Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வசந்தங்கள் வாடுவதில்லை

வசந்தங்கள் வாடுவதில்லை 25

அஞ்சனாவும் தேவநாதனும் குலதெய்வக் கோவிலுக்கு வந்திருந்தனர்.  புதுமணத் தம்பதியரை அழைத்துகொண்டு மொத்த குடும்பமும் குலதெய்வ கோவிலுக்கு வந்திருந்தனர்.

கோவிலைச் சுற்றி எங்கும் வயல்களாக இருந்தது.  அந்த காலத்தில் காடுகளாக இருந்திருக்க வேண்டும்போல.  இப்போது வயல்களாக மாறியிருந்தது.  கோவிலைச் சுற்றி எந்தப் பக்கமாக போனாலும், குறைந்தது நாலைந்து கிலோ மீட்டராவது சென்றால்தான் சுற்றுப்புறத்தில் இருக்கும் ஊரை அடைய முடியும்.  அந்த அளவு எங்கும் சுற்றி அடர்ந்த தோப்பும், புதார்களும், வயல்களுமாக காட்சியளித்தது.

போக்குவரத்து வசதிகள்கூட இல்லை.  கோவிலை அடைய மண்ரோடு இருந்தது.  அதன்வழியாகதான் கோவிலுக்கு வருபவர்கள் வரமுடியும்.  இப்பொழுது போக்குவரத்து வாகன வசதிகள் இருக்கிறதால் அவரவர் வசதிக்கேற்ப, காரிலோ, வேனிலோ, டூவீலரிலோ, வந்து செல்கிறார்கள்.

அந்த காலத்தில் போக்குவரத்து வசதி இருக்கும் இடம்வரை பஸ்சில் வந்து, அதன்பிறகு நடந்துதான் வருவார்கள்.  இல்லையென்றால் வண்டிக்கட்டிக் கொண்டு [மாட்டு வண்டி] வருவார்கள்.



Advertisement

கோவிலைச் சுற்றி, கரும்பு, நெல், வாழை என பலவகைப் பயிர்களும் பயிரிடப்பட்டிருந்தது.  தூரத்தில் மாந்தோப்புகளும் தெரிந்தன.  பார்ப்பதற்கு எங்கும் பசுமையாக மனத்திற்கு குளுமையாக இருந்தது.

கோவிலுக்கு பின்பக்கமாய் பனை மரங்களுடன் கூடிய அடர்ந்த புதார்கள் இருந்தன.  அதில் நிறைய நாவல் மரங்கள், கலாக்காய் செடிகள், ஆலமரம், கொடுக்காய்ப்புளி மரங்களும் இருந்தன.  மனிதர்களின் நடமாட்டம் அரிதாக இருந்தது கோவிலைச் சுற்றி.  பறவைகளின் நாதம் மட்டும், காதுக்கு இனிமையாக ஒலித்துக் கொண்டிருந்தது, மரங்களிலிருந்து.

கோவிலின் முன்பக்கம் இரண்டு புறமும் மாமரங்கள் அடர்ந்து இருந்தன.  அதன் நிழலில் போர்வையை விரித்து அமர்ந்திருந்தனர் குடும்பத்தினர் எல்லோரும்.

Advertisement

அங்கேயே ஒரு பக்கத்தில், அஞ்சனா பொங்கல் வைப்பதற்காக கற்களை மூன்று பக்கமும் அடுக்கி அடுப்பு தயார் செய்து கொண்டிருந்தாள்.  அவளுக்கு உதவியாக தேவநாதன் அவளுடனே நின்று கொண்டிருந்தான்.

Advertisement

காஞ்சனாவும் கீர்த்தியும் பிள்ளைகளுக்கு காலை உணவை ஊட்டிக் கொண்டிருந்தனர்.  வீட்டிலிருந்து விடிவதற்கு முன்பே கிளம்பியிருந்தார்கள்.  காலை உணவை வீட்டிலிருந்தே தயார் செய்து கையிலேயே கொண்டு வந்திருந்தார்கள்.

மீனா கோவிலுக்காக வாங்கி வந்திருந்த பொருட்களை எல்லாம் தட்டில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.

“ஏன் ம்மா….?  அங்க அஞ்சனாவோட யாராவது ஒருத்தர் இருக்கலாமில்ல.  புதுசுதான….?  அந்த பிள்ளைக்கு என்ன தெரியும்….?  உதவிக்கு யாராவது போகலாமில்ல…..?” என்றார் செல்வதுரை இரண்டு மருகள்களிடமும்.  பேச்சு மருமகள்களிடம் இருந்தாலும், கண்கள் மனைவியைத்தான் பார்த்து கொண்டிருந்தது அவருக்கு.

