Skip to content
Post Views: 5,794
குளித்து முடித்து தலையை துவட்டிக் கொண்டிருந்த அஞ்சனா, காலிங் பெல் சத்தம் கேட்டு வந்து கதவைத் திறந்தாள்.
வாசலில் செல்வதுரை நின்றிருந்தார். இவர் எதுக்கு வந்திருக்கார்…? ஒன்றும் புரியாமல் பார்த்து நின்றவளுக்கு, அய்யோ அப்பா பார்த்தார்ன்னா… போச்சு.. என பதற்றமாக திரும்பி உள்ளே பார்த்தாள்.
வேல்முருகன் உக்கிரமூர்த்தியாக நின்றிருந்தார் அவளுக்கு பின்னே. அவருக்கு பின்னே ரோகிணியும் நின்றிருந்தார். காலிங் பெல் சத்தம் கேட்டு அறையில் இருந்து வெளியே வந்தவர், செல்வதுரை வாசலில் நிற்பதைப் பார்த்ததும் வெகுண்டெழுந்திருந்தார் உக்கிரமாக. ரோகிணி அண்ணனைப் கண்டதும், பயமும் பதட்டமுமாக கணவனை திரும்பி பார்த்தார் மனதில் நடுக்கத்துடன். என்ன நடக்குமோ…? என படபடப்பு… வந்திருந்தது அவருக்கு.
வேல்முருகன் பல்லைக் கடித்துகொண்டு, “இங்க எதுக்கு வந்தீங்க….? இன்னும் மிச்சம் மீதி ஏதாவது இருக்கா…..? எங்களை அசிங்கப்படுத்தி…, அவமானப்படுத்த…..?” என கொதித்தெழுந்தார் செல்வதுரையிடம் வார்த்தைகளால்.
Advertisement
அதைக் கேட்டு பதறிய செல்வதுரை “அய்யய்யோ.. இல்லை மாப்பிள்ள… நான் அந்த மாதிரி எந்த தப்பான எண்ணத்தோடவும் இங்க வரலை. என் மருமகளை பார்த்துட்டு போலாம்னு…..தான்…. வந்தேன்” என்றார் தவிப்பாக.
“போதும். நீங்க பார்த்து கிழிச்சது எல்லாம். இடத்தை காலி பண்ணுங்க… இனிமேலாவது எங்களை நிம்மதியா இருக்க விடுங்க….” என கையெடுத்து கும்பிட்டார் செல்வதுரையைப் பார்த்து.
“மாப்பிள்ள… நான் சொல்லறதை கொஞ்சம்…. கோவப்படாம…”
Advertisement
இரண்டு கைகளையும் தூக்கி கும்பிட்டவர் இன்னும் இறக்காமல், “போதும் உங்க வேஷம் எல்லாம். நீங்க சொன்னதும் போதும்…, நாங்க கேட்டதும் போதும்”.
Advertisement
“புருஷனும் பொண்டாட்டியும் மாத்தி… மாத்தி… என்னை அசிங்கப்படுத்துனதும் போதும். என் சொந்தக்காரங்க முன்ன என் மூஞ்சில கரிய பூசினதும் போதும். நல்லா மரியாதை செஞ்சுட்டீங்க….. இரண்டு பேரும். கிளம்புங்க……” என வெளியே கையைக் காட்டினார் வேல்முருகன்.
“தயவுசெஞ்சு என்னை பேச விடுங்க மாப்பிள்ள. நான் என்ன சொல்ல வர்றேன்றதை…….”
“அதான்… ஏற்கனவே சொல்லிட்டீங்களே… கிளம்புங்க…”
Advertisement
“மாப்பிள்ன ப்ளீஸ்…. கோவப்படாம பொறுமையா…. நான் பேசறத…..”
“யோவ்…. உனக்கு ஒரு தடவை சொன்னா…. தெரியாதா…? என்னை இன்னும்…… வெறியாக்கனும்னு… முடிவோட வந்திருக்கியா….?”
தேவநாதனின் மெடிக்கல் செக்கப்பிற்காக, நாச்சியப்பனும் தேவநாதனும் சென்னை வந்திருந்தனர். ஹாஸ்பிட்டலில் செக்கப் முடிந்து இங்கு வந்தவர்.., தேவநாதனை கீழே நிறுத்திவிட்டு, இவர் மட்டும் அஞ்சனாவைக் காண மேலே வந்திருந்தார்.
