Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நெஞ்சோடு ரீங்காரம்

ரீங்காரம் – 9.1

சக்தியின் அன்னை மரகதவல்லி, “என்னதான்டி நினைச்சிட்டு இருக்க உன் மனசுல? ஏற்கனவே கையில தீக்காயம் வாங்கிட்டு வந்து நிக்கிறியேன்னு நிச்சயதார்த்தத் தேதியைத் தள்ளிப் போட்டாச்சு. இப்போ மறுபடியும் சென்னை போவேன்னு நிக்கிற!” என்று எகிறினாள்.

“இப்போ எதுக்கு மரகதம் இவ்வளவு கோபம்? புள்ள பயந்து நிக்கிது பாரு. இந்தாம்மா சக்தி, இப்படி வா” என்று பேத்தியை அருகில் அமர வைத்தாள் சம்பூரணம்.

அவள் முகம் பார்க்க ஏதோ ஒளியிழந்து காட்சியளித்தது. ஏதோ ஒரு பெரிய சிந்தனை அவளது எண்ணங்கள் மொத்தத்தையும் ஆக்கிரமித்திருந்தது. வீட்டினர் அத்தனை பேரும் அவளையே பார்த்துக்கொண்டிருக்க, அவள் பார்வையோ ஒருவர் மேல் கூட நிலைக்கவில்லை; ஏதோ ஓர் அலைப்புறுதல் அவளது கண்களில் தெரிந்தது.

“என்ன சக்தி… எதுக்கு இவ்வளவு பிடிவாதம்?” – பாட்டி பேத்தியை முழுமையாக ஆராய்ந்துகொண்டிருக்க, தாத்தா வேலு சக்தியிடம் கேட்டார்.



Advertisement

“கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் எப்படியும் வேலைக்கு விட மாட்டீங்கதானே தாத்தா? எனக்குப் பிடிச்ச வேலையை இன்னும் ரெண்டே மாசம் மட்டும் செஞ்சிட்டு வந்திடுறேன்” என்றாள் சக்தி.

“எப்படி சக்திம்மா? இந்த அரைகுறை கையோட உன்னை எப்படி விட முடியும்?” என்று வேகமாகத் தலையிட்டார் அவளது பெரியப்பா.

“காயம் சரியாகிடுச்சு பெரியப்பா. நான் இங்க வந்து ஒரு மாசம் ஆச்சே” என்றாள் மெதுவாக.

Advertisement

பெரியம்மா பூங்கோதை, “உன்னோட தேவை எதையும் நீயா செஞ்சுக்கிறது இல்லையே சக்தி” என, சக்தி உடனே, “நீங்க என்னை எதுவும் செய்ய விடலை பெரியம்மா!” என்றாள் ஒருவித குற்றச்சாட்டாக.

Advertisement

“என்ன சக்தி? உன்னை உள்ளங்கையில வச்சுத் தாங்குறது தப்புன்னு சொல்றியா?” என்று தந்தை முரளி அதட்ட, தந்தையின் கோபத்தில் சட்டெனப் பயந்தவளது மௌனம், அவரது முகத்தை மென்மையடையச் செய்தது.

“மிரட்டாத முரளி… டேய் சக்தி, உனக்கு என்ன இப்போ? நீ சென்னை போகணும், அவ்வளவுதானே?” என்று பெரியப்பா சேந்தன் கேட்க, அவளைப் பார்த்து மெல்ல வரத் துடித்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு தலையசைத்தாள் சக்தி.

“போயிட்டு வாடா” என்றார் சேந்தன் தீர்க்கமாக.

Advertisement

“மாமா, அவ சொல்றதுக்கெல்லாம் சம்மதிக்காதீங்க மாமா” என்று மரகதம் கூற, அதனைத் தடுத்த சேந்தன், “போகட்டும்… ஆனா தனியா அனுப்ப மாட்டேன். மருமகளும் கூடப் போகட்டும்” என்று அன்பரசியைக் குறிப்பிட்டுக் கூறினார்.

