Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வசந்தங்கள் வாடுவதில்லை

வசந்தங்கள் வாடுவதில்லை 9

அரைமணிநேரம் கழித்து…  அந்த வழியாக நடந்து வந்த இருவரை வைத்து காரை பள்ளத்தில் இருந்து தள்ளி… எடுத்து, பஞ்சரான வீலை கழற்றிவிட்டு ஸ்டெப்னியை மாற்றி… வேக வேகமாக காரை எடுத்து புறப்பட்டு வந்திருந்தார் கோவிலுக்கு.

அங்கு கோவிலில் மொட்டை அடித்து…. முடித்து செல்வதுரைக்காக காத்திருந்தனர்.  குழந்தை வேறு மொட்டை அடித்ததிலிருந்து நை… நை… என அழுதுகொண்டே இருந்தது.

காதுகுத்தும் ஆசாரி வேறு சீக்கிரம் கிளம்பவேண்டும் என அவசரப்படுத்தி கொண்டிருந்தார்.  இதை முடித்து வேறொரு பங்ஷனுக்கு போகவேண்டும் என்று.

குழந்தையின் தொடர் அழுகை… காதுகுத்துபவரின் நச்சரிப்பு… இவ்வளவு நேரமாகியும் செல்வதுரை வராதது…. இது மட்டுமில்லாமல் கேட்பவர்களுக்கு எல்லாம் பதில் சொல்லவேண்டியதாக இருந்தது என எல்லாம் சேர்ந்து வேல்முருகனுக்கு கோவத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தியது செல்வதுரையின் மீது.



Advertisement

சிறிது நேரம் பொறுத்து பார்த்த பெரியவர்கள், “உன் மச்சான் வந்து செய்ற முறைய தனியா செய்யட்டுமேப்பா…  மொட்டை அடிச்ச மாதிரி… பானு புருஷன் மடியிலேயே உட்கார வச்சு காதும் குத்திரேம்பா….. என சொல்ல ஆரம்பித்திருந்தனர் வேல்முருகன் பக்க உறவினர்கள் எல்லாம்.

இன்னொருத்தரோ அந்த கும்பலில் இருந்து “அது எப்படியா…? தாய்மாமன் இல்லாம காதுகுத்துறது.  அப்புறம் அவர் வந்து கோச்சுக்குக்க போறாருயா…”  என மறுப்பு கூறினார்.

மற்றொருத்தரோ… “அவனவனுக்கு ஆயிரம் சோலியிருக்கு.  காதுகுத்தி முடிஞ்சுதுன்னா… சாப்பிட்டு கிளம்பறவங்க, கிளம்புவாங்க இல்லப்பா….” என்றார்.

Advertisement

அங்கிருந்த பெரியோர்களும்… அதை ஒத்து வேல்முருகனின் முகத்தையே பார்க்க  ஆரம்பித்து விட்டனர்.

Advertisement

மீனாவுக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது.  தன்னால்தானே இத்தனையும் என்று மனது கிடந்து தவித்தது… அவருக்கு.

வேல்முருகனுக்கும் வேறு வழிதெரியவில்லை.  நல்ல நேரத்தில் குழந்தைக்கு காதுகுத்த வேண்டும் என்பதாலும்… அதற்குமேல் யாரையும் காக்க வைத்து சமாளிக்க முடியாது என்பதாலும்… பானுவின் புருஷன் மடியிலேயே குழந்தையை உட்கார வைத்து காதுகுத்தினார்கள்.

இவர்கள் காது குத்தி முடிப்பதற்கும், செல்வதுரை வந்து சேருவதற்கும் சரியாக இருந்தது.  கிட்டத்தட்ட அவர் இங்கிருந்து சென்று வர இரண்டு மணிநேரத்திற்கு மேல் ஆகியிருந்தது.