அவர் நினைத்து வந்தது அஞ்சனாவைப் பார்த்து செல்லதான். வேல்முருகனையோ ரோகிணியையோ இங்கு அவர் எதிர்பார்க்கவில்லை. இவர்களை எதிர்பாராமல் இங்கு பார்த்ததும், இதுவும் நல்லதுக்குதான் என நினைத்துக்கொண்டார்.
ஆம். ஏற்கனவே வேல்முருகனிடம் பேச நிறைய முறை முயன்றுவிட்டார் செல்வதுரை. வேல்முருகன் நெருங்கவே விடவில்லை அவரை. ஆதலால் அஞ்சனா சென்னையில்தான் வேலைப் பார்க்கிறாள் எனக் கேள்விப் பட்டவர், அவளையாவது நேரில் பார்த்து பேசலாம் என வந்திருந்தார்.
அஞ்சனா அந்த அப்பார்ட்மென்டின் முதல் தளத்தில் குடியிருக்கிறாள். வார விடுமுறையில் மகளுடன் தங்கி செல்ல என வேல்முருகன், ரோகிணி, லஷ்மி மூவரும் சென்னைக்கு வந்திருந்தனர்.
லஷ்மி அறையில் சாப்பிட்டு சற்று உறங்கியவர், வேல்முருகன் யாரிடமோ சண்டையிடுவது போல் சத்தம் கேட்கவே எழுந்து வெளியே வந்தார்.
வெளியில் செல்வதுரையிடம் வேல்முருகன் சத்தமிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தவர் மகனிடம் வந்து நின்றார்.
அவரைப் பார்த்த செல்வதுரை லஷ்மியிடம், “அத்தை நீங்களாவது… சொல்லுங்க மாப்பிள்ளைகிட்ட. கொஞ்சம் பொறுமையா…, நான் என்ன சொல்ல வரேன்றத கேட்க சொல்லுங்க” என மன்றாடினார் இன்னும் வாசலிலேயே நின்று.
ஏதோ கோவத்துடன், வேகமாக பேச வந்த வேல்முருகனின் கையைப் பிடித்து தடுத்த லஷ்மி, “வேலு பொறுமையா இருபா…, எதாயிருந்தாலும் உள்ள கூட்டு வச்சு பேசு. நம்ம வீட்டு விஷயம் வெளிய தெரியலாமா….?” பாரு…. இப்பவே பக்கத்துல…, எதிர் வீட்டுலலாம்…. எட்டி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க…” என அங்கே அவரவர் வீட்டு வாசலில் நின்றிருந்தவர்களைக் கண்களால் சுட்டி காட்டினார்.
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அக்கம் பக்கத்தினரைப் பார்த்ததும் கோவமாக உள்ளே வந்து உட்கார்ந்து கொண்டார் வேல்முருகன்.
“நீ உள்ள வா…. தொரை” என லஷ்மி செல்வதுரையை உள்ளே அழைத்து சென்றார். செல்வதுரையும் லஷ்மியின் பின்னாடியே உள்ளே வந்து உட்கார்ந்தார்.
“இப்ப சொல்லு. என்ன விஷயம்……? எதுக்காக வந்தே….?” என சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தார் லஷ்மி.
“நானும் சுத்தி வளைக்காம நேரடியாவே பேசிடறேன் அத்தை. உங்க பேத்திய…, என் மருமகளை.., முறைப்படி என் பையனுக்கு கட்டிவச்சு…, என் வீட்டுக்கு மருமகளா கூட்டிட்டு போகனும்னு, வந்திருக்கேன்….”
“யோவ் எழுந்திரு…யா… முதல்ல…? என்ன குடும்பமா சேர்ந்துட்டு டிராமா போடறீங்களா…? இவர் பொண்டாட்டி வேணாம்னு வெட்டி விடுவாங்களாம்…. இவர் பையனுக்கு கட்டிவச்சு, மருமகளா கூட்டிட்டு போக வருவாராம்……. யாரையா ஏமாத்தறீங்க….?”
“என்னை என்ன கேனைப் பையன்னே முடிவு பண்ணிட்டீங்களா…..? உன் பொண்டாட்டியும் நீயும்….?”
