Skip to content
Post Views: 1,616
நினைவுகளின் சுழல் வாழ்க்கை முழுதும் ஒரு நிழலாய் தொடரும்.
மறக்க வேண்டியவற்றை மறக்க கூடாதென்ற பிடிவாத அழுத்தம் அவற்றிற்கு உண்டு.
Advertisement
“ஹாய் அங்கிள்.. இப்போ எப்படி இருக்கீங்க. அரவிந்த் சொல்லிட்டே இருந்தான். உங்களை வந்து பாக்க சொல்லி. இப்போதான் வர முடிஞ்சது” கண்கள் படபடக்க அவள் பேசும்போது இளம் வயது மாளவியை நினைவுப் படுத்தும் உருவத்தில் இருந்தாள் ராகா.
Advertisement
தடுமாற்றம் நெஞ்சில் வந்தது என்றால் வார்த்தைகளோ வெளிவருவதற்கே ஆயிரம் முறை யோசித்தது.
Advertisement
“அங்கிள். நான் உங்களை பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். பாஸ்ட்டை பத்தி கவலைப்படாதீங்க. சித்தப்பா எப்பவும் உங்களை ஒரு ஹீரோவா தான் பேசுவார். நீங்க மறுபடியும் ஒரு கிங்கா தான் வருவீங்கன்னு சொல்லிட்டே இருப்பார்.”
Advertisement
அந்த வார்த்தைகள் அவனின் அடியாழ நெஞ்சில் இருந்து தேவா மீதான நட்பை உருவி எடுத்தது.
“தேவா.. இப்போ எப்படி இருக்கார் மா..”
“யா. அவருக்கென்ன.. இன்னும் மாளவி அம்மாவை ஒரு பக்கமும் அவர் கம்பெனிஸை ஒரு பக்கமும் தாங்கி பிடிச்சிட்டு மேனேஜ் பண்றார். அதே ரொமான்டிக் மேன்.. என்ன கொஞ்சம் வயசாயிருச்சு உங்களை மாதிரி.”
“சிங்கங்களுக்கு வயசானாலும் சிங்கங்கிற தோரணை குறையாது ராகா.” அரவிந்த் சொல்லிக் கொண்டே அவளருகில் வந்து அமர்ந்தான். ராகா கண்களில் பளபளக்கும் சிரிப்பு. நொடிக்கொரு முறை அரவிந்த்தை காதலாக பார்த்தாள்.
இருவரையும் மாற்றி மாற்றி பார்த்தான் ஆதி.
ஆதியும் மாளவியும் போல அச்சில் வார்த்த உருவங்கள்.. நம் நிறைவேறாத ஆசை வேறு எங்கோ ஒரு பரிமாணத்தில், வேறு ஒரு உலகத்தில் நிறைவேறும்.. இதோ காலங்கள் கடந்து அது இங்கேயே நிறைவேறி நிரூபணம் ஆகிறது. பெருமூச்சு விட்டுக் கொண்டான் ஆதி.
“அங்கிள்.. நீங்க ஏதோ ஒரு பழைய ஆக்டரை நினைவுப்படுத்தறீங்க.. எனக்கு தான் சரியா சொல்ல தெரியல..”
“ஈசிட்..” அரவிந்த் ராகாவை பார்த்துக் கேட்டான். அதற்கும் ஒரு சிரிப்பு அவளிடம்.. ஆமோதித்து தலையாட்டினாள்.
எப்படி இவர்களால் எல்லாவற்றையும் மறந்து சிரிக்க முடிகிறது?. எதிரியாக நின்றவனை கைக்கொடுத்து காப்பாற்ற முடிகிறது?. போகிறபோக்கில் போய்த் தொலை என்று விட்டு விட முடிகிறது?. அடிப்படையில் இருந்து வந்த குணம்.. இருக்கும் ஒரு வாழ்க்கையில் எதையும் சிக்கலாக்கிக் கொள்ளாமல் பயணிக்க கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அவன் சிந்தை வெகு விரைவாக தேவா குடும்பத்தை சுற்றி வந்தது.
