“அப்போ நீ ரெடி ஆகிட்ட, பாக்குறதுக்கு… ரெண்டு வீடியோ இருக்கு… முதல்ல என்ன பாக்க ஆசைப்படுற நீ… நானே காமிக்குறேன்… என்று முதலில் ஒரு வீடியோவை பார்க்க சொல்ல,
“ஏய்… நீ வாயத் தொறந்தன்னு வை…” என்று மிரட்டிவிட்டு, நித்தியாவே வந்து என்கிட்டே எல்லாம் சொல்லிட்டா… அவ உயிருக்கு ஏதாவது ஆபத்துனு வந்துச்சின்னா, அதுக்கு நீ தான் காரணம்னு சொல்லி, அவகிட்ட வாக்குமூலம், அதும் சும்மா இல்ல வீடியோவா ரெடி பண்ணி வச்சிட்டேன்… உன்னால இனி அவனின் முடியை இழுத்துக் காமித்து புடுங்க முடியாது…” என்று முடித்தான்.
இவன் பேசப் பேச, கலையரசியின் முகம் விகாரமடைய,
அப்பறம் சொல்ல மறந்துட்டேன் பாரு, “நித்யா விரும்பினபடி மெய்யப்பன் மாமாவோட தங்கச்சி பையனுக்கு நானே கல்யாணம் பண்ணி வைப்பேன்… இதுல நீ ஏதாவது பண்ணுலாம்னு நினச்சா கூட, அடுத்து நீ ஜெயில்ல தான் இருக்கணும்…”
“நான் நீ ஜெயிலுக்கு போவேன்னு சொல்லியும், உனக்கு அவ்வளோ தெனாவட்டு… இது சரியில்லையே…”
“ஆமாடா… நீ என்ன இந்த ஊருல, ரெண்டு நாள், இல்ல மிஞ்சி, மிஞ்சி போன ஒரு வாரம் இருப்பியா… அது அப்பறம் உன்னால என்ன கிழிக்க முடியும்…”
“ஓஹோ… நீ அப்படி வர… உனக்கு இன்னும் விஷயம் தெரியாதுள்ள, மெய்யப்பன் மாமாக்கு, திருப்பூர்ல நானே ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்ணிட்டேன்… அவங்க அடுத்த வாரம் அங்க கிளம்பிடுவாங்க, கூடவே நித்யாவும்… வீடு எல்லாம் பார்த்து வச்சாச்சு… நித்யாக்கு லாஸ்ட் செமஸ்டர் தானே, அவ பரீட்சைக்கு மட்டும் வந்து எழுதிக்குற மாறி, நானே காலேஜ்ல பேசிட்டேன்… வேற ஏதாவது இருக்கா?”
அவர் பல்லைக்கடித்துக் கொண்டு அவனை பார்த்து, அந்த ஆளு கிளம்பிட்டா, “நான் அடுத்து காசுக்கு எங்கடா போவேன்…”
“பாரேன்… நானும் மறந்துட்டேன்… நீ இந்த வீடியோவப் கொஞ்சம் நல்லா பாரு..”
அதில் அவரிடம் லாக்கரில் இருந்த நகை, பணம் எல்லாம் தெரிய, கலையரசிக்கு இதயமே வெடித்து விடுமளவிற்கு பதறி, “இதுயெல்லாம்… என்.. என்…”,
“என்ன வாய் ரொம்ப திக்குது… எல்லாம் என் அப்பாகிட்டயிருந்து, திருடுன காசுல வந்தது தானே, இதுலாம் யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சியா… எப்படியும் ஒரு இருநூறு சவரன் வச்சிருப்ப போலயே… அப்பறம் கட்டு கட்டா காசு வேற, இது உனக்கு பத்தாம, உன் சின்ன பொண்ண எப்படியாவது கட்டிக்குடுத்து, எங்க அப்பா வீட்டுலயே குடி கொண்டுடலாம்னு பிளான் பண்ணிருக்க…”
“இதுலாம் உனக்கு யாருடா சொன்னா…” என்று கத்த,
“உங்கிட்ட ஒரு தடவை சொன்னா, உன் மண்டைக்கு புரியாத… நான் மட்டும் தான் பேசணும்… நீ நான் சொல்றத கேக்குற… அவ்ளோதான், இந்த சவுண்ட் விடுற வேலலாம், சுத்தமா கூடாது.. புரியுதா?…”
அவனை கொலைவெறிக் கொண்டு பார்க்க,
இதுலாம் எனக்கெப்படி தெரியும்னு பாக்குறியா, “உன் வீட்டுல உனக்கே தெரியாம, ஒரு கேமரா வச்சிருக்கேன்… நீ என்ன பண்ணுனாலும், எனக்கு வந்திடும்…”
அப்பறம் “ஒரேயொரு காள் பண்ணினா போதும், நீ வர வருமானத்திற்கு அதிகமா வச்சிருக்கனு, அவங்களே உன்னைய அலேக்கா தூக்கி உள்ள வச்சிடுவாங்க… எப்படி வசதி…”
