Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சோடு ரீங்காரம்

ரீங்காரம் – 8

காலை ஏழு மணிக்கும் சூரியன் முழுமையாக வெளிவராமல் இருந்த வேளை அது. ஆனால், ஆதவனை மிஞ்சும் சுறுசுறுப்பு அந்தப் பகுதியிலிருந்த மக்களிடம் இருந்தது. கூட்டமும் இரைச்சலும் அவர்களின் சுறுசுறுப்பைக் காட்டியது. 

“இந்தத் தெருவுல கார் போறது சிரமமேம்மா” என்றான் சக்தியின் கார் ஓட்டுநர்.

“பரவாயில்லை இருங்க, வந்திடுறேன்” என்றவள், அங்கிருந்த அடுக்குமாடித் கட்டிடங்களின் பெயர்களைப் பார்த்துக்கொண்டே நடக்க, அவள் தேடி வந்த கட்டிடத்தைப் பார்த்ததும் அவளது புருவங்கள் முடிச்சிட்டன. 

மிகவும் எளிமையான கட்டிடம்; சரிவரப் பராமரிக்கப்படாமல் பார்க்கவே பயங்கரமாக இருந்தது. ஆங்காங்குச் சில பொருட்கள் உடைந்து கிடக்க, முதல் தளத்தில் அவன் முன்பு கூறியிருந்த அடையாளத்தை வைத்து வீட்டினை அடைந்தவள், கதவைத் தட்ட வேலை வைக்காமல் அது சிறிது திறந்தே இருந்தது.



Advertisement

இன்னும் கொஞ்சம் திறக்கப் போக, ஒரு காற்சட்டை அதைத் தடுத்தது. அது கால்மிதியா இல்லை தினம் உடுத்தும் உடையா எனச் சந்தேகம் வருமளவு, வீட்டின் நுழைவாயிலிலேயே அத்தனை பொருட்கள் சிறிது இடைவெளி விட்டுத் தலைகீழாகக் கிடந்தன. 

அதனை எடுத்து ஓரமாய் வைத்துவிட்டுத் கதவைத் திறக்க, பின்னால் ஒரு பேக்கில் அமர்ந்திருந்தான் தமிழ்ச்செல்வன். அவன் பார்வை முழுதும் மடியிலிருந்த மடிக்கணினியில் இருக்க, இவள் வந்ததைக் கூட அவன் கவனிக்கவில்லை. போதாதற்கு காதை அடைக்கும் பூம் ஹெட்செட் ஒன்று வேறு. அவள் சென்று அவன் முன்பு நிற்கவும் தான் விழியை உயர்த்திப் பார்த்தான்.

பார்த்தவனுக்கோ அத்தனை அதிர்ச்சி! “ஹே சக்தி… என்ன இங்க? சொல்லவே இல்லை… சொல்லிருந்தா நானே வந்திருப்பேனே!” எழுந்து நின்று, “உட்காரு” என்றான் தன்னுடைய இருக்கையைக் கொடுத்து.

Advertisement

அதைப் பார்த்தவளோ, “இதுலயா?” எனச் சிரிப்போடு கேட்க, அந்த இருக்கையிலும் பல விதமான ஆடைகள், உள்ளாடைகள் உட்படக் கிடந்தன. தலையில் அடித்துக்கொண்டவன், அதனை அப்படியே அள்ளித் தரையில் போட்டு, “இப்போ உட்காரலாம்” என்றான். 

Advertisement

அவனது அந்த வீட்டினை நினைத்து அவனுக்கு எந்தவொரு சங்கடமும் இல்லை. அவன் அவனாகவே இருந்தான்; அவளுக்காக எந்தவொரு போலி மெனக்கெடலும் அவனிடம் இல்லை.

“எங்க யாரையும் காணோம்?” கேள்வி கேட்டவள், அவனிடமிருந்து பூம் ஹெட்செட்டைக் கேட்க, அவிழ்த்துக் கொடுத்தவன், “அவனுங்க எந்திரிக்கக் குறைஞ்சது மூணு மணி நேரம் ஆகும். சாப்பிட்டியா?” என்றான்.

