Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வசந்தங்கள் வாடுவதில்லை

வசந்தங்கள் வாடுவதில்லை 15

ஞாயிறு என்பதால் நண்பர்களை பார்க்க பைக்கில் வெளியே சென்று வந்த உமாபதி, பைக்கை வீட்டின் காம்பவுன்டிற்குள் கொண்டு வந்து நிறுத்தி பூட்டிவிட்டு, அதன் சாவியை விரலில் சுழற்றியவாறே….. ஏதோ பாட்டை முனுமுனுத்துக் கொண்டு விட்டின் படியேறினான்.

பக்கவாட்டில், மாடிக்கு செல்லும் படியில் நிஷா உட்கார்ந்திருந்ததைப் பார்த்தவன்… அவளின் அருகே சென்று “ஹேய்… இங்க என்ன பண்ற…….?’’ என்றான்.

என்ன சொல்லுவாள்…?  கரப்பான் பூச்சுக்கு பயந்து வந்து உட்கார்ந்திருக்கேன் எனவா சொல்ல முடியும்.  ஆனால் உண்மை அதுதானே.  அவளுக்கு சின்ன வயதில் இருந்தே, பல்லி கரப்பான் பூச்சு இதெல்லாம் பார்த்தாலே பயம்.  காததூரம் ஓடுவாள்.  அஞ்சனா இருந்திருந்தாள், விரட்டியிருப்பாள்.

இவளுக்கு அந்த அளவு துணிவு இல்லை.  இருந்தும் “ஏய்… ச்சு… வெளிய போ…” என துடைப்பத்தை கையில் வைத்துகொண்டு, அதனிடம் மல்லுகட்டியிருந்தாள்.  அதுவோ இவள் இந்த பக்கம் துரத்தினால்… அந்த பக்கமும், அந்த பக்கம் துரத்தினால் இந்த பக்கமும் பறக்க ஆரம்பித்துவிட்டது.  இறுதியில் அதுவே வெளியேறட்டும் என முடிவுக்கு வந்து… படிக்கட்டில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.



Advertisement

“என்ன நிஷா……..?  ஏன்…….. இங்க உட்கார்ந்திருக்க…..?  அஞ்சனா இல்லாம தனியா இருக்க போர் அடிக்குதா….?  அதுக்கு வீட்டுக்கு வந்திருக்கலாமே…..  இங்க தனியா உட்கார்ந்துட்டு என்ன பண்ற…..?”

“சும்மாதான்…… காத்துக்காக…. உட்கார்ந்திருக்கேன்”.

இது நம்பறமாதிரி இல்லையே…… என அவளையே ஆராய்ச்சியாக பார்த்தான்.

Advertisement

அவனது குறு குறு பார்வையில் முழித்தவள்…., “ஒன்னும் இல்ல.  கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்துட்டு போயிடுவேன்….. நீங்க போங்க…….” என்றாள்.

Advertisement

அதற்கு மேல் அவளை சங்கடப்படுத்தாமல்… சென்றுவிட்டான் வீட்டினுள்.

கிட்டத்தட்ட ஒரு மணிநேரமாக…. அங்கேயே உட்கார்ந்திருக்கிறாள்.  கீழே சென்று பிரேமாவையாவது அழைத்து வரலாம் என்றால்… மதிய நேரம்.  சாப்பாடு முடித்து அசந்திருப்பார்கள்.  இந்த நேரத்தில் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என எண்ணியவள்…. அங்கேயே உட்கார்ந்துவிட்டாள் அமைதியாக.  அந்த நேரத்தில்தான் உமாபதி வந்ததும்.

அடுத்த அரைமணி நேரம் கழித்து, பைக்கில் மறந்து வைத்துவிட்ட தனது கண்ணாடியை எடுக்க வந்த உமாபதி, இன்னும் நிஷா அங்கேயே உட்கார்ந்திருப்பதைப் பார்த்தான்.

Advertisement

என்னாச்சு இவளுக்கு…….. ஏன்…. வெயில் நேரத்துல இங்க உட்கார்ந்திருக்கா…..? என அவளின் அருகில் சென்றான்.

நிஷா….. இவன் வந்ததைக்கூட உணராமல் உட்கார்ந்த வாக்கிலேயே கழுத்தை திருப்பி மேலே அவள் வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அங்க என்ன பார்க்கிறாள்………..?  “நிஷா…..”

அவனது குரலைக் கேட்டு திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள்.

“என்ன பார்த்திட்டிருக்கே………?”

“ம்கூம்…..” என தலையை அசைத்தாள்.  எங்கே வெளியில் சொன்னால் அதை வைத்து கேலி செய்வானோ என அச்சம் அவளுக்கு உள்ளுக்குள்.  ஏன் அஞ்சனாவே அவளை இதை வைத்து பல முறை கிண்டல் செய்திருக்கிறாள்.  “இவ்வளவு வாய் அடிக்கிற…. ஆனால் ஒரு கரப்பான் பூச்சுக்கு இந்த பயம் பயப்படுறியேடி…” என இவளை ஓட்டித் தள்ளுவாள்.  அதுபோல இவனும் ஏதாவது சொல்லவானோ… என்்பயம் மனதுள்.  அதனால் வாயைத் திறக்காமல் பார்த்திருந்தாள்.

