ம்ப்ச்… இதை கேட்கறதுக்குதான் வந்தானா…? வேல்முருகனைப் பற்றி அவன் பேசியது பிடிக்கவில்லை என்றாலும் அமைதியாக நின்றாள்.
பதில்கூட பேசமாட்டாலாமா. திமிரு. என மனதிற்குள்ளேயே பொறுமியவன், “என்ன உங்கப்பா எங்ககூட எல்லாம் பேசக்கூடாதுன்னு சொல்லி அனுப்பினாரா….?” என்றான் கேலியாக.
முகத்தை நிமிர்த்தி அவனை முறைத்து பார்த்தாள் கோவமாக.
அவளது செய்கையில் எழுந்த சிரிப்பை அடக்க முயன்றும் உதடு காட்டிக்கொடுத்தது அவனது கேலியை. அதில் இன்னும் கடுப்பானவள், கையை இரண்டையும் மார்புக்கு குறுக்காக கட்டி அவனை நேராக நிமிர்ந்து உறுத்து பார்த்து… “இப்ப என்ன வேணும்.. உங்களுக்கு…?” என்றாள் தோரணையாக நின்று.
அதற்கும் வாய் விட்டு சிரித்தவன்… “பயந்துட்டேன்…” என்றான் கிண்டலாக. என்னவோ அவளது செய்கைகள் அனைத்தும் அவனுக்கு சிறுபிள்ளைதனமாக இருந்ததுபோல.
இன்னும் அவள் பார்வையை மாற்றாமல் அவனை முறைத்துக்கொண்டே நின்றாள்.
“ஹா…. ஹா….. இப்படி பார்த்தா எனக்கு பயந்து பயந்து வருது….”
இவன் இப்படிலாம்கூட பேசுவானா….? கடையில பார்க்கும்போது அவ்வளவு விறைப்பா இருப்பான். இப்ப என்ன ஹி.. ஹி..ன்னு பல்ல இளிச்சுட்டு நிக்கறான். இன்னும் இங்க இருந்தா ஏதாவது பேசுவான் என நினைத்தாளோ என்னவோ… மண்டபத்தினுள் செல்வதற்காக அங்கிருந்து நகர ஆரம்பித்தாள். அவள் அங்கிருந்து நகருவதை பார்த்தவன் “இப்படிதான் பேசிட்டு இருக்கும்போதே நடுவுல சொல்லாம கொள்ளாம போவாங்களா…?” இதான் உங்க டீசன்ஸியா… ? என்றான்.
ம்ப்ச்… இப்ப என்ன வேணுமாம் இவனுக்கு…? இம்சை பண்றான் என நின்ற வாக்கிலேயே பாதி உடலை மட்டும் திருப்பியபடி அவனைத் பார்த்தவளின் கண்கள் என்ன…? என கேள்வி கேட்டு நின்றது அவனை.
“அதுவரை அவளையே அசையாமல் பார்த்து நின்றவனுக்கும் இதுவரை இருந்த இலகுதன்மை மறைந்தது. எப்படி ஆரம்பிப்பது என தெரியவில்லை. இருந்தும் பேசிவிடுவது என முடிவு செய்துகொண்டான் மனதிலேயே.
ம்..க்கும்…. என தொண்டையை செறுமியவன் “கொஞ்சம் பேசனும்…” என்றான் அவனது இரண்டு பேன்ட் பாக்கெட்டிலும் கையைவிட்டுக் பக்கத்தில் இருந்த காரில் வாகாக பின்பக்கமாக சாய்ந்து நின்று தன்னை மனதை நிதானப்படுத்தி கொண்டே.
என்ன பேச போறான் என அவனை நேராக பார்த்து திரும்பி நின்றாள். செல்வதுரை மீனா அவனுக்காக அஞ்சனாவை பெண் கேட்டு சென்று வந்ததிலிருந்து அவன் மனம் கண்டதையும் நினைத்து குழும்பிக் கொண்டிருந்தது சில நாட்கள். காலப்போக்கில் அதனை மறக்கவும் முயன்று கொண்டிருந்தான். இருந்தும் அவன் மனதின் அடியில் உறுத்தல் இருக்கத்தான் செய்தது. வேல்முருகன் அவனுக்கு பெண் தர மறுத்ததைப்பற்றி நினையாமல் இருக்க முடியவில்லை அவனால்.