“இல்லை செல்வா… இது என்ன சீன்? நான் பார்த்ததே இல்லையே” என்றவள், ஆவலோடு கணினித் திரையைப் பார்க்கத் துவங்கினாள். சமையலறைக்குச் சென்றவன், ஐந்தே நிமிடத்தில் அவளுக்கான உணவோடு வந்து அவளிடம் நீட்டினான்.

Advertisement

“வாவ்… மேகி! தேங்க்ஸ்டா செல்வா. ஸ்பூன் கிடைக்குமா? உன்னோட சிஸ்டம் யூஸ் பண்ணிட்டு இருக்கேன்.” அவளது வேண்டுதலில் திருதிருவென விழித்தவன், உள்ளே சென்று ஒரு நீண்ட சாவியை அவளிடம் நீட்டினான்.

“சாவி எதுக்கு?” அவள் புரியாமல் விழிக்க, “ஸ்பூன் கேட்டியே…” என்றான்.

“ஆமா, ஸ்பூன் தான் கேட்டேன். அதுக்கு…” என்றவளுக்கு அப்பொழுதுதான் அவனின் செய்கை புரிய, வாய்விட்டுச் சிரித்தவள், “ஒரு ஸ்பூன் கூட வச்சுக்க மாட்டீங்களாடா?” என்றாள். 

அந்தச் சாவியைக் கொண்டே உணவை உண்டு பார்க்கும் ஆவலில் வாங்கிக் கொண்டாள். “இருந்துச்சு, ஒண்ணு ஒண்ணா மிஸ் ஆகிடுச்சு” என்றான் அவன் சாதாரணமாக.

சிரமத்தோடு உண்டாலும், உணவானது அந்தச் சாவியிலிருந்து கீழே விழும் பொழுது அதனை எடுத்துச் சிரித்துக்கொண்டே உண்டவள் கவனம் சரிக்குச் சரி திரையில் இருந்தது. 

மழையினை அமைதியாகப் படத்தின் நாயகி வெறித்துப் பார்க்கும் காட்சி அது. 

அதற்குப் பின்னணி இசையாக வெறும் இசையை மட்டும் கொடுக்காமல், மழையின் எதார்த்த ஒலியின் தாக்கம் அதிகம் வேண்டும் எனத் தமிழ்ச்செல்வன் கேட்டதற்கிணங்க, இசையமைப்பாளர் கொடுத்த சில ஒலிகளை ஒவ்வொன்றாக அவனாகவே பொருத்திப் பார்த்துக் கொண்டிருந்தான். வழக்கத்திற்கு மாறாக அவனும் பேசவில்லை; அவளும் தன் பார்வையைத் திரையை விட்டு நகர்த்தவில்லை.

தமிழ்ச்செல்வன் பார்வை சக்தியிடம் சில நிமிடங்கள் படிந்து, பிறகு திரையில் விழுந்தது. ஹெட்ஃபோனை அகற்றி, “இந்த சவுண்ட் நல்லா இருக்கு செல்வா, பட் இன்னும் லைவா இருக்கணும். ஃபீல் வரலை… லோன்லினஸ் தான் இதோட கான்செப்ட், ஆனா அது மிஸ் ஆகுற மாதிரி இருக்கு” என்றாள்.

அவளைப் பார்த்தவனுக்கு அந்த மழை, அமைதி, தனிமை அனைத்தும் வேறு மாதிரியான வலியைத்தான் நினைவூட்டியது. 

“யாரோ ஏதோ ஒன்னு சொல்ல வர்ற மாதிரி, அதை யாரோ கேட்கத் தவறின மாதிரி?” என்றான்.

“கரெக்ட், அதேதான்!” என்றாள் ஆச்சரியத்தோடு.

“அதுதானே ஹார்ட்பிரேக்… யாருமே கவனிக்காத ஒரு நாய்ஸ்” 

குழப்பத்தோடு, “புரியல செல்வா…” என்றாள்.