Advertisement

மருமகள்கள் இரண்டு பேரும் மாமியாரைத்தான் பார்த்தார்கள்.  மீனா கணவர் சொல்லியது காதில் விழாததுபோல அவரது வேலையை பார்த்து கொண்டிருந்தார்.

சில நிமிடம் அங்கேயே நின்று பார்த்த செல்வதுரை, அஞ்சனாவிடம் சென்று, “ஏதாவது பண்ணவாடா…….?” என நின்றார்.

மீனா நிமிர்ந்து கணவரை பார்த்தார். அவரது முகத்தில் இகழ்ச்சி தெரிந்தது.  ஏன் அதை என்கிட்ட வாயைத் திறந்து சொல்லமாட்டாராம்மா?  அவ்வளவு வேண்டாதவளா ஆகிட்டனா… நான்…? என உஷ்ணமானது மனதுள்.

அதான் நினைச்சது நடந்துடுச்சு இல்ல.  இன்னும் என்ன முறுக்கு…?  என கோவம் வந்தது மனதில், மீனாவுக்கு.

கணவர் மருமகள்களின் முன்னால், தன்னை மதிக்கவில்லையே என்று எரிச்சலும், கோவமும்… சேர்ந்தே வந்தது மனதில்.

கணவர் இதை தன்னிடம் நேரிடையாக சொல்லியிருந்தால் நிச்சயம் மீனா சென்றிருப்பார்.  மருமகள்களிடம் சொல்வதுபோல் தன்னிடம் ஜாடை காட்டி பேசியது பிடிக்கவில்லை.  அதனால் எனக்கென்ன… என்று அழுத்தமாக அமர்ந்திருந்தார்.

அஞ்சனாவுக்கு சென்று உதவ காஞ்சனாவுக்கு மனதில்லை.  கீர்த்திக்கு இவர்கள் இருவரையும் மீறி அங்கு செல்ல துணிவில்லை.

கோவிலின் வெளிப்புறத்தை சுற்றிப் பார்த்து பேசிக்கொண்டே வந்த கார்த்திக்கும், விவேக்கும் நேராக அஞ்சனா பொங்கல் வைக்குமிடத்தில் வந்து நின்று கொண்டனர்.  இதைப் பார்த்ததும் இன்னும் காஞ்சனாவுக்கு கடுப்பானது.  வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த வெங்கலப் பானையில் பொங்கல் தயாராகிக் கொண்டிருந்தது.

தேவநாதன் அங்கிருந்த அடி பைப்பில் குடத்தில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு வந்து மனைவியிடம் வைத்தான்.  கார்த்தியும், விவேக்கும் அடுப்பு எரிப்பதற்காக அங்கிருந்த காய்ந்த சுள்ளி,  காய்ந்த விறகுகளை பொறுக்கி வந்து போட்டார்கள். வெல்லக்கட்டியை எதில் வைத்து நசுக்குவது என தெரியாமல் சுற்றும் முற்றும் பார்த்து கொண்டிருந்தாள் அஞ்சனா.

“என்ன வேணும் அனு……?”

வெல்லத்தை கணவனிடம் காட்டி….. “எப்படி நசுக்கறதுன்னு பார்த்துட்டிருக்கேன்…….?” என்றாள்.

“கல் ஏதாவது எடுத்துட்டு வரவா….?”

“ம்கூம்…. கல்லுல இருக்க மண்ணு இதுல விழுந்து, வெல்லம் எல்லாம் மண்ணாயிடும்….”

இதைப் பார்த்து நின்றிருந்த விவேக் அன்னையிடம் சென்று, மீனா சாமிக்கு அர்ச்சனைக்காக எடுத்து வைத்திருந்த தட்டிலிருந்து முழு தேங்காயை எடுத்து வந்தான்.

“இங்க குடும்மா…”, நான் நசுக்கி தரேன் என அவளிடம் இருந்து வெல்லக்கட்டியை வாங்கியவன், அந்த பேப்பரிலேயே வைத்து முழு தேங்காயால், மெல்ல நசுக்கி தூளாக்கி கொடுத்தான், அவளிடம்

“தேங்க்ஸ்…. மாமா” என்றாள் முகம் மலர்ந்து சிரிப்புடன், அஞ்சனா.

அவளைத்தான் பார்த்து நின்றான் தேவநாதன்.  திருமணத்திற்கு பிறகு இன்னும் அவள் தன்னை மாமா என சகஜமாக அழைத்து பேசாதது நெருடிக்கொண்டிருந்தது மனதுள்.  இப்போது விவேக்கை அஞ்சனா முகம் முழுவதும் சிரிப்புடன் மாமா என்றதும் சற்று பொறாமைதான் கணவனுக்கு.