Advertisement

கோவிலுக்குள் வந்து பார்த்த செல்வதுரைக்கு ஆத்திரம் கட்டுக் கடங்காமல் எழுந்தது.  இத்தனை நேரம் அவர் பட்ட அவஸ்தையினால் ஏற்பட்டிருந்த எரிச்சல், முக்கியமான தருணத்தில் இங்கிருக்க முடியவில்லையே என்ற தவிப்பு, ஆதங்கம் எல்லாம் சேர்ந்து கோவமாக உருமாறியிருந்தது.  அவர் வந்த நேரத்திற்கு குழந்தைக்கு காது குத்தி முடித்திருந்ததை கண்டவுடன் உள்ளுக்குள் குபுகுபுவென்று பொங்கிய ஆத்திரத்தில் மீனாவின் கன்னத்தில் ஓங்கிவிட்டார் ஒரு அறை.

திருமணமாகிய இத்தனை வருடங்களில் முதல் முறையாக கணவனிடமிருந்து வாங்கிய அடியில் பேதலித்து நின்றுவிட்டார் மீனா.  அதுவும் இத்தனை பேர் முன்னிலையில் செல்வதுரை அவரை அடித்ததும் அவமானம் பிடுங்கி தின்றது அவரை.  வாய் திறந்து ஏதும் பேச முடியாமல் கண்ணீருடன் கன்னத்தில் கைவைத்து நின்றுவிட்டார் மீனா.

அங்கிருந்த உறவினரில் ஒருவர் செல்வதுரையிடம், “ஏய் இந்தாப்பா… வந்ததும் வராததுமா… அந்த பிள்ளைய போட்டு அடிக்கிறே. அது என்னய்யா… பண்ணிச்சு” என்று சத்தமிட்டார்.

யாராவது பேசமாட்டார்களா என எதிர்பார்த்தவர் போல… அங்கிருந்தவர்களிடம் சத்தம் போட ஆரம்பித்துவிட்டார் செல்வதுரை.  “எப்படி தாய்மாமன் நானிருக்கும் போது… நீங்க யாரோ ஒருத்தர் மடில உட்கார வச்சு, மொட்டை அடிச்சு… காது குத்துவீங்க?”

“சரி மொட்டைதான் அடிச்சீங்க….. காது குத்தறதுக்காவது எனக்காக வெயிட் பண்ணியிருக்கலாமில்ல.  அப்ப தாய்மாமன்னு எனக்கு என்ன மரியாதை…..?” என கத்த ஆரம்பித்துவிட்டார்.

அங்கிருந்த பெரியவர்கள் சமாதானமாக… எத்தனை எடுத்து சொல்லியும் அவரது கோவம் தணியவில்லை.  வேல்முருகனும் வந்து அவரது கையைப் பிடித்து நடந்ததை விளக்கி கூறினார்.  ஆனால் செல்வதுரை யார் சொல்லியும் அடங்கவில்லை.  அவருக்கான மரியாதையை கொடுக்கவில்லை என ஆத்திரப்பட்டார் செல்வதுரை.  தாய்மாமனுக்கான உரிமையும்…. மரியாதையும்… பறிபோனதுபோல அவருக்கு அவமானமாக…. இருந்தது.  அதை அவர் கௌரவக் குறைச்சலாக நினைத்து ஆங்காரப்பட்டார்.

சுற்றி இருந்தவர்கள் எல்லாம் அங்கிருந்த நிலைமையை பொறுமையாக எடுத்து சொல்லிப்பார்த்தும் செல்வதுரை சமாதானமாகாமல் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து வேல்முருகனுக்கு எரிச்சல் வந்தது.

வேலு, “நியாயமா….. நாந்தான் மச்சான் உங்க மேல கோவப்படனும்.  யாராவது இப்படிப்பட்ட முக்கியமான நேரத்துல… இந்தமாதிரி சொல்லாம கொள்ளாம போவாங்களா….?”

“நீங்க என்ன ஒன்னும் தெரியாதவரா….?  உங்க மடிலதான் உட்கார வச்சு மொட்டை அடிச்சு காதுகுத்தனும்னு தெரியாதா….?  அட்லீஸ்ட் போனவர்…., என்கிட்ட சொல்லிட்டாவது போனீங்களா….?”