“மாமா. ராகா இப்போ எங்களோடவே இந்த சீசன் அசிஸ்டெண்ட் டைரக்டரா வர்க் பண்றா. அவளோட விஸ்காம் படிப்பு முடிஞ்சது இல்ல.” ஆதி ஆச்சர்யமாக புருவம் உயர்த்தி பார்த்தான்.
“ஓ.. நீ பாடறன்னு முன்ன அரவிந்த் சொன்ன ஞாபகம்.”
“அங்கிள். அம்மா கூட கச்சேரிக்கும் போவேன். ஆனா என்னை விட இப்போ ஸ்வரா தான் அம்மா மாதிரியே வந்துட்டா. எனக்கு என்னமோ ரியாலிட்டி ஷோஸ் மேல ஒரு இன்ட்ரெஸ்ட். அப்பா உனக்கு பிடிச்சதை செஞ்சுக்கன்னு சொல்லிட்டார்.”
“தேவா அப்பாவா.?” தேவாவை சுற்றி ஏன் மனம் சுழல்கிறது, அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது.
“ஹான். இல்ல அங்கிள். அவரை எப்பவும் சித்தப்பா தான் கூப்பிடுவேன். மாளவிம்மா மட்டும் தான் அம்மா. நந்தா அப்பாவை சொல்றேன்.”
ஒரு காலத்தில் கொலை வெறியுடன் அவனை பார்க்க துடித்ததை நினைத்து சிரிப்பு வந்தது ஆதிக்கு.
“என்ன அங்கிள் சிரிக்கறீங்க.”
“இல்லம்மா. உன் குடும்பத்துக்கும் எனக்கும் நிறைய ஃப்ளாஷ் பேக் இருக்கு. அதை நினைச்சேன்.. சிரிச்சேன்.”
“வாவ். எனக்கு உங்களை மாதிரி ஒருத்தரை வச்சு ஒரு சூப்பர் ஹீரோ கதை எழுதனும். எனக்கு நீங்க உங்க கதையை சொல்லுங்க. எழுதறேன்.”
“அதுக்கென்ன அடிக்கடி வாம்மா. சொல்றேன்.”
“அடிக்கடியா. கூடிய சீக்கிரம் இங்கேயே தான் இருக்க போறேன்.” அரவிந்ததை பார்த்து கண்ணடித்தாள்.
அரவிந்த்க்கு ஆதியை பார்க்க வெட்கமாக இருந்தது..
“சரி அங்கிள். கண்மணி அத்தையை பார்த்துட்டு கிளம்பறேன். மாளவிம்மா இன்னிக்கு சீக்கிரமா வர சொன்னாங்க.” ராகா கிளம்பினாள். ஆதிக்கு உதடு துடித்தது.
“ராகா. மாள்.. மாளவிகா எப்படி இருக்காங்க” அரவிந்த் அதிர்ந்தான். அவசரமாக கதவை திரும்பி பார்த்தான். அவன் எதற்கு பயந்தானோ அதே நடந்தது. கண்மணி நின்றிருந்தாள், காபி கோப்பைகளுடன்.. கண்களின் வெப்பம் அரவிந்த்க்கு உரைத்தது.
“நல்லா இருக்காங்க அங்கிள். அவங்களுக்கு உங்க மேல இருக்க வருத்தம் குறையல. தேவா சித்தப்பா உங்களை பத்தி பேச ஆரம்பிச்சாலே அமைதியாய்டுவாங்க.”
“ம்ம்.. நியாயம் தான் ராகா. மாளவி மன்னிச்சா தான் ஆச்சர்யம். எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா. அவங்ககிட்ட நானே நேரடியா மன்னிப்பு கேட்டேன்னு சொல்லு. முடிஞ்சா எல்லாத்தையும் மறந்திட சொல்லு.” அவன் குரல் உதறியது. கண்மணியிடம் அரவிந்த் பார்வையாலேயே கெஞ்சினான். கண்மணியின் தகிப்பு அடங்கியது. ஆனாலும் சந்தேக குறுகுறுப்பு அவள் உடலில் ஓடியது.
‘இதே போல் நம்ப வைத்து ஏமாற்ற இவருக்கு சொல்லியா தர வேண்டும்..’ ஆனாலும் அவள் உள் மனம் சிறிது சமாதானமடைந்தது. பட்ட அடி அவனுக்கு புத்தியை தந்திருக்க வேண்டுமே..
