Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வண்ணம் தேடும் வானம்

வண்ணம் 20

எப்போதும் போல புவன் சிரஞ்சீவி பூர்ணிமா சூழ அமர்ந்திருந்தாள் தமயந்தி. அவர்கள் அருகில் வந்து நின்றான் கிஷோர். கிஷோர் அவர்களுடன் படிப்பவன்தான். நிதி மேலாண்மை வகுப்பில் நிறைய செமினார் எடுப்பான். தமயந்தி நிதி மேலாண்மைக்காக புத்தகங்களை தேடி தேடி படிக்கும் பழக்கத்தை பார்த்து  அடிக்கடி புகழ்ந்து பேசுவான். தமயந்தி படிப்பில்  சந்தேகம் எல்லாம் அவனிடம் தான் கேட்பாள்.

கிஷோர் “தமயந்தி வரியா லைப்ரரி வரை போய்ட்டு வரலாம்”

கிஷோர் அப்படி அழைத்ததும் தமயந்தி “அசைன்மென்ட்க்கு தேடிட்டு இருக்கோம் மதியம் போகலாம்” என்றாள்.

 யார் எந்த உதவி கேட்டாலும் சட்டென ‘நோ’ சொல்லி மறுக்க முடியாமல் ‘அப்பறம் செய்யலாம்’ என்று முடிப்பது தமயந்தியின் வழக்கம். புவன் எத்தனையோ முறை ‘எதிலும் இரண்டில் ஒன்று என்று இரு, மனசு கஷ்ட்டப்படுமென நினைத்தால், கஷ்டம் உனக்குத்தான் ’ என்று சொல்லியும் அந்த பழக்கத்தை மட்டும் தமயந்தியால் மாற்றிக்கொள்ள முடியவில்லை. 



Advertisement

விடாமல் கிஷோர் முக்கியமான விஷயம் என்று அழுத்தி அழுத்தி கூப்பிடவும் புவன் “அப்போ நீங்க மட்டும் போயிட்டு வரலாமே ” என்றான் 

எரிச்சலானான்  கிஷோர் “தமயந்தி  சொல்லட்டும் அதை” என்று சிலுப்பிக் கொண்டு சண்டைக்கு நின்றான். உடனே சிரஞ்சீவி எழுந்து நின்று கிஷோரை முறைத்துக்கொண்டு நின்றான். நிலைமை அடிதடி  சண்டைக்கு போவது போல இருக்கவும் தமயந்தி சட்டென்று  பூர்ணிமாவிடம் ” பேபி இந்த பிராப்ளம் நீங்க சால்வ் பண்ணி வைங்க நான் கிஷோர் கூட போயிட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு கிஷோரை அழைத்துக்கொண்டு வகுப்பறை விட்டு வெளியே வந்தாள்.

இருவரும் அந்த கட்டிடம் விட்டு வெளியே வரும்போது தயங்கி நின்ற கிஷோர் “ஒரு முக்கியமான விசயம்” என்றான் 

Advertisement

தமயந்தி அவனை என்னவென்று பார்க்க, கிஷோர் “ம்ம் தமயந்தி… எனக்கு ஒன்னு உன்கிட்ட கேட்கணும்”

Advertisement

தமயந்தி “ம்ம் கேளுங்க ”

கிஷோர்“அது… எனக்கு உன்ன பிடிச்சிருக்கு நாம டேட் பண்ணலாமா”

அதிர்ந்தாள் தமயந்தி “இல்ல எனக்கு அதுலலாம் இப்போ கவனம் இல்ல” வாய் அதன் போக்கில் பதில் சொன்னது 

Advertisement

கிஷோர் “நான் ஜஸ்ட் ட்ரை பண்ணலாம் சொல்றேன். இப்போல்லாம் உன்ன பத்தி மட்டுமே நெனச்சிட்டு இருக்கேன். உன்ன பார்க்காம உன்கிட்ட  பேசாம இருக்க முடியமாட்டேங்குது. கொஞ்சம்  நெருங்கி பேசி பழகுனா இந்த இது மனச அறுக்கிற இந்த உணர்வு  குறையலாம்ல்ல ”