இன்று இங்கு எதிர்பாராதவிதமாக அஞ்சனாவை பார்த்ததில் அடக்கி வைத்த உணர்வுகள் எல்லாம் வரிசை கட்டி மேலே வந்து நின்றது. அப்படி என்ன காரணம்…? எதில நாங்க தாழ்ந்துட்டோம்….? எங்கப்பா அம்மா இவங்க வீடு தேடி போய் பொண்ணு கேட்டும், ஏன் இவள் அப்பா பொண்ணு தரமாட்டேன்னுட்டாரு… என அவனை இத்தனை நாட்கள் குடைந்த கேள்விகளை எல்லாம் அஞ்சனாவ பார்த்ததும் அவள்கிட்ட பேசிடனும்னு அவன் மனசு பரபரத்தது போல..?
எதையும் பேச கூடாது., கேட்ககூடாது… என வீம்பும் வறட்டு கௌரவமும் அவனை இழுத்துப்பிடித்தாலும், மனம் அதையெல்லாம் மீறி அவளிடம் பேசிட வேண்டும் என துடித்து நின்றது.
சாதாரணமாக பேசுவது போல்… முதலில் அவளுடைய படிப்பு… வேலை… என ஒவ்வொன்றாக பேச ஆரம்பித்தவன், திடுமென திருமண பேச்சில் வந்து நின்றான்.
ஆரம்பத்தில் இவன் பேச துவங்கியதும், அஞ்சனாவும் ஒன்றும் புரியாமல் இவன் ஏன்… இதையெல்லாம் கேட்டுட்டிருக்கான்… என மனம் முரண்டினாலும், தயக்கத்துடனே அவன் கேட்டதற்கு எல்லாம் மெல்ல பதில் சொல்லிக்கொண்டிருந்தாள்.
இப்ப என்ன தெரியனும் இவனுக்கு…? தெரியாம இவன்கிட்ட மாட்டிகிட்டனோ என பொறுமிக்கொண்டு நின்றிருந்தாள் மனதிற்குள்ளேயே.
“உங்க வீட்ல நம்மபத்தி ஏதாவது சொன்னாங்களா….?”
எதைப்பத்தி….? என்ன கேட்கிறான் இவன்… என ஒன்றும் புரியவில்லை அஞ்சனாவுக்கு.
“அ…து நம்ம கல்யாணத்தைப் பத்தி…..?”
பெண்ணிடம் இத்தனை நேரம் இருந்த நிதானம் போனது போல. ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியுடன் கண்களை அகல விரித்து அவனை கோவமாக பார்க்க ஆரம்பித்தாள்.
என்ன….து, இவங்க அப்பா.. அம்மா… நம்ம வீட்டுக்கு வந்தாங்களா….? இது எப்போ……? லட்சுகூட ஒன்னும் இதைப்பத்தி சொல்லலயே….. என யோசனையாக பார்த்து நின்றாள்.
அவன் முகத்தைப் பார்த்தால் பொய்யிருப்பதுபோல் தெரியவில்லை. ஒருவேளை இவன் சொல்றது நிஜமா இருக்குமோ…? யாருமே நம்மகிட்ட எதுவும் சொல்லலையே….? லட்சுகூட எதையும் மூச்சுவிடல. இல்லை இவன் நம்மகிட்ட விளையாடுறானோ…? என இன்னும் சந்தேகம் குறையாமல் அவனையே உறுத்து பார்த்து நின்றாள்.
“உங்கம்மாகூட உன்கிட்ட ஏதும் சொல்லலையா….?”
இல்லையே… என தலையசைத்தாள்.
“ஓஹ்…. அந்த அளவு மிரட்டி வச்சிருக்கீங்க….” என்றான் நக்கலாக.
“ஹலோ…. பார்த்து பேசுங்க”. என்ன தெரியும்…. உங்களுக்கு… எங்க குடும்பத்தை பத்தி?”