“வேற ஏதாவது அரேன்ஜ்மென்ட் பண்ணியிருப்பேன்.  இல்ல யாரையாவது விட்டு எடுத்துட்டு வர சொல்லியிருப்பேன்.  இதெல்லாம் வீட்டுக்கு போய்கூட செஞ்சிருக்கலாமில்ல.  எது முக்கியமோ… அதுக்கு இம்பார்ட்டன்ஸ் குடுக்காம…, நீங்க பாட்டுக்கு சொல்லாம கொள்ளாம போனதும் இல்லாம, இப்ப வந்து எங்களை குத்தம் சொல்லி, சண்டை போட்டுட்டு இருக்கீங்க”.

“தப்பு உங்க பேர்லதான் மச்சான்.  இங்கயிருந்து சொல்லாம போனதுனாலதான் இவ்வளவும்.  தப்ப உங்க பேர்ல வச்சிட்டு, வீணா அவங்களை பேசாதீங்க….. விசேஷத்துக்குன்னு வந்தவங்க எவ்வளவு நேரம் காத்துட்டு இருப்பாங்க…..?” என அவர் பக்க உறவுகளுக்கு ஆதரவாக வேல்முருகன் பேச ஆரம்பிக்க, இருவருக்குள் வாக்குவாதம் முத்தி சண்டை பெரிதானது.  கைகலப்பு மட்டும்தான் நடக்கவில்லை.  அந்த அளவு இருவருக்குக்குள் வார்த்தை தடித்திருந்தது.

இதில் ரோகிணியும்….. மீனாவும்…. அடுத்து என்ன நடக்குமோ… என பீதியுடன் நின்றிருந்தனர்.

ரோகிணி வந்து அண்ணனின் கையைப் பிடித்து பொறுமையாக இருக்குமாறு சமாதானப்படுத்தினாள்.  ஆனால் செல்வதுரையின் காதில் எந்த சமாதானமும் ஏறவில்லை.  தன்னை மதிக்கவில்லை, எல்லாரும் சேர்ந்து, தன்னை அவமானப்படுத்தி விட்டதாக நினைத்து, சண்டை போட்டு கோவித்துகொண்டு, மீனாவை அழைத்துகொண்டு சென்றுவிட்டார்.  அடுத்து எதற்கும் தங்கையின் வீட்டிற்கு வரவில்லை. எந்த தொடர்பும் வைத்து கொள்ளவில்லை அவர்களுடன்.  அந்த சம்பவத்தோடு அவர்களுக்குகிடையேயான உறவு முறிந்திருந்தது.

திரும்ப நீண்ட காலத்திற்கு பிறகு,  தனது பெரிய மகன் கார்த்திக் கல்யாணத்தின் போதுதான் வந்து முறைப்படி பத்திரிக்கை வைத்து தங்கை குடும்பத்தை அழைப்பு விடுத்து சென்றனர் செல்வதுரையும் மீனாவும்..  ஆனால் வேல்முருகன் வீட்டிலிருந்து யாரும் திருமணத்திற்கு செல்லவில்லை.

அஞ்சனா சடங்கிற்குகூட தாய்மாமனான செல்வதுரைக்கு சொல்லவில்லை.வேல்முருகன்.  லஷ்மிகூட வேல்முருகனிடம் சொல்லிப் பார்த்தார்.   தாய்மாமனுக்கு சொல்லனும்….பா.  ஆயிரம் கோவம் இருந்தாலும்….. இதுக்கு கண்டிப்பா சொல்லனும் என சொல்லிப்பார்த்தார் மகனிடம்.  ஆனால் வேல்முருகன் பிடிவாதமாக மறுத்துவிட்டார்.  அவருக்கு அஞ்சனாவிற்கு காதுகுத்தின போது செல்வதுரை பேசிச் சென்றதை மறக்க முடியவில்லை.  ஆதலால் பிடிவாதமாக மறுத்துவிட்டார்.