“ஒண்ணுமில்லை” என்றவன் பார்வை முழுவதும் மீண்டும் அந்தத் திரையில் விழுந்தது. 

திரையினுள்ளிருந்த பெண்ணையும், வெளியே இதமாகப் பொழியும் மழையையும் பிரித்து வைத்திருந்தது அந்த ஜன்னல் தடுப்பு. இருவருக்குமிடையேயான சொல்ல முடியாத சில வார்த்தைகளைப் பிரதிபலிப்பது போல அது இருந்தது.

“உனக்கு ஒன்னு தெரியுமா? இந்த கதைல பெருசா லவ்க்கு நான் முக்கியத்துவம் கொடுக்கலைனு சொல்றாங்க. ஆனா, மொத்தக் காதலும் இந்த ஒரு இடத்துலதான் நிக்கும். இந்த சீன் நான் எழுதுறப்போ அந்த மழையைக் காதலிக்கிற ஒரு மனுஷனா கன்சிடர் பண்ணேன். அவனோட காதல் ரொம்ப ஆழமானது, பைத்தியக்காரத்தனமானது. எப்படின்னா… தினம் தினம் விழுவான், விழுந்துட்டே இருப்பான். ஆனா, எப்பவும் அந்தத் தடுப்புக்கு இந்தப்பக்கம் வர முடியாது அவனால!”

மெதுவாக அவன் பக்கம் திரும்பியவள், “ரொம்ப அழகா இருக்கு… அதே நேரம் வருத்தமாவும் இருக்கு” என்றாள்.

வலியோடு சிரித்தவன், “ஆமா, பல உண்மைகள் அப்படித்தான் இருக்கும்” என்றான். அவ்விடமே அமைதியில் மூழ்க, உணர்வுகளின் தாக்கம் அதிகமானது. தமிழ்ச்செல்வனின் தொனி, பார்வை அனைத்திற்குமான அர்த்தம் மெல்ல மெல்லப் பெண்ணவளுக்குப் புரிந்தது.

“நீ ஏன் செல்வா முன்னாடி மாதிரி இல்லை? ரொம்பத் தூரமா போன மாதிரி இருக்க. என்னோட ஃபிரண்ட்டை நான் இழந்த மாதிரி இருக்கு…”

“அட லூசே! நீ ஏன் அப்படி நினைக்கிற? உன் ஃபிரண்ட் ஒன்ன ரியலைஸ் பண்ணிட்டான். லவ் எப்பவும் வாங்குறது மட்டும் இல்லை… நாம மனசுல இருக்கவங்க வேற இடத்துக்கு உரிமைப்பட்டவங்கனு தெரியுறப்போ, அந்த உணர்வுகள்ல இருந்து பின்வாங்குறதும் தான்.”

“செல்வா…”

“எனக்கு எப்பவும் உன்னோட ஃபிரண்டா இருக்குறதுல சந்தோஷம்தான். உன்னோட சப்போர்ட்டரா எப்பவும் இருக்கணும்னுதான் என்னோட ஆசையும்.” அவளைப் பார்க்கப் பார்க்க அவனது சொல்லாத காதலின் உணர்வுகள் வெளிவரத் துவங்க, சட்டெனத் திரையைக் காட்டினான். 

“விதியைப் பாரேன்… அந்த மழையைப் மாதிரியே நானும் நிறுத்தாம விழுந்துட்டே இருக்கேன், யாருக்காக விழுறேனோ அவங்க எனக்குக் கிடைக்கவே மாட்டாங்கன்னு தெரிஞ்சும்!”

சக்தியின் கண்கள் கலங்கின; என்ன பேசுவதென்று தெரியாமல் திகைத்தாள். 

“நீ ஏன் செல்வா எப்பவும் அமைதியாவே இருக்க? சொல்லிருக்கலாமே… ஏன் சொல்லலை?”

“நிராகரிப்பைத் தாங்குற தைரியம் எப்பவும் எனக்கு இருந்ததில்லை சக்தி…” நிதானித்திருந்தான் அவளது வேதனையைக் கண்டு. 