“எனக்கு ஆச்சர்யமா இருக்கு அங்கிள். உங்களையும் சித்தப்பாவையும் நினைச்சா...ஹ்ம்ம் இருதுருவம்.. இப்போவே டைட்டில் ரெடி. நான் எழுத ஆரம்பிச்சிடறேன்”
சிரிப்புடன் ஆமோதித்தான் ஆதி. ‘இளம் தலைமுறையினர் அதிவேகமாக எல்லாவற்றையும் சொல்லி, செய்து முடித்து விடுகிறார்கள்.
தயக்கம், யார் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம் ஏதும் இல்லாத, பாசாங்கற்ற வாழ்க்கை வாழ்கிறார்கள். தனக்கு பின் தான் எல்லாம்.. தனக்கு வேண்டியவை இவை தான்.. என்று தீர்மானமாக இருக்கிறார்கள்.’
நினைத்ததும் அவனுக்கு அவனையே திரும்பி பார்ப்பது போன்று தோன்றியது.
‘இப்படித்தானே நானும் இருந்தேன். இப்போது ஏன் இவ்வளவு குற்ற உணர்ச்சியில் மருகி, கண்மணியிடம் நேராக எல்லாவற்றையும் பேச முடியாது தயங்கி, எனக்குள்ளேயே எல்லாவற்றையும் அடக்கி.. ஆதி.. முழித்துக் கொள். உனக்காக நீ பேசவில்லையென்றால் வேறு யார் பேசுவார்கள்’? அழுத்தமாய் சொல்லிக் கொண்டான்.
கண்மணி எதுவும் பேசாமல் அவனருகில் காபியை வைத்து விட்டு ராகாவை அழைத்துக்கொண்டு சென்றாள்.
அரவிந்த் எழுந்திரிக்க பார்த்தான்.
“அரவிந்த்.. ராகாவும் நீயும் காதலிக்கறீங்களா?”
நேரடியான கேள்வியை எதிர்ப்பார்க்கவில்லை அரவிந்த்.
“மாமா.. அப்படி சொல்ல முடியாது. ராகா ப்ரப்போஸ் செஞ்சு ரெண்டு வருஷமாச்சு. அதுவும் அவ ஃபேமிலி முன்னாடியே, அவ்ளோ காதலோட சொன்னா. ஆனா நான் நட்புக்கும், காதலுக்கும் இடையில் தான் நிக்கறேன். பிடிச்சிருக்கு. ஆனா வாழ்க்கை முழுக்க அவளோட தான்னு இன்னும் ஒரு நம்பிக்கை வரல.
அதுவுமில்லாம நான் தனியா ஒரு மியூஸிஷியனா உருவாகனும். அதுதான் மைண்ட்ல ஓடுது. மாளவி அத்தையும் அதான் அட்வைஸ் பண்ணாங்க.. சேஸ் யுவர் ட்ரீம் பர்ஸ்ட்னு சொன்னாங்க. அப்பமும் அந்த ட்ரீம்க்கு துணையா உன் காதல் நின்னா அப்போ முடிவெடு. அவங்கதான் உன் வாழ்க்கை துணைன்னு.. எனக்கும் அதான் சரியா பட்டுச்சு .”
“ம்ம்.. கரெக்ட் தான். உங்க அம்மாக்கு தெரியுமா ராகா விஷயம்..”
“அம்மா உன் இஷ்டம்னு சொல்லிட்டாங்க மாமா.”
“சரி.. உனக்கு எப்போ எது தேவைன்னாலும் என்கிட்ட சொல்லு. உனக்காக நான் ராகா அப்பாட்ட பேசறேன்”
தலையை ஆட்டிவிட்டு கீழே இறங்கினான்.
மயில் ராவணன் அவரின் சகாக்களோடு வரவேற்பறையில் அமர்ந்திருந்தார்.
“அரவிந்த். அந்த பொண்ணு நீலகண்டன் பேத்தி தான.. இங்க எங்க வந்துட்டு போகுது?”
