Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வண்ணம் தேடும் வானம்

வண்ணம் 34

அருணுக்கு விஷயம் தெரிந்தது போலவே அவன் மாமன்களுக்கும் விஷயம் தெரிந்தது. உண்மையில் கல்யாண் சூர்யவர்த்தனன்தான் ஸ்கை புரொடக்ஷன்ஸ் ஓனர் என்று தெரிந்துக் கொண்ட மதனகோபால் உடனே அதை அருந்ததீயிடம் சொல்லிவிட்டார். மேலும் விவரம் சேகரித்தவர் யாரும் யோசிக்காத விஷயத்தை செய்தார். 

ஸ்கை புரொடக்ஷன் நிர்வாக இயக்குனர் தமயந்தி மீது அருணுக்கு ஆசை இருக்குமோ என்று அருந்ததீக்கு சந்தேகம் இருந்தது. சிலநேரம் அது பொய்யாக கூட இருக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தார் அருந்ததீ.  ஆனால் நிறுவன சொந்தக்காரர் யாரென தெரிய வரும்போது அருந்ததீக்கு தமயந்தி மீது சந்தேகம் உண்டானது. இது நாடகமாக இருந்தால் என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது. கல்யாண் பேச்சு எப்படி இருக்குமென அறிந்தவர் அருந்ததீ. கல்யாண் விஷத்தையும் தேன் தடவி ரொம்பவும் நல்லது என கொடுப்பவர்.

ஏற்கனவே தமயந்தி மீது அருந்ததீக்கு கோபம் இருந்தது.அது இப்போது பன்மடங்காக பெருகியது. ஸ்கை  புரொடக்ஷனில் இயக்குனர் ஒருவர்  சண்டையிட்டு பாதிவரை வந்த படத்தை நிறுத்தி பிரச்சனை செய்து வெளி வந்தார். அருந்ததீ சிபாரிசில் அந்த இயக்குனர் அருந்ததீ ஃபிலிம் கார்ப்பரேஷனில் படம் எடுத்து வெளியிட்டார். அருணுக்கு அந்த இயக்குனருக்கும்  தமயந்திக்கும் என்ன பிரச்சனை என்று தெரியாமல் இருந்த நிலையில் நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அங்கே வந்தவளிடம்  சிரஞ்சீவி “அவன் பாரேன் கதையில ஒரு கேரக்டர் பேர தமயந்தின்னு வச்சிருக்கான் நீ எதுவுமே கேட்கல” என்று கேட்க 

தமயந்தி “ என்ன நடந்தாலும் நான் அவன்கிட்ட பேசமாட்டேன்” என்றாள் தீர்க்கமாக. 



Advertisement

இத்தனைக்கும் மூன்று படங்கள் தொடர் ஹிட் கொடுத்தவனை ஏன் திடீரென நீக்கினாள் என்று அருண் யோசித்து புரியாமல் பார்க்க  மெதுவாக சின்ன குரலில் “அவனுக்கு என்னை பிடிச்சிருக்குன்னு சொன்னான்” என்றாள். இதுக்கே அவனுக்குள் எரிமலை வெடித்தது. அடுத்து அவள் சொன்னதில் அருண் அந்த விஷயத்தை பொறுமையாக கையாண்டதே பெரிது!

புவன் பொறுமையாக “ஓகே….பதிலுக்கு  நீ என்ன சொன்ன” கேட்டான் 

தமயந்தி “பிடிச்சிருக்கு சொன்னதோட நிறுத்தாம கமிட்மென்ட் இல்லாத ரிலேஷன்ஷிப்க்கு கேட்டான். நான் முடியாது சொன்னதும் ஈகோ ஹர்ட் ஆனதுல பைத்தியம் போல என்னென்னவோ பண்ணிட்டு இருக்கான்” என்றாள்.

Advertisement

முடிந்தது அந்த இயக்குனரின் கதை. அடுத்து அவன் எந்த படமும் எடுக்க முடியவில்லை.