குரல் தெளிவடைந்து, சூழலை மாற்றும் பொருட்டு, “இந்த மழை மட்டுமே வைக்கிறது ரொம்ப வேக்கா இருக்குல்ல… நாம ஏன் ஒரு டிஸ்டன்ட் கோவில் பெல் சவுண்ட் வைக்கக் கூடாது? சீன் கொஞ்சம் லைட் அப் ஆகும்ல” என்றான்.

அவள் சிரிக்கவில்லை; அவள் சிரிப்பை அவனும் எதிர்பார்க்கவில்லை. அந்தக் காட்சியை மீண்டும் மீண்டும் ஓடவிட்டான். 

“இந்த சீன் ஃபீல் எப்படி வேணும்னு உன்கிட்ட சொல்லிட்டேன் சக்தி. சிம்பிளா சொல்லணும்னா, அந்த மழையோட சத்தம் அது சேரவே முடியாத ஒருத்தரை மிஸ் பண்ணிட்டே இருக்கணும். அதுதான் என்னோட எதிர்பார்ப்பு.”

அவள் உண்டு வைத்திருந்த பாத்திரத்தை எடுத்துக்கொண்டு தமிழ்ச்செல்வன் உள்ளே செல்ல, அவன் ஓடவிட்டுச் சென்றிருந்த காட்சியில் அவளது பார்வை குத்திட்டு நிலைத்தது. காட்சி மொத்தமும் அந்தப் பெண்ணின் வழியே காட்டாமல், மழையோடு சாளரத்தின் வழியே அவளது முகத்தை, அந்த அமைதியின் அழகை வார்த்தைகளே இல்லாமல் ஒரே நிமிடத்தில் காட்டியிருந்தான் அந்த இயக்குனர்.

*******

சக்தி ஸ்டூடியோவில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தருணம் அது. அவ்விடமே வழக்கம் போலப் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்க, ஒருவன் வேகமாக ஓடிவந்து, “சக்தி! தமிழ் அண்ணா எங்க?” என்று கேட்டான்.

“தெரியலடா” என்றாள் இவள் சுருக்கமாக.

“காலைல இருந்து ஆளையே காணோம். உனக்குத் தெரியாம இருக்காது” என்றான் அவன் விடாமல்.

“நிஜமா தெரியலடா, அவன் மார்னிங் வந்ததைப் பார்த்தேன், அவ்வளவுதான்.”

“தினேஷ்! அவர் அடுத்த படத்தோட ஸ்டோரி நரேஷன்க்கு போயிருக்காராம், நிமலன் சொன்னான். நீ வாடா சாப்பிடப் போகலாம்” என்று மற்றொருவன் அழைக்க, 

தினேஷ் என்பவன், “ஏன் இப்பொழுதெல்லாம் தமிழ் அண்ணா இங்க வர்றதில்லை? அவர் இல்லாம மொத்த இடமும் அமைதியா இருக்கு. சரி, சாப்பிட வா சக்தி… ஏதோ எலக்ட்ரிஷியன் வேலை இருக்காம், எல்லாரையும் ரெண்டு மணி நேரம் கழிச்சு ரெஸ்யூம் பண்ண சொன்னாங்க” என்றான்.

தகவல் கொடுத்தவன் அவ்விடத்திலிருந்து அகன்றிருக்க, இவளோ சிலையாகிப் போனாள்.

தமிழ்ச்செல்வன் மொத்தமாய் அவளிடமிருந்து பிரிந்து யாரோ ஒருவனாகிப் போனது போல், அந்தச் செய்தி அவளுக்கு அத்தனை வேதனையைக் கொடுத்தது. படத்திற்குக் கதை கூறச் செல்லும் பொழுதெல்லாம், சக்தி இல்லாமல் தமிழ் ஒருபோதும் சென்றதில்லை. இவளே வரமாட்டேன் என்று அடம் பிடித்தாலும் இவன் விட்டதே இல்லை. 

“நீ வந்தாதான் உன்னோட பார்வைக்கே பயந்து எனக்குச் சான்ஸ் தருவாங்க சக்தி” என்று உப்புச்சப்பில்லாத ஏதோ ஒரு காரணத்தைக் கூறி இழுத்துச் சென்றிடுவான். 