ரோகிணிக்கு மனதில் பிறந்த வீட்டினை கூப்பிடவேண்டும் என்ற ஆசை இருந்தாலும், கணவருக்கு பயந்து எதுவும் பேசவில்லை.

இத்தனை வருடங்கள் கழித்து இன்றுதான் செல்வதுரையே தணிந்து மீனாவை அழைத்துகொண்டு வந்து சம்மந்தம் பேச வந்திருந்தார்.  அதுவும் நிறைவேறவில்லையே…… என மனதிலேயே வருந்திக் கொண்டிருந்தார் ரோகிணி.

வேலு, “ரோகிணி…”

பின்பக்கமாக… காதுக்கு அருகிலிருந்து, கணவரது குரல் கேட்கவும் தூக்கிவாரிப் போட்டு பயத்துடன் நெஞ்சில் கையை வைத்து திரும்பினார்.

“எந்த உலகத்துல இருக்க…..?  எத்தனை தடவை கூப்பிடறது….?  சாப்பாடு ரெடியா….?”

“ஹ்ம்ம்….. ஆச்சுங்க.  நீங்க போய் உட்காருங்க.  நான் எடுத்துட்டு வரேன்”.

“சீக்கிரம் வா….. மில்லுக்கு கிளம்பனும்.  வேலையிருக்கு……” என டைனிங் டேபிளில் சென்று அமர்ந்தார்.

———————

செல்வதுரை வீட்டில் இரவு சாப்பாடு முடிந்து அனைவரும் ஹாலில் அமர்ந்து கொண்டிருந்தனர்.

கார்த்திக், அத்தை வீட்டுக்கு போனீங்களே என்னாச்சுப்பா….?  அவங்க என்ன சொன்னாங்க…..?

மீனாவும் அங்குதான் இருந்தார்.  செல்வதுரை ஏதும் பேசாமல் மௌனமாக அமர்ந்திருந்தார்.

விவேக், “என்னாச்சும்மா…… போய் வந்ததுல இருந்து இரண்டு பேரும் வாயே திறக்க மாட்டேன்றீங்க….”.

மீனா, “அவங்களுக்கு பொண்ணுதர இஷ்டம் இல்லடா…”

விவேக், “ஏன்….? என்னாச்சு…..ம்மா….?”

கார்த்திக், “அங்க என்னதான்….ம்மா…. நடந்தது.  விவரமா…. சொல்லுங் களேன்”.

மீனா, “செல்வதுரையை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவர், அவங்க பொண்ணுக்கு, இப்ப கல்யாணம் பண்ற ஐடியா…. இல்லன்னு சொல்றாங்க….டா….”

“எனக்கென்னவோ அவங்களுக்கு இஷ்டம் இல்லைன்னு தோணுது.  அதான் அந்த அண்ணன் அதையும்… இதையும்… காரணமா சொல்லி மழுப்பறாங்க”.

காஞ்சனா, “அப்படி என்ன காரணம் சொன்னாங்க…. த்தை….”

மீனா, “அவங்க பொண்ணு வேலைக்கு போகனும்னு ஆசைப்படறாளாம்.  அதுமட்டுமில்லாம அவளுக்கு தொழில் பண்ற மாப்பிள்ளை எல்லாம் வேணாமாம்.  வேலைக்கு போற மாப்பிள்ளைதான் வேணுமாம்.  கல்யாணத்துக்கு அப்புறமும் வேலைக்கு போவாளாம்…..  இன்னும் என்னன்னவோ… காரணம் சொல்றாங்க”.

“எனக்கென்னவோ…. அவருக்கு நம்ம வீட்டுல…, அவர் பொண்ணை கட்டி குடுக்க விருப்பம் இல்லைன்னுதான் தோணுது.  வேணாம்னு சொல்லதான் இதெல்லாம் காரணமா அடுக்கிட்டிருக்காரு… போல” என கணவனை பார்த்தார் ஓர விழியால்.

செல்வதுரை மீனாவை முறைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.  மீனா அதை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.  மீனாவும் திரும்ப பதில் பார்வை பார்த்து… திரும்பிக் கொண்டார்.