ஆனால் உமாபதிக்கோ…. லேசாக நெருடல் வந்திருந்தது.  என்னத்துக்கோ பயந்துதான் இங்க உட்கார்ந்திருக்கா… என உணர்ந்திருந்தான்.

ஆதலால் அவள் வாயைத் திறப்பாள் என எதிர்பார்த்து…, அவளையே சில நொடிகள் பார்த்தவன், நிஷா ஒன்றும் சொல்லாததால், அவளைத் தாண்டி படிக்கட்டில் ஏறி மேலே சென்றான்.  அவனது பின்னாடியே…. மேலே வந்தவள் வீட்டிற்குள் செல்லாமல் வெளியவே நின்றாள்.

வீட்டின் கதவு திறந்திருந்தது.  வீட்டின் உள்ளேயும் யாரும் இல்லை.  யாருமில்லையே… என யோசனையாக திரும்பி நிஷாவைப் பார்த்தான் கேள்வியாக.  ஆனால் அவளது பார்வையோ……… வீட்டின் உள்ளேதான் இருந்தது.  கண்கள் ஹாலைச் சுற்றி நாலாப்பக்கமும் கரப்பான் பூச்சியைத் துழாவிக் கொண்டிருந்தது.

“என்னத்த பார்க்குறா………?” என அவளையே பார்த்து நின்றான் உமாபதி.

அவனைத் திரும்பி பார்த்தாள் நிஷா.

யோசனையாக நிஷாவையே பார்த்திருந்தவன், அவள் திரும்பி பார்த்ததும், என்ன…? என்றான் புருவத்தை அசைத்து சைகையால்.

“அ…து கரப்பா….ன் பூச்சி….னா எனக்கு பயம்.  நான் படுத்திட்டிருக்கும் போது ஜன்னல் வழியா உள்ள வந்தது.  அதான் பயந்துட்டு வந்து படியில உட்கார்ந்துட்டேன்”.

அவனுக்கு நிஷா கூறியதில் சிரிப்பு வந்தது.  ஓஹ்… ஆள் ஸ்ட்ராங்… பேஸ்மன்ட் வீக் கேஸா… இவள் என உள்ளுக்குள்ளே கலாய்த்தவன் “ஹா…. ஹா…. தமிழ்நாட்டு பொண்ணுங்க புலிய முறத்தால் விறட்டுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன்.  நீ என்னடா…..ன்னா….. கரப்பான் பூச்சிக்கே…. பயந்துபோய் படியில வந்து உட்கார்ந்திருக்கே”.

…………………………..

“என்ன பேச்சைக் காணோம்…?  இதான் உன்னோட வீரமா……?”

“ஹலோ…… நான் ஒன்னும் பயந்துட்டு வந்து உட்கார்ல.  சரி பாவம் ஒரு உயிரை கொல்ல வேணாமேன்னு… பாவம் பார்த்துதான், அதுவா போகட்டுமேன்னு வந்து உட்கார்ந்திருந்தேன்.  என்னை பயந்தாங்கொள்ளின்னு நினைச்சீங்களா….?”

ஹ்ம்ம்…. அப்படியா…..?  நம்பற மாதிரியில்லயே…. பயம் இல்லாம இதுக்கு பேர் என்னங்க…. மேடம்…? என்றான் இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு.

இவன் கிட்டயா மாட்டுவன்… என மனதுக்குள் முனகியவள், “ம்ப்ச்.. அ…து சின்ன வயசிலிருந்தே… எனக்கு கரப்பான் பூச்சின்னா பிடிக்காது.  பல்லிய பார்த்தாலும் பயந்தான்.  ஆனால் இப்ப பல்லிய…லாம் பார்த்தா தைரியமா நானே துரத்தி விட்டுடறேன்.  ஆனால் இந்த கரப்பான் பூச்சின்னா….தான்… கொஞ்சம் பயம்….” என இழுத்தாள்.  அவன் முகம்  கேலியாக மாறுவதைப் பார்த்தவள்,  “அப்படியும் அதை விரட்ட ட்ரை பண்ணேன்… போகமாட்டேன்னு இங்கயே பறந்துட்டிருக்கு..” என்றாள் பாவமாக முகத்தை வைத்து.

உதட்டில் நமுட்டுச் சிரிப்புடன்… “கொஞ்ச பயம்… ம்ம்…… பார்த்தனே… எவ்வளவு நேரமா, மேடம் படில உட்கார்ந்திருந்தீங்கன்னு…”

“சும்மா…. சும்மா…. அதையே சொல்லாதீங்க…..  நீங்களாம் பயப்படவே மாட்டீங்களா…..?”

“நாங்களாம்…. கரப்பான் பூச்சிக்கு பயப்படறதில்ல.  மனுஷங்களுக்குதான் பயப்படறது….” என்றான் இருபொருள்பட…. அவளை மனதில் வைத்து.

அவன் சொல்லியதை சரியாக காதில் வாங்காதவள்…., “எதுவோ ஒன்னு… இப்ப இதுக்கு ஒரு வழி சொல்லுங்க.  இந்நேரம் அஞ்சனா இருந்திருந்தா… அப்பவே அதை துரத்தி விட்டிருப்பாள்….”

“சரி வா….. எங்க இருக்கு….?”

“ரூம்ல….”

“அறைக்குள்ளயா…………..?” என தயங்கினான்.