ஆனால் இன்று? அவளிடம் கேட்கக் கூட இல்லை; அவனுடைய தற்போதைய கதைக்கருவைக்கூடப் பகிர்ந்துகொள்ளவில்லை.

ஏதோ சிந்தனையில் அமர்ந்திருந்தவளிடம், ஸ்டூடியோவில் இருந்தவர்கள் ஏதோ கூறிவிட்டு வெளியேற, அவர்களைப் பார்த்துத் தலையசைத்தாளே தவிர, அவர்களின் வார்த்தைகள் எதுவும் அவளது செவியையோ சிந்தையையோ சென்றடையவில்லை. கைபேசியை எடுத்துத் தமிழ்ச்செல்வனுக்கு அழைக்க, வழக்கம் போல் அவனும் அதனை ஏற்கவில்லை. கூடவே இருப்பதற்கு வேண்டுதல் வைக்கக் கூட முடியாத நிலை… 

பல சமயங்களில் இது பெருத்த வேதனையாக உருவெடுக்கிறது. அழுகையாக வந்தது; கோபமாக வந்தது. போதாக்குறைக்குப் பசி வேறு அவளது கோபத்தை இன்னும் தூண்டியது. அவனை ஒரு நிமிடம்கூட மறக்காமல் இப்படியெல்லாம் நினைத்துக்கொண்டே இருப்போம் என்று அவள் ஒருபோதும் நினைத்ததில்லை. சகதியில் சிக்கிய காலணியாய்த் தத்தளித்த அவளது மனதின் தடுமாற்றத்திலிருந்து சிரமப்பட்டு வெளிவந்து, அவள் முன்னிருந்த ஆடியோ ஒர்க்ஸ்டேஷனைப் பார்க்க, அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

“ப்ச்… இவங்க சாப்பிடக் கிளம்பினா எல்லாத்தையும் ஆஃப் பண்ணிட்டுப் போயிடுவாங்க!” சென்றவர்களை எரிச்சலோடு திட்டி, அதற்குரிய ஸ்விட்சைப் போட, அடுத்தே நொடி பலத்த வெடிச்சத்தத்தோடு தீ மூண்டது! ஒரே நிமிடத்தில் ஒன்றைத்தொட்டு மற்றொன்றெனத் தீயானது மளமளவெனப் பரவ, அடுத்த நொடியே பெரும் ஒலியோடு அலாரம் அடித்தது.

அந்தச் சத்தத்தில் பயந்து நடுங்கியவள், தன்னுடைய கையில் தீக்காயம் பட்டுத் தீயாய் எரிந்ததைக்கூடக் கவனிக்காமல், பயத்தில் நடுங்கி இரண்டடி பின்னே சென்றாள். நெருப்பின் தாக்கம் அங்கிருந்த எந்திரங்களுக்கு வேகமாகப் பரவத் துவங்க, சுதாரித்தவள் தீயணைப்பானைக் கையில் எடுத்த பொழுதுதான், வலது கையில் பட்டிருந்த தீக்காயத்தின் வலி உறைத்தது. 

கையைப் பார்த்தவள், அதனை கண்ணீரோடு உதறித் தள்ளிவிட்டு, தீயணைப்பானை எடுத்துத் தீயினை அணைக்க முயன்றாள். அலாரம் சத்தத்தில் வேகமாகப் பலர் உள்ளே ஓடி வந்திருந்தனர். சக்தி கையிலிருந்த தீயணைப்பானைச் செக்யூரிட்டி வாங்கிக்கொள்ள, கால்கள் நடுங்க நின்றவளைச் சுற்றியிருந்த காட்சியைக் பார்க்கவே இதயமெல்லாம் பதறியது. ஒவ்வொரு எந்திரமும் பல லட்சங்கள் பெறுமே! நிலையில்லாமல் தவித்தவள், பயத்தின் உச்சத்தில் ஒரு கட்டத்தில் மயங்கிச் சரிந்தாள்.