கீர்த்தி, காஞ்சனாவிடம் “க்கா… அங்க பாருங்க… மாமா அத்தைய முறைக்கிறத” என காதில் கிசுகிசுத்தாள்.

காஞ்சனா, “ஸ்சு…… சும்மா…யிரு….” என அவளை அதட்டினாள்  யாரும் அறியாமல்.

கீர்த்தி, “அங்க போய் வந்ததிலிருந்து இரண்டு பேரும் இப்படிதான் இருக்காங்க.  எனக்கென்னவோ இரண்டு பேருக்குள்ள முட்டிக்குச்சுன்னு தோணுது….”

காஞ்சனா, “சும்மாயிருக்கமாட்டியா நீ….”

“ஹி.. ஹி… நாட்டு நடப்ப சொன்னேன்.  உண்மைய சொன்னா ஒருத்தருக்கும் பிடிக்காதே…”

“அப்படியா…?  இரு அத்தைய கூப்பிடறேன்.  அவங்ககிட்ட சொல்லு…”

“ஐ..யோ ஏன் இந்த கொலவெறி….?”

“அப்ப வாய மூடிட்டு உட்காரு”.

தேவநாதனும் அங்கேதான் உட்கார்ந்து கொண்டிருந்தான்.  அவனது மடியில் கார்த்திக் காஞ்சனாவின் மகள் தீபிகா உட்கார்ந்து சித்தப்பாவுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.  தேவநாதன் தீபிகாவுடன் விளையாடிக் கொண்டிருந்தாலும் அவனது கவனம் எல்லாம் இவர்கள் பேசுவதில்தான் இருந்தது.

பெண் தர சம்மதிக்கவில்லை என தெரிந்ததும்……, ஏனோ மனதின் ஓரத்தில் ஒரு ஏமாற்றம் வந்து நின்றது.  அத்தை குடும்பத்தையோ, அஞ்சனாவைப் பற்றியோ ஏதும் தெரியாது.  அவளைப் பற்றின எந்த எண்ணமும் இல்லை தந்தை அவனிடம் பேசும்வரை.

தாயும் தந்தையும் ரோகிணி வீட்டுக்கு அஞ்சனாவை அவனுக்காக பெண்கேட்க சென்றதிலிருந்து… சின்னதாக மனதின் ஓரத்தில் ஒரு எதிர்பார்ப்பு  துளிர்விட்டிருந்தது.

பெண்தர மறுத்துவிட்டார்கள் என மீனா சொன்னதை கேட்டு மனதிற்குள்  ஒரு சுணக்கம் வந்து உட்கார்ந்துகொண்டது.

ஏன்…?  என்ன ரீசன்…? என மண்டை குழம்பியது அவனுக்கு.  குடும்ப பகைதான் முக்கிய காரணமாக இருக்கும் என தெரிந்தாலும், உள்ளுக்குள் அதை ஏற்று மனதை சமன்படுத்த இயலவில்லை அவனால்.

சாதாரணமாக இருந்தவரை ஒன்றும் தெரியவில்லை.  இப்போது தாயும் தந்தையும் சென்று தனக்காக அஞ்சனாவை பெண் கேட்டு அவர்கள் வீட்டிலிருந்து மறுத்திருந்தது, அவன் ஈகோவை தொட்டிருந்தது.

எப்பவுமே மறுக்கபடும் விஷயங்களுக்கு தானே மனம் ஏங்கும்.  அதுபோல இதுவரை தெளிந்த நீரோடைபோல் இருந்த அவன் மனதில் ஒரு கல் விட்டு எறிந்தது போலானது இந்த செய்கை.  அப்படியென்ன அவள் உசத்தி… என்ற வீம்பு வந்து உட்கார்ந்துகொண்டது அவனது மனதில்.

மீனா சொன்னது நம்ம குடும்பத்துல அவங்க பொண்ண குடுக்க விரும்பல என்று, ஆனால் அவனுக்கோ அவனை ஏற்க மறுத்துவிட்டது போல ஒரு ஆதங்கம்… பீலிங்… மனதில்.