 கிஷோர் பேச பேச தமயந்தி மூளை என்னென்னமோ எண்ண ஓட்டத்திற்கு சென்று நிகழ்காலத்திற்கு வந்தது. தயங்கி தயங்கி மனதில் இருப்பதை சொல்லானாள் “எனக்கு… அதெல்லாம்… வராது… நான் நல்ல ஒரு பேங்க், இல்ல நல்ல பைனான்ஸ் செக்டார்ல போய் வேலைக்கு உட்கார்ந்தா தான் மத்ததெல்லாம் யோசிப்பேன் நினைக்கிறேன்”

கிஷோர் “ நானும் அப்படித்தான். உனக்கு தெரியும் நெனைக்கிறேன், என் அப்பா ஒரு பிரைவேட் பேங்க்கோட வைஸ் ப்ரெசிடெண்ட். நாளைக்கு உனக்கு நல்ல வேலைக்கு கூட  ஹெல்ப் பண்ணலாம்”

தமயந்திக்கு சிரிப்பு வந்தது “ஏங்க வேலை வேணும்ன்னு எல்லாம் டேட் பண்ண முடியாதுங்க. எனக்கு அந்த மாதிரி எதுவும் பீலிங்ஸ் வரல.சாரி நான் உங்கள ஏதாச்சும் தொந்திரவு பண்ணிருந்தா சாரி ”

கிஷோர் “சாரிலாம் வேணாம்.ஜஸ்ட் என்கூட பழகி பார்க்க சொல்றேன். யோசிச்சு சொல்லுங்க”

தமயந்தி என்ன சொல்வதென தயங்கி நிற்க கிஷோர் கொஞ்சம் அடமாக  “ஜஸ்ட் ட்ரை பண்ணி பார்க்கலாம். நான் உன் இஷ்டம் இல்லாம எதுவும் செய்யமாட்டேன்” 

தமயந்திக்கு ‘முடியாதுன்னு சொல்லியும் வற்புறுத்துறானே’ என்று கோபம் லேசாக எட்டிப்பார்க்கும் போது அவர்கள் இருவருக்கும் பின்னாலிருந்து “அதான் முடியாது சொல்லிட்டாங்களே. ஃபிரீயா  விடலாமே” அழுத்தமான குரல் கேட்டுக்கொண்டே வந்தது.

திரும்பி பார்த்த தமயந்திக்கு வந்த ஆளை  யாரென தெரியவில்லை.

கிஷோர் “எக்ஸ்கியூஸ் மீ”

தேவ் “அவங்க அசௌகரியமா  ஃபீல் பண்ணறாங்க. தொந்திரவு செய்யாதீங்க என்னிக்குமே பிடிக்காம போயிடும் ”

கிஷோர் “போறவங்க வர்றவங்க எல்லாம் எனக்கு ரிலேஷன்ஷிப் அட்வைஸ் பண்ணலாம்ன்னு என் நெத்தில எழுதி வைக்கல நினைக்கிறேன்” எகத்தாளமாக பேசினான்.

தமயந்திக்கு வார்த்தைகள் தொண்டையிலேயே சூழ் கொண்டு நின்றது. 

 தேவ் “வாவ், குட். ஆனா உன் குரல் என்ன டிஸ்டர்ப் பண்ணுது” என்றவன் கிஷோர் கன்னத்திலே ‘பொக்’ என்று குத்தினான்.