Advertisement

அருந்ததீக்கு அருண்தான் அந்த இயக்குனரின் வீழ்ச்சிக்கு காரணம் என தெரிகிறது ஆனால் தெளிவாக விஷயத்தை தெரிந்துகொள்ள முடியவில்லை. எங்கு விசாரித்தாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பின் புவன் திருமணத்தில் அருணும் தமயந்தியும் சுற்றம் மறந்து பேசிக்கொண்டிருந்தது காண நேர்ந்ததும் சந்தேகம் மீண்டும் துளிர்த்தது. அருண் எங்கு இருக்கிறானென அவன் அசிஸ்டண்ட்க்கு அழைத்து கேட்டால் அருண் சாப்பிட சென்றிருப்பதாக பதில் வந்தது. இன்னமும் அழுத்தி கேட்க தமயந்தியுடன் ‘லஞ்ச்’ என்று தெரியவரவும்  அதிர்ச்சியானார்.

 புவன் பூமிகா திருமணத்தில் அருண் அணிந்திருந்த ஷர்ட் கலரும் தமயந்தி புடவையும் ஒரே நிறமென நினைவுக்கு வர புவன் பூமியின் திருமண புகைப்படங்களென அம்பிகா அனுப்பியதில் கவனித்தால் தமயந்தி பக்கமே எதிலும் நிற்கும் அருண் அணிந்திருக்கும் ஷர்ட், குர்தா, டி-ஷர்ட்  எதுவுமே தமயந்தி அணிந்திருக்கும் நிறத்திலேயே இருந்தது. அடுத்து விருது வழங்கும் விழாக்களின் புகைப்படங்களை பார்க்கும் போதும் அப்படியே இருந்தது. தூரதூரமாக அமர்ந்திருந்தாலும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்திருந்தனர். அருண் முகத்தில் புன்னகையும் ஒளியும் தமயந்தி அருகினில் பிரகாசித்தது. யோசித்து பார்த்தால் அருண் என்றைக்குமே ஸ்கை ப்ரொட்க்ஷனை தப்பாக பேசியது கிடையாது, தமயந்தியை தாக்கி பேசியதில்லை,அவர்களை எதிரியாக கூட பார்த்தது கிடையாது. அருந்ததீ ஷிவானியுடன் திருமணம் ஏற்பாடு செய்யலாம் என பேசும்போதெல்லாம் ‘ஷிவானி வேலையில செட் ஆகட்டும்மா’ ‘நம்ம ஷிவானி எங்க போயிட போறா’ என்றே  பதில் சொல்வான். ஷிவானியின் அம்மா வேறு பக்கம் மாப்பிள்ளை பார்க்கலாம் என பேசியபோது ‘அவ அவளோட வேலையில செட் ஆகுறது ஈஸி இல்ல, நம்ம வீட்டு கடனெல்லாம் நான் கட்டி முடிக்கிற வரை பொறுக்க உங்களுக்கெல்லாம் என்ன கஷ்டம்… கல்யாண செலவெல்லாம் சும்மா இல்லை ’ என்று பேசினானே தவிர ஷிவானியை அவன் திருமணம் செய்துகொள்ள என்றுமே பேசியதில்லை. அங்கங்கே சிதறிய புள்ளிகளை கோர்க்க கோர்க்க மகனை நினைத்து வியப்பாக இருந்தது. 

இப்படி குழைந்து குழைந்து காதலிக்கும் மகனை தமயந்தி கண்டுகொண்டாளா கேள்வி தொக்கி நின்றது. ‘என் மகன் எப்பேர்பட்ட தைரியசாலி, திறமைசாலி… அஞ்சு வயசுலேயே அவன் பசியையும் தாகத்தையும் அடக்கிட்டு அம்மாவுக்கு துணை இருந்தவன்.  இவ என்ன இவ எந்த போட்டோலயும்  அவன் முகத்த பாக்காம இருக்கா’என்று புலம்பியவர் தமயந்தியின் புடவை வண்ணங்களை கவனித்தார். தமயந்தி எதிலுமே அடர் நிறங்களில் புடவை அணியவில்லை. அருணுக்கு அவர் அணியும் கருப்பு, கரும்பச்சை, அடர் நீலம் எல்லாம் பிடிக்கவே பிடிக்காது.  பரிசு என்று எப்போதும் வெளிர் நிறங்களில் தான் எதையுமே தேர்ந்தெடுப்பான். ‘வெறும் இந்த கலர் வச்சு முடிவு செய்ய முடியாது’ என்று அவருக்கு அவரே சொல்லிக்கொண்டாலும் தமயந்திக்கும் அருணுக்கும் இடையே இருக்கும் அலைவோசை புலப்படுகிறது. உள்ளுணர்வு ‘இதுதான் உண்மை’ என்று கூச்சலிடுகிறது. தமயந்தி பற்றி விசாரிக்க அவர் அசிஸ்டன்டை ஏவினார். 