புத்தி அவனுக்கு புரிய வைத்தாலும், மனம் அதை ஏற்க மறுத்து வாடியது.

இதுவரை பெண்களைப் பற்றின எண்ணங்கள் பெரிதாக மனதில் எழுந்ததில்லை.  நேற்று தந்தை அவனிடம் பேசியதிலிருந்து, மனதின் அடியிலிருந்து் ஒரு சின்ன எதிர்பார்ப்பு இருக்கதான் செய்தது.  மனதை அரித்த இந்த உணர்வுகளை நினைத்து அவனுக்கு வித்தியாசமாகவும்  இருந்தது.

ஒரு தடவை தானடா….. அவளை நேர்ல பார்த்த….. அதுவும் இரண்டு நிமிஷம் பார்த்திருப்பியா….? அதுக்கேவா… என்னடா…. அத்தை பொண்ணே ரத்தினமேன்னு காதல்ல விழுந்துட்டியா….. என அவன் மனமே அவனை கிண்டல் செய்துகொண்டிருந்தது.

ச்ச ச்ச….. லவ்…… லாம் இல்ல.  அப்பா பேசினதவச்சு ஜஸ்ட் ஒரு இன்ட்ரஸ்ட்… அவ்வளவுதான்…… வேற ஒன்னும் இல்லை……… என அவனை…, அவனே சமாதானம் செய்ய முயன்றுகொண்டிருந்தான்.

——————

சென்னையில் இருந்த அந்த பிரம்மாண்ட மண்டபத்திற்குள் கார் நுழைந்தது.

அஞ்சனா, “ப்பாஹ்……… என்ன …ம்மா… மண்டபமே இவ்வளவு பெரிசாயிருக்கு.  நல்ல வெயிட்டான பேமிலியா…..” என கிண்டல் செய்தாள் அஞ்சனா..

ரோகிணி, “நமக்கு நெருங்கின சொந்தம் தான்டா….  என்னோட சித்தப்பா பொண்ணோட பையனுக்குதான் கல்யாணம்…..”

“நான் அவங்களலாம் பார்த்ததே இல்லையே……?”

“ம்ம்… எங்க வீட்டுக்கு போகவர இருந்திருந்தா…… அவங்கள எல்லாம் உனக்கு தெரிஞ்சிருக்கும்.  எங்க எனக்குதான் அந்த குடுப்பினையே இல்லையே…”

“இப்ப மட்டும்… அப்பா எப்படி விட்டாராம்……?”

“இவங்க பொண்ணு எடுத்துருக்கறது உங்க அப்பாவோட நெருங்கின சொந்தத்துல…… அதனாலதான் இந்த கல்யாணத்துக்கு உங்கப்பாவே போய்வர சொல்லிருக்காரு……”

“ஓஹ்… அதான பாத்தேன்.  என்னடா……? அப்பா… இப்படி வலியக்க நம்மள அனுப்பி வைக்கிறாரேன்னு.  எனக்கு டவுட்டா இருந்தது.  பேசாம அப்பாவே வந்திருக்கலாம்”.

“ஏன்டா…, பிடிக்கலையா…?”

“ம்ப்ச்….. எனக்கு இங்க யாரை தெரியும்.  நான் பாட்டுக்கு பே…ன்னு முழிச்சுட்டு நிக்கனும்.  நைட்டே ரிசப்ஷன் முடிஞ்சு கிளம்பிடலாம்னு பார்த்தா…. அதுக்கும் அப்பா தடா போட்டுட்டாரு…. காலையில கல்யாணம் அட்டென்ட் பண்ணிட்டு வாங்கன்னு.  இல்லைனா நைட்டே எஸ்கேப் ஆகியிருக்கலாம்”.

“நமக்கு ரொம்ப முக்கியமானவங்க கல்யாணம் அஞ்சு.  இது மாதிரி நாளு பங்ஷனுக்கு வந்து போனாதான நம்ம சொந்தக்காரங்கள எல்லாம் தெரிஞ்சுக்க முடியும்”.

