ராஜீவன்.ரயில் நகர்ந்து கொண்டிருக்க… அவன் மட்டும் அங்கேயே சில நொடிகள் அசையாமல் நின்றான்.
இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தபோது தன்னை வழியனுப்பி வைத்த ரஞ்சிதாவின் முகம் நினைவுக்கு வந்தது.அப்போது அவளது விழிகளில் தெரிந்த ஏக்கம்… அவன் மனதை விட்டு இத்தனை நாட்களாகியும் அகலவில்லை. ஆனால்… அந்த ஏக்கத்தைப் பார்த்தும் பார்க்காதவன் போல திரும்பிச் சென்றான்.
இத்தனை நாட்களாக… மனைவியைப் பார்க்கவோ, ஃபோனில் பேசவோ கூட தவிர்த்தவன். இன்று… அவளை நேரே எதிர்கொள்ளப் போகிறான்.
அதைவிட…,”தான் பார்த்திராத… தன்னைப் பற்றி எதுவுமே அறியாத… தன்னால் இந்த உலகிற்கு வந்த தன் மகனை முதன்முறையாக பார்க்கப் போகிறான். அந்த எண்ணமே அவனது நெஞ்சுக்குள் ஏதோ ஒரு விதமான பதற்றத்தை உருவாக்க,அவன் கால்கள் வீடு இருக்கும் திசையை நோக்கி நடக்கத் தொடங்கின.