அப்படியே ஏலக்காயையும் அவனிடம் கொடுத்து நசுக்கி வாங்கிக் கொண்டாள்.  வெல்லத்தில் சிறிது தண்ணீர்விட்டு கரைத்து, அதனை வடிகட்டி , பின்பு பொங்கலில் சேர்க்க ஆரம்பித்தாள்.

அவளை பார்த்து கொண்டிருந்த கார்த்திக், “வெல்லத்தை அப்படியே போட்டா கரைஞ்சிடும் மா…., ஏன் கரைச்சு வேற கஷ்டப்படறே” என்றான் அஞ்சனாவிடம்.  அஞ்சனாவுக்கு தெரியவில்லையோ என உதவும் எண்ணத்தில் கூறினான்.

“அப்படியேவும் போடலாம் மாமா… ஆனால் வெல்லப்பாகு எடுத்து போட்டா இன்னும் டேஸ்டா இருக்கும்.  அம்மா அப்படிதான் செய்வாங்க.  இங்க அதுக்கு வசதியில்லன்னுதான்…. கரைச்சு போடறேன்”.

“வெல்லத்தை கரைச்சு வடிகட்டிட்டோம்னா…. அதிலிருக்க கல்லு மண்ணு தனியா வந்துடும். அதுக்காகதான் வடிகட்டினேன்”.

“ஒஹ் இதுல இப்படி ஒன்னு இருக்கா…….” என சிரித்துகொண்டான்.

செல்வதுரை அஞ்சனாவையேதான் பார்த்து கொண்டிருந்தார்.  அவருக்கு சின்ன பெண்ணாச்சே அடுப்பில் செய்வாளோ….? பழக்கமிருக்கோ…?  என மனதில் தவிப்பாக பார்த்து நின்றிருந்தார்.  பெண்கள் யாரும் அவளுக்கு உதவ வராததை நினைத்து மனதிலேயே வறுத்தெடுத்துக் கொண்டிருந்தார்.

அஞ்சனா அதற்கெல்லாம் அசரவில்லை.  அவள் எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் சந்தோஷமாகவே, பொங்கல் வைத்து கொண்டிருந்தாள். பொங்கல் வைத்து இறக்கியதும் பானையின் வெளிப்புறத்தில் படிந்திருந்த கரியை தண்ணீர் விட்டு, தேங்காய் நாரால் துடைத்து  சுத்தப்படுத்தியவள், திருநீரால் பட்டையிட்டு, மஞ்சள் குங்குமம் வைத்து, சாமி சன்னிதானத்திற்கு முன் கொண்டு வந்து பூசாரியிடம் கொடுத்திருந்தாள்.

கோவிலுக்குள் உட்கார்ந்து பெண்கள் மூவரும் வாங்கி வந்திருந்த பூவை தொடுத்துக் கொண்டிருந்தனர்.  பூசாரி அபிஷேகத்திற்கு எல்லா ஏற்பாடும் செய்துகொண்டிருந்தார்.

தேவநாதன் அஞ்சனாவை அழைத்துகொண்டு வந்து கோவிலின் வெளிப்புறத்தை சுற்றி காட்டிக் கொண்டிருந்தான்.

“செமையா… இருக்கு இங்க.  ஏதோ பிக்னிக் வந்த மாதிரியிருக்கு.  நீங்களாம் சின்ன பிள்ளையில அடிக்கடி வருவீங்களா இங்க…..?”

“ஹ்ம்ம்.  வருஷத்துல, ஒரு தடவையாவது கூட்டிட்டு வந்துடுவாங்க. அம்மாவும், அப்பாவும்.  அப்பலாம் இவ்வளவு வயல்லாம் இல்ல.  சுத்தி எங்க பார்த்தாலும், தோப்பும் காடுமாயிருக்கும்.  இங்கிருந்து சாயந்திரம் இருட்டறதுக்கு முன்னாடியே கிளம்பிடுவாங்க எல்லாரும்.  அவ்வளவு பயமாயிருக்கும்.  விளக்கு வச்சதுக்கு அப்புறம் யாரும் இங்க இருக்கமாட்டாங்க.  ஆனால் இப்ப எல்லாம் மாறிட்டே வருது”.

“வருஷத்துக்கு ஒரு நாள் திருவிழா நடக்கும்.  அன்னைக்கு இங்க சுத்தியிருக்க கிராமத்திலிருந்து எல்லா ஜனங்களும் வருவாங்க.  அன்னைக்கு கோவில்ல பயங்கர விசேஷமாயிருக்கும்.  சாயந்திரம் தீமிதிப்பாங்க”.