“ம்ப்ச் போ…மா….” என  சிரித்துக்கொண்டாள் அஞ்சனா.

வேல்முருகன் வற்புறுத்திதான் அவளை இந்த திருமணத்திற்கு அனுப்பி வைத்திருந்தார்.  முதலில் அவரும் ரோகிணியும் திருமணத்திற்கு கிளம்பி வருவதாகத்தான் இருந்தது.  திடீரென தொழில் விஷயமாக அவர் வெளியூர் செல்லும் வேலை வந்திருந்ததால், இவர்களை அனுப்பி வைத்திருந்தார்.

காரிலிருந்து இறங்கிய அஞ்சனா……, டிரைவரைப் பார்த்து..  “ண்ணா… பேக்லாம் கார்லேயே இருக்கட்டும்.  நான் போன் பண்ணதுக்கு அப்புறம் கொண்டு வாங்க…” என்றாள்.

“சரி….ம்மா…..” என தலையசைத்தார் டிரைவர்.

ரோகிணி மகளின் கையைப் பற்றிக்கொண்டு மெல்ல திருமண மண்டபத்தின் உள்ளே சென்றார்.  ரோகிணியின் சித்தி பெண், மாப்பிள்ளையின் அம்மா இவர்களைப் பார்த்ததும் ஓடி வந்து ரோகிணியைக் கட்டிக்கொண்டார் சந்தோஷத்துடன்.

எத்தனை வருஷம் ஆச்சு… உன்னப்பார்த்து…?  எங்களை எல்லாம் மறந்தே போயிட்டியா….? எப்படியிருக்க…?  இது யாரு…?  உன் பொண்ணா…? வா…ம்மா…?  என்ன யார்னு தெரியுதா…? என முச்சுவிடாமல் பேசிக்கொண்டே அவர்கள் உறவினர்கள் எல்லாம் உட்கார்ந்திருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றிருந்தார்.

நீண்ட வருடங்கள் கழித்து, தாய் வீட்டு உறவினர்களை பார்த்த சந்தோஷத்தில் ரோகிணி எல்லோருடனும் பேச ஆரம்பித்துவிட்டார்.  இவர்களைப் பார்த்ததும் செல்வதுரையும் மீனாவும் வந்து ரோகிணியின் பக்கத்தில் உட்கார்ந்துவிட்டனர்.

அண்ணனைக் கண்டதும்…  ண்ணே… என்று பாசமாக அவரது கையைக் பிடித்துகொண்டார் ரோகிணி.  அஞ்சனாவுக்கு இதையெல்லாம் பார்த்து சங்கோஜமாக இருந்தது.

எல்லாம் இதுவரை பார்த்து பழகியிராத புதிய உறவுகள்.  கூச்சத்துடன்  ரோகிணியின் பக்கத்தில் இருந்த காலியிருக்கையில் அமர்ந்தாள்.  பழக்கமில்லாத அவர்களின் பக்கத்தில் வந்தமர்ந்தது ஒருமாதிரியாக இருந்தது அவளுக்கு.  வேறுவழியில்லை, அமைதியாக எல்லோரையும் வேடிக்கை பார்த்துகொண்டு சிரிப்பை முகத்தில் ஒட்ட வைத்துகொண்டு உட்கார்ந்திருந்தாள்.

செல்வதுரைக்கு எந்த தயக்கமும் இல்லை போல.  தங்கையுடன் சகஜமாக பேசிக்கொண்டிருந்தார்.  அஞ்சனாவிடமும் எந்த தயக்கமும் இல்லாமல் பேசினார்.  என்னவோ இத்தனை நாள் நெருங்கி பழகியிருந்தது போல் இருந்தது அவரது பேச்சு தங்கை மகளிடம்.