“வேலு… அமைதியா இருபா. நான்தான்… பேசிட்டிருக்கேன் இல்ல…”
“ம்மா… நீங்க வேற ஏன்மா வயித்தெரிச்சல கிளப்பறீங்க…? அன்னைக்கு இவர் பொண்டாட்டி எங்கள நாக்க பிடுங்கிக்கற மாதிரி, அப்படி பேசி அனுப்புச்சு. இன்னைக்கு இந்தாள் வந்து வேஷம் போடுறார்…. இவங்க சொல்ற கதையெல்லாம் நம்பிட்டிருக்க முடியாது…மா என்னால”.
“நீ கொஞ்சம் பொறுமையா இருபா. நான் பேசறேன். என்னதான் சொல்றாங்கன்னு கேட்போமே. நீ சொல்லு தொரை. யாரை கல்யாணம் பண்ணி…, எங்க கூட்டிட்டு போகப்போறே……?”
………………………
“சொல்லு தொரை. யாரையோ கல்யாணம் பண்ணி, மருமகளா கூட்டிட்டு போகப் போறேன்னு சொன்னியே….பா, யாரை கூட்டிட்டு போகப் போறே….?”
“அத்தை உங்க கோவம் எனக்கு புரியுது. தப்பு எங்க மேலதான். நீங்க என்ன பண்ணனும் சொல்லுங்க…? நான் பண்றேன். நிச்சயம் பண்ணபடி கல்யாணம் தடையில்லாம நடக்கனும் த்தை. நானும் மச்சான்கிட்ட பலமுறை பேச முயற்சி பண்ணிட்டேன். நீங்களாவது சொல்லி புரிய வைங்க அத்தை”.
“பெரியவங்க நம்ம சண்டையால…, வாழ வேண்டிய பிள்ளைக இரண்டும் தனிச்சு தத்தளிச்சு நிக்குதுக. பாவம் த்தை அதுங்க இரண்டும். வாழவேண்டிய குருத்துக. அவங்களுக்காவது… கொஞ்சம் மனசு வைக்கலாமில்ல த்தை….”
“எதுக்கு…? என் பொண்ணை, உன் வீட்டுக்கு அனுப்பிட்டு…, எப்ப என்ன நடக்குமோ…..? என்ன பேசுவீங்களோன்னு…..? பயந்து பயந்து சாகறதுக்கா…?”
“அய்யோ… அவள் பேசுனது அத்தனையும் தப்புதான் மச்சான். நான் அதை நியாயப்படுத்தலே. தப்புதான். அந்த கழுதை… புத்தி கெட்டுப்போய் பேசிருக்கு. அதுக்கு…, அவளுக்காக… நான் வேணா உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்… மச்சான்” என இருகைகளையும் கூப்பி மன்னிப்பு கேட்டவர், “நானே ஒத்துக்கறேன். அவள் தப்பு பண்ணிட்டா. இனி அது மாதிரி நடக்காம நான் பார்த்துக்கறேன்… மச்சான் என் மருமகள…” என்றார் கலங்கிய கண்களுடன்.
இப்படி டக்கென்று கைகூப்பி செல்வதுரை மன்னிப்பு கேட்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு நிமிடம் வேல்முருகனோ தழைந்து பார்த்தார் அவரை. அந்த க்ஷணம்தான். டக்கென்று தன்னை திடப்படுத்தி கொண்டவர், “எதை நம்பி அனுப்ப சொல்றீங்க….? வேணாங்க….. முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும். இதோட இதை விட்டுடுங்க…” என்றுவிட்டார்.
“பிள்ளைங்க வாழ்க்கைய பாருங்க மச்சான். சந்தோஷமா அதுங்க வாழவேண்டாமா….?”