“என்ன தெரியனும்….? எங்க வீட்டு பொண்ணை…, என்னப் பார்க்குற….? அதான் என் அத்தைய உங்க வீட்டுல நல்லா மிரட்டி உருட்டி வச்சிருக்கீங்களே. நினைச்சத வாயைத் திறந்துகூட பேச விடாம….” என்றான்.
“ரொம்ப பார்த்தீங்க… எங்கப்பா அப்படியெல்லாம் இல்ல” அதுதான் உண்மை என்றாலும் அந்த நேரத்தில் அவனிடம் தன் தந்தையை விட்டு தர மனமில்லாமல் பேசிக்கொண்டிருந்தாள் அஞ்சனா.
“அப்படியெல்லாம் இல்லனா…., பொண்ணோட கல்யாணத்துல அம்மாவுக்கும் பங்கிருக்கும், ஆசையிருக்கும்னு தெரியாதா…. உங்கப்பாவுக்கு? எங்கப்பா அம்மா உன்னை பொண்ணு கேட்டு வந்தப்ப… அத்தைய பேசவே விடாம அவரே எல்லாம் பேசி, வேணாம்னு மறத்து அனுப்பிருக்காரு…?”
……………………………….
“அவங்களுக்கும் நீ பொண்ணுதான? உன் கல்யாணத்தை பத்தின விருப்பம் ஆசை எல்லாம் அவங்களுக்கும் இருக்கும்தான. அவங்ககிட்ட எதையும் கேட்காம… அவரே முடிவு பண்ணுவாரா…?” நிதானமாக பேச ஆரம்பித்தவனின் குரல் அவனை அறியாமலேயே வேகமாக மாறியிருந்தது வார்த்தையில். அதை அவனும் உணர்ந்தாலும் மாற்ற முடியவில்லை.
“ஹலோ… என்ன சண்டை போடனும்னு… பேசறீங்களா….?”
“ம்ப்ச்…. தேவையில்லாததை எல்லாம் பேசி நாம ஏன் முட்டிக்கனும். நீ மட்டும் எப்படியிருப்ப…? உங்கப்பா மாதிரிதான இருப்ப….? உங்கம்மாவுக்கு நீயாவது மதிப்பு குடுப்பன்னு நினைச்சேன்”.
“ரொம்ப பேசறீங்க… நீங்க…? என்ன தெரியும் உங்களுக்கு… எங்க குடும்பத்தைப் பத்தி…? உங்க இஷ்டத்துக்கு பேசிட்டிருக்கீங்க…?”
“இஷ்டத்துக்கு எல்லாம் பேசல. உண்மைய சொன்னேன். நீயே போய் உங்கம்மாகிட்ட கேட்டு பார். நான் பேசினது எல்லாம் உண்மையா… இல்லையான்னு… உனக்கே புரியும்”.
“உன்ன எனக்காக பொண்ணு கேட்டு வந்தப்போ, அத்த முகத்துல அப்படி ஒரு சந்தோஷத்தைப் பார்த்தேன்னு எங்கம்மா சொன்னாங்க. ஆனால் உங்கப்பாதான் எதையும் அவங்கள பேசவே விடாம முடியாதுன்னு மறுத்துட்டாராம்”.
“சும்மா உங்க வாய்க்கு வந்தத எல்லாம் பேசிட்டு இருக்காதீங்க…” என எகிறினாள் அஞ்சனா. செல்வதுரையும் மீனாவும் தங்கள் வீட்டிற்கு வந்ததே அதிர்ச்சி என்றால், அதில் தன்னை இவனுக்காக பெண் வேறு கேட்டு வந்திருக்கிறார்கள் என கேட்டதும் அவளுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சிதான். அது பத்தாது என இவன் வேல்முருகனை குறைகூறியது வேறு ஆத்திரத்தையும் எரிச்சலையும் ஒருங்கே வரவைத்தது. இவன் யாரு எங்க குடும்பத்த பேச என கோவமும் சேர்ந்து எழுந்தது. இதுல என்னை வேற குறை சொல்றான் இடியட் என மூக்கு விடைத்து நின்றது.