தமயந்தி சட்டென “சார் சார் சார்ர்ர் அவன் என் பிரெண்ட்தான் சார். எங்க பிரச்சனையை நாங்க பார்த்துக்கறோம். ப்ளீஸ் சண்டை போடாதீங்க” 

தேவ் “இந்த மாதிரி பேசுறவங்களுக்கு நல்லா குடுத்து சொன்னாதான் புரியும் நீ நகரு ”

தமயந்தி “நீங்க யாருன்னு கூட தெரியல.தயவுசெஞ்சு பிரச்சனை பண்ணாம போங்க”

தேவ் “அப்படியா இந்த காலேஜ்ஜே எனதுதான். அது ஏன், சுஷ்மா தெரியுமா? சுஷ்மா என் வைஃப்”

பேசிய ஆளை பார்க்க பைத்தியமென பெரிய வார்த்தையெல்லாம் சொல்ல முடியவில்லை. ஆனாலும் ஆள் பேசும் விதமும் நடந்துகொள்ளும் விதமும் அந்த இடத்தை விட்டு நகர்வது உசிதம் என்றது. 

தமய்ந்தி “சாரி சார் சாரி சார் தேங்க் யூ சார்” என்று சொல்லிவிட்டு கிஷோரை இழுத்துக்கொண்டு வகுப்பறைக்கே வந்து சேர்ந்தாள். 

தமயந்தி “கடைசியா சொல்றேன். எனக்கு இந்த டேட்டிங், லவ் எல்லாம் வராது. நல்ல சம்பாதிக்கணும், அப்பா அம்மாவ நல்லா பார்த்துக்கணும் அவ்ளோதான் என் இன்டர்ஸ்ட் எல்லாம். ப்ளீஸ் இதப்பத்தி இனி பேசாத” என்று சொல்லிவிட்டு அவள் இடத்திலேயே சென்று அமர்ந்துகொண்டாள்.

தமயந்தியிடம் படபடப்பு தெரிந்தாலும் யாரும் எதுவும் கேட்கவில்லை. தமயந்தி சொல்லாமல் இருந்தாலும் தெரியாமல் போகுமா? தேவ் அருணுக்கு அழைத்து சுஷ்மாவுக்கு மிகப்பிடித்த ‘ஸ்டுண்டெண்ட்’க்கு பிரச்சனை அந்த பெண்ணின் பெயர் தமயந்தி என்றும் அங்கே அவன் பார்த்தது நடந்ததெல்லாம் சொல்லவும் அருணுக்கு கோபமும் இயலாமையும் ஒருசேர வதைத்தது. 

விஷயத்தை கேள்விப்பட்ட புவன் “பிடிக்கலன்னு உடனே சொல்லியிருக்கா பாரேன்  சூப்பர்” என்று பாராட்டிவிட்டு முடித்துக்கொண்டான்.

சிரஞ்சீவி “விடு மச்சி தமயந்தி அழகுக்கும் அதுலயும் குணத்துக்கும் ஒரு இது.. வரது.. சகஜம்தானே”

அருணுக்கு இப்போது நன்றாகவே கோபம் தாலைக்கு ஏறியது “என்ன சொல்ல வர்ற”

சிரஞ்சீவி “ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பீலிங்ஸ் மச்சான்”

அருண் “அப்படியா… சரி… என் தலையெழுத்து எங்கம்மா தொந்திரவு செய்துட்டே இருக்காங்க ஓகே சொல்லிட வேண்டியதுதான்” என ஹாயாக அமர்ந்துகொண்டு சொல்ல 

சிரஞ்சீவி “சரி போகட்டும் போ எனக்கு தான் நம்ம தம்….” முடிக்கும் முன்பே அவன் கன்னத்தில் அருண் கை பதம் பார்த்திருந்தது.

சிரஞ்சீவி பதிலுக்கு அருண் சட்டையை பிடித்தவன் “அதென்னடா எனக்கு பிடிச்சது அடுத்தவங்களுக்கு பிடிக்ககூடாதுன்னு… அதென்னடா உங்க குடும்பத்துல எல்லாரும் இப்படியே இருக்கீங்க… கொடுமை என்ன தெரியுமா உங்களுக்கு பிடிச்சிருக்குன்னு கூட வாய் திறந்து சொல்லமாட்டீங்க… இங்க எந்நேரமும் பைத்தியம் பிடிச்சிட்டு சுத்தணும்… அப்படித்தானே”