“சின்ன சின்ன கடையெல்லாம் கூட  போடுவாங்க.  அதெல்லாம் சின்ன பிள்ளையில வந்து பார்த்தது.  அதோ தெரியுதுல்ல அந்த  மாந்தோப்புல பம்புசெட் இருக்கும்.  வயலுக்கு தண்ணி பாய்ச்சறதுக்காக போட்டிருப்பாங்க.  கோவில்ல சாமி கும்பிட்டு நடந்து போற வழில அதுல குளிச்சு ஆட்டம் போட்டுட்டுதான் போவோம் நான் அண்ணன் எல்லாம். அங்கிருக்க மாங்காய், இளநீர், கரும்புன்னு ஒன்னு பாக்கியில்லாம பறிச்சு சாப்டுட்டு, மெதுவா சாயந்திரமா வீடு போய் சேருவோம்”.

இந்த கோவிலுக்கு பின்னாடி நாவப்பழம் மரம் இருக்கும்.  கலாக்காய் செடி இருக்கும்.  அதெல்லாம் தானாவே பழுத்து மண்ணுல விழுந்திருக்கும்.  நான் அண்ணன்க எல்லாம் சின்ன பிள்ளையில வந்தோம்னா… ஒன்னு விடாம, அதையெல்லாம் பொறுக்கியெடுத்து, நல்லா கழுவி சாப்பிடுவோம்.  பின்னாடி இருக்க பனைமரத்துல இருந்து, சில சமயம் நொங்கு இறக்கி விப்பாங்க.  அதையும் வாங்கி சாப்பிடுவோம்”.

“நல்லா என்ஜாய் பண்ணியிருக்கீங்க…..” என்றாள் சிரித்துக்கொண்டே தேவநாதனை பார்த்து உல்லாசமாக.

“ஹ்ம்ம்… அது எல்லாம் ஒரு காலம்… இப்ப அதெல்லாம் நினைச்சாலும் முடியாது……” என்றான் அவனும் சிரித்துக்கொண்டே.

அதற்குள் இவர்களைத் தேடி விவேக் வந்தான்.  “டேய் வாங்க…, அபிஷேகம் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க…” என இவர்களை அழைத்து சென்றான்.

அபிஷேகம் நடந்து, அலங்காரம் முடிந்து, அர்ச்சனை செய்து, சாமி கும்பிட்டு எல்லோரும் வெளியே வந்து அமர்ந்தனர்.  மீனா எல்லோருக்கும் சின்ன சின்ன வாழையிலையில் சர்க்கரைப் பொங்கலையும், அதனுடன் அபிஷேகம் செய்த பழ பஞ்சாமிர்தத்தையும் உண்பதற்காக வைத்துக் கொடுத்தார்.

அதனுடன் படைத்த வாழைப் பழத்தையும் ஆளுக்கு ஒன்றாக எடுத்துக் கொண்டனர்.  படைத்த தேங்காய் மூலியை தரையில் தட்டி உடைத்த கார்த்திக், அதனையும் துண்டு போட்டு எல்லோருக்கும் பகிர்ந்து கொடுத்தான்.

அங்கிருந்து கிளம்பி வரவே மனமில்லை அஞ்சனாவுக்கு.  கண்ணுக்கு குளுமையாக பசுமையோடு ஒன்றிய அந்த கோவில் அவளை மிகவும் கவர்ந்திருந்தது.

அன்று இரவு லஷ்மி செல்வதுரைக்கு போன் செய்திருந்தார்.  அஞ்சனாவுக்கு தாலி பிரித்து போடுவது பற்றி பேசியிருந்தார்.  இதுவரைக்கும் பொண்ணும் மாப்பிள்ளையும்… மறுவிருந்துக்குகூட இன்னும் பெண் வீட்டுக்கு செல்லவில்லை.

அதனால் தாலிபிரித்து போடும் வைபவத்தையாவது… பெண் வீட்டில் வைத்துகொள்ளலாம்.  அப்படியாவது பொண்ணும் மாப்பிள்ளையும் வீட்டுக்கு வருவார்கள் என நினைத்தார்.

அவர்களின் வழக்கப்படி தாலி பிரித்து போடும் நிகழ்ச்சி பெண் வீட்டில்தான் நடக்கும்.  அதன்படி அவர் போன் செய்து செல்வதுரையிடம் பேசி, எல்லோரையும் அங்கு முறைப்படி அழைத்திருந்தார்.

அதனை செல்வதுரை வீட்டில் எல்லோரிடத்திலும் கலந்து பேசினார்.  முதலில் மீனாதான் அதற்கு முட்டுக்கட்டை போட்டார்.