“நான் உனக்கு இப்ப என்ன பண்ணனும்…”
“பாருடா… கொள்ளையரசி டீல் பேசுது… இப்படியே பணத்தை வச்சிருந்தா கரையான் அரிச்சிடும்ல, அதுனால நீயும்… உன்னையே மாறியே பெத்து போற்றுகியே அதும் சேந்து… இருக்குற பணத்தை வச்சி வச்சி சாப்பிடுங்க… இந்த நகையெல்லாம் நித்யாவுக்கு குடுக்குற… புரிஞ்சிதா…”
“அதையெல்லாம் விட, இப்போ நீ தாங்கி தாங்கி நடிச்சிட்டே நடந்து வந்து, என்ன சொல்லணும்?… உங்க அண்ணன்கிட்ட… நாளைக்கு பொண்ணு பாக்க போலாம்னு… ஓகே கொள்ளையரசி… போலாமா?…
“வாங்க சின்ன அத்தை… போலாம்…” என்று முன்னே நடக்க, கலையரசி விஷமுறிந்த பாம்பாய் அவனை பின்தொடர,
“இதுக்கப்பறமும் எதையாது பண்ணலாம்னு யோசிப்ப?… அப்பறம் ரெய்டு… ரெய்டு… தான்…” என்று மிரட்டிவிட்டு, அவருடன் வெளியில் செல்ல,
அங்கே ஹாலில், கோமதி பேசியதை யோசித்தபடி அமர்திந்திருந்த வீரப்பாண்டியன், இவர்கள் வருவதை பார்த்துவிட்டு, என்னமா நீ… முடியாத எதுக்கு நடந்துவர என்று பதற,
“இல்லண்ணா… இப்பக் கொஞ்சம் வலி பரவால்ல… நடக்க முடியுது… நான் சொல்றதை கேக்குறியா ண்ணா…”
“என்னம்மா… என்ன கேக்கணும்?..”
“ம்க்கும்… இதுக்கு ஒன்னும் குறைச்சலில்ல…” என்று மனதில் நொடித்துவிட்டு, தன் மகனை பார்க்க… அவனோ இவரை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தான்.
“ண்ணா… நாளைக்கு சயிந்தரமா நந்தாவுக்கு அந்த பொண்ணை பார்த்து பேசி முடிச்சிட்டு வரலாம் ண்ணா…”
“என்னமா சொல்லுற… நீ தானே எனக்கு நல்லானதும் பாக்க போலாம்னு சொன்ன… இப்போ உன்னால முடியுமா?, இப்படி சொல்லுற…”
“சரிம்மா… இவ்வளோ சொல்லுற… நாளைக்கு போயிட்டு பேசி முடிச்சிட்டு வந்துடலாம்… காலைல நான் அவங்ககிட்ட கூப்பிட்டு சொல்லிடுறேன்…”
கோமதி “நல்லா சொன்னிங்க அத்தாச்சி… இதே தான் நானும் உங்க அண்ணன்கிட்ட இவ்வளோ நேரம் சொல்லிட்டு இருந்தேன்… இப்போ தங்கச்சி சொன்னதும் தான் யோசிக்குறாரு… அதுக்கு தான் உங்கள போல ஒரு ஆள் வேணும்னு சொல்லுறது…” என்று ஒத்து ஊதினார் .
“அத்தை இப்போ ஓகே தான் ப்பா… நாம கிளம்புலாமா…”
“சரிம்மா… பாத்துக்கோ… நாளைக்கு காலைல வந்து உன்ன பாக்குவான்…” என்று சொல்லிவிட்டு, இவ்வளவு நேரம், அங்கு நடந்த நாடகத்தை வேடிக்கை பார்த்த மெய்யப்பனிடமும் விடைபெற்று வெளியே சென்றார்.
“பார்த்துக்கோங்க அத்தாச்சி.. வரேன்…”
“மாமா… இப்படிலாம் மூஞ்சியை வச்சிக்காதிங்க… இனிமே உங்களுக்கு விடுதலை தான்… இப்போ நான் கிளம்புனதுக்கு அப்பறம் உங்கள ஏதாவது பேசுனா, ஒரு போன் எனக்கு போடுங்க… சரியா மாமா?…”
“நீங்க சொன்னா சரிதான் மாப்பிள்ளை…”
“என்னமோ மகளிர் ஆணையத்துல உங்கள கம்ப்லைன் பண்ணுவேன் சொன்னாங்கள்ல, இது உங்கள பேசுன வீடியோ இருக்கு என்கிட்டே… நாம அதை காமிப்போம்… அவங்க கிட்ட, யாரை உள்ள வைக்கிறாங்கனு பாக்குவோமா, மாமா…”
“அதையே முதல்ல பண்ணிடலாம் நந்தா…”
“என்ன கொள்ளையரசி… போயிட்டு கப்புச்சிப்புனு தூங்கணும்… எங்க நீ பெத்த குட்டிச்சோறு?…” என்று திரும்பி ஆர்த்தியை பார்க்க, அவள் எதுவோ சொல்லவர,
“நீங்க போயிட்டு நிம்மதியா தூங்குங்க மாமா… வரேன்டா நித்யா… நாளைக்கு பாக்கலாம்…” என்று கிளம்பினான்.