அடி விழுந்த சிரஞ்சீவி  கன்னத்தை தடவிக்கொண்டே அருண் “யாரு மேலயோ  இருக்கிற கோபத்தை என்மேல காட்டாத”

சிரஞ்சீவி “உன்மேல இருக்கிற கோபத்தைத்தான் உன்மேல  காட்டிட்டு இருக்கேன்”

அருண் “எனக்கு அப்படி தெரியல”

புவன் “டேய் ஒரே ரூம்ல இருந்தாலும் பேசுறதே கம்மி ஆகிடுச்சு… இதுல சண்டை மட்டுமே போட்டுட்டு இருந்தா நல்லா இல்லடா தடிமாடுகளா ”

சிரஞ்சீவி “அத வேலை வேலைன்னு சுத்துறவன் கிட்ட சொல்லு”

அருண் எரிச்சலாக “அங்க எங்கம்மா இங்க நீ…. என்ன நிம்மதியாவே விட மாட்டீங்களா என்ன” கேட்டான் 

அடுத்த நாள் கல்லூரிக்கு வழக்கம் போல திடீர் விசிட் கொடுத்து அருண் தமயந்தியிடம் முந்தைய நாள் பற்றி விவரம் கேட்க.., வந்ததே எரிச்சல் தமயந்திக்கு… இவனுக்கு தோணும்போது கல்லூரி வருவானாம், அவளுக்கு நடந்த பர்சனல் விஷயத்தை கேட்பானாம்! உடனே இவள் பதில் சொல்லிவிட வேண்டுமாம். அதுவே அவள் கேள்வி கேட்டால் புரியாதது போல பதில் சொல்லிவிட்டு போவானாம்.தமயந்தி என்ன அவன் விளையாட செய்துவைத்த பொம்மையா?

அருணை நேராக  மனதில் இருக்கும் கோபத்தை மொத்தமும் கொட்டி பார்த்தவள்  “அவனுக்கு சதா…சர்வ…காலமும் என் நெனப்பாவே இருக்காம். என் கூட நெருங்கி பழகிப் பார்த்தா அந்த பீலிங்க்ஸ் என்னனு தெரியுமாம். அதான் டேட் பண்ணலாமா கேட்டான்” என்றாள் 

அருணுக்கு தமயந்தி விஷயத்தை  சொன்ன விதம் சிரிப்பை வரவழைக்க, சிரிப்பை அடக்கி கொண்டு “நீ என்ன பதில் சொன்ன” என்று கேட்டான் 

தமயந்தி “எனக்கு அதெல்லாம் வராது தெரியாதுன்னு சொன்னேன்”

அருண் “கத்துக்கலாமே… இந்த கம்யூனிகேஷன் பெர்சனாலிட்டி போல டேட்டிங் எல்லாம் கத்துக்கலாமே” கேட்டான் 

தமயந்தி அவனுக்கு முன் இன்னும் ஓர் அடி நெருங்கி “கத்துக்க சரியான ஆள் கிடைக்கல” என்றாள் 

இதய ஓட்டத்தில் ரத்த ஓட்டத்தில் மாறுதல் கண்டவன் தமயந்தியின் முகத்தில் துள்ளும் குறும்பில் மயங்கி “எந்த மாதிரி ஆள் வேணுமாம்” கேட்டான் 

தலையை சாய்த்து யோசித்தவள் அவள் நெற்றிக்கு நேர் கைவைத்து மேல் நோக்கி அசைத்துக்கட்டி “என்னை குனிஞ்சு பார்த்து கொஞ்சுற ஆள் வேணும்” என்று முகத்தை சுருக்கி  சொல்லி விலகி பழிப்பு காட்ட …

அருண் “தேடி பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்று தனியே வந்து வேகமாக ஓடும் இதய ஓட்டத்தை கண் மூடி உணர்ந்து சிரித்தான். மூடிய கண்ணுக்குள் அவள் உருவமே தெரிந்தது. 