அவருக்கு மனதில் வீம்பு வந்தது போல.  அதென்ன கல்யாணம்தான் என்னைக்கலக்காம இவங்க இஷ்டத்துக்கு நடத்திட்டாங்க.  இதுக்குகூட என்கிட்ட பேசமாட்டாங்களா…?  என கோவம் வந்தது தன்போல.

“கல்யாணம்தான் அவங்க இஷ்டத்துக்கு செஞ்சுட்டாங்க.  இதையாவது ஒழுங்கா செய்ய வேணாமா….?  எல்லாம் ஏறுக்கு மாறா நடந்திட்டிருக்கு.  இரண்டு பிள்ளைக்கு கல்யாணம் பண்ணியிருக்கோம்.  இது எல்லாம் உங்கப்பாக்கு தெரியாதா…?” என முறைத்தார் மகன்களை.

“இதகூட நேர்ல வந்து பேசமாட்டாங்களா…?  எல்லாத்தையும் போன்லயே பேசி முடிச்சுடுவாங்களா…?  முறைப்படி அவங்கதான நேர்ல வந்து கலந்து பேசனும்.  எல்லாம் அவங்க இஷ்டமா…?  நமக்கு மரியாதையே இல்லையா…?  இதுவரைக்கும் ஒருதடவைகூட அவங்க நம்ம வீடேறி வந்து எதையும் பேசினதில்ல” என எகிறினார்.

“அவங்க நேர்ல வந்து நம்மள முறைப்படி அழைச்சிருந்தாங்கனா, நாம போயிருக்கலாம்.  என்னால அங்கெல்லாம் வரமுடியாது.  யாரும் வேணாம்..னு நினைச்சா…, அவங்க இஷ்டத்துக்கு பண்றதுனா…, பொண்ணை மட்டும் அழைச்சிட்டுபோய் பண்ணிக்கட்டும்”. என்றுவிட்டார் முறைப்புடன்.

இதைக் கேட்டு காஞ்சனாவின் உதடு நக்கலாக வளைந்தது.  அஞ்சனா இதையெல்லாம் பார்த்து, திரும்பி தேவநாதனை பார்த்தாள்.  கண்களை மூடித் திறந்து அமைதியாக இரு… என்று சைகை செய்தான்.

நிலைமையை சமாளிக்க எண்ணிய கீர்த்தி, “அத்தை வராம… நாங்க மட்டும் எப்படி வர முடியும் மாமா?  வேணும்னா.. .அவங்கள இங்க கூட்டு, நம்ம வீட்லயே பண்ணிடுவோமா…..?” என்றாள் மெல்ல தயக்கமாக

“அஞ்சனா வீட்ல இருந்தும்…, கல்யாணத்துக்கு பிறகு, இன்…னும், இங்க…, நம்ம வீட்டுக்கு யாரும் வரலையே”. என்றாள் இன்னும் தயக்கமாக மாமனாரைப் பார்த்துகொண்டே.

“அவங்களையும் பங்ஷனுக்கு அழைச்சு, நாம ஒரு விருந்து குடுத்ததுபோல இருக்குமில்ல” என்றாள் நல்லெண்ணத்தில்.

விவேக், “ஏய் நீ என்ன நடுவுல பேசிட்டு.  பெரியவங்க பேசறாங்க இல்ல, சும்மாயிருடி…” என அதட்டினான் மனைவியை.

“அவளை ஏன்டா அடக்கறே…?  அவள் சொல்றதும் நியாயமாதான இருக்கு.  உங்கப்பாவ வேணும்னா… கீர்த்தி சொல்ற மாதிரியே, அவங்க வீட்ல பேச சொல்லு.  எல்லாரையும் கூட்டு ஒரு விருந்து வச்சுடலாம்.  இன்னும் நம்ம சைட் மனுஷங்களுக்குகூட எதுவும் விருந்து குடுக்கல…” என்றார் மெதுவாக

செல்வதுரைக்கும் இது நல்ல யோசனையாகதான் இருந்தது.  ஆதலால் லஷ்மியை அழைத்து இவர்களது எண்ணத்தை அவரிடம் பகிர்ந்து கொண்டார்.  ஆனால் அவர் இதற்கு சம்மதிக்கவில்லை.  வேல்முருகன் கோவமாக இருப்பதால் அவர் மாப்பிள்ளை வீட்டிற்கு வரமாட்டார் என்பது அவருக்கு தெரிந்ததாயிற்றே.