Advertisement

அருண் தமயந்தியை  தனியாக விடாமல் சாப்பிட அழைத்து செல்வதென, அவன் தயாரிப்பில் வெளியாகும்  படங்களின் ப்ரீவியு ஷோ பார்க்கவென அவன் கட்டிக் கொண்டிருக்கும் புது வீட்டிற்கான இன்டீரியர் முடிவு செய்யவென்று எங்குபோனாலும் அழைத்துக்கொண்டே சென்றான். 

அருண் அவனுக்கென்று கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை பார்த்து ஆசையாக இருந்தது  தமையந்திக்கு. “வாவ் எல்லா வசதியும் இருக்கு…இதே போல ஒரு வீடு இந்த ஊர்ல கட்டுனேன்… நான் சாதிச்சிட்டேன்” அவளுக்குள் இருந்த ஆசையை கண்கள் மின்ன சொன்னாள்.    

வீட்டை சுற்றி பார்த்தவள்  “கார் நிறுத்த கேரேஜ், பாஸ்கெட் பால் கோர்ட், தோட்டம் வளர்க்க  இடம்ன்னு சூப்பரா இருக்கு அருண்… வீடும் குட்டியா அடக்கமா இருக்கு ஆனா எல்லா வசதியும் இருக்கு” பிடித்ததை எல்லாம் பார்த்து பார்த்து அதிசயமாக சொல்லிக்கொண்டு வந்தவள் வெளியே பாஸ்கெட் பால் கோர்ட் பார்த்து “பாஸ்கெட்  பால் விளையாடலாமா விளையாடி ரொம்ப நாளாச்சு” கேட்டாள். 

அவள்  அப்படி கேட்டதுமே சரி என்றவன் கையில் பாஸ்கெட் பால் இருந்தது. அந்த வீடு இன்னும் முடிக்கப்படாமலே இருக்கிறது, இன்டீரியர் செய்யும் வேலை எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது ஆனால் அந்தக் பாஸ்கெட் பால் கோர்ட் மட்டும் எப்படி இவ்வளவு சீக்கிரம் தயாரானது, அவன் கையில் எப்படி புது பால் வந்தது என்ற கேள்விக்கு யார் தான் பதில் சொல்வது?

தமயந்திக்கு பந்தை தரையில் தட்டி கூடையில் போடுவது மிகவும் தன்னிச்சையாக நடந்தது. “கிட்டத்தட்ட நாலு வருஷம் ஆயிடுச்சு நான் பால் தொட்டு ஆனா பாரு எவ்ளோ அழகா ஷூட் பண்றேன்” என்று அவளை அவளே புகழ்ந்து கொண்டாள்.

அருண் “மேட்ச் போடுவமா” கேட்டான் 

தமயந்தியின் ஆட்டம் வேகம் குறைந்திருந்தாலும் மேட்ச் நன்றாக சென்றது. ஆனால் அருண்தான் ஜெயித்தான். 

தமயந்தி “சாரீ  கட்டிருக்கேன்ல ஷூ போடலல்ல அதுதான் விளையாட வரல இல்லன்னா ஜெயிச்சிருப்பேன்”

அருண் “ஓஹோ…” என்று சொல்லி அவளை பார்க்க 

சமாளிக்க முடியாமல் தமயந்தி “நீ சீட் பண்ணிட்ட அருண்…அது எப்படி நீ ஜெயிச்ச… எனக்கு பாஸ்கெட் பால் விளையாடவே வரல…” புலம்பினாள்  

அருண் அதற்கும் சிரிக்க 

தமயந்தி “அடுத்த வாரம் இங்க வரோம் விளையாடுறோம்  நான் ஜெயிச்சு காட்றேன் பாரு” சவால் விட்டாள்.