அந்த நாள் முழுக்க உள்ளத்தில் ஒரு பரபரப்பு, உடலில் ஒரு நடுக்கம் எண்ணம்மெல்லாம் தலைசாய்த்து யோசித்து பேசியவள் உருவமே. நிலைகொள்ள முடியாத நிலையில் அவன் இருக்க, தமயந்தி அவள் போக்கில் சுற்றி இருப்பவருடன் சகஜமாக பேசிக்கொண்டிருந்தாள்.

கல்லூரி விட்டு திரும்பி அலுவலகம் சென்று குடையும் வேலைகளை எல்லாம் நேர்செய்து வீட்டிற்கு திரும்பிய பின்னும் அருண் முகத்தில் சிரிப்பு மறையவே இல்லை. 

சிரஞ்சீவி “காலைல இருந்து பார்க்குறேன் கள்ளு குடிச்ச கொரங்காட்டம் சிரிச்சிட்டே இருக்க”

அருண் இப்போது வாய் விட்டே சிரிக்கவும், சிரஞ்சீவி “டேய் என்னடா சத்தம் போட்டெல்லாம் சிரிக்கிற”

புவனுமே ஆச்சரியத்தில் “என்ன மச்சான் என்னடா ஆச்சு” கேட்க அருண் இன்னமும் சிரித்தான்.

வெகுநேரம் கழித்து அடங்கிய சிரிப்புனுடே அருண் “என்ன எதுவும் கேட்காதீங்க ப்ளீஸ்” என்று சொல்லிவிட்டு சிரித்த முகமாகவே படுத்துக்கொண்டான்.

புவன் அடுத்த நாள் செய்யவேண்டிய வேலைகளை பட்டியலிட்டு கொண்டே போக அருண் வேறொரு உலகத்தில் இருந்தான். எப்போதும் தமயந்தி தான் அவன் செயலில் மூச்சடைத்து நிற்பாள். தமயந்தி அவனுடன் நெருக்கமாக நிற்பதெல்லாம் அவனுக்கு பழகிய விஷயம்தான். போட்டோ எடுக்க பக்கத்தில் நிற்பதோ, கைகளை பிடித்து நிற்பதெல்லாம் பழக்கம்தான். சிலநேரம் தமயந்தியின் படபடப்பை உணர்ந்திருக்கான். ஆனால் முகத்தில் குறும்புத்தனமும் அணுகுமுறையில் கொஞ்சம் ஆணவமும் கலந்த இந்த தமயந்தி அவனுக்கு ரொம்பவும் புதிது.

தமயந்திக்குமே அது புது அனுபவம் தான். ‘நீயில்லன்னா என்ன!’ ‘என்னை கூட சிலருக்கு பிடிக்குது பாரு’ என்று கட்டிக்கொள்ள துணிந்த ஈகோவா இல்லை ‘எனக்கும் இப்படியெல்லாம் வருமென்று காட்டிக்கொள்ள வந்த தைரியமா’ எது அவளை அப்படி செய்ய வைத்தது என்று தெரியவில்லை.

அருணுக்கு அடுத்த மூன்று நாட்களும் அவள் நினைவே! எங்கேனும் அமைதியான இடம் தேடிச்சென்று அவள் நினைவாகவே இருப்போமா என்றது மனம். உண்மையில் வேலைகள் பல குவிந்துக்கொண்டே வந்தது. மனமோ தினமும் அவளை பார்த்து இப்படி வார்த்தைக்கு வார்த்தை பேசவைத்து பார்க்க ஏங்கியது. அருண் அவனை சுதாரித்துகொண்டு வேலையில் ஈடுபடுத்திக்கொள்ள மிகவும் பாடுபட்டான்.