தந்தை அருகே கைகட்டி நின்ற வீராந்தகனின் பார்வை, உடனே சமையலறை வாசலில் நின்ற தன் மனைவி மேல் விழுந்தது. அவளிடமோ எந்தவிதமான பிரதிபலிப்பும் இல்லை.

“அந்தப் புள்ள எதுக்கு தம்பி? வேணும்னா நாங்க யாராவது போயிட்டு வர்றோம்” என்றார் வேலு.

பூங்கோதை வேகமாக, “நான் கூடப் போறேன். அவ எதுக்குங்க? ஒரு புள்ளையோட நிம்மதியைக் கெடுத்தது பத்தாதா?” என்று அன்பரசியைச் சாடினாள்.

சேந்தன் உடனே, “தேவையில்லாம பேசாத கோதை! புள்ளைக்குத் தேவையானது எல்லாம் எடுத்து வை. அன்பரசி, நீயும் ரெடியாகுமா” என்று வீட்டுப் பெண்களிடம் கட்டளையிட்டவர், “வீரா, டிரைவர்க்குத் தகவல் சொல்லி வண்டியை வரச் சொல்லு” என்றார்.

சரி எனத் தலையசைத்தவன், ஓட்டுநரிடம் தகவல் கொடுத்து வாகனத்தை ஒருமுறை சோதனை செய்து எடுத்து வரும்படி கூறினான்.

பேசிவிட்டுத் தங்கள் அறைக்குச் சென்ற வீராந்தகன், அங்கிருந்த சோபாவில் அமர்ந்து, துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த தன் மனைவியைப் பார்த்தான். அவள் இந்த வீட்டிற்கு வந்த பொழுது கொண்டு வந்திருந்த ஒரு பழைய பையில் துணிகளை அழுத்தித் திணித்துக் கொண்டிருந்தாள். அந்த அழுத்தத்தைத் தாங்க முடியாமல், அந்தப் பழைய பையின் ஜிப் பிய்ந்து போனது.

பெருமூச்சோடு அதனைப் பார்த்தவள், மாற்றுவழியாக ஒரு ஊக்கை எடுத்துப் பையை மூட முயன்றாள். ஆனால், அந்தச் சிறு பை அத்தனை துணிகளையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் கக்கியது. இத்தனை நேரம் பொறுமை காத்த வீரா, தலையசைத்தபடி எழுந்து, அவனுடைய டிராலி ஒன்றை எடுத்து வந்து வைத்தான். 

அவனே அவளது துணிகளை மாற்றி வைக்க முற்பட, “இல்லை, இதுலயே இருக்கட்டும்” என்றாள் அன்பரசி தடுத்தபடி.

“நீ சென்னை போய் பேக்கைத் திறக்கிற நேரம், உன் துணியெல்லாம் வெளியே கிடக்கும்” என்றான் அவன்.

அதுவும் சரியாகப்பட, அவனை வேலை செய்ய விடாமல் தானே உடைகளை எடுத்து மாற்றி வைக்கத் தொடங்கினாள். பாக்கெட்டில் கைவிட்டு நின்ற அவனது கம்பீரத் தோற்றத்தைத் திரும்பிப் பார்த்தவள், “காபி எடுத்துட்டு வரவா?” எனக் கேட்க, அவன் தலையசைத்தான்.

அவள் காபி எடுத்துக்கொண்டு அறைக்குள் வந்த பொழுது, அவளுடைய பையின் அருகே ஒரு மடிக்கணினியையும், அதற்குத் தேவையான பொருட்களையும் வைத்து, அதற்கென ஒரு லேப்டாப் பையையும் எடுத்து வந்திருந்தான் வீராந்தகன்.

“இது எதுக்கு?” என்றாள் புரியாமல்.

“படிக்கத் தேவைப்படும்” என்றான் சுருக்கமாக.

“இல்லை, நான் சக்தி அண்ணிகிட்ட வாங்கி…”

“தேவைப்படும், வச்சுக்கோ” என்று அவளது பதிலை மறுத்தான்.