“அவ என் ப்ரெண்ட் தாத்தா. அதான் சும்மா மாமாவை பாக்க வந்தா..”
“ப்ரெண்ட் மட்டும் தானா. பாக்க அப்படி தெரியலையே. கல்யாணம் பண்ணிக்கனும்னா சொல்லு. தாத்தா உடனே பண்ணி வைக்கிறேன். அந்த நீலகண்டன் திரும்ப ஒரு முறை என் கால்ல விழுந்தா நல்லாத்தான் இருக்கும்.”
கூட இருந்த சகாக்கள் சிரித்தனர்.
கண்மணி மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தாள்.
“மாமா. அவன் இன்னும் சின்ன பையன் தான். அதுக்குள்ள எதுக்கு இப்படி பேசறீங்க.? அதுவும் இல்லாம நீலகண்டன் சார் யார் கால்லயும் எப்பவும் விழனும்னு அவருக்கு அவசியம் இல்ல.”
“உனக்கு தெரியாது. அவன் என்னை எவ்ளோ அசிங்கப்படுத்தினான்னு. அதுக்கு மேல அவன் பொண்ணு. இப்ப கடவுளா பாத்து அவங்க வீட்டுப்பொண்ணை நம்ம பையன் பின்னாடி சுத்த வச்சிருக்கார். இந்த தடவை நான் சும்மா விட மாட்டேன்.”
“மாமா. இது என் பையன் விஷயம். நாங்க தலையிட்டா போதும். நீங்க அவனுக்காக எதாவது செய்ய போய் திரும்ப உங்க பையன் நிலைமைக்கு அரவிந்த்தை கொண்டு வந்திடாதீங்க.”
“ஹான்.. எனக்கு இல்லாத உரிமை தான் அப்படியே உங்க ரெண்டு பேருக்கும் வந்திடுச்சு. அவன் என் பொண்ணோட பையன். அவன் அப்பன் ஆத்தா இல்லாம நிக்கறதுக்கு காரணமே உன் புருஷன் தான். அரவிந்த் விஷயத்தில் நீங்க தலையிடாம இருங்க. நான் பாத்துக்கிறேன்.”
“மாமா. கவனமா பேசுங்க. யார் முன்னாடி என்ன வார்த்தை பேசறீங்க? உங்க அரசியலை என் பையன் வாழ்க்கையில் கொண்டு வராதீங்க. ஏற்கனவே அந்த திமிர்ல தான் உங்க பையன் வீணா போனார். என் வாழ்க்கையும் வீணா போச்சு.”
“நான் வீணாக்கினேனா. என் பேச்சை கேட்டு அப்போவே அந்த மாளவிகாவை தூக்கிட்டு வந்திருந்தா அவன் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் தெரியுமா? அவளுக்காக உன்னை கல்யாணம் பண்ணனும்னு நினைச்சான் பாரு.. அதான் நடைபிணமா ஆயிட்டான்.. யாருக்கும் எந்த உபயோகமும் அவனால் இல்ல. இருந்தும் இல்லாத மாதிரி..எதுக்கு இந்த வாழ்க்கை. பணம் தான் தண்ணியா போகுது .. அப்பவே அந்த ஆக்ஸிடெண்ட்ல போயிருந்தாக்கூட ஸ்வாதியோட இன்னொன்னுன்னு போயிருப்பேன்”
“மாமா.. போதும். அவர் ஒன்னும் ஒன்னுமில்லாம போகல. இன்னிக்கும் அவர் நினைச்சா எந்த சரித்திரத்தையும் மாத்தி எழுதி முடியும். அந்த தெம்பு அவர்கிட்ட இருக்கு. அவர் உங்களுக்கும் உங்க பணத்துக்கும் என்னிக்கும் பாரமா இல்ல. அவருக்கு இந்த இரண்டு வருஷமா என் பணத்தில் இருந்து தான் எல்லா செலவையும் பாக்கறேன். அவர் இன்னிக்கு நல்லா ஆயிடுவார் நாளைக்கு நல்லா ஆயிடுவார்னு ஒவ்வொரு நாளையும் அந்த நம்பிக்கையில் தான் நான் ஓட்டறேன். இன்னொரு முறை உங்க வாயால அவருக்கு எதுவும் ஆகணும்னு சொல்லாதீங்க. உங்களுக்கு உங்க பதவி போச்சுன்னு தானே கவலை. அவர் உங்களை திரும்பவும் அதே பதவில உட்கார வைப்பார். ஆனா அப்போ உங்க வாயால அவரை உங்க பிள்ளைன்னு சொல்லாதீங்க. அப்பவும் அவர் என் புருஷன் தான்.”