இவள் யோசனையாக நின்ற நிமிடத்திற்குள் அவனுக்கு உள்ளுக்குள் மணியடித்தது போல.
மடையா… என்னமோ ஆரம்பிச்சு…. அவள்கிட்ட எதையோ பேசிட்டிருக்க என அவன் மூளை அவனை எச்சரிக்கை செய்தது. நீ இப்ப உன் அத்தைய பத்தி போர்கொடி தூக்கினா மட்டும் எல்லாம் சரியாகிடுமா… என அவன் புத்தி அவனுக்கு எடுத்துரைத்தது. ம்ப்ச் சொதப்புறேன்… என அவனையே நொந்துகொண்டவன்… அப்பா என்ன சொன்னார்…? நீ என் தங்கச்சி பொண்ணை கட்டிக்கிட்டனா… விட்டுப்போன உறவு ஒன்னு சேர்ந்துடும்னுதான. அதைதான பேசவந்தே. அப்புறம் ஏன்டா.. தேவையில்லாதத எல்லாம் பேசி அவளை உசுப்பேத்திட்டிருக்க என அவனை அவன் மனம் எச்சரிக்கை செய்தது..
“என்ன பேசி முடிச்சாச்சா…? நான் போலாமா…? இன்னும் மிச்சம் மீதி ஏதாவது இருக்கா….?” என்றாள் இடக்காக அவனைப் பார்த்து.
“ம்ப்ச்… அது உங்கப்பா அம்மா பிரச்சினை. அதை அவங்களே முடிவு பண்ணிக்கட்டும். நாம ஏன் தேவையில்லாதத எல்லாம் பேசி முட்டிக்கனும்…” என அவளை தீர்க்கமாக சில நொடிகள் பார்த்தவன் “எனக்கு சுத்தி வளைச்சு எல்லாம் பேச தெரியாது. நேரடியாவே கேட்டுடறேன். நாம கல்யாணம் பண்ணிக்கலாமா….?” என்றான் அவளை ஆழமாக பார்த்து.
“ஆங்…..” என்னடா இவன்… அப்படியே அந்தர் பல்டி அடிக்கிறான் என அவனை பார்த்து ஆச்சர்யம் வந்தது அவளுக்கு. பின்ன இருக்காதா…? இவ்வளவு நேரம் அத்தைக்காக போர்கொடி பிடித்தவன், அதை அப்படியே அந்தரத்தில் விட்டு, அவளிடம் தன்னை திருமணம் செய்துகொள்ள சம்மதம் வேண்டி நிற்பதைப் பார்த்து… அவளுக்கே குழப்பமானது. எப்படி இவனால சட்டு சட்டுன்னு தன்னை மாத்திக்க முடியுது என நம்பாமல் பார்த்து நின்றாள் அஞ்சனா.
உள்ளுக்குள் நினைப்பதை காட்டும் கண்ணாடிபோல அவளது முகம் காட்டிய நவரசங்களில் அவனுக்கே சிரிப்பு வந்துவிட்டது. அதை வெளியில் தெரியாமல் மறைக்க தொண்டையை கனைத்து சரி பண்ணுவதுபோல் சிரிப்பை அடக்கி தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான்.
அதான…. எங்கப்பா இன்னும் பழசை எல்லாம் மறக்கலன்னு, எனக்கும் தெரியுமே. எந்த நினைப்புல இவங்க அப்பா அம்மா பொண்ணு கேட்க வந்தாங்க. இத்தனை நாள் தங்கச்சி… தங்கச்சி பொண்ணு பத்தின நினைப்பில்ல. இப்ப என்ன புதுசா அக்கறை…? என அவளுக்கும் உள்ளுக்குள் எரிச்சலானது. என்ன முயன்றும், அதை முகத்தில் காட்டாமல் இருக்க முடியவில்லை அவளால்.
“அதான பார்த்தேன். அப்பாவாவது…. ஒத்துக்கறதாவது….” என்று விட்டாள் முனுமுனுப்பாக தன்னையும் அறியாமல் வார்த்தைகள் வெளிவந்திருந்தது அஞ்சனாவிடமிருந்து.