பெண்கள் இருக்கும் வீட்டில்….., அறைக்குள் செல்ல அவனுக்கு தயக்கமாக இருந்தது.  திரும்பி நிஷாவைப் பார்த்தான்.  பாவமாக இருந்தது.  பாவம் எவ்வளவு நேரம் இப்படி வெளியே உட்கார்ந்திருந்தாளோ…. என அவளுக்காக மனதுக்குள் இரங்கியவன்…… அறைக்குள் சென்றான்.

அவன் பின்னாலேயே அறைக்குள் வந்தவள்….. அறையைச் சுற்றி நோட்டம் விட்டாள்.

அவனும் அறையை சுற்றி தேடினான்.  “எங்கயும் இல்லையே நிஷா….. திரும்ப போயிருக்கும்….”

“ம்கூம்….  அது இங்கதான் இருக்கும்.  ப்ளீஸ்……… அதை எப்படியாவது தொரத்தி விட்டுட்டு போங்க…”

“இருங்க… வரேன்” என்று துடைப்பத்தை எடுத்து வந்தவள்.., கட்டிலின் அடியில், வாட்ரோபின் அடியில்…., கூட்டிப் பார்த்தாள்.  அங்கேயும் இல்லை.  அவன் பக்கத்தில் இருக்கும் தைரியத்தில் படுக்கையை தட்டி உதறினாள்.  அங்கேயும் இல்லை.  எங்க போயிருக்கும்… என யோசனையாக நகர்ந்து வந்தவள்…, அறையின் கதவைப் பிடித்து கொண்டு, அதன் மேலேயே சாய்ந்து நின்று பார்வையால்….. அறை முழுவதையும் துழாவினாள் கண்களால்.

அறையைசுற்றி தேடிப் பார்த்த உமாபதி…. திரும்பி அவளைப் பார்த்தான்.  அவளைப் பார்த்தவனின் பார்வை., அவளுக்குப் பின்னால் சென்று நின்றது.

கதவுக்குப் பின்னால்…. அதன் மூலையில் சுவற்றை ஒட்டினாற் போல இருந்த கார்னரில் கரப்பான் பூச்சி இருந்தது.

சரியாக சொல்லப்போனால் நிஷாவுக்கு முதுகுப்புறமாக…….. கதவின் மூலையில் இருந்தது.

நிஷா அதைப் பார்க்கவில்லை.  அவள் தனக்கு முன்புறமாக இருந்த இடத்தில் தேடிக் கொண்டிருந்தாள்.

அது கொஞ்சம் கொஞ்சமாக அவளது கால்களுக்கு அருகில் நகர்ந்து வந்து கொண்டிருந்தது.

அவளிடம் சொன்னால் பதறப்போகிறாள் என நினைத்தவன்…, “நிஷா இங்க தள்ளி வா…..” என்றான்.

எதுக்கு….? என அவனைப் பார்த்தவள்…, அவன் பார்வை சென்ற இடத்தை நோக்கி அவளது பார்வையும் திரும்பியது.

அவ்வளவுதான் துடைப்பத்தை வீசிவிட்டு, துள்ளி…… தாவி…… ஓடிவந்து….., அவனது முதுகின் பின்னால் நின்றுகொண்டு, அவனது கையைப் இறுக்கி பிடித்துகொண்டாள்.

அவள் அறையைவிட்டு வெளியே ஒட முடியாதவாறு கதவை ஒட்டி வழியில் கரப்பான் பூச்சி இருந்ததால்,  வெளியே ஓட முடியாமல் அறையின் நடுவில் நின்று கொண்டிருந்த உமாபதியிடம் வந்திருந்தாள்.

பயத்தில் அவளது நெஞ்சுகூடு ஏறி இறங்குவதை… முதுகில் உணர்ந்தவனுக்கு….. வார்த்தையில் வடிக்க முடியாத உணர்வுகள்.

சட்டென இப்படி வந்து ஒட்டிக்குவாள் என அவன் கனவா கண்டான்.  இவளது செயலில் நிலைகுலைந்து நின்றிருந்தான் உமாபதி.  இப்படி திடீரென நிஷாவின் நெருக்கத்தை….. அவன் எதிர்பார்க்கவில்லை.

சில நொடிகளில் தன்னை கட்டுக்குள் கொண்டுவந்தவன், மெல்ல “நிஷா……” என்றான்.

அவள் எங்கே இதையெல்லாம் உணர்ந்தாள்.  “ஹ்ம்ம்….. போயிடுச்சா….?” என அவன் முதுகுக்குள் ஒளிந்திருந்தாள்.

பின்பக்கமாக தன் கைகளைகொண்டு அவளை விலக்கி நிறுத்தி திரும்பி பார்த்தான்.  கண்களை இறுக மூடி அவனது பின், தோள்பட்டையில்  தலையை வைத்து அழுத்திக்கொண்டு நின்றிருந்தாள் இன்னும்.

இப்படி ஒரசிட்டு நிக்கிறாளே.  மனுசனை சோதிக்கறதே இவளுக்கு வேலையா போச்சு….. என உள்ளுக்குள்ளேயே புலம்பியவன், தறிகெட்டு ஓடத்துடித்த மனதை இழுத்து பிடித்தான்.

“நிஷா….”

“அதை முதல்ல இங்கிருந்து தொரத்துங்க……”

“நீ என்னை விட்டாதான. நான் அதை துரத்த முடியும்…”

அவன் சொன்னதும்தான் ஸ்மரணை வந்ததுபோல.  டக்கென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தவள்…. “சாரி……” என விலகி நின்றாள்.