– – – – –
வீரபாண்டி, “இந்தா கோமதி, இன்னும் எவ்வளோ நேரம்… கிளம்ப வேணாமா… நல்ல நேரத்துக்கு அங்க இருக்கணும்னு உனக்கு நான் சொல்லிட்டே இருக்கணுமா…” என்று வெளியில் இருந்து சத்தம் போட,
“தோ வந்துட்டேங்க… வாங்க போலாம்…”
“எங்க வேற யாரையும் காணும்…”
“நாம முன்னாடி கிளம்புவோம்… அவங்கள வேலன் அண்ணா அழைச்சிட்டு வரேன்னு சொல்லிட்டாங்க…”
“ஒரு வேன்ல போலாம்னு இதுக்கு தான் சொன்னேன்… உன்மவன் ரெண்டு கார்ல போய்க்கலாம்னு சொல்லி, இப்ப என்ன நடக்குது பாரு… எங்க நான் சொல்றத கேக்குறான்…”
“நீங்க சொல்லி தானே இந்தப் பொண்ணையே கட்டுறான்… வாங்க அப்பறம் நேரமாகுதுனு பேசுவீங்க…” என்று முன்னே சென்றார்.
“இவ என்ன சொல்லிட்டு பொறப்பாரு…” என்று பேசிவிட்டு, அப்போது அங்கே வந்த ராஜாவை பார்த்து, பெரியவனே, “வெரசா வாங்க…” என்று அவனிடமும் கூறிவிட்டு, காரில் ஏறினார்.
– – – –
நந்தா, “கெட் ரெடி தங்க பொண்ணு… ஐயம் ஆன் தி வே டு ஸ்டீல் யு…” என்று குறுந்செய்தி அனுப்ப,
அதி, “இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல…”
“வேற எதுல குறைச்சல்னு நேருல வந்து கேக்குறேன்… எனக்காக காத்துட்டே இரு…”
“போங்க நீங்க…”
“போங்க இல்ல… வாங்க…”
கார் வெளியே போவதை பார்த்துவிட்டு, காவியா “கொழுந்தனாரே… வரலாம் வெளில… அந்த கார் கிளம்பிடுச்சி…”
“ஒகே முயல்குட்டி… வந்துட்டே இருக்கேன்… வைட்டிங் டு சி யு… உம்மா…” இந்தா வந்துட்டேன்…என்று வெளியே வர, “வாங்க கிளம்பலாம்…” என்று போனுடன் அவர்களை நெருங்கினான்.
காவியாவோ, அங்கிருந்த போனை நோண்டிக்கொண்டிருந்த சுரேஷின் முகத்தை நிமிர்த்தி நந்தாவை பார்க்குமாறு செய்ய, “டேய் அண்ணா… நீ கலக்கு டா…”
இப்படி கலாட்டாக்களுடன், பெண்ணின் வீட்டின் முன் சென்று காரை நிறுத்தினர். காரிலிருந்து பட்டு வேஷ்டி சட்டையுடன் இறங்கிய நந்தாவை, பூரிப்புடன் பார்த்து நின்ற கோமதியின் அருகில் சென்று, உன்மவன் அடங்கவே மாட்டானா… இப்போ யாரு, இவனை இப்படி வர சொன்னது.
“பொண்ணு பட்டு புடைவைல வர மாறி, என் பையனும் பட்டு வேஷ்டில வந்திருக்கான்…எவ்வளோ அம்சமா வந்திருக்கான் என் பையன்… எந்த கொள்ளிக்கண்ணும் படாம இருக்க, மொதல்ல சுத்தி போடணும் வீட்டுக்கு போயி…”
“யாரை சொல்…” என்று பேச்சை ஆரம்பிக்க,
அதற்குள் அவந்தியின் அப்பா, சித்தப்பா, பெரியப்பா என்று அனைவரும் வந்து இவர்களை வரவேற்க, அங்கே கூடியிருந்த சொந்தங்களை பார்த்து நலம் விசாரித்துக் கொண்டே உள்சென்று அமர்ந்தனர்.
பெண் பார்க்கும் படலம் இனிதே தொடங்க, முடிவில் இரு தந்தைமார்களும் நந்துவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கி நின்றனர்.