அருண் “ஆம் வெய்ட்டிங்” என்று ஸ்டைலாக காரில் ஏறியவன் உள்ளுக்குள் ‘ஐ ஜாலி ஜாலி’ என்று குதூகலித்தான். 

ஹனிமூனிலிருந்து திரும்பிய புவனும் சிரஞ்சீவியும் அருண் தமயந்தி நட்பு பார்த்து 

புவன் “குட் நல்ல இம்ப்ரூவ்மென்ட்” என்க 

சிரஞ்சீவி “என்ன மச்சான் ஸ்ட்ரைட்டா அறுபது தானா” கேட்டு கிண்டல் செய்தான் 

அருண் “எனக்கு அவளை ஹர்ட் பண்ணாம அப்படியே நேச்சுரலா லவ் சொல்லணும்னு இருக்கு. அந்த டைம் இன்னும் வரல நினைக்கிறேன்”

புவன் “சரி கல்யாண் விஷயமாச்சும் சொன்னியா” கேட்க 

அதற்கும் அருண் “இல்ல அத எப்படி ஆரம்பிக்கிறது தெரியல”

சிரஞ்சீவி “அய்யய்யய்ய… இப்படி பயந்துட்டு இருந்தால்லாம் வேலைக்கே ஆவாது” என்றவன் 

தமயந்தி தங்கிருக்கும் அப்பார்ட்மெண்ட் பென்ட் ஹவுஸில்தான் இவர்கள்  சந்தித்து பேசிக்கொண்டிருந்தார்கள் அதனால் சட்டென  தமயந்தியை அழைத்தான். தமயந்தியும் மேலே வர 

சிரஞ்சீவி “ரொம்ப டயர்டா தெரியுற”

தமயந்தி “ஆடிட்டிங் போயிட்டு இருக்கா அதான்”

சிரஞ்சீவி “ஆமா எப்போ பாரு ஓனர் லூசுன்னு ஒரு ஆள திட்டுவியே அந்தாள் வந்திருக்கானா” கேட்டு டாபிக் எடுத்துவிட்டான் 

தமயந்தி அவள் கோபத்தை சராமாரியாக கொட்ட தொடங்கினாள் “இன்னும் வரல ஆனா வருவான் கிழவன் அந்த தொப்பையை தள்ளிக்கிட்டு… ப்ராபிட் கணக்கை பார்த்து  வளர்ச்சி விகிதம் ஏன் கம்மியா இருக்குன்னு கேக்குறான். கோவம் வருமா வராதா… இதுல அவன் பையன்கிட்ட பிஸ்னஸ்ஸ கொடுத்துற போறானாம்… கொடுக்கட்டும் நான் இந்தாடா தம்பின்னு விட்டு ஓடுறேனா இல்லையா  பாரு”

புவன் “ஓ அவருக்கு பையன் இருக்கா” கேட்க 

தமயந்தி “ஹான்… யார் கண்டா… அவர் பொண்ணுதான் அங்க மும்பைல  பார்த்துக்கறாங்கன்னு சொல்லுவார்… இப்ப எங்கிருந்து பையன் வந்தான் தெரியல… ஆனா அந்த பையன் வந்தா இந்த சைக்கோ கைல சிக்கி ஒரு நாள்லே  தாக்கு புடிக்க முடியாம ஓடிருவான்”  என்றாள் 

நண்பர்கள் இருவரும் பார்வையில் அருணை ‘சொல்லுடா’ என்று ஊக்க 

அருண்  “எனக்கு டயர்டா இருக்கு” நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு சடசடவென கீழிறங்கி சென்றுவிட்டான். அருண் எதுவும் பேசாமல் அப்படி செல்வதில்  தமயந்திக்கு கல்லூரி நாட்களில் தோன்றும் தாழ்வு மனப்பான்மை மேலெழுந்தது. 

அடுத்த ஒரு மணிநேரத்தில் தமயந்தி ரொம்பவும் யோசித்து கேட்டுவிடுவதென அலைபேசியில் அழைத்துவிட்டாள் 

“அருண்…” என்று அவள் குரல் கேட்கவும் அருணுக்கு யாரோ இறுக பற்றியிருந்த குரல்வளையை விடுவித்தது போல இருந்தது.