பெருமூச்சுடன் அவளிலிருந்து பார்வையை நகர்த்தியவன், சென்று அதனை கையாலேயே பிடித்து கொண்டு போய் கீழே தூக்கியெறிந்து விட்டு…. வந்தான்.

அதனைப் பார்த்து நின்றிருந்தவள்…… “ஹப்பா….” என ஆசுவாசப்பட்டாள்.

திரும்பி வந்தவன்… அவளைப் பார்த்து முறுவலித்து….. ஒற்றை புருவத்தை மேலேற்றி “பயம் போயிடுச்சா…..?” என்றான்.

“ஹ்ம்ம்….  ஆனால் நீங்க அதை…. கையெல்லாம் வச்சு, உவ்வா…. என வாயை குவித்து காட்டினாள்…. ஒவ்வாமையுடன்.

அவளது பாவனையில் கையை இடுப்பில் வைத்து முறைத்தவனைப் பார்த்து…  “அச்சோ…. அத தொட்டுட்டு, அதே கையால ஷர்ட்டுலலாம் கையை வைக்காதீங்க.  போய் குளிங்க… போங்க….”

அடிப்பாவி…. இவ்வளவு நேரம்… அதை துரத்துங்கன்னு, அந்த கதறு கதறிட்டு…, இப்ப என்னன்னா…… பிளேட்டையே மாத்துறாளே…  என்னவோ அவள் சட்டைய தொட்ட மாதிரி…., முகத்தைவேற இப்படி வச்சிருக்கா… எனக்கு தேவைதான்…… என நொந்துகொண்டு கீழே இறங்கினான்.

மாலை வேளையில் காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டு… நாச்சியப்பன் வந்து கதவைத் திறந்தார்.  வெளியே நிஷா நிற்பதைப் பார்த்து சிரித்த முகமாக “உள்ள வாம்மா…..” என அழைத்தார்.

“ஆன்ட்டி இல்லையா…..?  அங்கிள்…”

“உள்ள இருக்கா….., இரு கூப்பிடறேன்.  நீ உள்ள வா….”

நிஷா உள்ளே வந்தாள்.  அதற்குள் நிஷாவின் குரல் கேட்டு பிரேமாவே வந்திருந்தார்.

“வா…. நிஷா…  உள்ள வர வேண்டியதுதானே….. ஏன் அங்கேயே நிக்கறே…?”

“இருக்கட்டும் ஆன்ட்டி.  காலையில நீங்க கொடுத்த டிஃபன் சூப்பரா இருந்தது.  தேங்க்ஸ் ஆன்டி.  பாத்திரம் கொடுத்துட்டு போலாம்னுதான் வந்தேன்”.

பிரேமா சிரித்துக் கொண்டே பாத்திரத்தை வாங்கினார்,  அதற்குள் ஏதோ இருப்பதுபோல்…. உள்ளே இருந்து சத்தம் வந்தது.  அவளை கேள்வியாக பார்த்துக்கொண்டே…. பாத்திரத்தை திறந்து பார்த்தார்.  உள்ளே பாத்திரம் முழுக்க வெள்ளைநிற ரோஜாப்பூக்கள்… இருந்தது.

பிரேமாவுக்கு வெள்ளை நிற ரோஜாக்கள் என்றால் கொள்ளைப் பிரியம்.  அதை முன்னமோ பேச்சுவாக்கில் அவர் மூலம் அறிந்திருந்தாள்.  அதுவும் ரோஜாவின் ஒவ்வொரு இதழின் விளிம்பிலும் ப்ங்க் நிறத்தில் பார்டர் வைத்தது போல. வெள்ளையில் துளி சிவப்பு நிறமும் சேர்ந்தால் எப்படி இருக்குமோ….? அப்படி இருந்தது ரோஜா மலர்கள்.  வாசமும் மூக்கைத் துளைத்தது.

பார்ப்பதற்கே அத்தனை அழகுடன் மனதை மயக்கியது பூக்கள் மொத்தமும்.  ரோஜாவைப் பார்த்ததுமே பிரேமா சிறு குழந்தைபோல் சந்தோஷமாக, “ஹைய்… வைட் ரோஸ்…” என ஆச்சர்யத்தில்………. கண்களை விரித்தவர், “ஹேய்… எங்க வாங்குனே…?”  இவ்வளவு….? என்றார் கேள்வியாக அவளிடம் புன்னகையுடன்.

“மார்க்கெட் போயிருந்தேன், ஆன்ட்டி….”

“ஓ…. தேங்க்ஸ் நிஷா……” என்றார்.

“அச்சோ… ஆன்ட்டி… இதுக்கு போய் தேங்க்ஸ்லாம் சொல்வீங்களா…?   அப்ப….. நீங்க அப்பப்ப ருசியா…. சமைச்சு கொடுக்கறதுக்கு எல்லாம்…, நான் எவ்வளவு தேங்க்ஸ் சொல்லனும்….?”

இவளது குரல் கேட்டு அறையில் இருந்து வெளியே வந்தான் உமாபதி.

அவனைப் பார்த்து கள்ளமில்லாமல் சிரித்தவள், “தேங்க்ஸ்…” என்றாள்.

எதுக்கு… எனப் பார்த்து நின்றார் பிரேமா.