அஞ்சனாவுக்குதான் சங்கோஜமாக இருந்தது. முகத்தை திருப்பவும் முடியவில்லை.  என்னடா…. இது?  இவர் என்னமோ….. இத்தனை நாள் கூடவே இருந்து ஒட்டி உறவாடன மாதிரி…  ஈசியா  பேசறாரு… என நினைக்கும்படி இருந்தது அவரது செய்கை.

செல்வதுரை மீனா தேவநாதன் மூவரும் திருமணத்திற்கு வந்திருந்தனர்.  தேவநாதனுக்கு சென்னையில் கொஞ்சம் அவனுடைய தொழில் சம்மந்தமான சப்ளையர்ஸை பார்க்க வேண்டியிருந்ததால்…. அவனுடைய காரிலேயே தாயையும் தந்தையையும் சென்னைக்கு திருமணத்திற்கு அழைத்து வந்திருந்தான்.

இவர்களை கொண்டுவந்து திருமண மண்டபத்தில் விட்டவன் நேராக அவனது வேலையை பார்த்துவர சென்றிருந்தான்.  அதுமட்டுமில்லாமல் கல்யாண மாப்பிள்ளையும் அவனும் ஒத்த வயதை உடையவர்கள்.  பள்ளியில் ஒன்றாக படித்தவர்களும்கூட.  நெருங்கிய நண்பர்கள் என்றுகூட சொல்லலாம்.   நெருக்கமும் அதிகம்.  ஆதலால் மாப்பிள்ளைக்காக வேண்டி அவனும் இந்த திருமணத்திற்கு வந்திருந்தான்.

மீனா ரோகிணியிடம் பேசிக் கொண்டிருந்தாலும் கண்கள் நாத்தனாரின் மகள் அஞ்சனாவின் மேல்தான்.

அவரது மனம் மருமகளை மகனுடன் ஒப்பிட்டு, பத்துக்கு எத்தனை தேரும் என பொருத்தம் பார்த்துக் கொண்டிருந்தது போல.  நாத்தனாரின் பெண்ணை மகனுக்கு கட்ட சுணக்கமாக இருந்தாலும்.. மனம் தன்போல்  மகனுடன்  சேர்த்துவைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்தது.

ரிசப்ஷன் முடிந்து எல்லோரும் சாப்பி்ட்டு உறங்க சென்றிருந்தனர்.  வந்திருந்தவர்களுக்கு எல்லாம் திருமண மண்டபத்தின் மேலேயே தங்குவதற்காக அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

செல்வதுரை…, மீனா…., ரோகிணி….. இன்னும் சிலர்…… உறங்கச் செல்லாமல் உறவுகளுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.  ரோகிணி வெகு வருடங்கள் கழித்து பிறந்த வீட்டு மக்களை பார்த்ததால் அவருக்கு பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தது போல.

அஞ்சனாவுக்கு நிஷாவிடமிருந்து போன் வரவே போனை எடுத்துகொண்டு ரோகிணியிடம் சொல்லிக்கொண்டு மண்டபத்திற்கு வெளியே இருந்த கார் பார்க்கிங்கில் நின்று பேசிக்கொண்டிருந்தாள்.

மண்டபத்திற்கு முன்புறம் அழகான வெண்பளிங்கு கல்லால் செய்த நீரூற்றும்… அதை சுற்றி வண்ண வண்ண மலர்கள் பூத்து குலுங்கும் பூந்தொட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன.

மண்டபத்தின் பக்கவாட்டில் கார்பார்க்கிங்கிற்கு என நீளமாக காலியிடம் விடப்பட்டு, அதன் இருபக்கத்திலும் பூச்செடிகளும், மரங்களும் இடம் பெற்றிருந்தன.

அதனையெல்லாம் பார்த்து ரசித்துக்கொண்டே, நடைபயின்றவள் ஒரு காரின் மீது வந்து வாகாக சாய்ந்து நின்று நிஷாவிடம் போன் பேசிக் கொண்டிருந்தாள்.

காரை பார்க் செய்து இறங்கிய தேவநாதன், இவளைப் பார்த்து ஆச்சர்யபட்டுக் கொண்டே இவளருகில் நடந்து வந்தான்.

 

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!