*******

தமிழ்ச்செல்வனுக்குப் பெரிய மகிழ்ச்சி தரக்கூடிய செய்திதான் அது. ஒரு படத்தை முடிக்கும் முன்பே அடுத்த பட வாய்ப்பு! சரத் சந்திரன் அவனை அழைத்துக்கொண்டு ஒரு புரொடக்ஷன் ஹவுஸ் சென்றிருக்க, புரியாமல் விழித்தவனிடம், பெரிய நடிகர் ஒருவர் தானே முன்வந்து அவனது இயக்கத்தில் படம் செய்ய விரும்புவதாகக் கூறியிருப்பதாகவும், அதற்கான முதல் ஏற்பாடாகத் தயாரிப்பாளரையும் அந்த நடிகரையும் சந்திக்க அழைத்துச் செல்வதாகவும் கூறினார். 

அவனுக்கே இது ஒரு ஆச்சரியமாகத்தான் இருந்தது. இருந்தும், இந்தத் தருணத்தில் சக்தி அருகிலிருக்க வேண்டும் என அவனுக்குத் தோன்றியது. அதற்கு ஏதேதோ காரணம் கூறிப் பார்த்தான்.

“என்னதான்டா உனக்குத் பிரச்சனை? உன் கதை அவங்களுக்கு செட்டாகும்னு தோணுச்சு, கூட்டிட்டுப் போறேன்” என்றார் சரத் சந்திரன்.

“அவர் பெரிய ஹீரோ, அவருக்கு ஏத்த மாதிரி என் கதையை மாத்தச் சொல்லுவாங்க. என்னாலெல்லாம் முடியாது” என்றான் இவன் வீறாப்பாக.

“அதெல்லாம் நான் பேசிட்டேன்டா.”

“என் கைல ஒரு சீன் கூட இல்லை, எப்படி அப்புறம்? அதுவுமில்லாம இன்னும் காஸ்ட் கூட நான் ஃபைனலைஸ் பண்ணல.”

“நீ சாதாரணமா கதை சொல்லு, அதுவே பிடிக்கும். காஸ்ட்டை நம்ம படம் முடிஞ்சதும் முடிவு பண்ணிக்கோ. அவங்க சைடுல இருந்து உன்னை ரஷ் பண்ணவே மாட்டாங்க.” இப்படியே பேசிப் பேசி அவனைச் சம்மதிக்க வைத்து, அவனது அடுத்த படத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டு வைத்தார்.

இவனின் இருவரிக் கதையே தயாரிப்பாளருக்கும் கதாநாயகனுக்கும் பிடித்துப்போக, உடனே ஒரு லட்சம் ரூபாயை முன்பணமாக ஒப்படைத்துவிட்டார். 

“என்னைத் தவிர உங்க படத்துக்கு நீங்க யாரை வேணும்னாலும் சூஸ் பண்ணிக்கோங்க தமிழ்ச்செல்வன், எனக்குப் பிரச்சனை இல்லை. உங்க கதைதான் எனக்கு முக்கியம்” என்றுவிட்டான் நாயகன் பிரேம்.

“உன் பவர் தனி தான் தல…” வரும் வழியெங்கும் அவனது ஏடி-களின் அலைப்பறை வேறு.

பாதி வழியில் வரும் பொழுதுதான் ஸ்டூடியோவில் நடைபெற்ற விபத்து அவனுக்குத் தெரியவந்தது. பதறியபடி சக்தியை அழைத்துச் சென்றிருந்த மருத்துவமனைக்கு ஓடினான் தமிழ்ச்செல்வன். பயத்தில் மயங்கியிருப்பதாகக் கூறிய மருத்துவர்கள், கையில் மட்டும் தீக்காயம் ஏற்பட்டிருப்பதாகக் கூறினர். அவன் சென்று பார்க்கும் நேரம் அவள் உறக்கத்தில் இருக்க, காயம் பட்ட கையில் இருந்த கட்டைப் பார்க்கவே இவனுக்கு நெஞ்சு வடித்தது.