சுற்றிலும் இருந்தவர்கள் வாயடைத்து போயினர். மயில் ராவணனுக்கோ மருமகள் அப்படி பேசியது தலைக்குனிவாக இருந்தது.
அரவிந்த் கண்மணியை பெருமையாக பார்த்தான். அவன் கண்ணில் நீராடியது. துடைத்து நிமிர்ந்து பார்த்தவனுக்கு ஆதி மாடியில் சுவற்றை பிடித்தபடி நிற்பது தெரிந்தது.
வாழ்வா சாவா என்று அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனுக்கு, உயிர் பிழைப்பதற்கான சஞ்சீவனியை கொடுத்தது போல் இருந்தது கண்மணியின் பேச்சு. அவன் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.
இத்தனை காதலை சுமந்தவளுக்கு தான் ஒரு சுமையாக மட்டுமே இருந்திருக்கிறோம் என்ற அவமானம் வேறு பிடுங்கித் தின்றது. கண்மணி அவன் மனதில் நங்கூரமிட்டு அமர்ந்தாள்.
ஆதியின் மனைவி என்று இன்று அனைவருக்கும் அவள் நிரூபித்து இருக்கிறாள். அது ஒன்று போதாதா. யாருக்கு எதிர்த்து பேச தைரியம் வரும்..?
அரவிந்த்க்கு கண்மணியும், ஆதியும் விரைவில் ஒன்றாக சேர்வார்கள் என்ற நம்பிக்கை வந்தது.
“அம்மா.. வாங்க போதும். இவங்ககிட்ட இனி நீங்க எதுவும் பேச வேண்டாம்” என்று அவளை அமைதியாக மாடிக்கு அழைத்துச் சென்றான்.
அவளறை ஆதியின் அறைக்கு அருகில் தான் இருந்தது. ஆனால் நிதானமில்லாமல் மூச்சு வாங்கி கொண்டு இருந்தவளை அப்படியே ஆதி அறைக்கு அழைத்துச் சென்றான் அரவிந்த். அவர்கள் வருவதை பார்த்து விட்டு ஆதி அவனது படுக்கைக்கு மெல்ல நகர்ந்தான்.
மெல்ல ஆதியின் படுக்கை அருகில் இருந்த சோஃபாவில் அவளை அமர வைத்து விட்டு ஆதியை பார்த்து ஒரு தலையசைப்பை தந்து விட்டு வெளியேறினான் அரவிந்த்.
இரு கைகளையும் சோஃபாவில் ஊன்றி இருந்தவளுக்கு ஆத்திரம் மட்டும் அடங்கவே இல்லை.
மெல்ல அவளின் தோளை பிடித்து அவளருகில் அமர்ந்தான் ஆதி. கால் வலி பின்னி எடுத்தது. ஆனால் மனதில் சுகமான காதல் ராகம் அல்லவா இசைத்துக் கொண்டிருக்கிறது. யானை பலத்தை அது தந்துக் கொண்டிருந்தது.
“கண்மணி..” அவளை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். அவனின் அருகாமை இப்போது கண்மணிக்கு பெரும் பலம். கோபமெல்லாம் காற்றில் கரைந்தது. அவனின் மார்பு மேல் முகம் புதைத்தவள் அழத்தொடங்கினாள். மெல்ல நிமிர்த்தி அவள் கண்ணீரை துடைத்தான்.