“ஓஹ்… அப்பான்னா ரொம்ப இஷ்டமோ…..?”
இது என்ன லூசுத்தனமா கேள்வி கேட்குறான். யாருக்குதான்… அப்பாவை பிடிக்காது….?
“என்ன… மைன்ட் வாய்ஸ். லூசுமாதிரி கேட்கறானேன்னு தோணுதா…? அதான்… உன் முகமே சொல்லுதே…. நீ என்ன நினைக்கறேன்னு”.
“ஏன் இருக்கனும்…?” என அவளுக்கு கோவம் வந்தது. “என்ன பேசறீங்க………? என்ன பேசறோம்னு யோசிச்சு பேசுங்க….” என்றாள் யோசிக்காமல்.
பேன்ட் பாக்கெட்டிலிருந்து இரண்டு கைகளையும் எடுத்து மார்பின் குறுக்காக கட்டிக்கொண்டு அவளை கூர்ந்து பார்த்தவன்.., ‘’நெருப்புன்னவுடனே வாய் சுட்டுடாது….’’
“ஒரு பேச்சுக்குதான் கேட்டேன். அதையே உன்னால தாங்கிக்க முடியலை.. ஆனால் உங்க அம்மா மட்டும் அவங்க பிறந்த வீட்டோட பேசகூடாது…. பார்க்ககூடாது…. பழககூடாது. நல்லாயிருக்கு உன் நியாயம்”.
“உங்க அப்பா மேல…, உன் குடும்பத்து மேல… நீ வச்சிருக்கிற பாசம் மாதிரிதான…, அவங்களும் அவங்க பிறந்த வீட்டு மேல பாசமா… இருப்பாங்க”.
“ஹலோ… பார்த்து பேசுங்க… எங்கப்பா ஒன்னும் அப்படிப்பட்டவங்க இல்ல. இந்த கேள்விய நாந்தான் உங்களை பார்த்து கேட்கனும்”. “எங்கம்மாவோட அம்மா அப்பா…….. இப்ப இல்ல. அவங்க இருந்திருந்தா……. எங்கம்மாவ வந்து பார்க்காம இருந்திருப்பாங்களா…..?”
“அதைதான் நானும் கேட்கறேன். இதுல நாம பேசி என்ன ஆகப்போகுது? காலத்துக்கும் இப்படியே இரண்டு குடும்பமும் பிரிஞ்சுதான் இருக்கனுமா……?”
“அதை உங்க வீட்ல போய் கேளுங்க….. என்கிட்ட வந்து கேட்டீங்கனா…”
தனது குரலை கொஞ்சம் இலகுவாக்கிய தேவநாதன், “கொஞ்சம் யோசிச்சு பாரேன். நான் உன்கிட்ட சண்டை போடறதுக்காக பேசல. நல்லா யோசிச்சு பதில் சொல்லு. உங்கம்மா மனசுல பிறந்த வீட்டு நினைப்பு இல்லாம இருக்கா….? இல்ல அவங்க அண்ணன் மேலதான் அவங்க கோவமா இருக்காங்களா…?” என்றான் அவளிடம் விட்டுக்கொடுக்கும் பாங்கில்.
இல்லையே… இதுவரைக்கும் ரோகிணி என்ன நினைக்கிறார் என அவரது வாயிலிருந்து எந்த வார்த்தையும் வந்ததில்லையே…
“இல்லல்ல…. இதுல இருந்தே உனக்கு புரியலையா….? அவங்க மனசுல என்ன இருக்குன்னு….?”
…………………………….
“இவ்வளவு நாள் வாய மூடிட்டு இருந்திருக்காங்கன்னா… உங்கப்பாக்கு பயந்துட்டுதான் இருந்திருப்பாங்க… இனிமேலும் அவங்க அப்படியே இருக்கனுமா….?”