“இது உங்க லேப்டாப்… உங்களுக்குத் தேவைப்படும்ல?”

“நான் பார்த்துக்கிறேன். பாஸ்வேர்ட் நம்ம மில் ஓப்பனிங் டேட்” என்றான்.

அன்பரசி மெல்ல, “எனக்கு அது தெரியாது” என்றாள்.

வீராந்தகன் அவளைப் பார்த்து, “என் பிறந்தநாள் தேதிதான்” என்றான்.

“தெரியும்” என்றாள் அன்பரசி.

விழி உயர்த்தி அவளைப் பார்த்தவன், எதற்கும் இருக்கட்டும் என்று நினைவூட்டும் பொருட்டு, “செப்டம்பர் 29, 1995” என்றான்.

புரிந்தது என்பது போல் தலை அசைத்துவிட்டு அவள் தன் வேலையைத் தொடர, அன்பரசி நீட்டிய காபியைப் பருகிக்கொண்டே, அவளது ஒவ்வொரு அசைவுகளையும் தவறவிடாமல் தன் பார்வையாலேயே அளந்து கொண்டிருந்தான் வீராந்தகன்.

“உன் பர்த்டே எப்போ?” வீராவின் கேள்வியில் அன்பரசி கைகள் அப்படியே நின்று அவனை மெதுவாய்த் திரும்பிப் பார்க்க, அவன் புருவத்தை உயர்த்திப் பதிலை எதிர்பார்த்து நின்றான்.

“அதே நாள்தான் 2002.”

வீராந்தகன் புருவங்கள் சுருங்கியது, “போன வருஷம் கூட நீ எதுவும் சொல்லலையே?”

“என்கிட்ட யாரும் கேட்கலை.”

கடந்த வருடம்கூட அவன் பிறந்தநாளுக்காகத் திருச்செந்தூர் சென்று சிறப்புப் பூஜை செய்து வந்தனர். அப்பொழுதுகூட மனைவியின் பிறந்தநாளைக் கேட்கத் தோன்றவில்லை அவனுக்கு. ஏனோ இன்று கேட்கத் தோன்றியது, இறுதியில் அதுவும் ஒரு சங்கடமான நிலையில்தான் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. “என்னுடைய பிறந்தநாள்தான் இன்று” என அவளும் வந்து நிற்கவில்லை. அவன் பிறந்தநாளுக்கு வீட்டிலிருந்த அனைவருக்கும் கிடைத்தது போல அவளுக்கும் ஒரு புது உடை வந்து சேர்ந்தது. அதனைக் கூட அவளுக்கு அணிய மனம் வரவில்லை, அவளது மாமியாரின் குத்தல் பேச்சுகளுக்குப் பயந்தே அணிந்துகொண்டது.

“ரொம்ப யோசிக்காதீங்க” அவனைப் பார்க்காமல் அவள் கூற, “சென்னை போகுறதுல உனக்கு எதுவும் கஷ்டம் இல்லையே?” என்றான்.

“எனக்கு எப்படியோ, உங்களுக்குக் கஷ்டம் இருக்காது” என்றாள் சிறு புன்னகையோடு.

அதன் பிறகு இருவரிடமும் எந்தவொரு பேச்சுவார்த்தையும் இல்லை. இவன் அமைதியாக அமர்ந்துவிட்டான். தன்னுடைய உடைமைகளை எடுத்து அறையை விட்டு நடந்தவள், வாயிலில் ஒரு நொடி நின்று அவனைப் பார்த்துவிட்டு வந்துவிட்டாள்.

அதன் பிறகு சக்தியோடு வாகனத்தில் ஏறிச் செல்லும்பொழுது கூட வீராந்தகனிடம் பேசவில்லை. மரகதவள்ளி கூட, “அவன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டுக்கூடப் போகத் தோணலையாடி உனக்கு?” என்று அனைவர் முன்பும் கேட்டுவிட, “அம்மா!” என்ற மகனின் எச்சரிக்கையில் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டார்.