மகனுக்கு இன்னும் மீனாவின் மீது இருந்த வருத்தம், கோவம் எதுவும் மாறவில்லை என்பது அவருக்குதான் தெரியுமே.  ஆதலால் மகனை தர்மசங்கடப் படுத்த விரும்பவில்லை லஷ்மி.  மகன் வராமல் ரோகிணி வரமாட்டார்.  ஆதலால் லஷ்மி இந்த யோசனைக்கு மறுத்து விட்டார்.

அஞ்சனா, “மாமா….” என்றாள் தயக்கமாக.

என்ன என பார்த்தனர் அனைவரும்.  “அது நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே…?”

“சொல்லும்மா…” என்றார் செல்வதுரை.

“அ…து.., உங்களுக்கு ஆட்சேபணை இல்லனா…., சென்னையில நான் தங்கியிருக்க வீட்லயே வச்சிடலாமா…?  இரண்டு வீட்டுக்கும் பொதுவா போயிடும்.  எனக்கும் நிறைய லீவு போட முடியாது.  நீங்க எல்லாரும் சென்னைக்கு வந்து அங்க நான் தங்கியிருக்க வீட்டை பார்த்த மாதிரியிருக்கும்…”

“ஹ்ம்ம்.  இதுவும் நல்ல யோசனையாதான் இருக்கு.  ஆனால் உங்க வீட்ல இதுக்கு சம்மதிப்பாங்களா….ன்னு தெரியலையே…?” என்றார் யோசனையாக.

“அ…து… அப்பத்தாகிட்ட நான் பேசிக்கறேன் மாமா.  அவங்களை சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு.  உங்களோட சம்மதம் சொல்லுங்க.   இங்க நீங்க அத்தை எல்லாரும் வருவீங்களா… சென்னைக்கு?”

“இதுல என்னடா… இருக்கு?  அதுவும் நம்ம வீடுதான…  தாராளமா அங்கயே செஞ்சுடலாம்.  என்னடா நான் சொல்றது….?  உங்களுக்கு எல்லாம் ஓகே தானே….? என்றார் மகன்களைப் பார்த்து.

சரி என தலையசைத்தனர் அனைவரும்.  இருந்தாலும் மீனா முறைத்துகொண்டு உட்கார்ந்திருந்தார்.

“சரி எல்லாரும் போய் படுங்க.  டைமாகுது…” என அனைவரையும் படுக்க அனுப்பியவர், அவரும் எழுந்து படுப்பதற்காக அறைக்கு சென்றார்.

அஞ்சனாவின் பின்னாடியே அறைக்குள் நுழைந்த தேவநாதன் பின்பக்கமாக அவளது, தோள்களைப் பற்றிகொண்டே அவள் பின்னால் நடந்தவன் அவளைத் திருப்பி தன்னைப் பார்க்கும்படி செய்து “அனு உன்கிட்ட ஒன்னு சொல்லவா…?” என்றான் பீடிகையுடன்.

என்ன எனப் பார்த்து நின்றாள்.

“நீ எது பேசறதாயிருந்தாலும் என்கிட்ட சொல்லு.  நான் பேசறேன்.  நீ நேரடியா பேச வேணாம்…” என்றான் கெஞ்சலாக.

“ஏன்……..?” என்றாள் அஞ்சனா புரியாமல்.

“இல்ல….” என இழுத்தவன்  “ம்ப்ச்.  அ…து உனக்கு சொன்னா புரியா…து.  நீ தனிகாட்டு ராஜாவா, உங்க வீட்டுல இருந்துட்ட.  இங்க அப்படியில்ல.  நாங்க மூனு பேர்.  இதுவரைக்கும், எங்களுக்குள்ள எந்த பிரச்சினையும் வந்ததில்ல.  இங்க எல்லாம் பெரியவங்க விருப்பம்தான்.  அண்ணிங்ககூட அம்மா அப்பாவ மீறி எதுவும் பேசகூட மாட்டாங்க”.

“அதுக்காக உடனே அம்மாவ அப்பாவ கொடுக்காரங்க ரேஞ்சுக்கு நினைக்க ஆரம்பிச்சுடாத…”

“எங்களுக்கு அப்படியே பெரியவங்களுக்கு மரியாதை குடுத்து, அவங்க சொல்றத கேட்டு, பழகிடுச்சு.  அவங்களும் எங்க இஷ்டத்துக்கு மாறா.. எதையும் வற்புறுத்துனது இல்ல”.

“நம்ம கல்யாணத்துலதான் அம்மாக்கும் அப்பாக்கும் முதல் முறையா பிரச்சினை வந்தது.  அதுக்கு முன்னாடி… அவங்கள மாதிரி ஒரு பெஸ்ட் கப்பிள்ல பார்த்திருக்க முடியாது.  இரண்டு பேரும் அவ்வளவு அன்பா… கிண்டலும் கேலியுமா… பார்க்கவே  அவ்வளவு அன்யோன்யமா இருப்பாங்க”.