………………………………
“ஒரு உண்மைய சொல்லட்டுமா……? எங்கப்பா உங்க வீடு தேடி வந்து சம்மந்தம் பேசினதே….. அவர் தங்கச்சியோட உறவாடனும்னுதான்…. அதுக்காக நம்ம மேல அக்கறை இல்லன்னு அர்த்தும் இல்ல”
“அவருக்கும் மனசுல ஆசை இருக்காதா….? தங்கச்சியோட சேர்ந்து இருக்கனும்னு. எந்த குடும்பத்துல சண்டை இல்ல. சண்டை வரதும்…, திருப்பி இணையறதும் சகஜம்தான. இதுல தப்பு என்ன இருக்கு….?”
“அத்தை பொண்ண உனக்காக பேசி முடிக்கவா….., கல்யாணம் பண்ணிக்கிறயான்னு…..?”
“எனக்கும் மறுக்கறதுக்கு பெருசா எந்த காரணமும் இல்லை. எப்படியும் அப்பா அம்மா சொல்ற பொண்ணைதான் கல்யாணம் பண்ணப் போறேன். இதுவே நீயாயிருந்தா….., என் அப்பாக்கு அவர் தங்கச்சியோட திரும்ப சேர்ந்த மாதிரியிருக்கும். என் அத்தைக்கும்…… உங்க அம்மாக்கும் அவங்க பொறந்த வீட்டோட சேர்ந்த மாதிரியாகும்”.
“இத்தனை வருஷமா…. பிரிஞ்சிருந்த நம்ம இரண்டு குடும்பமும்…… நம்ம கல்யாணத்தால சேரும்னா…, நாம ஏன் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது….?”
…………………………………….
“நல்லா யோசி. யோசிச்சு முடிவெடு. எனக்கென்னவோ உன் விருப்பத்த உங்கப்பா கேட்பாருன்னுதான் தோணுது. உன்னை மீறி…., உன் இஷ்டம் இல்லாம…. உன்னோட சம்மதம் இல்லாம…. உன் கல்யாணத்தை முடிவு பண்ண மாட்டாரு”.
“இப்ப முடிவு உன் கையில…..தான்” என சொன்னவன் அவளைப் பார்த்து தலையசைத்துவிட்டு மண்டபத்தின் உள்ளே நடந்துவிட்டான்.
அஞ்சனாவுக்கு தேவநாதன் பேசிச் சென்றதே காதில் கேட்டுக் கொண்டிருந்தது. அங்கேயே காரின் மீது சாய்ந்து நின்று அவன் பேசியதை எல்லாம் அசை போட்டுக் கொண்டிருந்தாள்.
எது உண்மை? எதை நம்புவது? நடந்தது என்ன…? நடப்பது என்ன என்பது போல எல்லாமே குழப்பம்தான் அவளுக்கு. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். நிர்மலமாக இருந்த அவள் மனதை குழப்பிவிட்டு சென்றிருந்தான் தேவநாதன்.
தேவநாதன் உள்ளே நுழைவதைப் பார்த்த மீனா, “தேவா…….. வா…. வா……. என்ன இவ்வளவு லேட்டா வரே………. பொண்ணும் மாப்பிள்ளையும் தூங்கவே போயாச்சு. உன்னை சீக்கிரமாதான வரச் சொன்னேன்….”
“வேலை இருந்துச்சு ம்மா… சீக்கிரம் கிளம்பிடலாம்னுதான் நினைச்சு போனேன். ஆனால் வேலை முடிய லேட்டாயிடுச்சு…” என மீனாவின் பக்கத்தில் உட்கார்ந்தான்.
“தேவா இது யாருன்னு தெரியுதா…?” என்றார் செல்வதுரை ரோகிணியைக் காட்டி.
ரோகிணியும் கண்களில் ஆர்வத்துடன் அவனையேதான் பார்த்திருந்தார் இத்தனை நேரமும். அவனது சின்ன வயதில் பார்த்தது. அதற்கப்புறம் இப்போதுதான் பார்க்கிறார். செல்வதுரையையும் மீனாவையும்கூட ஏதாவது விசேஷத்தில் தூர இருந்து பார்த்திருக்கிறார். ஆனால் அண்ணன் மகன்களை பார்க்கும் சந்தர்ப்பம் பெரிதாக அமையவில்லை.
அவனும் யாரோ உறவுக்காரர் போல என எண்ணி ரோகிணியைத் திரும்பி பார்த்தான்.