பிரேமாவின் பார்வையை உணர்ந்த நிஷா, “அது…. இன்னைக்கு வீட்டுல….” என ஆரம்பித்து  முன் மாலைப்பொழுதில் நடந்ததை பிரேமாவிடம் கூறினாள்.

பிரேமா திரும்பி மகனைப் பார்வையால் துளைத்தார்.  ஐயோ…. மாட்டி விட்டுட்டாளே… என முழித்தவன், அவனது அப்பா வேறு என்ன சொல்வாரோ…? என பயந்து நாச்சியப்பனைத் திரும்பி பார்த்தான்.

நாச்சியப்பனோ, நிஷா கூறியதைக் கேட்டு உதட்டில் சிரிப்புடன் அவளைதான் பார்த்திருந்தார்.  அவருக்குள் இதுதான் ஓடியது.  ஒரு கரப்பான் பூச்சுக்கு இந்த பாடா… என்று.

தந்தையின் முகத்தில் சிரிப்பைப் பார்த்ததும்தான் அவனுக்கு ஹப்பாடா என சுவாசம் சீரானது.  எங்கே தவறாக நினைத்துவிடுவாரோ…  என தவித்தவனுக்கு இப்போதுதான் சாந்தமானது மனது.

“வரேன் ஆன்ட்டி…” என நிஷா சென்றுவிட்டாள்.

பிசாசு.  கரெக்டா… வந்து போட்டுக் கொடுத்துட்டு போயிட்டாள்.  நான் என்ன வேணும்னா…. போனேன்?  இப்ப இவளை இங்க யார் கூப்பிட் டாங்க…..?  பெரிசா… தேங்க்ஸ்… சொல்ல வந்துட்டாள்… என மனதில் நிஷாவை தாளித்துக் கொண்டிருந்தான்.

திரும்பி தாயைப் பார்த்தான்.  அவர் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.

அவர் பின்னாடியே சென்றவன், “ம்மா…. அவள்தான் சொன்னாள் இல்ல.  ரொம்ப நேரமா… உள்ள போக பயந்துட்டு படியிலேயே உட்கார்ந்துட்டிருந்தாள்… ம்மா…. அதான் ஹெல்ப் பண்ணலாம்னு…., போனேன்”.

“அவங்க அப்பா அம்மா…. நம்மள நம்பிதான் விட்டுட்டு போயிருக்காங்க உமா.  பார்த்து நடந்துக்கனும்னும்…”  என அவனுக்கு வார்த்தையிலேயே ஒரு கொட்டு வைத்து அறைக்குள் சென்றுவிட்டார்.

திரும்பி நாச்சியப்பனை பாவமாக பார்த்தவன், “என்ன ப்பா…. அம்மா இப்படி சொல்லிட்டு போறாங்க.  அவங்க சொல்றத பார்த்தா…. நான் ஏதோ தப்பு பண்ண மாதிரியிருக்கு”.

“உங்கம்மா அப்படி சொல்லல உமா.  ‘’வரும் முன் காப்போம்’’ ன்ற மாதிரி முன்னெச்சரிக்கையா… நடந்துக்கறது நல்லதில்லையா?  நாளைக்கு நம்மள யாரும் குறை சொல்லிட கூடாதுன்னு நினைக்கறா…  அதுல தப்பில்லையே பா” என்றார் மனைவிக்கு ஆதரவாக.

இவரது வார்த்தையில் உமா கலக்கமாக நின்றிருந்ததைப் பார்த்தவர், “விடு.  உன்னை எனக்கு தெரியாதா…?  நீ தப்பா எடுத்துக்காத.. .” என்றவர் கிண்டலாக அவனைப் பார்த்து, “ஆனாலும்… சும்மா சொல்லக்கூடாது உமா.  நீ இன்னைக்கு  பண்ண வீரதீர செயல பாராட்டியே ஆகனும்… ”  என்றார் உதட்டில் நெளியும் குறும்புடன்.  “கரப்பான் பூச்சியெல்லாம் பிடிச்சு வெளிய போட்டிருக்கே.  எவ்வளவு பெரிய சாதனை…”

அவரது கேலியில்  “ப்பா….” என சிணுங்கினான்.

சிரிப்புடன் அறைக்குள் சென்றுவிட்டார்.

“மக்கு… மக்கு… இவளுக்கு மூளையில ஏதாவது இருக்கா…..?  இல்லையா….?  ஆளு வளர்ந்திருக்காளே தவிர அறிவேயில்ல.  எதை…, எங்க வந்து சொல்றதுன்னு.., கொஞ்சம்கூட இங்கிதம் இருக்கா…..?  சரியான மக்குப் பண்டாரம்…..” என நிஷாவை வசைபாடி தலையிலடித்துக் கொண்டான் உமாபதி.

அறையை விட்டு வெளியே வந்து, பூவை கொண்டு போய் பிரிட்ஜில் வைத்துவிட்டு வந்த பிரேமா… இவன் வாய்விட்டு ஏதோ முனுமுனுத்துக்கொண்டு….. தலையிலடித்து கொண்டு நிற்பதை பார்த்து நின்றார்.

நிமிர்ந்து பிரேமாவைப் பார்த்தவன்…. அசடு வழிந்துகொண்டே… “ஒன்னும் இல்லம்மா….” என அறைக்குள் ஓடிவிட்டான்.

மகனின் நடத்தையில் அவருக்கும் முகம் மலர்ந்திருந்தது.  மெல்ல தலையை இடதும் வலதும் அசைத்து சிரித்துகொண்டே அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.