“நான் எதுவும் தப்பா சொல்லடா.  என்கிட்ட சொல்லு.  நான் பேசறேன்.  உனக்கு ஏன் வீணா கெட்டப்பேர்.  அதுக்குதான் சொல்லறேன்.  அம்மா…., பெரியண்ணி… எல்லாரும் நீ அப்பாகிட்ட பேசும்போது எப்படி முறைச்சிட்டிருந்தாக பார்த்தல்ல…”

“நான் உங்ககிட்ட சொல்லி, அப்புறம் நீங்க அவங்ககிட்ட பேசறதுக்கு எல்லாம், அங்க, எங்க நேரமிருந்தது?  சூழ்நிலையும் அதுக்கு சாதகமா இல்லையே”.

“நான் அங்க எதுவும் தப்பா பேசலையே…?  இப்படி ஒன்னொத்துக்கும் உங்களையே எதிர்பார்த்திட்டிருக்க முடியுமா…?  எனக்கு தோண்றத நான் பேசகூட உரிமையில்லையா…?”

“அம்மா தாயே… நான் அந்த அர்த்தத்துல சொல்லல.  உடனே முறைக்காத.  எல்லாரும் நம்ம மேல இருந்த கோவத்த மறந்து பழைய மாதிரி எல்லாம் சுமூகமாகற வரைக்கும், நாம கொஞ்சம் அட்ஜஸ் பண்ணா நல்லாயிருக்குமேன்னு நினைச்சு சொன்னேன்…”

“நான் மட்டும்தான் அட்ஜஸ் பண்ணனுமா….?  கல்யாணமாகி இத்தனை நாள்ல, நாம எங்க வீட்டுக்கு போகவேயில்ல.  எங்க அப்பத்தாவும்…, அம்மாவும்…, எத்தனை தடவை போன் பண்ணி உங்களை கூப்பிட்டாங்க?  வீட்டுக்கு வரச்சொல்லி. மாமனார் உங்களை நேரிடையா கூப்பிட்டாதான் வருவேன்னு அழிச்சாட்டியம் பண்ணல நீங்க?  அது மட்டும் சரியா….?”

“எங்கப்பா ஏன் கோவமாயிருக்கார்னு உங்களுக்கு தெரியுமில்ல…?  தெரிஞ்சும் வீம்பு பிடிக்கறீங்க.  என்ன மாப்பிள்ளை முறுக்கா….?”

“நீங்களும் கொஞ்சம் விட்டுத் தந்து அட்ஜஸ் பண்ணலாமில்ல….?  அவர் பேசனாதான் வீட்டுக்கு வருவேன்னு பிடிவாதம் பிடிக்கறீங்க.  அது மட்டும் நியாயமா….?”

அவளை அப்படியே தோள்களைப் பிடித்து கட்டிலில் உட்கார வைத்து, தானும் அவள் எதிரில் கீழே மண்டியிட்டு உட்கார்ந்தான்.  “நான் அப்படி வராம இருந்தும்… உங்கப்பா இன்னும் அவர் பிடியிலிருந்து இறங்கி வந்தாரா…?  வரலதான.  ம்ம்…”.

“இன்னும் அதே கோவத்தோடதான இருக்கார்.  நான் இப்படி முறைச்சுட்டு, உன்னை கூட்டிட்டு அங்க போகாம இருந்தாலாவது, அவர் பிடிவாதத்திலிருந்து கொஞ்சமாவது இறங்கி வந்து, நம்மள அவர் உங்க வீட்டுக்கு கூப்பிடுவார்னு எதிர்பார்த்தேன்”.

“அப்ப உங்களுக்கு…, அப்பா நம்மள நேரடியா வீட்டுக்கு வரச்சொல்லி கூப்பிடலன்னு, நிஜமாவே கோவம் இல்லையா….?” என்றாள் கண்களை விரித்து ஆச்சர்யத்துடன் அவனிடம்.

“ஏன் இல்லாம……?  எல்லாம் அதுவும் ஒருபக்கம் இருக்கு… இருக்கு”.

“போங்க…” என சலித்தவள், “உங்க இரண்டு பேர் வீம்புல, நான்தான் மாட்டிட்டு அவஸ்தை படறேன்.  எனக்கு எங்க வீட்டுக்கு எப்ப போவேன்னு இருக்கு….”