“ஓஹ்…. பெத்தவனுக்கே புத்திமதி சொல்றீங்களா…? அவளுக்கு சந்தோஷமான வாழ்க்கைய, எப்படி அமைச்சு தரனும்னு, எனக்கு தெரியும். நீங்க எனக்கு அட்வைஸ் பண்ணனும்னு அவசியம் இல்லை. உங்க வேலை பார்த்துட்டு கிளம்புங்க…”
“என்ன மாப்பிள்ள பேசறீங்க…..? அவளுக்கும் என் பையனுக்கும் நிச்சயம் முடிஞ்சிருச்சு. பரிசம் போட்டாலே பாதி கல்யாணத்துக்கு சமம்னு சொல்வாங்க நம்ம ஊருல. அவள் எங்க வீட்டு பொண்ணு. என் மருமகள்…”
“நாம ஏற்கனவே முடிவு பண்ண மாதிரி, உங்க பொண்ணை என் பையனுக்கு கல்யாணம் பண்ணி குடுங்க. என் மருமகளை கண்கலங்காம பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு…. மாப்பிள்ள”
வேல்முருகனுக்கு எரிச்சலாக வந்தது செல்வதுரையின் பேச்சில். பல்லைக் கடித்து கோவத்தை விழுங்க நினைத்தவர், “உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா….? திரும்ப திரும்ப கல்யாணம் பண்ணிக்குடுங்கன்னு, அதையே பேசிட்டிருக்கீங்க. யாரை நம்பி கல்யாணம் பண்ண சொல்றீங்க…?”
“என்னை நம்பி கல்யாணம் பண்ணி குடுங்க, மாமா….”
கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, வாசல்கதவின் மேல் சாய்ந்து நின்று கொண்டிருந்தான் தேவநாதன்.
எல்லோரது பார்வையும் அவன்மேல் திரும்பியது குரல் வந்தவுடனே. இத்தனை நேரம் இவர்கள் இருவரும் பேசியிருந்த மும்முரத்தில், யாரும் அவன் வந்து நின்றதைகூட கவனிக்கவில்லை. ஆனால் யாரையும் அவன் பார்க்கவில்லை. அவனது பார்வை முழுவதும் அஞ்சனாவின் மீதிருந்தது. அவளும் அவனைத்தான் அங்குலம் அங்குலமாக ஆராய்ந்து நின்றிருந்தாள் கண்களினால்.
அன்று மருத்துவமனையில் அவனை பார்த்தது. அதன்பிறகு இன்றுதான் பார்க்கிறாள்.
லஷ்மிதான் சட்டென்று சுதாரித்து “உள்ள வாப்பா….” என்றார் பேரனை.
திரும்பி வேல்முருகனைப் பார்த்தான் அழைப்பாரா என்று. அவர் முகத்தைத் திருப்பி கொண்டார் எதுவும் சொல்லாமல்.
அஞ்சனாவைப் பார்த்தான். அவளும் எதுவும் பேசாமல் குனிந்து கொண்டாள்.
ரோகிணிதான் மனம் பொறுக்காமல், “உள்ள வா தேவா…..” என்றார் மருமகனைப் பார்த்து கண்கலங்கி.
ஆமோதிப்பாக தலையசைத்தவன், உள்ளே வந்து தந்தையின் பக்கத்தில் அமர்ந்து கொண்டான் நிமிர்வாகவே.
லஷ்மி அவனிடம் “உடம்பு இப்ப தேவலாமா….பா” என்றார்.
“ஹ்ம்ம்… நல்லாயிருக்கேன்…” என்றவனது பார்வை முழுவதும் அஞ்சனாவின் மீதுதான். இவள தேடி இவள் வீட்டுக்கு வந்திருக்கேன். வான்னு கூட கூப்பிடமாட்டாளா… எனதான் இருந்தது அவனுக்கு. செத்து பொழச்சு வந்திருக்கேன்… எப்படி இருக்கேன்னுகூட கேட்கமாட்டாளா… எனதான் பார்த்திருந்தான்.
ம்கூம்… அவள் நிமிரவேயில்லை. திடுமென அவனைப் பார்த்த நேரத்தில் நெஞ்சத்தை தொட்டு நின்ற பரவசத்தை முகத்தில் காட்ட விருப்பமில்லாமல் முகத்தை மறைத்து குனிந்து நின்றாள் இன்ப அதிர்ச்சியில்.
ஒருபக்கம் உள்ளுக்குள்ளும் குமைந்து கொண்டிருந்தது. அன்று அவன் அன்னையை பேச விட்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவன் தானே, என்ற ஆத்திரம் கனன்று நின்றது புத்தியில். இத்தனை நாள் எங்க இருக்கன்னு எட்டிகூட பார்க்கல. இன்னைக்கு என்ன அப்பாக்கும், பிள்ளைக்கும், புதுசா அக்கறை என அவனை விளாசிக் கொண்டிருந்தாள் மனதில்.
error: Content is protected !!