அஞ்சனா மறுநாள் காலை ஆறு மணிக்கெல்லாம்…., பெங்களூர் வந்து சேர்ந்திருந்தாள்.  என்னவோ….? அவளது முகம் சோர்வாகவே இருந்தது.  அன்று அலுவலகம் சென்று வந்தும் அவள் முகம் தெளியவில்லை.

“நிஷா…., ஏன்…. அஞ்சு டல்லா இருக்கே…..?”

“ம்ப்ச்…. ட்ராவல் பண்ண டையர்டா…. இருக்கும்”.

அவளது இரு தோள்களையும் பிடித்து நேருக்கு நேர் நின்று அஞ்சனாவின் கண்களை உற்றுப் பார்த்த நிஷா….. “எனக்கு தெரியாதா…?  உன் மூஞ்சு எதுக்கு….? எந்த ரியாக்‌ஷன் காட்டும்னு?  என்ன விஷயம்….? ஊர்ல ஏதாவது பிரச்சினையா…?  என்ன நடந்துச்சு அங்க….?  ஏன் இப்படியிருக்க…?”

“ம்ப்ச்… விடு நிஷா.  பசிக்குது…  டிபன் செய்யனும்”.

“பண்ணலாம்…. முதல்ல…. என்ன மேட்டர்னு சொல்லு….” என அஞ்சனா தோளின் மீதிருந்த கையை விலக்காமல்… அப்படியே நின்றிருந்தாள் நிஷா.

சொல்லாமல் விடமாட்டாள்… என அறிந்த அஞ்சனா, “அப்பா வோட சண்டை….” என்றாள்.

“ஏன்…?  என்னாச்சு…..?  மாப்பிள்ளைய பிடிக்கலையா……?  மாமா  கட்டாயப்படுத்துறாரா…..?”

“ம்ப்ச்…. அதெல்லாம் இல்ல…..”

“அப்ப வேறென்ன…..?”

“கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேலைக்கு போகக்கூடாதாம்…..”

“ஏன்….? என்னத்துக்கு….?”

“அதைதான்…. நானும் கேட்டு சண்டை போட்டுட்டு வந்திருக்கேன்.  எல்லாம் இவங்க இஷ்டமா….?  நம்மள கேட்காம…. எல்லா முடிவும் இவங்களே எடுப்பாங்களா…..ன்னு கடுப்பாயிருக்கு எனக்கு.  மாப்பிள்ளைக்கு கல்யாணத்துக்கு அப்புறம் நான் வேலைக்கு போறதுல விருப்பமில்லையாம்.  அதை அவர் என்கிட்ட நேரடியாவே சொன்னார்.  அவரை சொல்லி குத்தமில்ல…..”

“பர்ஸ்ட் டைம் வந்தப்பவே அப்பாகிட்ட சொல்லியிருக்காரு.  அப்பா என்கிட்ட சொல்லாம மறைச்சிருக்காரு…”

“ஏன்னு கேட்டா…… நீ கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போக வேணாம்னு என்கிட்டயே… நேரடியாவே சொல்றார்”.

“முடியாது நான் வேலைக்கு போவேன்னு சொன்னதுக்கு……….தான் சண்டை”.

“அத்தை எதுவும் சொல்லலையா…?”

“அவங்க என்னைக்கு பேசியிருக்காங்க… அப்பா என்ன முடிவு பண்றாரோ… அதுதான்…”

“மாப்பிள்ளைக்கிட்ட பேசி பார்க்கவேண்டியதுதான….”

“அவர்தான் இதுக்கு மூலகாரணமே.  அவர்தான் என்கிட்டயே நேரடியாவே வேலைக்கு போகவேண்டாம்னு சொல்றாரே….” என ஜெகன் கடைசியாக பேசிச் சென்றதை யும் நிஷாவிடம் கூறினாள்.

“விடுடி…., அதான் அவர் கல்யாணத்துக்கு அப்புறமும்…. நீ வேலைக்கு போறதுக்கு ஒத்துக்கிட்டாருல்ல….”

“ம்ப்ச்…. எனக்கென்னவோ… நம்பிக்கையில்ல நிஷா.  இப்ப இப்படி பேசறவங்க கல்யாணத்துக்கு பின்னாடி. போகவேணாம்னு சொல்லிட்டா…?  என்னவோ அவங்க பேமிலிய பார்த்தா இன்னும் பயமாயிருக்கு…”

“விடு பார்த்துக்கலாம்.  அதையே நினைச்சு டென்ஷனா… இருந்தா மட்டும் சரியாயிடுமா….?  ஃபிரியா விட்டுட்டு அடுத்தத பாரு…”

அஞ்சனாவுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு நடக்கின்ற செய்தி செல்வதுரை குடும்பத்தினருக்கு தெரிய வந்தது.  செல்வதுரைக்கு  நெருக்கமான ஒருத்தர், வேல்முருகன் குடியிருக்கும் ஊரில் வசித்து வருகிறார்.  அவர் மூலமாக செய்தி செல்வதுரைக்கு தெரிந்திருந்தது.

மீனா எகிறிக் கொண்டிருந்தார் செல்வதுரையிடம்.

“பார்த்தீங்களா….?  உங்க தங்கச்சி வீட்டுக்காரர… நம்மகிட்ட…. பொண்ணுக்கு இப்ப கல்யாணம் செய்யற ஐடியா இல்லைன்னு சொல்லிட்டு… என்ன வேலைப் பார்த்திருக்காருன்னு?”