“ஹேய்…. என்ன….?  சும்மா… சும்மா… எங்க வீடு, எங்க வீடுன்னு….?  அது உங்க வீடுன்னா…..?  அப்ப இது யார் வீடாம்…..?” என முறைத்தான்.

ம்க்கும்.  இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல.  நல்லா உரிமை போராட்டம் பண்றீங்க… ஆளாளுக்கு என தனக்குள்ளயே முனகிக் கொண்டவள், “ப்ம்ச்… இப்ப இது ஒரு பெரிய குத்தமா….?  பழக்க தோஷத்துல அப்படியே பேசிட்டேன்.  எல்லாத்துக்கும் ரூல்ஸ் போடுவீங்களா……? அம்மாவும்… பிள்ளையும்…”  என சலித்தாள்.

“கொஞ்சநாள்தான்டா அனு.  இந்த கல்யாணம் நடக்க எவ்வளவு கஷ்டப்பட்டோம்.  நாம நினைச்ச மாதிரி இரண்டு குடும்பமும் ஒன்னு சேர வேணாமா……?  அந்த ஆசை உனக்கு இல்லையா….?”

“ஹ்ம்ம்…  ஏன் இல்லாம…?  அதுவும் இருக்கு…. இருக்கு….”

அவளது வார்த்தையில் சிரித்தவன், “எது பேசுனாலும்… திரும்ப பேசிடனும்.  உள்ள ஒன்னும் தங்காதா….” என்றான் அவள் நெஞ்சின் மேல் கையை வைத்து.

“ச்சோ… கைய எடுங்க…..” என கூச்சத்துடன் சிரித்துகொண்டே அவனது கையை தட்டிவிட்டாள் அஞ்சனா.

“ம்ஹ்…” பெரிசுங்க குழப்பத்துல நம்மள தவிக்க விடறாங்க என பெருமூச்சு விட்டவன் “சீக்கிரம் சரியாயிடும்.  அதுவரைக்கும் எல்லாத்தையும் பொறுத்துக்கதான் வேணும்.  உங்கப்பா….” என்றவனை இடைமறித்தாள்.

“அது என்ன எங்கப்பா… மாமான்னு சொல்ல மாட்டீங்களா….?” என முறைத்தாள் அவனை.

“ஹா…. ஹா….. எல்லாத்துக்கும் சண்டை போடுவியா நீ….”  என சிரித்துகொண்டே தன்னை ஒப்புகொடுத்தவன், “சரி என் மாமனார் கோவம் போய்… அவரே நம்மள கூப்பிடற வரைக்கும், உங்க வீட்டுக்கு நாம போக கூடாது.  என்ன சரியா…?  உடனே மூஞ்ச தூக்கக்கூடாது.  இப்பதான சொன்னேன்.  கொஞ்சநாள்தான்…”.

பாவமாக பார்த்தாள் கணவனை.

அவளது பக்கத்தில் எழுந்து உட்கார்ந்தவன், அஞ்சனாவை இழுத்து மடியில் சாய்த்து, அவளது கையைப் பிடித்துகொண்டு “இப்படிப் பார்க்காத மா…, எனக்கு கில்டியா இருக்கு.  சீக்கீரமே எல்லாம் சரியாயிடும்.  எனக்கு மட்டும் இப்படி பண்ணனும்னு ஆசையா என்ன…?” என்றான் அவளது தாடையைப் பிடித்து கொஞ்சலாக.

“சரியாகனும்.  அப்பாவ பார்க்காம…, அவரோட பேசாம… எனக்கு கஷ்டமாயிருக்கு…ங்க…..” என்றவள் அவனது மடியிலேயே படுத்து, அவனது கையைப் ஆறுதலாக பற்றிக்கொண்டாள்.

“புரியுது டா…. கொஞ்ச நாள் பொறுத்துக்கோ.  கண்டிப்பா உங்கப்பாவே உன்கிட்ட சந்தோஷமா பேசுவார்… என மனைவியை கொஞ்சி கெஞ்சி சமாதானப்படுத்தி ஆதூரமாக அணைத்துகொண்டவன், தன் மடியில் படுத்திருந்தவளின் மீதே தலையை சாய்த்துகொண்டான்.

அவர்களின் பக்கவாட்டில் இருந்த ஜன்னலின் வழியாக சில்லென வாடைக் காற்று வீசிக்கொண்டிருந்தது, மழைவரப் போகிறது என்பதற்கு அறிகுறியாக.

அதன் வழியாக தெரிந்த வான்வெளியில்  பவனி வந்த முழுநிலவோ… தம்பதியரின்  ஆதங்கத்தை போக்கும் அருமருந்தாக சிரித்துக் கொண்டிருந்தது.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!