அவனிடமிருந்து  வெறும் “ம்” மட்டுமே கேட்க “நான் எதுனா தப்பு பண்ணிட்டேனா என் மேல கோவமா” கேட்டாள் 

அருணுக்கு சோர்வானது “அப்படியெல்லாம் இல்லம்மா… புது பிரச்சனை தொடங்கிருக்கு அதான்”

இவள் தைரியமாக “சொல்லணும்ன்னா சொல்லு நான் கேட்குறேன்” என்றாள் 

அருணுக்கு இம்முறை தவறென தெரிந்தும் செய்தான் “மாமா ஏ.என்.ஆர் தியேட்டர்ல பங்கு வேணும்ன்னு கேஸ் போட்ருக்காங்க… அதான் கடுப்புல இருக்கேன்” என்று உள்ளுக்குள் குத்தும் வேறொரு வலியை எடுத்து சொன்னான். அதன்பின் அவன் மனநிலையை மாற்ற அவள் பேசியதும் அவன் இளகி வெவ்வேறு தலைப்பு தாவி தாவி அழைப்பை துண்டிக்கும் போது விடிந்திருந்தது. 

வாரஇறுதி நாட்களில் நண்பர்கள் மூவரும் பென்ட் ஹவுசில் அடிக்கடி சந்திக்க தொடங்கினார்கள். அதிலும் தமயந்திக்கும் அருணுக்கும் ஒருவர் இருக்கும் இடத்தில் இன்னொருவர் சென்று ஒட்டிக்கொள்வது வழக்கம் ஆனது. 

நாளெல்லாம் ஓடி திரிந்து வேலைகளை முடித்துக்கொண்டு  தமயந்தி சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்துக் கொள்ள பென்ட் ஹவுஸ் ஏறி வந்தாள். அங்கே வீட்டுக்கு வெளியே அருண் மட்டுமே நின்றிருந்தான். அவளை பார்த்ததும் முகம் மலர்ந்தது. 

தமயந்தி “புவன் சிரஞ்சீவி வரலையா இன்னும்”

அருண் “இல்ல வரல வெயிட் பண்ணிட்டு இருக்கேன் என்ன மேடம் ரொம்ப பளீச்ன்னு இருக்கீங்க” கேட்டான் ஆசை பார்வை பார்த்து 

“நீயும்தான் எதோ சொல்ல காத்துட்டு இருக்குற மாதிரி இருக்கு என்ன விசேஷம் சொல்லு நான் சொல்றேன்” என்றாள் தமயந்தி 

இப்போதெல்லாம் அருண் “ஒன்னு சொல்லணும்” என்று சொல்வான் மேற்கொண்டு சொல்லாமல் அவள் கண்களை பார்த்து “சொல்லவா” என்று கேட்பான், உள்ளுக்குள் பூக்கும் ஆர்வத்தில் சிரிப்பு வரும் சிரிப்பார்கள் ஆனால் அந்த ‘ஒன்று’ வெளியே வராது. இப்போதும் ஆர்வத்தில் அவன் முகத்தை பார்த்தாள் 

அருண் “அதுவா… ம்ம்… அருந்ததி ஃபிலிம் கார்ப்பரேஷன் இந்த வருஷம் லாபம் மட்டுமே நூறு கோடி பார்த்துருக்கு கடன் எல்லாம் அடச்சிட்டேன்”சந்தோஷமாக சொன்னான்

தமயந்தி “செம செம வாழ்த்துக்கள்” 

அருண் “இப்போ சொல்லு” என்று கேட்க தமயந்தி சிரித்துக்கொண்டே “என் ஓனர் எனக்கு அஞ்சு வீடு காமிச்சு இதுல ஒன்னு சொல்லு வாங்கி தரேன்னு சொன்னாரா நான் போய் அதெல்லாம் பார்த்துட்டு வந்தேன். எல்லாமே லேண்ட் விலையே நிறைய இருக்கும். எத சொல்றதுன்னே தெரியல அருண். ஒன்னு உன் புது வீட்டு பக்கம் இருக்கு அத சொல்லவா இல்ல சிட்டிக்கு நடுல ஒரு வீடு ஆனா அத நிறைய ரிப்பேர் வேலை பார்க்குற மாதிரி இருக்கும் அத சொல்லவா எத சொல்றதுன்னே தெரியல” என்றாள் மகிழ்ச்சி கூத்தாட 