“என்னமோ உருகினீங்களே… உங்க தங்கிச்சிகிட்ட…?  அவள்கூட நமக்கு சாதகமா எதுவும் செய்யலையே. எனக்குத் தெரியும் இதுதான் நடக்கும்னு?  நாந்தான் அப்பவே சொன்னனே…. இந்த கல்யாணம் நடக்காது.  வீண் வேலை எதுக்குன்னு…..?  கேட்டீங்களா….?”

“இப்ப நாம போய் கேட்டு மூக்குடைப்பட்டு…., அசிங்கப்பட்டு….. அவமானப்பட்டதுதான் மிச்சம்.  என்னவோ…. அன்னைக்கு…. நான் உங்களை பேசவேணாம்னு…. கூட்டிட்டு வந்ததுக்கு…, அந்த பேச்சு பேசி என்கிட்ட கோச்சுகிட்டீங்க….  இப்ப என்ன நடந்துச்சாம்…?”

“இந்த அசிங்கம் நமக்கு தேவையா…..?  என் பிள்ளைக்கு பொண்ணா கிடைக்காது……”. என கணவரை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தார்.

நல்லவேளை இது அவர்களது அறைக்குள் நடந்து கொண்டிருந்தது.  அந்தமட்டும் செல்வதுரை அமைதியாக இருந்தார்.  மனைவி பேசியதற்கு அவரால் மறுமொழி எதுவும் பேசமுடியவில்லை.  என்ன பேசுவார்….?  என்ன பேசமுடியும் அவரால்.  அவரும் இதை எதிர்பார்க்கவில்லையே.

அவர் ஆசைப்பட்டது ஒன்று.  நடப்பது ஒன்று.  மனதின் ஓரத்தில் எப்படியும் தங்கையின் மகளை மருமகளாக கொண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் கனவு கண்டு கொண்டிருந்தவருக்கு…, இந்த செய்தி ஏமாற்றத்தையும்… அதிர்ச்சியையும்…. கொடுத்தது.

செல்வதுரை மீனா தம்பதியரின் பெரிய மருமகள் காஞ்சனா… அங்கு அவளது கணவன் கார்த்திக்கை நச்சரித்துக் கொண்டிருந்தாள்.  “என் தங்கச்சிய தேவாவுக்கு எடுக்க சொல்லி எத்தனை முறை ஜாடைமாடையா உங்க அம்மாகிட்ட சொல்லியிருப்பேன்.  கேட்டாங்களா…?  இப்பப்பாருங்க….?  ஒழுங்கா உங்க அம்மா…. அப்பாகிட்ட பேசுங்க….. என் தங்கச்சிய தேவாவுக்கு கட்டிவைக்கலாம்னு”.

“அடியே….. நீ வேற நேரங்காலம் தெரியாம… எரியற நெருப்புல… எண்ணெய ஊத்த சொல்றே…  ஏற்கனவே அப்பாவும் அம்மாவும் செம டென்ஷனா இருக்காங்க.  இப்பபோய் இதை பேச முடியுமா…?”

“வேற எப்ப பேசுவீங்க…?  இப்பதான் பேசனும்.  அதான் உங்க அத்தை பொண்ணுக்கு வேற இடத்துல மாப்பிள்ளை பார்த்து முடிச்சுட்டதா… மாமா சொன்னாங்களே…..?  இன்னும் எதுக்கு…..? வெயிட் பண்ணனும்.  நேரங்கடத்தாம… சீக்கிரம் பேசுங்க.. சொல்லிட்டேன்.  அப்புறம் வேற எங்கயாவது பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுட போறாங்க…”

“அம்மாதான் ஏற்கனவே முடியாதுன்னு சொல்லிட்டாங்க இல்லடி.  அப்புறம் ஏன்… என்னை போட்டு உயிரை வாங்குற?”

“ம்ம்….  உங்கம்மா சொல்வாங்க….  அவங்க சொல்றத எல்லாம் அப்படியே கேட்டு நடக்கறீங்களா… நீங்க…?  ஞாயித்துக்கிழமையானா பிரட்ண்சுங்களோட போய் ஆட்டம் போட்டுட்டு, வீட்டுக்கு நல்ல பிள்ளை மாதிரி…, சத்தம் போடாம ரூமுக்குள்ள வந்து அடைஞ்சிடறீங்க இல்ல.  அப்ப எங்க போச்சு… உங்கம்மா சொன்னது எல்லாம்….”

ஏதும் பேச முடியாமல்,  ஆத்திரத்தில் “ஏய்…..” என பல்லைகடித்தான் கார்த்திக்.

“என்ன…. ஏய்….?  அம்மாவ சொன்னதும்….. கோவம் பொத்துகிட்டு வருதோ…..?  என்னவோ ஊருல நடக்காத அதிசயமா…. பேசறாங்க உங்கம்மா.  ஒரே குடும்பத்துல இரண்டு பொண்ணு எடுக்ககூடாதுன்னு…”

“அவங்க எங்க எடுக்ககூடாதுன்னு சொன்னாங்க…. எடுக்க வேணாம்னுதான் சொன்னாங்க….”