தெரியலை என மறுப்பாக தலையசைத்தவனின் கைகளைப் பற்றிக் கொண்டார் ரோகிணி. ‘’தேவா நல்லா வளர்ந்துட்டான். இல்லண்ணே… இவனுக்கு ஐஞ்சாறு வயசாயிருக்கும் போது பார்த்தது…” என்றார்.
அவரையே பார்த்திருந்தவன்…. தந்தையை திரும்பி கேள்வியாக பார்த்தான்.
ஓஹ்… என ரோகிணியைப் பார்த்து முறுவலித்தவன், “நல்லாயிருக்கீங்களா… அத்த” என்றான்.
அவனது கேள்விக்கு புன்னகையுடன் தலையைமட்டும் அசைத்தவர், அவனைப்பற்றி விசாரிக்க ஆரம்பித்து, அவனுடன் சகஜமாக பேச ஆரம்பித்துவிட்டார் எந்த தயக்கமும் இல்லாமல்.
வெகு நேரம் சென்று உள்ளே வந்த அஞ்சனா, ரோகிணி தேவாவுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து தயங்கி நின்றாள்.
அவளைப் பார்த்த செல்வதுரை, “ஏன்மா….? அங்கேயே நிக்கற? இங்க வா….. வந்து உட்காரு…” என அழைத்தார்.
அவரை மறுக்க முடியாமல் அவரது பக்கத்தில் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தாள்.
தந்தையின் குரலில் அவளைத் திரும்பி பார்த்தவன், அவர் பக்கத்தில் அவள் உட்கார்ந்ததும்… பார்வையை திருப்பிக் கொண்டான் அவளிடமிருந்து.
மீனாவும் இவர்கள் இருவரைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். எங்கே அத்தை மகளும் மாமன் மகனும் ஒருவரை ஒருவர் பார்க்கும் ஆர்வம் இருந்தாலும்…… தங்களை கட்டுப்டுத்திக்கொண்டு பார்க்காததுபோல அமர்ந்திருந்தனர்.
செல்வதுரை மருமகளிடம் இலகுவாக பேசிக்கொண்டிருந்தார். அவரது கேள்விகளுக்கு எல்லாம் ஒற்றை வார்த்தையிலும்….., தலையை அசைத்தும் பதில் கூறிக்கொண்டிருந்தாள் அஞ்சனா.
மீனாவுக்குதான் கண்ணை கட்டியது. இரண்டும் ஒன்னுத்துக்கு ஒன்னு சளைச்சது இல்ல போல என அலுத்துக்கொண்டார் மனதில்.
வயசு பிள்ளைகளாச்சே. கல்யாணத்தைப் பற்றி பேசியிருக்கோமே. ஏதாவது ஆர்வமாக பார்க்குங்களான்னு பார்த்தா… இரண்டும்… ம்க்கும்… நமக்குதான் கண்ணை கட்டுது என இருவரையும் மாறி மாறி குறுகுறு என பார்த்திருந்தார்.
பார்த்தவருக்குதான் கண்கள் வலித்தது. தேவநாதனுக்கு மீனாவின் பார்வை புரிந்தது. தாயின் ஆர்வத்தில் எழுந்த சிரிப்பை மறைத்து கொண்டான். எதையும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.
அஞ்சனாவோ தலையை குனிந்துகொண்டு கையில் இருந்த செல்போனை நோண்டிக் கொண்டிருந்தவள்…., அப்பப்போ செல்வதுரை கேட்கும் கேள்விகளுக்கு மறுமொழி கூறிக்கொண்டிருந்தாள்.
மறுநாள் காலை முகூர்த்தம் அமர்களப்பட்டது மண்டபத்தில். யாரோ அரசியலில் இருந்து முக்கியஸ்தர்கள் எல்லாம் வந்திருந்தனர். அவர்களுக்கான வரவேற்பு எல்லாம் தடபுடலாக இருந்தது.