அடுத்த வாரத்திலேயே ஒரு நாள் எல்லோருக்கும் அடுத்த இரண்டு மாதத்தில் அவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு அந்த ஆண்டு வேலைவாய்ப்பு கொடுக்க வரும் நிறுவனங்கள் பெயர்களும், அவர்கள் வழங்கும் வேலைவாய்ப்புக்கான  தகுதி வரம்பு விவரங்கள் கல்லூரி நிறுவனம் மாணவர்கள் எல்லோருக்கும் தனிப்பட்ட முறையில் மெயில் செய்திருந்தார்கள். தமயந்தி பரபரப்பானாள். அவர்கள் அனுப்பியிருந்த பட்டியலில் பேங்க், எண்ணெய் நிறுவனங்கள், உணவு உற்பத்தி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கேளிக்கை நிறுவனங்கள் என பல வகையான நிறுவனங்களும் இருந்தன. புவனுடன் சேர்ந்து எந்தெந்த நிறுவனங்களில் அவளுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் என்று பட்டியலிட்டு எந்தெந்த நிறுவனங்களில் அவள் இன்டெர்வியூ கொடுக்க நினைக்கிறாள் என்றும்  பட்டியலிட்டாள். அந்த இன்டெர்வியூகளுக்கு தயாராக தொடங்கினாள். நிகழ்கால பங்குச்சந்தை சார்ந்த செய்திகளும், சந்தை விவரங்களும் புரிந்துகொள்ள போராடினாள். 

பூமிகா ஆடிட்டர் படிப்பில் சி.ஏ ஃபௌண்டேஷன் பாஸ் செய்து இன்டெர்மிடியேட் சென்றிருந்தாள். புவன் அவளிடம் நெருங்கியும் நெருங்காமலும் பழகி வந்தான். பூமிகா அவள் மனநிலை பொறுத்து அவனை நடத்தி வந்தாள். படிப்பு கஷ்டமாக இருந்தால், யாரேனும் திட்டினால், அவள் ஜீப் சரியாக ‘ஆன்’ ஆகவில்லை என்றாலும்  கூட அவனை பழி சொன்னாள். 

சிரஞ்சீவி புவனின் பொறுமையை பார்த்து பொறாமை ஆனான். ‘இந்த பொறுமையை என்கூட பாக்சிங் ரிங்ல காட்டு மச்சான்’ என்று கிண்டல் செய்தான். ஆனாலும் புவன் அவன் வகையில் அவனுக்கும் பூமிகாவிற்கும் சுற்றியிருக்கும் தடைகளை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப்போக செய்துக்கொண்டிருந்தான். அவனுக்கே உரிய பொறுமையிலும் ஆள் பலமும் சேர்த்து மர்ம முடிச்சுகள் பலதை மெதுமெதுவாக வெளிச்சத்திற்கு கொண்டுவந்து கொண்டிருந்தான். 

ஷிவானி எம்.டி படிப்பை முடிக்கும் வெறியில் கைபேசி, இன்டர்நெட், சமூக வலைத்தளங்கள் எல்லாவற்றையும் துறந்துவிட்டிருந்தாள். அதை அறியாத சிரஞ்சீவியின் பொழுதுபோக்கு அவள் ‘இன்ஸ்டாகிராம் பேஜ்’ சென்று தினமும் புகைப்படம் புதிதாக ஏதேனும் பதிவிட்டிருக்கிறாளா என்று பார்த்து பெருமூச்சு விடுவது என்றானது. 

பூர்ணிமா அவள் சுதந்திரத்தை சளைக்காமல் அனுபவித்தாள். ஷாப்பிங் செய்வதிலும் ஊர் சுற்றிப்பார்ப்பதிலும் கொஞ்சமும் யோசிக்காமல் எல்லோரையும் அடம்பிடித்து அழைத்துச்சென்று மகிழ்ந்தாள். திருமணத்திற்கு பின் வாழ்க்கை இன்னமும் மொத்தமாக அவளை கழுத்து நெறிக்கும் அளவுக்கு இருக்க போகிறது என்பது நினைவிற்கு வரும்போதெல்லாம் இப்போதைய வாழ்வை அனுபவித்துக்கொள்வதே அவளுக்கு ஆசுவாசம். 

காலம் அதன்போக்கில் வேகமாக நகரவும் வளர்ச்சியை நோக்கியே ஒவ்வொருவரின் பாதையும் இருந்தது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!