சம்பூரணம் தான், “எதுனாலும் உடனே தகவல் சொல்லுங்கம்மா. தனியா இருக்குற புள்ளைங்க ரொம்பக் கவனமா இருங்க. பாப்பாவை நல்லா பார்த்துக்கோ மருமகளே” என்றார். சிரிப்போடு அன்பரசி தலையசைக்க, அவர்களது வாகனம் வீட்டிலிருந்து வெளியேறியது.

கண்ணிலிருந்து அந்த வாகனம் நகர்ந்ததும் வீராந்தகன் அவ்விடத்திலிருந்து அகல, “ஏற்கனவே பேசிக்க மாட்டாங்க, இது ஏன் அண்ணே அன்பரசியை அனுப்பி வச்சீங்க?” என்று வீட்டினர் அனைவரின் சந்தேகத்தையும் சேந்தன் முன்பு முரளி வைத்தார்.

“பக்கத்துல இருக்குற வரை இவனுக்குக் குடும்பத்தோட அருமை தெரியாது. அந்தப் பொண்ணும் என் பொண்டாட்டி தொல்லை இல்லாம கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டும்டா” என்றார் தன் மனைவியைக் கேலி பேசி. 

அவரது பதிலில் மரகதவள்ளி முகத்தைத் தூக்கி வைத்து உள்ளே செல்ல, தம்பியிடம், “பொண்ணுங்களைத் தனியா அனுப்பி வைக்க முடியாது. நவிரனை ஒரு வாரத்துல அங்க அனுப்பி வச்சிடலாம்” என்றார் சேந்தன். அதுவும் சரியாகப் பட பெரியவர்களும் சரி என்றனர்.

சக்தியும் அன்பரசியும் சென்னை வீட்டினை அடைந்தபோது நேரம் இரவாகிவிட்டிருந்தது. 

“சாப்பாடு செய்யப் பொருள் இருக்குமா அண்ணி?” என்று அன்பரசி கேட்க, “நாளைக்கு வாங்கிக்கலாம் அண்ணி. இப்போதைக்கு வெளிய ஆர்டர் பண்ணிடலாம்” என்றாள் சக்தி.

சரி என்று தலையசைத்துவிட்டு அன்பரசி உடை மாற்றி வந்த நேரம், அவளுக்காகவே காத்திருந்த சக்தி, அவள் கை பிடித்து இழுத்து வந்து தன் அருகில் அமர வைத்தாள்.

“அண்ணி… உங்க ரிலேஷன்ஷிப்ல ஏதாவது கொஞ்சமாவது முன்னேற்றம் இருக்கா?” என்றாள் நேரடியாக.

சங்கடமாகப் போனது அன்பரசிக்கு. அதனை உணர்ந்த பெண்ணவள், “இல்லை அண்ணி, நான் ரொம்ப டீப்பா போக மாட்டேன். ஜஸ்ட் கேக்குறேன்… ஒரு ரூம்மேட் லெவல் தாண்டி, ஜஸ்ட் ஹாய், பை சொல்ற அளவாவது…?” என்றாள்.

“அதெல்லாம் பேசுவோம் தான் அண்ணி” என்றாள் அன்பரசி, இன்னும் நெளிந்தபடியே.

“நீங்க பேச ட்ரை பண்ணீங்களா?”

அன்பரசி பதில் எதுவும் பேசாமல் மௌனமாகிவிட, “அண்ணி, மனசுல இருக்கிறதை யார்கிட்டயும் சொல்லாம எவ்வளவு நாள்தான் இப்படியே இருக்கப் போறீங்க? என்னை நாத்தனாரா நினைக்காம ஒரு ஃபிரண்ட்டா பாருங்க. நாம பேசுறது நமக்குள்ள மட்டும்தான் இருக்கும்” என்றாள் சக்தி.