அருண் முழித்தவன் “இப்போ எதுக்கு வீடு  பணமாவே வாங்கி உன் இஷ்டத்துக்கு வீடு வாங்கிக்கோ அதென்ன அவர் தானம் கொடுக்குறது” கேட்டான் 

தமயந்தி “தெரியல அந்த தொப்ப தள்ளி குடுக்கறப்பவே வாங்கிக்கணும் இல்லன்னா கடைசி வர ஓடா தேயனும்.  நான்  நாளைக்கு எந்த வீடு சொல்லலாம்ன்னு யோசிச்சிட்டு இருக்கேன்” என்றாள் கனவுகள் கூத்தாட 

அருண் “அதென்ன நாளைக்கே”

தமயந்தி “ஹ்ஹான் பாரேன்… நாளைக்கு அவரோட வக்கீல் எல்லாம் மும்பைல இருந்து வராங்க பையனுக்கு கம்பெனியை மாத்தி தரப்போறாங்களாம்… நான்தான் சாட்சி கையெழுத்து போடப்போறேன்… அதுக்கு இது கிப்ட்” என்றவள் மொட்டை மாடி காற்று தீண்ட சிரித்தபடி அவன் முகத்தையே ஆர்வமாக பார்க்க 

அருண் அவள் முகத்தை ஏந்தி “ஒரு முத்தம் தரியா” என்று கேட்கவும் தமயந்தியின் இதழ் அவன் கன்னம் தீண்டியது.  

கன்னத்தில் முத்தமிட்டவளை அணைத்து இதழில் அவசரமாக முத்தமிட்டவன் மயக்கம் தெளிய தொடங்கும் சமயம் தமயந்தி அவனை தள்ளிவிட்டு “வேண்டாம் போதும் எனக்கு” என்றாள். உள்ளமும் உடலும் அவள் கட்டுப்பாட்டில் இல்லை.அவனோ “இன்னும் ஒண்ணே ஒன்னு தமயந்தி” என்று கேட்டு முத்தமிட கிறங்கி போனாள் தமயந்தி 

“என்கிட்ட பேசாம எப்படி இருக்க முடிஞ்சது உன்னால” 

“உன்னை பார்க்காம என்னால இருக்க முடிஞ்சதே இல்ல”

“நீ என்னிக்கும் என் தேவதை கண்ணம்மா” என்று சொல்லிக்கொண்டே முட்டமிட்டவன் கைபேசி அலறவும் தான் நிகழ் காலம் திரும்பினார்கள். அதிலும் அவன் பேசும்போது தப்பிக்கலாம் என ஓட நினைத்தவள் கையை பிடித்துக்கொண்டவன் கைபேசியில் பேசி அணைத்ததும் “எங்க ஓட பாக்குற… ம்ம்… என்னை பிடிக்கும்ன்னு சொல்லிட்டு போ அப்பதான் விடுவேன்” என்றான் 

தமயந்த “இப்ப நீ என்னை விடல நான் உன்னை என் வீட்டுக்கு இழுத்துட்டு போயிடுவேன்” என்றாள் அவன் கழுத்தை கட்டிக்கொண்டு 

அருண் “நான் வந்துருவேன்” என்றான் மோகம் நிறைந்து 

சட்டென விலகி அதிர்ச்சியாக பார்த்து தமயந்தி “நான் தயாரா இல்ல,கொஞ்சம் டைம் குடு… எல்லாமே ஒரே நேரத்துல நடக்குது என்னால எதையும் மண்டைக்கு ஏத்திக்கவே முடியல” 

அருண் “ஸ்லோ ஸ்லோ…” என்றான் அவளை இறுக்கமாக அணைத்து இந்த கண்ணு நெத்தி மூக்கு இந்த உதடு என்று சொல்லி உதட்டின் மீது முத்தம் வைத்தவன் “இதெல்லாம் என்னை தூங்கவே விட்டது இல்ல..” என்றான்