மண்டபம் முழுவதும் இதமான மங்கள கீதம் இசைத்து கொண்டிருந்தது. ரிசப்ஷனுக்கே அலங்காரத்தில் கலக்கியிருந்தார்கள் என்றால், முகூர்த்தத்திற்கு அதகளப்படுத்தியிருந்தார்கள் மணமேடையை வண்ண வண்ண மலர்களால்.
அஞ்சனா உறவினர்களுடன் சேர்ந்து மணமேடையில் நின்றிருந்தாள். அங்கே புரோகிதர் மந்திரம் ஓத… மணமகனும் மணமகனும் அவர் சொல்வது போல் சாங்கியங்களை செய்துகொண்டிருந்தனர்.
மணமக்களை சுற்றி அவர்களது பெற்றோர்களும் நெருங்கிய உறவுகளும் நின்றிருந்தனர். செல்வதுரை, மீனா, ரோகிணி அஞ்சனா எல்லோரும் மணமேடையில்தான் நின்றிருந்தனர்.
ரோகிணியின் அருகிலேயே அவரை ஒட்டி நின்றிருந்தாள். தேவநாதன் கீழே உட்கார்ந்து இவர்களைத்தான் பார்த்திருந்தாள். வெளிர் சந்தன நிறத்தில், ரோஜா இதழ்களை ஒத்த பிங்க் நிற பார்டரை கொண்ட பட்டுச்சேலையை உடுத்தியிருந்தாள் அஞ்சனா. பார்டரின் நிறத்திலேயே எம்பிராயிடரி செய்த ரவிக்கையும் அணிந்திருந்தாள்.
கண்ணை உறுத்தாத அலங்காரம். மிதமான அணிகலன்கள் பூட்டியிருந்தாள். தூர இருந்து தேவநாதன் அவளைத்தான் பார்த்திருந்தான் கண்ணெடுக்காமல். கூட்ட நெரிசலில் யாரைப் பார்க்கிறான் என கண்டுகொள்ள இயலாது என்பதால்…. அவளை பார்ப்பது அவனுக்கு வசதியாக இருந்தது.
ஹம்ம்… நீண்ட பெருமூச்சு எழுந்தது தேவநாதனுக்கு. அவளைவிட்டு கண்களை நகர்த்த முடியாமல் கட்டி வைத்திருந்தாள் அவனை. டேய் நேத்திக்கு நீ பாட்டுக்கு ஏதோ டயலாக்கா…. அடிச்சு தள்ளிட்டு வந்திருக்க அவள்கிட்ட. அவள் அதைப்பத்தி ஏதாவது யோசிப்பாளா…..?
முதல்ல என்ன தைரியத்துல முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ணுகிட்ட அப்படி பேசிட்டு வந்தே நீ. அவளைப்பத்தி என்ன தெரியும் உனக்கு…..? அவள் மனசுல என்ன இருக்குன்னு….. உனக்கு தெரியுமா…..? சப்போஸ் அவள் யாரையாவது லவ் பண்ணிட்டிருந்தா……? இது எல்லாம் எதுவும் தெரியாம….. என்னவோ நீ பாட்டுக்கு….. இஷ்டத்துக்கு பஞ்ச் டயலாக்கா….. அடிச்சு தள்ளிட்டு வந்துட்ட…… என அவன் மனசாட்சி அவனை கேலி பேசிக் கொண்டிருந்தது.
என்னவோ மனசுக்கு தோணுனத பேசினேன் ப்பா…… என்னவோ பிளான் பண்ணி பேசின மாதிரி அலுத்துக்கறே…? அவளை சட்டுன்னு அங்க பார்த்ததும், மனசுல பட்டத பேசிட்டேன். இது தப்பா….? என அவன் மனசாட்சியிடம் சமாதானம் பேசிக் கொண்டிருந்தான்.
அஞ்சனாவோ இங்கே ஒருவன் உட்கார்ந்திருப்பதையே கவனிக்காமல் திருமணத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
முகூர்த்தம் முடிந்ததும், சுற்றியிருந்த உறவினர் எல்லோரும் கீழே வந்து அமர்ந்து கொண்டனர். அஞ்சனாவும் ரோகிணியை ஒட்டியே அவருடன் வந்து அமர்ந்து கொண்டாள்.