சக்தியும் அவளிடம் பேச வேண்டும் எனப் பலமுறை முயன்று பார்த்திருக்கிறாள். ஆனால் வீட்டில் எல்லாரும் இருப்பதால் பேசாமல் போய்விடும். இன்று அதற்கான சந்தர்ப்பம் அமைந்துவிட, அவள் விடுவதாய் இல்லை. தன் சகோதரனைப் பற்றி அவளுக்குத் தெரியும்; அவனிடம் அண்மைக்காலமாகத் தெரிந்த பார்வை மாற்றங்களையும் இன்று கவனித்தவளுக்கு, அன்பரசியின் எண்ணம் எதுவென்று தெரிந்தாக வேண்டும்.

“எல்லாம் நார்மல்தான் அண்ணி” என்று அன்பரசி மழுப்ப முயல, அவளது கையைப் பற்றிக்கொண்ட சக்தி, “ப்ளீஸ் அண்ணி…” எனக் கெஞ்சினாள்.

“அவர் அந்தப் பொண்ணை ரொம்ப லவ் பண்ணியிருக்கார் போல அண்ணி… மறக்க ரொம்ப கஷ்டப்படுறார்.”

“அது பாஸ்ட் அண்ணி…”

“பாஸ்ட்னு எப்படிச் சொல்றீங்க? பாஸ்ட்னு அவர் நினைச்சிருந்தா, இப்பவும் எதுக்கு அந்தப் பொண்ணு பேர் சொல்லி என்னைக் கூப்பிடணும்?”

அந்தத் தகவலில் சக்தியின் இதயமே ஒரு நொடி நின்றுபோனது போல் இருந்தது. அவள் தன் சகோதரனிடம் இதனைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. 

“அண்ணி…” என என்ன பேசுவதென்று புரியாமல் சக்தி தயங்க, அன்பரசியின் கண்ணீர் அவளது இமைகளை நனைத்திருந்தது.

“இப்பவுமா அண்ணி?” என்று சக்தி தவிப்புடன் கேட்க, “இப்போ இல்லை… மூணு மாசத்துக்கு முன்னாடி கூட ஒரு நாள் அப்படிச் சொன்னாங்க” என்றாள் அன்பரசி.

சக்தி மெல்ல, “தப்பா நினைக்காதீங்க அண்ணி, அண்ணாகிட்ட இப்போ எனக்கு நல்ல வித்தியாசம் தெரியுது” என்றாள்.

அன்பரசியோ, “உங்க பெரியம்மா, அம்மா என்னை இங்க திட்டுறதைக் கேட்டுட்டு, அதைச் சகிச்சுக்க முடியாமத்தான் அவர் என்கிட்ட இப்படி இருக்கார்” என்றாள் விரக்தியாக.

“அண்ணாவைத் பற்றி உங்களுக்கு முழுசா தெரியலை அண்ணி. பெரியம்மா பேசுறதைக் கேட்டுட்டு, அவங்களையே அவர் திட்டிருக்கலாமே? ஏன் உங்ககிட்ட அவரோட மாற்றத்தைக் காட்டணும்? அவரோட மனசுல இருந்த ஏதோ ஒரு வேதனை போயிருக்கு. அதுக்குக் காரணம் நீங்க அவருக்குக் கொடுத்த டைம் பீரியடா இருக்கலாம்.”

“உங்க அண்ணனுக்கு சப்போர்ட் பண்றீங்க, பார்த்தீங்களா?”

“அப்படியெல்லாம் இல்லை அண்ணி…”

அன்பரசி பெருமூச்சுடன், “ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு நாள் உங்க அண்ணா நடந்துக்கிட்ட விதத்தைப் பார்த்துட்டு… என்னால இன்னமும் அதுல இருந்து வெளியே வர முடியலை அண்ணி” என்று அன்றைய நள்ளிரவுச் சம்பவத்தைக் கூறத் தொடங்கினாள்.