தமயந்தி அவ்வுலகிலேயே  இல்லை…

மனமும் உடலும் அவன் வசம் கொஞ்சம் கொஞ்சமாக நழுவி கொண்டே சென்றது… 

கடைசி பிடியாக கொஞ்சமாக தெளிவு ஒட்டிக்கொண்டிருந்தது அதில்  “அருண் பிளீஸ் என் வீட்டுக்கு போறேன்” என்று கேட்டாள்

அருண் விடுவிக்கவும் அவன் கைபிடித்து கொண்டு மாடியை விட்டு வேகவேகமாக இறங்கி இழுத்து கொண்டு சென்றாள்…

அவள் வீட்டு வாசலில் ஒருமுறை அவனை “வீட்டுக்குள்ள வரியா” என்று கேட்டாள்

அருணுக்குமே  உள்ளமும் உடலும் அவன் கட்டுபாட்டில் இல்லாமல் இருக்க “வரவா” கேட்டான்

தமயந்தியின் பகுத்தறிவு போராட… அருண் அவனே “ரெஸ்ட் எடுமா அப்பறமா பேசலாம்” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென பார்கிங் வந்து கார் ஓட்டிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான். 

அவனுக்குள் ஆயிரம் கேள்விகள் குழப்பங்கள் சந்தேகங்கள் ஆனாலும் உள்ளுக்குள் பரபரப்பும் தேடலும் அவளைப்பற்றியே…

அடுத்தநாள் விடியலில் தமயந்திக்கு அழைத்த கல்யாண் ஸ்டார் ஹோட்டல் ஒன்றை சொல்லி அங்கே வர சொன்னார். 

ஸ்கை ப்ரொடக்ஷன் பற்றிய விரிவான அறிக்கை எடுத்துகொண்டு சென்ற தமயந்திக்கு கல்யாண் மகனென வந்தவனை பார்த்து ஆச்சரியத்தை காட்டிலும் அதிகமாக வலித்தது. நேற்று முத்தமிட்ட முகம் இன்று அந்நியமாக தெரிந்தது.

கல்யாண் “இது தான் தமயந்தி என் பையன் அருண் சூர்யவர்தனன்” என்று சொல்ல தலை முதல் கால் வரை கசப்பு பரவியது…

அருண் ஏதோ தமயந்தி என்று அழைத்து பேசினான்,தமயந்திக்கு கோபத்தில் வார்த்தை வெளிவரவில்லை…

‘ஏன் ஏன் நான் மட்டும் ஏன் எப்பவும் ஏமாந்துட்டே இருக்கேன்… ஏன் நான் மட்டும் முட்டாளாகவே இவன் முன்னாடி உணர்றேன்…  ஏன் முட்டாளாகவே உணர வைக்குற அருண்’ உள்ளம் அதன் கேள்விகள் அடுக்க தொடங்கியது 

கல்யாண் “உனக்கு விமல் பாட் பொண்ண  கல்யாணம் செய்து வைக்கலாம் நினைக்கிறேன்” என்றுஅவனிடம் பேசிக்கொண்டிருக்க இன்னமும் இதயம் அதிர, அவள் மீதே  அவளுக்குள் பரவும் பரிதாபம் தாளாமல் தமயந்தி அங்கிருந்து வேகமாக வெளியே வந்தாள்.

அங்கே ஸ்டார் ஹோட்டல் வாசலில் காரை வைத்துக்கொண்டு காத்திருந்த சிரஞ்சீவி  தமயந்தியை பார்த்து ஓடிவந்து “தமயந்தி” என்று அவள் கைகளை பிடிக்க வர 

சிரஞ்சீவியின் கையை உதறியவள் “உன்னை எல்லாம் ஃப்ரெண்ட்ன்னு நெனச்சேன் பாரு” என்று கண்களில் நீர் பொங்க சொன்னவள் சட்டென்ன அவள் தலையில் அடித்துக்கொண்டாள்.

சிரஞ்சீவி “நீ நினைக்கிற மாதிரி இல்ல ஒரு நிமிஷம் பொறு” என்று அவளை நிறுத்த பார்த்தான் 

அழுகை வெடிக்க  “போடா” என்று அவனை தள்ளிவிட்டு விறுவிறுவென நடந்தவள் எங்கே போனாள் என்றே தெரியவில்லை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!