“கண்மணி… இப்போ எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா?. ஒரு மனுஷனுக்காக பேச, சண்டை போட ஒருத்தர் இருந்தாலே போதும். எந்த துன்பம்னாலும் பெருசா தெரியாது..எனக்கு போதும்.. நிறைவாயிடுச்சு மனசு.. ஆனா இன்னிக்கு எனக்காக பேசின இல்ல.. இந்த பேச்சுக்கு சுத்தமா அருகதை இல்லாதவன் மா நான். அப்பா சொன்ன மாதிரி ஒன்னுத்துக்கும் பிரயோஜனம் இல்லாத ஜடம் நான். உனக்கோ, நம்ம பிள்ளைகளுக்கோ என்னால் அசிங்கம்தானே தவிர வேற ஒன்னும் இல்ல.. எனக்காக நீ அப்படி கத்தி உன் உடம்பை கெடுத்துக்கனுமா..?”
“ஏன் உங்கப்பா பேசினது பத்தாது நீங்க வேற பேசி என்னை சாகடிக்கறீங்களா.. வாயை மூடுங்க. உங்க தகுதி என்னன்னு எனக்கு தெரிஞ்சா போதும். உங்க பாசம் என்னன்னு பசங்களுக்கு தெரிஞசதால தான் உங்களையே சுத்தி சுத்தி வர்றாங்க. எங்களுக்காக நீங்க நல்லா ஆகத்தான் வேணும். உங்கப்பாக்கிட்ட நான் சொன்னதை நிறைவேத்த எவ்ளோ உழைக்கனுமோ அவ்ளோ உழைங்க. அவரை பதவியில் உட்கார வைக்கற நிமிஷத்தில் அவர் முகத்தை நான் பாக்கனும். இரண்டு வருஷமா தேளா கொட்டின அந்த வாய் மூடனும்..”
அவள் சொல்லி முடிப்பதற்குள் அவள் வாயை தன் இதழால் மூடியிருந்தான் ஆதி. அத்தனை கோபமும் தாபங்களால் அணைய ஆரம்பித்தன. வெற்று வார்த்தைகளை விழுங்கி கொண்டன அத்தனை வருட விலக்கம்.
அவளின் முகத்தை தாங்கியவனின் அன்பில் மூழ்கிப் போனாள் கண்மணி. மெல்ல குழைந்த அவள் தேகம் ஆதிக்கு சொல்லியது.. அவள் சமாதானமடைந்து விட்டாள் என்று.
“இத்தனை காதலும் பாசமும் எங்க ஒளிச்சு வச்சிருந்த? எப்படி இன்னிக்கு இவ்ளோ வேகமா வெளியே வந்துச்சு கண்மணி... அவ்ளோ பிடிக்குமா என்னை. என் புருஷன்னு சொன்ன பாரு... ஆதி இந்த கண்மணி கால்ல அப்பவே விழுந்துட்டான். உன் உண்மையான காதல் முன்னாடி தோத்து தலைக்குனிஞ்சு நிக்கற ஆதி தான் இப்ப உன் முன்னாடி இருக்கறது..”
“உங்க மேல இருக்க காதல் எங்கேயும் போயிடல. அது முதல் நாள்ல இருந்து அப்படியே தான் இருக்குது.. இடையில் நீங்க பண்ண விஷயங்கள்தான் வெறுப்பால என்னை நானே மூடி, என் காதலையும் புதைச்சிக்கிட்டேன்.”
“இப்போ அந்த காதல் பரிபூரணமா என்னை நிறைக்கட்டும் கண்மணி. இந்த நொடி ஆதி மனசில் வேற யாருமே இல்ல. நீயே தான் என் முழு மனசிலேயும் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்க. இனி உனக்காக நான். எனக்காக நீ.”
அவன் அறையில் ஒலித்துக் கொண்டிருந்த கல்யாணி ராக பாடல் அவர்களை யாரென்று அவர்களுக்கே புரிய வைத்தது.
“நானுனை நீங்க மாட்டேன்.. நீங்கினால் தூங்க மாட்டேன். சேர்ந்ததே நம் ஜீவனே..”
பிரிதலின் நிமித்தம் ஒதுங்கியிருந்த காதல் அவர்களை ஒன்றிணைத்தது.
புதைந்து மறைந்த அவர்களின் நேசம் ஊற்றெடுத்து மேலே வர ஆரம்பித்தது. இந்த பற்றுக் கோல் போதும் ஆதி.. ஆதித்யாவாக களம் காணுவான்.
error: Content is protected !!