அன்று வீராந்தகன் வழக்கத்திற்கு மாறாக, இரவு அனைவரும் உறங்கச் சென்ற பிறகும் வீட்டிற்கு வரவில்லை. அன்பரசியின் பார்வை மொத்தமும் வீட்டின் நுழைவாயிலிலேயேதான் இருந்தது. விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டிருக்க, இருட்டில் தனியாக அமர்ந்திருந்தவளுக்கு உறக்கம் எங்கோ பறிபோயிருந்தது. 

அவர்களது ஒரு வருடத்திற்கும் மேலான திருமண வாழ்க்கையிலும் சரி, அதற்கு முன்பும் சரி, அவன் பத்து மணியைத் தாண்டி வந்ததே இல்லை. ஆனால் அன்று அவளது பொறுமையை அளவிற்கு அதிகமாய் சோதித்து, பன்னிரண்டைத் தாண்டித்தான் வந்தான்.

வந்தவன் இருட்டில் இவள் அமர்ந்திருப்பதை கவனித்துவிட்டு, படிக்கட்டுகளில் ஒரு படியில் ஏறி அப்படியே நின்றான். அவனுக்காகவே காத்திருந்தது போல், வேகமாக அவனுக்கு முன்னே படிகளில் ஏறி நடந்தாள் அன்பரசி. அவளது ஒவ்வொரு எட்டுகளிலும், பின்னால் வந்த அவளது கணவனைப் போலவே ஹால் வெளிச்சமும் அவளைத் தொடர்ந்து வந்தது.

அறைக்குள் வந்து கதவை மூடியவன், உடையைக் கூட மாற்றாமல் படுக்கையின் விளிம்பில் அப்படியே அமர்ந்துவிட்டான். ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்த அன்பரசி அவனது வார்த்தைகளுக்காகக் காத்திருக்க, “காபி கிடைக்குமா?” என்றுதான் கேட்டான் அவன்.

“டிபன்?”

“வேண்டாம், ஜஸ்ட் காபி” என்றான் சோர்ந்த குரலில்.

இவள் காபி போடக் கீழே செல்ல, அவன் மீண்டும் படி வரை வந்து நின்றான். அவள் காபி எடுத்துக் கொண்டு வந்த பொழுது, “கார்டன் போகலாமா?” என்றான்.

புரியவில்லை அவளுக்கு அவனின் செயலும் எண்ணமும். ஏதோ பெரிதாய் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்பது மட்டும் அவளுக்குத் தெளிவாகத் தெரிந்தது. இருவரும் தோட்டத்தின் ஒரு பகுதியில் எதிர் எதிரே அமர்ந்திருந்தனர்.

“கிளையண்ட் மீட்டிங் முடிஞ்சு வர்றப்போ… காயத்திரியைப் பார்த்தேன்” என்றான் வீராந்தகன்.

அவன் அந்தப் பெயரைக் கூறியதும், தன் இதயத்தினுள் எழுந்த வலியைச் சொல்லக்கூடத் தனக்கு உரிமை உள்ளதா என்ன என்று நினைத்துக்கொண்டாள் அன்பரசி. அவனது முதல் காதல்… அந்தத் தாக்கத்தை அவளுள் இப்பொழுதும் ஏற்படுத்தும் அதே பாதிப்பை, அன்பரசியால் அவனுக்கு எந்நாளும் கொடுத்துவிட முடியாதே!

“சொல்லவா?” அவள் நிலையை உணர்ந்தானோ என்னவோ, அவன் மெல்ல அனுமதி கேட்க, சிரித்தும் சிரிக்க முடியாமலும் தலை அசைத்து அனுமதி கொடுத்தாள் அன்பரசி.