“எடுக்குகூடாதுன்னா என்னா……?  எடுக்கவேண்டாம்னா…. என்னா…? அறிவு கொழுந்தே…?  எல்லாம் ஒரே அர்த்தந்தான்….  உங்கம்மாவுக்கு எந்தங்கச்சிய கட்டறதுல இஷ்டம் இல்லன்னு சொல்லுங்க.  அதுக்கு இதெல்லாம் ஒரு சப்பகட்டு…”

“அவங்களுக்கு இஷ்டம் இல்லைனா…. விடேன்டி….  அவங்க பெத்த பிள்ளைக்கு அவங்களுக்கு விருப்பப்பட்ட மாதிரி பொண்ணு பார்க்கிறாங்க…. உனக்கேன் கசக்குது….”

கணவனை முறைத்தவள், “கொஞ்சமாவது பொறுப்போட பேசறீங்களா…? மச்சினிக்கு கல்யாணம் பண்ணனும்னு கொஞ்சமாவது அக்கறை இருக்கா…?”

“ம்…க்கும்….  இங்க என் தம்பிக்கே….. தகராறுல நிக்குது.  இதுல மச்சினிக்கு வேறயா….? முருகா…. ரொம்ப சோதிக்கறப்பா என்றான் அண்ணாந்து பார்த்து கையெடுத்து கும்பிட்டு”

“ஏன் சொல்லமாட்டீங்க….?  கல்யாணம் பண்ண புதுசுல என்னல்லாம் டயலாக் விட்டீங்க…. நீங்க.  என் குடும்பம் வேறயில்ல.  உன் குடும்பம் வேறயில்ல.  இனி ரெண்டும் ஒரே குடும்பம்தான்.  நீ எப்படி என் குடும்பத்தை பாசமா பார்த்துக்கறயோ, அதே மாதிரி…. நானும் பாசமா பார்த்துக்கறேன்.  நீ கவலைப்படாதன்னு… டயலாக்கா அள்ளிவிட்டீங்க…” என கண்ணை கசக்கினாள் காஞ்சனா.

“அடியே…. அதெல்லாமா… இன்னும் ஞாபகம் வச்சிருக்க….?  ஏதோ  புதுப் பொண்டாட்டிகிட்ட, ஒரு கிளுகிளுப்புல… அவளை குஷிப்படுத்தறதுக்கு போற போக்குல ஒரு ஃபுளோல சொல்றதுதான்.  நீ இன்னும் அதையெல்லாம் மனசுல வச்சிட்டு சீரியஸா பேசிட்டிருக்கே…”

“ஓ…. அப்ப அதெல்லாம் ஐயா ஒரு கிளுகிளுப்புல பேசனீங்களோ….?  நாந்தான் உண்மைன்னு நம்பி ஏமாந்துட்டனா…?  நீங்க சொன்ன வார்த்தையெல்லாம் தண்ணில எழுதுன எழுத்துதானா…..?” என மூக்கை உறிஞ்சியவள்,  “நான் மட்டும் உங்க குடும்பத்து மேல பாசமா…, அக்கறையா இருக்கனும்.  நீங்க மட்டும் சுயநலவாதியா… இருப்பீங்களா….?” என்றாள்.

“அய்யோ… ஆண்டவா… மனுஷன் பீலிங்க புரிஞ்சிக்காம, இப்படி பேசி பேசியே என்னை கொன்னுடுவாள் போலயே.  நேரங்காலம் தெரியாம….., என பல்லைக் கடித்தவன்,  தூங்கக்கூட விடாம இந்த இராத்திரி நேரத்துல….., இம்சைய கூட்டறாளே….” என புலம்பினான்.

“இப்ப என்னதான்டி…… பண்ணனுன்ற….? என்றான் அடிக்குரலில்.

“அதான் சொல்லிட்டீங்களே…. போற போக்குல பேசினேன்னு.  நீங்க ஒன்னும் பண்ண வேணாம்… என முறுக்கிக் கொண்டவள் அவனுக்கு முதுகைக் காட்டி திரும்பி படுத்துக்கொண்டாள்.

கோச்சுக்கிட்டாளா….? எல்லாம் உன்னை சொல்லனும்டா… வாயை வச்சுட்டு சும்மா இருக்கிறதில்ல.  இப்படியா வெள்ளந்தியா இருப்ப.  மனசுல உள்ளதெல்லாம் பொண்டாட்டிகிட்ட அப்படியே பேசவேண்டியது.  அப்புறம் அவள் கோச்சுகிட்டான்னா… கெஞ்சி கொஞ்சி கால்ல விழுந்து மலையிறக்க வேண்டியது.  இதே பொழப்பா போச்சு உனக்கு… என அவனையே அவன் நிந்தித்துக் கொண்டான்.

எப்படியோ அவளை கெஞ்சி கொஞ்சி சமாதானப்படுத்தியவன், மறுநாள் பெற்றவர்களிடம் இதைப்பற்றி பேசுவதாக வாக்கு கொடுத்திருந்தான் அந்த வீட்டின் மூத்த வாரிசு.  கணவனின் பேச்சில் சமாதானமாகி அவனுடன் திரும்பி படுத்தாள் காஞ்சனா.

இருந்தும் மனதுக்குள், தங்கையை தனது மாமியார் இந்த வீட்டுக்கு மருமகளாக ஏற்றுக்கொள்ள, சம்மதம் சொல்ல வேண்டும், என்ற வேண்டுதலும் இருக்கதான் செய்தது.

 

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!