“எப்படி ஆச்சுடா?” சுசிகரனிடம் கேட்டவன் பார்வை மொத்தமும் உறங்கும் சக்தியிடம் தான் இருந்தது.

“வயரிங் வேலை போயிட்டு இருந்தது தல. பிளக் எல்லாம் எடுத்து வச்சிட்டு சக்திகிட்ட சொல்லிட்டுதான் போயிருக்காங்க. ஆனா, சக்தி ஆன் பண்ணவும் ஹை வோல்ட்டேஜ் அடிச்சு ஃபையர் ஆகிடுச்சு.”

தலையில் கை வைத்து அமர்ந்தவன், அவளைத் தவிர வேறு எதையும் யோசிக்கவில்லை. அவள் மேல் சின்னக் கீறல் கூட விழாமல் பார்த்துக்கொள்ளும் அவளது குடும்பம்… சிறு அடி பட்டால் கூடத் துடித்துவிடும் குணம் கொண்டவள் சக்தி. அவள் அழுதே அவன் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட பெண், கை நிறையத் தீக்காயத்தோடு படுத்திருப்பதை நினைத்துப் பயம் ஒருபுறம் என்றால், அவள் விழித்த பிறகு அந்த வேதனையை எப்படிப் பொறுத்துக்கொள்வாள் என்கிற பயம் அவனுக்கு மறுபுறம்.

இதற்கிடையில் அவனுக்கும் அவனோடு வந்திருந்த சுசிகரனுக்கும் அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. “என்னதானாம்டா இவனுங்களுக்கு?” எரிச்சலில் தமிழ் கேட்க, “இல்லை… ஒண்ணுமில்லை” என்றான் அவன் மழுப்பலாக.

“இருக்குற டென்ஷன்ல நீ வேற… மறைக்காம சொல்லுடா!”

“அதுவந்து தல… அங்க ஸ்டூடியோ ஓனர் ஏதோ பிரச்சனை பண்றாராம்.”

“அவருக்கு என்னவாம்?”

“தெரியல, உன்னைச் சரத் சார் உடனே வரச் சொல்றார்.”

“வர முடியாதுனு சொல்லு.”

சுசிகரன் தயங்கியபடி, “இல்லை, அங்க ஏதோ பெரிய பிரச்சனையாம்” என்றான்.

தமிழ்ச்செல்வன், “அப்போ நீ போய் பேசு. நான் சக்தி எந்திரிச்சதும் பார்க்காம வர மாட்டேன்” என்றான் உறுதியாக.

“நீதான் வரணும்னு சொல்றாங்க தல. பேசிப் பார்த்தேன், ஒத்துக்குவே மாட்டேங்கிறாங்க.”

நெற்றியை நீவியவன் மணியைப் பார்த்து, “ஒரு மணி நேரத்துல வந்திடுறேன். சக்தி எழுந்தா நான் வேகமா வந்துடுவேன்னு சொல்லு. ஸ்டூடியோல நடக்குற பிரச்சனை எதுவும் அவளுக்குத் தெரிய வேணாம். தெரிஞ்சது…” என விரல் நீட்டித் தமிழ் எச்சரிக்க, “சொல்ல மாட்டேன்” என்றான் சுசிகரன் வேகமாக.

தலையசைத்துச் சென்ற தமிழ், ஸ்டூடியோ உள்ளே வந்து மேனேஜர் அறைக்குள் நுழைய, அவர்தம் முகமே அவரின் எரிச்சலை அப்பட்டமாகக் காட்டியது. இவன் சென்று அமர்ந்ததும் பேசத் துவங்கியவர், அடுத்த பதினைந்து நிமிடங்களாகக் காரசாரமான வாக்குவாதத்தில் இறங்கினார். அவருக்கும் சரத் சந்திரனுக்கும் இடையே பேச்சு வார்த்தை தடித்தது.

பிரச்சனை எல்லாம் பாழாகிப்போன எந்திரங்களுக்கான நஷ்டஈட்டுப் பணம் தான். 