“பேசணும்னு சொன்னா… நாங்க எப்பவும் மீட் பண்ற அதே ரெஸ்டாரண்ட். நாங்க எங்களோட ஃபீலிங்ஸை ஷேர் பண்ணிக்கிட்ட அதே டேபிள். ரெண்டு பேருக்கும் எதுவும் ஆர்டர் பண்ணத் தோணலை. ஏதோ யோசனையிலயே இருந்தா. ஆப்போசிட்ல உட்கார்ந்திருந்தவ… திடீர்னு என் பக்கத்துல வந்து உட்கார்ந்துட்டா…”

இதைக் கேட்கக் கேட்க, பிடிமானத்திற்காகத் தான் பிடித்திருந்த இருக்கையினைச் சக்தியின் கரங்கள் இன்னும் அழுத்தமாகப் பற்றிக்கொண்டன. சக்திக்கே அத்தனை வேதனை என்றால், அன்பரசிக்கு? உணர்வுகளை அடக்கி, அழுகையைக் கட்டுப்படுத்த அன்பரசிக்குள்ளும் பெரிய போராட்டமே நடந்திருந்தது.

“என்ன நினைச்சாளோ… என் தோள்ல சாய்ஞ்சு, கைக் கட்டிப்பிடிச்சு அழுக ஆரம்பிச்சா. அழுதா… அழுதுட்டே இருந்தா…” வீராந்தகன் மொத்தமாய் மனைவியைப் பார்ப்பதைத் தவிர்த்து, அவளுக்குப் பின்னிருந்த அடர்ந்த இருளை வெறித்துப் பேசினான்.

“அழுகாதன்னு நான் சொல்லக்கூட முடியாதுல? சொல்லத்தான் எனக்கு என்ன அருகதை இருக்கு? ரொம்ப நேரம் அழுதா. பார்க்கப் பார்க்க அவ்வளோ வேதனை. அவளோட காதலை, வேதனையை, வலியை… எல்லாத்தையும் அந்த ஒரே அழுகையில இறக்கி வச்ச மாதிரி இருந்தது. அதுதான் என் தோள்ல அவ சாயுற கடைசித் தடவைன்னு சொல்லாமல் சொன்னது அவளோட கிரிப். கால் மணி நேரம் கழிச்சு எந்திரிச்சு, ஒரு வார்த்தை கூடச் சொல்லாமப் போயிட்டா…”

வீராந்தகன் தன்னுடைய வலது கையை உயர்த்திக் காட்டி, “இந்தக் கைதான்… இப்பவும் அவளோட கண்ணீர் என் ஷர்ட்டை நனைக்கிற ஃபீல். அவகிட்ட நான்…”

“நான் கிளம்பவா? தூக்கம் வருது…” அன்பரசியால் அதற்கு மேல் தன் கணவன் அவனது காதலை உணர்ந்து, கவித்துவமாகப் பேசுவதைக் கேட்க முடியவில்லை. தொண்டையை அடைத்த வார்த்தைகள், அவளது கோபத்தையும் வலியையும் சேர்த்து அடக்கி வைத்திருந்தன.

“ஒரு நிமிஷம்…” என வீராந்தகன் பேச முயல, அவனைக் பேசவிடக் கூடப் பிடிக்காமல், “போகவா?” எனக் கேட்டாள் மீண்டும் ஒருமுறை.

அவளைத் தடுக்க இயலாதென்று உணர்ந்தவன் மெல்லத் தலையசைக்க, பெண்ணவள் அறைக்குள் வந்து, தன் அழுகையை மறைக்கக் குளியலறைக்குள் தஞ்சம் புகுந்தாள்.

அன்றைய நிகழ்வை கூறிமுடித்தவள், “இப்போ சொல்லுங்க, எங்களோட ரிலேஷன்ஷிப் எந்த ஸ்டேஜ்ல இருக்குன்னு” அன்பரசியின் கேள்விக்குச் சக்தியால் ஒரு வார்த்தைகூடப் பேச முடியவில்லை. சகோதரன் இதனையாவது அவள் அண்ணியாரிடம் மறைத்திருக்கலாமே என்று தோன்றியது.

இருவரின் பேச்சையும் தடுக்கும் விதமாய் வீட்டின் அழைப்பு மணியானது அடிக்க, உணவினை எதிர்பார்த்துச் சென்ற சக்திக்குத் தமிழின் வருகை ஆச்சரியம்தான். அவனைப் பார்க்கப் பார்க்கக் கோபம்தான் வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!