“என்ன சார், இன்சூரன்ஸ் இன்சூரன்ஸ்னு சொல்லிட்டு இருக்கீங்க? அந்தப் பொண்ணுதான் ஆன் பண்ணித் தீப்பிடிச்சிடுச்சுனு நியூஸ் எல்லாம் போயிடுச்சு. இனியும் நான் கிளைம் பண்ணத்தான் முடியுமா? இப்படி ஆனதுக்கு பிறகு யாராவது ரெக்கார்டிங்க்கு இங்க வருவாங்களா? ஒன்னு அந்தப் பொண்ணுகிட்ட காசு வாங்கித் தாங்க… அதான் அவ்வளவு பெரிய மில் வச்சிருக்காங்களே! இனி அவ என் ஸ்டூடியோவுக்குள்ள வரக் கூடாது” என்றார் ஓனர்.

அவர் பக்கம் இருக்கும் நியாயம் இருவருக்குமே புரிந்தது. ஆனாலும் நேரம் செல்லச் செல்ல வார்த்தைகள் தடித்து வரத் துவங்கின. சில மணி நேரங்களுக்கு முன்பு அவனுக்குக் கொடுத்திருந்த முன்பணத்தை எடுத்து அவர் முன்பு வைத்தான் தமிழ். 

“மொத்தக் காசும் நான் தர்றேன். இங்க யாரை வர வைக்கணும், வரச் சொல்லக் கூடாதுன்னு நீங்க சொல்லக் கூடாது. மொத்த பில்டிங்கும் இடிஞ்சு விழுந்தாலும் நான் காசு தருவேன்… அவ்வளவுதானே, வேற எதுவும் பேசணுமா?” என்றான் கம்பீரமாக.

அவர் தலையசைக்கவும், சரத் சந்திரனிடம் திரும்பி, “உங்க படத்தோட என்னோட மிச்ச பேலன்ஸை அவர்கிட்ட கொடுத்துடுங்க, மீதியை நான் ஏற்பாடு பண்றேன்” என்றான்.

மருத்துவமனைக்குக் கிளம்பி வருகையில், பாதி தூரத்தில் சுசிகரனிடமிருந்து அழைப்பு வந்தது. “வந்திட்டு இருக்கேன் சுசி, அரை மணி நேரம்” என்றான் தமிழ்.

“தல, நீ வந்தும் வேஸ்ட். சக்தியை அவங்க வீட்டுல இருந்து வந்து கூட்டிட்டுப் போயிட்டாங்க.”

பதறிக்கொண்டிருந்தவன் அப்படியே வண்டியை ஓரமாகக் கட்டி நிறுத்தினான், “எப்போடா வந்தாங்க?”

“பத்து நிமிஷம்தான் தல இருக்கும். சக்தி அண்ணன் வந்தாரு, டாக்டர்கிட்ட பேசினாரு… இதோ சக்தியைக் கூட்டிட்டுப் கிளம்பப் போறாங்க.”

தமிழ்ச்செல்வனிடம் பெரும் அமைதி குடிகொண்டது, “உன்னைச் சக்தி கேட்டுச்சு தல… வேலை விஷயமா போயிருக்கன்னு சொன்னேன்.”

“ம்ம்” என்றவன் இணைப்பைத் துண்டித்து அப்படியே நின்றான்.

அவள் வீட்டினர் இருக்கும் இடத்திற்குச் செல்ல அவனுக்கு மனம் வரவில்லை. அதே நேரம் அவளிடம் ஒரு வார்த்தையாவது பேசிடத் தோன்றும் தன் மனதை என்ன கூறிச் சமாதானம் செய்வதென்றும் தெரியவில்லை. அவளைப் பற்றி யோசித்தான், அவளது வலியைப் பற்றி யோசித்தான், அவளது மனநிலையைப் பற்றி யோசித்தான். அவளே அவனது எண்ணங்களை முழுவதுமாய் ஆக்கிரமிக்க, அவனது எதிர்காலமோ… இங்கு இன்றைய முக்கியத் தேவையான பணமே இல்லாமல் பெரும் கேள்விக்குறியாய் அவனுக்கு முன்னால் வந்து நின்றது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!